குறளின் கதிர்களாய்… (20)

செண்பக ஜெகதீசன்images

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

-திருக்குறள்- 660 (வினைத் தூய்மை)

 

புதுக் கவிதையில்…

 

அறநெறி யல்லது

பிற நெறியில்

சேர்த்த செல்வம்

நிற்பதில்லை நிலைத்து..

 

அதை

வைத்துப் பாதுகாப்பது,

பச்சை மண்குடத்தில்

பருகும் நீரைவைத்து

போகாமல் காப்பது போலத்தான்…!

 

குறும்பாவில்…

 

பச்சைமண் குடத்து நீரும்

புறவழியில் சேர்த்த பணமும்,

பாதுகாப்பில் நிற்காது…!

 

 மரபுக் கவிதையில்…

 

பாத்திரம் பச்சை மண்ணாலெனில்

பருகிட வைத்தத் தண்ணீரும்

ஆத்திர அவசரத் தேவைக்கும்

அங்கே கொஞ்சமும் தங்காதே,

சாத்திரம் காட்டும் நல்வழியே

சம்பா திக்காச் செல்வமெல்லாம்

மாத்திரை யளவும் நிற்பதில்லை

மண்கலம் வைத்த நீர்போலே…!

 

லிமரைக்கூ…

 

பச்சைமண்குடத்தில் நீரைப் பேணுதலென்பது வீண்,

புறவழிவந்த செல்வத்தை

பாதுகாத்தாலும் கையில் நிலைப்பதில்லை காண்…!

 

கிராமியப் பாணியில்…

 

தங்காதய்யா தங்காது,

தாங்காதய்யா தாங்காது..

 

பச்சமண்ணு கொடத்தில தண்ணிவச்சா

தவுச்சவாக்கிக் குடிக்கத்தண்ணி

தங்காதய்யா தங்காது- கொடத்துல

தங்காதய்யா தங்காது..

 

இப்புடித்தான் வீணாவும்

எதுமில்லாமப் பாழாவும்

தப்பாத்தான் சேத்தபணம்..

 

எப்பவுமே இதுதாங்கத,

தங்காதய்யா தங்காது- கையில

தங்காதய்யா தங்காது…!

 

        http://fiverr.com/osztijudit/create-an-easy-to-follow-family-budget-plan

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்… (20)”

  1. சச்சிதானந்தம்

    நேர்வழியில் பொருளீட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்தத் திருக்குறளைத் தேர்ந்தெடுத்தமைக்காக முதல் பாராட்டுக்கள் நண்பரே!

    மரபுக் கவிதையும், கிராமியக் கவிதையும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. வாழ்த்துக்கள்.

  2. -செண்பக ஜெகதீசன்…

    தொடர்ந்து கருத்துரைகள் வழங்கிவரும்
    நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *