பசுந்திரா சசி

மறுநாள் அதே இடத்தில் அவனின் எதிர்கால மனைவிக்காக வந்து நின்றான் . இன்று – நேன்றை விட பொலிவாக இருந்தான் . உள்ளத்தில் ஒரு அழகிய உணர்வும் கண்ணில் எதிர்பார்ப்புமாக அந்தரத்தில் நின்றான். படத்தில் பார்த்தவளை நேரில் பார்க்கப்போகிறோம் – என்ற பதைப்பு அவன் கால்களிலும் தெரிந்தது . அவனுக்கு இடப்பக்கமாக ஆட்டோ ஒன்று வந்து நின்றது . அதிலிருந்து ஒரு சட்டை போட்ட சாமரம் இறங்கி வந்தது .மோகனமாக வந்தவள் தன் மோகனாவா என பார்த்தான் . அவளேதான் வந்தாள் . அவன் மோகனா !  அவள் அருகில் வர முன் அவளின் வாசம் சுவாசத்தில் கலந்து வந்தது ‘ அடடா !   நல்ல பெண்ணைதான் தெரிவு செய்திருக்கிறார்கள் . இரண்டு வருடமாய் நம்முடன் இவளா கதைத்தாள்? ‘ என நினைத்தபடி மெய் மறந்து நின்றான்.

“ஜோன் தானே நீங்கள்..? .”

அவன் சிரித்தவாறே வலிந்து வார்த்தைகளை வரவழைத்துக் கொண்டு

“ ஓம் நான் தான் ஜோன் , ஆனால் நான் உங்களை உடனே அடையாளம் கண்டு விட்டேன். “ என்றான் .               “ கொஞ்சம் தனிய  போய் பேசலாமா..? “என்றபடி தேர்முட்டிக்கு அருகில் சென்றாள். அவன் பரிசுப் பொருட்களையும் எடுக்காமல் அவளை பின் தொடர்ந்தான்.  அவள் சன நடமாட்டம் இல்லாத இடத்திற்கு  வந்ததும் .

” இஞ்ச பாருங்கோ ஜோன் . இனியும் நான் உங்களை ஏமாற்ற விரும்ப வில்லை ! நான் ஒருவரை காதலிக்கிறேன் . இனி நீங்கள் எனக்கு போன் பண்ண வேண்டாம் . இத பெரிசு படுத்தினா என்னை ஏமாத்திப்போட்டார் என்று சொல்லுவன் . பிறகு யாரும் உங்களுக்கு பொண்ணு தர மாட்டார்கள் . இதை இதோட விட்டிருங்கோ ” என்று விட்டு பதிலை எதிர்பாராமல் தோளை  சிலுப்பிக்கொண்டு  அதே ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.

தேர் சில்லோடு சாய்ந்து  இருந்து விட்டான் . அதன் சில்லு அவன் கழுத்திலும் வயிற்றிலும் ஏறி கடந்து போவது போல் இருந்தது . கண்கள் திறந்திருக்க காட்சிகள் இறந்து  கிடந்தன . சில கணங்கள் அவன் இல்லாமல் இருந்தான். கட்டெறும்பு ஒன்று பொலிதீன் துகளை தூக்கிக்கொண்டு தேர் சில்லுக்குள் புகுந்தது .” சீ… ” என்று விட்டு எழுந்தான் . பெருமாள் சன்னிதானத்திற்குள் புகுந்தான். சிம்மை களட்டி எறிந்துவிட்டு போனை பெருமாள் உண்டியலுக்குள் போட்டான். கிணற்று நீரில் அவளோடு பேசிய வாயை கழுவினான்.  வண்டிக்கு வந்தான். வண்டிச் சீற்றில் இருந்த புதிய பூங்கொத்தை எடுத்துச் சென்று  முளங்காலில் நின்றபடி   “என்னை திருமணம் செய்து கொள்கிறாயா …?”  என்று அந்த பிச்சைக்காறியிடம் நீட்டிக் கொண்டு கேட்டான். அந்த வரிசையில் இருந்த எல்லா பிச்சைக்காரர்களும் தட்டை கீழே போட்டு விட்டு அவனையே பார்த்தனர் . கோயிலுக்கு வந்தவர்கள் வாயிலுக்கு போகாமல் வாயை பிளந்தபடி நின்றனர் .  அவள் – அருகில் இருந்த தந்தையை பார்த்தாள். பின் மடியில் இருந்த பிள்ளையைப் பார்த்து விட்டு மீண்டும் தந்தையை பார்த்தாள்.

” நமது கதை எல்லாம் தம்பிக்கு தெரியும்.  எனக்கு சம்மதம் இனி உன் விருப்பம் ” என்றார் தந்தை .

சுற்றி இருந்தவர்கள்.    ” ஓம் எண்டு சொல்லு புள்ள… இப்ப நீ வாழும் வாழ்க்கையை விட எதுவும் கேவலமா இருந்து விடாது ” என்றார்கள்.

அவள் தந்தையையே பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவர் ” நீ என்ன முடிவு எடுத்தாலும் அதில் எனக்கு முழு சம்மதம் ” என்றார். அவளின் ளெமனம் கலைய வில்லை . கண்ணில் இருந்து ஒரு துளி பல காலத்திற்கு பின் கனிந்து தட்டில் கிடந்த வெள்ளிக்காசின் மேல் விழுந்து தெறித்தது. அருகில் இருந்த கால் இல்லாத அம்மா  ” தம்பி ! பிள்ளை ஓம் எண்டு சொல்லி போட்டுது  நீங்கள் ஆக வேண்டியதை கவனியுங்கோ “ என்றார். அவன் பூச் செண்டை நெருங்கி நீட்டினான். அவள் இரு கையாலும் வாங்கி அந்த பூக்களிடையே முகத்தை புதைத்தாள் . என்ன ஆச்சரியம் அவள் முகமும் ஒரு பூவாக மாறியது . பின்  பூச் செண்டை மடியில் இருந்த பிள்ளையிடம் கொடுத்தாள். அது அவளை பார்த்து  சிரித்ததுக் கொண்டு வேண்டியது .

வீதியில் நின்ற மினி வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி  மணப்பெண் , முதியவர் , குழந்தை உட்பட அந்த கோயிலில் இருந்த  எல்லா திக்கற்றோரையும் வண்டியில் ஏற்றி தான் தங்கி இருந்த விடுதிக்கு கொண்டு சென்றான்.  பின் ஒவ்வொருவருக்கும் சுமாரான விலையில் உடுப்பு எடுத்து தந்தான். தான் கொண்டு வந்த திருமண புடவையையும் ஏனைய பரிசுப் பொருட்களையும்  அவளிடம் கொடுத்து பதிவுத்திருமணத்திற்கு தயாராகுமாறு கூறினான். யாழ் கச்சேரியில் அந்த முன்னாள் செல்வந்தர்கள் முன்னால் ஆடம்பரமின்றி ஆனால் அழகாக  திருமணம் நிறைவேறியது. விருந்து முடிந்த பின் அவளின் சக தொழிலாளிகளை  ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டு மனைவி , குழந்தை , முதியவருடன் வீடு சென்றான் .

-சுபம் –

” சரி கதை முடிஞ்சு  போச்சு ..!   தூங்கம்மா ” என்றபடி மகளை தூக்கிக் கொண்டு அவளின் அறைக்கு நடந்தான் இந்திரன் . அறையின் வாசலிலேயே   “ தம்பி என்னிட்ட  தாங்கோ நான் தூங்க வைக்கிறேன் என வேண்டிக்கொண்டார் அவனின் மாமா . அவரிடம் கொடுத்து விட்டு கதவை பூட்டிக்கொண்டு திரும்பினான். அவனின் காலை பிடித்துக் கொண்டு அழுதாள் மனைவி நிலானி . “ஏன் என்னத்திற்கு இப்ப அழுறீர் ? உமக்கும் கதை சொல்ல வேணுமோ ? ” என்றான் சிரித்தபடி .

“ நீங்க மட்டும் அண்டைக்கு பெருமாள் கோயிலுக்கு வந்திருக்காட்டி  இப்பவும் எத்தனை நாள் பட்டினியோட , எந்த கோயில் வாசல்லயோ…. தெரியாது ” என  விம்மி விம்மி அழுதாள்.  அவளை இரு கையாலும் அள்ளி எடுத்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு

.” யோகேந்திரன் எப்படி ஜோன் ஆனேன் தெரியுமா ? ” என்றான்.  அவள் அழுதபடியே இல்லை என்று தலையை ஆட்டினாள்.

”  யோகேந்திரத்தின் , இந்திரன் எல்லாம் பழைய பேரா இருக்கு நல்லா இல்லை எண்டு – யோகேந்திரத்தின் – இல் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நடு -கேந்திர – த்தை வெட்டி சுருக்கி ‘யோன் ‘ எண்டு அந்த ஏமாற்றுக்காறி தான்  வைத்தாள் ” என்றான் . முதியவர் அவருக்காக கை ஏந்திய பேத்தி பார்கவியின் கையை முத்தமிட்டுவிட்டு  சிரிப்பது  கேட்டு நிலானியும் சிரித்தாள்.

முற்றும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *