செண்பக ஜெகதீசன்

 

அரம்போலும் கூர்மைய ரேனு மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்.

-திருக்குறள்- 997 (பண்புடைமை)

 

புதுக் கவிதையில்…

 

அதிகக் கூர்மையான

அரம் போன்றது

அவன் அறிவு..

 

ஆனாலும் அவன்

நெடுமரம் போன்றவன்தான்,

அவனிடம்

நற்பண்பு ஏதும் இல்லாதபோது…!

 

குறும்பாவில்…

 

அறிவு அரம்போலிருந்தாலும்,

நற்பண்பில்லாதவன்

நெடுமரம்தான்…!

 

 மரபுக் கவிதையில்…

 

இரும்பையும் அறுத்திடும் கூர்மையையே

இயல்பாய்க் கொண்ட அரமதுவாய்,

உருவினில் உயர்ந்த மனிதனிடம்

உள்ள அறிவது இருந்தாலும்,

அருகினில் உள்ள மாந்தரையும்

அணைத்தே செல்லும் பண்புடனே

கருணை கொஞ்சமும் இல்லாதவன்,

காட்டு மரத்திற் கொப்பாமே…!

 

லிமரைக்கூ…

 

அதிகமாய்க் கூர்மையுள்ளது அரம்,

அதுபோல் அறிவுடையோனும்

நற்பண்பில்லாதபோது அவனுமொரு மரம்…!

 

கிராமியப் பாணியில்…

 

அரம்பாரு அரம்பாரு

கூர்மயான அரம்பாரு,

இரும்பறுக்கும் அரம்பாரு..

 

இதுபோல் கூர்மயா

அறிவுதான் இருந்தாலும்,

கொணந்தான் அவுனுக்கு

நல்லதா இல்லயிண்ணா

அவனொரு மரம்பாரு

காட்டு மரம்பாரு..

 

மரம்பாரு மரம்பாரு

அறிவிருந்தும் அவனொரு

மரம்பாரு மரம்பாரு…!

 

       -செண்பக ஜெகதீசன்…

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறளின் கதிர்களாய்… (21)

  1. கிராமியப்பாணியில் பாடல் எழுதுவதில் உங்களை யாரும் விஞ்ச முடியாது என்பது என் கருத்து ஐயா.

  2. கிராமியக் கவிதை அருமை நண்பரே! வாழ்த்துக்கள்.

  3. கிராமத்துல பொறந்து
    நகரமெல்லாம் அலஞ்சு,
    கிராமத்துக்கே வந்தவவன் நானு..
    அம்மா, அய்யா,
    ஒங்க பாராட்டுதலுக்கு
    ரொம்ப நன்றிங்க…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *