விசாலம்

என் அன்புள்ள மணி,

நீ  அங்க சௌக்கியமா?  மாப்பிள்ளை எப்படி இருக்கார்? உங்க இரண்டு  பேருக்கும் என் ஆசீர்வாதங்கள்.

நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த  செல்லக்குட்டி  எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான். மனசு கஷ்டந்தான். ஆனா என்ன செய்ய? நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய?  யானை தன் தலை மேல  தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி  நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே. இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு. ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு. எனக்கு பிடிக்காத ஒரு  பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே. எப்போதும் பணம்  பிசின்ஸ்ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங்ல நன்னா யூஸ் பண்ணிண்டான். உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன். அப்பறந்தான் எனக்கு நிம்மதி கிடைச்சுது. போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம்ன்னு சொன்னேனே, உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்’ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளை கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்டுட்டார்.

அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. காலைல பூஜை பண்ணி முடிச்சேன். உம் போன் கால் வந்தது. “அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.”   “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நினையாதே”

“நிறுத்தும்மா .நானே வருத்தமா இருக்கேன்.  சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து. இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயே ஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா. எதோ கடமையேன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக் குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே. அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே.  எப்போ பாத்தாலும் ஆபீஸ், புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க. போறாதத்துக்கு

மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார். நீயும் அங்க அவரோட போவேன்ன்னு அடம் பிடிச்சே. அது சரிதா.  புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும். ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும், அவ உங்கிட்ட வளரட்டும். ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு, எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா”ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே, அது ஞாபகம் இருக்கா?

அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு. ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே. அதனாலே  போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை  காட்டி நீ கூப்பிட்டே. அது என்ன வெறும் பொம்மையா? அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. “உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம். அதான் அன்னிக்கு சூடி தன் மூஞ்சியைத் திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டினு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி! என் செல்லமே! நான் தான் உன் மம்மின்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே. அதுவோ, ‘போ ஆன்டி. நீ என் மம்மி இல்லை. இவதான் என் மம்மி’ன்னு என் கழுத்தை கட்டிண்டா. நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப் போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு. எனக்கும் இனிமே இந்தக் குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான். நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது!

ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும்னு இருந்தேன். நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல. அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை. அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும். அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை. அந்தஸ்து பெரிசில்லை. இனியாவது புரிஞ்சுக்கோ. நம்மிட்ட  நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு. அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே. மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு  அமைதியா யோசி.  உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும். இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு. எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும்.

இப்படிக்கு

உன் அம்மா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.