விசாலம்telegram-images

அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா? ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட  கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும்  வீரமா ? தந்தி மேல்  மோஹனம்  காந்தாரம் வரைச்சென்று வீரத்தை அள்ளி வழங்கும் .சோகமா ? வந்துவிடும் சுபபந்துவராளி , வராளி ஹிந்தோளம் போன்ற  ராகங்கள்..    முன்பெல்லாம்  யாராவது தேசத்தலைவர் மறைந்தால்  சட்டென்று கண்டுப்பிடிப்பது இந்த  ராகங்களில் தான் .  டிவி  முதன் முதலாக ஆரம்பித்த நேரம்   முக்கால்வாசி பேர் ரேடியோவையே பொழுது போக்காக கொண்டிருந்தனர் . அழகாக சினிமா பாடல்கள் பாட திடீரென்று அது நின்று போய் ஒரு  சோக ஒலி  வயலின்  மூலமாகவோ  வீணை சிதார் மூலமாகவோ திடீரென்று எழும்  “ஐயோ  ஏதோ ஒரு தலைவர்  காலமாகிவிட்டார் போலிருக்கு  ” என்று எல்லோரும் உன்னிப்பாக சோகத்துடன் செய்தி கேட்க தொடங்குவார்கள் .  சரி இந்த வீணைக்கு இப்போது வருவோம்

நான் சொல்ல வந்த வீணை  “டெலிகிராம்” . 1844 வருடம் திரு சாம்வேல் மார்ஸ் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உலக முழுதும் தன் தந்தியால்  நவரச பாவங்களை வழங்கி  பலரையும் உய்வித்த அந்த வீணை.    தற்போது அதற்கு ஒரு பெரிய பூட்டு போடப்பட்டு  தந்தியும்    அறுந்து நிற்கிறது ,      முதல் தந்தி   மே 24 வாஷிங்டன்னிலிருந்து  பல்டிமோருக்கு அனுப்பப்பட்டது   இந்தக்கண்டுப்பிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்
.
இதோ வருகிறார்  எங்கள் தெருவுக்கு வரும்  தந்திக்காரர்   அவரது உடையே தனி அழகுதான், காக்கி கலரில் பேன்ட்டும், ஷர்ட்டும் சட்டைப்பையின் மேல் புறம் ஒரு வில்லையும்,  பார்க்கவே பொது ஜன தோழன் என்பது நிதரிசனமாக தெரியும்   சைக்களை மிதித்தபடி  நேரம் ,காலம்  பார்க்காமல்  வருகிறார் . காலை ,மதியம்  அல்லது முன்னிரவு சுமார் பத்துவரை   அவரைப்பார்க்க   மனம் பக்  பக்கு என்றாலும்   காலை நேரம்    அவர் தரும் தந்தியை வாங்கும் தைரியம் இருக்கும் .  ஆனால் இதுவே தூங்கும் போது நடு நிசியில்  அவர் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் !   எங்கும் அமைதி .  இருள்   முன் வாசல் கேட்டை அவர் தட்ட வேண்டும் அது பாதுக்காப்பிற்காக பூட்டுப்போடப்பட்டிருக்கும். பாவம் அவரும் “சார் சார் என்றோ ஐயா என்றோ  வாசலை வேகமாக தட்டுவார் .     தூரத்திலிருந்து ஒரு கருப்பு   நாய் தன் பட்டன் போன்ற கண்களை உருட்டி இவரைக்குறி வைக்கும் .அந்த நாய் வருவதற்குள்  இங்கு கதவு திறக்கபடவேண்டும்    “சுப்பு என்ன இப்படி தூங்கற  ! வாசல்ல யாரோ கா மணியாய் உடைக்கிறா?தந்தியோ என்னவோ ” சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு வயிறெல்லாம பிசையறது “வரேம்மா “என்றபடி சுப்பு  வந்து கதவைத் திறக்கிறார் . தந்திக்காரர் தந்தியை நீட்டுகிறார். மனம் பதைபதைக்க கை நடுக்கத்துடன்  அதை வாங்குகிறார் .தந்திக்காரரும்  அதைப்பிரிக்கும்  வரை அங்கேயே நிற்கிறார் , ராஜி டைட்   டெலிவரி  ” என்ற வரிகள்  இருக்க  நாலு பக்கமும்   கரிய வரிகள் வரையப்பட்டுள்ளன   இந்தச்சந்தர்ப்பத்தைப்பார்த்தால்   நாதநாமக்கிரியா  ராகம் விணைத்தந்தியில் மீட்ட அது அப்படியே சோகத்தைக்கவ்விக்கொண்டு  அந்த வீட்டினுள் நுழைந்து அக்கம்பக்கத்திலும் பரவுவதைப்போல்  தோன்றும்  இந்த உணர்வு இந்தக்கால  ஈமெலில் கிடைக்குமா ?
அதே தந்திக்காரர் மறு நாள்  காலை அதே  தெருவில் நுழைகிறார் . மனம் மகிழ்ச்சியுடன்   “என்ன முரளி சௌக்கியமா? என்று கேட்டபடி  கதவைத்திறக்கிறார்.  முரளி வருகிறார் , ” என்ன தந்தியா ” மனதில் கொஞ்சம் கலக்கம் இருக்க கேட்கிறார்  ஆனால் தந்தியில் சிவப்பு கோடு நாலு பக்கம் இருக்க   “அப்பாடி” என்றபடி ஒரு மூச்சு   “.  வெட்டிங் பிக்ஸ்ட் ,  லெட்டர் பாலோஸ்    சன்  ஹரி ”   இப்போது தந்தி கொடுத்த ஒலி கல்யாணி ராகம்  அந்தத்தந்தியை வாங்கிக்கொண்ட உடனேயே  மகிழ்ச்சியின் உச்சிக்குப்போய் மேல் காந்தாரத்தைத் தொட்டு உள்ளத்தைச்சிலிர்க்க செய்கிறது     “ஸீவீட் எடுத்துக்கோங்கோ ” என்றபடி உள்ளே போகிறார் .  இந்த உணர்ச்சி    கணிணி மூலம் அனுப்பும் மடலுக்கு  ஏன் வருவதில்லை . ஒரு இடத்தில் உனர்ச்சியில்லாத இயந்திரம் வேலை செய்கிறது இன்னொரு இடத்தில் உணர்வுகளுடன் கூடிய மனிதன் நேரில் பங்கு பெறுகிறான்  இதே போல் பயம் .பீபத்ஸம்   வாத்ஸல்யம்  வீரம் ஹாஸ்யம்  என்று பல ரசங்கள்  இந்தத் தந்தி மூலம்   நான்   அனுபவித்திருக்கேன்  ஒரு தீபாவளியன்று காலை என் பாட்டி இறந்ததைத் தாங்கி வந்த தந்தி இன்றும் என் மனதில் மங்காது இடம் பெற்றிருக்கிறது
இந்தத் தந்தியே பல நேரத்தில் பலருக்கு உதவி  புரியும்  மூன்று நாட்கள் ஜாலியாக ஊட்டி போக ஆசை ஆனால் பாழாய்ப்போன ஆபீஸில் ஒரு லீவு கூட தரமாட்டேங்கறாளே “என்று அங்கலாய்க்கும் அம்பிக்கு  “மதர் சீரியஸ் ‘ என்ற தந்தி வந்து அவனுக்கு இந்த வாய்ப்பைக்கொடுக்கும் . சில சமயம்  தாத்தா இறந்துபோவார்   ஆனால் சில ஆபீஸர் இதைபுரிந்துக்கொண்டு ” ஏன் ரகு போனவருடமும் உன் தாத்தா காலமானாரே” என்று கேட்டபடியே லீவைத்தருவார் .சில பெற்றோர்களே இந்த வழியைச்சொல்லிக்கொடுப்பார்கள் , “டேய் ரகு இந்தத்தடவை பெண்பார்க்க கண்டிப்பாய் வந்துடு .  கல்யாணம் பிக்ஸ்  செய்யணும்
“அம்மா என் பாஸ் லீவே தரமாட்டாரே ”    ”   அதற்கென்ன  பாட்டி உடல் நிலை மோசம்  உடனே வா ” என்ற தந்தி அனுப்பறேன்  ” வடநாட்டில் ஆங்கிலத்தில்  தந்தி அனுப்ப சிலர் மிகவும் திணறுவார்கள்  அந்தத்தந்தியைப்படித்து சில விபரீதங்களும் ஏற்பட்டதுண்டு   ஒரு சர்தார் தன் அப்பா லண்டன் போனதைச்சொல்ல  தன் தாய்க்கு  தந்தி அனுப்பித்தான்     “டேடி  கான்   யெஸ்டெர்டெ  ஹீ ஈஸ் இன் த வெல்  daddy gone yesterday  He is in the well ”     தன் அப்பா லண்டன் போய்விட்டாரென்றும் அவர் நலம்    என்றும் அடிக்க நினைத்து இது போல் தகவல் அனுப்ப  அவனது தாய் அலறியடித்துக்கொண்டு உடனே கிளம்பி வர  ……….ஒரே அமர்க்களம் தான் போங்கள் .
இதே போல் ஒரு மாணவன்  தான்  காலேஜில் சேர்ந்ததை  ” அட்மிடெட்  இன் மெடிகல் ஆஸ்பிடல் . மெடிசன்  கிவன்  ”  என்று தன் விவசாயி அப்பாவுக்கு  தந்தி அனுப்பிக்க  அவரும் தன் நண்பர்கள் மூலம் விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டு   தன் மகன் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான் என மனம் பதைபதைக்க  தில்லி வந்தார் .  பார்த்தால் அவரது மகன் மெடிகல் சீட் கிடைத்த  குஷியில்  பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்   இது எப்படி இருக்கு ? கோயம்பத்தூரில் திரு ரத்ன சபாபதி கடந்த பல வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த வேலையைச்செய்து வந்தார் .அவர் ஆபீஸில் ஒரே நேரத்தில் அழுகையும் இருக்குமாம் சிரிப்பும் இருக்குமாம்  ஆங்கிலத்தில் பண்டில் ஆப் எமோஷன்ஸ் என்று சொல்வார்கள் . இதை உணர்ச்சிகளின் பிழம்புகள் என்று  சொல்லலாமா ?அவரது ஜோல்னாவில்  கொடுக்கவேண்டிய பல நிரம்பி இருக்கும் அதில் வாழ்த்துகள் . சோக செய்திகள் என்று பல கலந்து இருக்கும்  ஆனால் வருடங்கள் செல்ல கணினி வந்தப்பின் இது  அதிக அளவு குறைந்து ஜோல்னா பைக்கு அவசியமே இல்லாது ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டார்  தவிர  மிகச்சிலவு இல்லாமல்   மிக நம்பிக்கையுடன் அவசர செய்தியை அனுப்பும் சமாசாரமாகத்தான் இது இருந்தது என்பது உண்மை
தந்தியில் டபிள் எக்ஸ் டெலிகிராம்  மரண செய்தியைக்கொண்டிருக்கும் அதற்கு எப்போதுமே முதன்மை இடம் அதற்கு க்யூ நிற்க வேண்டாம்  கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இந்த லைனில் வேலைச்செய்து வரும் திரு அண்ணாதுரை தினமும் சுமார் 15 கிமீ சைக்கிளை மிதித்து  100 தந்தி வரை கொடுத்துமுடிப்பார். இவருக்கு சூறாவளி . அடைமழை,  கடும் வெயில்  எல்லாம் பழக்கப்பட்டு போய்விட்டன .இரவில் நாய் துரத்துவது தான் கொஞ்சம் சங்கடமான விஷயம் என்கிறார் இவர் . வேலை கடுமையாக இருந்தாலும் ‘ஜாப் ஸாடிஸ்பேக்‌ஷன் எனக்கு மிகவும் கிடைத்தது மனம் நிறைந்திருந்தது ”  என்றார் .

இந்திரங்களுடன் சேர்ந்து மனிதனே இயந்திரமாகி உணர்ச்சிகளில்லாத ரோபோவாகி வருகிறான் அண்ணன் தம்பி  பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய் தந்தையரிடமும் இயந்திரகதியில்  பேசி  தான் பேசாத நிலைக்கு ‘நோ டைம்’  என்று காரணமும்  காட்டி ,  அட கடவுளே   நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்   என நினைக்கத்தோன்றுகிறது    முதியோர் இல்லம்பெருகாமல் என்ன செய்யும் ?

படத்துக்கு நன்றி

http://frank-op.blogspot.in/2010/08/last-week-telegraph-started-bihar.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *