மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -1

க. பாலசுப்பிரமணியன்

 

திரு வல்லபர் (திருவல்லா)  

images (3)

மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது

மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது

மாலையை ஏந்திய கோதையைப் போல

மாலனைத் தேடி மனமும் சென்றது !

 

ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ

பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?

தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே

வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !

 

சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்

வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்

தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்

தேனினும் இனிய திருவுடை அரங்கன் !

 

கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு

கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்

கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்

கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !

 

தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது

தோகளன் வதைக்கத்  துணையாய் வந்தது

தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்

தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !

 

வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே

வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !

வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்

வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !

 

சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்

மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்

தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்

பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!

 

 

About க. பாலசுப்பிரமணியன்

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க