Tag: கிம் யாங் – ஷிக்

  • கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

     

    பவள சங்கரி

     

    கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த உள்ளுணர்வு போன்றவை இவருடைய படைப்புகளை இவர்தம் சமகாலக்  கலைஞர்களின் படைப்புகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன என்றால் அது மிகைக்கூற்றல்ல. இவர்தம் எழுத்துகள் இவர் கொரிய நாட்டின் மீது மட்டுமின்றி அனைத்துலக மனிதர்களின் மீதும் மிக நெருங்கிய நேசம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன. மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தக்கூடியவை இவர்தம் கவிதைகள். மெய்யியலும், ஆன்மீகவியலும் ஒருசேர இணைந்த கவின்மிகு படைப்புக்களாக உள்ளன.

    இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கவிஞர் கிம் யாங் – ஷிக் அவர்கள் கொரிய நாட்டின் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தை ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று,  இந்தியத் தத்துவங்கள் குறித்த முதுநிலை பட்டப்படிப்பை சியோல் நகரின் டோங்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டம் பெற்றவர். கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநரும் ஆவார். சியோல், சர்வதேசக் கொரிய எழுத்து மையத்தின் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் என்பன போன்ற பல சமூக, இலக்கியப் பொறுப்புகளில் இவர் ஆர்வமுடன் செயல்படுபவர்.

    இவர் பெற்றுள்ள விருதுகளுள் The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கன. இவர்தம் அற்புதமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் கிம் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்டத் தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருந்ததை நன்றியுடன் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்வதோடு அதை அவர் எனக்களித்த கௌரவமாகவும் கருதுகின்றேன்.

    சில ஆண்டுகளாகக் கொரிய – தமிழ் மொழித்தொடர்பு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கொரிய மொழி இலக்கியங்களைப் பயிலவும், சிலவற்றை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யவும் முனைந்துள்ளேன். சமீபத்தில் கொரிய-தமிழ் கலாச்சார உறவுகள் தொடர்பான, ‘சாம்குக்யுசா’ என்ற கொரிய நாட்டுத் தொன்மத்தின் அடிப்படையிலான, “கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்” என்ற நூல் வெளியிட்டுள்ளேன். இவற்றின் மூலம் சில கொரிய நண்பர்களைப் பெறும் நல்வாய்ப்பும் அமையப்பெற்றேன். அந்த வகையில் பண்டைய கொரிய மொழி  தமிழ் மொழி ஆகியவற்றிற்கு இடையே உள்ள பண்பாட்டுப் பரிமாற்றம்  குறித்த ஆய்வுகளை  மேற்கொண்டுவரும் திரு யங் கிமுன் அவர்களின் மூலம் அறிமுகமான கொரிய கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் கவிதை நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டு முழுமையாக இந்தியாவிற்கும், இந்தியர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட, கொரிய தாகூர் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான திருமிகு கிம் யாங்-ஷிக் இந்திய நாட்டின் பெருங்கவி இரபீந்திரநாத் தாகூர் மற்றும் தன்னிகரில்லாத் தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான காந்தியடிகள் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர்.  தாகூர் சங்கத்தின் நிழற்குடையின் கீழ் இந்திய ஓவியங்கள், பரதக்கலை, நாடகம், இலக்கியம், மதங்கள், தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. முதன்முதலில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கொரியக் கவிதைகளை இயற்றிய கவிஞர் என்ற பெரும்பேறும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திருநாட்டிற்கு 30 முறைகளுக்கும் மேல் வருகைபுரிந்துள்ள மீப்பெரும் கொரிய இலக்கிய ஆளுமை கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய இளம் வயதிலிருந்தே தாகூரின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருவதோடு அவர்தம் கவிதைகள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர் என்பதை அவருடைய சொந்தக் கவிதைகள் மூலம் அறிய முடிகின்றது. மனிதர்களின் துன்பங்களைக் கண்டு ஆழ்ந்த இரக்கம் மேலிட, வாசகர்களின் உள்ளத்தை உருகச்செய்யும் படைப்புகள் மூலம் அதை வெளிப்படுத்துவதிலும் வல்லவர் .

    தாகூரின் கவிதைகளின் தாக்கம் இவர்தம் படைப்புகளிலும் மிளிர்வதையும், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கின்றார் என்ற எண்ணத்தையும் இவர்தம் படைப்புக்கள் நமக்குள் விதைக்கத்தான் செய்கின்றன! மெல்லிய மலர் இதழ்களால் வருடுவது போன்ற இதமானதோர் உணர்வை படிப்போர் உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் இவர்தம் கவிதைகள் தாகூரின் படைப்புகளை நினைவூட்டத் தவறுவதில்லை. சகோதரர், அன்னை, அன்புக்கணவர் என மனித உறவுகளை உயிராக மதிக்கும் இவர்தம் இளகிய அன்பு மனத்தை இவருடைய படைப்புகளின் மூலம் நாம் உணர முடிகின்றது. கவிஞர் கண்ணதாசன் தமக்குத்தாமே இரங்கல் கவிதை எழுதிக்கொண்டதை நினைவூட்டும் விதமாக கவிஞர் கிம் அவர்களின், ‘புனையா ஓவியம்’ எனும் கவிதையைக் குறிப்பிடலாம். இப்படி பல்வேறு நிலைகளில் படிப்போர் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகளாக  விதி, இரங்கற்பா, இலையுதிர் காலம் எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர்தம் இயற்கைக் காதலை வெளிப்படுத்தும்வண்ணம் இவர் படைப்புகளில்  மலர், பசும்புல்,  பனித்துளி, மேகம், வானம், மரங்கள், பறவைகள் தொடர்பான காட்சிப் படிமங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கையின் உன்னத படைப்பான மனிதர்களின் மீது அதீத அன்பு கொண்ட இக்கவியுள்ளம் மனிதர்களின் இன்ப துன்பங்களை அழகுறப் படம்பிடித்துக் காட்டுவதோடு, வேதனையில் வாடும் உள்ளங்களுக்கு நம்பிக்கை விதைகளையும் விதைக்கத் தவறவில்லை.

    தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பனுவல்களை உள்ளடக்கிய இத்தொகுப்பு கொரிய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என அனைத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தியாவைப் பற்றிய இவர்தம் கவிதைகள் அனைத்தும் நம் நாட்டின் மீதும் நம் நாட்டு மக்களின் மீதும் இவர் கொண்டுள்ள அதீத அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்திய மக்களின் மீது, குறிப்பாக இந்தியச் சிறார்களின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாகவே இத்தொகுப்பின் சில கவிதைகள் அமைந்துள்ளன.

    தெற்காசிய நாடுகளின் கொரிய மொழிக்கல்வித் திட்டங்களுக்குத் தமது சிறப்பான பங்களிப்பையும் இவர் அளித்து வருவது வரவேற்பிற்குரியது. கொரிய – இந்திய அறிவு சார்ந்த, பண்பாட்டு கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது. தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவரான இக்கவிஞர், அங்கு கொரிய கல்வித் திட்டங்களை வலுப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது பெருமைக்குரியது. ஆயிரக்கணக்கான கொரிய மற்றும் உலக இலக்கியங்களின் மிகச்சிறந்த நூல்களையும், இதழ்களையும் மனமுவந்து அளித்துள்ளதோடு, ‘கிம் யாங் – ஷிக் ஊக்கத்தொகை’  என்ற பெயரில் நிதி நல்கையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் இந்தியாவின் கலாச்சாரத் தொன்மை மட்டுமன்றி, தத்துவம், சமூகம், படைப்பாற்றல் மற்றும் அழகியல் பரிமாணங்கள் போன்ற அனைத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை இவர்தம் படைப்புகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இவருடைய பல படைப்புகள் ஆங்கிலம், சீனம், ஜப்பானியம், உருசிய மொழி, போலிஷ், இந்தி போன்ற பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கொரிய – இந்திய உறவில் நாட்டம் கொண்ட நல்லுள்ளங்கள் சார்பில் திருமிகு கிம் யாங்-ஷிக்  அம்மையார் அவர்களை, இன்னும் பல்லாண்டு இலக்கிய உலகில் திறம்பட வலம்வந்து,  இந்திய நாட்டின்மீது ஆழமான அன்புடன், நீண்ட ஆயுளும், நிறைவான உடல் நலமும் பெற்று வாழ  உளமார வாழ்த்தி வணங்குகிறேன்.

    கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக் கவிதைகள் – தமிழாக்கம் – பவள சங்கரி , நூல் வெளியீடு மார்ச் 10, 2018 அன்று தமிழக அரசின் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் முதற்படியைப் பெற்றார். கொரிய குடியரசுத் தூதர் திரு.ஹியூங் டே கிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 87 அகவை நிரம்பிய, கொரிய தாகூர் சங்கம் மற்றும் இந்தியக் கலைக்காட்சியகம் நிறுவனர், சியோல், தென் கொரியா, முனைவர் கிம் யாங்-ஷிக் அவர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களின் அற்புதமான உரை இது.

    தமிழ்ப் புலமை மிக்க கொரிய அறிஞர்கள் இன்று உருவாகும் காலம் என்றே தோன்றுகிறது. கொரிய – தமிழ் கலாச்சார உறவு குறித்து பரவலாகப் பேசப்படும் இக்காலகட்டத்தில் தமிழ் அறிஞர்கள் கொரிய மொழி கற்கவும், கொரிய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி கற்கவும் ஆர்வம் காட்டுவது இயல்பானதே. கொரிய நாட்டு அறிஞர்களோடு இணைந்து தமிழ் கொரிய மொழி ஒப்பாய்வில் ஈடுபடுவதற்கான தக்க தருணம் இது என்றே கொள்ளமுடிகிறது.  இத்துறையில் குறிப்பிடத்தக்க நல்ல ஆய்வுகள் தோன்றவேண்டும். கொரியா என்றால் மின்னணுப் பொருள்கள் (Electronics) மற்றும் கார் உற்பத்தி என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டிருந்த தமிழர்களுக்குக் கொரிய மொழியின் நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணியினையும் அத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய கொரிய மொழியுடன் தமிழ் மொழி பின்னிப் பிணைந்துள்ள நிலையினையும் கொரியப் பண்பாட்டுப் பெருமையினையும், கலைத்துறையில் அந்நாடு ஏற்படுத்தியுள்ள சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவும், கொரிய தமிழ்நாட்டுத் தொடர்பில் உருவாகும் நட்புறவும் பெருகி வளரவும் நற்காலம் கனிந்துள்ளதாகவே எண்ணமுடிகிறது. அந்த வகையில் கொரிய மொழி அறிஞரும், கவிஞரும், கட்டுரையாளரும், இந்தியக் கவிஞர் தாகூர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், தாகூர் சங்கத் தலைவரும், இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் தனிப்பட்ட ஆர்வமும், அன்பும், அக்கறையும் கொண்ட திருமிகு கிம் யாங் – ஷிக் அவர்களின் படைப்புகள் தற்கால ஆசிய இலக்கிய உலகில் ஒரு புதிய பரிமாணத்திற்கு வழி கோலியுள்ளது என்றால் அது மிகையல்ல.

    கொரிய மொழியில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் பல படைப்புகளை வெளியிட்டுள்ள அம்மையாரின் பல படைப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் சிறப்பு.

     

    இவரது சில கொரிய படைப்புகளின் பட்டியல்:

     

    கவிதைத் தொகுப்புகள் – Legend of Chongup – Fusa, Cho-ee collection ’74, Bird’s Sunrise 86, Sparrows in Seocho Village ’90, To be Grass Flowers, Grass Leaves ’92, A collection of poetry in English and Korean, They are Never Lonely ’98, A Book Of Long Epic Poetry, Hymn Of Elegy On The Tomb Of An Arm ’99, The whole collection of Kim Yang-Shik’s Poetry, Brightness of Sunset ’02, As Tree Limbs Turn Towards Winter ’05, A Floating Cloud In The Distant Sky ’09.

    நூல்களும் கட்டுரைகளும் : An Encounter with Foreign Poets ’78, Along the stream of Ganges ’90, Spring, Summer, Autumn and winter ’00.

    மொழிபெயர்ப்புகள் – கொரிய மொழியில்: R. Tagore’s Books Of Poetry Gitanjali ’82, Modern Indian Literature ’82, by K.Kripalani, Tagore: A Life ’82, by Kripalani, Tagore’s Last Poems ’83, R. Tagore’s Bhuddism ’96, Crescent Moon ’92, Tagore’s Essays Sadhana ’93, Tagore’s Drama selected Seven works; Sanyasi, King and Queen, Chitrangada, Post Office, Cycle of Spring, Kingdom of Card, Chandarica ’13, Bird’s Wedding ’97, Poetry by D.Ramesh, Silk Empress ’07, Novel by N.Parthasarathi, A book of Poetry in English and Korean Gitanjali.

    அம்மையார் கலந்துகொண்ட பல்வேறு நாட்டின் கருத்தரங்கங்கள், மகாநாடுகள், வாங்கிய விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள் போன்றவை ஏராளம். இவரைக் கொரிய நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காண்பது உண்மையில் நியாயமற்ற செயலாகும். இவர்தம் மனிதநேயப் பண்புகள், பரந்த மனப்பான்மை, சக மனிதர்களிடம் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும், அக்கறையும் எத்தகைய அரசியல் எல்லைகளையும் உடைத்து நொறுக்கிவிடும் வல்லமை பெற்றது. இவரை உண்மையில்  இந்த பிரபஞ்சத்தின் சொத்தாகவே அடையாளம் காணமுடிகிறது. பெரும்பாலான ஏனைய கொரிய எழுத்தாளர்கள் போலவே அம்மையாரும் இயற்கை காதலராகவே இருக்கிறார். போர், தீவிரவாதம், கொடுஞ்செயல்கள் புரிவோர் போன்றவற்றில் மிகுந்த வெறுப்பும், வருத்தமும் கொண்டுள்ளதை இவர்தம் படைப்புகள் மூலம் அறியமுடிகிறது.

    வாழ்க்கையைச் சரிவரப் புரிதல் என்பது மனிதராகப் பிறந்தோருக்கு கிடைத்தற்கரிய வரம். அத்தகைய வரம் அருமையாக அமையப்பெற்றவர் இக்கவிஞர் என்பதற்கு ஆதாரம் இவருடைய படைப்புகளே சான்று. இவருடைய கவிதைகள் இலக்கியச் சுவை மட்டுமன்றி பக்தியோடு, முரண்பாடற்ற ஒத்திசைவோடு கூடிய எளிமையும், சிறிதளவு உலகாயதமும் கலந்த அற்புதமான படைப்புகளாக மிளிர்வதைக் காணமுடிகிறது. ஆன்மீகமும், இயற்கை வாதமும் கலந்த வித்தியாசமான இப்படைப்புகள் வாசகர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்கக்கூடியது.

    இந்திய மக்களின் அடித்தட்டு வாழ்க்கையின் இரணங்களை உளப்பூர்வமாக உணர்ந்ததன் பாதிப்பு அவருடைய படைப்புகளில் வெளிப்படுகிறது. இந்திய மண்ணின் வளத்தோடு சேர்த்து அதன் ஏழ்மையையும், எளிமையையும் கூட மிக இயல்பாக வெளியிட்டுள்ள விதம் அவருடைய யதார்த்தமான மனித நேயப் பண்பிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு எனலாம். தாகூரின் படைப்புகள் ஏற்படுத்திய பாதிப்பில் எழுந்த கவிதைகள் அனைத்தும் தாகூரின் படைப்புகள் போன்றே காலங்கடந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவர்தம் படைப்புகளில் நவீன பிரபலமான கொரிய கவிஞர்களான மன்ஹே ஹேன் யாங் -யுன் மற்றும் மிடாங் சோ சோங்-சூ ஆகியோரின் செல்வாக்கு உள்ளதைக் காணமுடிகின்றது. பிரபஞ்சம் முழுவதையும் குறித்து அவர் எழுதித்தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டவராக இருந்தாலும் அடிப்படையில் அவருடைய படைப்புகள் அனைத்தும் கொரிய மண்ணின் அனுபவங்கள் சார்ந்ததாக உள்ளதென்பதே நிதர்சனம்.

    கொரிய கவிஞர் மிடாங் சோ சோங்-சூ  கவிஞரின் படைப்புகள் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுவது ஒரு நேர்மையான திறனாய்வாக அமைகின்றது.

