கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

 

பவள சங்கரி

 

கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த உள்ளுணர்வு போன்றவை இவருடைய படைப்புகளை இவர்தம் சமகாலக்  கலைஞர்களின் படைப்புகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன என்றால் அது மிகைக்கூற்றல்ல. இவர்தம் எழுத்துகள் இவர் கொரிய நாட்டின் மீது மட்டுமின்றி அனைத்துலக மனிதர்களின் மீதும் மிக நெருங்கிய நேசம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன. மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தக்கூடியவை இவர்தம் கவிதைகள். மெய்யியலும், ஆன்மீகவியலும் ஒருசேர இணைந்த கவின்மிகு படைப்புக்களாக உள்ளன.

இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கவிஞர் கிம் யாங் – ஷிக் அவர்கள் கொரிய நாட்டின் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தை ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று,  இந்தியத் தத்துவங்கள் குறித்த முதுநிலை பட்டப்படிப்பை சியோல் நகரின் டோங்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டம் பெற்றவர். கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநரும் ஆவார். சியோல், சர்வதேசக் கொரிய எழுத்து மையத்தின் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் என்பன போன்ற பல சமூக, இலக்கியப் பொறுப்புகளில் இவர் ஆர்வமுடன் செயல்படுபவர்.

இவர் பெற்றுள்ள விருதுகளுள் The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கன. இவர்தம் அற்புதமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் கிம் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்டத் தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருந்ததை நன்றியுடன் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்வதோடு அதை அவர் எனக்களித்த கௌரவமாகவும் கருதுகின்றேன்.

சில ஆண்டுகளாகக் கொரிய – தமிழ் மொழித்தொடர்பு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கொரிய மொழி இலக்கியங்களைப் பயிலவும், சிலவற்றை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யவும் முனைந்துள்ளேன். சமீபத்தில் கொரிய-தமிழ் கலாச்சார உறவுகள் தொடர்பான, ‘சாம்குக்யுசா’ என்ற கொரிய நாட்டுத் தொன்மத்தின் அடிப்படையிலான, “கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்” என்ற நூல் வெளியிட்டுள்ளேன். இவற்றின் மூலம் சில கொரிய நண்பர்களைப் பெறும் நல்வாய்ப்பும் அமையப்பெற்றேன். அந்த வகையில் பண்டைய கொரிய மொழி  தமிழ் மொழி ஆகியவற்றிற்கு இடையே உள்ள பண்பாட்டுப் பரிமாற்றம்  குறித்த ஆய்வுகளை  மேற்கொண்டுவரும் திரு யங் கிமுன் அவர்களின் மூலம் அறிமுகமான கொரிய கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் கவிதை நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டு முழுமையாக இந்தியாவிற்கும், இந்தியர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட, கொரிய தாகூர் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான திருமிகு கிம் யாங்-ஷிக் இந்திய நாட்டின் பெருங்கவி இரபீந்திரநாத் தாகூர் மற்றும் தன்னிகரில்லாத் தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான காந்தியடிகள் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர்.  தாகூர் சங்கத்தின் நிழற்குடையின் கீழ் இந்திய ஓவியங்கள், பரதக்கலை, நாடகம், இலக்கியம், மதங்கள், தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. முதன்முதலில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கொரியக் கவிதைகளை இயற்றிய கவிஞர் என்ற பெரும்பேறும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திருநாட்டிற்கு 30 முறைகளுக்கும் மேல் வருகைபுரிந்துள்ள மீப்பெரும் கொரிய இலக்கிய ஆளுமை கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய இளம் வயதிலிருந்தே தாகூரின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருவதோடு அவர்தம் கவிதைகள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர் என்பதை அவருடைய சொந்தக் கவிதைகள் மூலம் அறிய முடிகின்றது. மனிதர்களின் துன்பங்களைக் கண்டு ஆழ்ந்த இரக்கம் மேலிட, வாசகர்களின் உள்ளத்தை உருகச்செய்யும் படைப்புகள் மூலம் அதை வெளிப்படுத்துவதிலும் வல்லவர் .

