க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கள்வனூர் – அருள்மிகு ஆதிவராகப் பெருமாள்

1_zQxYKJoG2QvBGV0U4XNLIg

கள்வனாய்ப் பிறந்தாய் கம்சனே சிறையிட

கள்வனாய்ச் சென்றாய் காரிருள் நேரத்தில்

கள்வனாய் வளர்ந்தாய் கோபனின் வீட்டினில்

கள்வனே! கண்ணனே! கருணையின் மன்னனே !

 

கோபியர் வீடுகளில் வெண்ணையைத் திருடி

கோபியர் நெஞ்சங்களைக் குழலினால் திருடி

கோதையின் உள்ளத்தை அரங்கத்தில் திருடி

கோலங்கள் ஆயிரம் கொண்டாய் கள்வனே !

 

மண்ணுண்ட வாயினிலே மாயைகள் காட்டினாய்

மழலைப் பொழுதிலே மாமனை அழித்தாய்

மதுராவில் ஆயிரம் கண்ணனாய் ஆடினாய்

மாலனே! மாயனே ! மனங்கவர் கள்வனே !

 

அட்டமியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் காப்பவனே

நவமியில் பிறந்தாலும் நிறைநிலவாய் வந்தவனே

அடியார்கள் உள்ளத்திலே அனுதினமும் பிறப்பவனே

அழிவில்லா உனக்கெதற்கு பிறப்பெடுக்கும் கள்ளத்தனம்?

 

மறைந்திருந்து பார்ப்பவனே மறைந்திருந்து காப்பவனே

மறைவழியில் வாழ்ந்திடவே மறைசொன்ன சாரதியே !

மலைதன்னில் நின்றாலும் மடையெனவே அருள்பெருக்கி

மனமெல்லாம் நிறைந்தவனே மங்கலமே வளர்த்திடுவாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *