உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

நாகேஸ்வரி அண்ணாமலை
வளர்ந்துவரும் எல்லா நாடுகளையும்போல் இந்தியாவிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவளாகிய நான் தமிழ்நாட்டில் அம்மையார் காலத்தில் நடந்த ஊழல் பற்றியும் அவருடைய மறைவிற்குப் பிறகும் அது தொடர்வது பற்றியும் நன்றாகவே அறிந்திருக்கிறேன். ‘எப்போது தணியும் இந்த சுதந்திர தாகம்’? என்றார் பாரதி. சுதந்திரம் பெற்றுவிட்ட இந்தியாவில், ‘எப்போது மறையும் இந்த ஊழல்?’ என்று பல முறை நான் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 1967 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தப் புற்றுநோய் பரவ ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் காலத்தில் அது புரையோடிப் போய் தமிழ்நாட்டையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.
‘எப்போது மறையும் இந்த ஊழல்’? என்ற என்னுடைய இந்தப் புலம்பலுக்கு ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாஸன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்துத் தன் கட்சியின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று நானும் மகிழ்ந்துபோய் வல்லமை என்னும் ஆன்லைன் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன்.
இப்போது அரசியலுக்குப் பல நடிகர்கள் வந்திருக்கின்றனர். இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார். இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம். ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம். கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?கமலஹாஸன் அப்படியில்லை. நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.
இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார். அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது. எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.
சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது. தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும் ஊழியன் என்கிறார். மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள். வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை. அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார். என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார். இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.
தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார். அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை. (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.) இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார். இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம். தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம். தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.
இப்படியெல்லாம் என் போன்றோரிடம் நம்பிக்கையை வளர்த்த கமலஹாஸன் இப்போது ரஜனிகாந்திடம் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். நான் படித்த இந்தச் செய்தி என் கனவில் கண்ட செய்தியாக இருக்க வேண்டுமே என்று பல முறை வேண்டியிருக்கிறேன்.
ஆனாலும் மறுபடி மறுபடி இந்தச் செய்தி கண்ணில் பட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலேயுள்ள என் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு விடிவெள்ளி என்று நான் நினைத்திருந்த கமலஹாஸன் ஏன் இப்போது ரஜனியை அரசியலுக்கு வர அழைக்கிறார்? உலக வரலாறு பற்றியோ நாட்டு நடப்பு பற்றியோ எதுவும் தெரியாத ரஜனியை இவர் உதவிக்குக் கூப்பிடுவதன் நோக்கம் என்ன? ‘காவிப் பக்கம் போக மாட்டேன்’ என்று உறுதியாகக் கூறிக்கொண்டிருந்தவர் ‘காவி’த் தலைவர்கள் குறிவைத்திருக்கும் ரஜனியை உதவிக்கு அழைக்கிறாரே. இது என்ன மர்மம்? ‘ரஜனி அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது ‘அவர் பாதை தனி. என் பாதை தனி’ என்று கூறியவர் இன்று அவரை உதவிக்கு அழைக்கிறாரே?
சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘கமலஹாஸன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். என் கேள்வியைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு, ‘மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர் பேசவில்லையே’ என்றார்கள். அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன். ‘இவர்கள் ஏன் கமலஹாஸனுடைய நல்ல கொள்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை?’ என்று ஆயாசப்பட்டேன். கமலஹாஸனை நான் எடைபோட்டது தவறா என்று இப்போது நான் ஆயாசப்படுகிறேன். நான் நம்பியதுபோல் அவர் ஒரு விடிவெள்ளி இல்லையா? ரஜனியைத் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர் அழைத்தது அறிந்து அவரைப் பற்றிய என் ஆர்வமெல்லாம் வடிந்துவிட்டது. இது கனவாக இருக்கக் கூடாதா என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை.