நாகினி

 

பாதங்களால் நிறையும் வீடு..
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

 

மோதலைத் தவிர்த்து மண்ணிலே உறவின்
… மொழியென மலரும்
காதலில் கலந்த நெஞ்சுரம் கொண்டோர்
.. கால்களின் மென்மை
பாதமும் நிறைந்து வலம்வரும் வீடு
.. பாரினில் மேன்மை
நாதமாய் ஒலிக்கும் இல்லற தர்மம்
.. நலம்பெறத் தூணாம்

தூய்மையாய் நாட்டில் உறவுகள் தழைத்து
.. துலங்கிடச் செய்யும்
வாய்மையின் அறமாய் அமைந்தநல் வீடு
.. வருகையின் பாதம்
தேய்ந்திடா வண்ணம் கூடியே வாழ்ந்தால்
.. தேசமும் ஓங்கி
சாய்ந்திடாப் புகழை என்றுமே பெற்று
.. சரித்திரம் படைக்கும்

ஒற்றுமை வலிமை நிலைத்திட நினைக்கும்
.. ஒப்பிலா மாந்தர்
உற்றுணர் எண்ணம் சிறப்புடன் வளரும்
… உறுதியின் வாசல்
கற்பனை கடந்த பாலமாய் மனையைக்
.. காத்திடும் பாதம்
பற்றுடன் என்றும் உறவினை நாடி
.. பார்த்திடத் துடிக்கும்

வணங்கிட மறுத்து மூத்தவர் நோக
.. வாசலில் துரத்தும்
பணமுடன் சொத்து பெரிதென நினைத்து
.. பழகிடும் சொந்தம்
இணக்கமும் இன்றித் தலைக்கனம் கொண்டு
.. இயங்கிடும் வீடு
மணமுறி வென்று பாதமும் வழக்கு
.. மன்றிலில் நிற்கும்

எண்ணமும் அன்பின் சின்னமாய் என்றும்
.. எளிமையை விரும்பும்
கண்ணியம் வளர்க்கும் உறுதியில் நடந்து
.. கடமைகள் செய்யும்
மண்ணிலே உறவின் கூட்டமாய் மதிப்பு
.. மாந்தரின் வருகை
பண்புடன் பாதம் நிறைந்திடும் இல்லம்
.. பார்புகழ் பெறுமே!

… நாகினி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க