தேமொழி

 

என்ன ஒரு செக்கச் சிவப்பு
கண்ணைக் கவரும் வாளிப்பு
மதியை மயக்கும் வனப்பு
அழகிய பளபளப்பு மினுமினுப்பு
பார்த்தாலே தெரியும் உன் மேன்மை
பரவசமூட்டுவதோ உனது புதுமை
உனையடைய விழைவதும் உண்மை
அடைந்தாலோ கிடைத்திடும் பெருமை

உன் இளமை, உன் வேகம்
உன் ஆற்றல், உன் விவேகம்
யாவும் அனைவரும் அறிவர்
அனைவரின் விருப்பமும் நீயே
அருகில் நின்று மயக்கும்
உனை ஒப்பிடுகிறேன்
தொலைவில் எனக்காகவே
காத்திருக்கும் எனதன்புடன்

இளமை இழந்து
தளர்ந்த உடல்தான்
புதுமையும் வேகமும்
உன்போல் இல்லைதான்
அன்று என் கல்லூரி காலத்தில்
தொடங்கிய சொந்தம் அது
இன்றும் என் குழந்களைச் சுமந்து
பள்ளியில் சேர்க்கும் பந்தம் அது

விட்டுப் பிரிவேனோ என்று
எந்நேரத்திலும் தடங்கலின்றி
நம்பிக்கையுடன் வேலைக்குச்
செல்லத் தயாராக உதவிடும் பாங்கு
கடும்பனி, காற்று, வெயில், மழை
அனைத்திலிருந்தும் கொடுத்த
அக்கறை நிறைந்த பாதுகாப்பை
நன்றியுடன் நினைக்கிறது மனம்

என்றும் எனதன்பை உன்னுடன்
ஒப்பிடவே முடியாது என்னால்
பிரிந்துவர நினைக்கவும் இயலாது
அன்பை நோக்கி விரைகிறது
எனது கால்கள் வெளியில்
அழகு காத்திருக்கிறது அங்கே
சிற்றுந்து விற்பனையாளரின்
குளிரூட்டிய காட்சி அறையில்

 

 

 

படம் உதவி:  http://www.graceorlando.com/wp-content/uploads/2013/05/OldCar-NewCarBulletinCover.jpg

5 thoughts on “அவளா? இவளா?

 1. அவளும் அழகு இவளும் அழகு. ஆனால் என்றைக்கும் ஓல்ட் இஸ் கோல்ட்

  ///இளமை இழந்து
  தளர்ந்த உடல்தான்
  புதுமையும் வேகமும்
  உன்போல் இல்லைதான்////

  நாம் நேசித்த ஒன்று பழயதாயானாலும் நம் பிரியம் மட்டும் குறையாது என்பதை அழகாய் எடுத்துச்செல்லும் இந்த வரிகள் அருமை.

 2. சூப்பரு… அருமையான கவிதை தேமொழி. உயிரற்ற பொருளாயினும் நமக்கு உதவிடும் பாங்கில் உள்ளத்தோடு ஒன்றிவிடுவதை தெள்ளென விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!!!.

 3. கவிதையைப் படித்து, ரசித்து, பாராட்டிக் கருத்துரைத்த தனுசுக்கும் பார்வதிக்கும் மிக்க நன்றி.

  அன்புடன்
  ….. தேமொழி

 4. அவளா? இவளா?  என்று சிற்றுந்தை உந்திய வித்தியாசமான கவிதை!
  முடிவில் தான் பாடல் நாயகியின் அறிமுகம்.
   சில உறுமல்களுக்கு பின் கிளம்பும் பாணியில்! பாராட்டுகள்!
  அவளா? இவளா?  என்றால் வஞ்சிக்கோட்டைவாலிபன் நடனப்போட்டி மாதிரி
  அம்மாவா?மனைவியா?
  மாமியா?மாட்டுபெண்ணா?
  கர்நாடகமா?நவீனமா?
  ஆடையா?அணிகலனா?
  கணினியா?கைப்பேசியா?
  தாய்நாடா?தானிருக்கும்நாடா?
  தமிழா?ஆங்கிலமா?
  ருப்பியா?டாலரா?
  என்று பட்டிமண்டபக் கண்ணோட்டத்தில் நினைத்துக்கொண்டேன்!

 5. பாராட்டுக்களுக்கு நன்றி திரு. சத்திய மணி அவர்களே, உங்ளைப் போன்ற கவிஞர்களிடம் இருந்தும் என் கவிதை கருத்துரை பெற்றது மிகவும் ஊக்கமூட்டுகிறது, நன்றி.

  அன்புடன்
  ….. தேமொழி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க