கபீர்தாசரின் கவிதைகள் (4)  

-தமிழாக்கம்: க. பாலசுப்ரமணியன்

kabir-424x282-1

குறைந்த உலர்ந்த உணவை உண்டாலும்

குடிநீர் மட்டும் குடித்தே வாழ்ந்தாலும்

குறையுடை மனத்துடன் என்றும் வாழாதே

குறையுடை மனமே குறைத்திடும் வாழ்வை !

 

நானென்றும் எனதென்றும்எதுவுமே இல்லை

நானென்ற நினைப்பே நலிவுக்கு அறிகுறி

நாளைய முடிவை இன்றே கொடுக்கும்

தூக்குக் கயிறாய் தொண்டையின் அருகே!

 

பகலெல்லாம் உண்டு பொழுதைக் கழித்தாய்

இரவெல்லாம் உறங்கிப் பொழுதைக் கழித்தாய்

வாழ்க்கை என்னும் விலையில்லா வைரத்தை

வீணாகக் சில்லரைக் காசுக்கு விற்கின்றாயே !

 

இறந்தவனைக் கண்டு இரங்கியவன் அழுதான்

எரிந்தவனைக் கண்டு துடித்தவன் அழுதான்

அழுபவர்கூட இறப்பது இயற்கையின் நியதி

அனைவரும் நிற்பது ஆண்டவன் சந்நிதி !

 

மூடனைத் திருத்த முயற்சிக்கும் மனிதா!

முடிவில் வெற்றி என்றும் கிடைக்குமோ ?

காலம் முழுதும் கழுவிட முயன்றும்

கரியின் நிறமே என்றும் மாறுமோ ?

 

பனையைப் போல் வளர்ந்தென்ன பயனோ

பயனும் இன்றி கொடுக்க நிழலும் இன்றி !

பணத்தால் உயர்ந்தும் பகிர்ந்திட அறியான்

பலநாள் வாழ்ந்தும் பயனன்றி மறைவான் !

 

வண்ணங்கள் எத்தனை எத்தனை மனத்திற்கு

வண்ணங்கள் மாற்றுமே கண்ணிமை நேரத்தில் !

வண்ணமாய் நிற்கும் இறைவனின் வண்ணத்தில்

வாழ்ந்திடும் மனிதனை வாழ்த்துங்கள் தேடியே!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க