Tag: க.பாலசுப்பிரமணியன்

  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 41

    க. பாலசுப்பிரமணியன்

    நானும் அவனும் ஒன்றா அல்லது வேறா?

    திருமூலர்-1-1

    நம் உள்ளத்துக்குள் இறைவனைத் தேடி அமர்த்துவதோ அல்லது உள்ளததுக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அவனைக் கண்டுபிடித்து வசப்படுத்தி அவனை ஆராதிப்பதோ மிகவும் கடினமான செயலாகத் தோன்றுகின்றது. அவன் உள்ளத்துக்குள்தான் இருக்கின்றானா  என்ற சந்தேகம் பலமுறை நமக்கு ஏற்படுகின்றது. ஆனால் பூசலாருக்கோ அந்தச் சந்தேகம் துளிகூட ஏற்படவில்லை. அதனால் தான் தன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்ற இறைவனுக்கு அங்கேயே கோவில்கட்டி மகிழ்ந்தார். அதனால்தான் இறைவன் அவருடைய உள்ளத்துக்கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தான். ஆனால் நம்மில் பலருக்கும் இறைவன் நம்கூட இருப்பானா வருவானா என்ற பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

    ஒருமுறை இறைவன் தன்னுடைய ஒரு பக்தனுக்கு அவனுடைய பக்தியைப் பாராட்டும் வகையில் எவ்வாறு தான் பக்தனின் கூடவே இருக்கின்றேன் என்பதை காட்சியாகக் காட்டினார். அந்தப் பக்தனுக்கு  மட்டற்ற மகிழ்ச்சி. அவன் பிறப்பிலிருந்து அவன் கூடவே அவர் நடந்து வந்ததற்கு அடையாளமாக இவனுடைய பாதச்சுவடுகளுக்கு  இணையாக இறைவனின் பாதச்சுவடுகளும் தென்பட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் ஒரே ஒருவருடைய பாதச்சுவடுகள் மட்டும் தென்பட்டபோது அந்த பக்தனுக்கு அதுதான்  அதிகமான துயரில் இருந்த காலம் என்று  தெளிவாகின்றது.

    “ஆஹா! நமக்கு அதிகத் துயர் இருந்த நேரத்தில் இறைவன் நம்மைத் தனியாகத் தவிக்க விட்டுச்சென்றுவிட்டானே” என்ற எண்ணம் ஏற்பட்டு இறைவனிடம் சென்று கேட்கின்றான் “நீங்கள் இவ்வாறு என்னைத் துயருள்ள காலத்தில் தனியாகத் தவிக்க விட்டுச் செல்லலாமா”?

    இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் இறைவன் சிரித்துக்கொண்டே சொல்லுகின்றான் “மகனே, அங்கு நீ பார்க்கும் பாதச்சுவடுகள் என்னுடையதே. அந்தத் துயர் இருந்த நேரத்தில் உன்னால் நடக்க முடியாமல் இருந்ததால் உன்னை நான் என் தோள்களில் சுமந்து கொண்டு சென்றேன். ஆகவே, அந்தப் பாதச்சுவடுகள் என்னுடையவை.”

    உண்மை நிலை இதுவே. நாம் நம்மையும் இறைவனையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கின்றோம். நம்முள் ஒருவனாய் அவன் மறைந்து இருக்கின்ற அந்த இறைவனைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் அவன் நமக்குத் துணையாக இருப்பதை உணருதல் அவசியம். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்:

     நானென்றுந் தானென்றும் நாட்டின் நாடலும்

    தானென்றுத தானென் றிரெண்டில்லை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்ற நானும் நினைப்பொழிந் தேனே.

    நான் வேறு இறைவன் வேறு என்ற பிரித்துணர்கின்ற கருத்தை ஒதுக்கித் தன்னுள்ளேயே இறைவனின் அருளாட்சியைக் காண்பதற்குத் துடித்த அடியார்கள் பலர்.  இந்த நிலையைப் பெறமுடியாமல் தங்கள் இயலாமையை நினைத்து வருந்தி அவர்கள் வேதனைப்பட்ட காலங்களும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.  இந்த நிலையில் வாடும் பத்திரகிரியாரோ தன் மனக்குறையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் தெரியுமா ?

    என்னை யறிந்துகொண்டே னெங்கோமா னோடிருக்கும்

    தன்மை யறிந்து சமைந்திருப்ப தெக்காலம் ?

    தன்னுள் இறைவனைக் காணாமல் தனித்துப் பார்க்கும் மாந்தர்களுக்கு அறிவு புகட்டும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

    தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவந்

    தான் என்று அவன் என்று இரண்டற்ற தன்மையைத்

    தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்

    தான் இன்றித் தான் ஆகாத தத்துவ சுத்தமே

    தன்னில் தன்னையும் தன்னுள் தலைவனாகிய இறைவனையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அப்பர் பெருமானும் தன்னுடைய பாடலில் எடுத்து விளக்குகின்றார்.

    தன்னில் தன்னை யறியுந் தலைமகன்

    தன்னில் தன்னை அரியத் தலைப்படும்

    தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடின்

    தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியனே

    இதே போன்று இறைவனை நாடாது வெறும் காம உணர்வுகளுக்கு இரையாகி தன்னுடைய உண்மை நிலையை அறியாமலும் தன்னுடைய முயற்சியை முழுவீச்சாக மேற்கொள்ளாமலும் மாயையில் சிக்கித் தவிக்கின்ற மனத்தைப் பார்த்து பட்டினத்தாரும் கோபத்தில் ‘அது பித்து பிடித்த மனது” என்று சொல்கின்றார்

    நாடிக்கொண் டீசரை நாட்டமுற் ற்றாயிலை நாதாடி

    தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலைசெக மாயைவந்து

    மூடிகொண் டோமென்றுங் காமாயு தங்கண் முனிந்தவென்னும்

    பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தர்களே.

    தன்னுள் அவனைக் காணவும் அறியவும் செய்கின்ற முயற்சியே தன்னை அறியும் முயற்சியோ ?

    (தொடருவோம்)

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -11

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கள்வனூர் – அருள்மிகு ஆதிவராகப் பெருமாள்

    1_zQxYKJoG2QvBGV0U4XNLIg

    கள்வனாய்ப் பிறந்தாய் கம்சனே சிறையிட

    கள்வனாய்ச் சென்றாய் காரிருள் நேரத்தில்

    கள்வனாய் வளர்ந்தாய் கோபனின் வீட்டினில்

    கள்வனே! கண்ணனே! கருணையின் மன்னனே !

     

    கோபியர் வீடுகளில் வெண்ணையைத் திருடி

    கோபியர் நெஞ்சங்களைக் குழலினால் திருடி

    கோதையின் உள்ளத்தை அரங்கத்தில் திருடி

    கோலங்கள் ஆயிரம் கொண்டாய் கள்வனே !

     

    மண்ணுண்ட வாயினிலே மாயைகள் காட்டினாய்

    மழலைப் பொழுதிலே மாமனை அழித்தாய்

    மதுராவில் ஆயிரம் கண்ணனாய் ஆடினாய்

    மாலனே! மாயனே ! மனங்கவர் கள்வனே !

     

    அட்டமியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் காப்பவனே

    நவமியில் பிறந்தாலும் நிறைநிலவாய் வந்தவனே

    அடியார்கள் உள்ளத்திலே அனுதினமும் பிறப்பவனே

    அழிவில்லா உனக்கெதற்கு பிறப்பெடுக்கும் கள்ளத்தனம்?

     

    மறைந்திருந்து பார்ப்பவனே மறைந்திருந்து காப்பவனே

    மறைவழியில் வாழ்ந்திடவே மறைசொன்ன சாரதியே !

    மலைதன்னில் நின்றாலும் மடையெனவே அருள்பெருக்கி

    மனமெல்லாம் நிறைந்தவனே மங்கலமே வளர்த்திடுவாய் !

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -10

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருசாலக்ராமம்  (முக்திநாத்) அருள்மிகு மூர்த்திப் பெருமாள் கோவில்

    images (2)

    பந்தங்கள் துறந்து முக்தியை நாடும்

    பக்தர்கள் வாழ்வில் பரவசம் கொடுக்க

    பனிமலை நடுவினில் பரிவுடன் அமர்ந்து

    பிறவிகள் விலக்கும் மூர்த்தியே ! முகுந்தா !

     

    முன்னொரு பிறப்பில் முடியாக் காதலை

    பின்னொரு பிறப்பில் பகிர்ந்திட வந்தாய்

    தன்னொரு உறவைத் தேடிய துளசியை

    இன்னொரு உறவாய் மார்பினில் அணிந்தாய் !

     

    கண்டகி நதியில் காதலின் சின்னம்

    கண்டவர் வியக்கும் கல்லாய் வடிவம்

    கண்டதும் கொடுக்கும் கனிவுடன் முக்தியை

    கண்ணனின் கருணையைக் காலங்கள் போற்றிடும் !!

     

    பனிமலை நடுவில் பளிச்செனக் கல்லாய்

    பாற்கடல் நடுவில் பாம்புடன் துணையாய்

    பாவங்கள் அழிக்கப் பாதியில் சிங்கமாய்

    பாலங்கள் அமைத்தாய் படைப்புக்கள் அனைத்திலும் !

     

    எச்சில் பழத்தை இனிதே ருசித்தாய்

    ஏழை குசேலன் அவலினை ஏற்றாய்

    எளிய குகனை இதயத்தில் அணைத்தாய்

    ஏங்கிடும் உள்ளங்கள் தாங்கிடும் தயாளா !

     

    பூமகள் அமர்ந்தே போற்றிய திருவடி

    புவியுடன் வானையும் அளந்த பொன்னடி

    பரதனின் அரியணை அமர்ந்த காலடி

    பாவங்கள் விலக்கிடும் பார்தததும் சேவடி !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு நாவை – அருள்மிகு நவமுகுந்தப் பெருமாள்

    attabhuyakaran1-small

    எட்டாமல் அலைகடலில் கிட்டாமல் கிடந்தாலும்

    எட்டாம் பிறையில் இருட்டறையில் பிறந்தாலும்

    எட்டுமுறை வீழ்ந்தே ஒன்பதாய் நின்றவனே

    எண்ணத்தில் நிற்பவனே நாரணனே நவமுகுந்தா!

     

    கருநாக விரிப்பினிலே கண்மூடி அயர்ந்தவனே

    கருடனின் மேலமர்ந்து காத்திட விரைபவனே

    கருணையால் கல்லிருந்த அகலிகைக்கு அருளியவனே

    கருமத்தால் ஜடாயுவுக்கு விடுதலை அளித்தவனே

     

    அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க

    அசையாத விழியோடு  அமரர்கள் பார்த்திருக்க

    ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக

    அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா

     

    சூதாடும் என்நெஞ்சம் சுற்றியுள்ள பொருள்களோடு

    சொந்தமென ஏற்றிருக்கும் சுமைதாங்கி வலியோடு

    சோதனைகள் எதிரகொள்ளும் வந்தவினை விட்டுவிட்டு

    சோகக்கதை மாற்றிவிட்டு சுதர்சனனே காத்துவிடு !

     

    என்னமொழி  சொன்னாலே இதயத்தைத் தொட்டிடலாம்

    சொல்லமொழி ஏதுமின்றி சொல்லாமல் தவிக்கின்றேன்

    தாய்மொழியில்  கவிதையொன்று கண்ணீரில் குளித்திருக்க

    எந்தமொழி இனிவேண்டும் அங்கமொழி அறியாயோ ?

     

    பொன்னங்கி உனக்குடுத்தி பூவாலே அலங்கரிப்பார்

    முத்தங்கி உனக்குடுத்தி முக்கனிகள் படைத்திடுவார்

    நூலங்கி உனக்குடுத்தி நூதனமாய் பார்த்திருப்பார்

    சொல்லங்கி வடித்துடுவேன் சொந்தமென வந்துவிடு !

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -8

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கருகம் – அருள்மிகு கருணாகரப் பெருமாள்

    G_T1_2077

    நிலங்களில் பொழிந்திடும் நீருடைக் கார்மேகம்

    நிறத்தினில் கருமையே நெஞ்சத்தில் கருணையே

    நிலவிடும் எண்ணத்தில் கண்ணனின் வண்ணமே

    நிழலென இருந்தும் கருணையில் வருணனே !

     

    கடலுள்மீனாய் நுழைந்தாய் மறைகளைக் காக்க

    காட்டுப்பன்றி வந்தாய் புவியினை மீட்க

    கடைந்திடக் கடலை ஆமையாய் அமைந்தாய்

    கருணையின் வடிவங்கள் காட்டிய கண்ணா !

     

    அழகிய திருவடி அண்டங்கள் அளந்திட

    அழகிய சிங்கனாய் இரணியன் அழித்திட

    அழகிய தோளில் கலப்பையை ஏந்தியே

    அருளினை வழங்கிய அச்சுதா வாழி !

     

    தோளுடை வலிமைக்குத் தோழன் பலராமன்

    தூதுவன் அறிவுக்குத் துவாபரச் செல்வன்

    தருமத்தின் பொருளாய் தயரத இராமன்

    தன்னிகர் இல்லாத் தாமரை மணாளன் !

     

    எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் கண்ணா

    சிந்தனை அனைத்தும் அடியவர் அன்றோ ?

    வந்தனை செய்திடும் உள்ளங்கள் அனைத்திலும்

    விந்தையே! பிறந்தாய் வடிவங்கள் புதிதாய் !

     

    அலைகடலில் அயர்ந்தாலும் அண்டங்கள் காப்பவனே

    அலைகின்ற நெஞ்சுக்கு அமைதியைத் தருவாய் !

    அடியார்கள் துயர்நீக்க அவனியெல்லாம் செல்பவனே

    அழையாதும் வந்திடுவாய் அந்தரங்கம் அறிந்தவனே!

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -7

    க. பாலசுப்பிரமணியன்

     

    அஷ்டபுயக்கரம் – (அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் )

    201712140929347662_adikesavaperumal-temple_SECVPF

    கோகுலத்தில் உறியுடைத்து வெண்ணையுண்ட கரமொன்று

    கோதையர்கள் துணிகளையே கவர்ந்திட்ட கரமொன்ற

    குலம்காக்கக் காளிங்கனின் வால்பிடித்த கரமொன்று

    குழலூதி கோவினங்கள் அழைத்திட்ட கரமொன்று

     

    குலமகள் பாஞ்சாலியின் இனம்காத்த கரமொன்று

    குருட்சேத்திரத்தில் தேரோட்டித்  துணைதந்த கரமொன்று

    குற்றுயிரான கர்ணனிடம் கொடைகேட்ட கரமொன்று

    குசேலனின் குறைதீர்க்க கருணைகொண்ட கரமொன்று ‘

     

    கோதண்ட இராமனாய் வில்லெடுத்த கரமொன்று

    கோபத்தில் இரணியனைக் கூரிட்ட கரமொன்று

    குறையெல்லாம் தீர்த்திடுமே கோவிந்தன் அருட்கரமே

    குறையாத நலம்பெருக்கிக் குலம்காக்கும் திருக்கரமே

     

    அத்தனை கரங்களும் அன்புடன் அணைத்திடுமே

    அட்டபுயத்திலோ அச்சுதன் எடுத்தது ஆயுதமே

    அம்போடு வில்லும் அரிவாளும் கதையும்

    அரக்கனை அழித்திட சங்கோடு சக்கரமும்.

     

    படைப்பவனின் வேள்வியினை அழித்திடவே பாரதியும்

    பகைகொண்ட நெஞ்சோடு பாம்பினையே அனுப்பிவிட

    பரந்தாமன் ஆயுதங்கள் அரக்கனையே அழித்துவிட்டுப்

    பகலவனாய் ஒளிபெருக்கப் பகைமறந்தாள் பாரதியும் !.

     

    ஊழ்வினையால் உருவத்தில் யானையாய் முனிவனும்

    ஊழ்கழிக்கத் தாமரையால் தாமோதரனைப் போற்றிடவே

    தாள்பணிந்த யானையின் கால்பிடித்த முதலையின்

    நாள்முடிக்க ஓடிவந்தான் உலகாளும் பரந்தாமன் !

     

    கரம்கூப்பி வேண்டுகின்றேன் கண்ணனே காத்திடுவாய்

    காரிருள் வாழ்க்கையிலே கதிரொளியாய் வந்திடுவாய்

    காததூரம் நீயிருந்தும் காதுகொடுத்தே  கேட்டிடுவாய்

    காலங்கள் கடந்தவனே கற்பனைக்கும் இனியவனே !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -6

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவஹீந்திரபுரம் (அருள்மிகு தேவநாதப் பெருமாள் )

    perumal

     

    கண்ணயர்ந்து பொழுதினிலும் கருணைதரும் கண்ணனைக்

    காலமெல்லாம் தொழுதிடவே கருநாகன் சேடனுமே

    காவிரிக் கரைதன்னில் ஆலயமே எழுப்பிடவே

    கானிருந்த முனிவரெல்லாம் கைகூப்பி நின்றனரே

     

    பாம்பணைமேல் படுத்தவன் பள்ளி எழுந்தான்

    பக்தர்களைக் காத்திடவே பேரொளியாய் நின்றான்

    பார்வையிலே மூவராகப் பிரிந்த தத்துவமே

    பாங்குடனே ஒன்றாகித் தந்தருளும் தரிசனமே !

     

    மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் மனம்மகிழ

    மாதவனும் வந்தானே தெய்வ நாயகனாய் !

    மாமுனியாம் மணவாளரும் மனமுருகி வேண்டிடவே

    மாலனும் மனமிசைந்து மகிழ்வோடு நின்றானே !

     

    அழகுக்கு அழகளிக்கும் ஆனந்தன் தேவநாதன்

    அழகுடன் ஆதிசேடன் ஆலயத்தில் நின்றான்

    அளவில்லா தாகத்தில் அச்சுதனும் நீர்வேண்ட

    ஆதிசேடன் வாலசைக்க வளர்ந்ததோர் கங்கையம்மா !!

     

    வான்பறந்த கருடனுமே மாமுனியின் கமண்டலத்தை

    வலுவாகத் தள்ளிடவே வளர்ந்ததங்கே வற்றாதநதியே !

    வந்தவினை தீர்ந்திடுமே வைகுந்தன் பார்வையிலே

    வந்தவரை வரதனவன் வளம்பெறுக வாழ்விப்பான் !

     

    சங்கோடு சக்கரத்தைக் கையேந்தி அவனிருக்க

    அங்கத்தை மலரோடு துளசியும் அலங்கரிக்க

    செங்கமலத் தாயும் மலர்மார்பில் உடனிருக்க

    மங்கலமே உன்னெழிலே மாதவனே போற்றிடுவேன் !

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தின் உள்ளே இருப்பவனே…

    திருமூலர்-1-3-3-1

    இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் மூலமாகவும், இன்னும் சிலர் தங்கள் அனுபூதிகள் மூலமாகவும் இறைவனை நாடத் துடிக்கின்றனர். சிலர் மலைகளின் உச்சியில் கல்லில் கடவுளைத் தேடுகின்றனர். சிலர் கடல், குளம், நதிகள் இவற்றின் கரைகளில் அந்த ஆனந்த மூர்த்தியைத் தேடி வழிபட நினைக்கின்றனர். சிலர் மந்திரங்கள் சொல்லி அதன் மூலமாக அடையத் துடிக்கின்றனர். இன்னும் சிலரோ இசையின் மூலமாக அந்த நாதத்தின் மூலவனை நாட விழைகின்றனர். அவன் உண்மையில் எங்கு இருக்கின்றான்?

    என்ன விந்தை! அவன் யார்யார் எவ்வாறு விரும்புகின்றனரோ அவ்வாறே அவர்களுக்குத் தோன்றுகின்றான். அவர்கள் விரும்பியபடியே அவன் வந்தடைகின்றான். இது எப்படி நடக்கின்றது?