தாகூரின் கவிதைகளின் தாக்கம் இவர்தம் படைப்புகளிலும் மிளிர்வதையும், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கின்றார் என்ற எண்ணத்தையும் இவர்தம் படைப்புக்கள் நமக்குள் விதைக்கத்தான் செய்கின்றன! மெல்லிய மலர் இதழ்களால் வருடுவது போன்ற இதமானதோர் உணர்வை படிப்போர் உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் இவர்தம் கவிதைகள் தாகூரின் படைப்புகளை நினைவூட்டத் தவறுவதில்லை. சகோதரர், அன்னை, அன்புக்கணவர் என மனித உறவுகளை உயிராக மதிக்கும் இவர்தம் இளகிய அன்பு மனத்தை இவருடைய படைப்புகளின் மூலம் நாம் உணர முடிகின்றது. கவிஞர் கண்ணதாசன் தமக்குத்தாமே இரங்கல் கவிதை எழுதிக்கொண்டதை நினைவூட்டும் விதமாக கவிஞர் கிம் அவர்களின், ‘புனையா ஓவியம்’ எனும் கவிதையைக் குறிப்பிடலாம். இப்படி பல்வேறு நிலைகளில் படிப்போர் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகளாக  விதி, இரங்கற்பா, இலையுதிர் காலம் எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர்தம் இயற்கைக் காதலை வெளிப்படுத்தும்வண்ணம் இவர் படைப்புகளில்  மலர், பசும்புல்,  பனித்துளி, மேகம், வானம், மரங்கள், பறவைகள் தொடர்பான காட்சிப் படிமங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கையின் உன்னத படைப்பான மனிதர்களின் மீது அதீத அன்பு கொண்ட இக்கவியுள்ளம் மனிதர்களின் இன்ப துன்பங்களை அழகுறப் படம்பிடித்துக் காட்டுவதோடு, வேதனையில் வாடும் உள்ளங்களுக்கு நம்பிக்கை விதைகளையும் விதைக்கத் தவறவில்லை.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பனுவல்களை உள்ளடக்கிய இத்தொகுப்பு கொரிய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என அனைத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தியாவைப் பற்றிய இவர்தம் கவிதைகள் அனைத்தும் நம் நாட்டின் மீதும் நம் நாட்டு மக்களின் மீதும் இவர் கொண்டுள்ள அதீத அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்திய மக்களின் மீது, குறிப்பாக இந்தியச் சிறார்களின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாகவே இத்தொகுப்பின் சில கவிதைகள் அமைந்துள்ளன.

தெற்காசிய நாடுகளின் கொரிய மொழிக்கல்வித் திட்டங்களுக்குத் தமது சிறப்பான பங்களிப்பையும் இவர் அளித்து வருவது வரவேற்பிற்குரியது. கொரிய – இந்திய அறிவு சார்ந்த, பண்பாட்டு கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது. தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவரான இக்கவிஞர், அங்கு கொரிய கல்வித் திட்டங்களை வலுப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது பெருமைக்குரியது. ஆயிரக்கணக்கான கொரிய மற்றும் உலக இலக்கியங்களின் மிகச்சிறந்த நூல்களையும், இதழ்களையும் மனமுவந்து அளித்துள்ளதோடு, ‘கிம் யாங் – ஷிக் ஊக்கத்தொகை’  என்ற பெயரில் நிதி நல்கையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியாவின் கலாச்சாரத் தொன்மை மட்டுமன்றி, தத்துவம், சமூகம், படைப்பாற்றல் மற்றும் அழகியல் பரிமாணங்கள் போன்ற அனைத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை இவர்தம் படைப்புகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இவருடைய பல படைப்புகள் ஆங்கிலம், சீனம், ஜப்பானியம், உருசிய மொழி, போலிஷ், இந்தி போன்ற பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கொரிய – இந்திய உறவில் நாட்டம் கொண்ட நல்லுள்ளங்கள் சார்பில் திருமிகு கிம் யாங்-ஷிக்  அம்மையார் அவர்களை, இன்னும் பல்லாண்டு இலக்கிய உலகில் திறம்பட வலம்வந்து,  இந்திய நாட்டின்மீது ஆழமான அன்புடன், நீண்ட ஆயுளும், நிறைவான உடல் நலமும் பெற்று வாழ  உளமார வாழ்த்தி வணங்குகிறேன்.

கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக் கவிதைகள் – தமிழாக்கம் – பவள சங்கரி , நூல் வெளியீடு மார்ச் 10, 2018 அன்று தமிழக அரசின் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் முதற்படியைப் பெற்றார். கொரிய குடியரசுத் தூதர் திரு.ஹியூங் டே கிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 87 அகவை நிரம்பிய, கொரிய தாகூர் சங்கம் மற்றும் இந்தியக் கலைக்காட்சியகம் நிறுவனர், சியோல், தென் கொரியா, முனைவர் கிம் யாங்-ஷிக் அவர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களின் அற்புதமான உரை இது.

தமிழ்ப் புலமை மிக்க கொரிய அறிஞர்கள் இன்று உருவாகும் காலம் என்றே தோன்றுகிறது. கொரிய – தமிழ் கலாச்சார உறவு குறித்து பரவலாகப் பேசப்படும் இக்காலகட்டத்தில் தமிழ் அறிஞர்கள் கொரிய மொழி கற்கவும், கொரிய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி கற்கவும் ஆர்வம் காட்டுவது இயல்பானதே. கொரிய நாட்டு அறிஞர்களோடு இணைந்து தமிழ் கொரிய மொழி ஒப்பாய்வில் ஈடுபடுவதற்கான தக்க தருணம் இது என்றே கொள்ளமுடிகிறது.  இத்துறையில் குறிப்பிடத்தக்க நல்ல ஆய்வுகள் தோன்றவேண்டும். கொரியா என்றால் மின்னணுப் பொருள்கள் (Electronics) மற்றும் கார் உற்பத்தி என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டிருந்த தமிழர்களுக்குக் கொரிய மொழியின் நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணியினையும் அத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய கொரிய மொழியுடன் தமிழ் மொழி பின்னிப் பிணைந்துள்ள நிலையினையும் கொரியப் பண்பாட்டுப் பெருமையினையும், கலைத்துறையில் அந்நாடு ஏற்படுத்தியுள்ள சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவும், கொரிய தமிழ்நாட்டுத் தொடர்பில் உருவாகும் நட்புறவும் பெருகி வளரவும் நற்காலம் கனிந்துள்ளதாகவே எண்ணமுடிகிறது. அந்த வகையில் கொரிய மொழி அறிஞரும், கவிஞரும், கட்டுரையாளரும், இந்தியக் கவிஞர் தாகூர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், தாகூர் சங்கத் தலைவரும், இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் தனிப்பட்ட ஆர்வமும், அன்பும், அக்கறையும் கொண்ட திருமிகு கிம் யாங் – ஷிக் அவர்களின் படைப்புகள் தற்கால ஆசிய இலக்கிய உலகில் ஒரு புதிய பரிமாணத்திற்கு வழி கோலியுள்ளது என்றால் அது மிகையல்ல.

கொரிய மொழியில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் பல படைப்புகளை வெளியிட்டுள்ள அம்மையாரின் பல படைப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் சிறப்பு.

 

இவரது சில கொரிய படைப்புகளின் பட்டியல்:

 

கவிதைத் தொகுப்புகள் – Legend of Chongup – Fusa, Cho-ee collection ’74, Bird’s Sunrise 86, Sparrows in Seocho Village ’90, To be Grass Flowers, Grass Leaves ’92, A collection of poetry in English and Korean, They are Never Lonely ’98, A Book Of Long Epic Poetry, Hymn Of Elegy On The Tomb Of An Arm ’99, The whole collection of Kim Yang-Shik’s Poetry, Brightness of Sunset ’02, As Tree Limbs Turn Towards Winter ’05, A Floating Cloud In The Distant Sky ’09.

நூல்களும் கட்டுரைகளும் : An Encounter with Foreign Poets ’78, Along the stream of Ganges ’90, Spring, Summer, Autumn and winter ’00.

மொழிபெயர்ப்புகள் – கொரிய மொழியில்: R. Tagore’s Books Of Poetry Gitanjali ’82, Modern Indian Literature ’82, by K.Kripalani, Tagore: A Life ’82, by Kripalani, Tagore’s Last Poems ’83, R. Tagore’s Bhuddism ’96, Crescent Moon ’92, Tagore’s Essays Sadhana ’93, Tagore’s Drama selected Seven works; Sanyasi, King and Queen, Chitrangada, Post Office, Cycle of Spring, Kingdom of Card, Chandarica ’13, Bird’s Wedding ’97, Poetry by D.Ramesh, Silk Empress ’07, Novel by N.Parthasarathi, A book of Poetry in English and Korean Gitanjali.

அம்மையார் கலந்துகொண்ட பல்வேறு நாட்டின் கருத்தரங்கங்கள், மகாநாடுகள், வாங்கிய விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள் போன்றவை ஏராளம். இவரைக் கொரிய நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காண்பது உண்மையில் நியாயமற்ற செயலாகும். இவர்தம் மனிதநேயப் பண்புகள், பரந்த மனப்பான்மை, சக மனிதர்களிடம் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும், அக்கறையும் எத்தகைய அரசியல் எல்லைகளையும் உடைத்து நொறுக்கிவிடும் வல்லமை பெற்றது. இவரை உண்மையில்  இந்த பிரபஞ்சத்தின் சொத்தாகவே அடையாளம் காணமுடிகிறது. பெரும்பாலான ஏனைய கொரிய எழுத்தாளர்கள் போலவே அம்மையாரும் இயற்கை காதலராகவே இருக்கிறார். போர், தீவிரவாதம், கொடுஞ்செயல்கள் புரிவோர் போன்றவற்றில் மிகுந்த வெறுப்பும், வருத்தமும் கொண்டுள்ளதை இவர்தம் படைப்புகள் மூலம் அறியமுடிகிறது.

வாழ்க்கையைச் சரிவரப் புரிதல் என்பது மனிதராகப் பிறந்தோருக்கு கிடைத்தற்கரிய வரம். அத்தகைய வரம் அருமையாக அமையப்பெற்றவர் இக்கவிஞர் என்பதற்கு ஆதாரம் இவருடைய படைப்புகளே சான்று. இவருடைய கவிதைகள் இலக்கியச் சுவை மட்டுமன்றி பக்தியோடு, முரண்பாடற்ற ஒத்திசைவோடு கூடிய எளிமையும், சிறிதளவு உலகாயதமும் கலந்த அற்புதமான படைப்புகளாக மிளிர்வதைக் காணமுடிகிறது. ஆன்மீகமும், இயற்கை வாதமும் கலந்த வித்தியாசமான இப்படைப்புகள் வாசகர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்கக்கூடியது.

இந்திய மக்களின் அடித்தட்டு வாழ்க்கையின் இரணங்களை உளப்பூர்வமாக உணர்ந்ததன் பாதிப்பு அவருடைய படைப்புகளில் வெளிப்படுகிறது. இந்திய மண்ணின் வளத்தோடு சேர்த்து அதன் ஏழ்மையையும், எளிமையையும் கூட மிக இயல்பாக வெளியிட்டுள்ள விதம் அவருடைய யதார்த்தமான மனித நேயப் பண்பிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு எனலாம். தாகூரின் படைப்புகள் ஏற்படுத்திய பாதிப்பில் எழுந்த கவிதைகள் அனைத்தும் தாகூரின் படைப்புகள் போன்றே காலங்கடந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவர்தம் படைப்புகளில் நவீன பிரபலமான கொரிய கவிஞர்களான மன்ஹே ஹேன் யாங் -யுன் மற்றும் மிடாங் சோ சோங்-சூ ஆகியோரின் செல்வாக்கு உள்ளதைக் காணமுடிகின்றது. பிரபஞ்சம் முழுவதையும் குறித்து அவர் எழுதித்தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டவராக இருந்தாலும் அடிப்படையில் அவருடைய படைப்புகள் அனைத்தும் கொரிய மண்ணின் அனுபவங்கள் சார்ந்ததாக உள்ளதென்பதே நிதர்சனம்.

கொரிய கவிஞர் மிடாங் சோ சோங்-சூ  கவிஞரின் படைப்புகள் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுவது ஒரு நேர்மையான திறனாய்வாக அமைகின்றது.

“அவர் கவிதைகள் தமது புத்திசாலித்தனமான அறிவுக்கூர்மையின் முடிவற்ற கன்னிமை கொண்டவை. ஒரு நாளும் அவர் தம் பணிகளின் இயக்கத்தை நிறுத்தவோ, அல்லது முடிவற்று முன்னேறிக்கொண்டிருக்கும் தமது ஆன்மாவிற்கு ஓய்வு கொடுக்கவோ முனைந்ததில்லை. ஓய்விற்கும், பணிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பவர் அவர். என்னைப் பொறுத்தவரை, சாத்தானும், தேவதையும் கூட நெருங்க முடியாத அந்த அதிசயமான உள்ளுணர்வு நிலையை எப்படி அடைவது என்றே தெரியவில்லை. வெற்றிகண்ட அவருடைய சிந்தைகள் அவருடைய யதார்த்தமான கண்ணிற்குப் புலப்படாத சக்தியின் அழகிற்குள் பொறிக்கப்படலாம்” (பங்கஜ். என். மோகன், உதவி பேராசிரியர், கொரிய கல்வி, சிட்னி பல்கலைக்கழகம்)

உணர்வுகளின் குவியலாக மட்டும் இல்லாமல் அவர்தம் கவிதைகள் தெளிந்த நீரோடையாக, அமைதியின் அங்கமாக, குறுகிய சொற்களில் பெரும் தத்துவங்களை விளங்கச் செய்வன.

 

Beyond Time & Space-Kim Yang Shik

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

 1. பாராட்டுகள் திருமிகு பவள சங்கரி திருநாவுக்கரசு.

  திருமிகு கிம் யாங் – ஷிக் உலகக் கலைச் செல்வி, கவிக்குயில் நோபெல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர்போல் அடுத்து இலக்கிய நோபெல் பரிசு வாங்குவார் என்று வாழ்த்துகிறேன்.

  கிம் யாங் -ஷிக் படைப்புகளை, வரலாற்றைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப் படுத்திய திருநாவுக்கரசியை வாழ்த்துகிறேன்.

  சி. ஜெயபாரதன்.

 2. மிகப்பெரிய முயற்சி இது சகோதரி பவளா!
  சிறப்பு என்றால் வெகுபெரும் சிறப்பு!
  மிகவும் பெருமைப்படுகிறேன்!
  தொடரட்டும் உங்கள் சீரிய தமிழ்த்தொண்டு!!

  அன்புடன் அவ்வைமகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *