இவ்வார வல்லமையாளராக சிற்பி இராசன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்.

இவரை பற்றி பதிவு எழுதி அறிமுகபடுத்தியுள்ள சண்முகநாதன் அவர்கள் குறிப்பிடுவதாவது

`சிற்பி ராஜன்’ என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. இறை மறுப்பாளரான ராஜன் கைபட்டு உருவாகும் சிற்பங்களில் தெய்வீகம் ததும்புகிறது. பாரம்பர்ய செறிவு மாறாமல், நவீன உத்திகள்கொண்டு அவர் உருவாக்குகிற இறைச் சிற்பங்கள், உலகின் பெரும்பாலான மியூசியங்களில் இந்தியக் கலாசாரத்தின் சின்னங்களாக இருக்கின்றன. காஞ்சி சங்கர மடம் முதல் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் கோயில் வரை இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான கோயில்களின் உற்சவர்கள் தயாரானது, இந்த பெரியார் தொண்டரின் பட்டறையில்தான்.

பரம்பரை ஸ்தபதிகளே நிறைந்திருக்கும் சிற்பத் தொழிலுக்கு, தறி ஓட்டுபவரையும், விவசாயத் தொழிலாளரையும், செங்கல்சூளையில் வேலை செய்தவரையும் கொண்டுவந்து, ஒளிவுமறைவில்லாமல் முழுக் கலையையும் கற்பித்து தனி அடையாளங்கள்கொண்ட சிற்பிகளாக ராஜன் அவர்களை உருவாக்கியிருக்கிறார். ராஜனின் பட்டறையில் தொழில் பழகிய 216 சிற்பிகள் சுவாமிமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சோழர் காலத்துச் சின்னங்களான ஐம்பொன் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தலித்துகள். சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையே சமஸ்கிருதம்தான். ராஜன், அதைப் பயின்றிருக்கிறார். அவரது மாணவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார்.

“நிறைய பேர் கேட்பாங்க… `கடவுளே இல்லைனு சொல்ற பெரியார் கட்சி ஆளு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’னு. நான் எந்தத் தொழிலுக்குப் போயிருந்தாலும் பெரியார் தொண்டன்தான். ஐம்பொன் சிற்பம் செய்றது என்னோட தொழில். என் பார்வைக்கு இது, கலை வடிவான சிலை. இதை வாங்குறவர் கடவுளாகப் பார்க்கிறார். என் பட்டறையோட முகப்பிலேயே பெரியார், அம்பேத்கர் படங்களைப் பெருசா ஃபிரேம் பண்ணி மாட்டிவெச்சிருக்கேன். நாத்திகம் பேசித்தான் சிற்பத்தை வியாபாரம் பண்ணுவேன். ஆயுதபூஜை, தீபாவளியெல்லாம் எங்க பட்டறையில கொண்டாடுறதே இல்லை. பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள், மே தினம் இந்த மூணு நாளையும் ரொம்பவே சிறப்பா கொண்டாடுவோம். அன்னைக்கு எல்லாருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடக்கும். முக்கியமான ஆளுமைகள் வந்து, எங்க பிள்ளைகள் மத்தியில பேசுவாங்க. என்கிட்ட சிற்பம் கத்துக்கிட்டுப்போன 216 பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க மூலமா உருவாகுற அடுத்த தலைமுறையும் அப்படித்தான் இருக்கும்” – புத்தனைச் செதுக்கியபடி புன்னகை மாறாமல் பேசுகிறார் ராஜன்.

உலகில் எந்த நாட்டில் கண்காட்சி நடந்தாலும் ராஜனையே பிரதிநிதியாக அனுப்புகிறது இந்திய அரசு. லண்டன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி என உலகம் சுற்றுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சிற்பத் திறனைப் பாராட்டிக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்களை எல்லாம், `இது எனது தொழில்; நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை’ என்று புறம் தள்ளியிருக்கிறார்.

“எங்களோடது ரொம்பவே செழிப்பான குடும்பம். அப்பா பெரிய விவசாயி. மொத்தம் 12 பிள்ளைங்க. நான் பதினோறாவது ஆளு. எல்லாப் பசங்களும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போனாங்க. ஒருத்தன் பேராசிரியர். ஒருத்தன் பெல் நிறுவனத்துல பெரிய அதிகாரி… நானும் நல்லாப் படிக்கணும்னு வீட்டுல எதிர்பார்த்தாங்க. பி.யூ.சி இங்கிலீஷ் மீடியத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். `இன்னும் ஒரு வருஷம் மட்டும் படிடா’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எனக்குப் படிப்புல நாட்டம் இல்லை. எனக்குனு ஒரு வாழ்க்கை… மனசுக்குப் பிடிச்ச தொழில்னு தேட ஆரம்பிச்சுட்டேன். அந்த வயசுலயே, ரோட்டுல இருந்து எடுத்த தார்ல, களிமண்ணுல உருவங்கள் செஞ்சு ஸ்கூல்ல வைப்பேன்.

அப்போ சினிமாவுல `கலைகங்கா’னு ஒரு ஆர்ட் டைரக்டர் இருந்தார். அவரோட சகலைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நான் தார் உருண்டையில செஞ்சு வச்சிருந்த சிலையைப் பார்த்துட்டு, `இவனை கலைகங்காக்கிட்ட சேர்த்துவிடுறேன். பெரிய கலைஞனா வருவான்’னு சொன்னார். `இனிமே நீ வீட்டுப்பக்கம் வரக் கூடாது’னு அவரை விரட்டி விட்டுட்டாங்க. நான் தனியாப் போய் அவரைப் பார்த்து, `எப்படியாவது என்னை அவர்கிட்ட சேர்த்து விட்டுடுங்க’னு கெஞ்சினேன். கூட்டிட்டுப் போனார்.

நான் பண்ணின சிற்பத்தையெல்லாம் பார்த்த கலைகங்கா, `நான் உன்னை இப்ப சினிமாவுல சேர்த்துவிட்டா, மாசம் 600 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனா, நீ வளர முடியாது. நேரா சுவாமிமலை போ… அங்கே ஐம்பொன் சிற்பம் செய்யக் கத்துக்கொடுக்கிற கல்லூரி இருக்கு. அதுல சேர்ந்து முழுசா கத்துக்கோ, நல்லா வருவே’னு சொன்னார்.

அப்போ எனக்குப் பதினாறரை வயசு. சுவாமிமலையில பூம்புகார் பயிற்சி நிறுவனத்துல, `எங்க அப்பா விஸ்வகர்மா’னு பொய் சொல்லி சேர்ந்தேன். இல்லைன்னா சேர்க்க மாட்டாங்க. ஆனா, நான் விஸ்வகர்மா இல்லேன்னு தெரிய வந்தபிறகு, என்னைப் பட்டறைக்குள்ளேயே விடலை. `பேங்க்குக்குப் போ’, `கறி வாங்கிட்டு வா’ன்னு வெளிவேலைக்கு அனுப்பினாங்க. ஆனா, எனக்கிருந்த வேகமும் வெறியும் ரொம்ப சீக்கிரமே கலையைக் கத்துக் கொடுத்திடுச்சு. மாசம் 30 ரூபா உதவித்தொகை. பயிற்சி முடிஞ்சதும், ஒரு பட்டறையில போய் வேலை செய்வேன். அங்கே தினமும் ஒண்ணரை ரூபா கொடுப்பாங்க. மொத்த மாத வருமானம் 75 ரூபா. வளமான வாழ்க்கையை மறந்துட்டு அதுக்குள்ளயே வாழப் பழகிட்டேன். அந்த அளவுக்கு கலை தாகம்.

பயிற்சி முடியுற தருணத்துல, ஆர்ட் தொடர்பான படிப்புப் படிக்கிறவங்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறாங்கனு ஒரு செய்தி படிச்சேன். ஆங்கில மீடியம் படிச்சதால, எனக்கு அது ஒரு அற்புதமான வாய்ப்பா அமைஞ்சது. எழுபத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு சிலை செய்ய அரசு ஆர்டர் கிடைச்சுச்சு. சின்னதா ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு பட்டறையை ஆரம்பிச்சுட்டேன்.

அப்போ போன டெல்லிப் பயணம் எனக்குள்ள பல கதவுகளைத் திறந்துச்சு. ஐம்பொன் சிற்பத்துக்கு உலக அளவுல பல்லாயிரம் கோடிக்கு வணிகம் இருக்கு. ஆயிரம் ஆண்டு பழமையான மரபுங்கிறதால ஐம்பொன் சிலைகளை வாங்க சர்வதேச சமூகம் ரொம்பவே ஆர்வமா இருக்கு. ஆனா, அந்தத் தேவையை ஈடுகட்டுற அளவுக்கு உற்பத்தி இல்லை. வெறும் 11 பட்டறைகள்தான் சுவாமிமலையில இருக்கு. எல்லோரும் தலைமுறையா தொழில் செய்யிற கலைஞர்கள். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தா நாலு மாசமோ, அஞ்சு மாசமோ கழிச்சுத்தான் கிடைக்கும்.

ஒரு பக்கம், இவ்வளவு பெரிய வணிகம் இருக்கு. இன்னொரு பக்கம், சமூக ஒடுக்குமுறைகளைத் தாங்கிக்கிட்டு, அவச்சொற்களைத் தாங்கிக்கிட்டு ஒரு சமூகம் பின்தங்கிப் போய்க்கிட்டே இருக்கு. கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை. அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார். திறமையும் ஆர்வமும்கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும். இங்கிருக்கிற சிலர் மட்டுமே இதைச் செய்றாங்க; எல்லாரும் கத்துக்கிட்டா பெரிய அளவுல வணிகம் நடக்கும்; சமூக மரியாதையும் மாறுமேனு யோசிச்சேன்.

தனியா சிற்பப் பட்டறை தொடங்கும்போதே, `உணவு, தங்குமிடத்தோடு இங்கே சிற்பம் கற்றுத் தரப்படும்’னு அறிவிப்புப் பலகையை மாட்டிட்டேன். முதன்முதல்ல, இந்தப் பகுதியோட போஸ்ட்மேன், `சும்மா ஊர்ல சுத்திக்கிட்டிருக்கான்; இவனுக்கு ஒரு வழிகாட்டுங்க’னு ஒரு பையனைக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பையன் இன்னும் மூணு பேரை அழைச்சுக்கிட்டு வந்தான். இப்படித்தான் என்கிட்ட பசங்க வந்து சேர்ந்தாங்க.

பொதுவா, சிற்பக்கலைக்குக் குறைந்தபட்சம் ஓவியமாவது வரையத் தெரியணும்னு சொல்வாங்க. என்கிட்ட வந்து தொழில் கத்துக்கிட்டு, இன்னைக்கு உலக அளவுல வர்த்தகம் பண்ற 99 சதவிகிதம் பேருக்கு, ஆரம்பத்துல சின்னக் கோடுகூட நேராப் போடத் தெரியாது. நிறையப் பேர், எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. யாரெல்லாம் கிராமங்கள்ல புறக்கணிக்கப்பட்டாங்களோ, அவங்களை எல்லாம் தேடிப்போய் அழைச்சுக்கிட்டு வந்து தொழில் கத்துக்கொடுத்தேன்.

நாங்களே சமைப்போம்… சாப்பிடுவோம்… குடிப்போம்… சிற்பமும் செய்வோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாம, எல்லா நுணுக்கங்களையும் கத்துக் கொடுத்தேன். பயிற்சி முடிச்சப் பசங்க அடுத்தடுத்து பட்டறைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, இதை அவ்வளவு எளிதா மத்தவங்க ஜீரணிக்கலை. இரவு நேரத்தில் பட்டறையில கல் எறிவாங்க. நாலைஞ்சு பேர் குடிச்சுட்டு வந்து, `நாளை காலைக்குள்ள ஊரைக் காலி பண்ணலைனா, வெட்டிடுவோம்’னு மிரட்டுவாங்க. எல்லாத்தையும் புறம் தள்ளிட்டு எங்கப் பாதையில நாங்க போய்க்கிட்டே இருந்தோம்…”

நாத்திகராக இருந்தாலும், நாத்திகம் பேசியே விற்பனை செய்தாலும், ராஜனுக்கு விற்பனை படிப்படியாகப் பெருகியதுதான் வியப்பு. தஞ்சைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ராஜனின் பட்டறைக்கும் வரத் தொடங்கினார்கள். ஏற்றுமதியையும் வியாபாரிகளுக்கு விட்டுத்தராமல் தானே செய்தார். நியாயமான விலை, அற்புதமான சிற்ப நேர்த்தி எனப் பல்வேறு தனித்தன்மைகள் இருந்ததால், உள்ளூர் ஆட்களும் ஆர்டர் கொடுத்தார்கள். வெகு சீக்கிரமாகவே ஒரு ஏக்கரில் பட்டறையை விரிவுபடுத்தி நல்ல முறையில் வணிகம் செய்து வருகிறார்.

இவரது உழைப்பையும், ஆர்வத்தையும், சிற்பக்கலையை பட்டியல் சாதி மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்ததையும் பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர் (254)

  1. நண்பர் செல்வன் மூன்று தேர்வுகளை செய்துள்ளார். [1] சிற்பக்கலையில் மன்னனாக திகழும் ராஜன் அவர்கள்; 
    [2] தனித்துவத்தின் உரிமை’ [3] ராஜன் அவர்கள் கலைக்கும், இந்தியாவுக்கும் பெருமை’ [4] சம்ஸ்கிருதத்தின் 
    ஆக்கம்.
    இன்னம்பூரான்

  2. ஆயிரம் பாரதி பிறந்தாலும்
    ஆயிரம் பெரியார் இருந்தாலும்
    இந்த அரசியல் கட்சிகள் இருக்கும் வரை
    இந்த சாதியை ஒழிக்க இயலாது
    இங்கு மனிதத்தை வளர்க்க முடியாது
    இடர்பாடு அனைத்தையும் புறந்தள்ளி
    இந்த நிலையை எய்திட்ட
    இந்த வல்லமையாளரை வாழ்த்துகிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.