    உண்மையில் உள்ளத்தின் உள்ளே இருக்கின்ற அவன் கூப்பிட்ட குரலுக்கு வருபவன். அன்போடு, பணிவோடு, அறத்தோடு அவனை நாடினால் அவன் நிச்சயமாகத் தோன்றுவான். இப்படிப்பட்டவனை நாம் எதற்கு மலை கடல் மற்றும் வேறு பல இடங்களில் தேட வேண்டும் ?

    திருமூலர் கூறுகின்றார்:

    உள்ளத்தின் உள்ளே உள் பலதீர்த்தங்கள்

    மெல்லக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

    கள்ள மனமுடைய கல்வி யிலோரே !

    தன் உள்ளங்களுக்குள் தேடுபவர்களுக்கு உள்ளத்திலேயே நின்று அருளுகின்ற பெருந்தகை வேண்டுவோர்க்கு வேண்டியபடி வருபவன். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இவ்வாறு அவனைப் போற்றுகின்றார் :

    ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

    சேயானை சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

    நாயென நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை

    தாயான தத்துவனை தானே உலகேழும்

    ஆயானை ஆள்வானை  பாடுதுங்காண் அம்மானாய்!

    இவ்வாறு இறைவனின் அருளை நாடும் மாணிக்கவாசகருக்கு அவன் பேரொளியின் அனுபவம் எப்படியிருந்தது? இதோ, அவரே கூறுகின்றார்:

     ஊனாய் உயிராய் உணர்வாய்என் நுட்கலந்து

    தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

    வானோ ரறியா  வழியெமக்குத் தந்தருளுந்

    தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

    ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குள்

    கோனாகி  நின்றவர் கூறுதுங்காண் அம்மானாய் !

    இதே அனுபவ நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம். தன்னையே அறியாத  நிலையில் தடுமாறும் மனதைப்  பார்த்து அவர் கேட்கின்றார் :

    ஊனாகி யூனி  லுயிராகி யெவ்வுலகுந்

    தானாகி நின்ற தனையறிவ தெக்காலம் ?

    என்னைவிட்டு நீங்காம  லென்னிடத்தில் நீயிருக்க

    உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் ?

    உள்ளத்தின் உள்ளே இருந்துகொண்டு அவன் என்னதான் செய்கின்றான்? அவன் செய்யும் மாயத் தந்திர வேலைகள் என்னென்ன? பதில் நமக்கு கிடைக்கின்றது பட்டினத்தாரிடமிருந்து:

    உள்ளார்க்கு முள்ளாண்டி யூருமில்லான் பேருமில்லான்

    கள்ளப் புலனருக்கக் காரணமாய் வந்தாண்டி.

    அப்பிறப்புக் கெல்லாம் அருளா யமர்ந்தாண்டி

    இப்பிறப்பில் வந்தா னிவனாகு மெய்ப்பொருள்காண்

    எத்தனை ஆழமான சிந்தனையில் நம்பிக்கையில் அனுபவ நிலையில் சொல்லப்பட்டவை இந்தச் சொற்கள்.

    இந்தக் கருத்தையே இன்னும் பாராட்டும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்: 

    கறந்தபால் கன்னலொடு  நெய்கலந்தால் போலச்

    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

    பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் “

    இறைவனைத் தங்கள் உள்ளே நிறுத்தி ஆனந்த நிலையில் அடியார்கள் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க நமது சிந்தனைகள் மேலும் வளம்பெருமன்றோ ?

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -5

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருநாகை (அருள்மிகு அழகியன் -சௌந்தரராஜப் பெருமாள் )

    Koodal-Azhagar-Perumal-Vishnu-Temple1st1-1397192

    நீலவண்ணப் பீலியழகு சிகையழகு மலரழகு

    நீலவிழி தவழுகின்ற நிலவழகு இமையழகு

    நிலைதேடி உருண்டோடும் கருவிழிக் கலையழகு

    நினைவழகு நினைக்கும் காலத்தின் கருவழகு !

     

    தோளழகு துவளாமல் துணைநிற்கும் துளசியழகு

    துடிக்கின்ற மார்பினிலே துணைகொண்ட திருவழகு

    துய்யாமல் துய்க்கின்ற தோரணையில் துயிலழகு

    தோத்திரங்கள் சொல்லழகு சொல்லுண்ட பொருளழகு

     

    கைகொண்ட சக்கரமும் களமொலிக்கும் சங்குமழகு

    கரையில்லா அருளழகு கலிநீக்கும் தாளழகு

    கணத்தினிலே கைகொடுக்கும் கண்ணன் நட்பழகு

    காலமெல்லாம் போற்றிடவே புவிபெற்ற வாழ்வழகு !

     

    பேரழகே நீநின்றால் பேரருளே உனைக்கண்டால்

    பேரின்பம் கிடைக்காதோ வேறின்ப வாழ்வெதற்கு ?

    பேரிடரால் யுகம்மாறப் பெருமாளே நீநின்றாய்

    பேதமின்றி சத்தியத்தில் திரேதத்தில் துவாபரத்தில் !

     

    கரையில்லா அன்போடு பெருகிடும் காவிரிக்

    கரைதன்னில் கனிவோடு குறைதீர்க்கும் துறைவனே !

    கதியென்று உனைத்தேடிக் காலடியில் நின்றோமே

    கணநேரம் எனைக்காணக் களிப்போடு வருவாயோ?

     

    நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும்

    நிலையான உன்னெழிலுக்கு ஈடில்லை நீர்வண்ணா !

    நினைவெல்லாம் உன்னுருவே நிதியாக இருந்திட்டால்

    நிலையாத வாழ்விற்கு ஈடேது மணிவண்ணா !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -4

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவாலி -திருநகரி  (அருள்மிகு அழகிய சிங்கர்)

    sri-azhagiya-singar-triplicane-2

    கண்களில் கனலும் கைகளில் நகமும்

    உள்ளத்தில் சினமும் உறுமிடும் குரலும்

    ஒப்பிலா வீரமும் ஒன்றிய சிங்கமாய்

    உருவமே எடுத்தாய் அழகிய சிங்கா !

     

    தூண்களைப் பிளந்து தோன்றிய ஒளியே

    தானெனும் அகந்தையை அடக்கிய அரியே !

    தாயெனும் கருணை நெஞ்சினில் நின்றும்

    தருமங்கள் காக்க நெருப்பென வந்தாய் !!

     

    முன்னும் பின்னும் முடிவாய் பிரித்து

    முகத்தினில் குருதியால் முடிவுரை எழுதி

    மூலவன் அமர்ந்த திசையினை நோக்கி

    முப்புரி அமரரும் மோனத்தில் நின்றார் !

     

    சினம்காக்க சினம்காக்கச் சேர்ந்தனர் அமரரும்

    சேவடி விடுத்தே சிந்தையை  அணைத்துச்

    சேர்ந்தே அமர்ந்தாள் சீர்மிகு செங்கமலத்தாள்

    சிதையாத கருணையைச்  சிங்கமே தந்தாயே !

     

    நலம்காக்க நலம்காக்க நானிலமே வேண்டிட

    நிலையாத சினம்விட்டு நீலமேகன் அருளிட

    நினையாத துயர்கூட நிலம்விட்டு நீங்கிடும்

    நினைவெல்லாம் சிங்கனின் சேவடி நின்றிடும் !

     

    வந்திட்ட துயரெல்லாம் வரதனே நீக்கிடுவாய்

    வாராத துயரெல்லாம் வருமுன்னே விலக்கிடுவாய்

    வந்தனை செய்கின்றேன் வாழ்வெல்லாம் துணையிருக்க

    வருவாயே அருள்வாயே  வரலட்சுமி மணாளனே !

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -3

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருவாரன் வில்லை – பார்த்தசாரதி பெருமாள்

    thiruvidanthai

    மண்வீழ்ந்த சக்கரத்தை மறுபடியும் தூக்கிடவே

    மனமொடிந்து மாவீரன் கர்ணனும் முயன்றிடவே

    மனங்குவிந்த சினம்கொண்டு தனயனைத் தாக்கிவிட்ட

    தனஞ்செயன் தவறுகள் களைந்திட்ட தலமன்றோ !

     

    ஆலிலையில் வந்தாலும் ஆயர்பாடி வளர்ந்தாலும்

    ஆதிசேடன் மேலுறங்கி அலைகடலில் வாழ்ந்தாலும்

    ஆதிமூலமென அழைத்தவுடன் அருள்செய்ய வருவானே

    ஆதிமுதல் அந்தம்வரை அருள்பவனே அரங்கத்தானே !!

     

    குழலோசை மயக்கத்திலே கூடிவரும் கோபியர்கள்

    குலம்மறந்து குடிமறந்து கோகுலனின் போதையிலே

    குழல்பறக்க  உடல்நெளிந்து கொடியெனவே அசைய

    குழம்பினவே ஆவினங்கள் கோவிந்தன் மாயையிலே !

     

    வான்செல்லும் கார்மேகம் வளிதன்னில் இளைப்பாற

    மான்போன்ற கோபியர்கள் நடுவினிலே நீயிருக்க

    தான்பெற்ற நிழலாகத் தன்னுருவம் உன்னில்கண்டு

    வியந்தே நிற்கின்றது கண்டாயோ வைகுந்தா !

     

    காழியிலே படமெடுத்து வலமிட்ட காளிங்கனை

    நாழியிலே நாடியடக்கி நடனமிட்ட நாரணனே

    தோழியர்கள் கூடிடவே தாள்பார்த்து ஆடியவனே

    ஊழியிலும் உயிர்காக்க உன்னையன்றி யாருண்டு ?

     

    போர்முனையில் நானில்லை தேரோட்ட நீயில்லை

    போதனைகள் சொல்லிவிடவே புதியகீதை தேவையில்லை !

    போக்கிடமே  பொற்பாதம் புகலடைந்தேன் புண்ணியனே

    போக்கிடுவாய் துயரமெல்லாம் புவியெல்லாம் காப்பவனே !

     

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -2

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருச்செங்குன்றூர் -இமையவாரப்பன் பெருமாள்

    27 feb pt 2 wadala 090

    காலைக் கதிரில் கண்ணனின் நினைப்பில்

    காலனின் துயரம் கனவாய்க் கலைந்தது

    கலங்கிட்ட வாழ்வைக் கலையாய் செதுக்கிட

    கண்ணனின் குழலே காதினில் சொன்னது !

     

    ஆலிலை மேலினில் அசைவின்றி வந்தவன்

    ஆயர்கள் நடுவினில் அன்புடன் வளர்ந்தவன்

    ஆடிடும் கோபியர் அரங்கத்தை ஆண்டவன்

    ஆசையில் கோதையை அரங்கத்தில் ஏற்றவன்!

     

    சொல்லிய பொய்யே சுட்டிட நெஞ்சை

    தனிமையில் தவித்தான் தலைமகன் தருமனும்

    கண்ணனே கதியென்று கால்களைப் பற்றிட

    மன்னவன் மனத்தினில் மலர்ந்தது அமைதியே !

     

    கள்ளுண்ட வண்டின் கலங்கிய கீதமாய்

    உள்ளுண்ட உணர்வுகள் உயிரினைத் தாக்கிட

    மண்ணுண்ட மழலை  மாதவன்  திருவடி

    மண்டிட்டு வேண்டிட மறையுமே மாயமாய் !

     

    புவியெல்லாம் மங்களம் புனலெனத் தருபவள்

    புன்னகை தொடுத்தே பொற்பதம் இருக்க

    புலர்ந்திடும் பொழுதில் பேரருள் பெருக்கும்

    புண்ணியன் போற்றிட புலமையும் தேவையோ ?

     

    ஏழுமலை நாயகனே எங்கிருந்தால் எனக்கென்ன

    ஏழுகடல் தாண்டியே எட்டாமல் இருந்தென்ன

    ஏங்குகின்ற நினைவினிலே எண்ணமெல்லாம் நீதானே

    ஏற்றிடுவாய் அழைப்பினையே என்னுடனே வந்துவிடு !

     

     

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -1

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு வல்லபர் (திருவல்லா)  

    images (3)

    மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது

    மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது

    மாலையை ஏந்திய கோதையைப் போல

    மாலனைத் தேடி மனமும் சென்றது !

     

    ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ

    பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?

    தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே

    வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !

     

    சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்

    வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்

    தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்

    தேனினும் இனிய திருவுடை அரங்கன் !

     

    கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு

    கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்

    கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்

    கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !

     

    தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது

    தோகளன் வதைக்கத்  துணையாய் வந்தது

    தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்

    தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !

     

    வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே

    வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !

    வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்

    வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !

     

    சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்

    மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்

    தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்

    பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -39

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

    திருமூலர்-1-3-3

    பல நேரங்களில் நம்முடைய மனதில் எழுகின்ற ஒரு ஐயம் – இறைவனை எப்போது வணங்கினால் அவனுடைய பார்வை நம் மீது விழும்? காலையிலா. மாலையிலா அல்லது நண்பகலிலா? அவனை எப்படி பூசிப்பது? என்ன மலர்களைக் கொண்டு வழிபடலாம்? என்ன சொற்கள் கொண்டு போற்றலாம்? இறைவனுக்கு என்ன உணவு பிடித்தமானது? என்ன உணவுகளை படைக்கலாம்? என்ன செய்தாவது, அவனுடைய கடைக்கண் பார்வையில் நிரம்பி வழியும் அருளுக்குப் பாத்திரமாகி விட வேண்டும் என்ற எண்ணம்.

    இந்த ஐயத்தினை விளக்கும் வகையிலும் தடுமாறுகின்ற உள்ளங்களுக்கு வழிகாட்டும் வகையிலும் திருமூலர் கூறுகின்றார் :

    பகலும் இரவும் பயில்கின்ற பூசை

    இயல்புடை யீசர்க் கிணைமல ராகப்

    பகலும் இரவும் பயிலாத பூசை

    சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே 

    அதுமட்டுமல்ல.. அவன் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

    கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

    வானுற மாமல ரிட்டு வணங்கினும்

    ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது

    தேனமர் பூங்குழல் சேரவொண் ணாதே 

    “ஊனினை நீக்கி உணர்தல்” – ஒரு சாதாரண மனிதனால் எப்படி முடியும்? இதற்கு நாம் வெளி உலகத்தைத்  தேடும் புற அறிவினை விட்டு உள்நோக்கிச் செல்லுதல் அவசியம். உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் பேரொளி தான் நமக்கு ஐம்பொறிகளின் தூண்டுதலால் ஏற்படுகின்ற துயரங்களிலிருந்து விடுதலை தரும்.

    இந்த நிலைக்குச் செல்ல நாம் என்ன முயற்சி செய்ய வேண்டும்? முன்காலத்தில் அடியார்கள் வேண்டியதெல்லாம் “இறைவா., எனக்கு இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வழிகாட்டு; பொய்மையிலிருந்து வாய்மை நோக்கிச் செல்ல வழிகாட்டு: அநித்தியத்திலிருந்து நித்தியத்தை நோக்கிச் செல்ல வழிகாட்டு.” என்பதே. இருளிலிருந்து ஒளியைத் தேடித் செல்ல நாம் முயற்சிக்க வேண்டாமா? இதை எப்படிச் செய்யலாம்? திருமூலரே நமக்கு வழிகாட்டுகின்றார்:

    விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

    விளக்கினின் முன்னே வேதனை மாறும்

    விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்

    விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ! 

    என்ன அருமையான சொல்லாடல் ! என்ன ஆழமான கருத்துக்கள்!

    “உங்களுடைய உள்ளத்தில் ஞானவிளக்கினை ஏற்றுங்கள். அதன் துணையோடு உள்ளத்தில் இருக்கும் மலங்களை நீக்கி அருளொளியை அடைய முயலுங்கள்” என்ற கருத்தை அழகாக முன்வைக்கின்றார் .

    சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்

     புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.” 

    என்று துயரத்தில் வாடுகின்ற பட்டினத்தாரும் அவனைக் “கல்லுளிருந்த கனலாகக்” காண்கின்றார்

    சொல்லுக்கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண்

    கல்லு ளிருந்த  கன்னலொளிபோ னின்றவன்காண். 

    என்று அவனை உள்ளிருக்கும் சோதியாகக் கருதியே வழிபடுகின்றார்.

    அவனுடைய அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் அகத்தில் உள்ள மலங்களெல்லாம் நீங்கி உள்ளத்தில் பேரொளியாக அவன் திகழ்வானே ! இதற்கும் அவன் அருள் தானே வேண்டும். இந்த அருள் பெற்ற நிலையை வர்ணிக்கும் மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகின்றார்:

    இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து

    எழுகின்ற ஞாயிறே போன்று

    நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்

    நீ அலால் பிரித்து மற்று இல்லை

    சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம்

    திருப்பெருந்துறை உறை சிவனே

    ஒன்றும் நீ அல்ல அன்றி ஒன்று இல்லை

    யார் உன்னை அறியகிற்பாரே.

    பரந்து நிற்கும் பரஞ்சோதியை தங்கள் எண்ணத்துக்குள் அனுபவத்திருக்குள்ளும் சொற்களுக்குள்ளும் கட்டுப்படுத்தி அவனை ஒரு வர்ணனைக்குள் கட்டுப்படுத்த நினைக்கும் மாந்தரைப் பார்த்து திருமூலர் கூறுகின்றார் :

    உறையற்ற தொன்றை யுரைசெய்யு மூடர்காள்

    கரையேற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ? 

    (தொடருவோம் )

    Share
  • கபீர்தாசரின் கவிதைகள் (4)  

    -தமிழாக்கம்: க. பாலசுப்ரமணியன்

    kabir-424x282-1

    குறைந்த உலர்ந்த உணவை உண்டாலும்

    குடிநீர் மட்டும் குடித்தே வாழ்ந்தாலும்

    குறையுடை மனத்துடன் என்றும் வாழாதே

    குறையுடை மனமே குறைத்திடும் வாழ்வை !

     

    நானென்றும் எனதென்றும்எதுவுமே இல்லை

    நானென்ற நினைப்பே நலிவுக்கு அறிகுறி

    நாளைய முடிவை இன்றே கொடுக்கும்

    தூக்குக் கயிறாய் தொண்டையின் அருகே!

     

    பகலெல்லாம் உண்டு பொழுதைக் கழித்தாய்

    இரவெல்லாம் உறங்கிப் பொழுதைக் கழித்தாய்

    வாழ்க்கை என்னும் விலையில்லா வைரத்தை

    வீணாகக் சில்லரைக் காசுக்கு விற்கின்றாயே !

     

    இறந்தவனைக் கண்டு இரங்கியவன் அழுதான்

    எரிந்தவனைக் கண்டு துடித்தவன் அழுதான்

    அழுபவர்கூட இறப்பது இயற்கையின் நியதி

    அனைவரும் நிற்பது ஆண்டவன் சந்நிதி !

     

    மூடனைத் திருத்த முயற்சிக்கும் மனிதா!

    முடிவில் வெற்றி என்றும் கிடைக்குமோ ?

    காலம் முழுதும் கழுவிட முயன்றும்

    கரியின் நிறமே என்றும் மாறுமோ ?

     

    பனையைப் போல் வளர்ந்தென்ன பயனோ

    பயனும் இன்றி கொடுக்க நிழலும் இன்றி !

    பணத்தால் உயர்ந்தும் பகிர்ந்திட அறியான்

    பலநாள் வாழ்ந்தும் பயனன்றி மறைவான் !

     

    வண்ணங்கள் எத்தனை எத்தனை மனத்திற்கு

    வண்ணங்கள் மாற்றுமே கண்ணிமை நேரத்தில் !

    வண்ணமாய் நிற்கும் இறைவனின் வண்ணத்தில்

    வாழ்ந்திடும் மனிதனை வாழ்த்துங்கள் தேடியே!

     

    Share