-விசாலம்

 

காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில் பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த சட்டியானதால் வந்திருக்குமோ? சரி அது போகட்டும். நான் இப்போது மொட்டைக்காளியைப்பற்றி சொல்கிறேன்.

ஐம்பதாண்டு முன் ……இதோ என் அம்மா கல்லுரலில் நீரில் ஊறிய அரிசியும் கொஞ்சம் வெந்தயமும் இட்டு நன்றாக நைஸாக அறைக்கிறாள். “கடக் கடக் ” என்ற ஒலிக்கேற்ப ‘சாமஜவரகமனா” என்ற ஹிந்தோள ராகப் பாடலை நான் பாடிப் பார்க்கிறேன்; தாளம் அழகாக அதில் அமர்கிறது. பாவம் அம்மா. இப்போது இருப்பதுபோல் மிக்ஸி இல்லாத நேரம் ஆனதால் வாரத்தில் ஐந்து நாட்களாவது இந்தக் கல்லுரலை அன்புடன் அணைத்துக் கொள்ள வேண்டும் இந்தக் காலமாக இருந்தால் கல்லுரலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் முன் காலத்தில் அரைப்பதும் தோய்ப்பதும் மிகவும் ரசித்துச் செய்யும் வேலையாக இருந்திருக்க வேண்டும் . அந்த வேலைகளில் இருந்த “அக்குபிரஷர்’ அவர்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியது. தவிர தன் குடும்ப அங்கத்தினர்களுக்கென்று அன்புடன் செய்யும் சமையல் மிகவும் ருசியாகவும் நல்ல சத்துடனும் இருந்தது. அதுவும் குடும்பத்தில் பல உறவுகளுடன் அமர்ந்து சாப்பிட மனதுக்குள் ஒரு நிறைவும் ஏற்பட்டது. தற்காலம்போல் டிவியில் ஒரு கண்ணும் வாயில் என்ன போகிறது என்று தெரியாமலே நன்கு மென்று சாப்பிடாமல் இயந்திர கதியில் கவளம் கவளமாக விழுங்கி ஆபீஸுக்கு ஓடும் காட்சி அந்தக் காலத்தில் இல்லை. அந்தக் காலத்திலும் ஆபீஸ் இருந்தது வேலை இருந்தது அத்துடன் ஒரு கட்டுப்பாடும் இருந்ததால் இரவு பத்து மணிக்குள் படுக்கை. காலை பிரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பு என்று வாழ்க்கை அமைந்ததில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருந்ததது .இதனால் பிரச்சனைகள் மிகக்குறைவாக இருந்தன. அப்படியே இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் மூத்த தலைவர்கள். தலைவிகள் அவைகளை எளிதாக தீர்த்து வைத்தனர்.

ஐயோ எங்கேயோ திசை மாறி போய் விட்டேன். நான் சொல்ல வந்தது எங்க வீட்டு “மொட்டைக்காளி”யைப் பற்றி ……….. ஆ..எங்கே விட்டேன் , என் அம்மா தோசைக்கு அரைக்கிறாளா…… ஆம் அந்தத் தோசை வெந்தயத் தோசை. வெந்தயம் கலந்திருப்பதால் ஒரு விதமான பளபளப்புடன் ரொம்ப சாப்டாக இருக்கும் .. வயிற்றுக்கு ரொம்ப நல்லது . இந்த “மொட்டைக்காளி” அடிப்பக்கம் வழவழவென்று திருப்பதியில் மொட்டை அடித்ததுபோல் இருக்கும் ஆனால் கருப்பு கலர். அது எப்படி கருப்பு கலர் ஆனது என்று தெரியவில்லை. இரும்பானதால் அப்படி ஆகியிருக்குமோ என்னவோ! ரொம்ப சின்ன சைஸ் தான் ஆனால் தூக்கினால் நல்ல கனமாக இருக்கும் இரண்டு பக்கமும் காது கிடையாது , தூக்க வேண்டுமென்றால் இடுக்கியால் தான் தூக்கிப் பிடிக்க வேண்டும். முதல் நாள் அரைத்த மாவை இதோ என் அம்மா ரெடியாக எடுத்து வருகிறார். நிதானமாக அடுப்பை எரியவிட்டு அதில் இந்த “மொட்டைக்காளி” யை அமர்த்துகிறார் பின் கொஞ்சம் எண்ணெயை அதில் ஊற்றுகிறார் கொஞ்சம் சூடு வந்தவுடனே “சொய்” என்ற சத்தத்துடன் ஒரு கரண்டி மாவை அதில் இடுகிறார் . பின் ஒரு பிடி வைத்த மூடியால் அந்தத்தோசையை மூடுகிறார் . சில வினாடிகளுக்குப்பிறகு அதைத்திறக்க ஆஹா என்ன டிசைன் தோசையின் மேல் அழகாக பல புள்ளிகள் விட்டுக்கொண்டு அதன் கலரும் வெந்தயக்கலராக மாற என் தாய் என் தந்தைக்குப்பிடிக்குமே என்று கொஞ்சம் நெய்யும் ஊற்றுகிறார். கமகமவென்று வாசனை அறையைச் சுழ்ந்து கொள்ள நாக்கில் ஜலம் ஊறுகிறது . பின் அதைத் திருப்பிப் போடாமல் எடுக்க அழகாக “கும்”மென்று உப்பிக் கொண்டு ஒரு பக்கம் பிரௌன் கலராக இருக்க மறுப்பக்கம் புள்ளி டிசைன் போட்டபடி அழகாக இருந்தது. கொஞ்சமாவது அடிப் பிடிக்க வேண்டுமே! தோசையின் சைஸ் ஒரு சின்ன பூரியின் அளவுதான் இருக்கும் இதற்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்த் துவையல் அல்லது வெங்காயத் துவையல் ரொம்பவே ருசியாக இருக்கும். சில சமயம் இத்துடன் வெல்லம் சேர்த்து இனிப்பு தோசையாகவும் செய்வதுண்டு, கொஞ்சமாக பகோடா போடவும் இது உபயோகமாகும் இந்த மொட்டைக்காளி க்கு என் வீட்டில் ஒரே சண்டை. வீட்டில் பலரும் அதை அபகரிக்க முயற்சித்தனர். வீட்டுப்பெண்களும் அதில் கண் வைத்தனர் . நானும் தான். ஆனால் அதிருஷ்டமில்லை.

அந்தச் சொத்து இன்னும் என் வீட்டில் என் தம்பியிடம் இருக்கிறது . பரம்பரையாக வரவேண்டுமென்பதால் வம்சத்தை வளர்க்கும் மகனுக்குத்தான் அந்தச் சொத்து சேருமாம் . அதே போல் நானும் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இந்த பழையகால “மொட்டைக்காளி” இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மொட்டைக்காளி

  1. Cast iron utensils are naturally porous, absorbing oil into their pores, and becoming nonstick over a period of time, if (and only if) regularly and meticulously cleaned after every use. These are prized possessions passed on through generations.

    சரி, சரி. இப்படி ஆங்கிலத்தில் அப்பப்போ உடான்ஸ் விட்டு பீரபட்டர் என்று பெயர் எடுத்தது போதும்.

    மொட்டைக்காளி – இதேபோல என்னிடம் ஒரு cast iron தோசைக்கல் உண்டு. மோரப்பம் (பணியாரம்) வார்க்கும் ஓடும் உண்டு.

    அந்தக் காலத்தில் ஸ்திரீகள் கல்லுரலை கட்டிக்கொண்டு அழுததால் ஜிம்முக்கு போகாமலேயே கட்டுடலோடு இருக்க முடிந்தது. இன்றளவும் எங்கள் இல்லத்தில் முடிந்தவரை அம்மிக்கல் தான். ஆரோக்யத்துக்கு ஆரோக்யம், கரண்டு செலவும் மிச்சம். 🙂

    புவனேஷ்வர்

  2. ஆங்க்க்க்……. சொல்ல மறந்தேனே…… கன்னிமாங்காய் (வடுமாங்காய்), கடுகுமாங்காய் சேமிக்கும் பரணி (பீங்கான் ஜாடி) கூட prized possession. அதற்கு கூட அங்கங்கே சண்டை, கண் வைத்தல், பங்கு போடுதல் நடந்ததாக/நடப்பதாக “கேள்வி” 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.