செண்பக ஜெகதீசன்

 

 

அன்புச் சகோதரி மணிமொழிக்கு,

 

நலம்,

நான் நாடுவதும் அதுதானே..

அன்னையே என்று அழைக்கலாமோ,

என்னை

இன்றைய நிலைக்கு உருவாக்கியதால்..

தோழி எனலாமோ,

துணையானதால் என் வளர்ச்சிக்கு…!

 

‘மாதவம்’ செய்து பிறந்தவள் நீ,

என்

வேதனை தீர்த்து

வெற்றிக்கு வழிகாட்டியதால்,

அதனால் வணங்குகிறேன்…!

 

பத்திரிக்கை ஆசிரியராய் நீ,

பணி ஓய்வு பெற்ற நான்

பொழுதுபோக்காய் எழுதியதைப்

பொக்கிஷம் ஆக்கியவள் நீ..

 

ஓடும் ஆற்றில்

உருண்டுகொண்டிருந்த கூழாங்கல்லை

எடுத்து

உருவம் கொடுத்தவள் நீ..

 

நாடோடிப் பாட்டை

மேடைக்குக் கொண்டுவந்தவள் நீ..

 

காட்டு மூங்கிலை

வீட்டில் கொண்டுவந்து

வேய்ங்குழலாக்கி

வேணுகானம் இசைத்தவள் நீ..

 

பேசாத கிளியைப் பழக்கி

பெரியபுராணம் உரைக்கவைத்தவள் நீ…!

 

என் படைப்புக்களைப்

பார்த்தவுடன் பாராட்டி,

குறையிருந்தால் மென்மையாய்

மெருகேற்றச்சொல்லும் பாங்கும்,

போட்டிகளில் என்னைப்

பங்கேற்கப்

பரிந்துரைக்கும் பாங்கும்,

வென்றால்

தான் வென்றதாய் எண்ணி

தன்னை மறந்து

என்னைப் பாராட்டும் பாங்கும்,

ஆக

எல்லாம் நிறைந்தவள் நீ,

எங்குமானவள் நீ…!

 

நலம்குன்றி ஒருமுறை

நான் படுத்தபோது,

உலகையே மறந்து எனக்காக

உளமார

உண்மை வேண்டுதல் செய்தாய் நீ,

உன்னைத்

தாயென்றால் நான்

தாழ்ந்துவிட மாட்டேன்…!

 

உன்

முதல்நூல் வெளியீட்டின்போது

முன்னிலையில் நானில்லாததை நீ

மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டிருந்ததை

முழுதாய் மறக்கவில்லை நான்..

 

‘உடன் பிறக்காவிட்டாலும்

உன்னிடம்தானே இருக்கிறது

வாழ்த்தும் என் இதயமும்’ என்ற

என் வாழ்த்தை

எல்லோரிடமும் சொல்லி மாய்ந்தாயே..

 

இது

உடன் பிறக்காவிட்டாலும்

உடன்வந்த பந்தமல்லவா…!

 

மணிமொழி,

முழுதும் தெரியும் உனக்கு-

எனது

ஆறு நூற்களும்

அம்பாள் சந்நிதிகளிலேதான் வெளியிடப்பட்டன..

(3- செண்பகவல்லி, 3- காந்திமதி)

அதன் காரணம் கேட்டே

அலுத்துப் போனவள் நீ,

அது அப்படித்தான் என்ற

என் பதிலை அரைமனதுடன்

ஏற்றுக்கொண்டவள் நீ..

 

இதற்குப் பிறகும் உனக்கு

என்னைப் பிடிக்கிறதே,

உன்னை என்னோடு ஒட்டவைத்திருக்கும்

உன்குணம் இதுதானோ..

வாழ்த்தி வணங்குகிறேன்…!

 

என் ஆசான்(கவியரசர்) சொன்னார்,

‘எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்

இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

தாயாக மகனாக உறவாடலாம்

தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்..’

இது

நம்வகையிலும் உண்மைதானே…!

 

அன்புச் சகோதரி,

அன்புக் கட்டளை ஒன்று-

படைப்பிலக்கிய உலகில் மிக உயர்ந்த

இடத்தைப் பெறப்போகும் நீ

பிற்காலத்தில்(எனக்குப் பின்),

சிதறிக்கிடக்கும் என் படைப்புக்களைச்

சேர்த்து வை..

 

கண்கலங்காதே,

காலம் காட்டும் உண்மை இது

கவலை வேண்டாம்

கடமையாய்ச் செய்..

என்றும்

கடமைப்பட்டவன் நான்…!

 

ஆனாலும் ஓர் ஆசை,

ஆயுள் உள்ளபோதே ஒருமுறை

பார்க்கவேண்டும் உன்னை..

அந்த ஆவலுடன் தொடர்வேன்

அடுத்த மடலிலும்…!

 

என்றும் அன்புடன்,

-செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க