க. பாலசுப்பிரமணியன்

நானும் அவனும் ஒன்றா அல்லது வேறா?

திருமூலர்-1-1

நம் உள்ளத்துக்குள் இறைவனைத் தேடி அமர்த்துவதோ அல்லது உள்ளததுக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அவனைக் கண்டுபிடித்து வசப்படுத்தி அவனை ஆராதிப்பதோ மிகவும் கடினமான செயலாகத் தோன்றுகின்றது. அவன் உள்ளத்துக்குள்தான் இருக்கின்றானா  என்ற சந்தேகம் பலமுறை நமக்கு ஏற்படுகின்றது. ஆனால் பூசலாருக்கோ அந்தச் சந்தேகம் துளிகூட ஏற்படவில்லை. அதனால் தான் தன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்ற இறைவனுக்கு அங்கேயே கோவில்கட்டி மகிழ்ந்தார். அதனால்தான் இறைவன் அவருடைய உள்ளத்துக்கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தான். ஆனால் நம்மில் பலருக்கும் இறைவன் நம்கூட இருப்பானா வருவானா என்ற பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

ஒருமுறை இறைவன் தன்னுடைய ஒரு பக்தனுக்கு அவனுடைய பக்தியைப் பாராட்டும் வகையில் எவ்வாறு தான் பக்தனின் கூடவே இருக்கின்றேன் என்பதை காட்சியாகக் காட்டினார். அந்தப் பக்தனுக்கு  மட்டற்ற மகிழ்ச்சி. அவன் பிறப்பிலிருந்து அவன் கூடவே அவர் நடந்து வந்ததற்கு அடையாளமாக இவனுடைய பாதச்சுவடுகளுக்கு  இணையாக இறைவனின் பாதச்சுவடுகளும் தென்பட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் ஒரே ஒருவருடைய பாதச்சுவடுகள் மட்டும் தென்பட்டபோது அந்த பக்தனுக்கு அதுதான்  அதிகமான துயரில் இருந்த காலம் என்று  தெளிவாகின்றது.

“ஆஹா! நமக்கு அதிகத் துயர் இருந்த நேரத்தில் இறைவன் நம்மைத் தனியாகத் தவிக்க விட்டுச்சென்றுவிட்டானே” என்ற எண்ணம் ஏற்பட்டு இறைவனிடம் சென்று கேட்கின்றான் “நீங்கள் இவ்வாறு என்னைத் துயருள்ள காலத்தில் தனியாகத் தவிக்க விட்டுச் செல்லலாமா”?

இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் இறைவன் சிரித்துக்கொண்டே சொல்லுகின்றான் “மகனே, அங்கு நீ பார்க்கும் பாதச்சுவடுகள் என்னுடையதே. அந்தத் துயர் இருந்த நேரத்தில் உன்னால் நடக்க முடியாமல் இருந்ததால் உன்னை நான் என் தோள்களில் சுமந்து கொண்டு சென்றேன். ஆகவே, அந்தப் பாதச்சுவடுகள் என்னுடையவை.”

உண்மை நிலை இதுவே. நாம் நம்மையும் இறைவனையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கின்றோம். நம்முள் ஒருவனாய் அவன் மறைந்து இருக்கின்ற அந்த இறைவனைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் அவன் நமக்குத் துணையாக இருப்பதை உணருதல் அவசியம். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்:

 நானென்றுந் தானென்றும் நாட்டின் நாடலும்

தானென்றுத தானென் றிரெண்டில்லை யென்பது

நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

நானென்ற நானும் நினைப்பொழிந் தேனே.

நான் வேறு இறைவன் வேறு என்ற பிரித்துணர்கின்ற கருத்தை ஒதுக்கித் தன்னுள்ளேயே இறைவனின் அருளாட்சியைக் காண்பதற்குத் துடித்த அடியார்கள் பலர்.  இந்த நிலையைப் பெறமுடியாமல் தங்கள் இயலாமையை நினைத்து வருந்தி அவர்கள் வேதனைப்பட்ட காலங்களும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.  இந்த நிலையில் வாடும் பத்திரகிரியாரோ தன் மனக்குறையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் தெரியுமா ?

என்னை யறிந்துகொண்டே னெங்கோமா னோடிருக்கும்

தன்மை யறிந்து சமைந்திருப்ப தெக்காலம் ?

தன்னுள் இறைவனைக் காணாமல் தனித்துப் பார்க்கும் மாந்தர்களுக்கு அறிவு புகட்டும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவந்

தான் என்று அவன் என்று இரண்டற்ற தன்மையைத்

தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்

தான் இன்றித் தான் ஆகாத தத்துவ சுத்தமே

தன்னில் தன்னையும் தன்னுள் தலைவனாகிய இறைவனையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அப்பர் பெருமானும் தன்னுடைய பாடலில் எடுத்து விளக்குகின்றார்.

தன்னில் தன்னை யறியுந் தலைமகன்

தன்னில் தன்னை அரியத் தலைப்படும்

தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடின்

தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியனே

இதே போன்று இறைவனை நாடாது வெறும் காம உணர்வுகளுக்கு இரையாகி தன்னுடைய உண்மை நிலையை அறியாமலும் தன்னுடைய முயற்சியை முழுவீச்சாக மேற்கொள்ளாமலும் மாயையில் சிக்கித் தவிக்கின்ற மனத்தைப் பார்த்து பட்டினத்தாரும் கோபத்தில் ‘அது பித்து பிடித்த மனது” என்று சொல்கின்றார்

நாடிக்கொண் டீசரை நாட்டமுற் ற்றாயிலை நாதாடி

தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலைசெக மாயைவந்து

மூடிகொண் டோமென்றுங் காமாயு தங்கண் முனிந்தவென்னும்

பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தர்களே.

தன்னுள் அவனைக் காணவும் அறியவும் செய்கின்ற முயற்சியே தன்னை அறியும் முயற்சியோ ?

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *