Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(28)

    -செண்பக ஜெகதீசன்

    தீயவை செய்தார் கெடுத னிழல்தன்னை
    வீயா தடியுறைந் தற்று.
        (திருக்குறள்-208: தீவினையச்சம்)

    புதுக் கவிதையில்…                                                                         shadow-of-a-man
    நிழல் அவனை
    நீங்காது தொடர்ந்துவந்து
    நிற்கும் காலடியில்…

    அதுபோலத்தான்
    அடுத்தவர்க்கு அவன் செய்யும்
    தீமைதரும் கெடுதல்,
    தீராது தொடர்ந்துவந்து
    சேரும் அவனையே…!

    குறும்பாவில்…
    நிழல்போல் தொடர்ந்துவந்து சேரும்
    நீ பிறர்க்குச் செய்த
    தீமைதரும் கெடுதலே…!

    மரபுக் கவிதையில்…
    செல்லு மிடமெலாம் தெடர்ந்துவந்து
         சேர்ந்திடும் நிழலது உன்னடியே!
    தொல்லை பிறர்க்குத் தந்துசெய்யும்
         தீமை தந்திடும் கெடுதலதும்
    நில்லா தென்றும் உந்தனையே
         நீங்கா தெங்கும் தொடர்ந்திடுமே,
    எல்லாம் உன்னைச் சேர்ந்திடுமே,
         எங்கும் தொடரும் நிழல்போலே!

    லிமரைக்கூ…
    உன்நிழல் உன்னைத் தொடர்ந்துன் காலடிக்கே வரும்!
    பிறர்க்குநீ செய்த
    தீமையின் கெடுதல் தொடர்ந்துனக்குத் தொல்லை தரும்!

    கிராமிய பாணியில்…
    போவாதய்யா போவாது
    ஒன்னவுட்டுப் போவாது
    ஒன்னெழலு போவாது
    போற எடமெல்லாம் கூடவரும்
    ஒன்
    காலடியத் தேடிவரும்!

    அதுதான் கத,
    அடுத்தவுனுக்குக் கெடுதல்செஞ்சா
    அதுவுடாது ஒன்னத்தான்
    தொடந்துவரும் ஒன்னத்தான்
    தொல்லதரும் ஒனக்குத்தான்!

    போவாதய்யா போவாது
    ஒன்னவுட்டுப் போவாது
    ஒன்னெழல்போல் போவாது!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(27)

    -செண்பக ஜெகதீசன்

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.  
    (திருக்குறள்- 550: செங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    வயலில் பயிர் வளர,
    வளரவிடாது அழித்திடல் வேண்டும்
    இடையில் வளரும் களையை…

    இதுபோன்றதுதான்
    குற்றம்மிகு கொடியவரை
    அரசு
    தண்டித்து அழிப்பதும்!

    குறும்பாவில்…

    கொடியவரைத் தண்டித்து
    வயலில் களைபோல் அழிப்பது
    அரசின் கடமை!

    மரபுக் கவிதையில்…

    வயலில் வளரும் பயிரோடு
    வீணாய் வளரும் களையதையே
    தயவு கொஞ்சமும் காட்டாமல்
    தனியே பிடுங்கி அழித்திடுதல்,
    பயனது ஏது மில்லாத
    பாவச் செயலுக் கஞ்சாத
    பயமிகு கொலைஞரை ஒறுத்தழிக்கும்
    பணிசெயும் அரசுக் கொப்பாமே!

    லிமரைக்கூ…

    கொடியவரை ஒறுத்தரசு பறித்திடும் உயிர்!
    களையை அழித்தால்தான்
    செழிப்பாய் வளரும்பார் வயலிலே பயிர்!

    கிராமிய பாணியில்…

    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம…

    வயலுலதான் பயிர்வளரும்
    கூடவேதான் களவளரும்…

    களபறிச்சி ஒதுக்குனாத்தான்
    பயிர்வளரும் பலன்குடுக்கும்,
    கொறயில்லாம பலன்குடுக்கும்!

    இதுபோலத்தான்,
    அரசாங்கமும் செய்யவேணும்!
    அடக்கிடணும் அடக்கிடணும்
    கொடுமகள அடக்கிடணும்!
    அழிச்சிடணும் அழிச்சிடணும்
    கொடியவர அழிச்சிடணும்!

    இதுவுந்தான்,
    வெள்ளாம வெள்ளாம
    வெவரமான வெள்ளாம!

     

    Share
  • பாவம்…படைத்தவன்!

    -செண்பக ஜெகதீசன்

    maskman1

    வருடங்கள்

    வந்து போகின்றன..

     

    நரி

    நரியாகத்தான் இருக்கிறது,

    மான் மானாகத்தான்,

    மற்ற மிருகங்களும் அப்படித்தான்!

    மாற்றமில்லை

    முகத்திலும் குணத்திலும்…

     

    மாறிவிட்டானே மனிதன்!

    காட்டுவதேயில்லை உண்மை முகத்தை,

    கட்டிக்கொண்டு அலைகிறான்

    முகமூடிகளை…

     

    அதனால்,

    கண்டுகொள்ள முடியவில்லை

    குணத்தையும்…

     

    பாவம்,

    படைத்த முகம் நினைவிலில்லை

    படைத்தவனுக்கே…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(26)

     

    செண்பக ஜெகதீசன்

         

    உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

    கச்சாணி யன்னா ருடைத்து.

          -திருக்குறள் -667(வினைத் திட்பம்)

     

    புதுக் கவிதையில்…

    உருளும் பெரிய தேரும்

    உருண்டோடிச் சென்றிடத்

    தேவை,

    உருவில் சிறிய அச்சாணி..

     

    இதுபோல் திடமொடு

    மாந்தர்

    அகிலத்திலுண்டு..

     

    அதனாலவர்

    உருவத்தை வைத்து

    எள்ளி நகையாடுதல்

    ஏற்றதல்ல…!

     

    குறும்பாவில்…

    பெருந்தேருக்கு சிறு அச்சாணிபோல்

    புவியில் மாந்தர் உளதால்,

    உருவம் கண்டு எள்ளல் உதவாது…!

     

        மரபுக் கவிதையில்…

    தேரது பெரிதாய் இருந்தாலும்,

         திடமாய்த் தெருவில் ஓடிடவே

    வேரதாய் வேண்டும் நிச்சயமாய்

         உருவில் சிறிய அச்சாணி,

    பாரது சிறந்திட உருசிறிதாய்ப்

         பல்லோர் இங்கே உளதாலே

    நேரதாய்க் கொண்டிடு உள்ளத்திலே,

         நீக்கிடு சிறிதெனும் நினைவினையே…!

     

    லிமரைக்கூ…

    சிறிய அச்சாணியால் ஓடுது தேர்,

    குறைவாய் எண்ணாதே..

    சிறிய உருவினிலும் சிறப்புடையோர் பார்…!

     

    கிராமிய பாணியில்…

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    பாருபாரு பெரிய தேரு

    சீரா ஓட சின்ன அச்சாணி..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    அதால,

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    எடபோடாத,

    அச்சிபோலச் சின்னவரும்

    அறிவு தெறம உள்ளவுருதான்..

     

    அந்த

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    கொறசொல்லாத..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(25)

     

     செண்பக ஜெகதீசன்

     

    நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலி

    னீங்கி னதனைப் பிற.

    -திருக்குறள் -495(இடனறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இருக்கும்

    இடத்தை வைத்துத்தான்

    இருக்குது எதிலும் வெற்றி..

     

    நீரிலிருக்கும் வரைதான் முதலை

    எமனாகும்

    எல்லா உயிர்க்கும்..

     

    நீங்கி வெளியே வந்தால்,

    அது

    இரையாகும்

    பிற உயிர்க்கே…!

     

    குறும்பாவில்…

     

    நீரிலிருந்தால் வென்றிடும் முதலை,

    நீங்கி வேறிடம் வந்தால்

    இடருறுமே பிற உயிர்களால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தண்ணீர் நிறைந்த நீர்நிலையில்

    தங்கி வாழும் முதலையது

    எண்ணம் போல வெல்லும்பிற

    எல்லா உயிரையும் தன்பலத்தால்,

    தண்ணீர் நீங்கி வெளிவந்து

    தரையில் நின்று போரிட்டால்

    கண்டிடும் தோல்வியே பிறவுயிரால்,

    கற்றிதை செயல்படு இடனறிந்தே…!

     

    லிமரைக்கூ…

     

    நீரில் இருக்கும்வரைதான் வென்றிடும் முதலை,

    தரையிலது தோற்றிடும்..

    இடனறியாத செயல்பாட்டால் இழந்திடுவாய் முதலை…!

     

    கிராமிய பாணியில்…

     

    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

    மொதலக்கத தெரிஞ்சுக்கோ..

     

    அது

    இருக்கும்வர தண்ணிக்குள்ள

    இல்ல அதுக்கு எதிரிதான்,

    எல்லா உயிரும் அடக்கந்தான்

    எப்பமுமே வெற்றிதான்..

     

    ஆனா,

    தண்ணியவுட்டு வெளியவந்தா

    தலகீழா மாறிப்போவும்,

    எல்லா உயிரும் எதிரிதான்

    எதுத்துநின்னா தோல்விதான்..

     

    அதால

    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

    கருத்தநல்லாத் தெரிஞ்சக்கோ,

    நடந்துக்கோ நடந்துககோ

    எடந்தெரிஞ்சி நடந்துக்கோ…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(24)

     செண்பக ஜெகதீசன்index

     

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

    நூலின்றிக் கோட்டிக் கொளல்.

    -திருக்குறள் -401(கல்லாமை)

     

    புதுக்கவிதையில்…

     

    காயுருட்டி விளையாடக்

    களம் வேண்டும்,

    குழி அமைக்குமுன்னே

    காயுருட்டல் வீண்தானே..

     

    கற்றவர் அவையில்

    உற்ற நூற்கள்

    கல்லாமல் பேசுபவரின்

    கதை இதுதானே…!

     

    குறும்பாவில்…

     

    களம் அமைத்தபின் காயுருட்டு,

    கற்றுத் தேர்ந்தபின்

    கற்றோர்முன் வாதாடு…!

     

    மரபுக்கவிதையில்…

     

    களமது அமைத்தாங்குக் குழிசெய்து

    காயது உருட்டுதல் விளையாட்டு,

    விளங்கிடும் கருத்திதுதான் வாழ்க்கையிலும்

    வித்தை கற்றிடும் கல்வியிலும்,

    தெளிவுடன் தெரிந்திடத்தான் பலநூலும்

    தெரிந்து கற்றிடாமல் செல்லாதே,

    தெளிவாய்க் கற்றறிந்தோர் சபையினிலே

    தெரிந்ததைச் சொல்லித்தான் வாதிடவே…!

     

    லிமரைக்கூ…

     

    அரங்கம் அமைத்தபின் விளையாடச் செல்,

    அவைநிறைந்த கற்றோர்முன்

    அளவாய்நூல் கற்காமல் செல்லாதே நில்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    வெளயாடு வெளயாடு

    விருப்பம்போல வெளயாடு,

    அரங்கத்த தயார்பண்ணி

    அப்புறமா வெளயாடு,

    வெளயாடு வெளயாடு

    விருப்பம்போல வெளயாடு..

     

    அதுபோல

    ஒரயாடு ஒரயாடு

    படிச்சோர்கிட்ட ஒரயாடு,

    படிச்சித் தெரிஞ்சி ஒரயாடு

    படிச்சித் தெளிஞ்சி ஒரயாடு..

     

    இப்போ,

    ஒரயாடு ஒரயாடு

    விருப்பம்போல ஒரயாடு…!

     

    http://www.thechessstore.com/product/SAB008FE/Indian-Theme-Chess-Set-with-Chess-Board.html

     

     

    Share
  • புத்தாண்டு வாழ்த்து…

    செண்பக ஜெகதீசன்index

    வெற்றி என்றும் தொடர்ந்திடவே

    ‘விஜய’வைத் தொடர்ந்து ‘ஜய’வரவில்,

    நெற்றி வேர்வை சிந்திடவே

    நிலத்தில் உழைக்கும் தோழருடன்

    சுற்றம் நட்பு எல்லோரும்

    சீரும் சிறப்பும் பலநலனும்

    பெற்றே என்றும் வாழ்கவென

    புதிய ஆண்டில் வாழ்த்துவமே…!

     

    http://muthusamyr.hubpages.com/hub/Tamil-Puthandu-or-Varusha-Pirappu-or-Tamil-New-Year-Day-Festival-observed-by-the-Hindu-Tamils

    Share
  • ‘அன்புள்ள மணிமொழிக்கு’ …

    செண்பக ஜெகதீசன்

     

     

    அன்புச் சகோதரி மணிமொழிக்கு,

     

    நலம்,

    நான் நாடுவதும் அதுதானே..

    அன்னையே என்று அழைக்கலாமோ,

    என்னை

    இன்றைய நிலைக்கு உருவாக்கியதால்..

    தோழி எனலாமோ,

    துணையானதால் என் வளர்ச்சிக்கு…!

     

    ‘மாதவம்’ செய்து பிறந்தவள் நீ,

    என்

    வேதனை தீர்த்து

    வெற்றிக்கு வழிகாட்டியதால்,

    அதனால் வணங்குகிறேன்…!

     

    பத்திரிக்கை ஆசிரியராய் நீ,

    பணி ஓய்வு பெற்ற நான்

    பொழுதுபோக்காய் எழுதியதைப்

    பொக்கிஷம் ஆக்கியவள் நீ..

     

    ஓடும் ஆற்றில்

    உருண்டுகொண்டிருந்த கூழாங்கல்லை

    எடுத்து

    உருவம் கொடுத்தவள் நீ..

     

    நாடோடிப் பாட்டை

    மேடைக்குக் கொண்டுவந்தவள் நீ..

     

    காட்டு மூங்கிலை

    வீட்டில் கொண்டுவந்து

    வேய்ங்குழலாக்கி

    வேணுகானம் இசைத்தவள் நீ..

     

    பேசாத கிளியைப் பழக்கி

    பெரியபுராணம் உரைக்கவைத்தவள் நீ…!

     

    என் படைப்புக்களைப்

    பார்த்தவுடன் பாராட்டி,

    குறையிருந்தால் மென்மையாய்

    மெருகேற்றச்சொல்லும் பாங்கும்,

    போட்டிகளில் என்னைப்

    பங்கேற்கப்

    பரிந்துரைக்கும் பாங்கும்,

    வென்றால்

    தான் வென்றதாய் எண்ணி

    தன்னை மறந்து

    என்னைப் பாராட்டும் பாங்கும்,

    ஆக

    எல்லாம் நிறைந்தவள் நீ,

    எங்குமானவள் நீ…!

     

    நலம்குன்றி ஒருமுறை

    நான் படுத்தபோது,

    உலகையே மறந்து எனக்காக

    உளமார

    உண்மை வேண்டுதல் செய்தாய் நீ,

    உன்னைத்

    தாயென்றால் நான்

    தாழ்ந்துவிட மாட்டேன்…!

     

    உன்

    முதல்நூல் வெளியீட்டின்போது

    முன்னிலையில் நானில்லாததை நீ

    மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டிருந்ததை

    முழுதாய் மறக்கவில்லை நான்..

     

    ‘உடன் பிறக்காவிட்டாலும்

    உன்னிடம்தானே இருக்கிறது

    வாழ்த்தும் என் இதயமும்’ என்ற

    என் வாழ்த்தை

    எல்லோரிடமும் சொல்லி மாய்ந்தாயே..

     

    இது

    உடன் பிறக்காவிட்டாலும்

    உடன்வந்த பந்தமல்லவா…!

     

    மணிமொழி,

    முழுதும் தெரியும் உனக்கு-

    எனது

    ஆறு நூற்களும்

    அம்பாள் சந்நிதிகளிலேதான் வெளியிடப்பட்டன..

    (3- செண்பகவல்லி, 3- காந்திமதி)

    அதன் காரணம் கேட்டே

    அலுத்துப் போனவள் நீ,

    அது அப்படித்தான் என்ற

    என் பதிலை அரைமனதுடன்

    ஏற்றுக்கொண்டவள் நீ..

     

    இதற்குப் பிறகும் உனக்கு

    என்னைப் பிடிக்கிறதே,

    உன்னை என்னோடு ஒட்டவைத்திருக்கும்

    உன்குணம் இதுதானோ..

    வாழ்த்தி வணங்குகிறேன்…!

     

    என் ஆசான்(கவியரசர்) சொன்னார்,

    ‘எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்

    இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

    தாயாக மகனாக உறவாடலாம்

    தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்..’

    இது

    நம்வகையிலும் உண்மைதானே…!

     

    அன்புச் சகோதரி,

    அன்புக் கட்டளை ஒன்று-

    படைப்பிலக்கிய உலகில் மிக உயர்ந்த

    இடத்தைப் பெறப்போகும் நீ

    பிற்காலத்தில்(எனக்குப் பின்),

    சிதறிக்கிடக்கும் என் படைப்புக்களைச்

    சேர்த்து வை..

     

    கண்கலங்காதே,

    காலம் காட்டும் உண்மை இது

    கவலை வேண்டாம்

    கடமையாய்ச் செய்..

    என்றும்

    கடமைப்பட்டவன் நான்…!

     

    ஆனாலும் ஓர் ஆசை,

    ஆயுள் உள்ளபோதே ஒருமுறை

    பார்க்கவேண்டும் உன்னை..

    அந்த ஆவலுடன் தொடர்வேன்

    அடுத்த மடலிலும்…!

     

    என்றும் அன்புடன்,

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்… (23)

    செண்பக ஜெகதீசன்c-index

    காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு

    மன்னநீ ரார்க்கே யுள.

    -திருக்குறள்- 527 (சுற்றந்தழால்)

     

    புதுக் கவிதையில்…

     

    கவளம் சோறு கிடைத்தாலும்,

    கரவாதே

    கரைந்தழைத்துக் கூட்டமாய்க்

    கலந்து உண்ணும் காக்கைபோல்,

    சுற்றம்சூழப் பகிர்ந்துண்ணும்

    இனியவர்களுக்கு

    இன்னும் சேரும்,

    என்றும் நிலைக்கும் செல்வமே…!

     

    குறும்பாவில்…

     

    கூட்டத்தோடு சேர்ந்துண்ணும் காக்கையாய்ச்

    சுற்றம் பேணுவார்க்குச்

    சேருமே செல்வம் எல்லாம்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    கொஞ்சமாய் உணவு கிடைத்தாலும்

    கூட்டம் சேர்த்தே இனத்துடனே

    கொஞ்சமாய்ப் பகிர்ந்துதான் உண்டிடுமக்

    காக்கை போலச் சுற்றமுடன்

    நெஞ்சம் நிறைந்திடும் அன்புடனே

    நமக்குக் கிடைப்பதைப் பகிர்ந்துண்டால்,

    பஞ்ச மேது மில்லாமல்

    பற்பல செல்வம் சேர்ந்திடுமே…!

     

    லிமரைக்கூ…

     

    சுற்றம் அழைத்துச் சேர்ந்துண்ணும் காக்கை,

    பெற்றதை மகிழ்வொடு பகிர்ந்துண்ணக்

    கற்றவர் பெறுவரே திருமகள்தன் நோக்கை…!

     

    கிராமியப் பாணியில்…

     

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துககோ,

    கூட்டங் கூடி எரதிங்கத

    காக்கா கிட்ட கத்துக்கோ..

     

    கொஞ்சொம் எரதான் கெடச்சாலும்

    கொலத்த யெல்லாங் கூப்புட்டு

    கூடச் சேந்து சாப்புடுதே..

     

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துககோ,

    கெடச்ச பொருள மறைக்காம

    குடும்பத் தோட அனுபவிச்சா

    கூட வருமே செல்வமெல்லாம்

    கூடி வருமே செல்வமெல்லாம்..

     

    இத

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துக்கோ…!

     

       http://www.talking-naturally.co.uk/house-crow-coming-port/  

    Share
  • குறளின் கதிர்களாய்… (22)

     

    செண்பக ஜெகதீசன்ele-index

    சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்

    பட்டுப்பா டூன்றுங் களிறு.

    -திருக்குறள்- 597 (ஊக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அம்புபட்டு புண்பட்டாலும்

    யானை

    அசந்துவிடுவதில்லை,

    தெம்புடன் முன்னேறி

    திறமையை நிலைநிறுத்தும்..

     

    ஊக்கமுடையோர் கதையிதுதான்,

    அவர்

    உயர்வுக்குச் சிதைவு வரினும்

    உறுதியாய் நின்று

    ஊக்கமுடன் செயலாற்றி

    இறுதியில் பெறுவார் வெற்றியையே…!

     

    குறும்பாவில்…

     

    அம்பினால் புண்பட்டாலும் அசராமல்

    திறம்காட்டும் யானையாய்

    இடர்களைந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அம்பது பட்டுப் புண்படினும்

    அந்த வலியையும் பாராமல்

    தெம்பு கொண்டே முன்னேறும்

    திறமை மிக்க யானையைப்போல்,

    நம்பும் வெற்றிப் பாதைதனில்

    நலிவு யேதும் வந்திடினும்

    தெம்பாய் முயன்று பணிசெய்வார்

    தீதிலா வெற்றி பெறுவாரே…!

     

    லிமரைக்கூ…

     

    ஊக்கமுடன் திறம்காட்டும் புண்படினும் அம்பால்,

    உறுதியுடன் யானைபோல்

    இடர்கடந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர் தெம்பால்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஆன ஆன போர்யான

    அம்பாரி வச்ச போர்யான,

    அஞ்சா நெஞ்சப் போர்யான

    ஆவேச மான போர்யான,

    அம்பு பட்ட புண்ணுடனும்

    தெம்பாப் போவும் போர்யான

    தெறம காட்டும் போர்யான..

     

    இப்புடித்தான்,

    தும்பம் வந்து தடுத்தாலும்

    தொல்ல வந்து மறிச்சாலும்,

    தொவண்டு வெலவிப் போவாம

    தெம்பா வேல செஞ்சிவரும்

    தெடமா மனசு உள்ளவந்தான்,

    தெறம காட்டிச் செயிப்பானே…!

     

    http://www.personal.psu.edu/afr3/blogs/SIOW/2011/10/the-elephants-trunk.html

           

    Share
  • குறளின் கதிர்களாய்… (21)

     

    செண்பக ஜெகதீசன்

     

    அரம்போலும் கூர்மைய ரேனு மரம்போல்வர்

    மக்கட்பண் பில்லா தவர்.

    -திருக்குறள்- 997 (பண்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அதிகக் கூர்மையான

    அரம் போன்றது

    அவன் அறிவு..

     

    ஆனாலும் அவன்

    நெடுமரம் போன்றவன்தான்,

    அவனிடம்

    நற்பண்பு ஏதும் இல்லாதபோது…!

     

    குறும்பாவில்…

     

    அறிவு அரம்போலிருந்தாலும்,

    நற்பண்பில்லாதவன்

    நெடுமரம்தான்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    இரும்பையும் அறுத்திடும் கூர்மையையே

    இயல்பாய்க் கொண்ட அரமதுவாய்,

    உருவினில் உயர்ந்த மனிதனிடம்

    உள்ள அறிவது இருந்தாலும்,

    அருகினில் உள்ள மாந்தரையும்

    அணைத்தே செல்லும் பண்புடனே

    கருணை கொஞ்சமும் இல்லாதவன்,

    காட்டு மரத்திற் கொப்பாமே…!

     

    லிமரைக்கூ…

     

    அதிகமாய்க் கூர்மையுள்ளது அரம்,

    அதுபோல் அறிவுடையோனும்

    நற்பண்பில்லாதபோது அவனுமொரு மரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    அரம்பாரு அரம்பாரு

    கூர்மயான அரம்பாரு,

    இரும்பறுக்கும் அரம்பாரு..

     

    இதுபோல் கூர்மயா

    அறிவுதான் இருந்தாலும்,

    கொணந்தான் அவுனுக்கு

    நல்லதா இல்லயிண்ணா

    அவனொரு மரம்பாரு

    காட்டு மரம்பாரு..

     

    மரம்பாரு மரம்பாரு

    அறிவிருந்தும் அவனொரு

    மரம்பாரு மரம்பாரு…!

     

           -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • உருப்பட…

     


     -செண்பக ஜெகதீசன்

     

    உருக்கிய தங்கம்தான்

    உருப்பெறுகிறது

    விலையுயர் அணிகலனாய்..

     

    அடித்து நீட்டிய செம்புதான்

    எடுக்கிறது வடிவு,

    மின்கம்பியாக..

     

    உளியால்

    உடைபடும் கல்தான்

    உருவமாகிறது சிலையாக..

     

    சிந்தித்திடு மனிதா,

    சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்

    வாழ்வில்

    சிறப்பைத் தருகிறது…!

     

             

     

    Share
  • குறளின் கதிர்களாய்… (20)

    செண்பக ஜெகதீசன்images

    சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

    கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

    -திருக்குறள்- 660 (வினைத் தூய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    அறநெறி யல்லது

    பிற நெறியில்

    சேர்த்த செல்வம்

    நிற்பதில்லை நிலைத்து..

     

    அதை

    வைத்துப் பாதுகாப்பது,

    பச்சை மண்குடத்தில்

    பருகும் நீரைவைத்து

    போகாமல் காப்பது போலத்தான்…!

     

    குறும்பாவில்…

     

    பச்சைமண் குடத்து நீரும்

    புறவழியில் சேர்த்த பணமும்,

    பாதுகாப்பில் நிற்காது…!

     

     மரபுக் கவிதையில்…

     

    பாத்திரம் பச்சை மண்ணாலெனில்

    பருகிட வைத்தத் தண்ணீரும்

    ஆத்திர அவசரத் தேவைக்கும்

    அங்கே கொஞ்சமும் தங்காதே,

    சாத்திரம் காட்டும் நல்வழியே

    சம்பா திக்காச் செல்வமெல்லாம்

    மாத்திரை யளவும் நிற்பதில்லை

    மண்கலம் வைத்த நீர்போலே…!

     

    லிமரைக்கூ…

     

    பச்சைமண்குடத்தில் நீரைப் பேணுதலென்பது வீண்,

    புறவழிவந்த செல்வத்தை

    பாதுகாத்தாலும் கையில் நிலைப்பதில்லை காண்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தங்காதய்யா தங்காது,

    தாங்காதய்யா தாங்காது..

     

    பச்சமண்ணு கொடத்தில தண்ணிவச்சா

    தவுச்சவாக்கிக் குடிக்கத்தண்ணி

    தங்காதய்யா தங்காது- கொடத்துல

    தங்காதய்யா தங்காது..

     

    இப்புடித்தான் வீணாவும்

    எதுமில்லாமப் பாழாவும்

    தப்பாத்தான் சேத்தபணம்..

     

    எப்பவுமே இதுதாங்கத,

    தங்காதய்யா தங்காது- கையில

    தங்காதய்யா தங்காது…!

     

            http://fiverr.com/osztijudit/create-an-easy-to-follow-family-budget-plan

    Share
  • இந்தப் பாடம்…

    செண்பக ஜெகதீசன்i-flowerndex

    நாளை மலரப்போகும் மொட்டு
    நடுக்கத்துடன் பார்க்கிறது,
    அரைக்கண் திறந்து..

    நன்றாக மலர்ந்த பூக்கள்
    அங்கே
    பறிக்கப்படுகின்றன..

    நாளைக்கு
    நம் கதியும் இதுதானே..

    ஆனாலும்,
    ஆறுதல் ஒன்று-
    வாடி உதிர்வதைவிட
    யாராவது
    சூடிக்கொண்டால் சிறப்புத்தானே..

    கற்றுக்கொள் மனிதா
    இயற்கை காட்டும்
    இந்தப் பாடத்தை…!

    படத்துக்கு நன்றி

    http://commons.wikimedia.org/wiki/File:Rosa_pomifera_-_wolley_dod%27s_rose_-_desc-flower_bud.jpg 

    Share
  • குறளின் கதிர்களாய்… (19)

    செண்பக ஜெகதீசன்fireimages

    அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

    விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

    -திருக்குறள்- 691 (மன்னரைச் சேர்ந்தொழுகல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அருகில் நெருங்கிச் சென்றால்

    சுடும்,

    அகன்றாலே அதிகமாய்,

    அணுகாது வெப்பம்..

     

    அதுதான் தீயின் குணம்,

    ஆட்சியாளரின் குணமும் அதுதான்..

     

    அதனால்தான் அவரை

    அதிகம் நெருங்காமலும், விலகாமலும்

    அடுத்திருக்கக் கற்றிடு,

    அதுதான் நல்லது…!

     

    குறும்பாவில்…

     

    தீக்காய்வதுபோல் பழகிடு

    அதிகம் அகலாமலும் நெருங்காமலும்,

    ஆட்சியாளர் உறவு நிலைத்திட…!

     

         மரபுக் கவிதையில்…

     

    அருகினில் சென்றால் சுட்டிடும்தீ,

    அகன்றே அதிகம் சென்றிட்டால்

    வருவ தில்லை வெப்பமென்பதால்

    வேண்டும் நடுநிலை தீக்காய்ந்திட,

    அரசியல் களமதில் ஆட்சியாளர்

    அருகினில் அதிகம் நெருங்காமல்

    பெரிதும் விலகிச் செல்லாமலே

    பார்த்திடு பயனெலாம் பெற்றிடவே… !

     

    லிமரைக்கூ…

     

    அருகிலும் எட்டியுமின்றிக் காய்ந்திடு தீ,

    அதுபோல் ஆட்சியாளரிடம் மிக

    அணுகாமலும் விலகாமலும் பழகிடு நீ…!

     

    கிராமியப் பாணியில்…

     

    குளுர்காயி குளுர்காயி

    தீயிலத்தான் குளுர்காயி,

    கிட்டப்போனா சுட்டுப்புடும்

    எட்டிப்போனா சூடுயில்ல..

     

    அதால,

    மெதமான சூட்டுலத்தான்

    எதமாநீ குளுர்காயி..

     

    ராசாங்கக் கதயிதுதான்,

    ரெம்ப சூச்சிப்பா நடந்துக்கணும்..

     

    ராச்சியத்த ஆளுகிற

    ராசாங்க மனுசர்கிட்ட

    நெருங்காம வெலகாம

    நேர்த்தியாத்தான் பழகிடணும்..

     

    தீப்போல சுட்டுப்புடும்

    தெரியாம நெருங்கிட்டா,

    தெரியாம எதுத்திட்டா..

     

    எல்லாம்

    தெரிஞ்சி நடந்துக்கோ,

    நல்லாப்

    புரிஞ்சி நடந்துக்கோ…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.datacenterjournal.com/it/flame-malware-big-story-or-old-news/

            

    Share