-செண்பக ஜெகதீசன் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்.  (திருக்குறள் -785: நட்பு) 

புதுக் கவிதையில்… 

பேசிப் பழகித்தான் வருவதல்ல
நட்பு என்பது,
ஒத்த உணர்வே
நட்பெனும் உரிமையைக் கொடுக்கும்…! 

குறும்பாவில்…

 நட்பைப் பெற்றிட
பேசிப் பழகிட வேண்டாம்,
ஒத்த உணர்வேயந்த உரிமைதரும்…!      

மரபுக் கவிதையில்… 

ஒருவருக் கொருவர் கலந்துபேசி
-ஒன்றாய்ச் சேர்ந்து பழகவேண்டாம்,
அருமை மிகுந்த நட்பதுதான்
-அரும்பி யென்றும் நிலைத்திடவே,
கருத்தில் கொண்டிடு உண்மையிதைக்
-காணும் மாந்தர் தமக்குள்ளே
இருக்கும் ஒத்த உணர்வதுதான்
-ஈந்திடும் நட்பெனும் உரிமையையே…! 

லிமரைக்கூ… 

வேண்டியதில்லை கலந்துபேசிப் பழக்கம்,
மாந்தர் தமக்குளுள்ள ஒத்த உணர்வதுவே
நட்பென்னும் உரிமையதை அழைக்கும்…! 

கிராமிய பாணியில்… 

நட்பாயிரு நட்பாயிரு
நாலுவரோட நட்பாயிரு…

நல்லாப் பேசிப்பழகியிருந்தாத்தான்
நட்பு வருமுண்ணு நெனைக்கவேண்டாம்,
ஒருத்தருக்கொருத்த
ஒத்த மனசு இருந்தாப்போதும்,
ஓடிவரும் நட்பு ஒன்னத்தேடி…

அதால
நட்பாயிரு நட்பாயிரு
நாலுவரோட நட்பாயிரு…!

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க