Tag: விசாலம்

  • தாயினும் சிறந்த ஒரு கோயிலுமில்லை

    — விசாலம்

     

    mothersday

     

     

    “அன்னையர் தினம்” எப்போது ஆரம்பித்தது?

    எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் வேதம் தோன்றிய காலத்திலிருந்தே அன்னையை வணங்கும் கருத்து இருந்திருக்கவேண்டும் வேதமும் அன்னையைப் பூஜிக்கும் தருமத்தை சொல்கிறது .’மாத்ரு தேவோ பவ’ . என்பதிலிருந்து அன்னை ஒரு தெய்வமாகவே கருதப்படுகிறாள். அடுத்ததாக ஔவையாரும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார். சக்தி இல்லாமல் சிவம் இல்லை என்பதும் அர்த்தநாரீஸ்வரர் தோற்றமும் பெண்ணின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

    ஜகத்குரு சங்கராசார்யார். அவர்கள் எழுதிய ‘மாத்ரு பஞ்சகம் ‘என்பதைப் படித்தால் கண்களில் தன்னால் கண்ணீர் நிரம்பிவிடுகிறதே! அதில் ஆரம்பத்திலேயே அவர் “என்னை ஈன்ற அன்னையே. என்னை பெற்றெடுத்த போது நீ பட்ட வலி என்னென்பேன்.வலி பொறுக்கமுடியாமல் உன் பற்களைக்கடித்தாய். பிரசவ வலியில் துடி துடித்தாய். நானோ மலங்களினால் பல வருடம் துர்நாற்றம் அடையச்செய்தேன். அம்மா ! பாவி நான். கருவிலிருந்தபோதே ஊனினை உருக்கி, உடலினை வருத்தி, உதிரத்தால் உணவு தந்து உயிர் கொடுத்தாய். நான் உனக்கு என்ன கைமாறு செய்வேன்? பேரும், புகழும், பொன்னும், பொருளும் தந்து போற்றினாலும் போதாது ” என்று அவர் தாயின் மரணம் போது பாடிய பாடல்கள் ‘ மாத்ரு பஞ்சகம் ‘.

    சிலர் இன்றும் தங்கள் வீட்டில் “சுமங்கலி பிரார்த்தனை’ என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். அதில் சுமங்கலியாக இறந்து போன தங்கள் சொந்த பந்தங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கென்று விருந்தும் படைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியும் ஓரளவு அன்னைகளை நினைவு கூர்வதாக இருக்கிறது.

    அன்னையருக்கு முதல் விழாவாக சைபீல் என்ற பெண் தெய்வம் வணங்கபட்டு அவளை முதல் தாய் கடவுளாக பிரிஜியா மக்கள் ஏற்றுக்கொண்டு அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

    ரோமானிய மக்கள் தங்கள் தாய் தெய்வத்திற்கு பாலடைன் மலையில் ஒரு கோயிலை கட்டினர். பின் வருடாவருடம் மார்ச் மாதம் 15 ந்தேதி ஆரம்பித்து மூன்று நாட்கள் திருநாளாக கொண்டாடினர். அம்மனுக்கு படையல் வைப்பது போல் இந்த தாய் தெய்வத்திற்கும் படையல் வைத்தனர்.

    கிருஸ்துவ மதத்தில் ஏசுபிரான் பாலையில் கழித்த நாளை ஞாபகப்படுத்திக்கொள்ள நோம்பு என்று நாற்பது நாட்கள் விரதம் இருந்து பின் கடைசி ஞாயிறு அன்று மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட தேவாலயத்திற்குச்சென்று பரிசுகள் கொடுக்கும் தினமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாம் .

    கிரேக்கர்களை எடுத்துக்கொண்டால் வசந்த காலம் வந்ததும் தாய் தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.அவர்களது தாய் தெய்வமாக ரேஹா என்பவர் வணங்கப்பட்டார்.

    ரோமில் இருக்கும் மக்கள் வசந்த காலத்தில் சைபெலி என்ற பெண் தெய்வத்தை தங்கள் தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிப்பாட்டில் பிரார்த்தனை தவிர நமது கிராமத்தில் மாரித்தாய்க்கு முன் கரகம், வீரவிளையாட்டு, நடனங்கள் போன்று நடப்பது போல் இங்கும் பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெறுமாம்.

    தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் மிகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த
    அன்னையர் தினம் ஆரம்பித்து வைத்த ஜார்விஸ் என்ற பெண். திருமணமாகாதவர். தனக்கென்று ஒரு பிள்ளையை வளர்த்தவரும் இல்லை. ஆனால் இவரது முயற்சியால்தான் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியாவில் கிராப்டன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட போர். அந்தப்போரில் பலர் தங்கள் சொந்தபந்தங்களை இழந்து தனித்து விடப்பட்டனர். சிதைந்து குலைந்துப்போன குடும்பங்களை ஒன்று சேர்க்கவும். அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும் பாடுபட்டு ஒரு சமூக சேவகியானார். அவர் இதற்காக பாடுப்பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. அவரது அயாரத உழைப்பு அவரது 84 வயது வரை நீடித்தது.

    ஆஸ்பத்திரியில் அவரது கடைசி நேரம் நிருபர்களை அழைத்தார். “அன்பர்களே, உலகமுழவதும் ‘மதர்ஸ் டே’ கொண்டாட வேண்டும் என்பதே என் ஆசை. அன்னையர் தினம் பெற்ற அன்னைக்கு மட்டுமல்ல. மற்ற அன்னையர்களையும் வணங்கி .மதித்து வணங்க வேண்டும். அவர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை”.

    அவரது ஆசை பூர்த்தியானது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் அவர் அன்றைய தினத்தில் ஆத்மார்த்த அன்பும், பாசமும், மதிப்பும் அளிக்கும் அன்னை தினத்தையே எதிர்ப்பார்த்தார். இதில் கடமையே என்று செய்யும் எண்ணம் தவிர்த்து ஆழ்மனதிலிருந்து எழும் அன்புணர்ச்சியே தேவையாகிறது. “எங்காத்துக்காரரும் கச்சேரி போகிறார்” என்று சிலர் பேருக்காக ஏதோ பொருளை வாங்கி அன்னைக்கு அனுப்புகின்றனர். தவிர இருக்கவே இருக்கு “Flip kart ” வியாபரஸ்தலம். வீட்டில் அமர்ந்தபடியே எதை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். நேரம் மிச்சம். கடையின் நெருக்கடி கிடையாது.
    பெட் ரோல் செலவு கிடையாது. ரொம்ப சௌகரியமான சமசாரம் தான். ஆனால் நேரே அன்னையிடம் சென்று அவள் ஆனந்தக்கண்ணீர் வடித்து நம்மை பார்க்க, நாம் அவளை அணைக்க, அவளுக்கு அந்த நேரம் கிடைக்கும் சுகம் இருக்கே அது தனி சுகம் தான். அது வேறு எங்கேயாவது கிடைக்குமா? அதை விட்டு விட்டு ஏதோ ஒரு பொருளை எங்கிருந்தோ அனுப்புவது ஒரு இயந்தரம் போல் இது எனக்கு தோன்றுகிறது. ஒன்றுமே இல்லாததற்கு ஏதோ இதாவது இருக்கே என்று வேண்டுமானால் மனம் சமாதானமடையலாம் .

    இது போல் தினங்கள் வந்தால் வியாபாரிகளுக்குத்தான் கொண்டாட்டம். ஆன்நா ஜார்விஸ் இருக்கும் போதே ஒரு கம்பெனி அன்னையின் படம் ஒன்றை போட்டும், கொடி ஒன்றை விற்றும் பணம் புரட்ட ஆரம்பித்தது. இதை ஆன்நா ஜார்விஸ் அறிய அவருக்கு மிகவும் கோபம் வந்தது. அன்னையர் தினம் வியாபார நோக்குக்காக எழுந்த தினமல்ல. ஆகையால் அந்தக்கொடி விற்பனையைக்குறித்து வழக்கு தாக்கல் செய்தார். அன்னையர் தினம் மனம், உணர்ச்சிகள் பின்னிக்கொண்ட தினமாக இருக்க வேண்டுமே தவிர அதில் லாபம் அடையும் நோக்கம் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்று அதற்காக வாதாடி வெற்றியும் பெற்றார்.

    அன்னையரை மதிக்க நமது சக்திக்கேற்றாற்போல் ஏதாவது செய்தாலே போதுமானது. இரண்டு துளசி தளத்தை உள்ளன்புடன் வைத்தாலே போதும். படாடோபமாய் பல ரூபாய்கள் செலவுடன் செய்யும் பூஜையை நான் விரும்புவதில்லை என்கிறான் கீதாசார்யன் கண்ணன்.அதுபோல் அன்னையும் இதைத்தான் விரும்புகிறாள். எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கு முதியோர் நிலையங்கள் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.

    நம் ஒவ்வொருக்கும் நம் அன்னை செய்த தியாகமும், காட்டி வரும் அன்பும், பட்ட கஷ்டங்களும் வார்த்தைகளில் அடங்கமுடியாது. அன்னையின் பெருமானத்தை தராசில் வைத்து இன்னொரு பக்கம் நம் அன்பு இருக்க அது ஓரளவு சமமாக காட்டலாம். ஆனால் பரிசோ .பணமோ .வேறு பொருட்களோ தராசு தட்டில் ஏற்ற அது சமமாக ஆகுமா என்பது சந்தேகம் தான்.

    அன்னையர் தின நல் வாழ்த்துகள் . அன்னையருக்கு என் வணக்கங்கள்.

     

    படம் உதவி: நன்றி மன்னன் திரைப்பட உரிமையாளருக்கு.  இப்படம் மன்னன் திரைப்படக் காட்சியை கொண்டு உருவாக்கப் பட்டது.

    Share
  • என் அண்ணி..என் அன்னை!

    -விசாலம்

    vallamai image1

    என் அண்ணி எனக்குத் தாய்!

    தாயில்லாத நிலையில்

    அவளே எனக்குத் தாயானாள்!

    நிலாக் காட்டிச் சோறு ஊட்டினாள்!

    அவள் மடியில் நான் படுக்க,

    வந்தன பல நீதிக் கதைகள்!

    அவள் ஜீஜாபாயாக ஆனாள்,

    என்னைச் சிவாஜியாக ஆக்க!

    கணக்கில் தவறு செய்ய,

    கன்னத்தில் விழும் செல்ல அடி!

    நான் அவள் கழுத்தை அணைப்பேன்,

    என் உச்சியில் ஒரு “இச்” கொடுப்பாள்!

    அண்ணனுக்கு ஆபிஸே உலகம்…

    எனக்கோ அண்ணியே உலகம்!

    கிரிக்கெட்டுக்கும் வருவாள்,

    என் சிக்சரில் மனமகிழ்வாள்!

     

    இன்று நான் ஓர் ஆணழகன்!

    மீசை முளைத்த   துடி இளைஞன்!

    முதல் மாதச் சம்பளம் என் கையில்…

    முகமலர அண்ணி வந்தாள்!

    “வாழ்த்துகள்!” என்று கைக்குலுக்கினாள்.

    முதுகில் மட்டும் ஒரு செல்லத்தட்டு!

    மடியில் இடம் கொடுத்த அண்ணி

    இன்று மாறுபட்டு இருப்பதேன்?

    அணைக்கத் துடித்த என் கைகளை

    ஏதோ ஒன்று தடுப்பதேன்?

    அண்ணியின் வளர்ப்புமுறையா?

    மனதிற்கு ஒரு தடுப்புமுறையா?

    சமுதாயம் என்ற வேலியா?

    சட்டம் என்ற கல் சுவரா?

     

    Share
  • பாவார்த்த இராமாயணம்

    விசாலம்

    வால்மீகி இராமயணைத்தை பின் பற்றி ஆனால் அதில் தனது சொந்தக்கற்பனைகளையும் சேர்த்து மிகவும் அழகாக மராட்டி மொழியில் ‘பாவார்த்த இராமாயணம்’ என்னும் காவியத்தைப்படைத்தவர் அருள்கவி ஏகநாதர்.மராட்டி மொழியில் பலர் பல இராமயணங்களை எழுதியிருக்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் விட இது மிகப்பழமையான ஒன்று.அவர் பிறந்த இடம் பிரதிஷ்டானம் என்ற சிறு கிராமம்.

    anumar
    சிறு வயதிலிருந்தே தன் தந்தையை இழந்த காரணத்தினால் தன் தாத்தா வீட்டில் வளர்ந்தவர் ஏகநாதர்.அப்போதிலிருந்தே சம்ஸ்கிருத மொழியைக்கற்று அதில் தேர்ச்சியும் பெற்றார். தவிர மராட்டி ஹிந்தி மொழிகளிலும் வல்லமை பெற்று பல கவிதைகளையும் இயற்றினார்.இவர் ‘ருக்மிணி சுயம்வரம்’ எழுதியதிலிருந்து சில ஜன்மாஷ்டமியின் போது பாடப்படுகிறது ஏகநாதரின் காலம் 1958லிருந்து 1609 வரை .கோதாவரி கரையில் அலைகளோடு பேசி அதன் அழகை ரசித்து அப்படியே கற்பனை உலகுக்குப்போய்விடுவார். இவருடைய காவியங்களில் அடுக்கு மொழிகள். அணி அணியான சொற்கள் மிருதங்க லயம் போல் நடைப்போடும் .அவருடைய கற்பனைக்கு இராமயணைத்திலிருந்து ஒரு உதாரணம்.இராமயணத்தில் ஸ்ரீ அனுமான் ராமதூதனாக இலங்கைக்குச்செல்கிறார். ஆனால் ஏக நாதர் ஹனுமான் மட்டும் அனுப்பினது அல்லாமல் அங்கதனையும் இராவணனுக்கு முன்னால் நிறுத்துகிறார். அங்கதன் பேசுகிறான்

    “என் பெயர் அங்கதன் நான் ஸ்ரீ ராம தூதனாக வந்திருக்கிறேன்.”

    “என்னடா பேசுகிறாய்?நீயும் ஒரு தூதனா? முதலில் ஒரு குரங்கு வந்தாயிற்று.இப்போது இரண்டாவது குரங்கா?”

    “அட இராவணா! உன் அவையில் நான் தூதனாக வந்திருக்கிறேன்.யாவரும் என்னை வரவேற்க மறந்து பயத்தினால் சுருண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஹனுமான் இங்கு வந்த நாளிலிருந்தே உங்கள் வாய் பேச நா எழவில்லை .ஶ்ரீராமருடைய வீரம் உனக்கு தெரியுமா? அவருக்கும் ,சுக்கிரீவனுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான் உனக்கு தெரியுமா? “

    கண்கள் சிவந்து நெருப்பு ஜ்வாலையைக்கக்கும் இராவணன் இடிப்போல் முழங்குகிறான்,

    “ராமனும் லட்சுமணனும் எங்களுக்கு முக்கிய உணவு .உங்களைப்போல குரங்குகள் அதற்கு ஊறுகாய் போல் .எங்கள் கும்பகர்ணன் ஒரே பிடியில் உங்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுவான்,”

    “அங்கதன் உடல் துடிக்கிறது. அவனது வீரத்தோள் போருக்கு துடிக்கிறது. ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டு

    “டேய் மூர்க்கா இராவணா. உடனே சீதா தேவியைக் கொடுக்காவிட்டால் உனக்கு மரணம் தான் . இராமர் சொல்லியனுப்பிய தூதும் இதுதான்.
    அடே ராவணா!உன் மூஞ்சியை ஒரே குத்தில் தரையில் வீழ்த்த என் கை துடிக்கிறது.ஆனால் அப்படி செய்ய இயலவில்லை ஏனென்றால் உன் தலைகள் பரமேஸ்வரனுக்கு அர்ப்பணமானவை .சிவ சொத்தல்லவா அது! சிவ சொத்தை அழிக்க என் கை கூசுகிறது “

    ஆஹா என்ன அருமையான கற்பனை இது. இராவணன் சிறந்த சிவ பக்தன் என்பதையும் இதில் ஏகநாதர் சொல்லிவிடுகிறார்.
    இராவணனுக்கு இதைக்கேட்க மனம் ஏதோ செய்தது. ” யாரங்கே இந்த அங்கதன் என்ற குரங்கை பிடித்து அடையுங்கள்”
    ஆயிரக்கணக்கான அரக்கர்களுக்கு விளையாட்டு காட்டியபடியே அங்கதன் மரத்துக்கு மரம் தாவி எல்லோரையும் அழைக்கிறான்.
    இத்துடன் ஏகநாதரின் கற்பனை நிற்கவில்லை.இராவணனை ஏதாவது செய்துவிட்டே வரவேண்டும் என்ற தோன்ற அங்கதனால் இராவணனைக் காலால் உதைக்க வைக்கிறார். பின் அங்கதன் இராவணனின் கிரீடத்தைப் பறித்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து பறந்து போகிறான்.அவன் அப்படிப்போகும் போது அவனையுமறியாமல் அவனோடு வேறு ஒரு பொருளும் ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது.

    இப்போது அங்கதன் ஸ்ரீ ராமனுக்கு முன்னால் .

    “அங்கதா இது என்ன உன்னுடன் கொண்டு வந்திருக்கிறாய் .இது அநீதி ஆயிற்றே?” என்று கேட்டார் ராமர்.
    அப்போதுதான் அங்கதன் தன் தலையில் ஏதோ ஒட்டிக்கொண்டு வந்திருப்பதைப் பார்க்கிறான்.அது இராவணனுடைய சபா மண்டபத்தின் கோபுரம் .
    பரிதாபமாக ராமரைப் பார்த்தான் .
    “அங்கதா விபீஷனனுக்கு நாம் அளித்த ராஜ்ஜியத்திலிருந்து ஒரு துரும்பையும் எடுத்து வரக்கூடாது. இது எப்படி நடந்தது?”

    ” சுவாமி இது எனக்கும் தெரியாமல் ஏற்பட்ட பிழை .தயவு செய்து பிழை பொறுத்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்”என்றபடி அவர் காலில் விழ அவரும் “அங்கதா இதை உடனே திருப்பி வைத்து விட்டுவா” என்றார்.

    அங்கதனும் அங்கனமே செய்து பின் தான் கொண்டு வந்த கிரீடத்தை ராமனுடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறான் .ராமனும் மிகவும் மகிழ்ச்சியுடன் விபீஷணனை அழைத்து அந்த முகுடத்தை அவரது தலையில் சூட்டுகிறார்.

    இதே போல் சில சம்பவங்களில் தன் கற்பனைகளையும் சேர்த்து எழுதியிருக்கும் ஏகநாதரின் பாவர்த்த இராமயணம் மராட்டியர்களால் விரும்பி படிக்கப்படும் ஒரு காவியம் ஆகும் .

    Share
  • ஆண்டுவிழா போட்டி வசந்தம் கவிதை

    விசாலம்

    20100922_3887

    இயற்கை அன்னையே !
    நீ தந்தாய் ஒரு வசந்த காலம் .
    காலங்களின் ஒரு சிறந்த காலம் .
    சின்னஞ்சிறு செடியின் தளிர்ப்பு,
    காணுகின்றேன் பூவின் மலர்ப்பு ,
    அருகே நடக்க வீசும் நறுமணம்
    அடுத்தடுத்து மலர்கள் பல வண்ணம் ,

    மலர்கள் மலர்ந்தது எப்படி ?
    மணம் வந்தது எப்படி?

    மலரைக்கண்டு வந்த வண்டு ,
    வண்ணக்கலவை பலவும் கண்டு ,
    சுற்றிச்சுற்றி ரீங்காரம் கொண்டு
    மகரந்தத்தின் சுவையைக் கண்டு
    தேனைக்குடித்த மயக்கம் என்ன?
    ஆனந்தத்தின் எல்லைத்தான் என்ன ?

    அந்தத் தேன் வந்தது எப்படி?
    அதில் இனிப்பு வந்தது எப்படி?

    சூரியகாந்தி மலர் கண்ட சூரியோதயம்
    கிழக்கு திசையில் சிவந்த பொன் உதயம்,
    சூரியனின் வழியில் தியானப் பார்வை
    அழகு புறாக்கள் பறக்கும் கோர்வை ,
    நிலவைப்பார்த்து நிற்கும் அல்லிமலர்,
    மகிழ்ந்து இதழ் விரிக்கும் வெள்ளை மலர்.

    காலையில் தாமரை மலர்வது எப்படி?
    இரவில் அல்லி மலர்வது எப்படி?

    பச்சை நிறத் தளிர்ச்செடிகள்,
    கம்பளம் போல் நிறைந்த புற்கள்,
    தென்றல் வீச அசையும் மரங்கள்,
    சிட்டுக்குருவி கட்டும் கூடுகள்,
    சிற்பிகளுக்கு எட்டாத வினோதங்கள்,
    வண்ணாத்தியின் வண்ணக்கலவைகள்.

    அந்த வண்ணக்க்லவை வந்தது எப்படி?
    வசந்தமே உன்னைப்படைத்தது எப்படி?

    Share
  • மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம்

    விசாலம்

    என் அன்புள்ள மணி ..நீ அங்க சௌக்கியமா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?உங்க இரண்டு பேருக்கும் என் ஆசீர்வாதங்கள்..நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை.குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த செல்லக்குட்டி எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். .உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான் .மனசு கஷ்டந்தான் .ஆனா என்ன செய்ய ?நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய? யானை தன் தலை மேல தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே.இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு.ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சே ன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ. சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு . எனக்கு பிடிக்காத ஒரு பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே .எப்போதும் பணம் பிசின்ஸ் ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங் ல நன்னா யூஸ் பண்ணிண்டான் .உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன் .அப்பறந்தான் எனக்கு நிம்மதி .கிடைச்சுது .போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம் ன்னுசொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘ அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்”ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளைக்கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக்கேட்டுட்டார்.

    அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு . காலைல பூஜை பண்ணி முடிச்சேன் .உம் போன் கால் வந்தது .”அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.” “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நினையாதே “

    “நிறுத்தும்மா .நானே வருத்தமா இருக்.கேன் சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து . இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயேஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா.. எதோ கடமையே ன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக்குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே.அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே. எப்போ பாத்தாலும் ஆபீஸ் .புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க.போறதத்துக்கு

    மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார்.நீயும் அங்க அவரோட போவேன் ன்னு அடம் பிடிச்சே அது சரிதா. புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும் ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும் அவ உங்கிட் வளரட்டும்.ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா. “ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே அது ஞாபகம் இருக்கா?

    அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு.ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே.அதனாலே போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை காட்டி நீ கூப்பிட்டே .அது என்ன வெறும் பொம்மையா ?அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. ” உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம் அதான் அன்னிக்கு சூடி தன்

    மூஞ்சியைத்திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டி .னு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி என் செல்லமே நான் தான் உன் மம்மி ன்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே .அதுவோ .போ ஆன்டி .நீ என் மம்மி இல்லை .இவதான் என் மம்மி ன்னு என் கழுத்தை கட்டிண்டா.நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா? அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப்போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு .எனக்கும் இனிமே இந்தக்குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான் நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது !ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும் இருந்தேன் . நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல .அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும் .அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை . அந்தஸ்து பெரிசில்லை .இனியாவது புரிஞ்சுக்கோ . நம்மிட்ட நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு .அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே . மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு அமைதியாக யோசி . .. உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும் .இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு .எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும் இப்படிக்கு உன் அம்மா . .

    Share
  • அப்பா,அம்மாவுக்கு!…

    விசாலம்

    அப்பா, அம்மாவுக்கு”

    குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றன, ஒரு சூதுவாதும் தெரிவதில்லை அதன்”கலகல வென்ற” சிரிப்பில் தெய்வத்தையே காண்கிறோம். அது வளர வளர பல விதமான புதுச் சொற்கள், கற்றுக்கொள்கிறது. தாயின் ஸ்பர்சத்தை அது உணர்கிறது, தன் தந்தையைப் புரிந்து கொள்கிறது. இந்தச் சமயத்திலிருந்தே அந்த மழலைக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும், சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பாட்டி தன் பேத்தியிடம் முறுக்கைக்காட்டுவாள்.அந்தப்பச்சை குழந்தை. ஏதோ வட்டமாகத்தெரிகிறதே என்று தாவி அதைப்பிடிக்கும்.அப்போது பாட்டி”யமகிராதகிடி நீ என்பாள்.எப்போதாவது பசி தாங்காமல் குழந்தை அழ”சரியான பிசாசு.அதன் அம்மா மாதிரி என்று தன் மாட்டுப்பெண்ணையும் சேர்த்துக்கொள்வாள்..இதே போல பல தாயார்களும் தங்கள் இயலாமையினாலும் பணவசதி இல்லாததினாலும் கணவரது தொந்தரவினாலும் தங்கள் குழந்தைகளை வசைமாரிப்பொழிவாள்.இவைகளெல்லாமே எதிர்மறை அலைகளை உண்டாக்கி அந்தச்சூழ்நிலையை மாசுப்படுத்துகிறது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய்மார்கள் குழந்தைப்பிறந்தவுடனேயே அதைக்கொஞ்ச மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அதைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன்,”சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே? என்றும்”எதற்கு இந்த ஒப்பாரி?” என்றும்,”மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்கள் பலமுறை கேட்க, குழந்தையின் செவியில் இவை நன்கு ஏற, அவை மனதிலும் படிந்து விடுகின்றன. நாம் பல முறைகள் நம் தவறை உண்ராமல் குழந்தையின் மேல் தவறைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்க்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அவற்றின் ஐம்புலன்களைத் தொட்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் கடவுளின் படங்கள், தேசத்தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட, அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.சாதாரணமாக படங்களைக்காட்ட குழந்தைகள் அவ்வளவு ஆர்வம் காடடமாட்டார்கள். அதைக்காட்டி ஒரு கதையும் சேர்த்து அதை விளக்க நிச்சியம் மனதில் பதிந்துபோகும்

    உம்”கண்ணா இங்கே பார் என் கையில என்ன இருக்கு தெரிமா? கரெக்ட்டா சொல்லு பார்ப்போம்” “தெரியலையே நீங்க சொல்லுங்க”

    “இது ஒரு படம். நம் எல்லோருக்கும் இவர் தாத்தா ஆவார்.வட நாட்ல இவரை பாப்பூ என்பார்கள். தெரிஞ்சுதா?” “ஓ தெரிஞ்சுடுத்து காந்தித்தாத்தா சரியா அம்மா ‘

    “ரொம்ப கரெக்ட். இவரப்போல் நீ வரைஞ்சு காட்டு.நீதான் நன்னா டிராயிங் வரயறயே வரைஞ்சு அப்பறம் அவரைப்பற்றி ஒரு நாலு வரிகள் எழுதி காட்டு.உனக்கு ஒரு பந்து பரிசாக கிடைக்கும்”

    இது போல் பல ஆன்மீக தலைவர்களையும் விளையாட்டு வீரர்களையும் மிக எளிதாக மனதில் பதிய வைக்கலாம் ஒன்று மட்டும் தெரிய வேண்டும் நம் குழந்தைக்கு எதில் அதிக நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.அதற்குத்தகுந்தாவாறு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

    காதுகளுக்கு நல்ல கருத்து செரிந்த பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற பாடலகள் ஆகியவற்றை அடிக்கடி கேட்கும் வாய்ப்புத்தர, குழந்தைகளும் அவற்றைச் சொல்லப் பழக்கப்பட்டுவிடுகின்றன.

    அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். சில தாய் தன் குழந்தையை தன்மாமியாரிடம் கூட தர மாட்டாள். அதற்கு பாலோ கிளாக்ஸோவோ கொடுக்க தானே பால் புட்டியை கொதிக்கும் நீரில் போட்டு கழுவி பின் அதைக்கொடுப்பாள்.என்றாவது ஒரு நாள் தன் மாமியாரிடம் குழந்தையை விட்டுப்போகும் நிலைமை வந்தால் பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று லெக்சரும் அடிப்பாள் பாவம் அந்த அத்தை.தான் அந்தக்காலத்தில் ஆறு குழந்தைகள் பெற்று மணி மணியாக வளர்த்த விதத்தை எண்ணுவார்.சாதுவான அத்தையானல் வீட்டுச்சூழ்நிலை கெடாது.இதுவே மாறி இருந்தால் அவ்வளவு தான்.பிள்ளையின் பாடு திண்டாட்டம்தான்.சாண்ட விச்சாகி நசுங்கிபோவான்.எல்லாவற்றையும் பச்சைக்குழந்தையும் கவனித்துப்பார்க்கும். .உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும். இனிமையான சொற்கள் பழக்க வேண்டும். காலையில் கடவுள் வணக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தி விட்டால் கடைசி வரை அந்த நல்ல பழக்கம் இருக்கும். ஒரு தடவை நல்ல வித்து ஊன்றி விட்டால் கடைசி வரை நல்ல விளைச்சல்தான். சில வீடுகளில் தாயின் காரணமாக வீட்டின் நிம்மதி போகும். பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி,”தத்தித் தத்தி” நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது,”வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்க்கு ‘கொல் கொல்’லுன்னு இருமல் வேறு” மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, சூழ்நிலைக் கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப மனஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

    குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள்,” அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்” என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

    குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல் எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் கற்றுக்கொடுக்க வேண்டும் சிலர் வீட்டிலிருந்தபடியே வெளியில் யாராவது வேண்டாதவர் வந்தால்”அப்பா வீட்டில் இல்லைன்னு சொல்லுடா” என்று தன் மகனுக்குப்பொய் பேச கற்றுக்கொடுப்பார்கள் சில சமயம் பள்ளிக்கு போக நாழியாக ஹோம் வொர்க் செய்யாமல் இருக்கும் செல்ல மகன் அல்லது மகளுக்கு” செல்லமே ஏண்டா நேத்திக்கே இதை செய்யலே!சரி சரி அழாதே நான் கணக்கு போட்டுத்தரேன்”என்று குழந்தை எழுத்துப்போலவே காப்பி அடித்து ஹோம் வொர்கை முடிப்பார்கள்.நான் ஆசிரியையாக இருக்கும் போது இது போல் கையும் களவுமாக பல அம்மா அப்பாக்களைப்பிடித்திருகிறேன்

    அடுத்தது காமம். குழந்தைகளுக்கு வயது வர, முன்பு அவர்களுக்குக்குளிப்பாட்டி உடை அணிய உதவும் பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தானே தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.தவிர அம்மா அப்பாவும் தங்கள் அந்தரங்க காதலை குழந்தைகள் முன் செய்ய ஒரு தடவைக்கு நாலுதடவையாக யோசிக்க வேண்டும் எனக்குத்தெரிந்த தம்பதிகள் தங்கள் குழந்தைகள் முன்பே ஒருவர்க்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளும் அந்தக்காட்சியைப் பார்க்கலாமா வேண்டாமா என்று திண்டாடும். இது தில்லியில் ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பார்த்தேன். அதுவும் இந்தக்கால குழந்தைகள் எல்லாவற்றிலுமே ரொம்ப வேகம்.சில அந்தரங்க விஷயங்கள் இலை மறைவு காய் மறைவாகத்த்தான் இருக்க வேண்டும்.தம்பதிகளுக்கு தனியாக படுக்கை அறை என்று இருப்பதே இதற்காகத்தான்.

    அதில் படுத்தபடி விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதோ. தட்டில் சாப்பாடோ அல்லது கொரிக்க பட்சணமோ வைத்துக்கொள்ள படுக்கை அறை இல்லை.

    பெற்றோர்கள் இப்படிச்செய்ய குழந்தைகளும் தங்கள் அறைகளை சாப்பாடு,கணினி. படிப்பு. விளையாட்டு என்று எல்லாவற்றுக்கும் உபயோகப்படுத்துக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் பேசி அளவளாக நேரம் கிடைப்பதில்லை.. தவிர பெற்றோர்களும் இரவு சாப்பிடும் நேரமும் லீவு நாட்களில் காலை மாலை சாப்பிடும் நேரமும் ஒரு குறிப்பிட்ட நேரமாக்கி அதில் அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் அந்த அன்னத்தை நமக்கு வழங்கும் இறைவனை ஒரு நிமிடம் எண்ணி நன்றியைத்தெரிவித்து உண்ண கற்றுக்கொடுக்க வேண்டும்.இதைக்கிருஸ்துவர்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். குடும்ப நபர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகவும் அனுபவித்து சாப்பிடவேண்டும்.

    இதைப்போல் பல சொல்லிக்கொடுக்க குழந்தைகளுக்கு, பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

    அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்..

    Share
  • மன்னர்களும் இசையும்!….

    விசாலம்

    காலம் காலமாக இசையில் மன்னர்களும் ஈடுபட்டு இசையை ஆதரித்து வந்தனர்முகலாயமன்னர் சக்கர்வத்தி அக்பர் ஹிந்துஸ்தானி இசையை ஆதரித்து தன் அவையில் அடிக்கடி இசை தர்பார் நடத்தினார்.அதில் முக்கிய பங்கு வகித்த தான்சன் மஹராஜை மறக்கமுடியாது. அவர் இசையில் பெரிய ஐஸ் பாறையும் உருகிவிடும். குப்தர்கள் வம்சத்தில் பலர் இசையில் வல்லுனராக இருந்தனர் சக்கரவர்த்தி சமுத்திரகுப்தா வீணை மிக அழகாக வாசிப்பாராம் அவர் ஆண்ட போது அவர் யாழ் வாசிக்கும் உருவத்தில் காசுகள்அடிக்கப்பட்டன. மேவார் நாட்டு மன்னர் மீராபாயின் கணவர் ராணாவும் இசையில் தேர்ச்சி பெற்றவர்.நடனக்கலையும் அறிந்தவர்.”சங்கீத மிமாம்சா “என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

    தஞ்சாவூரை ஆண்ட பல அரசர்கள் இசையில் தேர்ச்சிப்பெற்று பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.சரபோஜி மன்னரும் நன்கு பாடுவாராம் ரகுநாத நாயக் என்ற மன்னர் “சங்கீத சுதா’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.மிதிலையின் மன்னர் நன்யபூபாலா “சரஸ்வதி ஹிருதயலங்காரா’ என்னும் பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஷாஜி மஹராஜா “பல்லகி சேவா பிரபந்தம் “என்னும் நூலை எழுதியிருக்கிறார்.

    தென் இந்தியாவில் மஹாராஜா திரு ஸ்வாதி திருநாள் அவர்களின் கிருதிகள் அபூர்வமானவை. திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் பலர் பல பாடல்களை இயற்றினர்.அதில் திரு ஸ்வாதிதிருநாள் ஆண்ட காலத்தில் இசை சிகரத்தைத் தொட்டது.

    மன்னர் ஸ்வாதித்திருநாளுக்கு பல பெயர்கள் உண்டு.பத்மநாபதாசர் ஸ்ரீராமாவர்மா குலசேகர பெருமாள்.வாஞ்சிபலர் , ஆகியவை…..இவர் பிறந்த நட்சத்திரம் சுவாதி ஆனதால் இவர் சுவாதிதிருநாள்: என்று அழைக்கப்பட்டார்.இவர் பிறந்த் இரண்டாண்டுகளிலேயே இவரது அன்னை லட்சுமி பாய் இயற்கை எய்தினார்.தந்தை திருராஜராஜவர்மா தனித்துவிடப்பட்டார்.

    மன்னர் சுவாதித்திருநாளுக்கு பல மொழிகள் தெரியும் முக்கியமாகசம்ஸ்கிருதம் பார்சீயமொழி.கன்னடம் மராத்தி உருது ஆங்கிலம் ,மலையாளம், தெலுகு ,நன்கு பேச எழுத முடிந்தது இந்தமொழிகளில் அவர் பாடல்களும் இயற்றியிருக்கிறார். இவருடைய இசையினாலேயே திருவாங்கூர் இசையில் முதன்மை இடத்தைப்பிடித்தது.

    இவரது ராகமாலிகை ‘பன்னகேந்தரசயனா “எட்டு ராகங்கள் கொண்டது கேட்க மிகவும் ரஞ்சகமாக இருக்கும் இவருடைய வர்ணங்க்ளில் அடதாள வர்ணங்கள் “விரிபோணி பைரவி ராகம் வனஜாட்சி கல்யாணி ராகம். ‘கனகாங்கி’ தோடி ராகம் பல கச்சேரிகளில் ஆரம்பமாக இருக்கும். அதன் அழகையும் நடையையும் ஸ்வரபிரஸ்தாரங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    இப்பவும் திருவனந்தப்புரத்தில் அவர் பெயரில் ஸ்வாதித்திருநாள் விழா நடத்தப்பட்டு அதில் பல பிரதான வித்துவான்கள் அவருடைய பாடல்களைப்படி கௌரவிக்கின்றனர்.குழந்தைகளே இசையில் நாட்டம் கொள்ளுங்கள்.குரல் வளமும் ஆர்வமும் இருந்தால் போதும்.ஒரு நல்ல குரு மூலம் சிரத்தையாகக் கற்றுக்கொள்ளுங்கள்/ மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் கொடுப்பது இந்த இசைதான்.. பலர் இசையினால் தனக்குப்பிடித்த இறைவனை தரிசித்திருக்கின்ற்னர.உம் மீராபாய். ஸ்ரீ தியாகராஜர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சதர். ஸ்ரீ சியாம சாஸ்த்திரி.ஸ்ரீ புரந்தரதாசர்.ஸ் அன்னம்மாசார்யா. என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சும்மா டிவியில் சீரியல் மட்டும் பார்க்காமல் நிறைய இசை சம்பந்தப்பட்ட படைப்பையும் பாருங்கள்…

    Share
  • ஒரு நாள் நடிகை!..

    விசாலம்

    நடிக்கும் தொழிலும் ஒரு கலை தான் ,ஆதி காலத்திலிருந்தே இசை நாட்டியம் நாடகம் என்று இன்று வரை தொடர்ந்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாடகம் என்றால் எனக்கு உயிர்.

    நாடகம் பார்க்கப்போனால் ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசித்துப்பார்ப்பேன்.நான் பார்த்த முதல் நாடகம் திரு மனோஹரின் இலங்கேஸ்வரன் பின் டி கே எஸ் பிரதர்ஸின் இராஜ இராஜ சோழன்,திரு சஹஸ்ரநாமத்தின் பராசக்தி , போலீஸ்காரன் மகள், நாலு வேலி நிலம் ,குலதெய்வம் போன்ற நாடகங்கள் இன்றளவும் என் மனதில் நிற்கின்றன.

    நாவப் டிஎஸ் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் 8000 தடவைகள் நாடகங்களை நடத்தினார்கள்.என்று கேள்விப்பட்டேன். நாங்களும் எங்கள் நாடக குழுவுடன் இது போல் நாடகம் நடத்துவோம்.ஆனால் கூட்டம் வரவேண்டுமே என்பதால் சேவாஸ்டேஜ் திரு சஹஸ்ரநாமம் நடிக்கும் ஐந்து நாடகங்கள் நடுவே எங்கள் ஒரு நாடகத்தைப்புகுத்திவிடுவோம். சேவா ஸ்டேஜ் நாடக நடிகர்களுக்கு அந்த ஒரு நாள் ரெஸ்ட். இது பம்பாய் பாரதி கலா மன்றத்தில் நடக்கும்.

    பெயர் பெற்ற நடிகை என்றால் அவர்கள் சுதந்திரம் மிகவும் குறைந்து விடுகிறது. அவர் இஷ்டப்படி கடைக்குப்போக முடிவதில்லை, சுதந்திரமாக தெருவில் நின்று அரட்டை அடிக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஒரே கூட்டம் சேர்ந்து விடுகிறது.ஆட்டோகிராப் வாங்க சிலர் முண்டியடிப்பார்கள். அவர் கையைத்தொட சிலர் முயல்வார்கள். ‘அப்பப்பா ஏன் வெளியில் கிளம்பி வந்தோம் ‘ என்ற எண்ணம் அவர்களுக்கு நிச்சியம் தோன்றும். இதுவே வெளியூர் சூட்டிங் இருந்தால் இவ்வளவு சங்கடம் இல்லை. சூட்டிங்க நடக்கும் போது ஒருவிதமான கூட்டம் சேருவதில்லை.
    தவிர அந்த நாட்டு மக்களும் ஏதோ சினிமா ஷூட்டிங் போல் இருக்கு என்று தொந்தரவு செய்யாமல் தள்ளி நடந்து போகிறார்கள். இதை நான் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் பிரிட்ஜ் என்ற இடத்தில் பார்த்தேன். மாதுரி தீஷித்துடன் ஒரு ஹீரோ. நிற்க ஒரு நடனம் ,ஷூட்டிங் . அங்கு ஒரு விதமான தொந்தரவும் இல்லை.கூட்டம் சேரவுமில்லை.இதுவே பம்பாயாக இருந்தால் அவ்வளவுதான்.டிராபிக் ஜாம் ஆகிவிடும்.
    பாவம் நடிகை. எங்கு போனாலும் காருக்குள் சிறை.பின் வீடு வந்தால் வீட்டிற்குள் சிறை. இஷ்டப்படி சுதந்திரமாக இருக்க முடியவில்லை..சாதாரண மக்கள் போல் வாழ முடியவில்லை.தவிர தனக்கென்று ஒரு வாழ்க்கை ஸ்டைல் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால் பணம் போதாவிட்டாலும் அதை கடைப்பிடிக்க பின் பணம் போதாமல் மனசோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். நடிகை மீனா குமாரியின் கடைசி காலம் இது போல் தான் இருந்தது.

    நானும் ஒரு நாள் நடிகையாக ஆனேன். அதாவது நடிகை படும் அவஸ்தையை நானும் அனுபவித்தேன். எப்படி தெரியுமா? எங்கள் நாடகம்

    பம்பாயில் நடக்க இருந்தது. எப்போதும் சமூக நாடகமாக இருக்கும் ஆகையால் உடைக்குப்பிரச்சனை ஏற்பட்டது இல்லை. ஆனால் அந்தத்தடவை

    வள்ளி திருமணம் என்ற நாடகம் எடுத்துக்கொண்டோம்.அதற்காக நம்பி ராஜனுக்கு தனி டிரெஸ் ,வேடனுக்கு தனி டிரெஸ் வள்ளிக்கு பின் குறத்திக்கு என்று ஏகப்பட்ட வேஷம். இதற்காக நாங்கள் நாடக உடை விற்கும் கம்பெனிக்கு கிளம்பினோம். எங்களுக்கு திரு சாந்தாராம் அவர்கள் நல்ல பழக்கம்.அவரது பெண் ஜெயஸ்ரீ எனக்கு நன்றாக தெரியும்.ஆகையால் அவர் மூலம் அவரது கம்பெனியின் வேன் எங்களுக்குக்கிடைத்தது.

    ஜவேரி பஜாரையும் தாண்டி இந்த நாடகத்திற்காக வேஷம் ,உடை வாடகைக்குக்கு கொடுக்கும் இடம் இருந்தது. அந்தக்கூட்டத்தில் நான் தான் நல்ல கலர்.அந்தக்காலத்தில் பார்க்க அழகாக இருப்பேன் என்று பலர் சொல்வார்கள். ஹூம் அது அந்தக்காலம். காலம் நமக்கு என்று நிக்குமா என்ன? அந்த ஓட்டத்துடன் நாமும் தான் ஓட வேண்டும். சரி வேனுக்குள் வருவோம் எங்கள் எல்லோருக்கும் இது ஒரு புது அனுபவம் ஏனென்றால் எப்போதும் ஒரிரெண்டு உடைகள் தான் வெளியிலிருந்து வாங்குவது போல் இருக்கும்.ஒன்று போலீஸ். மற்றோன்று சன்யாசி.ஆனால் இந்த நாடகத்திற்கோ எல்லோருக்கும் புது வேஷம்.அவர்கள் உடல் அமைப்புக்குத் தகுந்தாற்போல் உடை வேண்டும் ஆகையால் ஒரு 15 பேர் கிளம்பினோம். நடுவில் சமோசா கடை எங்களை வா வா என்று அழைத்தது. அருகில் பேல் பூரி கடை வேறு சரி இறங்கி சாப்பிட்டு வரலாம் என்று இறங்க நினைத்து கதவைத்திறக்க வாசலில் ஒருவன் எங்களைப்பார்த்து மாராட்டியில் வாங்கோ வாங்கோ பில்ம் ஸ்டார் வராங்க ‘என்று தங்கள் நண்பர்களிடம் கத்தினான்.’ யார் யார் உள்ளே இருக்கா ?” என்று ஒருவன் கேட்க இன்னொருவன் காமினி கௌசில் நளினி ஜய்வந்த மும்தாஜ். பிந்து என்று அடிக்கிக்கொண்டே போனான். நாங்கள் அவர்கள் வந்து ஏதாவது பிரச்சனை செய்யப்போகிறார்களோ என்று பயந்து சமோசாவை வாங்காமலே வேனில் அவசரமாக ஏறிக்கொண்டோம். நான் அவர்கள் போய் விட்டார்களோ என்று சன்னலைச்சற்று திறந்தேன் அவ்வளவு தான் .திரும்பவும் என்னை பெரிய நடிகை என்று எண்ணி அவரவர் சைக்கிளில் எங்களைத்தொடர்ந்தார்கள். டிரெஸ் கம்பெனியும் வந்தது.எப்படி இறங்கி உள்ளே செல்வது? அந்தக்கடை இருக்கும் இடமோ ஒரு சிறிய சந்து.. அந்தச்சந்தை நிரப்பியபடி கூட்டம் சேர்ந்தது. பின் எங்கள் டிரைவர் அந்தக்கடைக்குள் சென்று முதலாளியிடம் நிலமையை விளக்கினார் ,பின் எங்களுக்கென்று போலீஸ் பாதுகாப்பிற்காக வந்தது.நாங்கள் ஒவ்வொருவரும் இறங்கி அவசரமாக கடைக்குள் ஓடினோம் பின் கடைக்காரர் கடையின் ஷட்டரைப்போட்டு மூடிவிட்டார்.

    அப்பாடி இப்போது தன் நிம்மதி. அவர்கள் மீதும் தப்பில்லை ஒன்று அவர்கள் வயது.இரண்டாவதாக நாங்கள் வந்த வண்டி டைரக்டர் திரு சாந்தாராம் அவர்களது வண்டியில் நீல் கமல் என்று எழுதி இருந்தது. அந்த வேனைப்பார்த்து நான் ஒரு சினிமா நடிகை என்று எண்ணியிருக்க வேண்டும்.அப்பப்பா நடிகை அல்லாத எனக்கே இந்த ஒரு நாளே இப்படி என்றால் பெயர் பெற்ற புகழ் பெற்ற நடிகையின் நிலைமை. எப்படி இருக்கும் அவர்கள் மூச்சு விட்டால்கூட ஒரு ந்யூஸ் ஆகிவிடும். அவர்கள் வீட்டு நாய் பூனையும் நியூஸ் ஆகிவிடும். பாவம் இப்படி சுதந்திரமில்லாமல் இருக்க வேண்டி இருக்கே என்று நினைத்தேன். என்ன செய்வது பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டால் எதையாவது தியாகம் செய்யத்தான் வேண்டும்

    இப்படியாக நான் ஒரு நாள் நடிகையானேன் ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு ?

    Share
  • ஒரு தாயின் உபதேசம்

    விசாலம்index

    {புதிதாக வேலையில் சேரும் பெண்னிற்கு தாயின் பரிவான உபதேசம்},

    “அடியே சரோஜா நீ ஒரு பெண்
    அதை எப்போதும் உணர்ந்து நட,
    அழகான பெண்,அதுதான் வினை,
    அழகே ஒரு ஆபத்து நம் போன்ற ஏழைக்கு
    பேப்பரைப்பார்க்க  எங்கும் ரேப் செய்தி,
    பாவம் சின்ன குழந்தைகளும் அதில் கைதி
    நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்,
    நீ வீட்டு வாசலைத்தாண்ட,
    உன்னை மொய்க்கும் கண்கள் உடன் வரும் ,
    உன்னைத்தொடரும்  ஒரு சோம்பேறிக் கூட்டம்,
    இரட்டை அர்த்தங்களுடன் பாடல் பிறக்கும்
    இடர்கொடுத்தபடி விசிலும் அடிக்கும் ,
    மனத்திடத்துடன் மேலே நட ,
    மானம் பெரிசாக நினைத்து நட.
    அங்கு தற்காப்புக்கலை உதவட்டம்
    அஞ்சா நெஞ்சம் வளரட்டும் ,
    மகளிர் தினம் ஒரு சிறந்த தினம் ,
    மனம் பெருமை  கொள்ளும் தினம் ,
    இன்றைய தினத்தில் உன் தாயை நினைப்பாய்.
    இனிய உபதேசங்களை மனதில் வாங்கி நடப்பாய்
    பெண் சக்திக்கு தலை வணங்குவாய்
    பெற்ற தாய்க்கு பெருமை சேர்ப்பாய்  ”  ,

     

    Share
  • வாழ்க்கை எனும் ரயில் வண்டி

    விசாலம்trainimages
    வாழ்க்கை எனும் ரயில்  பாரு
    குறைந்த சுமையுடன்  அதில் ஏறு
    அதிக சுமைகள் அங்கு  தாங்காது ,
    அதிலுள்ளே இடமும்  போதாது .
    சுமைகளைப் பத்திரமாய் காத்தல்
    சுமந்து வரும் மன உளைச்சல் .
    பிரச்சனைகள் அதனால் வரும்
    பின் துன்பதையே அவை தரும்
    இலேசான சுமைகள் தூக்க சுலபம்
    இல்லாத சுமை அதைவிட லாபம்
    பந்தபாசச்சுமை    கனத்த எடை ,
    பக்தி வழி செல்ல அது ஒரு தடை ,
    அளவில்லா ஆசை  சுமைகளை வளர்க்கும்
    ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
    மனசுமைகள் இறக்க,  வேண்டும் ஒரு கூலிக்காரன்
    ஆன்மீக நிலையத்தில் நிற்கும்  ஒரு கூலிக்காரன்
    கூப்பிட்டவுடன்   நம் முன் தோன்றுவான்
    கூடிய  சுமையை அவன் தாங்குவான்
    அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி
    ஆத்ம ஞானம்  யாசிப்போம், பெறுவோம்   நிம்மதி ,
    நன்நடத்தையோடு   சுமையைக் கொடுப்போம்
    நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .
    படத்துக்கு நன்றி

    https://drawingfromexperienceblog.wordpress.com/tag/train/

    Share
  • ஓம் நமசிவாய

    விசாலம்s-index

    அன்னை சக்தி உன்னிடம் பாதி
    அண்ணாமலையில் ஒளிரும் ஜோதி .
    ஐந்தெழுத்து மந்திரம் துன்பம் நீக்கும்
    ஐந்தெழுத்து ஜபிக்க மனமும் அடங்கும்
    உயிர்களைக் காக்க விஷமும் குடித்தாய் .
    உயிர்களின் அழிவை தடுத்து வென்றாய்
    கர்ம வினைகள் எல்லாம் நீங்கும்.
    கரத்தில் சூலம் எதிரியை அழிக்கும்..
    துன்பம் அழிக்கும் பஞ்சாட்சர ஜோதி
    துதிப்போரின் தீவினைகள் மறைவது நீதி.
    உன் விபூதி பூச மனமும் அடங்கும்.
    உயிருக்குள் ஒரு சக்தி தொடங்கும்.
    காங்கேயனை அளித்த முக்கண்ணன் நீதானே!
    காலனை அழித்த பரமசிவன் நீ தானே!
    நமசிவாய ஓதினாலே மரணபயம் தீரும் .
    நம்பியவர் வாழ்வில்அருளொளி வீசும்
    உன் தாள் பணிய மறுபிறப்பேது?
    உன் நாமம் ஓத எனக்குக் குறையேது?

    படத்துக்கு நன்றி

    http://www.angelfire.com/nc2/cybertemples/Shiva.html

    Share
  • மணி​மொழிக்கு ஓர் கடிதம்!

    விசாலம்

    என் அன்புள்ள மணி,

    நீ  அங்க சௌக்கியமா?  மாப்பிள்ளை எப்படி இருக்கார்? உங்க இரண்டு  பேருக்கும் என் ஆசீர்வாதங்கள்.

    நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த  செல்லக்குட்டி  எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான். மனசு கஷ்டந்தான். ஆனா என்ன செய்ய? நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய?  யானை தன் தலை மேல  தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி  நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே. இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு. ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு. எனக்கு பிடிக்காத ஒரு  பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே. எப்போதும் பணம்  பிசின்ஸ்ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங்ல நன்னா யூஸ் பண்ணிண்டான். உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன். அப்பறந்தான் எனக்கு நிம்மதி கிடைச்சுது. போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம்ன்னு சொன்னேனே, உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்’ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளை கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்டுட்டார்.

    அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. காலைல பூஜை பண்ணி முடிச்சேன். உம் போன் கால் வந்தது. “அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.”   “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நினையாதே”

    “நிறுத்தும்மா .நானே வருத்தமா இருக்கேன்.  சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து. இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயே ஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா. எதோ கடமையேன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக் குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே. அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே.  எப்போ பாத்தாலும் ஆபீஸ், புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க. போறாதத்துக்கு

    மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார். நீயும் அங்க அவரோட போவேன்ன்னு அடம் பிடிச்சே. அது சரிதா.  புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும். ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும், அவ உங்கிட்ட வளரட்டும். ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு, எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா”ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே, அது ஞாபகம் இருக்கா?

    அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு. ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே. அதனாலே  போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை  காட்டி நீ கூப்பிட்டே. அது என்ன வெறும் பொம்மையா? அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. “உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம். அதான் அன்னிக்கு சூடி தன் மூஞ்சியைத் திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டினு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி! என் செல்லமே! நான் தான் உன் மம்மின்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே. அதுவோ, ‘போ ஆன்டி. நீ என் மம்மி இல்லை. இவதான் என் மம்மி’ன்னு என் கழுத்தை கட்டிண்டா. நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப் போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு. எனக்கும் இனிமே இந்தக் குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான். நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது!

    ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும்னு இருந்தேன். நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல. அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை. அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும். அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை. அந்தஸ்து பெரிசில்லை. இனியாவது புரிஞ்சுக்கோ. நம்மிட்ட  நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு. அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே. மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு  அமைதியா யோசி.  உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும். இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு. எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும்.

    இப்படிக்கு

    உன் அம்மா

    Share
  • திருடனுக்கு கிடைக்காத பணம்

    விசாலம்

    ஒரு வியாபாரி அதிக பணத்துடன் ரயிலில் ஏறினான். அவன் மாதா மாதம் தில்லிக்குச் சென்று வியாபாரம் செய்த பின் சென்னை திரும்புவான். ஒரு தடவை இவனிடம் நிறைய பணம் இருப்பதைக் கண்டுகொண்டு ஒரு திருடன் அவனது எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டான். எப்படியாவது பணத்தை வியாபாரிக்குத் தெரியாமல் எடுத்துகொண்டு விட வேண்டும் என்றும் எண்ணினான்.

    இரவில் தூங்கும் நேரம் வந்தது. வியாபாரி அந்த நேரம் தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான்.

    அடிக்கடி எதிரே அமர்ந்த திருடனையும் கண்காணித்தான். இதனால் திருடன் தான் பாத்ரூமுக்கு போவது போல் எழுந்துச் சென்றான். அவன் திரும்பி வந்தவுடன் வியாபாரி நன்கு  தூங்குவதைக் கண்டு தன்  வேலையை ஆரம்பித்தான். அவனது பைகளையும் பெட்டியையும் குடைந்தான்.

    திருடனுக்குப் பூட்டுத் திறக்க சொல்லியா கொடுக்கவேண்டும்!

    ஆனால் இவ்வளவு தேடியும் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; ஏமாற்றம் தான் மிகுந்தது.

    இரண்டாவது நாளும் இதேபோல் சந்தர்ப்பம் கிடைக்க பணத்தைத் தேடினான். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை.

    மறுநாள் இருவரும் இறங்கும் தருணம் வந்தது. அப்போது திருடன் வியாபாரியிடம் கேட்டான்.

    “நீங்கள் பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். ஆனால் அதை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “நீங்கள் எதற்கு இதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”

    “நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? நான் ஒரு திருடன். உங்கள் பணத்தை அபகரிக்கவே உங்கள் முன் அமர்ந்திருந்தேன். பணமும் தேடித் தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலிதான் . பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “எனக்கு உன்னைப் பார்த்தவுடனேயே நீ பணத்தைத் திருட வந்தாய் என என் உள் மனம் எனக்குச் சொல்லி விட அதை  பத்திரமாக எங்கு வைப்பது என யோசித்தேன். ஆகையால் உன் தலையணையின் அடியே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன். உன் பொருளை நீ சோதிக்க மாட்டாயே…”

    திருடன் பிரமித்து போனான்.

    நாமும் நமக்குள் இருக்கும் கடவுளைத் தெரியாமல் என்னெவெல்லாமோ செய்துக்கொண்டிருக்கிறோம் இந்தத் திருடன் போல் ……

    Share
  • பொறுப்பை உணரும் நாள் எதுவோ ?

    விசாலம்

    ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்துசெயல்படவேண்டும் அதில் தான் அவனது சிறப்பு அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் “வொர்க் ஈஸ் வொர்ஷிப் “என்று சொல்வது உண்டு . செய்யும் தொழிலே தெய்வம் என்பதே தான் அது .இன்று பலர் பெரிய மனிதராகி புகழுடன் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் இந்த சூத்திரம் கடைப்பிடித்ததால் தான், அது சாத்தியம்.

    என் பத்து வயதில் பம்பாயில் இருந்த போது திரு நல்லி சின்னஸ்வாமி செட்டியார் அவர்களும் அவர் சகோதரரும் முதுகில் மூட்டைச்சுமந்தபடி மாதுங்கா தாதரில் வெய்யில் மழை, பாராமல் நடை நடையாக தங்கள் சேலைகளை விற்க வருவார்கள். எங்கள் வீட்டிற்கு அவர் தான் வாடிக்கை . பாவாடை, துண்டு ,புடவைகள் என்று பல எங்கள் வீட்டில் நிரம்பும் . பணமும் அடுத்த மாதம் வந்து வாங்கிக்கொள்வதால் பலர் அவரிடம் வாங்குவார்கள்.இப்போது அவர் தனது உழைப்பினால் பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் தன் உழைப்பை தெய்வமாக மதித்ததால் மேலே உயர முடிந்தது. இதே போல் பலர் ஏழையாக இருந்து மாவாட்டி ,பேப்பர் போட்டு பல சிரமங்களுக்கு நடுவில் தங்கள் இலக்கை அடைந்திருக்கிறார்கள் .உதாரணமாக சக்தி மசாலா, ஆரோக்கியா பால் . உடுப்பி ஹோட்டல், ஸ்ரீகிருஷ்ணா, போன்றவைகளைக் குறிப்பிடலாம்

    பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ளும் பல சம்பவங்கள் எனக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது .அதுவும் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக இந்த ரகத்தில் வருகிறார்கள் தலைநகரமான தில்லியில் பார்லிமென்ட் ஹவுஸில் வேலைசெய்பவர்கள், குளிர்காலத்தில் ஆபீசிற்கு வந்து சேருவதே தாமதம் தான் . சிலர் நிதானமாக 10 மணிக்கு மேல் வருவார்கள் . பின் ஒரு மணிநேரம் ஏதோ
    வேலை செய்வது போல் பாவனை செய்து பின் சாய் பியேங்கே என்று சொல்லியபடி கேன்டீனுக்கு வந்து விடுவார்கள். பாவம் ரொம்ப குளிர் ஆயிற்றே ! பின் உள் வந்து 1 மணி நேரம் வேலை செய்துப்பின் எதிரில் இருக்கும் பார்க்கில் வெய்யில் காய வந்துவிடுவார்கள். அத்துடன் நிலக்கடலை கொரிப்பது வேறு நடக்கும் .பின் அந்தப் பார்க்கில் அத்தனை தோலிகளும் பரிதாபமாக கிடக்கும். பின் ஒரு மணி நேரம் வேலை முடிந்தவுடன் ‘லஞ்ச் டைம்” மிஞ்சி இருப்பது மூன்று மணி நேரம் . அந்த நேரத்தில் முடிக்க பல பைல்கள் கிடக்க ஏதோ கொஞ்சம் வேலை முடியும் . பின் ‘சமோசா’ டீ என்று வெளியே வந்து அவ்வளவுதான் , அன்றைய தினம் முடிந்துவிடும் . இது நான் நேரில் பார்த்து அனுபவித்த ஒரு காட்சி . சென்னையில் இப்படி இருக்காது என் நினைக்கிறேன் . ஏனென்றால் சென்னையில் மூன்று சீசன் தான் . வெப்பம் , அதி வெப்பம் , அதி அதி வெப்பம் [ hot, hotter hottest } அதனால் அதிகமாக வெளியே வர வாய்ப்பில்லை என நினக்கிறேன்

    ஆனால் சென்னையில் ஒரு பெயர் போன வங்கிக்குச் சென்றிருந்தேன் அங்கு பார்த்தது என்ன ? அங்கு , வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து. பேசிக்கொண்டிருக்கிறாள் காதல் என நினைக்கிறேன் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன் அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் . அங்குச் சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்று கூறி தான் வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்த சினிமாவை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது வேலை மத்தியஅரசு அல்லது மாநில அரசு . சமபந்தப்படிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தி இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால்
    யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்
    ,சிலர் சாதாரண மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்; சிலர் ஒழுங்காக வேலைச் செய்பவனையும் மாற்றி ” நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்பு பார்டிக்கு ” என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,

    மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறது. சேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலை உயர்வு தான் புதிய பொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால் தெரியவில்லை அன்றே அந்தக் கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளே நுழைந்ததும் கர்னல் போனை எடுத்து “ஹலோ யார் பேசுவது? ஜனாதிபதி கிளிண்டனா? குட் மார்னிங்? எதாவது விசேஷம் உண்டா ? நான் இன்றுதான் சார்ஜ் எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான் பின்னர் பேசுகிறேன் ” இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான் .

    “ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? கர்வமான குரலில் கேட்டார் வந்தவன் ” மன்னிக்க வேண்டும் நான் தொலை பேசி நிலையத்திலிருந்து வருகிறேன் உங்கள் போனுக்கு உடனே கனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது, அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில் தான் நீங்கள் பேசினீர்கள் “

    இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?

    இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம். தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?

    முன்பு காபி ஆற்றிக் கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும் அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டு முயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல் பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது . குடும்பத்திலிருந்து ஆரம்பித்து அவரவர் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்தால் நமது பாரதம் எங்கேயோ எட்டிவிடும் இதில் சந்தேகமில்லை.

    Share
  • த​லையில்லா ​தேவி

    விசாலம்

    தை மாதம் வந்தாலே அம்பாளுக்கு உற்சாகம் தான். எந்தக் கோயிலில் சென்றாலும் பெண்மணிகளின் கூட்டமும், அவர்கள் அழகாக அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும். கூடவே லலிதா திரிசதி படிப்பதும் கேட்பவர்களைப் பரவசப்படுத்தும். தவிர, எல்லாப் பெண்மணிகளுக்கும் தாம்பூலமும் கொடுக்க அம்பாளின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைத்த மன நிறைவு இருக்கிறதே, அதை அனுபவித்தால் தான் தெரியும். அம்பாளுக்கும் விதவிதமான புடவைகள் வந்து குவியும். அவளும் பக்தர்களுக்காக எல்லாம் மாறி மாறி கட்டிக்கொண்டு கொள்ளை அழகாக மடிசாரில் மின்னுவாள். அதுவும் தை வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மிகவும் விசேஷமான தினம்.

    அந்த மாதத்தில் வரும் நாலு அல்லது ஐந்து வார வெள்ளிக்கிழமைகளில் கோயில் மண்டபம் முழுவதும் பெண்மணிகளால் நிரம்பி இருக்கும். மண்டபத்தில் சின்னச்சின்ன கட்டங்களில் மாக்கோலம் போடப்பட்டு அதன் அருகில் நம்பரும் எழுதியிருக்கும்.  கோயிலின் மண்டபத்தின் அளவைப் பொறுத்து நம்பரும் இருக்கும். யார் யார் விளக்கு பூஜைக்கு பெயர்  கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு டோக்கன் நுழைவு சீட்டுப் போல் நம்பர் இட்டு கொடுத்திருப்பார்கள். அவர்கள் அந்த டோக்கனுடன் பூஜைக்கு வரவேண்டும். அவர்கள் வரும் போது குத்து விளக்கு, வாழை இலை, தூபக்கால், திரி, எண்ணெய் என்று அவர்கள் கேட்ட ஐட்டங்களுடன் வர, ஒன்பது மணிக்கு பூஜை ஆரம்பிக்கும். சுமார் பன்னிரண்டு மணி வரை நடக்கும். ஒரே நேரத்தில் பல விளக்குகள் ஒளி வீச குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து அவளுக்கு அரக்கு அல்லது பச்சை புடவை சுற்றி பூவும் சூட்டி மஞ்சள் குங்குமம் இட்டு ரெடியாக “டண்டண்” என்று மணி அடிக்கும் ஒலி. எல்லோரும் தங்கள் கவனம் முழுவதும் அம்பாளிடம் செலுத்த அதுவே ஒரு தியானமாகிவிடும். பின் என்ன வாத்தியார் “கணானாம் த்வா கணபதிம்” என்று ஆனைமுகனை அழைக்க அவரும் மஞ்சள் பிள்ளையாராக வந்து அமர்ந்துவிடுவார். பின்னர் விக்னமில்லாமல் பூஜை நடக்க பிரார்த்தனை தொடங்க  பூஜை மேலே தொடரும்.

    ஆஹா! என்ன அழகு! அந்தச் சூழ்நிலை மறக்கமுடியாத ஒன்று. அதேபோல் பூஜை முடிவடையும் நேரம் எல்லோரும் கற்பூரம் காட்டி வழிபடும் நேரமும் மனதை விட்டு நீங்காது. அந்த ஊதுவத்தியின் வாசனை, சாம்பிராணியின் தனி மணம், பல பூக்களின் கதம்ப வாசனை எல்லாம் சேர்ந்து ஆன்மீக வழிக்கு நம்மை எடுத்துச்செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.நான் தில்லியில் இருக்கும் போது வெள்ளிக்கிழமை தவறாமல் அம்பாள் கோயில் போய் வருவேன். மந்திர் மார்கில், பிர்லா மந்திர் அருகில் இருக்கும் காளி பாரி {kali bari} கோயிலை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அங்கும் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் தாங்கமுடியாது.

    நான் பல தடவைகள் இங்கு போயிருக்கிறேன்.  இந்தக் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி இருந்தாலும் இங்கு இருக்கும் காளி தான் மிக விசேஷம். அந்தக் காளியின் கோவில் மிகப் பழமை வாய்ந்தது.

    3 Chinamasta123முகலாய வம்சத்தினர் அதன் அருகில் படை எடுத்தப்போதும்கூட கோவில் ஒரு சேதமாகாமல் தப்பித்தது. முகலாயர்கள் இந்தக் கோவில் வரை வந்தும் மனது மாறி திரும்பியதாகச் சொல்லுகிறார்கள். அங்கு பலவிதமான வர்ணப் படங்கள் {paintings} உள்ளன. எல்லாம் அம்பாளின் பல ரூபங்கள். அந்தப் படங்களில் ஒன்று என் மனதை மிகக் கவர்ந்தது. ஆனால் மிகவும் பயங்கரமான ஒன்று. இப்படியும் ஒரு அம்மனா? என்ன கொடூரம்! ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த அம்பாள் பெயர் சின்ன மஸ்தா. மகர சங்கராந்தி, தை செவ்வாய் வெள்ளி, வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி போன்ற நாட்களில் இவளுக்கும் தனி பூஜை உண்டு. சின்ன என்றால் துண்டித்தது; மஸ்தா என்றால் தலை என நினைக்கிறேன். சின்ன மஸ்தா தன்னுடைய ஒரு கையில் தன்னுடைய வெட்டியத் தலையையே வைத்திருக்கிறாள். தன் தலை அதுவும் அப்போதுதான் முண்டித்த தலை, இரத்த வெள்ளம் அருவி போல்; என்ன பயங்கரம்! தலையில்லாமல் முண்டமாக நிற்கிறாள். வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இரத்தம் பெருகி மூன்று ஊற்றுக்கள் வெளியே வந்து விழுகின்றன.  இடை பிங்கலை  சுழுமுனை  வழியாக வெளியே வந்து  இந்தக் குறுதி ஊற்றுக்கள் பாய்கிறது வெளியே!

    இவளுடைய கையில் வெட்டப்பட்டத் தலை மத்ய நாடியான சுஷம்னாவிலிருந்து வரும் இரத்ததைப் பருகுகிறது. இதைப் பற்றி அங்கு இருந்த ஒரு பண்டித்ஜியிடம் கேட்டேன். நாம் நமது இந்திரியத்தை அடக்க முற்படும் போது தலை உச்சி வரை அமுத நீர் ஓடி சஹஸ்ராரா சக்ராவைத் தொட ஆனந்த நிலை, சமாதி  நிலை ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்படுவதற்கு உதவுகிறாள் சின்னமஸ்தா.  இந்திரியங்களை ஒடுக்கினால் மட்டும் போதாது; மனதிலுள்ள  நான் என்ற மமதையும் நீக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத் தன் தலையையே வெட்டி  தன் கையில் வைத்திருக்கிறாள், கரத்தில் ஒரு கத்திரிக்கோல் உள்ளது. இது  சம்சார பந்தததை வெட்டிக் கொண்டு நான் பிரம்மம் என்று உணர  வைத்திருக்கிறாள். இவள் மேலும் காம புருஷனையும் ரதியையும் காலின்  கீழ் மிதித்துக் கொண்டிருக்கிறாள். இதற்கு பண்டித்ஜி கொடுத்த விளக்கம் ஐந்து இந்திரியங்களுடன் மனதையும் சேர்த்து ஆறாக்கி சஷ்டி தேவி என்றும் இவளைக் கூறுகின்றனர். இவளே சக்தியில் வித்யுத் சக்தி என்ற மின் சக்தி உண்டு செய்கிறாள். இந்த மின் சக்தி குண்டலினி தியானத்தில் மெதுவாக மேலே ஏறி ஜீவாதார சக்தியாக மாறி பின் மின் அதிர்வைத் தருகிறது. ரிஷிகள் இந்த மின் அதிர்வை உணர்ந்து மேலும் மேலே சிரம் உச்சி வரை எடுத்துப் போக BLISS என்ற பேரானந்தம் கிடைக்கிறது.

    இந்த சக்தி உண்டாக்க  காரணமான அந்த சின்ன மஸ்தாவை வணங்குவோம்.

    யா தேவி  ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா 

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

    யாதேவி  ஸர்வ பூதேஷு  சக்தி ரூபேண சம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை  நம்ஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை நமோ நம:

    யதேவி ஸர்வ   பூதேஷு  சாந்தி ரூபேண  ஸம்ஸ்திதா 

    நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

    படத்திற்கு நன்றி: http://my3yoga.blogspot.com/2012/07/dasha-maha-vidyalu.html

    Share