க. பாலசுப்பிரமணியன்

 

திருச்செங்குன்றூர் -இமையவாரப்பன் பெருமாள்

27 feb pt 2 wadala 090

காலைக் கதிரில் கண்ணனின் நினைப்பில்

காலனின் துயரம் கனவாய்க் கலைந்தது

கலங்கிட்ட வாழ்வைக் கலையாய் செதுக்கிட

கண்ணனின் குழலே காதினில் சொன்னது !

 

ஆலிலை மேலினில் அசைவின்றி வந்தவன்

ஆயர்கள் நடுவினில் அன்புடன் வளர்ந்தவன்

ஆடிடும் கோபியர் அரங்கத்தை ஆண்டவன்

ஆசையில் கோதையை அரங்கத்தில் ஏற்றவன்!

 

சொல்லிய பொய்யே சுட்டிட நெஞ்சை

தனிமையில் தவித்தான் தலைமகன் தருமனும்

கண்ணனே கதியென்று கால்களைப் பற்றிட

மன்னவன் மனத்தினில் மலர்ந்தது அமைதியே !

 

கள்ளுண்ட வண்டின் கலங்கிய கீதமாய்

உள்ளுண்ட உணர்வுகள் உயிரினைத் தாக்கிட

மண்ணுண்ட மழலை  மாதவன்  திருவடி

மண்டிட்டு வேண்டிட மறையுமே மாயமாய் !

 

புவியெல்லாம் மங்களம் புனலெனத் தருபவள்

புன்னகை தொடுத்தே பொற்பதம் இருக்க

புலர்ந்திடும் பொழுதில் பேரருள் பெருக்கும்

புண்ணியன் போற்றிட புலமையும் தேவையோ ?

 

ஏழுமலை நாயகனே எங்கிருந்தால் எனக்கென்ன

ஏழுகடல் தாண்டியே எட்டாமல் இருந்தென்ன

ஏங்குகின்ற நினைவினிலே எண்ணமெல்லாம் நீதானே

ஏற்றிடுவாய் அழைப்பினையே என்னுடனே வந்துவிடு !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *