Advertisements
இலக்கியம்சிறுகதைகள்

வினையான விளையாட்டு

    பி.தமிழ் முகில் நீலமேகம்

      வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் பயின்று வந்தாள். கல்வி, கலை என அனைத்துத் துறைகளிலும் திறமை வாய்ந்தவள்.குறும்புத்தனமும் சூட்டிகையும் நிறைந்தவளும் கூட.எப்போதும் கலகலப்பாய் வளைய வரும் அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் கூட்டம் நிரம்பி வழியும். பந்தயம் கட்டி ஜெயிப்பதென்றால் அதிலோர் தனி ஆர்வம் அவளுக்கு.

   அந்தக் கல்லூரியில் கட்டுப்பாடுகள் அதிகம்.நூலகத்திற்கு செல்வதாகட்டும், கணிப்பொறி மையத்தினை பயன்படுத்துவதாகட்டும், அடையாள அட்டை இல்லாமல் உள்ளே நுழைய எவருக்கும் அனுமதி கிடையாது.ஒருமுறை, தோழிகளிடம்

நான் லைப்ரரி கார்ட் இல்லாம லைப்ரரிக்கு போய் ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வந்து காமிக்கறேன்.என்ன பெட்?” என்றாள்.

சரி.நீ போய்ட்டு வந்தீன்னா உனக்கு ஒரு டைரி மில்க் சாக்லேட்” என்று தோழிகளும் சொல்ல, “சரி” என்று கூறியவள் நூலகத்தினை நோக்கி நடந்தாள்.அனைவரும் எதிர்பார்த்தபடியே நூலக வாசலிலேயே அவள் நிறுத்தப் பட்டாள்.

லைப்ரரி கார்ட் எங்க?” என்றார் அங்கிருந்த அட்டென்டர்.

இல்லைக்கா, எங்க மேடம் என்னை வரச்சொன்னாங்க” என்றதும், அவள் உள்ளே அனுமதிக்கப் பட்டாள்.

உள்ளே சென்ற அவள், அங்கு தனது விரிவுரையாளரைக் கண்டதும் திகைத்தாள்.ஒருவாறு,  சகஜ நிலைக்கு வந்தவள்,

குட் ஆஃப்டர்னூன் மேம்” என்றுவிட்டு, “மேம், எனக்கு ரெஃபெரென்ஸ் புக் வேணும்.அடுத்த மாசம் செமினார்க்கு நிறைய நோட்ஸ் எடுக்கனும்.ஆனா, ஸ்டூடன்ட்ஸ்க்கு ரெஃபெரென்ஸ் புக்ஸ் தரமாட்டாங்க.நீங்க எடுத்து தந்தீங்கன்னா, நோட்ஸ் எடுத்துட்டு ரெண்டு நாள்ல குடுத்துடறேன் மேம்” என்றாள்.

        ஆசிரியையும் அவளுக்கு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.அதை வாங்கிக் கொண்டு அவள் வெளியே வர, அன்று அவளுக்கு பந்தயத்தில் ஜெயித்ததற்கு ஒரு சாக்லேட் கிடைத்தது.

        ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும்.அன்று மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், தோழிகள்  அனைவரும்  மரத்தடியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அவசர அவசரமாய் மூச்சிரைக்க ஓடி வந்தாள்  ரஞ்சனி.

என்னடி? இப்படி மூச்சிரைக்க ஓடி  வர்ற ? என்னாச்சு? ” என்றாள் வள்ளி.

ஏய், இன்னைக்கி ஹாஸ்டல்ல ரூம் செக்கிங் பண்ண வர்றாங்களாம்” என்று  பதட்டதுடன்  கூறினாள்.

அதனால என்னடி? எதுக்கு இப்படி பயப்படற? ” என்றாள் வனிதா.

                     “நான் அடுத்த வாரம் நடக்க இருக்கற  கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம்க்கு, நாம போடப்போற கிராமிய நடனத்துக்கு தேவையான பட்டு சேலை,நகைகள் எல்லாம் வெச்சிருக்கேன். ரூம் செக்கிங் அப்போ பாத்தாங்கன்னா  காஸ்ட்லி திங்க்ஸ் வெச்சிருக்கறதுக்காக  ஃபைன்  போட்டுடுவாங்க.அது போக நான் இன்னும் நிறைய இங்கிலீஷ் நாவல் எல்லாம் வெச்சிருக்கேன்.பாட புத்தகங்களைத் தவிர வேற புத்தகங்கள் வெச்சிருந்தா எல்லா பொருட்களையும் வாங்கி வெச்சுடுவாங்க.அதுக்கு பிறகு அப்பா வந்து ஹாஸ்டல்  வார்டனை பார்த்து ஃபைன்  கட்டின பிறகு தான்  பொருளெல்லாம் தருவாங்க. அதுவும் போதாதுன்னு, ஒரு மாசம் காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க விட மாட்டாங்க.நானும் வெளியூர்ல இருந்து எப்படி தினமும்  காலேஜ்க்கு வந்துட்டு போறது?”

             ஒரு பிரச்சனையும் ஆகாதுடி.எதுக்கு கவலைப்படற?” என்ற வனிதா சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.நேரமானபடியால், தோழிகள்  அனைவரும் ஒவ்வொருவராய் கிளம்ப ஆரம்பித்தார்கள்.ஒருத்தி, “நான் ரூம்க்கு போய் என் திங்க்ஸ் எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைக்கறேன்.ரூம் செக்கிங் ன்னு பேச்சு அடிபடுதுல்ல.அப்புறம் திங்க்ஸ் ஒழுங்கா இல்லைன்னு கூட சில சமயம் ஃபைன்  போட்டுடுவாங்க.” என்றவாறு கிளம்பிச் சென்றாள்.மற்ற மாணவியர், ” நான் காலேஜ் பஸ்க்கு  போய் நிக்கறேன். இப்போ போய் நின்னாத் தான் ரெண்டு ட்ரிப் கழிச்சாவது வீட்டுக்கு போக முடியும்.” என்று கிளம்பிச் சென்றனர்.

          ஏதோ சிந்தனையில்  ஆழ்ந்தவள் போலிருந்த வனிதா, ” இருங்கடி.இதோ  வந்துடறேன்” என்றவாறு விறுவிறுவென்று  நூலகத்தின்  மாடிக்குச் சென்றாள். இப்பொதெதுக்கு செல்கிறாள் ? நூலகம் பூட்டும் நேரமாயிற்றே என்றெண்ணியபடி  அனைவரும் நிற்க, “இந்நேரம் எங்கடி போற? ” என்றொருத்தி கேட்க, “வந்துடறேன் இரு” என்று பதில் கூறிவிட்டு  சென்றாள் .

            நூலகத்தின் ஐந்தாவது தளமான மொட்டை மாடிக்குச் சென்றவள், அங்கிருந்து தன்  தோழிகளை அழைத்து கையசைத்தாள்.

இந்நேரத்தில் எதற்கு அங்கு போனாள் ? “  என்று தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைப்பிடிச் சுவற்றின் மீது ஏறி  அமர்ந்தாள்  வனிதா. தோழியின் செய்கையைப் பார்த்து அதிர்ந்தவர்களாய்  ” ஏய் ! என்னடி பண்ற? ஏன்  அங்க ஏறி உக்காந்திருக்க?” என்றனைவரும் அலற   ” ஒரு பதினைந்து நிமிஷம்டீ , வந்துடறேன் ” என்றாள் .

              இதற்குள், யாரோ நூலகத்தின் மாடியில், தடை செய்யப்பட்ட  பகுதியில் சுவற்றின் மீதேறி அமர்ந்து இருப்பதறிந்த ஆசிரியைகள் அங்கு வந்து விட்டனர். ஹாஸ்டல் பொறுப்பாசிரியர்கள் அனைவரும் என்ன ஆனதோ ஏதானதோ என்ற பரபரப்புடன் அங்கு ஓடி வந்தனர்.என்னாயிற்று, ஏதாயிற்று என்று பரபரப்புடன் விசாரித்தனர்.கூட்டம் சேர்ந்து வருவதைக் கண்ட வனிதாவிற்கு உள்ளூர  “ஒருவாறு இன்றைக்கு ஹாஸ்டலில் நடக்கவிருந்த  ரூம் செக்கிங் நடக்காதவாறு பரபரப்பை  செய்து விட்டோம். இந்த பரபரப்பு அடங்கி, அவர்கள் செக்கிங் ஆரம்பிக்க இன்று முடியாது. இனிமேல் செக்கிங் வருவதாய் இருந்தாலும், அவளது பொருட்களை நாம் வாங்கிச் சென்று, வீட்டில் வைத்திருந்துவிட்டு, அவள் ஊருக்குச் செல்லும் போது  கொடுத்துவிடலாம்” என்று எண்ணியவாறு இறங்க எத்தனித்தவள், நிலை தடுமாற ஆரம்பித்து விட்டாள் . மேலிருந்து கீழே பார்த்து  பேசிக் கொண்டு நின்றதில், அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. தடுமாறி கைப்பிடிச் சுவரைப் பிடிக்க எத்தனித்தவள், எவரும் எதிர்பாராவண்ணம் கண்ணிமைக்கும் நேரத்தில், மாடியிலிருந்து விழுந்து விட்டாள் .

                      ஐயோ ” என்று  அலறியபடி விழுந்தவள் , எழுந்து கொள்ள எத்தனித்த போது, ஏதோ தன் உடலின் கீழ்ப்பகுதி மிகவும் இலேசாகிப் போனது போல் உணர்ந்தாள்.வலது கையை  தரையில் ஊன்றி எழுவதற்கு எத்தனித்தவள், கைகளை தரையில் வைத்ததற்கான உணர்வுகளே இல்லையே என்றெண்ணி கையைப் பார்த்தாள்.அப்போது ஓர் ஆசிரியர், ” என்னம்மா ! என்னாச்சு? என்ன செய்யுது உனக்கு? ” என்றலற, அவள் விழுந்த இடத்தில், அவள் உடலிலிருந்து ஏதோ நீராய்க் கசிந்திருக்க, “என்னாச்சுடீ உனக்கு? கீழ பாரு” என்று தோழிகள் அலற, அங்கு கண்டவள், சிறுநீர் தன்னிச்சையாய் வெளியேறுவதைக் கண்டதும் படபடப்பானாள். “ஐயோ! என்னால எழுந்திருக்க முடியலையே. என் கை, கால்ல உணர்ச்சியே இல்லையே ! ” என்றரற்றினாள்.

          அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்சில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்துச் செல்லப் பட்டாள்.அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், ” அதிகமான எலும்பு முறிவு, அதிர்ச்சி, இவற்றினால  உணர்விழந்திருக்காங்க. எங்களால முடிந்தவரை நாங்கள் சிகிச்சை செய்யறோம். அதற்கு மேல் ஆண்டவன் தான் காப்பாற்றனும்.” என்று கூறி விட்டனர். 

               கலையும் கற்பனையும் ஒருங்கே இணைந்தவோர் எழில் ஓவியத்தில் வண்ணக் கலவைகள் கொட்டி விட்டால் அது எந்நிலையில் இருக்குமோ, அதே நிலையில் தான் இருந்தாள் வனிதா. அவளது தாய் அன்னபூரணிக்கும் தந்தை கமலக்கண்ணனுக்கும் கண்களில் நீர் கரைபுரண்டோடியது.நினைவு தப்பிப் போய், உணர்விழந்தவளாய் கிடக்கும் மகளிற்கோர் வழி பிறந்திடாதா, என்றேங்கினர் அவளைப் பெற்றவர்கள்.

            தன்னைச் சுற்றிலும் நடப்பதை உணர்ந்து கொள்ள முடியாதவளாய் சிதிலமடைந்த ஓவியமென கட்டிலில் வீழ்ந்து கிடந்தாள் வனிதா.

                                

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here