வெ.திவாகர்
சென்ற வாரம் ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, ‘தம்’மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ஒன்றாவது மாடியில் இருந்து இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் கூட்டை விட்டு அவள் உயிர் போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நமக்கு சம்பந்தமில்லாதவள்தான்.. இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏதோ தகராறு போல.. தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் உயிரைத் தானே இப்படி மாய்த்துக்கொண்ட சோகம் இன்னமும் என் மனத்தை விட்டு விலகவில்லை..
எத்தனைதான் இருந்தாலும் உயிர் என்ன அத்தனை மலிவா.. சடக்கென்று நினைத்தமட்டில் உதறிக்கொள்ள, அது என்ன அன்னப் பறவையா.. நீரில் வந்ததால் படர்ந்த ஈரத்தை சிறகடித்துப் போக்கிக் கொள்ளுவதைப்போல நினைத்த மாத்திரத்தில் நீக்கிக்கொள்ள முடியுமா.. இறைவன் கொடுத்த உயிரை இறைவனே எடுத்துக்கொள்ளும்வரை பொறுத்திருக்க வேண்டாமா.. நம்முடைய உடலில் உள்ள நம்முயிர்தான் அது.. ஆனாலும் நமக்கென்ன உரிமை அதன் மீது? மனிதனுக்கு அந்த உரிமை இல்லை என்றுதான் பெரியவர்கள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகிறார்கள். உயிர் வரும்போது அதை உணரும் அளவுக்குத்தான் மனிதனுக்கு உரிமை உண்டு என்றுதானே சொல்லி வருகிறார்கள். அந்த உயிர்உள்ள உடல் நீண்டகாலம் நிலைக்கவேண்டும் என்பதால்தானே இந்த உலகமே இத்தனை அல்லாடுகின்றது. உடலிலிருந்து முடிந்தவரை, உயிர் போக விடக்கூடாது என்றுதானே உலகத்து மருந்துகள், மாத்திரைகள், மருத்துவர்கள் என்று கோடிக்கணக்கானவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
சென்று போனவள் எப்படியோ போய்விட்டாலும் எத்தனை கேள்விகளை விதைத்துவிட்டுப் போய்விட்டாள். ஆனால் இதற்கான விடையை அன்பர் சுந்தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு மடலில் கவிதையாக எழுதி அனுப்பி இருந்தார். இதோ சுந்தர்ஜியின் கவிதை உங்கள் பார்வைக்கு:
எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.
ஓணானுக்கும்
தட்டானுக்கும் ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.
பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றை அடி.
நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.
மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.
மீனுக்குப் புழு.
யானைக்குப் பெரும்பள்ளம்.
மானுக்கு ஒற்றைக் குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும் பாரம்.
ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.
சுந்தர்ஜியின் கவிதையைப் படித்ததும் எத்தனை அருமையான விவரிப்பு என்றுதான் எனக்குப் பட்டது. மரணம் என்ற ஒன்றைப் பற்றி மனிதனுக்கு மட்டுமே உணர்வு உண்டு. அந்த உணர்வு உணரப்படுவதால் மனிதப் பிறவியை நல்ல விதத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அந்தப் பிறவியைப் பயன்படுத்தி இன்னமும் மேல்நிலை அடையவேண்டும் என்பதுதான் இறைவன் விதித்த விதி. அந்த உணர்வை மதிக்காதவர் அருமையான இந்தப் பிறவியைப் பாழாக்கிக்கொண்டார்களே என்றுதான் வருத்தப்பட வைக்கிறது.
நல்லதொரு விவரணையைக் கொடுத்த திரு. சுந்தர்ஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவர் மேலும் மேலும் பல கவிதைகள் தரவேண்டும் என்பது என் விருப்பம். அவருக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத் திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி – (திருமதி பவளசங்கரியின் ‘வெற்றிக் கனியைத் எட்டிப் பறிப்போமா’ என்ற கட்டுரையில் பார்த்தது)

Leave a Reply