இலக்கியம்கவிதைகள்பத்திகள்

மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -10

க. பாலசுப்பிரமணியன்

 

திருசாலக்ராமம்  (முக்திநாத்) அருள்மிகு மூர்த்திப் பெருமாள் கோவில்

images (2)

பந்தங்கள் துறந்து முக்தியை நாடும்

பக்தர்கள் வாழ்வில் பரவசம் கொடுக்க

பனிமலை நடுவினில் பரிவுடன் அமர்ந்து

பிறவிகள் விலக்கும் மூர்த்தியே ! முகுந்தா !

 

முன்னொரு பிறப்பில் முடியாக் காதலை

பின்னொரு பிறப்பில் பகிர்ந்திட வந்தாய்

தன்னொரு உறவைத் தேடிய துளசியை

இன்னொரு உறவாய் மார்பினில் அணிந்தாய் !

 

கண்டகி நதியில் காதலின் சின்னம்

கண்டவர் வியக்கும் கல்லாய் வடிவம்

கண்டதும் கொடுக்கும் கனிவுடன் முக்தியை

கண்ணனின் கருணையைக் காலங்கள் போற்றிடும் !!

 

பனிமலை நடுவில் பளிச்செனக் கல்லாய்

பாற்கடல் நடுவில் பாம்புடன் துணையாய்

பாவங்கள் அழிக்கப் பாதியில் சிங்கமாய்

பாலங்கள் அமைத்தாய் படைப்புக்கள் அனைத்திலும் !

 

எச்சில் பழத்தை இனிதே ருசித்தாய்

ஏழை குசேலன் அவலினை ஏற்றாய்

எளிய குகனை இதயத்தில் அணைத்தாய்

ஏங்கிடும் உள்ளங்கள் தாங்கிடும் தயாளா !

 

பூமகள் அமர்ந்தே போற்றிய திருவடி

புவியுடன் வானையும் அளந்த பொன்னடி

பரதனின் அரியணை அமர்ந்த காலடி

பாவங்கள் விலக்கிடும் பார்தததும் சேவடி !

 

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க