பேரறிஞர் அண்ணா
கனிந்த நல் இதழ்களில் தவழ்ந்திடும் புன்னகை
கவிதையில் சொன்னால் அண்ணா ஒரு பாற்கடல்!
பொதிகையும் புதுவையும் கலந்துவந்த கலவையவர்!
தமிழ்க் கதிரவன் உதயமாகக் காரணம் ஆம் அவர்!!
கடற்கரையில் நிரந்தரமாய் காட்சிதரும் பொருளானார்!
காலங்கள் உள்ளவரை காவியமாய் அவரானார்!!
எளிமையில் இவரிருந்தும் ஏழ்மையை அகற்ற வந்தார்
எண்ணத்தால் உயர்ந்துநின்று இவ்வுலகைத்தான் அளந்தார்!
சமுதாய அவலங்களைக் களைப்பின்றி சாடிநின்றார்!
சாதிப் பேயொழிய பெரியாரின் வழி நடந்தார்!!
முதல்வர் பதவியிது முள் வைத்த கிரீடமென்றார்!!
முழுமூச்சாய் நாட்டிற்கே தன்னையே அர்ப்பணித்தார்!
ஆங்கிலத்தில் புலமையுண்டு.. அனைவரையும் திகைக்க வைத்தார்.
அண்ணாவின் பேச்சாற்றல் அனைத்துலகும் அறிந்த ஒன்று!
கலைஞர் முதல் தலைவர்களை உருவாக்கிய களமவர்!
கண்ணதாசன் முதலான கவிஞர்களை நேசித்தப் பேரறிஞர்
புடம்போட்டு வைத்த தங்கம்! புன்னகையால் நமை இழுக்கும்!
பொடிபோடும் பழக்கமுண்டு! புரட்சிக்கு அது நெருக்கம்!!
ஒய்வுறக்கம் ஏதுமின்றி ஒர்தலைவர் யாரென்றால் – அது
காஞ்சியிலே தோன்றிய நம் தலைவர் அண்ணாவே!!
படத்துக்கு நன்றி
http://www.mysixer.com/?p=13237