    “அவர் கவிதைகள் தமது புத்திசாலித்தனமான அறிவுக்கூர்மையின் முடிவற்ற கன்னிமை கொண்டவை. ஒரு நாளும் அவர் தம் பணிகளின் இயக்கத்தை நிறுத்தவோ, அல்லது முடிவற்று முன்னேறிக்கொண்டிருக்கும் தமது ஆன்மாவிற்கு ஓய்வு கொடுக்கவோ முனைந்ததில்லை. ஓய்விற்கும், பணிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பவர் அவர். என்னைப் பொறுத்தவரை, சாத்தானும், தேவதையும் கூட நெருங்க முடியாத அந்த அதிசயமான உள்ளுணர்வு நிலையை எப்படி அடைவது என்றே தெரியவில்லை. வெற்றிகண்ட அவருடைய சிந்தைகள் அவருடைய யதார்த்தமான கண்ணிற்குப் புலப்படாத சக்தியின் அழகிற்குள் பொறிக்கப்படலாம்” (பங்கஜ். என். மோகன், உதவி பேராசிரியர், கொரிய கல்வி, சிட்னி பல்கலைக்கழகம்)

    உணர்வுகளின் குவியலாக மட்டும் இல்லாமல் அவர்தம் கவிதைகள் தெளிந்த நீரோடையாக, அமைதியின் அங்கமாக, குறுகிய சொற்களில் பெரும் தத்துவங்களை விளங்கச் செய்வன.

     

    Beyond Time & Space-Kim Yang Shik

    Share
  • A Ruby – மாணிக்கம்

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    Light-in-Heart

     

    மலையுச்சியில் கருகுமொரு மலரது,
    நொறுங்கியதொரு இருதயத்தின் 
    வழியுமொருத்துளிக் குருதி,
    வெள்ளியாய் ஒளிரும் ஆழ்கடலினூடே
    எவருமறியா, தூய்மையானதோர் நிர்வாணத்துளி
    மர்மமிகு காலைக் கடலினூடே
    புதைந்து கிடக்கிறது.
    இரவின் பின் இரவாக
    இப்புவியை கனவின் கனவாக்கி
    தீச்சுவாலையாக உருக்கொண்டதது.

    Share
  • Elegy – இரங்கற்பா

     

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இரங்கற்பா

    images (3)

    உன்னால்தான் உயிரோடிருக்கிறேன்.
    உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான்.
    ஓ எனதன்பே.

    குரலற்ற எமது இரைச்சல்
    விண்ணையே குத்திக் கிழித்தாலும்
    உன்னை மட்டும் அடைவதேயில்லையது
    எனினும் பனியாய் உறைந்து
    தொலைதூர சிகரங்களில் குவிந்திருக்குமது
    மீண்டும் ஆதிநாளுக்கே இழுக்கிறது.

     

     

    Share
  • Encounter With A Difference – வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின் – மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    1 (1)

    எனக்காகக் காத்திருக்கிறாய் நீ,
    உனக்காகக் காத்திருக்கிறேன் நான்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருக்கிறோம்.

    நீ என்னிடம் வருவதில்லை,
    நான் உன்னிடம் வருவதில்லை.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் வருவதில்லை.

    ஒருநாள் நான் உன்னிடம் வருவேன்
    ஆனால் நீ என்னிடம் வராமலே போகலாம்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருந்தாலும்
    ஒரே மனமென்பதால் என்றுமே வருவதில்லை.

    Share
  • Early Spring – வசந்த விடியல்

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : சோ.ஊஞ்சை
    தமிழாக்கம் : பவள சங்கரி

    Icicles on Bee Street in front of the Sequoia. Democrat photo by Shelly Thorene

    பனிபடர் காலையில்
    பொறாமையில் கருகும் பைன்கள்
    மஞ்சள் பச்சை தீப்பிழம்புகள்,
    விழுங்கலைப் போன்று உனது முகத்தைக் கழுவிக்கொண்டாய்
    நீரில் மூழ்கி,
    உன் பின்புற முடி வறண்டுவிடும் முன்பு
    பளபளக்கும் கண்களுடன் என்னிடம் வந்துவிடு நீ.

    Share
  • Today II

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இன்று II

    heart_handsஆகா ஆன்மா,

    எல்லையற்ற வெளியில் ஓர் ஊதா
    எம் ஆன்மா, வேதனையிலும், தனிமையிலும்!
    இன்றோர் பனித்துகளாய் இருந்துவிடு
    அந்த பாறையில் மோதி துகள்களாய் பறந்துவிடு.

     

     

    Share
  • INDIA / X – Fleeting thoughts

     
    விரைந்தோடும் எண்ணங்கள்

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    சூரியனும் சந்திரனும் அன்றாடம்
    தோன்றியும் மறைந்தாலும்

    அவையிரண்டும் என்றும் ஒன்றுபோலில்லை – அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை.

    இப்புவியில் வாழ்தல் பொருட்டு
    தோன்றியவை அனைத்தும் மறைந்துவிடுகின்றன.
    எவ்வாழ்வும் நித்தியமில்லை – அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை.

    நான் நிற்கும் இடத்திலிருந்து
    காற்று உயர்ந்து மேகச் சில்லொன்றை
    விரட்டியடிக்கிறது.
    தற்போது நெருங்கி நெருங்கி வருமோர்
    பிரார்த்தனை மணியோசையைக் கேட்கிறேன்.

    தற்பெருமையையும் வெறுமையையும்
    அவ்வளி திரும்பப் பெற்ற தருணமதில்
    புதிய புல்லின் நறுமணம் மறைகிறது.

    Share
  • INDIA /IX – Observing an Ox, I reflect

     

    எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
    தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாகத் தங்கிவிடுவதல்ல.

    மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
    ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
    தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

    பூமியில்லா வானமும் இல்லை,
    வானமில்லா பூமியும் இல்லை.

    ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
    முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

    Share
  • INDIA / VIII – The transcending eye

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

    800px-CandlesInBuddhistTemple

    கண்களைக் கடந்து

     

    ஓ ஒளியே, மெய்மையில்   சுடர்மிகும் ஒளி நீயே.
    சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
    சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
    சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.

    நாளுக்கு நாளும்
    இரவின் பின் இரவும்
    ஓ ஒளியே, பிரார்த்தனையில்
    உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
    மலர்கிறாய் நீ.

    உறுதியாய் நித்தியத்திற்காய்
    மலரும் மணமிகு தாமரையாய்
    ஆகிவிட்டாய் நீ.

    Share
  • INDIA / VII – Beyond the vast expanse

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    பரந்து விரிந்த அகல்வெளிக்கப்பால்

    images (1)

    எல்லையற்ற அகல்வெளிக்கப்பால் பெருகியோடும் தங்க ரேப் மலர்கள்
    தொடுவானத்தில் வெகு தொலைவிற்கு மேற்பரவியுள்ளன
    பாழடைந்த பண்டைய ஆலயமொன்றும் படர்ந்துள்ளது.

    எருதுகள் ஏர் உழும் வறண்ட பூமி
    ஹரிஜன்களும், ஏழைகளும், வீடற்றோரும்
    கரங்களில் புற்பூக்கள் ஏந்தியவாறு கூடுகின்றனர்.

    வானமும் பூமியும் மாற்றமின்றியே இருக்கின்றன
    முன்பு போலவே ஆறும் அருகில் ஓடுகின்றது.
    தமது வீடுகளை கட்டமைக்கவும் வேண்டுமா அவைகள்.
    தமது கூரைகளை வேயவும் வேண்டுமா அவைகள்.
    மதில்களோ அன்றி சுவர்களோ அமைத்தலும் வேண்டுமா.

    காந்தியின் ஹரிஜன்கள் ஆதரவற்றவர்களாயினும் வானின் கீழுள்ள
    பரந்த உலகையே தங்கள் இல்லமாய்க் கொள்வதால் வருந்துபவர்களில்லை.

    Share
  • INDIA / VI – In this land

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     
    இந்த மண்ணில்
    அனைத்தும் எரிந்து கருகிக்கிடக்கின்றன!
    கற்கள், நீர், மிருகங்கள்
    மற்றும் மனிதரும் கூட.

    இந்த மண்ணில்,
    அனைத்தும் வெகுகாலத்திற்கு முன்பே அளவிடவொண்ணா
    ஆழத்தில் புதையுண்டிருக்கின்றன,
    தீவிர பதட்டமும், அநித்யமான கலக்கமும்
    மற்றும் கோபமும் கூட.

    கதிர்வீச்சுடனான காட்டு மலர்களுடனும்
    சாறுநிறை கனிகளும்,
    மரகத வண்ணத்தில் செழித்தோங்கியிருக்கும்
    விண்ணை முட்டும் மரங்கள்.

     

    Share
  • INDIA/ V – Stone, water, birds and beasts

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

     
    கல், நீர், பறவைகள், மிருகங்கள்

     

    கல், நீர், பறவைகள், மிருகங்கள்
    மற்றும் மக்களும் கூட
    இம்மண்ணில் தகிக்கும் கோடை வெப்பத்தில் வாடுகிறார்கள்.

    இருப்பினும் தீவிர பதட்டம், தேவையற்ற கவலைகள்
    மற்றும் சீற்றமும் கூட
    அனைத்தும் வெகுகாலம் முன்பே ஆழங்காணவியலாத
    இம்மண்ணின் ஆழத்தில் புதையுண்டிருக்கிறது.

    மரங்கள் வண்ணவண்ண மலர்களையும் தீஞ்சுவைக் கனிகளையும்
    விளைவித்து பசுமையான இலைகளால் ஆடைசூடி உயர் வானையும் முத்தமிடுகின்றன.

    கனிகள் கனிந்தும் மொட்டுகள் மலர்ந்தும்
    பறவைகள் பறந்தும் மிருகங்கள் ஓடியாடியும்
    மற்றும் இதே எளிமையுடனும் தன்னிச்சையுடனும்
    மக்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்து மரிக்கிறார்கள்.

     

     

    Share
  • INDIA IV – Bus stops a while

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் யாங் – ஷிக்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    பேருந்து நின்ற சில மணித்துளிகள்

    bus

    தெரு முனையில் சில மணித்துளிகள் நிற்கிறது பேருந்து.
    சாளரத்தினூடே ஓர் சிறுவனைக் காண்கிறேன்
    ஒருகை வேர்க்கடலை நிரப்பிய கூம்புவடிவ காகிதப் பொட்டலத்தைப் பிடித்திருக்கிறான்.

    மின்னும் விழிகளுடன் என்னை நோக்கி வந்தவன்
    தனது பண்டங்களை நான் வாங்க விரும்பினான்.

    பேருந்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன், என் மனம்
    வெறுமையானதோடு ஆன்மாவும் தொலைந்தது
    வளி பலரை ஒரு யுகத்திற்கே அடித்துச் சென்றுவிடுகிறது.

    Share
  • INDIA / III – புள்ளினங்களின் சூர்யோதயம்

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

    Amitābha in Sukhavati (from the Mogao Caves, Dunhuang, Tang China) wikipedia
    Amitābha in Sukhavati (from the Mogao Caves, Dunhuang, Tang China) wikipedi

    புலரும் பொழுதினில்
    மங்கும் நட்சத்திர ஒளியினில்
    பன்முக இரத்தினமொன்று புத்துயிர் பெறுகிறது.
    பல்வகைப் புள்ளினங்களும் சிறகு விரிப்பதங்கே;
    இன்கா நாகரீகத்தைக் கொத்தியவாறு சில,
    எகிப்திய பிரமிடுகளின் உச்சத்தைத் தாங்கியவாறு சில
    லும்பினியில் மாயா தேவியை ஆசிர்வதித்தவைகள் சில.
    சாகளின் பறவைகளும் பிகாசாவின்
    உடமைகளும்கூட அங்கிருந்தன.
    இரத்தினமும் கீச்சொலிகளும்
    அனைத்தும் வண்ணப்பகட்டோடு பறக்கின்றன.

    பொழுது புலர்தலின்
    புதிதான சூர்யோதயக் களிம்பிற்காக
    சாளரம் ஒவ்வொன்றும் பரந்து விரிகின்றன
    திறந்த சாளரங்களின் முன்பாக
    நற்சிறகுகளின் உடமையாளர்கள் சறுக்குகிறார்கள்.

    ஒருவரையொருவர் அன்பு செலுத்தியவாறும்
    அவ்வப்போது சண்டை சச்சரவுகளுடனும்,
    அப்புள்ளினங்கள் இலட்சியத்தையோ அன்றி
    சலுகையையோ சட்டைசெய்யவில்லை,
    சொத்தையும் ஆடம்பரத்தையும் புறக்கணித்து
    புலரும்பொழுது அளிப்பதெதுவோ
    அது சிறிதோ பெரிதோ
    நித்தமும் நிறைவுடன் கொண்டாடுகின்றன.

    புள்ளினங்களின் சூர்யோதயமென்பது ஒளிரும் இரத்தினங்கள்.
    அங்குதான் சுக்காவதியெனும் மீப்பெரும்
    வாக்களிக்கப்பட்ட நிலமும் உள்ளது.

     

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம் 
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும் 
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது 
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள். 
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது. 
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி. 
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share