“அதுவே இது”
நந்திதா
“அது”
அதுவாக இருக்கும் வரை
ப்ரச்சனை ஏதுமில்லை
அது அதாக இல்லாமல்
ஏதோ ஆக நினைக்க
எழுந்தன எண்ணற்ற பிரச்சனைகள்
புற்றீசலாக …
புது புது அர்த்தங்கள், அனர்த்தங்கள்
அது அதாக இல்லாமல்
செய்தது எது?
விடை காண விரைந்தனர் பலர்
விடை கண்டவர் சிலர்
விண்டவரோ ஒருவருமிலர்
விடை கூற விடை ஏறி வந்தாலும்
விளக்கம் கண்ட சிலர்
ஒளியாகி “அது” வாகி ஏகினர்
விடை கூற வந்தது ஒரு ஞான பொறி
வினா தொடுத்தது “நான் யார்”
வினாவே விடை என்றது
அதுவே மறை என்றது
அதுவே இது என்றது
விந்தையிலும் விந்தை இது