Tag: விசாலம்

  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..(2)

    விசாலம்

     

    திருஞான சம்பந்தர் “எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் “என்று இந்தத் திருத்தல ஈசனைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசரும் இவரைப்பற்றி “இன்னம்பரான் “என்று புகழ்ந்திருக்கிறார் . இத்தலத்திருநாதன் தன் பக்தன் சுதன்மனைக் காப்பாற்ற தானே கீழ்க்கணக்கராக மாறி சோழப்பேரரசர் முன் சென்று வரவு சிலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார் . இது என்ன கதை? சுதன்மன் என்ற சிவபக்தனும் அவன் தந்தையும் அந்தக் கோயிலில் கணக்கர்கள். முதலில் தந்தை பார்த்துக்கொள்ள பின் சுதன்மன் அதை ஏற்றுக்கொண்டான் . தினமும் வரவு செலவுகளை சண்டிகர் முன் ஒப்பித்து விடுவது அவன் வழக்கம் . சண்டீஸ்வரரே கணக்குகளுக்கு அதிபதி.  அவரே ஆடிட்டர்.  அவர் முன்னால் தப்பு கணக்கு காட்ட முடியாது. வரவுக்கேற்ப செலவும் இருக்கும் . அதற்கெல்லாம் சாட்சி சண்டிகேஸ்வரர்தான்.

    கோயில் திருப்பணி ஆரம்பமானது . பலர் நன்கொடையாக மரங்கள், சிற்பங்கள், பாறைகள் என கொடுத்தனர். அப்படிக் கொடுக்கும் போது சண்டிகேஸ்வரர் முன் நின்று தான் கொடுக்கப் போகும் பொருளைச் சொல்லி சம்மதம் வாங்கி கொடுப்பர். இதற்கெல்லாம் எழுத்து வழியாக கணக்கு வைத்துக் கொள்ளவில்லை எல்லாவற்றுக்கும் ஈசனே சாட்சி . திடீரென்று சோழ மன்னன் அந்தக்கோயிலுக்கு வந்து நடக்கும் பணிகளை பார்வையிட்டு பின் எல்லாவற்றுக்கும் ஏடுகள் மூலமாக கணக்கு காட்டவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார். சுதன்மன் ஈசனையே மனதில் நினைத்து கவலையின்றி வேலைகளை கவனித்தார். ஆனால் மன்னர் திரும்பவும் இதைப்பற்றி உடனே தகவல் சொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க சுதன்மனுக்கு இரவில் நித்திரை வரவில்லை. ஏதோ ஞாபகம் வந்ததைக் குறித்து எழுதி அனுப்பி வைக்கலாம் என்றால் பின்னால் ஏதாவது விட்டிருந்தால் தவறாகிவிடுமே ! குழம்பிப்போனான். பக்தன் கண் கலங்க விடுவாரா ஈசன்! கிளம்பிவிட்டார் தன் கணக்கர் சண்டிகேஸ்வரருடன் . சிவபெருமான் சுதன்மன் ஆனார். சண்டேஸ்வரர் கணக்குப் பிள்ளையானார் . பின் என்ன ? மிகத் துல்லியமான கணக்கு மன்னர் முன் சமர்ப்பிக்கப்பட்டது. பேரரசர் பிரமித்துப் போனார் . புகழ்ந்தார் பின் சுதன்மனுக்கு தலைமை கணக்கர் என்ற சான்றிதழ் வழங்கினார் . பின் தன்னிடம் இருந்த கணக்கர்களை சுதன்மனிடம் கணக்கு படிக்க அனுப்பிவிட்டார். நடந்த விவரம் எல்லாம் புரிந்தவுடன் சுதன்மன் “எல்லாம் என் ஈசனின் கருணை “என்று மெய்யுருகிப் போனான். சுதன்மனுக்கு உதவிய “எழுத்தறிநாதர்”எழுந்தருளியிருக்கும் இடம் தான் இந்த இன்னம்பூர் .சுதன்மன் எழுதாமல் மனதிலேயே எழுதி வைத்த கணக்கை எழுதியதலால் இவருக்கு இந்தப்பெயர் வந்ததாம்.

    ஊருக்குள் நுழைந்தவுடன் எளிதாக இந்தகோயிலைக் கண்டு பிடித்து விடலாம். முதல் பிரகாரத்தில் கிழக்குத் திசையில் சூரியனைக் காண்கின்றோம். உள் பிரகாரம் மிகப் பெரிதாக இருக்கிறது. மேற்கு பகுதியில் வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளது. தெற்கு மூலையில் கன்னிமூலை கணபதி அருள் புரிகிறார் . பின் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி . அருள்மிகு பாலசுப்பிரமண்யர், விஷ்ணுதுர்க்கை , ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ காலபைரவர் என்று பல தெய்வங்களைப் பார்க்க முடிகிறது. இந்த ஊரில் சூரியனும் ஈசனை வழிப்பட்டாராம். இதனால் சூரியன் பங்குனி மாதம் பதிமூன்று,பதினாலு,பதினைந்து தேதிகளில் ஈசன் மேல் தன் ஒளியை வீசி வணங்குகிறார். காலை நேரத்தில் இதைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் இந்தக் கண் கொள்ளாக் காட்சியை ரசிக்கும்.

    பண்டைக்காலத்தில் காலையில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி வந்தாலே நல்ல “வாகிங் ” தேகப் பயிற்சி என்பதை உணர்ந்து அந்தக் கால மக்களும் காலை ,மாலை இரு நேரங்களும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் பக்தியும் பெருகியது. ஆன்மீகமும் வளர்ந்தது . மனம் தவறு செய்யும் முன் இரு முறை யோசித்தது . கோயிலுக்குச் சென்று அமைதியாய் அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்து கர்ப்பகிரகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூலவரை தியானத்துடன் வணங்க அதனால் கிடைக்கும் அமைதியே தனிதான். ஓம் சாந்தி.

     

    Share
  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..

    விசாலம்

    சமீபத்தில் திரு இன்னம்பூரான் அவர்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது அவரது பெயர் அவரது ஊரைக்கொண்டு  வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டேன் என் வீட்டின் கீழே இருக்கும் வைஷ்ணவர் சமீபத்தில் கும்பகோணம் போய் அருகில் இருந்த பல பெயர்ப்பெற்ற கோயில்களைக் கண்டு அதன் குறிப்புகளையும் கொண்டு வந்திருந்தார்.ஏனென்றால் நான் எப்போதும் கோயில் பற்றிய செய்திகளை அறிய ஆவலாக இருப்பது அவருக்கு தெரியும் .அதில் அவர் போன கோயிலில் ஒன்று இன்னம்பூர் .

    ஆஹா அருமையான செய்தி என்று அவரிடம் பேசி பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன் ,இந்த இடம் முழுவதும் முதலில் சண்பகமரங்கள் மிகுந்த காடுகளாக இருந்தன.ஆகையால் இதற்கு சம்பகாரண்யம் என்ற பெயர் இருந்தது ஒரு சமயம் ஒரு காட்டு யானை அங்கு வந்தது அதற்கு மிகுந்த தாகம் ஏற்பட்டதால் நீரைத் தேடியது .தண்ணீர் கிடைக்காததால் தன் தும்பிக்கையினால் பூமியைத்தோண்ட முற்பட்டது.”டபார்”என்ற வெடி சத்தம் பூமி வெடித்து இன்னம்பரான் என்று போற்றப்படும் சிவன் லிங்கரூபமாக தோன்றினார்  காட்டுயானை அருகிலேயே தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிப்பட்டது.இந்த இடத்தில் பூஜை செய்ய சர்வ பாபங்களும் விலகுமாம் ஏனென்றால் இந்திரனது யானை ஐராவதம் பாற்கடலில் தோன்றி நாலு கொம்புகளைக் கொண்டது  ஒரு சமயம் துர்வாசருக்கு மரியாதை கொடுக்கத்தவறியது  துர்வாசரது கோபம் தான் தெரியுமே .பிடி சாபம் என்று சபித்துவிட்டார் மன்னிப்பு கேட்டவுடன் இன்னம்பூரில்தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி இறைவனை வழிபட சாபம் தீரும் என அறிந்து தீர்த்தம் உண்டுபண்ணியது பின் அதில் ஸ்னானம் செய்து சாபத்தைத் தீர்த்துக்கொண்டது அந்தத்தீர்த்தம்தான் “ஐராவத தீர்த்தம் “

    கோபுரம் தாண்டி வெளிப்பிரகாரத்தில்  கணபதி  பலி பீடம் ,நந்தி , சுகந்த குந்தளாம்பாள் அம்மன் எல்லாம் பார்க்கமுடிகிறது உள் பிரகாரம் வந்து மூலவர் நோக்கி நகர ஒருதூணில் நடனம் ஆடும் கணபதி அழகு சொட்ட ஆடுகிறார் பின் வருகிறது நித்யகல்யாணி அம்பாள் சந்நிதி அம்பாளின் அழகு முகமும் அதில் தவிழும் புன்னகையும் அந்த இடத்தை விட்டு அகல தோன்றுவதில்லை மூலவர் சந்நிதியில் துவாரபாலகரை தரிசனம் செய்து விட்டு உள்ளே பார்க்க அங்கிருக்கும் ஈசன் ஸ்ரீ அட்சரபுரீஸ்வரர்  என்ற பெயரில் அருள் புரிகிறார் தமிழில் அவர் பெயர் அருள்மிகு எழுத்தறிநாதர் .தமிழ் ஞானம் பெற்ற அகஸ்திய மஹரிஷி தமிழ் இலக்கியம் படிக்க இன்னம்பூருக்கு வந்து தான் தமிழ் இலக்கணம் கற்றாராம் இதனால் இந்த ஈசனுக்கு அட்சரபுரிஸ்வரர் என்ற பெயர் வந்தது என்கின்றனர் சிலர் .படிப்பில் வெற்றியடைய .காலேஜில் இடம் கிடைக்க வெளிநாடுக்கு மேற்படிப்புக்குச்செல்ல இங்கு பலர் வந்து பிரார்த்தனை செய்கின்றனர் முதன் முதலாக அட்சராப்பியாசம் செய்யவும் சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வருகின்றனர்  திக்கித்திக்கிப்பேசும்  குழந்தைகளுக்கு நாக்கில் ஈசனது மலரால் எழுத அந்த எழுத்தறிநாதர் நல்ல பேச்சுத்திறனை அளித்துவிடுகிறார்.இதனால் இவரே பிரும்மா,சரஸ்வதி ஆகிவிடுகிறார் பாபங்களைப் போக்குவதால் இவரே பரிகாரஸ்தலமாகி அருள்புரிகிறார் கும்பகோணம் திருவையாறு பாதையில் புளியஞ்சேரி என்ற இடம் வரும். அதிலிருந்து வலதுபக்கம் திரும்பி திருப்புறம்பியம்  வழியாக சுமார் 2 கிமீ சென்றால் இன்னம்பூர் வந்துவிடும்   மேலும் பல தகவல்கள் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்

    Share
  • முசுட்டுத் தாத்தா …

    விசாலம்

    அந்தப் பாழடைந்த பங்களா முன் அமைந்திருந்தது ஒரு பெரிய மைதானம் அதில் சின்னஞ் சிறு சிட்டுக்கள் பாண்டியும், கபடி விளையாட்டும் விளையாடுவார்கள். கிரிக்கெட் குரூப் வேறு வந்து விடும். “ராமு அப்படி அடி சிக்ஸர் என்று “மகிழ்ச்சியுடன் ஆராவரிப்பார்கள் பசங்கள். நடுவில் சண்டையும் வரும் நீ அவுட்டுடா , நான் பார்த்தேன்”என்பான் சங்கர் . அட போடா , எங்க அவுட்… பந்து பேட்டில் படவேயில்லைடா”. “சீட்டிங் சீட்டிங் பேட்டை எங்கிட்ட கொடு இப்ப என் சான்ஸ் “

    “போடா அழுகுண்ணி “மட்டையைத்தூக்கிப்போடுவான் ராமு. பின் திரும்ப எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சில சமயம் பட்டங்கள் அங்கு பறக்கும் “ஓ போ காட்டே” என்றபடி ஒரு ஹிந்திக்காரன் கத்துவான்.பட்டத்தை அறுத்துவிட்ட மகிழ்ச்சியில் குதிப்பான . கண்மண் தெரியாமல் அந்தப்பட்டத்தைப் பிடிக்க ஓடும் ஒரு கூட்டம் . கார் வருவதும் தெரியாமல் ஓடும் . பீம் பீம் என்று ஓட்டுபவன் அலறுவான். இது போன்ற காட்சிகளுக்கு வந்தது ஒரு நாள் ஒரு முத்தாய்ப்பு .

    அந்த நாள்…..ஒரு டிரக் வந்து நின்றது .அதிலிருந்து ஒரு வயதானவர் இறங்கினார் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் போல் இருந்தது .அவருடன் மேஜை நாற்காலி ஒரு பீரோவும் கூட இறங்கின .இரண்டு பெரிய பெட்டிகள் இறங்கின .ஹிட்லர் போல் சாமான்கள் இறங்கும்போதே சாமான்களை இறக்கிய ஆட்களைத்திட்டினார்முகத்தில் சிரிப்போ,புன்னைகையோ கடுகளவு கூட காணோம் .இதையெல்லாம் கவனிக்காமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன .இதைப்பார்த்த அவர் வேகமாக முறைத்தபடி அவர்களை நோக்கி வந்தார் . “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஒய் ஸோ மச் ஆப் ..நாய்ஸ்?”என்று ஆங்கிலத்தில் கூச்சல் போட்டார் , இதை எதிர்ப்பார்க்காத சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர் . ஓடும் போது பயத்தில் கிரிக்கெட் பேட் கீழே விழ…அதை அவர் எடுத்து காம்பவுண்டு வெளியில் வீசினார்.அந்த மட்டை விரிந்து போயிற்று ராமு பரிதாபமாகமுகம் வைத்தபடி அதை எடுத்தான் .கூட கமலா,கண்ணன் ,ரமேஷ்.சங்கர்,லீலாஎன்றுபலர் கூடினர்.முசுடு முதியவர் வந்தார் .தனது வாசலைப்பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார் குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை “.நல்ல விளையாட்டுக்கு வினை வைத்துவிட்டாரே இந்த முசுட்டு தாத்தா”{என்றாள் சாந்தி “கொஞ்சம் நாளில் எல்லாம் சரியாகி விடும் தாத்தா சாந்தமாகி விடுவார்” என்றாள் நீலா . “அங்கன பறையு “என்றான் உன்னி “சப் டீக் ஹோஜாயகா” என்றான் கரண்சிங் .எல்லோரும் நம்பிக்கையுடன் கலைந்தனர் .

    மறுநாள் கேட் திறக்கவில்லை.ஆனால் தாத்தாவின் உருவம் தெரிந்தது ஒரு ஈசிசாரில் அமர்ந்திருந்தார்.கையில் ஒரு புத்தகம் இருந்தது சிறுமிகள் வந்தனர் பூட்டிய கேட்டைப் பரிதாபமாகப் பார்த்தனர்.பின் காப்டன் வந்தான் பின் அவர்கள் இருக்கும் தெருவிலேயே கிரிக்கெட் மாட்ச் ஆரம்பமானது.வழக்கம் போல் சேகர் ஆரம்பித்தான்.பந்தைச்சுழற்றிப்போட்டான் .ரமேஷ்.முதல் இரண்டு பால் சுமாராகத்தட்டினான் சேகர் .பின் நாலாவது பந்தில் தன் சக்தியெல்லாம் சேர்த்து ஒரு சுழட்டு சுழட்டினான் .அது வேகமாகப்பறந்து அந்தமுசுட்டுத்தாத்தாவீட்டுபங்களா சன்னலில் மோதியது.சன்னல் கண்ணாடி விரிந்தது .பயத்தில் எல்லோரும் ஓடத்தொடங்கினர்.சேகர் மட்டும் ஓடவில்லை .தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே போனான்.

    “தாத்தா தாத்தா”…. தாத்தா பேசவில்லை .முறைத்தார்
    “தாத்தா உங்களுக்கு காது கேட்காதா?என் பால் உள்ளே விழுந்துடுத்து அதை எடுத்தக்கட்டுமா?” தாத்தா பதில் பேசாமல் பந்தை எடுத்தார் .உள்ளே சென்று ஒரு கூர்மையான கத்தி ஒன்றைக்கொண்டு வந்தார். சேகர் பார்த்துக்கொண்டு இருக்கையில் அதை இரண்டு பாகமாக கிழித்தார் . பின் சேகர் மேல் வீசினார் .சேகரின் மனம் இரண்டாக உடைந்தது . அழ ஆரம்பித்தான். தன் வீட்டிற்குச்சென்று கதவை அடைத்துக்கொண்டான்

    இந்தக்கிழவருக்கு ஏன் இத்தனைக்கோபம் .வெறுப்பு ……………… அவர் பெயர் சண்முகம் அனாதையாக இருந்து பின் ஒரு சங்கத்தில் சேர்ந்து படித்தார் குடும்பச்சூழ்நிலை இல்லாததாலும் தனெக்கென்று ஒருவரும் இல்லை என்பதாலும் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம். தனிமையிலேயே சிறுவயதைக்கழித்தார்.நல்லவேளையாக படிப்பு நன்கு வந்ததால் சில சமூக சேவை உதவியினால் காலேஜை முடித்தார் .ஆனால் முசுடு சுபாவம் ஆனதால் ஒருவரும் அவரை நெருங்கவில்லை அவருக்கு இதனால் அன்பையும்,பாசத்தையும் உணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது .

    ஒருநாள் …….தன் ஆபீசிலிருருந்து வரும் வேளை .ஒரு ஓரமாகத்தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று ஒரு ஆட்டோஅவர் மேல் மோதியது .அவர் மயக்கமடைந்து கீழே சாய்ந்தார்.கூட்டம் கூடியது .ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை அந்த நேரம் ஒரு பெண்மணி தன் காரிலிருந்து இறங்கி இவரைத்தூக்க வைத்து தன் காரில் தக்கதருணத்தில் ஆஸ்பத்திரி அழைத்தும் சென்றார்.அத்தோடு நிற்காமல் தினமும் வந்து விசாரித்து சேவையும் செய்தாள்.அவளும் ஒண்டிக்கட்டைதான் குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுத்து சமூக இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவள் . இன்று அவளே அந்த இல்லத்தில் முக்கிய நிர்வாகி

    இருவர் மனமும் ஒன்றியது முசுடுக்குக்கொஞ்சம் கொஞ்சமாக பாசம் என்பதைப்புரிய வைத்தாள் வள்ளி.அவர் முகத்தில் இருந்த கடுகடுப்பை மாற்றி புன்சிரிப்பை வரவழைத்தாள் அவரது அனாவசிய கோபத்தைக்குறைத்தாள்.அவர் மேல் காதலும் கொண்டாள், ஆயிற்று வள்ளி சண்முகம் திருமணம் .ரெஜிஸ்டர் மேரேஜ் தான் .சண்முகத்தின் வயது நாற்பது வள்ளிக்கு முப்பத்தெட்டு.இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சியைக்கண்டார் சண்முகம்

    “என்ன வள்ளி நமக்குப்பிறக்க போகும் குழந்தை உன்னைப்போல் சாந்தமாக இருக்கணும் உன்னைப்பொல் அழகாக இருக்கணும் “

    “ஆமாம் பெண் குழந்தை தான் பெத்துக்கப்போறேன் உங்க போல அவ இருப்பா பேரு சண்முகப்பிரியா..எப்படி இருக்கு இந்த பேரு!”

    “ரொம்ப அழகா இருக்கு”என்றபடிஅவள் வயிற்றில் தன் காதை வைத்துப்பார்த்து பரவசமடைந்தார்.எல்லாமே புதுமையாக இருந்தது அவருக்கு.

    வந்தது அந்த சனிப்பிடித்த நாள் .அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர் ஆட்டம் மிக மும்முரமாக இருந்தது. மட்டை பிடித்த பேட்ஸ்மென் மோஹனுக்கு ஐம்பதைப்பிடிக்க இன்னும் இரண்டு ரன்கள் வேண்டும் .அந்த ஆசையால் வெறிப்பிடிதாற்போல் இழுத்து ஒரு அடி அடித்தான் தன் வீட்டு வாசலிலிருந்து வேடிக்கைப்பார்த்த வள்ளியின் வயிற்றில் அந்தப்பந்து வந்து தாக்கியது .அந்தப்பந்தே யமனாக வந்தது போலும் .அடிவயிற்றைப்பிடித்தபடி “அம்மா”என்று அலறினாள்.ஷ்ண்முகம் ஒடோடி வந்தார். அலறிப் புடைத்தபடி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார் வயிற்றினுள்லேயே சிசு மரித்துவிட்டது பின் தாயைப்பிழைக்கவைக்க முடியவில்லை அவ்வளவுதான் சண்முகம் வாழ்க்கையில் ஒரு பேரிடி.கிரிக்கெட்டை வெறுத்தார் அதை விளையாடும் எல்லோரையும் எதிரியாகப்பார்த்தார் விளையாட்டு சிறுவர்களை வெறுத்தார் நடந்த சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்துமிகவும் தொந்தரவு செய்தது.வந்த புன்னகை மறைந்து பழைய சிடுசிடு திரும்பியது.பைத்தியம் பிடித்தாற்போல் ஆனார்.

    ஒருநாள் அவருக்குத்திடீரென்று ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்டு வந்தது அதில் அவரது தாத்தா வழி வந்த சொத்தான ஒரு வீடு இவர் பேருக்கு எழுதப்பட்டிருந்தது.இவரது தூரத்து உற்வான ஒருவர் இவர் இருப்பதைக்கண்டுப்பிடித்து மிகவும் முயற்சி செய்து இவரிடம் அந்த வீட்டை ஒப்படைத்தார்.அந்த வீடுதான் தற்போது சண்முகம் இருக்கும் வீடு.தில்லியில் பாலம் விஹார் என்ற இடத்தில் இருந்தது. அவருக்கு வயதாக வயதாக தனிமையை உணர்ந்தார்.கோபமும் சிடுசிடுப்பும் கூடியது.இயலாமை வேறு அவரை மிகவும் வெறுப்படைய செய்தது.இதனால் தான் அவர் அந்தக்கிரிக்கெட் பந்தைக் கிழித்துப்போட்டாரோ?தன்னை மாற்றிய தனக்கு உயிர்க்கொடுத்த தேவதை வள்ளியைக்கொன்ற பந்தல்லவா என்ற பழைய ஞாபகமும் வர கத்த ஆரம்பித்து விடுவார்.

    ஒரு நாலு நாட்களாக அந்தக்காம்பவுண்டில் ஒரு சத்தமுமில்லை.ஐந்தாவது நாள் மெள்ள ராஜி அந்த மைதானத்தை எட்டிப்பார்த்தாள்.பின் தைரியமாக மேலே நடந்தாள்.வீட்டினுள் கதவு அடைக்க்ப்பட்டிருந்தது .”ஹையா மஜா தாத்தா வீட்டினுள் இல்லை “என்று குதித்தபடி வெளிவந்தாள்.பின் என்ன 1தோழிகள் கூட்டம் சேர்ந்தது.”வா கமலா மீனா ,நீலா ஓட்டம் பிடிச்சு விளையாடலாம்” என்றபடி ராஜி ஓட அந்ததோட்டப்பூக்களும் சிரித்தன.கடைக்குட்டி சுசீ மண்ணை அளைந்து கனகாம்பர விதைகளை விதைத்தாள்.பின் ரப்பர் குழாய் வழியாக நீர் பாய்ச்சினாள்.வேறு சிலர் அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர் ஒரு வாரம் ஆயிற்று முசுடுதாத்தா வரவில்லை. “ஹையா ஜாலி” என்றபடி சிறுவர், சிறுமிகள் ஆனந்தமாக பொழுதைப்போக்கினர் அடுத்த நாள் ஒரு அம்புலனஸ் அந்தக்காம்பவுண்டுக்குள் வந்தது அதிலிருந்து இரண்டு பேர்கள் இறங்கி தாத்தாவைத் தூக்கியபடி சென்றனர்.உள்ளே ஒரு கட்டிலில் அவரைக்கிடத்திவிட்டு அருகிலிருந்த மேஜையில் சில மருந்துகளை வைத்துவிட்டு சென்றனர்.எட்டி நின்று பார்த்த குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்
    “பாவம்டி தாத்தா என்ன உடம்போ தெரிலை “என்றாள் மீனுக்குட்டி

    “ஆமாண்டி ஒரு வாரமா ஆஸ்பிடல்ல இருந்திருக்கார் போல இருக்கு “என்றாள் வாணி
    “நான் ஓடிப்போய் எங்கம்மாட்ட சொல்லபோறேன் ஓட்ஸ் கஞ்சி எங்கம்மா வச்சுக்கொடுப்பா அத தாத்தாட்ட தரப்போறேன்”என்றாள் மீனுக்குட்டி மதியம் ஆனது ராஜி ஆப்பிள் பழத்தை வெட்டி எடுத்துக்கொண்டாள் மதியம் ஒரு மணி ராஜியுடன் மீனு, வாணி,சங்கர் சேகர் ரமேஷ் சிங் எல்லோரும் சேர்ந்துகொண்டனர்

    “நான் உள்ளே வரலை என் பந்தை முசுடு தாத்தா கிழித்துப்போட்டுட்டார் “என்று முகத்தை உம் என்று வைத்துக்கொண்டான் மோகன்

    ” பாவண்டா அப்படி சொல்லாதே தனியா சுரமா படுத்திண்டிருக்கார் போலிருக்கு பிளட்பிரஷர் போலேருக்கு வாடா உள்ளே அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்ன்னு நினைக்கறேன் “

    ” தாத்தா நான் தான் ராஜி …என்ன தாத்தா சுரமா ஐயோ பாவம் டோன்ட் வொர்ரி உங்கள பாத்துக்க நாங்க இருக்கோம் :

    ” தாத்தா தாத்தா நான் தான் மீனு உங்களுக்கு கஞ்சி கொண்டுவந்திருக்கேன் என் அம்மா ஆசையா வச்சு தந்தா குடிங்கோ தாத்தா ஸ்பூனில் தரேன் ஆன்னு வாயைக்காட்டுங்கோ “என்றபடி கஞ்சி கொடுக்க தயரானாள் தாத்தா கண்களிலிருந்து நீர் வழிந்தது தன்க்குப்பிற்க்காத குழந்தையா இவள் என்று நினைத்தபடி மீனு கையைப்பிடித்துக்கொண்டார் தன் மனைவியின் ஞாபகம் வந்தது “தாத்தா மருந்தெல்லாம் நான் கரெக்டா கரெக்டா உங்களுக்கு தரேன் கவல படாதீங்கோ “என்றான் மோஹன் தாத்தா குழந்தையைப்போல் அழ ஆரம்பித்தார் அவர் அழுவதைப்பார்த்து சிறுவர்கள் மனம் கலங்கினர் .தைரியமாக அவர் கட்டிலில் அமர்ந்தனர்.அவர் காலைப்பிடித்து விட்டனர்.நேரம் தவறாமல் மருந்தையும் புகட்டிவிட்டனர்.தங்கள் அன்பால் முசுட்டுத்தாத்தாவையும் மாற்றினர்

    ஒரு வாரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறியது.வரட்டு மைதானமாக இருந்த இடம் அழகான நந்தவனமாய் மாறியது.செடிகள் பூத்துக்குலுங்கின.பல வகை பறவைகள் அங்கு வந்து தங்கின.வண்டின் ரீங்காரம் காதுக்கு ரஞ்சகமாக இருந்தது . முசுடு ஹிட்லர் கதை சொல்லும் தாத்தாவாக மாறினார் அவரைச்சுற்றி பல குழந்தைகள்.அவர் எந்த நேரமும் உல்கை விட்டுப்போகலாம் அப்படிப்பட்ட வியாதிதான் அவருக்கு வந்துள்ளது குழந்தைகளுக்கு அது தெரியாது .அவர் எழுதிய உயில் வக்கீலிடம் இருக்கிறது “எனக்குப்பிறகு இந்த வீடும் மைதானமும் குழந்தைகள் விளையாடும் இடமாக ஆக வேண்டும் உள்ளே கேரம் ,செஸ், ஜிம் போன்றவைகள் நடக்க வேண்டும் வெளி மைதானத்தில் கிரிக்கெட் ,டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இது நான் என் சுயபுத்தியுடன் எழுதுகிறேன் “

    இதோ அவர் ஆனந்தமாக மரணபயமின்றி கிரிக்கெட் மாட்ச்சைப்பார்க்கிறார். “சபாஷ் அப்படி அடி .இன்னொரு ரன எடு “என்று குரல் கொடுக்கிறார் குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதைப்புரிந்து கொண்டுவிட்டார் . .

    Share
  • உடலே ஒரு தேர்

     

    விசாலம்

     

    நம் உடலே ஒரு தேர் ,
    நடுவிலே இறைவன் ,
    தேர் இழுப்பது போல்,
    நமக்கு ஆசாபாசங்கள்,
    தேர்த்திருவிழாவில் கொண்டாட்டம்
    வாழ்க்கையிலும் ஆடும் ஆட்டம்
    இசை,நடனத்துடன் தேர் பவனி
    திருமணத்துடன் கார் பவனி
    வாழ்க்கை மகிழும் தருணம்
    இன்ப உச்சித்தொடும் தருணம்
    நாலு வீதிகளில் தேரின் வலம்
    நாலு பகுதி வாழ்க்கையில் வலம்
    முடிவில் இறைவன் ஆலய நுழைவு ,
    நிலையாத உடலின் அழிவு
    ஆன்மா வந்த இடத்தில் சேர்வு ,
    போனது நம்மைத்தொடர்ந்த சோர்வு

     

    Share
  • வீணைக்கு ஒரு பூட்டு

    விசாலம்telegram-images

    அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா? ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட  கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும்  வீரமா ? தந்தி மேல்  மோஹனம்  காந்தாரம் வரைச்சென்று வீரத்தை அள்ளி வழங்கும் .சோகமா ? வந்துவிடும் சுபபந்துவராளி , வராளி ஹிந்தோளம் போன்ற  ராகங்கள்..    முன்பெல்லாம்  யாராவது தேசத்தலைவர் மறைந்தால்  சட்டென்று கண்டுப்பிடிப்பது இந்த  ராகங்களில் தான் .  டிவி  முதன் முதலாக ஆரம்பித்த நேரம்   முக்கால்வாசி பேர் ரேடியோவையே பொழுது போக்காக கொண்டிருந்தனர் . அழகாக சினிமா பாடல்கள் பாட திடீரென்று அது நின்று போய் ஒரு  சோக ஒலி  வயலின்  மூலமாகவோ  வீணை சிதார் மூலமாகவோ திடீரென்று எழும்  “ஐயோ  ஏதோ ஒரு தலைவர்  காலமாகிவிட்டார் போலிருக்கு  ” என்று எல்லோரும் உன்னிப்பாக சோகத்துடன் செய்தி கேட்க தொடங்குவார்கள் .  சரி இந்த வீணைக்கு இப்போது வருவோம்

    நான் சொல்ல வந்த வீணை  “டெலிகிராம்” . 1844 வருடம் திரு சாம்வேல் மார்ஸ் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உலக முழுதும் தன் தந்தியால்  நவரச பாவங்களை வழங்கி  பலரையும் உய்வித்த அந்த வீணை.    தற்போது அதற்கு ஒரு பெரிய பூட்டு போடப்பட்டு  தந்தியும்    அறுந்து நிற்கிறது ,      முதல் தந்தி   மே 24 வாஷிங்டன்னிலிருந்து  பல்டிமோருக்கு அனுப்பப்பட்டது   இந்தக்கண்டுப்பிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்
    .
    இதோ வருகிறார்  எங்கள் தெருவுக்கு வரும்  தந்திக்காரர்   அவரது உடையே தனி அழகுதான், காக்கி கலரில் பேன்ட்டும், ஷர்ட்டும் சட்டைப்பையின் மேல் புறம் ஒரு வில்லையும்,  பார்க்கவே பொது ஜன தோழன் என்பது நிதரிசனமாக தெரியும்   சைக்களை மிதித்தபடி  நேரம் ,காலம்  பார்க்காமல்  வருகிறார் . காலை ,மதியம்  அல்லது முன்னிரவு சுமார் பத்துவரை   அவரைப்பார்க்க   மனம் பக்  பக்கு என்றாலும்   காலை நேரம்    அவர் தரும் தந்தியை வாங்கும் தைரியம் இருக்கும் .  ஆனால் இதுவே தூங்கும் போது நடு நிசியில்  அவர் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் !   எங்கும் அமைதி .  இருள்   முன் வாசல் கேட்டை அவர் தட்ட வேண்டும் அது பாதுக்காப்பிற்காக பூட்டுப்போடப்பட்டிருக்கும். பாவம் அவரும் “சார் சார் என்றோ ஐயா என்றோ  வாசலை வேகமாக தட்டுவார் .     தூரத்திலிருந்து ஒரு கருப்பு   நாய் தன் பட்டன் போன்ற கண்களை உருட்டி இவரைக்குறி வைக்கும் .அந்த நாய் வருவதற்குள்  இங்கு கதவு திறக்கபடவேண்டும்    “சுப்பு என்ன இப்படி தூங்கற  ! வாசல்ல யாரோ கா மணியாய் உடைக்கிறா?தந்தியோ என்னவோ ” சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு வயிறெல்லாம பிசையறது “வரேம்மா “என்றபடி சுப்பு  வந்து கதவைத் திறக்கிறார் . தந்திக்காரர் தந்தியை நீட்டுகிறார். மனம் பதைபதைக்க கை நடுக்கத்துடன்  அதை வாங்குகிறார் .தந்திக்காரரும்  அதைப்பிரிக்கும்  வரை அங்கேயே நிற்கிறார் , ராஜி டைட்   டெலிவரி  ” என்ற வரிகள்  இருக்க  நாலு பக்கமும்   கரிய வரிகள் வரையப்பட்டுள்ளன   இந்தச்சந்தர்ப்பத்தைப்பார்த்தால்   நாதநாமக்கிரியா  ராகம் விணைத்தந்தியில் மீட்ட அது அப்படியே சோகத்தைக்கவ்விக்கொண்டு  அந்த வீட்டினுள் நுழைந்து அக்கம்பக்கத்திலும் பரவுவதைப்போல்  தோன்றும்  இந்த உணர்வு இந்தக்கால  ஈமெலில் கிடைக்குமா ?
    அதே தந்திக்காரர் மறு நாள்  காலை அதே  தெருவில் நுழைகிறார் . மனம் மகிழ்ச்சியுடன்   “என்ன முரளி சௌக்கியமா? என்று கேட்டபடி  கதவைத்திறக்கிறார்.  முரளி வருகிறார் , ” என்ன தந்தியா ” மனதில் கொஞ்சம் கலக்கம் இருக்க கேட்கிறார்  ஆனால் தந்தியில் சிவப்பு கோடு நாலு பக்கம் இருக்க   “அப்பாடி” என்றபடி ஒரு மூச்சு   “.  வெட்டிங் பிக்ஸ்ட் ,  லெட்டர் பாலோஸ்    சன்  ஹரி ”   இப்போது தந்தி கொடுத்த ஒலி கல்யாணி ராகம்  அந்தத்தந்தியை வாங்கிக்கொண்ட உடனேயே  மகிழ்ச்சியின் உச்சிக்குப்போய் மேல் காந்தாரத்தைத் தொட்டு உள்ளத்தைச்சிலிர்க்க செய்கிறது     “ஸீவீட் எடுத்துக்கோங்கோ ” என்றபடி உள்ளே போகிறார் .  இந்த உணர்ச்சி    கணிணி மூலம் அனுப்பும் மடலுக்கு  ஏன் வருவதில்லை . ஒரு இடத்தில் உனர்ச்சியில்லாத இயந்திரம் வேலை செய்கிறது இன்னொரு இடத்தில் உணர்வுகளுடன் கூடிய மனிதன் நேரில் பங்கு பெறுகிறான்  இதே போல் பயம் .பீபத்ஸம்   வாத்ஸல்யம்  வீரம் ஹாஸ்யம்  என்று பல ரசங்கள்  இந்தத் தந்தி மூலம்   நான்   அனுபவித்திருக்கேன்  ஒரு தீபாவளியன்று காலை என் பாட்டி இறந்ததைத் தாங்கி வந்த தந்தி இன்றும் என் மனதில் மங்காது இடம் பெற்றிருக்கிறது
    இந்தத் தந்தியே பல நேரத்தில் பலருக்கு உதவி  புரியும்  மூன்று நாட்கள் ஜாலியாக ஊட்டி போக ஆசை ஆனால் பாழாய்ப்போன ஆபீஸில் ஒரு லீவு கூட தரமாட்டேங்கறாளே “என்று அங்கலாய்க்கும் அம்பிக்கு  “மதர் சீரியஸ் ‘ என்ற தந்தி வந்து அவனுக்கு இந்த வாய்ப்பைக்கொடுக்கும் . சில சமயம்  தாத்தா இறந்துபோவார்   ஆனால் சில ஆபீஸர் இதைபுரிந்துக்கொண்டு ” ஏன் ரகு போனவருடமும் உன் தாத்தா காலமானாரே” என்று கேட்டபடியே லீவைத்தருவார் .சில பெற்றோர்களே இந்த வழியைச்சொல்லிக்கொடுப்பார்கள் , “டேய் ரகு இந்தத்தடவை பெண்பார்க்க கண்டிப்பாய் வந்துடு .  கல்யாணம் பிக்ஸ்  செய்யணும்
    “அம்மா என் பாஸ் லீவே தரமாட்டாரே ”    ”   அதற்கென்ன  பாட்டி உடல் நிலை மோசம்  உடனே வா ” என்ற தந்தி அனுப்பறேன்  ” வடநாட்டில் ஆங்கிலத்தில்  தந்தி அனுப்ப சிலர் மிகவும் திணறுவார்கள்  அந்தத்தந்தியைப்படித்து சில விபரீதங்களும் ஏற்பட்டதுண்டு   ஒரு சர்தார் தன் அப்பா லண்டன் போனதைச்சொல்ல  தன் தாய்க்கு  தந்தி அனுப்பித்தான்     “டேடி  கான்   யெஸ்டெர்டெ  ஹீ ஈஸ் இன் த வெல்  daddy gone yesterday  He is in the well ”     தன் அப்பா லண்டன் போய்விட்டாரென்றும் அவர் நலம்    என்றும் அடிக்க நினைத்து இது போல் தகவல் அனுப்ப  அவனது தாய் அலறியடித்துக்கொண்டு உடனே கிளம்பி வர  ……….ஒரே அமர்க்களம் தான் போங்கள் .
    இதே போல் ஒரு மாணவன்  தான்  காலேஜில் சேர்ந்ததை  ” அட்மிடெட்  இன் மெடிகல் ஆஸ்பிடல் . மெடிசன்  கிவன்  ”  என்று தன் விவசாயி அப்பாவுக்கு  தந்தி அனுப்பிக்க  அவரும் தன் நண்பர்கள் மூலம் விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டு   தன் மகன் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான் என மனம் பதைபதைக்க  தில்லி வந்தார் .  பார்த்தால் அவரது மகன் மெடிகல் சீட் கிடைத்த  குஷியில்  பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்   இது எப்படி இருக்கு ? கோயம்பத்தூரில் திரு ரத்ன சபாபதி கடந்த பல வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த வேலையைச்செய்து வந்தார் .அவர் ஆபீஸில் ஒரே நேரத்தில் அழுகையும் இருக்குமாம் சிரிப்பும் இருக்குமாம்  ஆங்கிலத்தில் பண்டில் ஆப் எமோஷன்ஸ் என்று சொல்வார்கள் . இதை உணர்ச்சிகளின் பிழம்புகள் என்று  சொல்லலாமா ?அவரது ஜோல்னாவில்  கொடுக்கவேண்டிய பல நிரம்பி இருக்கும் அதில் வாழ்த்துகள் . சோக செய்திகள் என்று பல கலந்து இருக்கும்  ஆனால் வருடங்கள் செல்ல கணினி வந்தப்பின் இது  அதிக அளவு குறைந்து ஜோல்னா பைக்கு அவசியமே இல்லாது ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டார்  தவிர  மிகச்சிலவு இல்லாமல்   மிக நம்பிக்கையுடன் அவசர செய்தியை அனுப்பும் சமாசாரமாகத்தான் இது இருந்தது என்பது உண்மை
    தந்தியில் டபிள் எக்ஸ் டெலிகிராம்  மரண செய்தியைக்கொண்டிருக்கும் அதற்கு எப்போதுமே முதன்மை இடம் அதற்கு க்யூ நிற்க வேண்டாம்  கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இந்த லைனில் வேலைச்செய்து வரும் திரு அண்ணாதுரை தினமும் சுமார் 15 கிமீ சைக்கிளை மிதித்து  100 தந்தி வரை கொடுத்துமுடிப்பார். இவருக்கு சூறாவளி . அடைமழை,  கடும் வெயில்  எல்லாம் பழக்கப்பட்டு போய்விட்டன .இரவில் நாய் துரத்துவது தான் கொஞ்சம் சங்கடமான விஷயம் என்கிறார் இவர் . வேலை கடுமையாக இருந்தாலும் ‘ஜாப் ஸாடிஸ்பேக்‌ஷன் எனக்கு மிகவும் கிடைத்தது மனம் நிறைந்திருந்தது ”  என்றார் .

    இந்திரங்களுடன் சேர்ந்து மனிதனே இயந்திரமாகி உணர்ச்சிகளில்லாத ரோபோவாகி வருகிறான் அண்ணன் தம்பி  பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய் தந்தையரிடமும் இயந்திரகதியில்  பேசி  தான் பேசாத நிலைக்கு ‘நோ டைம்’  என்று காரணமும்  காட்டி ,  அட கடவுளே   நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்   என நினைக்கத்தோன்றுகிறது    முதியோர் இல்லம்பெருகாமல் என்ன செய்யும் ?

    படத்துக்கு நன்றி

    http://frank-op.blogspot.in/2010/08/last-week-telegraph-started-bihar.html

    Share
  • ராமகிரி நரசிம்மர்!…

    விசாலம்                                                                                                                                                                                                                              தட்டை நாட்டை ஆண்டு வந்த சாமைய நாயக்கர் ஒரு தடவை வேட்டை ஆடப்போனார்   கூடவே அவரது வேட்டை நாய்களும்  அவருடன் சென்றன . அப்போது ஒரு அதிசயம் நடந்தது .திடீரென்று வேட்டை நாய்கள் தாங்கள் மற்ற மிருகங்களைத் துரத்துவதற்குப்பதிலாக  பயந்தபடி ஓடி வந்தன .அதைத்துரத்தியதோ ஒரு கீரி . இது எதனால் நடந்திருக்கும் என   சிந்தனையில் ஆழ்ந்த மன்னர் அந்த இடத்தை ஆராய உத்தரவிட்டார்.அந்த இடத்தில் “கல்யாண நரசிம்மர்  “அருள் பாலித்து வருகிறார் என்று சேவகர்கள் செய்தியைக்கொண்டுவந்தார்கள்.

    அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றித் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படிச்சொன்னார்.  அந்தக்கனவை அப்படியே நனவாகச்செய்து   ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மருக்குப் பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் இந்த ஆலயத்தின்  வயது சுமார் அறநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் .

    இந்த  ஆலயத்தை அடைய நாம்  கரூர் செல்லும் பாதையில் போய்  கோவிலூர்  என்ற ஊரை அடைய வேண்டும்  அந்தச்சாலையில் சுமார் இரண்டு கிமீ தூரம் செல்ல “ராமகிரி” என்ற இடம்  வருகிறது ,

    இந்த ராமகிரி என்ற இடத்தில் தான் திரு கல்யாண நரசிம்மப்பெருமாள் திருக்கோயில்   அமைந்திருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம்  கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிரகாரத்துடன் இருக்கும்    இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன்  அருள் பாலிக்கிறார் .

    இதன் புராணக்கதையைப்பார்த்தால்  உக்கிரமாக வந்த நரசிம்மப்பெருமாள் பின்னால் சாந்தமாக மாறி அருள் பாலித்தார். இதன் காரணம் என்னவென்றால்  முதலில் அவரது உக்ரத்தைக்கண்டு  பலரும் பயந்து நகர சிறுவன் பிரஹ்லாதன் அமைதியாக கைகளைக்கூப்பியபடி  அவரைத்துதித்தான்.    நரசிம்மர் சிறிது சாந்தமாக  முப்பத்து முக்கோடி தேவர்களும்  ரிஷிகளும்  அங்கு வந்து வணங்கினர் . பின்  நரசிம்மர் லக்ஷ்மியை அரவணைத்தபடி  காட்சியளித்தார் .அந்த நேரத்தில் தேவர்கள் அவரிடம்  தங்கள் வேண்டுகோளை வைத்தனர்

    “ஸ்வாமி தங்களை நாங்கள் கல்யாண  நரசிங்கப்பெருமாளாகக்காண  விரும்புகிறோம் தாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து சேவை சாதிக்க வேண்டும்” அவர்கள் ஆசையும் நிறைவேறியது .அந்த இடத்திலேயே நரசிம்மரும்  அமர்ந்துவிட்டார் .

    அந்த வனப்பகுதியில்  “ராமகிரி” யில்  ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண  நரசிம்மப்பெருமாளாக அருள் பாலிக்கிறார்.அவர் திருமுகத்தைப்பார்க்கவே  மனதில் ஒரு அமைதியும் . ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பிச் சேவிக்கிறோம்  .

    ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும்   பிரமாதமாக  இங்கு பூஜை நடைப்பெருகிறது .பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது .நரசிம்மரைத்தொழுதால்  சத்ரு பயம் .பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும் . எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்

    Share
  • ‘லட்சுமி வண்டு’ !…

    விசாலம்

    நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன்.அங்குக்கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது  அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும்  ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீர் வைப்பது வழக்கம் அந்தக்குளியல் அறையில் இரண்டு கரப்பான் பூச்சிகள் தன் மீசையை ஆட்டியபடி என்னைப்பயமுறுத்திக்கொண்டிருந்தன ,நான் பாம்பின் முன்னால் கூட நின்றுவிடுவேன் என நினைக்கிறேன் ஆனால் இந்தக்கரப்பாம்பூச்சிகள் கண்டால் சிம்மசொப்பனந்தான்.  அவ்வளவு பயம் ஒருதடவை அப்பளம் பொரித்து அவைகளை ஒரு தட்டில் நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன். அங்குக் வைத்து எடுத்துவருகையில் ஒரு கரப்பு சன்னல் வழியே பறந்து வர  …….சிவசிவா    அது நான் நடந்த வழியில்தான்  வரவேண்டுமா என்ன …….வீலென்ற சத்தம் ……என் கையிலிருந்த  தட்டு கீழே விழ அப்பளங்கள்  சுக்குநூறாக உடைய  என் கணவரின் வருகை என்னை………… மேலும் அழாத குறைதான்

    “அது என்ன செய்துவிடும்  கடித்து  தின்றுவிடுமா என்ன ?  என்று மேலும் சில அடைமொழிகளை அடுக்கி வீச  …….என் கோபமெல்லாம் அந்தக்கரப்பான் பூச்சிமேல் சென்றது    எனக்கு மட்டும் மந்திர சக்தி இருந்தால் அந்த்க்கரப்பு என் ஒரு பார்வையிலேயே பஸ்மம் ஆகி இருக்கும் .

    இந்த நினைவில் அந்தக்கரப்பைப்பார்த்தபடியே குளிக்க முயற்சி செய்தேன் ஆனால் என் பயத்தைத்தெரிதுக்கொண்டு என் பக்கமே அது வேகமாக நகர்ந்துவந்தது .இனி குளிக்கமுடியாது என்று ஒரு பழையபுடவைச்சுற்றியபடி வெளிவந்தேன்

    என் அத்தை  என்னிடம் “ஏண்டி இப்பத்தான் உள்ளே நுழைந்தாய்   அதுக்குள்ளே குளிச்சாச்சா?”

    இல்ல அத்தே   உள்ளே ரெண்டு கரப்பான் பூச்சி இருக்கே எப்படி குளிக்கறது?

    “இதுக்கா ஓடி வந்துட்டே ,சிவகாமியைக்கூப்பிட்டு விரட்டச்சொல்லு “

    வேலைக்காரி சிவகாமியைக்கூப்பிட்டேன்  …”சிவகாமி இங்க வாயேன்  இந்த…   இந்த  .கரப்பை அடி அல்லது விரட்டு “

    சிவகாமி வந்தாள் ”  அக்கா இது லட்சுமி வண்டுன்னா இத எப்படி அடிக்கறது ?அது ஒன்னும் செய்யாது அத கொன்னா வூட்லேந்து  லட்சுமி போய்விடுவா அக்கா ?நீ மாட்டும் குளிச்சுக்கோ “

    நான் மறுக்க அவள் தன் கையால் பிடித்து  அதை ஆசையாக எடுத்து கொல்லைப்பக்கம் வீசி எறிந்தாள் ……அப்பாடி போச்சு …. அதன் கலரும் அதன் மீசையும்  பார்த்தாலே மனதில் ஒரு அறுவருப்பு…..

    ஆனால் இன்னும் பலர் அது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு மிகப்பிடித்தமான  பூச்சி என்று நம்புகிறார்கள் .    கரப்பான் பூச்சியைக்கொன்றால் அல்லது அடித்தாலோ செல்வம் போய்விடும் என்று நம்புகிறார்கள்.கிராமபுரங்களில்

    அதிகமாக  இதை நம்புகிறார்கள் யாராவது அடிக்க வந்தாலும் தடுத்து விடுகிறார்களாம்  ஏன்  ! என் அம்மா கூட அதைக்கொல்லாமல் துணியால் பிடித்து வெளியே வீசிப்போடுவார் .அதுவும் செவ்வாய் வெள்ளி என்றால் கேட்கவே வேண்டாம் .லட்சுமியின்  அம்சமாயிற்றே !

    மனிதகுலத்திற்குத்தீமையை     அளிக்கும் இந்தக்கரப்பான் பூச்சியை  இவர்கள் காப்பாற்றுவதேன் ? அசுத்தமான அறைகள் , இருள் சூழ்ந்த இடங்கள் சாக்கடைகள் போன்ற  பகுதிகள் செப்டிக் டாங்கின் மூடிகள் போன்ற இடங்களில் அப்படியே  அடை அடையாக தரிசனம் தருவது இவைகள்தான் .மூலைகள் இதற்கு மிகவும் பிடித்த இடம்.    இரவு நேரங்களில் தான் இவைகளுக்கு சாப்பாட்டு நேரம்.   உணவு  பண்டங்களை மெல்ல பதம் பார்க்கும் .சில சமயத்தில் அசந்து தூங்கும் மனிதனின் விரல்களைக் கண்டுப்பிடித்து கடித்து வைக்கும்     அந்த இடம் மறுநாள் சுரீரென்று எரியும் போதுதான் கரப்பு கடித்துபோனது தெரியும். அவ்வளவு சுகமான ஆழ்ந்த தூக்கம் .

    சாப்பாடு தான் சாப்பிடுகிறதே திரும்ப தன் இடம் போகிறதா என்றால் அதுவும் இல்லை அந்த இடத்திலேயே புழுக்கை என்ற கழிவுபொருளை கழித்துவிட்டு செல்கிறது அதன் துற்நாற்றம் ஒரு ஸ்பெஷல்  தான்

    டாக்டர் இதைப்பற்றிச்சொல்வது என்னவென்றால் இதன் மூலம் உண்டாகும் நோய்க்கிருமிகள்  தொற்றிய பாத்திரங்கள் அல்லது நீரையோ கையாளும் போது பல வியாதிகள் உண்டாகுகின்றன காலரா   க்ஷயரோகம் தொழுநோய் டைபாய்டு போன்றவைகள்  இந்தபூச்சிகளால் பரவுகின்றன   தவிர வயிற்றுவலியும் வயிற்றுகடுப்பும் வருகின்றனவாம்

    தடுக்கும் முறைகள்

    வீடு அதிக சாமானகள் சேராமல் சுத்தமாக இருக்க வேண்டும்  சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்

    வீட்டில் இருக்கும் பழைய சாமான்களை அப்புறப்படுத்தவேண்டும் பழையபேபர்களை சேர்க்காமல் கபாடிவாலாவுக்கு போடவேண்டும்

    பாத்ரூம் இடுக்கில் அப்பப்போது மருந்து அடிக்கவேண்டும். எதாவது ஓட்டை இருந்தாலும் அதை அடைக்க வேண்டும்

    கிச்சன் மேடையை வேலை முடிந்தப்பின் சுத்தமாகத்துடைத்து வைக்கவேண்டும்  பாத்திரங்களை ஈரத்துடன் அப்படியே அலமாரியில் வைக்கக்கூடாது  ஒரு காய்ந்த  துணியால் துடைத்து வைக்க வேண்டும்

    வருடத்தில் இரண்டு முறையாவது முனிசிபாலிடி மூலம் பூச்சி மருந்து அடிக்கச்சொல்ல வேண்டும்  புடவை அலமாரியை நன்றாக இடுக்கில்லாமல் சார்த்தி வைக்க வேண்டும்

    கரப்பான் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகிக்கலாம்

    Share
  • மொட்டைக்காளி

    -விசாலம்

     

    காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில் பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த சட்டியானதால் வந்திருக்குமோ? சரி அது போகட்டும். நான் இப்போது மொட்டைக்காளியைப்பற்றி சொல்கிறேன்.

    ஐம்பதாண்டு முன் ……இதோ என் அம்மா கல்லுரலில் நீரில் ஊறிய அரிசியும் கொஞ்சம் வெந்தயமும் இட்டு நன்றாக நைஸாக அறைக்கிறாள். “கடக் கடக் ” என்ற ஒலிக்கேற்ப ‘சாமஜவரகமனா” என்ற ஹிந்தோள ராகப் பாடலை நான் பாடிப் பார்க்கிறேன்; தாளம் அழகாக அதில் அமர்கிறது. பாவம் அம்மா. இப்போது இருப்பதுபோல் மிக்ஸி இல்லாத நேரம் ஆனதால் வாரத்தில் ஐந்து நாட்களாவது இந்தக் கல்லுரலை அன்புடன் அணைத்துக் கொள்ள வேண்டும் இந்தக் காலமாக இருந்தால் கல்லுரலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் முன் காலத்தில் அரைப்பதும் தோய்ப்பதும் மிகவும் ரசித்துச் செய்யும் வேலையாக இருந்திருக்க வேண்டும் . அந்த வேலைகளில் இருந்த “அக்குபிரஷர்’ அவர்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியது. தவிர தன் குடும்ப அங்கத்தினர்களுக்கென்று அன்புடன் செய்யும் சமையல் மிகவும் ருசியாகவும் நல்ல சத்துடனும் இருந்தது. அதுவும் குடும்பத்தில் பல உறவுகளுடன் அமர்ந்து சாப்பிட மனதுக்குள் ஒரு நிறைவும் ஏற்பட்டது. தற்காலம்போல் டிவியில் ஒரு கண்ணும் வாயில் என்ன போகிறது என்று தெரியாமலே நன்கு மென்று சாப்பிடாமல் இயந்திர கதியில் கவளம் கவளமாக விழுங்கி ஆபீஸுக்கு ஓடும் காட்சி அந்தக் காலத்தில் இல்லை. அந்தக் காலத்திலும் ஆபீஸ் இருந்தது வேலை இருந்தது அத்துடன் ஒரு கட்டுப்பாடும் இருந்ததால் இரவு பத்து மணிக்குள் படுக்கை. காலை பிரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பு என்று வாழ்க்கை அமைந்ததில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருந்ததது .இதனால் பிரச்சனைகள் மிகக்குறைவாக இருந்தன. அப்படியே இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் மூத்த தலைவர்கள். தலைவிகள் அவைகளை எளிதாக தீர்த்து வைத்தனர்.

    ஐயோ எங்கேயோ திசை மாறி போய் விட்டேன். நான் சொல்ல வந்தது எங்க வீட்டு “மொட்டைக்காளி”யைப் பற்றி ……….. ஆ..எங்கே விட்டேன் , என் அம்மா தோசைக்கு அரைக்கிறாளா…… ஆம் அந்தத் தோசை வெந்தயத் தோசை. வெந்தயம் கலந்திருப்பதால் ஒரு விதமான பளபளப்புடன் ரொம்ப சாப்டாக இருக்கும் .. வயிற்றுக்கு ரொம்ப நல்லது . இந்த “மொட்டைக்காளி” அடிப்பக்கம் வழவழவென்று திருப்பதியில் மொட்டை அடித்ததுபோல் இருக்கும் ஆனால் கருப்பு கலர். அது எப்படி கருப்பு கலர் ஆனது என்று தெரியவில்லை. இரும்பானதால் அப்படி ஆகியிருக்குமோ என்னவோ! ரொம்ப சின்ன சைஸ் தான் ஆனால் தூக்கினால் நல்ல கனமாக இருக்கும் இரண்டு பக்கமும் காது கிடையாது , தூக்க வேண்டுமென்றால் இடுக்கியால் தான் தூக்கிப் பிடிக்க வேண்டும். முதல் நாள் அரைத்த மாவை இதோ என் அம்மா ரெடியாக எடுத்து வருகிறார். நிதானமாக அடுப்பை எரியவிட்டு அதில் இந்த “மொட்டைக்காளி” யை அமர்த்துகிறார் பின் கொஞ்சம் எண்ணெயை அதில் ஊற்றுகிறார் கொஞ்சம் சூடு வந்தவுடனே “சொய்” என்ற சத்தத்துடன் ஒரு கரண்டி மாவை அதில் இடுகிறார் . பின் ஒரு பிடி வைத்த மூடியால் அந்தத்தோசையை மூடுகிறார் . சில வினாடிகளுக்குப்பிறகு அதைத்திறக்க ஆஹா என்ன டிசைன் தோசையின் மேல் அழகாக பல புள்ளிகள் விட்டுக்கொண்டு அதன் கலரும் வெந்தயக்கலராக மாற என் தாய் என் தந்தைக்குப்பிடிக்குமே என்று கொஞ்சம் நெய்யும் ஊற்றுகிறார். கமகமவென்று வாசனை அறையைச் சுழ்ந்து கொள்ள நாக்கில் ஜலம் ஊறுகிறது . பின் அதைத் திருப்பிப் போடாமல் எடுக்க அழகாக “கும்”மென்று உப்பிக் கொண்டு ஒரு பக்கம் பிரௌன் கலராக இருக்க மறுப்பக்கம் புள்ளி டிசைன் போட்டபடி அழகாக இருந்தது. கொஞ்சமாவது அடிப் பிடிக்க வேண்டுமே! தோசையின் சைஸ் ஒரு சின்ன பூரியின் அளவுதான் இருக்கும் இதற்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்த் துவையல் அல்லது வெங்காயத் துவையல் ரொம்பவே ருசியாக இருக்கும். சில சமயம் இத்துடன் வெல்லம் சேர்த்து இனிப்பு தோசையாகவும் செய்வதுண்டு, கொஞ்சமாக பகோடா போடவும் இது உபயோகமாகும் இந்த மொட்டைக்காளி க்கு என் வீட்டில் ஒரே சண்டை. வீட்டில் பலரும் அதை அபகரிக்க முயற்சித்தனர். வீட்டுப்பெண்களும் அதில் கண் வைத்தனர் . நானும் தான். ஆனால் அதிருஷ்டமில்லை.

    அந்தச் சொத்து இன்னும் என் வீட்டில் என் தம்பியிடம் இருக்கிறது . பரம்பரையாக வரவேண்டுமென்பதால் வம்சத்தை வளர்க்கும் மகனுக்குத்தான் அந்தச் சொத்து சேருமாம் . அதே போல் நானும் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இந்த பழையகால “மொட்டைக்காளி” இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.

     

    Share
  • இசையும் கோயிலும்-3 !…

    விசாலம்

    இசையும் கோயிலும் 3      

    தமிழ் நாட்டின் சில கோயில்களில் கற்தூண்களும் இசை பாடும் திறமையைக்கொண்டுள்ளன என்பதை மிகவும் பெருமையுடன் நான் இங்கு கூறிக்கொள்கிறேன் .எல்லாம் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய கோயில்கள். மிகப்பழமை வாய்ந்த கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் அழகுதான் என்ன ! அதில் மிக நுணுக்கமாக வடித்திருக்கும் தூணகள் தான் என்ன ! பார்க்கப்பார்க்க வியந்து போகிறோம் இதில் இசை எழுப்பும் தூண்களை அழகர் கோயில், ஆழ்வார்திருநகரி, குற்றாலம், தாராசுரம்,  செம்பகநல்லூர், சுசீந்திரம் திருவேந்திரம், தாடிக்கொம்பு,  மதுரை சிம்மாசலம், திருநெல்வேலி போன்ற கோயில்களில் காணமுடிகிறது. கும்பகோணத்தில் அருகில் இருக்கும் தாராசுரம் கோயிலில் பலி பீடம் இருக்கும் இடத்தைத் தட்ட அங்கு ஒருவிதமான ஒலி எழும்புகிறது என்ற தகவலும் கிட்டியது.அதைத்தவிர இங்கிருக்கும் ஏழு படிகள் ஏழ ஸ்வரங்களை எழுப்புகின்றன.

    சிம்ஹாசலத்தில் பெரியப்பெரிய தூண்களுக்கு மேல் இசைத்திருக்கும் இலைகள், பூக்கள் இசையை எழுப்புகின்றதாம்.,

    நான் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் போயிருந்தேன் அங்கிருந்த மண்டபத்தில் இருக்கும்  சில கற்தூண்களை  வேகமாகத்தட்ட அங்கு இசை பிறக்கிறது. இவைகளை இசை பாடும் கற்தூண்கள் என்றே சொல்லலாம் இதைப்பார்த்து என்ன architectural wonders என்று பல வெளிநாட்டவர்கள் வியந்து போகிறார்கள்.என் கூட வந்த உதவியாளர் என்னை அந்தத்தூணை தட்டச்சொன்னார் .நானும் தட்டினேன் ஒரு சத்தமும் வரவில்லை. என் கையில் தேவையான பலமில்லை பின் அவர் கராட்டே கலையில் செங்கலை உடைக்க கையை வைக்கும் போஸில் அந்தத் தூணின் மத்தியில் தட்டினார், நானும் தூணின் அருகில் காதை வைத்துக்கொண்ட்டேன் ஆஹா… அருமையான சத்தம் அதிலிருந்து எழும்பியது .சிலர் கனமான குச்சியாலும் தட்டிக்காண்பிக்கின்றனர். எல்லா தூண்களும் ஒரே சுருதியில் அமைந்திருப்பது மிகவும் வியப்பைத்தருகிறது. இதைக்கட்டியவர் கட்டிடகலையில் எவ்வளவு நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும் இதில் ஒரு ஐந்து தூண்களிலிருந்து ஐந்து வித சுரங்கள் வெளிவர அங்கு “நவரோஜ்” என்ற ராகம் பிறக்கிறது.இவை மொட்டைக்கோபுரம் அருகில் பார்க்கலாம். இசை மேதை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இந்த ஐந்து ஸ்வரங்களைக்கொண்டு “நவரோஜ்’ராகத்தில் பாடல் இயற்றியிருக்கிறார். .

    ஆழ்வார்திருநகர் கோயிலில் அமைந்த வசந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களைத்தட்டினால் “ச ரி க ம ப த நி  என்ற சப்த சுரங்கள் வெளி வருகின்றன. தவிர ஒரு சன்னதியின் எதிரே இருக்கும் தூணைத்தட்ட சங்கின் ஒலி கேட்கிறதாம். இங்கு கல்லால் ஆன நாயனமும் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் தூண்கள் கிரானைட் கற்களால் ஆனவை இவைகளில் நடு நடுவே துளைகள் குடையப்பட்டு இருப்பதால் இந்த இடங்களில் ஊத மிக அழகான இசை ஒலித்து கேட்க மிக இன்பமாக இருக்கிறது இங்கிருக்கும் தூண்கள் வட்ட வடிவமாகவும்  சதுர வடிவ அமைப்பிலும் ஐந்துமுகமான நட்சத்திர வடிவத்திலும் மிக மிக கலை வண்ணத்தோடு அதிநுட்பமாக  செதுக்கப்பட்டுள்ளன.

    சுசீந்திரம் கோயிலில் பைரவர் மண்டபம் எதிரில் நான்கு இசை தூண்கள் உள்ளன. தாடிக்கொம்பு என்ற இடத்தின் கோயிலில் இருக்கும் தூண்கள் வேதங்களின் ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஹம்பி கோயிலில் இருக்கும் தூண்களில் அடிப்பாகத்தில் ஒரு ஸ்வரமும், நடுப்பாகத்தைத்தட்ட வேறு ஸ்வரமும் தூணின் மேல் பாகத்தைத் தட்ட வேறு ஒருஸ்வரமும் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.மூன்று பாகங்களையும்  ஒரே நேரத்தில் அடிக்க அங்கு மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரு புதுமையான ஒலி பிறந்து நம்மைப்பரவசப்படுத்துகிறது.  கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வர கோயிலில் கற்களால் செய்த இரண்டு நாதஸ்வரங்கள் சுவரில் வைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி பூஜையின் போது இவைகளை எடுத்து பூஜிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது தென்காசியில் இருக்கும் கோயிலில் முக்கிய பிரகாரத்தில் அருள் மிகு ஸ்ரீ விசுவநாத சன்னதியின் முன்னும் அருள் மிகு சுப்பிரமண்யர் சன்னதி முன்னும் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தேவி சன்னதி முன் இருக்கும் இரு தூண்கள்  இரு ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஒன்று மத்தியமம் மற்றொன்று பஞ்சமம்.

    இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிப்பாட்டின் போது தாரை தம்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது.  ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை.. இன்னும் நான் பார்க்காத பல கோயில்கள் இதில் இருக்கலாம்.எல்லாமே நாட்டின் பொக்கிஷங்கள்.அவைகளை கண்ணின் இமைப்போல் காப்பது நம் தலையாய கடமை அல்லவா?

    பின் குறிப்பு இதை ஒரு நாலு பேர் படித்தாலும் நான் எழுதிய குறிக்கோள் ஈடேறும் நம் கோயில்களின் சிறப்புக்களை பலரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் அவா  கோயிலின் இசையைப்பற்றி மேலும் பல புது தகவல்களைக்கொடுத்து உதவிய என் தம்பி  திரு வெங்கட் பெரிய இசை மேதை ,சங்கீத வித்துவான்

    ஊத்துக்காடு ஸ்பெஷல், அவருக்கு என் மனமார்ந்த நன்றி

    Share
  • இசையும் கோயிலும் 2

    விசாலம்

    வாத்தியங்களை எடுத்துக்கொண்டால் எல்லா கோயில்களிலும் நாம் கேட்டு அனுபவிப்பது நாதசுரம் தான் என்பதில் சந்தேகமேயில்லை இது இந்த அளவு சிறந்து விளங்குவதன் காரணம் அதன் ஒலிதான்.மங்களகரமான அதன் த்வனி எல்லோரையும் ஈர்க்கும் சக்தியுடையது. .மேலும் கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் இந்த ஒலி எதிரொலித்து அருகில் இருக்கும் அக்கிரகாரம் கோடி வரை கேட்பதால் அந்தச்சூழ்நிலையே ஆன்மீக நற்றலைகளால் நிரம்பி மனதுக்கு ஆனந்தமளிக்கிறது, இதைத்தவிர சங்கு, திருச்சின்னம், உடல், முகவீணை, பஞ்சமுகவாத்தியங்கள் என பலவகை வாத்தியங்களையும் காணமுடிகிறது. கேரள நாட்டுக்கோயில்களில் அதிகமான வாத்தியங்கள் இசைப்பதை நாம் காணமுடிகிறது .ஆடிப்பூரம் திருநாளில் ஜண்டை .தவில் தொப்பிமத்தளம் ,வீராணம் டமாரம், மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் முக்கியப்பங்கு வகித்து கேட்பவரைப் பரவசப்படுத்துகின்றன. வித விதமான லயங்களை அள்ளி வீசுகின்றன. இவைகளுடன் சேங்கலை,குழித்தாளம்,ஜால்ரா, போன்றவைகளும் ஒன்று சேர நம்மை நாமே மறந்துவிடுகிறோம். .

    கோயில் மணியும் அதன் ஒலியும் நம்மை ஆன்மீக சூழ்நிலைக்கு எடுத்துச்சென்று நம்மையுமறியாமல் இறைவன், இறைவியின் பால் நம் கவனத்தைச்செலுத்துகிறோம்.சில சமயம் அந்த மணி நிற்காமல் டண்,டண் டண் என்று வரிசையாக ஒலிக்கும் சில சமயம் அந்த மணி விட்டு விட்டு ஒலிக்கும் அதன் ஸ்வரம் சட்ஜமமாக இருக்கும் சில கோயில்களில் கோயில் மணியுடன் சங்கும் ஊதுவதுண்டு .நான் அடிக்கடி சிதம்பரம் போய்வருவேன்.அப்போது இதைக்கூர்மையாக கவனிப்பேன் இதில் என்ன சிறப்பென்றால் மணியின் ஒலி “ஸ’ என்று கேட்க சங்கின் ஒலி “ப” என்று இசைக்கும் “ஸ பா ஸ பா “என்று வரிசையாக கேட்க உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் ஆஹா அது என்ன ஆனந்தம் !

    திருச்சின்னம் என்ற வாத்தியம் பித்தளையினால் ஆனது என நினைக்கிறேன் .இது ஒரு காற்று வாத்தியம் ஆனால் இதன் நடுவில் துளைகள் இல்லை .பெருமாளின் திருமஞ்சனம் அல்லது சிவனின் அபிஷேகம் போது முழங்கப்படும்.இதனது ஒலியும் வெகு தூரம் வரை எட்டும் சீரடி பாபா மந்திரில் இது போன்று ஒலி எழுப்பி கண்டிருக்கிறேன். உடல் என்னும் வாத்தியம் ஒரு பெரிய குச்சியால் அடித்து ஒலி எழுப்புவதாக இருக்கிறது . கோயிலிலிருந்து சுவாமி புறப்பாட்டின் போது “டம்டம்” என்றோ அல்லது மூன்று மூன்றாக “டம் டம் டம் ” என்றோ அடித்து சுவாமி எழுவதைத் தெரிவிப்பது உண்டு கிராமத்து எல்லை தெய்வங்களின் கோயில்களில் தவிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன் உடுக்கு, தண்டைக்கொலுசு, தம்பட்டம்,சலங்கை போன்றவைகளும் பூசாரி உபயோகிப்பதைக்காணலாம் இங்கு இருக்கும் தேவி மாரியம்மன், காளி, பேச்சாயி மூக்காயி போன்ற பெயர்களிலும் ஆண்தெய்வம் கருப்பண்ண சுவாமி மதுரை வீரன் முனீஸ்வரன் போன்ற பெயர்களிலும் காணமுடிகிறது

    தொடரும் .

    Share
  • இசையும், கோயிலும் – 1

    -விசாலம்

    தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ரயில் பிரயாணம் செய்ய  பல புகழ் பெற்ற கோபுரங்கள் வரும்..பிரயாணிகளில் பலர் தன் இருக்கையில் இருந்தபடியே கோபுரத்தைப்பார்த்தபடி கைக்கூப்பி கன்னத்திலும் போட்டுக்கொள்வார்கள். கும்பகோணத்தில் மிகப் பழைய கோயில்கள் அதிகமாகக் காணமுடிகிறது. வட நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்  தமிழ் நாட்டைப்போல் இருப்பதில்லை.அங்கு இருக்கும் கோயில் சிலைகள் பளிங்கினால் செதுக்கப்பட்டுள்ளன. அதே போல் தரைகளும் மார்பிள் என்று சொல்லும் பளிங்குக் கற்களால் ஆனவை. இங்கு பல கோயில்களில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதியில்லை.ஆனால் அங்கு அநேக கோயில்களில் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூக்கள் வைக்கவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு.

    இங்கு இருக்கும் கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில்   கோயில் கட்டும் விதி, அதில் இருக்கும் சிலைகளின் வடிவங்கள், பிரகாரங்களின் அளவு, வாஸ்து என்று எல்லாமே சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியே  கட்டப்பட்டுள்ளன .

    கோயிலின் வரைபடத்தில் கர்ப்பகிரகம் எப்படி இருக்க வேண்டும்  என்றும்  கூறப்பட்டிருக்கிறது. பலி பீடம், துவஜஸ்தம்பம், மற்ற சன்னதிகள், வசந்த மண்டபம், வாஹன மண்டபம் எல்லாமே எப்படி அமைக்கப்படவேண்டும் என்ற நியதிகள்  வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. தவிர, அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில்  இசை, நடனம்,  நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அறுபத்தினான்கு  உபசாரங்களில் இசையும் ஒன்று. நம் வீட்டில் பெரிய அளவில் எதாவது பூஜை நடந்தால் பூஜை முடியும் நேரம் சாம வேதம் ஓதிய பின் வாத்தியார்  பெண்களின்பக்கம் பார்த்து  “யாராவது ஒரு பாட்டு அம்பாளுக்கு பாடுங்கோ” என்பார். நானும் இதில் பங்கு பெற்றுக்கொள்வேன்.

    இசையை  வெளிப்படுத்தும்படி பல சிற்பங்களும் கோயில்களில் காணமுடிகிறது. சரஸ்வதி தேவி வீணையுடன், கண்ணன் புல்லாங்குழலுடன், நடராஜர் கையில் உடுக்குடன், நந்திதேவர் மத்தளத்துடன்  எனப் பலவிதமான சித்திரங்களை நாம் பார்க்கிறோம் .

    அவைகளில் சில கோயில் மண்டபத்தின்  மேல் சுவற்றில் மிக அருமையாக வரையப்பட்டுள்ளன. இந்தச்சித்திரங்களை ஒரு கயிற்றில் தொங்கியபடியே வரைந்திருக்க வேண்டும். சில சித்திரங்கள் ரம்பை ,ஊர்வசி நடனத்தை அழகாக விவரித்துள்ளன. நடராஜர், தில்லைக்காளி நடனம் சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில் மிக  அழகாக வரையப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் இயற்கை  மூலிகையிலிருந்தே தயாரிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கோயிலிலும் அங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவியைக்கொண்டு புராணங்களிலிருந்து பல கதைகள் சித்திரமாக வரையப்பட்டு நம்மை வியப்படைய வைக்கின்றன .

    ஸ்ரீராம பட்டாபிஷேகம், கஜேந்திர மோட்சம், ஆண்டாள் திருமணம், தசாவதாரங்கள், ஆழ்வார்கள் சரித்திரம், போன்று வைஷ்ணவ கோயில்களிலும், சைவ கோயில்களில் நாயன்மார்களின் சரித்திரங்கள் சிவனின் திருவிளையாடல், மார்கண்டேய புராணம், அப்பர், சுந்தரர் திருநாவுக்கரசர் போன்றவர்களின் சித்திரங்களும் பார்க்க மிக பிரமிப்பாக உள்ளது. அவர்கள் இயற்றிய பாடல்களும்  ஓதுவார் மூலமாகப் பாடப்பட்டு வருகின்றன. முருகன் கோயில்களில் அருணகிரிநாதர் இயற்றிய  திருப்புகழை இன்றும் பக்தர்கள் பாடுகின்றனர். வைணவ கோயில்களில் பாசுரங்கள், திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவைகள் இசையுடன் பாடப்படுகின்றன

    கீதம், வாத்யம்,  நிருத்யம் என்ற மூன்று பிரிவுகளும்  கோயிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  முதலில் வருகிறது வேதம். அதில் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட  ஸ்வரம் மூன்று. அவை  ஸ ,ரி, நி,………இவையே  ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா என்ற பெயர் கொண்டவை .

    வேதங்கள் சொல்லும் போது இந்த சுவரங்கள் தான் மேலும் கீழும் பேசும். இதைக்குறிக்க  சம்ஸ்கிருத எழுத்தின் கீழே, அல்லது மேலே  சிறு கோடுகள் இருக்கும். மேலே இரு கோடுகள் இருக்க அங்கு ” நீ” என்ற சுவரம் பேசும்.  பின்  சாம வேதத்தில் மேலும் ஓரிரு சுவரங்கள் சேர்க்கப்பட்டன.  இறைவனின் பூசையின் போது வேத வித்தகர்கள் மூலம் இன்றும் இவை ஓதப்பட்டு  வருகின்றன. வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும். மழை  பெய்யத்  தவறினால் வருண பகவானை அழைப்பது, வியாதி பரவுவதைத் தடுக்க  தன்வந்திரி பகவானை  அழைப்பது,  படிப்பு வரவில்லை என்றால் ஸரஸ்வதியைப் பிரார்த்திப்பது,  என்றெல்லாம் சூக்தம் என்ற பெயரில் சொல்ல அதன் நற்பலன் கைமேல்  கிடைக்கும்.

    பக்தி வளர்ந்த காலத்தில் {   medieval period  .ல்} இசை,  பஜன் என்ற பெயரில் அதாவது  திவ்ய நாம சங்கீர்த்தனம் பாணியில் ஆரம்பித்தது. இது பாமர  மக்களுக்கு மிகவும் எளிதாக இருந்தமையால் பலரும் இதைப்பின்பற்றினர்  சங்கீத ஞானம் குறைவாக இருந்தவர்களும் கூட்டத்துடன் இதைப் பாட முன் வந்தனர். இந்தக் கோஷ்டி  கானம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மஹராஷ்ட்ராவில்  துகாராம், நாம் தேவ் போன்றவர்களும் பல பஜன் பாடல்களை இயற்றி, பாடி, இறைவனுடன் கலந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த  பக்தி மார்க்கம்  எல்லா மாகாணங்களிலும் பரவியது.

    அருணகிரிநாதரின் திருப்புகழ்  சைவ சித்தாந்தத்தைத் தழுவி 1367 பாடல்கள் கொண்டு எல்லா முருகன் கோயில்களிலும்  பாடப்பட்டது . இதன் சந்தங்கள் மிகவும்  அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் இசை பாடியே ஜோதியாகக் கலந்தவர்கள் பலர். பல வருடங்களாக பகுள பஞ்சமியன்று ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் பஞ்சரத்ன பாடல்களை பல இசைக்கலைஞர்கள் பாடி வருவதைக் காண்கிறோம். இதேபோல்முத்துசுவாமிதீட்சதர், ஸ்யாமாசாஸ்திரி, ஸ்வாதிதிருநாள், புரந்தரதாசர் கிருதிகளையும் கோயில்களில் கேட்கிறோம்.,

    இன்றைய கால கட்டங்களில் கோயில்களில் சினிமாவில் பாடப்பட்ட பல பக்தி பாடல்களும் திருவிழாவில் இடம் பெருவதை நாம் பார்க்கிறோம். இந்த முறை நான் கோயம்பத்தூரில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஏழு நாட்கள் தொடர்ந்து திருவிழா.  “மருதமலை மாமணியே முருகய்யா,”  “பழனியப்பா ஞானப் பழனியப்பா”, “ சிங்கார வேலனே”, என்ற பாடல்களும் திருமதி எல் ஆர் ஈஸ்வரி பாடிய மாரியம்மன் பாடல்களும்  அன்று  சித்திரை திருவிழாவில் பாடுவதை நான் கண்டு களித்தேன் . எல்லாமே திரு கண்ணதாசன் இயற்றிய பாடல்கள். சில பாடல்கள் சினிமாமெட்டில்  பாடுவதையும்  கேட்டேன்.

    படத்துக்கு நன்றி: http://www.panoramio.com/photo/74277719

    Share
  • மனாலியில் ஒரு கோயில்!…

    விசாலம்

    இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள்.

    அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் உள்ளதால் பலரும்   இங்கு வருகின்றனர் .பனியில்  சறுக்கும்  விளையாட்டும் இருப்பதால் இளைஞர்களும்  இங்கு விரும்பி வருகின்றனர்  இந்த இடத்தில்  தான் “ஹிடிம்பா” என்னும் கோயில்  இருக்கிறது.

    நாம் “இடும்பி “என்று அழைக்கும் அரக்கித்தான் இந்த ஹிடிம்பா.   இவள் தான் ஹிடம்ப் என்ற அரசனின்  சகோதரி . இந்த “ஹிடம்ப்’என்பவன் தான் நாம் சொல்லும் இடும்பன், வடநாட்டில் ‘ஹிடம்ப்” ஹிடிம்பா என அழைக்கிறார்கள்.

    இதன் புராணக்கதையைப் பார்க்கலாம்

    அரக்கு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள் தாங்கள் கௌரவர்கள் சூழ்ச்சியால் எரிக்கப்போகும் சதி தெரிந்தவுடன்   அங்கிருந்து தப்பி  இமயமலைப்பக்கம்  போனார்கள்  ஆனால் அவர்கள் போன இடமோ  இடும்பன் என்ற அரக்கன்  அரசாளும் இடம் .  இடும்பனுக்கு நர வாசனை மூக்கில் தெரிய   தன் சகோதரியை வந்திருக்கும் நரர்களைப்பிடித்து வர உத்தரவிட்டான்

    இடும்பியும் அங்குச்செல்ல பீமன்  அவள் கண்ணிற்பட்டான் . பீமனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது காதலிக்கவும் தொடங்கினாள் ஆகையால் அழகிய பெண் போல் தோற்றம் கொண்டு  அவனிடம் அணுகி தன் காதலை வெளிப்படுத்தினாள். பீமனும் அவள் விருப்பத்திற்குச்சம்மதித்தான் அரண்மணையில் இடும்பன் பொறுமையிழந்தான். வெகுநேரமாகியும்  இடும்பி வராததால் அவளைத்தேடியபடியே போனான், பீமன் அவனைப்பார்த்தான், இடும்பனுக்கும்  பீமனுக்கும்  போர் மூண்டது .

    அரக்கனைக்கொன்ற பீமன்  இடும்பியை  மணந்தான் .அவர்களுக்கு அழகான மகன் பிறந்தான்.     அவனே கடோத்கஜன்.

    அக்ஞாதவாசம் இருந்ததால் பீமன் அந்த நாட்டைவிட்டுப்போக நேர்ந்தது .அந்த நாட்டிற்கு இடும்பி அரசியானாள் கடோத்கஜன்  வளர்ந்து  ராஜ்யத்தை ஆளும் திறமைப்பெறும் வரை  அவனை நன்கு வளர்த்தாள்.

    பின் நாட்டை தன் மகன் கடோத்கஜனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குத்தவம் செய்யப்போனாள்.

    கண்ணன் மகாபாரதப்போரின் போது கடோத்கஜனைப் பாரதப்போரில் இணைக்க நினைத்தார் ஆகையால்  இடும்பியிடம்  சென்றார்.

    இடும்பனின் சகோதரியே பீமனின் மனைவியே நான் தக்கத்தருணத்தில் உன் மகன் கடோத்கஜனை ப்பாரதபோருக்கு அழைத்துச்செல்வேன். நீ அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

    “கிருஷ்ணா . தாங்கள் கேட்டு நான் மறுப்பதா? அவசியம் அனுப்பிவைக்கிறேன்”

    “இடும்பி நீ இனிமேல் அரக்கியாக இல்லாமல் தெய்வமாக ஆகி விடுவாய். எல்லோரும் உன்னை பூஜிப்பார்கள்”  என்று சொல்லியபடியே அவளை வாழ்த்தினார் .கண்ணன்.

    போரில்  தன் உயிரைக்கொடுத்து  அர்சுனனைக்காத்த  கடோத்கஜன்  மிக உயர்ந்த ஸ்தானத்தில்  நின்றான்  நீங்காத புகழும் பெற்றான்

    இடும்பியும்  பல காலங்கள் தவம் செய்து தெய்வநிலை அடைந்தாள், பின்  அவளுக்காக கோயிலும்  எழுந்தது.

    அங்கிருந்த குலு அரசர்கள் அவளுக்கென்று கோயிலும் கட்டினார்கள். அவர்களது குலதெய்வமாக இடும்பி விளங்குகிறாள்

    எந்த முக்கிய விஷயமானாலும் இடும்பியுடம் உத்தரவு பெற்றபின்னேதான் அங்கிருக்கும்  மக்கள் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள் . முன்பு மன்னன் முடிசூடும் முன்  இடும்பியின்  உத்தரவைப் பெற்றே பட்டாபிஷேகம்  நடைப்பெறமுடியும்  .

    இந்தகோயிலுக்கு மனாலி அடைந்து  பின் மலைப்பாறையில் இரண்டு கிமீ ஏறி நடக்க   இடும்பியின் கோயில் வந்து விடும்  .

    சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் இந்த மனாலி.

    Share
  • உன் திருவடிகள் தேடி……

     
    விசாலம்

    கருத்தரித்தாய் என்னை
    காத்தருளினாய்
    வினாடியும் கண்கொட்டாமல்
    நானும் வளர்ந்தேன்
    நீயும் மெலிந்தாய்
    மசக்கை என்ற பெயரால்
    உணவும் குன்றியது
    வாந்தியும் எடுத்தாய்
    உன் வாழ்க்கையில்
    மேடு பள்ளங்கள்
    சுற்றிச்சுழலும் கவலைகள்
    உடன் என்னைச்சுமந்தாய்.
    கால்களும் வீங்க
    கீழே அமர தவித்தாய் ,
    பிரசவத்தின் சூல் வலிக்கும்
    ஈடு கொடுத்தாய் ,
    “குவா குவா” சத்தம்
    உனக்கு தேனாக இனித்தது.
    வலி மறந்தாய்,
    எனை அணைத்தாய் .
    தந்தாய் எனக்கு ஒரு சிம்மாசனம்
    மடியேற்றி அமுதூட்டினாய் .
    மலமூத்திரம் புடவை நனைக்க
    பொறுத்தாய் புன்னகையுடன்
    என்னைக்காணும் போதெல்லாம்
    உன் முகத்தாமரை மலர்ந்தது
    அன்றிலிருந்து நான் வளர்ந்தேன். .
    நலம் கோடி பெற்றேன்
    “மாத்ருகடன்” சுமை வளர்ந்தது
    அத்தனையும் தீர்ப்பது எப்படி?

    என்னை வளர வைத்த உரங்கள்
    நீ செய்த தியாகங்கள்
    அதற்கு அளவே இல்லையம்மா
    உன் திருவடிகளே என் கோயில்
    அதைத் தொழுவதே என் வேலை

     

     

    Share
  • நிலா ! . . .

    விசாலம்

    நிலா என்பது  கவிதையில் எல்லோரலும் உபயோகப்படுத்தப்  படுகிறது சின்ன பாப்பாவுக்கு அதன் அம்மா “நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா  என்று  பாடி சாதம் ஊட்டுகிறாள் காதலர்கள் நிலவை ரசித்து தன்னை மறக்கின்றனர் உலகம் துறந்தவர் அல்லது சன்யாசிகளும் நிலாவின் குளுமையில் வெற்று வெளிச்சத்தில் அமர்ந்து தியானம்  செய்கின்றனர் ,முழுநிலாவின் போது அதாவது   பௌர்ணமி அன்றுதான்  ஸ்ரீ சத்யநாராயண பூஜையும் மாலை நேரம் நடக்கிறது ,

    மஹாகவி பாரதியார் வெண்ணிலவைக் குறித்து கவிதை இயற்றி இருக்கிறார்
    “எல்லைக் யில்லாததோர்  வானக் கடலிடை
    வெண்ணிலாவே! –விழிக்
    கின்ப மளிப்பதோர்  தீவென் றிலகுவை
    வெண்ணிலாவே
    நல்ல ஒளியின்  வகைபல  கண்டிலன்
    வெண்ணிலாவே—இந்த
    நனவை மறந்திட செய்வது கண்டிலன்
    வெண்ணிலாவே !
    தீது  புரிந்திட  வந்திடும்  தீயர்க்கும்
    வெண்ணிலாவே –நலஞ்
    செய்தொளி  நல்குவர்  மேலவ  ராமன்றோ
    வெண்ணிலாவே ,,,,
    சினிமாவிலும் நிலாவை  வைத்து பல பாடல்கள் உள்ளன , பழையக் கால பாடல் ”  அமுதைப் பொழியும் நிலவே  நீ அருகில்  வராததேனோ?” மிகவும்  ரசிக்கப்பட்டது இதேபோல் நிலவே என்னிடம் நெருங்காதே ” என்ற பாடலும் ஹிட் ஆனது இந்தக்கால படங்களிலும் பல பாடல்கள் நிலாவைக்குறித்து பாடபடுகின்றன குறித்து பாடப் படுகின்றன.
    சரி நிலா எங்கேயாவது கீழே விழுமா? விழுந்ததே ,,,,,  ஒரு பெரிய மரத்தின் கீழ்  குரங்குகள் அடித்த லூட்டியைக்  ஒரு கவிதை மூலம் பார்க்கலாம்
    என்  நிலா உடைந்து போனதே,,,,,
    பௌர்ணமி நிலவில்
    ஒரு நாள்
    ஆலமரத்தின் கீழ்
    ஒரு  வானரப் பட்டாளம்
    தாவித் தாவிக் களித்தன
    வம்புச் சண்டை போட்டன
    வாலைப் பிடித்து இழுத்தன
    முதுகில் சவாரி செய்தன ,
    பழங்களைப் பிடுங்கின
    கிளைகளை உலுக்கின .
    ஒரு  குட்டிக்குரங்கு
    கிணற்றில் தாவ
    கண்டது முழுநிலவைத்தான்
    “ஐயோ காபாற்றுங்கள்
    நிலா விழுந்து விட்டது நீரில்”
    அலறிபுடைத்துக்கொண்டு
    வந்தது ஒரு பட்டாளம்
    நீரிலிருந்து எடுத்தது நிலாவை
    நிலவும் கலைந்து போனது
    குட்டிக்குரங்கின் அழுகை
    வானத்தை எட்டியது .
    “ஐயோ என் நிலா
    இப்படி உடைந்து போனதே “!
    வ்ந்தது அங்கு வயதான வானரம்
    “அட முட்டாள்1
    வானத்தைப் பார்
    நிலா உடையவில்லை
    நிலா மாறவில்லை
    நிலா அழியவில்லை
    அதோ பார் வெண்நிலா
    பவனி வரும் அதன்
    அழகைப் பார் !..
    Share
  • ஆன்மீக வண்ணக்கலவை

    விசாலம்

    இந்தப் பங்குனி ,சித்திரை மாதம் வந்தாலே பலவிதமான பலதரப்பட்ட பண்டிகைகள் திருநாட்கள் வந்து மன மகிழ்ச்சியைத் தருகின்றன. வட இந்தியாவில் டிசம்பர் ஜனவரி வரை மிக அதிகமாகக் குளிரில்  மக்கள் வெடெவெடத்துப் பின் குளிர் குறைய ஆரம்பித்து அதன் பின்  ஹோலிப்பண்டிகையுடன்  ,சிவராத்திரியுடன் குளிர் போ போ என்று போய்விடும்  பின் வசந்தக்காலம் ,,,, வசந்தபஞ்சமியிலிருந்து ஆரம்பித்து வரிசையாக எல்லா மதத்தினருக்கும்   கொண்டாட்டம் தான் மக்கள் பனியில் தவித்தப்பின் ஆனந்தமாய் வெளியில் வருவதும் .பூக்கள்    பூத்துக்குலுங்கி வரவேற்பதும் மிக  அழகான காட்சி

    இந்த நேரத்தில் தான் குடியரசுத்தலைவர் மாளிகையின்  தோட்டம் மக்கள் பார்வைக்கு  விடப்படும்  பலதினுசு ரோஜாக்கள் நம்மை மயக்க வைக்கும் மாசி பௌர்ணமி அன்று  ஹோலிப்பண்டிகை   இது ஒருவாரம் முன்பே களைக்கட்டிவிடும்  எல்லா மாணவர்களும் பலூனில் நீர் நிரப்பி அதைக் கட்டிவிட்டு அந்தப்பந்தை எல்லோர் மேலும் வீசுவார்கள் முக்கியமாக காலேஜ் மாணவிகள் இதில் அவதிப் படுவார்கள். ஹோலி     சோட்டி  ஹோலி  ,படி [badi]  ஹோலி என்று இரண்டு நாட்கள் கொண்டாடப்படும்    சோட்டிஹோலியில்  பலநாட்கள் முன்பே மரக்கிளைகள்  குச்சிகள் பல அட்டைகள் என்று சேகரித்து அதை  சோட்டி    ஹோலி அன்று எரித்து  அதைச் சுற்றி பாட்டுக்களும் பாடி நடனங்களுடன் கொண்டாடுவார்கள் .நிச்சியம்  மதுவும் இருக்கும்   விருந்தோம்பலும் உணடு. சுடச்சுட பன்னீர் பகோடா .மிளகாய் பஜ்ஜி . நமக்பாரே போன்றவைகள்
    தட்டுக்களில் பரப்பபட்டிருக்கும் அதற்கு ஒத்துப்போகும்  புதினா கொத்தமல்லி சட்னி ..ஆஹா  அமிருதமாக இருக்கும்

    ஹோலி பெயரைக் கேட்டாலே வண்ணங்களும்  “:பிச்காரி”என்ற தண்ணீர் பீச்சும் குழாய்களும் ஒவ்வொருவர் அன்புடன் தழுவுதலும்”ஹோலி ஹை  ஹோலி  ஹோலி முபாரக்”என்ற ஆனந்தக் கூவலும் நம்மைப் பரவசப்படுத்தும்  மஹாராஷ்ட்ராவில்  இதை மிகப்பிரமாதமாகக் கொண்டாடுவார்கள் இதை”ரங்கபஞ்சமி” என்பார்கள் வசந்தக்காலத்தின் நுழைவு நாள் இது,.இங்கு  செம்படவர்கள்  அதிகம் பங்கேற்று  தங்களை மறந்து களிப்பார்கள் எல்லோரும் ஒவ்வொரு சாலையின்  நடுச்சந்தியிலும்  மேலே சுமார் ஆறு அல்லது ஏழு மாடி உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம்  ரூபாய்கள் வசூலித்து தனியாகக் கட்டி விடுவார்கள். பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும்  இதை உடைக்க ஒரு “டோலி”கும்பல் வரும். அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும்  .எல்லோரும் பாட்டு பாடிக்கொண்டு “கோவிந்தா ஆலாரே” என்று  கொட்டு கொட்டிக்கொண்டும்  வருவதைப் பார்த்தால் நம் உடலும் சிலிர்க்கும் பின் ஒருவர்க்கொருவர் முக்கோணம் போல் அமைப்பில் ஒருவர் மேல் ஒருவராக ஏறி அதை எட்டிப்பிடித்து உடைப்பர்ர்கள். பார்ப்பவர்கள் அவர்களை ஏறவிடாமல் தண்ணீர் கொட்டுவதும்  உண்டு இதே போல் தான் ஜன்மாஷ்டமி அன்றும் இருக்கும்   அவர்கள் சாமர்த்தியமாக எடுத்துவிட்டால் அந்த ரூபாய்கள் அவர்களுக்கே

    லக்கூஜி ஜாதவ் மஹராஜின் பெண் ஜீஜாபாய் , அவள் தன் ஐந்து வயதில்  விளையாட்டாக எல்லோர் மேலேயும்  வண் ணக்கலர் தண்ணீரில் கலந்துத் தெளித்தாள் அப்போது சிறு பையன் “சாஹூஜி மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே தன்  மகனுக்கும் ஜீஜாபாயிக்கும் திருமணம் நிச்சியம் செய்து விட்டார்  பின் சில வருடங்களுக்குப் பிறகு வீர சிவாஜி அவர்களுக்குப் பிறந்தார் பின் மஹாராஷ்டர மாகாணமும் பிறந்தது  இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரணமாகிறது

    இப்போது மதுரா பிருந்தாவன் போவோம்  .இங்கு ஹோலி ராதா கிருஷ்ண் பாவத்துடன் கொண்டாடப்படுகிறது ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்து கண்ணன் தன் தாய் யசோதையிடம் சென்று”அம்மா நான் மட்டும் ஏன் கருப்பு  ராதா மட்டும் ஏன் இத்தனைச்சிகப்பு”என்றார் யசோதைக்குப் பதில் சொல்லத்  தெரியவில்லை .அப்போது கண்ணன் கருப்பு வர்ணம் குழைத்து அவள் முகத்தில் பூசி  அவளையும்  கருப்பாக்கினாராம்   .இது முதலிலேயே ராதாவின்  எண்ணமாக இருந்தது   .இதை  அறிந்து கொண்டு கண்ணன் இதைச் செய்து விளையாடினாராம்.   இதனால் இங்கு ஹோலியில் கலரைக் குழைத்து முகத்தில் பூசுகிறர்கள்.ஒருவர் யார் என்றே அடையாளம் சொல்ல முடிவத்தில்லை அத்தனை வண்ணக் கலவைகள்.இதைக்குறித்துத்  தான் “ராசலீலா” என்ற நடனம் உண்டாயிற்று . ஹிந்தி கவிஞர்   பிஹாரிலால் இது பற்றி அழகாக் கவிதைகள்: எழுதி இருக்கிறார் .
    மிக மட்ட ரகமாக் ஹோலி களிப்பது பீஹாரில் தான்  தண்ணிருக்கு பதிலாக சாணம் கரைத்து தலையில் ஊற்றுவார்கள் சில சமயம் அழுக்குத்தண்ணிரும் உண்டு பஸ்ஸில் உள்ளே சாணம் வீசி அடிப்பார்கள் நான் ஒரு தடவை கயா போய் வந்த போது  அவர்களிடமிருந்து தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது ,தவிர பெண்கள் வெளியே போகவே முடியாது. கொஞ்சமும் பாதுகாப்பு இருக்காது ,

    இந்த ஹோலி புராண கதையில் பிரஹ்லாதனும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்  .எதற்கும் அசையாமல் “ஒம்  நமோ நாராயணாய” என்று சிறுவன் பிரஹ்லாதன் சொல்லி வருகிறான். பல விதமான  தண்டனைக் கொடுத்தும் அவன் மனம் மாறவில்லை கடைசியில்  அவனைத் தீயை வளர்த்து அதில் அவனது அத்தை ஹோலிகா உடல் சுடாதபடி  ஒரு மாயப் போர்வைச்சுற்றிக்கொண்டு   அநத்த் தீயின் நடுவில் அமர்ந்தாள் பின் பிரஹ்லாதனையும் அழைத்தாள். பிரஹ்லாதன் அவள் மடியில் அமர்ந்து “ஒம் நமோ நாராயணாய” என்று ஜபிக்க ஹோலிகாவின் போர்வை கழண்டு பிரஹ்லாதனைச் சுற்றிக்கொண்டு விட்டது. பிரஹ்லாதனுக்கு ஒன்றும் ஆக வில்லை ஆனால் ஹோலிகா எரிந்து சாமபலானாள். இறக்கும் முன் ஹோலிகா தன்னை மன்னிக்கும்படி பிரஹ்லாதனைக் கேட்டுக் கொண்டாள்.தன் தவறுக்கு வருந்தினாள் இந்த ஞாபகமாகத்தான்  சோட்டி ஹோலியின் போது  கட்டைகள் போட்டு எரிய விடுகின்றனர்

    இதெ போல் இதைக் காமத்தகனம் என்றும் கொண்டாடுகின்றனர்  சிவனது தபத்தைக் கலைக்க வந்தக் காமனை தன் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விட்டார் சிவன் பின் அவனது மனைவி வந்து அழுது மன்னிப்ப்பு கேட்க அவளது கண்களுக்கு மட்டும் ரதி தென்படுவாள் என்று வரம் அளித்தார் “காதலுக்கு கண்ணில்லை என்று இதனால் தான் சொல்கிறார்களோ ?மதுராபிருந்தவன் துவாரகாவில்  கண்ணன் சிலலயும் விட்டு வைப்பதில்லை அந்தச் சிலையையும் பீச்சுக்குழலால் வர்ணங்கள் பீச்சி  கண்ணன்  ராதை போன்று வேஷம் தரித்து வயசு வேறுபாடின்றி  சிறுவர் முதல் வயதானவர் வரை  இந்த வண்ணக்க்லவையில் மிதந்து
    களிக்கின்றனர்.ஜாதி மதம் வித்தியாசமின்றி  ஏழைப் பணக்காரார் என்ற் பாகுபாடுமின்றி கொண்டாடும்  பண்டிகை இந்த ஹோலி ,,இதை இன்னும்  ஒரு ஒழுங்குடன்   ஒழுக்கத்துடன்கொண்டாடினால் மிகவும் நன்றாக இருக்கும்   .இந்த ஹோலியின் அருகிலேயே   கிருஸ்தவ திருநாள் புனித வெள்ளியும்  அத்துடன் முருகனுடய திருநாளான “பங்குனி உத்திரமும் வருகிறது இது முடிந்தவுடன்  ஜைன மதத்தின் தலைவர் ஸ்ரீ மகாவீர் ஜயந்தியும்   ,தலித் மக்களுக்கும் உரிமை வாங்கித்தந்து அவர்களது முன்னேற்றத்திற்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கரின்  பிறந்த நாள்  வருகிறது  இத்துடன் புரட்சிகவிஞர் திரு பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள் அத்துடன் அவரது  பிறந்த நாளும் எப்ரலில் வருகிறது.முஸ்லிம்  திருநாளும் இந்த மாதத்தில் வருகிறது “மிலாத் உன் நபி “என்ற் திருநாளும் மொஹிதின் ஆண்டவர் உர்ஸ் என்பதும்  வருகின்றன பல கோவில்களில் கொடியேற்றி ப்ங்குனி உத்திரம் திருவிழா நடப்பதும் இம்மாதத்தில் தான் தவிர ராம நாமத்தின்  பெருமையை உணர்த்தும்  ஸ்ரீ ராமநவமியும்  நம் பாப புண்யங்களைக் கணக்கெடுக்கும்  ஆடிட்டர் ஸ்ரீ சித்திரபுத்திரன்   பிறந்த
    சித்திராபௌர்ணமியும்  இந்த ஏப்ரலில் தான்  இதனால் தானோ வங்கியிலும் வருடக் கடைசி கணக்கு வழக்குகள் சரிப்பார்த்து முடித்து புதிதாக ஆரம்பிக்ககிறார்களோ என்னவோ?தவிர மாணவ மாணவிகள் பரீட்சை டென்சன் முடிந்து  சுதந்திரமாக கொண்டாடும் மாதமும் இதுதான் தவிர தெலுங்கு கன்னட மஹாராஷ்ட்ர  வருடபிறப்பும் தமிழ் ,பெங்காலி ஒரிஸ்ஸா மக்களின் வருடப் பிறப்பும்  இந்த ஏபரல் மாதத்தில் தான் வருகிறது ,இந்த வசந்தக் கால பல விதமான கலாச்சாரத் திருநாட்கள் வந்து ஏப்ரல் மாதத்தை மேலும் பெருமைப்படுத்துகிறது.

    Share