விசாலம்

ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்துசெயல்படவேண்டும் அதில் தான் அவனது சிறப்பு அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் “வொர்க் ஈஸ் வொர்ஷிப் “என்று சொல்வது உண்டு . செய்யும் தொழிலே தெய்வம் என்பதே தான் அது .இன்று பலர் பெரிய மனிதராகி புகழுடன் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் இந்த சூத்திரம் கடைப்பிடித்ததால் தான், அது சாத்தியம்.

என் பத்து வயதில் பம்பாயில் இருந்த போது திரு நல்லி சின்னஸ்வாமி செட்டியார் அவர்களும் அவர் சகோதரரும் முதுகில் மூட்டைச்சுமந்தபடி மாதுங்கா தாதரில் வெய்யில் மழை, பாராமல் நடை நடையாக தங்கள் சேலைகளை விற்க வருவார்கள். எங்கள் வீட்டிற்கு அவர் தான் வாடிக்கை . பாவாடை, துண்டு ,புடவைகள் என்று பல எங்கள் வீட்டில் நிரம்பும் . பணமும் அடுத்த மாதம் வந்து வாங்கிக்கொள்வதால் பலர் அவரிடம் வாங்குவார்கள்.இப்போது அவர் தனது உழைப்பினால் பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் தன் உழைப்பை தெய்வமாக மதித்ததால் மேலே உயர முடிந்தது. இதே போல் பலர் ஏழையாக இருந்து மாவாட்டி ,பேப்பர் போட்டு பல சிரமங்களுக்கு நடுவில் தங்கள் இலக்கை அடைந்திருக்கிறார்கள் .உதாரணமாக சக்தி மசாலா, ஆரோக்கியா பால் . உடுப்பி ஹோட்டல், ஸ்ரீகிருஷ்ணா, போன்றவைகளைக் குறிப்பிடலாம்

பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ளும் பல சம்பவங்கள் எனக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது .அதுவும் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக இந்த ரகத்தில் வருகிறார்கள் தலைநகரமான தில்லியில் பார்லிமென்ட் ஹவுஸில் வேலைசெய்பவர்கள், குளிர்காலத்தில் ஆபீசிற்கு வந்து சேருவதே தாமதம் தான் . சிலர் நிதானமாக 10 மணிக்கு மேல் வருவார்கள் . பின் ஒரு மணிநேரம் ஏதோ
வேலை செய்வது போல் பாவனை செய்து பின் சாய் பியேங்கே என்று சொல்லியபடி கேன்டீனுக்கு வந்து விடுவார்கள். பாவம் ரொம்ப குளிர் ஆயிற்றே ! பின் உள் வந்து 1 மணி நேரம் வேலை செய்துப்பின் எதிரில் இருக்கும் பார்க்கில் வெய்யில் காய வந்துவிடுவார்கள். அத்துடன் நிலக்கடலை கொரிப்பது வேறு நடக்கும் .பின் அந்தப் பார்க்கில் அத்தனை தோலிகளும் பரிதாபமாக கிடக்கும். பின் ஒரு மணி நேரம் வேலை முடிந்தவுடன் ‘லஞ்ச் டைம்” மிஞ்சி இருப்பது மூன்று மணி நேரம் . அந்த நேரத்தில் முடிக்க பல பைல்கள் கிடக்க ஏதோ கொஞ்சம் வேலை முடியும் . பின் ‘சமோசா’ டீ என்று வெளியே வந்து அவ்வளவுதான் , அன்றைய தினம் முடிந்துவிடும் . இது நான் நேரில் பார்த்து அனுபவித்த ஒரு காட்சி . சென்னையில் இப்படி இருக்காது என் நினைக்கிறேன் . ஏனென்றால் சென்னையில் மூன்று சீசன் தான் . வெப்பம் , அதி வெப்பம் , அதி அதி வெப்பம் [ hot, hotter hottest } அதனால் அதிகமாக வெளியே வர வாய்ப்பில்லை என நினக்கிறேன்

ஆனால் சென்னையில் ஒரு பெயர் போன வங்கிக்குச் சென்றிருந்தேன் அங்கு பார்த்தது என்ன ? அங்கு , வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து. பேசிக்கொண்டிருக்கிறாள் காதல் என நினைக்கிறேன் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன் அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் . அங்குச் சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்று கூறி தான் வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்த சினிமாவை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது வேலை மத்தியஅரசு அல்லது மாநில அரசு . சமபந்தப்படிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தி இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால்
யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்
,சிலர் சாதாரண மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்; சிலர் ஒழுங்காக வேலைச் செய்பவனையும் மாற்றி ” நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்பு பார்டிக்கு ” என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,

மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறது. சேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலை உயர்வு தான் புதிய பொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால் தெரியவில்லை அன்றே அந்தக் கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளே நுழைந்ததும் கர்னல் போனை எடுத்து “ஹலோ யார் பேசுவது? ஜனாதிபதி கிளிண்டனா? குட் மார்னிங்? எதாவது விசேஷம் உண்டா ? நான் இன்றுதான் சார்ஜ் எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான் பின்னர் பேசுகிறேன் ” இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான் .

“ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? கர்வமான குரலில் கேட்டார் வந்தவன் ” மன்னிக்க வேண்டும் நான் தொலை பேசி நிலையத்திலிருந்து வருகிறேன் உங்கள் போனுக்கு உடனே கனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது, அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில் தான் நீங்கள் பேசினீர்கள் “

இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?

இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம். தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?

முன்பு காபி ஆற்றிக் கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும் அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டு முயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல் பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது . குடும்பத்திலிருந்து ஆரம்பித்து அவரவர் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்தால் நமது பாரதம் எங்கேயோ எட்டிவிடும் இதில் சந்தேகமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பொறுப்பை உணரும் நாள் எதுவோ ?

  1. அகில இந்திய அளவில் “இது என் வேலை இல்லை” என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் மனவியாதி பெரும்பாலான அலுவலகங்களில் இருப்பது வேதனையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *