அன்பே அழகானது – 4
ராஜ்ப்ரியன்
கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் வைத்தவர்களும் பார்த்தனர். யாரும் தன் பின்னால் இல்லை என்பதை கண்ட மதன் திரும்பி வணக்கம் வைத்தவர்களிடம் எனக்கு தான் வணக்கம் வச்சிங்களா என கேட்க எல்லாரும் சிரித்தனர்.
என்ன புதுசா எழுந்து நின்னு வணக்கம் வைக்கறிங்க என கேட்டபடியே மதன் உள்ளே வந்தான்.
சும்மா தான் சார் என்றாள் மஞ்சு. அருகே பாண்டியன், ரேவதி, கீதா, ஸ்ரீதர் நின்றிருந்தனர்.
மத்தவங்களுக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொன்னாலே போதும். ஸ்கூல் வாத்தியார்க்கு சொல்றமாதிரி எழுந்து நின்னு சொல்றதெல்லாம் வேணாம். வெளியாளுங்களுக்கு தான் நான் எம்.டி. மத்தப்;படி இங்க வேலை பாக்கற ஏழு பேர்ல நானும் ஒருத்தன் சரியா என கேட்க.
சரி சார் என தலையாட்டினர்கள் சிரித்தபடி.
பிரபு எங்க ?.
உங்க ரூம்ல சார் என்றாள் மஞ்சு.
கதவை திறந்து உள்ளே போனதும் ஃசேரில் அமர்ந்திருந்த பிரபுவிடம் ஒரு எம்.டி வர்றன் எழுந்து நின்னு வணக்கம் வைக்கறதில்லையா?.
செருப்ப கழட்டி தான் வைக்கனும்.
அப்பறம் எதுக்கு மத்தவங்கள எழுந்து வணக்கம் வைக்க சொன்ன.
சத்தியம்மா நான் சொல்லலடா.
அப்பறம் என்ன புதுசா எழுந்து வணக்கம் வைக்கறாங்க என சந்தேகமா கேட்டதும்
அதுவா, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கிளையண்ட் ஆபிஸ்க்கு வந்து பார்த்துயிருக்காரு. நீயும் இல்ல, நானும் இல்லன்னதும் எனக்கு கால் பண்ணாரு. நான் வேகமா ஆபிஸ்க்கு வந்தன். எல்லாரும் உட்கார்ந்தபடி எனக்கு வணக்கம் வச்சத பாத்தவரு இது என்ன ஆபிஸா? இல்ல டீ கடையா? ஒரு மேனேஜர் வர்றார் மரியாதை இல்லாம உட்கார்ந்துக்கிட்டு வணக்கம் வச்சா என்ன அர்த்தம், நீங்க சரியில்ல, உங்க எம்.டி வரட்டும் பேசிக்கறன்னு கோபமா கர்ஜித்தாரு. அத கேட்டு எல்லோரும் மரியாதை ராமன்களா மாறிட்டாங்க.
யார்ரா அந்த ஆபிஸர் ?.
உங்கிட்ட பேசுவாரு அப்ப தெரிஞ்சிக்க என சிரித்தவன் அதெல்லாம் இருக்கட்டும் என்னச்சொல்றான் உன் பையன்.
காலையில ஸ்கூல் போகும்போதே உம்முன்னு போயிருக்கான்.
ஏன்
ஃபைக்ல அழைச்சிப் போய் விடுன்னான், வேலையிருக்குடான்னு சொன்னன் அதான் கோபமா போயிருக்கான்.
மதியம் லஞ்ச்.
வாங்கிப் போய்த்தான் தரணும்.
அதுக்கு தான் நாங்க சொல்றத கேளுடாங்கறோம்.
டேய் சாமி காலையிலயே ஆரம்பிச்சி கடுப்பேத்தாத என்றபடியே கொஞ்சம் எல்லாரையும் உள்ளவரச்சொல்லு. பிரபு எழுந்து போய் தகவல் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அக்கவுண்டன்ட் மஞ்சு, சீனியர் டிசைனர் பாண்டியன், டிசைனர்கள் கீதா, ரேவதி, விளம்பர பொறுப்பாளர் ஸ்ரீதர் என அனைவரும் அவன் முன் அமர்ந்திருந்தனர்.
எப்படி நடந்துக்கிட்டு இருக்கு வேலையெல்லாம் ?.
சார் இந்த மாசம் வர வேண்டிய பில் நிறைய பென்டிங் இருக்கு சார் என்றாள் மஞ்சு.
ஸ்ரீதரை பார்த்ததும், காலேஜ், ஸ்கூல் அட்மிஷன் இப்பத்தான் நடக்குது பாஸ். ஏப்ரல், மே, ஜீன் மாசம் பில் எல்லாம் ஜீலைல தான் தருவோம்ன்னு சொல்லிட்டாங்க.
அவுங்க ஜீலையில தந்தா எப்படி நாம ஆபிஸ்ச ரன் பண்றது என பிரபு கேட்க ஸ்ரீதர் மவுனமாகவே இருந்தான்.
அடிக்கடி கரண்ட் கட் பண்றதால பேட்டரி பேக்கப் நாலு மணி நேரம் கூட வரமாட்டேன்குது இதனால ஓர்க் நிறைய பென்டிங்ல கிடக்கு. பெரிய யூ.பி.எஸ்சா போட்டா நல்லாயிருக்கும் சார் என்றான் பாண்டியன்.
செய்துடலாம் பாண்டியா.
வேற ஏதாவது என கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். சரி நான் அழைச்ச விஷயம் வேற. இப்ப நாம விளம்பரம் டிசைன் செய்து தர்றது, அத பேப்பர்களுக்கு தர்றது, பிரஸ் மீட் அரேஞ்ச் பண்றதுன்னு இருக்கோம். நாம அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி. நாம புதுசா டிஸ்ப்ளே விளம்பரம் செய்யலாம்ன்னு ஓரு ஐடியா.
டிஸ்ப்ளே விளம்பரம்ன்னா என்ன சார் என ரேவதி கேட்க அனைவருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது முகத்திலேயே தெரிந்தது.
நகரத்தோட மையத்தல, மக்கள் நடமாட்டம் அதிகமாயிருக்கற பகுதியில இருக்கற பில்டிங்கோட மாடியில பத்துக்கு பத்து அளவுல எல்.இ.டி டிஸ்ப்ளே வச்சி விளம்பரம் ஓடவிடறது. நைட், பகல்ன்னு எல்லா நேரமும் ஓடிக்கிட்டு இருக்கும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர் பகுதியில வச்சியிருக்காங்க. இதல டெக்ஸ்ட் மட்டும் டிஸ்ப்ளே பண்ற மாதிரியும்மிருக்கு, வீடியோவ ஓடறமாதிரியும் இருக்கு. இப்ப வீடியோ ஓடறமாதிரி வச்சா தான் நல்லாயிருக்கும். நாம யாருக்கும் விளம்பரம் தர தேவையில்ல. நம்மை தேடி விளம்பரம் வரும் எப்படி என சொல்லி நிறுத்தியதும்.
சூப்பர் ஐடியா பாஸ் என குதுகலித்தான் ஸ்ரீதர்.
ஐடியா நல்லாத்தான் இருக்கு வருமானம் வருமா என இழுத்தான் பிரபு.
நல்லா சம்பாதிக்கலாம் சார் என பிரபுவுக்கு பதில் தந்தான் ஸ்ரீதர்.
ஓன் டைம் இன்வஸ்மென்ட். சிஸ்டத்தல ப்ரோகிராம் பண்ணிட்டோம்ன்னா ஆட்டோமேட்டிக்கா விளம்பரம் போய்க்கிட்டு இருக்கும். நமக்கு செலவுன்னு பாத்தா பில்டிங் வாடகையும், ஈ.பி பில்லும் தான் நீங்க ஓ.கேன்னு சொன்னா இறங்கிடலாம் எனச்சொன்னதும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். மவுனத்தை கலைத்து என்ன பாண்டியன் ஓ.கேவா இறங்கலாமா என கேட்டதும்
இறங்கலாம் தான் சார். ஆனா அத பாத்துக்க ஒருத்தர் போய்ட்டா இங்க வேலை அதிகமாயிடும் சார்.
பிரச்சனையில்ல பாண்டியன் யாராவது பசங்கயிருந்தா இரண்டு பேரை பாருங்க வேலைக்கு வச்சிக்கலாம்.
அப்ப ஓ.கே சார்.
அப்படியே டவுன்க்குள்ள எங்கயாவுது நல்ல இடம் கிடைக்குதான்னு பாருங்க.
சரி சார்.
ஒ.கே எல்லாரும் போய் வேலை பாருங்க என்றதும் அனைவரும் எழுந்துச்சென்றனர். கீதா மட்டும் சைலண்டாக எழுந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது.
வெளியேற முயன்ற மஞ்சுவை அழைத்து அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌண்ட் இருக்கும்.
ஒரு லட்சம் இருக்கும் சார்.
ஓ.கே என தலையாட்டியதும் கதவை சாத்திவிட்டு சென்றாள்.
பிரபுவை பார்த்து மேனேஜர் சார் என அழைத்ததும்
சொல்லுடா என்றான் கோபமான குரலில்.
என்னடா அதுக்குள்ள கோபம்.
புதுசா ஒரு ஓர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்றதில்லயா என கேட்டான் அதே கோபமான குரலில்.
காலையில மதுரை கள்ளழகர் திருவிழா டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்பத்தான் மதுரையில ஒரு இடத்தல டிஸ்ப்ளே விளம்பரம் ஓடறத பாத்தேன். நாமளும் பண்ணலாம்மேன்னு ஐடியா வந்ததும் சென்னையில இருக்கற ஒருத்தர்க்கு போன் பண்ணி தகவல் கேட்டேன் அவர் அவருக்கு தெரிஞ்சத சொன்னாரு. அதான் பண்ணா நல்லாயிருக்கும்மான்னு ஐடியா கேட்டேன். நீ என்னவோ வேலைய ஆரம்பிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கறமாதிரி பேசற என்றதும் கொஞ்சம் சாந்தமானவனிடம் நெட்ல அதப்பத்தின தகவல்கள தேடி எடுத்து வை. நான் போய் யூ.பி.எஸ் பத்தி விசாரிச்சிட்டு வர்றன்.
டிசைன் வேலையும் பாக்கணும், இதயும் பாக்கணும்ன்னா என்னடா அர்த்தம்.
சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்தல வச்சிக்கிட்டு வேலையப்பாருங்க எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
யூ.பி.எஸ் மாடல்கள், ரேட், பேட்டரி, வாரண்டி பற்றி விசாரித்துவிட்டு, சில முக்கிய கிளையன்டுகளை பார்த்துவிட்டு அலுவலகம் வந்தபோது மதியம் மூன்றாகி இருந்தது. பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நினைவுக்கு வந்தான் ரஞ்சித். ஆஹா வேலை டென்ஷன்ல மறந்து போயாச்சே என நெஞ்சு பரபரக்க அலுவலகத்தில் இருந்து பள்ளியை நோக்கி வண்டியை விரட்டினேன். பள்ளி கேட் முன் வண்டியை நிறுத்தியதும் ஸ்கூல் விடற டைம் சார் வண்டிய ஓரம்மா விடுங்க என்றார் வாட்ச்மேன். அவர் சொல்லும் போதே மணியடித்தது பிள்ளைகள் ஓடிவர காத்திருந்த அவர்களது அம்மாக்களோடு ஒவ்வொரு பிள்ளைகளும் சென்றது.
ரஞ்சித்தை கண்கள் தேடியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள சார் என்ற குரல் காதருகே கேட்க திரும்பினேன். ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தவர், என்ன சார் நீங்களே வந்துயிருக்கிங்க.
இல்ல மணிண்ணே. காலையில லேட்டானதால மதியம் லஞ்ச் வாங்கி எடுத்துக்கிட்டு வர்றன்னு சொல்லியிருந்தன், வேலை டென்சன்ல மறந்துட்டன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. அதான் என இழுத்ததும் என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க. எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வாங்கி வந்து தந்துருப்பனே என்றார்.
பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பிள்ளைகள் வருவதை பார்க்க தொடங்கினேன். ஒரு பையனோடு ரஞ்சித் சிரித்து பேசிக்கொண்டு வருவது காண முடிந்தது. தூரத்தில் இருந்து என்னை பார்த்தவன் கை அசைத்தான். நானும் பதிலுக்கு கை அசைத்ததும் ஓடிவந்தான். தன்னுடன் வந்தவனை காட்டி டாடி நானும், இவனும் ஓரே க்ளாஸ். வினய்ன்னு பேரு என்றான்.
ஹாய் அங்கிள் என்றவன் ஆட்டோ நிக்குது அங்கிள் நான் கிளம்பறன். ரஞ்சித்க்கு டாட்டா காட்டிவிட்டு சென்றான்.
ரஞ்சித் என் முகத்தை பார்க்க நான் அவனிடம், ஸாரிடா. ஓர்க் டென்ஷன்ல மதியம் லஞ்ச்சோட வர்றன்னு சொன்னத மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்மில்ல.
என்மேல உனக்கு அக்கறையேயில்ல டாடி என்றான் மெல்லிய குரலில்.
பக்கென்றது. என்னடா இப்படி சொல்ற.
எதுவும் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றான்.
நான் குற்றணர்ச்சியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை தூக்கி உட்கார வைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி சென்றேன். ஹோட்டலில் போய் அமர்ந்ததும் இட்லி தாங்க என்றதும் இட்லி வந்தது சாப்பிட்டுக்கொண்டே அடுத்து என்ன வேணும் என கேட்டதும் சோலாபூரி என்றான். அவனுக்கு சோலாபூரி, நான் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரிம் வாங்கி ரஞ்சித்திடம் தந்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு ஆபிஸ் வந்தேன். இருவரும் சைலண்டாக வருவதை பார்த்து மஞ்சு அதியமாக பார்த்தாள். அறைக்குள் இருந்த பிரபு ரஞ்சித்தை கண்டதும் எனக்கு எங்கடா ஐஸ்கிரிம் ?.
ஒன்னு தான் அங்கிள் வாங்கி தந்தாரு.
பிரபு என் மெயில் ஓப்பன் பண்ணி யூ.பி.எஸ்க்கான டீட்டய்ல் இருக்கு அத பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வா என்றதும் அவன் நீயும் வா ரஞ்சித் என்றபடி அவனையும் அழைத்துக்கொண்டு பிரிண்டர் அறைக்கு சென்றான்.
அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கதவை திறந்துக்கொண்டு தயங்கி தயங்கி கீதா உள்ளே வந்தாள்.
என்ன கீதா?.
தயக்கத்துடனே ஒரு ஹெல்ப் சார்.
என்ன ?.
அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கோம்.
சொல்லவேயில்ல. என்னாச்சி ?
கால்வலியால இரண்டு மாசம்மா கஸ்டப்பட்டாங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி நடக்க முடியாம போனதால சென்னைக்கு அழைச்சிம் போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஆப்ரேஷன் பண்ணனம்ன்னு சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன்க்கு பணம் தேவைப்படுது சார்.
எவ்ளோ ?
முப்பதாயிரம் சார்.
எப்போ வேணும்.
நாளைக்கு தந்தா நல்லாயிருக்கும் சார்.
அப்போது பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்களோடு பிரபு உள்ளே வந்தவனிடம் கீதாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல அட்மிட் செய்துயிருக்காங்கலாம். ஆப்ரேஷன்க்கு முப்பதாயிரம் தேவையாம் ?.
பிரபு கோபமாக கீதா பக்கம் திரும்பி ஏன் இப்படி பொய் சொல்ற என்றான் கோபமாக.
தொடரும்………………