பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

24550407_1497453186975542_365002144_n

எஸ்.எம்.கே.எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (139)

 1. குழந்தை மனம்
  ~~~~~~~~~~~~~~

  பூனையின் பட்டுடல் தொட்டப்
  பூங்கரம் கொண்டு மொட்டு
  விரிந்திடும் மலரைப் போன்று
  வியந்திடுமன்றோ குழந்தை மனம்! – அதை
  பட்டம் பதவி பணமென்ற
  பகட்டுக ளனைத்தும் சேர்ந்தாலும்
  எட்டிப் பிடிக்க இயன்றிடுமா
  எந்திர வாழ்க்கை மனிதனுக்கு?

  வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் கண்டும் – வானில்
  விண்மீன் இருப்பதைக் கொண்டும்
  மிதக்கும் வட்ட நிலவினைப்போல
  முகம் மகிழ்ச்சியடையும் மழலைக்கு! 
  அரும்பாடு பட்டு உழைத்து
  அங்கம் நோக ஈட்டியவெல்லாம்
  தங்கமனம் கொண்ட குழந்தையின் 
  தகுதிக் கென்றும் ஈடாமோ?

  இருப்பதைக்கொண்டு மகிழும் இதயம்
  இன்முகத்தோடு இருந்திடும் என்றும்
  சற்றும் தளரா சுறுசுறுப்பு – வெறுப்பை
  சடுதியில் மறந்திடும் குழந்தைமனம்!
  தரங்கெட்ட குறுகிய நோக்கம்
  தகுதியற்ற கோணல் புத்தி
  செல்லும் குறுக்கு வழிகளெல்லாம் – மனிதா 
  செம்மை வாழ்வைக் கொடுத்திடுமா?

   – ஆ. செந்தில் குமார்.

 2. வளர்வது…

  அஞ்சுவதில்லை
  பிஞ்சுக் குழந்தை,
  அதற்கு
  புலிக் குட்டியும்
  பூனைக் குட்டியும் ஒன்றுதான்..

  பிள்ளை வளர
  உணவு ஊட்டுவதனுடன்,
  உதவாத பழக்கங்களையும்
  ஊட்டிவிடுகிறானே மனிதன்..

  விளைவு-
  அச்சமும் பேதங்களும்
  பிள்ளையின்
  வெள்ளை உள்ளத்தைக்
  கொள்ளைகொண்டுவிடுகின்றன,
  வளர்வது
  பிள்ளையின் உடல்தான்-
  உள்ளமல்ல..

  மாறுவாயா மனிதா
  இனியாவது…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. நின்னை பிரியோன்!!

  சிறுபிள்ளையென்று செல்கிறாயோ??
  விளையாட மறுக்கிறாயோ??
  அம்மா வைகிறாள்!!
  அப்பா கோபிக்கிறார்!!
  தாத்தாவும் தமயனும் தண்டிக்கிறார்கள்!!
  புறம் செல்லாமல் அடைபட்டேன்
  கூண்டிற்கிழியாய்!!
  புறம் சென்றால் கால் பழுக்கும்
  பாட்டியின் கடுஞ்சொல். !!
  புழுதிமண்ணில் தவழ ஆசை!!
  ஏர்மாட்டின் பின்செல்ல ஆசை!!
  சேற்றுமண்ணோடு விளையாட ஆசை!!
  குஞ்சுக்கோழிகளை கொஞ்ச ஆசை!!
  இவ்வனைத்தும் நிறைவேற வேண்டும்
  என்று நினைவெல்லாம் ஆசை!!
  இவ்வனைத்திற்க்கும் அப்பால்
  உன்னை கொஞ்சி மகிழ ஆசை!!
  மேற்ச்சொன்ன ஆசை எப்போதோ??
  கூண்டிற்கிழியாய்!!
  ஆசைகளுடன்!!
  நீயாவது விலகாதே!!
  ஆசை நிறைவேறும் மட்டும்!!
  அதுவரை!!

  நின்னை பிரியோன்!!

 4. அரவணைப்பு : பூந்தளிர் அணைப்பில் ஒரு பூனை இங்கே!
  சாந்தமாய் இருக்குது தன் குணம் மறந்தே!
  இளங் கன்று பயமறியாது!
  பிள்ளைக்கு பேதம் தெரியாது!
  அன்பின் பிடியில் அகப்படும் மலையே!
  அன்பின் விளைவில் அனைத்தும் நலமே!
  அன்னையின் அணைப்பில் பிள்ளை மகிழும்!
  பிள்ளையின் அணைப்பில் அகிலம் மகிழும்!
  நீரின் அணைப்பில் பயிர்கள் வாழும்!
  ஆண்டவன் அணைப்பில் உலகம் வாழும்!
  காற்றின் அணைப்பில் சீவன் வாழும்!
  அணைப்பில்லா உலகம்!
  உயிரில்லா மெய்யாகும்!
  மணமில்லா மலராகும்!
  இசையில்லா பாட்டாகும்!
  ஒளியில்லா விளக்காகும்!
  மழையில்லா பயிராகும்!
  அன்பில்லா தாயாகும்!
  அரவணைத்து வாழ்ந்திட்டால்!
  உலகம் உன் வசமாகும்!
  கணவன், மனைவி அரவணைத்து சென்றிட்டால்!
  இல்லறம் இனிதாகும்!
  அண்ணன், தம்பி அரவணைத்து வாழ்ந்திட்டால்!
  குடும்பம் சிறந்தோங்கும்!
  மாமியார், மருமகள் அரவணைத்து இருந்திட்டால்!
  சொர்க்கம் வீட்டிலே உருவாகும்!
  அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
  இது ஆன்றோர் மொழி!
  அரவணைப்பின்றி உலகம் மகிழாது!
  இதுவே இன்றைய வாழ்வின் வழி!
  ,

 5. பாப்பா பாட்டு

  என்னிடம் வாருங்கள் பூனையாரே
  நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே

  காக்கை குருவி எங்கள் சாதியெனப் பாடினாரே
  சாதிகள் இல்லை என்றென்னிடம் கூறினாரே

  என்னிடம் வாருங்கள் பூனையாரே
  பேதமின்றி வாழ்ந்திடக் கற்றோரே

  இணைந்திருவரும் பாடம் புகட்டலாம்
  வேற்றுமையும் பாகுபாடும் தவறென உணர்த்தலாம்

  என்னிடம் வாருங்கள் பூனையாரே
  நானில மனிதருக்கு நல்வழி புகட்டிடுவீரே

  எந்நிற மிருப்பினும் யாவும் ஒரே தரமென்று
  எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்
  என்றும் எங்கும் கூடி வாழும் பூனையாரே

  எம் மனிதருக்கும் அதை உணர்த்திட வாரீரே
  மதம் நிறம் மொழியென அவர் பாடும்
  வேற்றுமை கீதங்கேட்டு பாரதத்தாய் வருந்துவதைப் பாரீரே..

  என்னிடம் வாருங்கள் பூனையாரே
  மனிதரிடம், சாதிகள் இல்லையென உணர்த்துவீரே
  பாகுபாடு கூடாதென தெளிய வைப்பீரே

  என்னிடம் வாருங்கள் பூனையாரே
  நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே!!

 6. குழந்தையும் பூனையும்..!
  =======================

  குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..

  ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!

  மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்..

  ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!

  அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..

  ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!

  பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!

  ……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!
  .
  .
  .
  ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..

  ……………ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!

  மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..

  ……………மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!

  தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..

  ……………தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!

  ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..

  ……………அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!
  .
  .
  .
  வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..

  ……………வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!

  தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..

  ……………எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!

  ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..

  ……………உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!

  மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..

  ……………தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!
  .
  .
  .
  காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..

  ……………கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!

  வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..

  ……………மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!

  பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..

  ……………பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!

  ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..

  ……………என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!

 7. படக்கவிதை

  காலத்தை வெல்ல வேண்டுமே !
  கால்களில் காகமும் குருவியும் —
  காலையில் கிழக்கு நோக்கி
  பணிக்குப்பறக்கும் தந்தை –
  வேகுமோ அரிசியும் பருப்பும்
  வேகத்தில் நடக்கிறது சமையல் –
  அவகாசம் கொடுக்காத அவசரம் –
  வேலைக்கு நேரமாகிறதே –
  மேற்கே பறக்கும் தாய் –
  ஓ ! குட்டிப்பூனையே !
  அந்தக்குழந்தை
  அன்பு காட்ட ,
  பாசம் பொழிய ,
  உன்னைத்தவிர யாரிருக்கார்
  இந்த பொருள் சார் உலகில் ?

  ஆக்கம்
  கவிஞர் டாக்டர் எஸ் .. பார்த்தசாரதி — MD DNB PhD
  பேராசிரியர், மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி, புதுச்சேரி
  Phone : 9344304042

  எப்படி கவிதை அனுப்ப வேண்டும் என்று தெரிய வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *