Blog

  • பழகத் தெரிய வேணும் – 41

    பழகத் தெரிய வேணும் – 41

    நிர்மலா ராகவன்

    நேயத்தை உணர்த்தும் இயற்கை

    மனிதருக்கு மனிதர் எத்தனையோ விதங்களில் மாறுபட்டாலும், பிறரை நாடவேண்டியிருக்கும் சூழ்நிலைகள் அமையாமலில்லை.

    அண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொற்றுநோய் ஒரு நன்மையையும் விளைவித்திருக்கிறது.

    எந்த நாடாவது, `இது என் சொந்தப்பிரச்னை. பிறர் தலையீடு அவசியமில்லை!’ என்று இப்போது முறுக்கிக்கொள்கிறதா? போர், போட்டி, பொறாமை எல்லாமே சற்று ஒதுங்கி உள்ளன.

    `மனிதா, உன் நேயம் எங்கு தொலைந்தது?’ என்று இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமோ இது?

    எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதே நற்குணமுடைய மனிதர்களுக்கு அடையாளம்.

    எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு பூனை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருவதைப் பார்த்தால், அதற்குச் சரியான ஆகாரம் கிடைக்கவில்லை என்று புரிகிறது.

    `முதலில் ஆரோக்கியமாக, குண்டாக இருந்ததே?’ என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது.

    குட்டியாக இருந்தபோது, அப்பூனையின் விளையாட்டுத்தனத்தில் சிரித்து மகிழ்ந்து வளர்த்தவர்கள் அதற்கு வயதாகிவிட்டதும், துரத்திவிட்டார்கள்!

    வயதான பெற்றோரையே பராமரிக்க மறுக்கும் உலகமல்லவா இது?

    அண்மையில், ஒரு பொது இடத்தில், `என் பர்ஸ் தொலைந்துவிட்டது. வீடு திரும்ப காசு வேண்டும்,’ என்று முதியவர் ஒருவர் பணம் கேட்டார்.

    (இதே காரணம் காட்டி, ஓர் இளம்பெண் காசு கேட்டபடி இருந்தாள் ஒரு பேரங்காடியில்).

    இவர்கள் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம். அப்பாவி மனிதர்களின் பரிதாபத்தைத் தூண்ட அப்படிச் சொல்லிக்கொடுத்து, அனுப்பியிருப்பார்கள்.

    நாம் பணம் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?

    `சம்பாதிக்கத் துப்பில்லையே!’ என்று அடிப்பார்களாம், பட்டினி போட்டு.

    அந்த நிலை ஒரு முதியவருக்கு வரக்கூடாது என்று இரங்கி, சிலர் கைநிறையக் கொடுத்தார்கள்.

    மிருக நேயம்

    எங்கள் வீட்டுப் பூனை தொலைக்காட்சியில் ஏதாவது உணர்ச்சிகரமான காட்சி (சண்டை அல்லது துக்கம்) வந்தால், பின்னணி இசையைப் பொறுக்க முடியாது, என்னை அடிக்கும். அன்பைத்தவிர வேறு எதையும் அறியாத பூனை அது.

    நான் எழுதிக்கொண்டிருந்த கதையில், ஒரு பணிப்பெண் தன் பொறுப்பிலிருக்கும் குழந்தையைக் கொன்று புதைத்துவிடுகிறாள் என்ற கட்டம் வந்தது. துடித்தபடி என்னிடம் வந்தது அந்தப் பூனை. தான் அறியாத, தனக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் உயிரின் அவலமான நிலை அதன் நுண்ணிய அறிவுக்கு எட்டியிருக்கிறது!

    `ஒண்ணுமில்லேம்மா!’ என்று அதைத் தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

    மொழி புரிகிறதோ, இல்லையோ, `பரிவு’ `பச்சாதாபம்’ போன்ற குணங்கள் மிருகங்களுக்கும் புரியும். அவற்றை குருடர்களும் பார்க்க முடியும், செவிடர்களுக்கும் அது கேட்கும்.

    “எனக்கு மனித நேயம் பிடிக்கும். மனிதர்களைத்தான் பிடிக்காது!” என்கிறார் ஐன்ஸ்டீன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

    எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனிதத்தன்மையே இல்லாது நடப்பவர்கள் மலிந்துவிட்ட காலமல்லவா இது!

    வேடதாரிகள்

    தனது சுயரூபத்தை மறைத்து, நாடகம் ஆடுகிறவர்கள் உண்மையில் தைரியசாலிகள் இல்லை.

    `எனக்குக் கடவுள் பக்தி அதிகம்!’ என்று பறைசாற்றுவதுபோல் வெளிப்பகட்டு காட்டுகிறவர் பிறருடைய நன்மைக்காக ஏதாவது செய்கிறாரா என்பது கேள்விக்குறி. (இதனால்தான், `உலகம் ஒரு நாடகமேடை’ என்கிறார்களோ?)

    இத்தகையவரைவிட, `நான் கடவுளை நம்புவதில்லை, எனக்கு மதமெல்லாம் கிடையாது!’ என்று சொல்லிக்கொண்டாலும், சகமனிதர்களுக்காக இரக்கப்பட்டு, பிரதி உபகாரம் எதிர்பாராது தம்மாலான உதவி செய்பவரே மேலானவர்.

    `அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரம் நட்டார்’ என்று சிறு வயதில் உருப்போட்டபோது, அச்செய்கையில் என்ன சிறப்பு என்று புரியவில்லை.

    அந்த மரங்கள் அவர் வாழ்நாளிலேயே பெரிதாக வளர்ந்து, அவருக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பிலா செய்தார்?

    நற்காரியம் செய்யும் துணிச்சல்

    சில சமயம், நல்ல காரியம் செய்யக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது, `இதனால் நமக்கு ஏதாவது கெடுதல் விளையுமோ?’ என்று.

    அங்குதான் துணிச்சல் தேவைப்படுகிறது.

    `நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே!’ என்று பேசிப் பேசி என்ன பயன்?

    சவால்களிலிருந்து விலகிவிடுவது எளிது. அவைகளை எதிர்கொண்டால்தான் பலன் கிடைக்கும்.

    கதை

    என் மூன்று வயது மகன் சசியை பாலர் பள்ளியில் துன்புறுத்தினாள் ஆசிரியை ஒருத்தி.

    அதன் விளைவாக, ஏதாவது உரத்த குரல் கேட்டாலே, அச்சத்துடன் இரு காது மடல்களையும் பிடித்துக்கொள்வான். ஓயாது பயந்ததால் உடல் மிகவும் இளைக்க, அவனுடைய தந்தை அந்த ஆசிரியையிடம் கெஞ்சலாகக் கூறினார், ஒன்றுமறியாத அப்பாலகனை அப்படித் தண்டிக்க வேண்டாமென்று.

    அதன்பின், அவளும் அப்படித் தண்டிக்கவில்லை. ஆத்திரத்துடன், அன்றே அவனைக் கழிப்பறையில் தள்ளி, வெளியே பூட்டிவிட்டாள்.

    (அந்த நிகழ்ச்சியை நான் விவரித்தபோது, `நல்லவேளை, என் குழந்தைகளுக்கு இந்தமாதிரி நிகழவில்லை!’ என்ற அற்பதிருப்தி அடைந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.

    அவளுக்குத் துன்பம் வரும்போது பிறர் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்?

    அவளைப்போன்றவர்கள் எளிதில் மனம் உடைகிறவர்கள். பயந்தாங்கொள்ளிகள்).

    வீடு திரும்பியதும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் குழந்தை கூறியது எனக்குப் புரிந்தது.

    விடுமுறை நாட்களிலும், பள்ளிச்சீருடை அணியவேண்டும் என்று அடம் பிடிப்பவன், பள்ளியிலிருந்து திரும்பியதுமே, “யூனிஃபார்ம் ஸ்டுபிட்!” என்று கதறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், “சசி?” என்று மட்டும்தான் கேட்கமுடிந்தது. அப்போதுதான் தெரிவித்தான், “Teacher lock Sashi in the toilet,” என்று.

    பிறகு ஒரு சிறுவன் கூறினான், `சசியை டீச்சர் டாய்லெட்டுக்குள் வைத்துப் பூட்டினாள். நாங்கள் எல்லாரும் அழுதோம்!’ என்று.

    சிறுகுழந்தைகளுக்கு இருக்கும் மன ஒற்றுமை, பச்சாதாபம், வளர்ந்தவர்களுக்கு ஏனோ மறைந்துவிடுகிறது.

    நடந்த அசம்பாவிதத்தைப்பற்றி தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். எழுதுமுன், பிறர் எச்சரித்தார்கள், அப்பள்ளியை நடத்தும் சீனப் பெண்மணி குண்டர்களைவிட்டு குடும்பத்திற்கு ஏதாவது கெடுதல் விளைவித்துவிடுவாள் என்று. ஆனால், நான் பின்வாங்கவில்லை.

    ஆற்றை நீந்தியே கடக்க ஆரம்பித்தபோது, புறப்பட்ட கரையையே திரும்பித் திரும்பிப் பார்க்கலாமா?

    பிரசுரிக்கிறார்களோ, இல்லையோ, துணிந்து அனுப்பினேன்.

    “எதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்ற தெளிவுதான் துணிச்சல்” (கிரேக்க ஞானி பிளேட்டோ).

    பல நாட்கள் கழித்து அது வெளியாகியது. விசாரித்திருப்பார்கள்.

    உடனே அந்தப் பள்ளித் தலைவியை தினசரியின் நிருபர் பேட்டி கண்டார், `அவளுடைய சிரிப்பு மாறவேயில்லை,’ என்ற குறிப்புடன். (நான் எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டிருக்கவில்லை).

    விரைவிலேயே, பெற்றோரிடமிருந்து நிறையச் சம்பளம் வசூலித்துவந்த அந்த `உயர்ந்த’ பள்ளி மூடப்பட்டது.

    ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி எனக்குக் கிடைத்தது. இல்லாவிட்டால், கேட்பாரின்றி இன்னும் எத்தனை குழந்தைகள் வதைக்கப்பட்டிருப்பார்களோ!

    தம்மைப் பிறர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அதைப்பற்றிப் புகார் சொல்லும் குணம் குழந்தைகளுக்குக் கிடையாது. இதுவே வதை செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

    அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் `காளி அவதாரம்‘ எடுத்து, தமக்கே உதவி செய்துகொள்ள முடியாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டியிருக்கிறது.

    சசிக்குத்தான் வருத்தம், அம்மாவிடம் ஏன் உண்மையைச் சொன்னோம், தன் வயதையொத்த நண்பர்களுடன் விளையாட முடியவில்லையே என்று.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 15

    எட்டுக் கோணல் பண்டிதன் – 15

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பத்தொன்பது

    ஜனகர் தன் அனுபவ ஞானத்தால் விகற்ப நினைவனைத்தையும் நீக்கி, சுயமஹிமையில் நிலைத்துள்ள தனக்கு அதைத் தவிர வேறெதுவும் எண்ணத்தில் இல்லை  என சுவானுபவம் உரைத்தல் இவ்வத்தியாய மாகும்.

    1. தத்துவ ஞான அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு மனதிலிருந்து பலவகையான ஆலோசனைகளாகிய முட்களை வெளியே எடுத்தேன்.

    2. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு அறம், பொருள், இன்பங்களேது? துவைதமேது? அத்வைதமேது?

    3. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு இறந்த, நிகழ் எதிர் காலங்களேது? இடமேது? என்றென்றும் என்பதேது?

    4. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு ஆத்மாவேது? அனாத்மாவேது? நன்மை தீமைகளேது? நினைப்பும் நினைப்பின்மையும் ஏது?

    5. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு கனவேது தூக்கமேது்? விழிப்பேது பயமேது? தைரியமேது?

    6. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு தொலைவேது? அருகேது? உள்ளேது? வெளியேது? நுட்பமேது? தூலமேது?

    7. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு சாவேது? வாழ்வேது? உலகங்களேது? உலகியலேது?ஒடுக்கமேது? சமாதியேது?

    8. ஆத்மாவில் அமைதியடையும் எனக்குப் யோக வரலாறும், ஞான வரலா றும் போதும்! போதும்!

                       அத்தியாயம் இருபது

    ஜனகர் தூய அறிவாகிய தன்னிடம் கருவி,கரணாதிகள்,இரட்டைகள், வினைகள், உலகம், ஜீவர்கள், மாயை, சம்சாரம், மோட்சம் முதலான எதுவுமில்லை என்று கூறுதல் இவ்வத்தியாயமாகும்.

    1. மாசில்லாத என் சொரூபத்தில் பூதங்களேது, உடலேது, பொறிகளேது, மனமேது, சூன்யமேது, அவாவின்மையேது?

    2. என்றும் இரட்டையில்லாத எனக்குச் சாத்திரமேது, ஆத்மஞானமேது, நினைப்பில்லாத மனமேது, நிறைவேது, ஆசையில்லாத தன்மையேது?

    3. அறிவு அறியாமைகளேது, நானேது, இதுவேது, எனதேது, பந்த முக்தி களேது, சொரூபத்திற்கு வடிவமேது?

    4. என்றும் வகுக்க முடியாத வினைகளேது, ஜீவன் முக்தியேது, விதேக முக்தியேது?

    5. புரிபவனேது, புசிப்பவனேது, வினையில்லாத விளக்கமேது, எந்தக் காலத் திலும் குணமற்ற எனக்கு ரோஷமும் அதன் பயனுமேது?

    6. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் உலகமெங்கே, யோகியும், ஞானியும், பக்தனும், முக்தனும் எங்கே?

    7. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் படைத்தலும், அழித்தலுமேது? சாதிப் பிற்குரியதும், சாதனையும், சாதகனும், சித்தியுமேது?

    8. அறிபவனும், அறநெறியும், அறிபொருளும், அறிவுமேது? என்றும் தூயவ னாகிய எனக்கு ஒன்றென்பதும், ஒன்றுமில்லை என்பதுமேது?

    9. என்றும் வினையில்லாத எனக்குச் சிதறுவதும், குவிவதுமேது? அறிவு அறியாமைகளேது?மகிழ்ச்சியும், துன்பமுமேது?

    10. எப்போதும் நினைப்பில்லாத எனக்கு விவகாரமேது, அமைதியேது? சுக துக்கங்களேது?

    11. என்றும் மாசில்லாத எனக்கு  மாயையேது, சம்சாரமேது? விருப்பமும், வெறுப்புமேது? ஜீவனும், அதுவெனும் பிரம்மமுமேது?

    12. மாறாத பரம்பொருளினும் வேறில்லாத தானாயிருக்கும் எனக்கு இணைவ தேது, விலகலேது?, பந்தமேது, விதுதலையேது?

    13. உபாதையற்ற சிவமாகிய எனக்கு  உபதேசமேது, சாத்திரமேது, சீடனேது, குருவேது? அடைவதற்குரிய பேறு என்று என்ன இருக்கிறது?

    14. இருப்பேது .இன்மையேது? ஒன்றேது, இரண்டேது? பலவாறு  இப்படிக் கூறுவது எதற்கு? எனக்கு முன் எதுவுமேயில்லை.

    [முற்றும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 57

    கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத தில்லை ஒருவற்கு – நல்லாய்!
    ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
    ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’.

    பழமொழி -‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’

    அக்கம்பக்கத்து வீடுகள்ல எங்கயோ காலையிலிருந்தே சண்டை. காலங்காத்தால ரம்யமான சேவல் கூவற சத்தத்தக் கேட்டு கண்விழிச்சதுதான் தாமதம். வாசல்ல ஒரே சலசலப்பு. இந்த ஊர்ல இது சகசம்தானேன்னு விட்டுட்டேன்.

    தினமும் பொழப்பில்லாம ரெண்டு பேர் சண்ட போடறதப் பாக்கவே துண்ட கக்கத்துல இடுக்கிக்கிட்டு வந்து நின்னு பாக்கற வெத்துவேட்டுகளுக்கு நடுவுல நானும் ஒண்ணா நின்னு பாக்க விருப்பப்படல.  இது ஒரு விவசாயக் கிராமம்னு சொன்னா கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா இந்தத் தெருவுல இருக்கறதுல பாதிபேர் முதலாளி வர்க்கம். அவங்க தன் சொந்த வயல்ல இறங்கி வேலை பாக்க மாட்டாங்க. வெறும் மேற்பார்வை மட்டுந்தான். சாப்பிட்டுட்டு சும்மா உக்காந்து இருக்குற இந்தக் கூட்டந்தான் தினமும் யாரை வம்புக்கு இழுக்கனு உறண்டிகிட்டு நிக்கும். நல்ல வேளை கல்லூரி படிப்புங்கற பெயர்ல வெளியூர் ஹாஸ்டல்ல தங்கி படிக்கறது நல்லதாப் போச்சு. அப்பப்ப இங்க வந்து பொழுதுபோக்க இவங்க நடவடிக்கையப் பாத்துட்டுப் போயிடலாம். இருந்தாலும் இந்த ஊருக்கு நாம ஏதாவது செய்யணும்….. யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள நடந்துக்கிட்டு இருந்தேன்.

    அம்மாகிட்ட வாசல்ல என்ன சத்தம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா மனசு சொல்லியது. வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வர அம்மா நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம குளிக்கக் கிளம்பிட்டாங்க. அதுக்குமேல தொடர விருப்பமில்லாம மொட்டைமாடிக்கு ஏறிப்போனேன். காலைநேர சூரியன் அழகாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் பிரேக்பாஸ்ட் சேகரிக்க பறந்துக்கிட்டு இருக்கு. எங்க வீட்டு பப்பாளி மரத்துல அணில் கூட ஓட ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்துவீட்டு அத்தை வத்தல் போடறதுக்காக மேல வந்து பார்வையிடறாங்க. வேட்டித் துணிய விரிச்சு அது பறக்காம இருக்க கல்ல வச்சிட்டு என்னயக் கூப்பிடறாங்க. நானும் சுவர் ஏறிக்குதிச்சு அவங்க வீட்டுப்பக்கம் போறேன்.

    தம்பி திரும்பத் திரும்ப ஏறி இறங்க முடியல. என் கூட வந்து சாமான்கள் எடுத்துக் குடேன்னு சொன்னதால அவங்க கூட போய் காக்காய் விரட்ட கருப்புக் குடை, வத்தல் கூழ கிண்டிவுட ஒரு கரண்டி, தண்ணி மூணையும் நான் எடுத்துக்கிட்டேன். அத்தை சூடானகூழ துணியவச்சு லாவகமா எடுத்துட்டு  மேல ஏறறாங்க. நானும் அவங்க பின்னாலயே போய் சாமான வச்சுட்டு நிக்கறேன். கைய நீட்டச்சொல்லி ஒரு கரண்டி வத்தல் கூழ வாயால ஊதி என்கையில உடறாங்க.

    நான் நக்கி சாப்பிட்டுக்கிட்டே அவங்க வத்தல் போடற விதத்தப் பாத்துட்டு நிக்கறேன். பக்கத்து கம்பத்துல நிக்கற காக்கா பொறாமையோட என்னயப் பாத்துட்டு அவங்க சொந்தத்தையெல்லாம் கத்திக் கூப்பிடுது. இவங்ககிட்டயே கேக்கலாமேனு நினைச்சு கீழ என்ன சத்தம். யார் சண்டபோட்டுக்கிட்டாங்கனு கேட்டதுதான் தாமதம் அத்தை பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

    அத ஏம்பா கேக்கற. நம்ம பக்கத்துவீட்டு அலமுவும் அவளுக்கு அடுத்தவீட்டு செல்லாவும் தான் கத்திக்கிட்டிருந்தாங்க. செல்லா வீட்ல நாலுநாள் முன்ன அவங்க மாமியார் செத்துட்டாங்கல்ல அப்ப பூவெல்லாம் தூவி அமக்களப் படுத்தி தூக்கிட்டுப் போனாங்க.  வாசல்ல பாடையில பிணத்தை வச்சி கட்டறதுக்காக வைக்கல் கயிறு திரிப்பாங்கயில்ல அப்பத்துலேந்து இவங்க வீட்டு வாசல்ல வைக்கல் விழுந்திரிச்சு, பூ விழுந்திரிச்சுனு ஒரே ஆர்ப்பாட்டமாம். பிணத்த தூக்கிட்டுப் போனவுடனே கழுவி உட்ட தண்ணி தன் வீட்டுக் கோலத்த அழிச்சிடுச்சுனு அழுதாளாம். அதுலேந்து அவளுக்கு மனசே சரியில்லயாம். அதனால தினமும் செல்லாவ வாசல் தெளிக்கவுடாம கத்திக்கிட்டே இருக்கா. நாங்களும் சொல்லிப்பாத்தோம்.

    காலையில நான்தான் எதிர்வீட்டு டீச்சரக் கூப்பிட்டு இதுங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன பிரச்சினை அலமுனு டீச்சர் கேட்டவொடனயே ஆரம்பிச்சிட்டா.

    எழவு வீட்டுத்தண்ணி எங்க வீட்டு கோலத்துப்பக்கத்துல தினமும் வரதால எங்க வீட்ல பல பிரச்சினைகள் தொடங்கிருச்சு. வர வர ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது. நல்லா சாப்பிட்டுட்டு இருந்த எம்பொண்ணு இப்பயெல்லாம் சரியா சாப்பிடறதேயில்ல. இதெல்லாம் அந்தத் தண்ணிய மிதிச்சதிலேந்துதான் நடக்குது. அதுக்குதான் செல்லாவ பரிகாரம் பண்ணிடுனு சொல்றேன். அவ வீட்டுத் தண்ணி எங்க வீட்டுக்கு வராதபடி நடுமத்தியில மேடுகட்டச்சொல்றேன். அவள் முடிச்சவொடனே செல்லா ஆரம்பிச்சா

    நான் ஏன் மேடுகட்டணும். வானம் பாத்த இந்த பூமியில மழை கொட்டோ கொட்டுனு கொட்டட்டும். எங்க வீட்டு மண்ணயெல்லாம் கரைச்சிக்கிட்டு அவ வீட்டுல கொண்டு சேக்கட்டும்னு சாபம் போட ஆரம்பிச்சா. சண்ட பெரிசா ஆயிடுச்சு. வீட்டு ஆம்பிளைகளும் ஒருத்தருகொருத்தர் திட்டிக்கிட ஆரம்பிச்சாங்க. நிறுத்தறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு.

    பாவம் டீச்சர் ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’னு பழமொழி சொல்லிட்டு இந்த மாதிரி ஆளுங்களுக்கு அறிவுரை சொல்லப்போனா நம்மளயும் அவமானப்படுத்தி உட்டுருவாங்கனு வருத்தப்பட்டுட்டுப் போயிட்டாங்க. படிக்காத ஜென்மங்ககிட்ட பேசப்போனது என் தப்புதான். இப்ப பாரு இந்தக் கூழ் முழுக்கயும் போட்டு முடிக்கறதுக்குள்ள வெய்யில் வந்துடும். புலம்பிக்கிட்டே தன் காரியத்தப் பாக்கறாங்க அத்தை.

    அங்க என்னடா பேச்சு. அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினேன். அம்மா குளத்துக்குப்போய் துணி துவைச்சு குளிச்சிட்டே வந்துட்டாங்க. துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்திருக்காங்க. இதுக்குமேல இங்க நின்னா வசவு விழும். என் வேலையைப்பார்க்க கீழே இறங்கிப்போறேன்.

    பாடல் 58

    முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
    தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
    ‘இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
    எழுதினான் ஓலை பழுது’.

    பழமொழி – ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது’

    பொழுது விடிஞ்சாச்சு. இன்னிக்கு எந்தக் கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப் போகப் போறாங்களோ? ஒருவேளை இன்னிக்கு ஜோசியம் பாக்கப் போகணுமோ?. கடந்த

    ஒரு வருசமா இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சநாள்ல நான் என்ன படிச்சேன்னே மறந்துருவேன் போல. திருச்சியில தங்கி என்ஜினியரிங் படிச்சேன்னு பேரு. அங்கேயும் அம்மா வந்து வீடு எடுத்து சமைத்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா இந்த சுத்து வட்டாரத்துக்குள்ளயே வேலை தேடிக்கணுமாம். மெட்ராஸ் பக்கம் போகணும்னா அரசாங்க வேலை கிடைச்சாதான்னு சொல்லிட்டாங்க. இங்க கூடி எவ்வளவு முயற்சி பண்ணியும் எம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி வேலை அமைய மாட்டேங்குது.  ஓரிரண்டு இடத்துல வேலைக்குச் சேந்த பிறகு நான் உட்டுட்டு வந்துட்டேன்னுதான் இந்த ஆர்ப்பாட்டம். இப்ப என் கிரகம் சரியில்லயாம். அதுக்காக கோயில்கோயிலா கூட்டிக்கிட்டு சுத்தறாங்க. ஜோசியக்காரனுக்கு என்ன. அவன் வருமானத்துக்காகத் திரும்பத் திரும்ப வரச் சொல்லி பரிகாரம்னு பெயர்ல ஏதோ பூசை போட்டுட்டு அப்பப்ப ரெண்டு கோயில் பெயரச்சொல்லி இங்க போயிட்டுவந்து என்னயப் பாருங்கனு அனுப்பி உட்டுடறான்.

    யோசிச்சுக்கிட்டே எங்க வீட்டு வாசலில வந்து நிக்கறேன். ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் பக்கத்துல இருக்குது எங்க வீடு. எவ்வளவு அழகான ஊர். ஒரு தடவ காலார நடந்துட்டு வரலாம். காலங்காத்தாலயே எங்கெங்கேயிருந்தோ மக்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. ரங்கா ரங்கானு பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போவாங்க. வேடிக்கை பாத்துக்கிட்டே நடந்த என்னய யாரோ கூப்பிடறாங்க.

    என் வயதொத்த பையன்கூட ஒரு ஆண்ட்டி நின்னுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் கழுத்துல துளசி மணிமால போட்டிருக்காங்க. அவங்களுக்குப் பின்னால நிக்கற பஸ்சப் பாத்தா இவங்க இஸ்கான் குரூப்னு தெரியுது. ஆனா இவங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும். யார் இவங்க. யோசிச்சிட்டு இருக்கும்போதே ஏய் சுதர்சனா… உங்க வீடு எங்க இருக்கு. பக்கத்திலதானா. நான் டூர்ல வந்ததால தனியா பிரிஞ்சு வரமுடியாது. உன் ப்ரெண்ட் சாவித்ரி வந்திருக்கானு சொல்லி ரொம்ப பக்கம்னா உங்கம்மாவ சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாயேன் என்கிறாள்.

    யோசனையோட வீட்டை நோக்கி விருவிருனு நடக்கிறேன். அம்மாக்கு ஆயிரத்தெட்டு பெரெண்ட். காலையிலேந்து ராத்திரி வரை யார் கூடயாவது போன்ல பேசி புலம்பிக்கிட்டேதான் இருப்பாங்க. இவங்க யாரோ.

    விசயத்தைச் சொன்னவொடனேயே அம்மா எல்லாத்தையும் அப்பப்படியே போட்டுட்டு எம் பின்னால வந்துட்டாங்க. எனக்கு எந்த அறிமுகமுமே இல்லாத அந்த ஆண்ட்டி என்னயப் பாத்து

    பாவம் உன் அம்மா. உன்னயப்பத்தி கவலைப் பட்டு எவ்வளவு இளைச்சுப் போயிட்டா. நாள் முழுக்க உன் நினைப்புதான். கொஞ்சம் அம்மாவுக்கு சப்போர்ட்டா இருக்க முயற்சி பண்ணுப்பா என அறிவுரையை உதிர்த்துவிட்டு தன் பையனைப் பார்த்து இவன் கூட கொஞ்சம் பேசி அட்வைஸ் பண்ணுடாங்கறாங்க.

    அவங்க பையன்னு அறிமுகப்படுத்தப்பட்ட நபர் விட்டேத்தியா பேச ஆரம்பிச்சார். கூல் மேன். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். ஏதோ இப்போதான் லண்டன்லேந்து வந்து இறங்கினமாதிரி அளப்பறை. எனக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. என்னயப் பாருங்க. நான் டில்லியில கால்சென்டர்ல வேலை பாக்கறேன். நல்ல எக்ஸ்போசர் கிடைக்குதுனு பெருமை வேற அடிச்சிக்கிறாரு.

    பூ  இவ்வளவுதானா. என அந்த நபரை எடை போட்டுவிட்டு அம்மாவப் பாத்துக்கிட்டு நின்னேன்.

    இவனுக்கு விதிச்சது இதுதான்னு இருந்துடவேண்டியதுதான் போல. ஒருவேலையில நிலைச்சு நிக்க மாட்டேங்கறான். நானும் வேண்டாத கடவுள் இல்ல. அவன் விதிய மாத்த இனி படைச்ச கடவுளால கூட முடியாது. . நீயாவது உன் பிள்ளைகூட சந்தோசமா இருனு புலம்பிக்கிட்டு நிக்கறாங்க. அதுக்குமேலயும் கேட்க விருப்பமில்லாம கிளம்பி வந்த நான் ஒரு முடிவோட லெட்டர் எழுதி மேசை மேல வச்சிட்டு என் சென்னை நண்பன் அறிவுரைப்படி அவன் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்.

    நல்லவேளை எனக்கு அப்டி ஒரு நல்ல நண்பன். விசயத்தச் சொன்ன வொடனேயே  ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுதுனு பழமொழியே இருக்குடா. எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. நம்ம தலையெழுத்துனு ஒத்துக்கிட்டு அதச் சரிபண்ண அத எழுதின கடவுளமட்டும் கும்பிட்டுக்கிட்டே உக்காந்து இருந்தா எதுவும் சரியாகாது நாமதான் முயற்சிபண்ணணும். நீ முதல்ல கிளம்பி வா. கொஞ்சநாள் உங்கம்மா அழுவாங்க. நல்ல வேலை கிடைச்சப்புறம் முயற்சியால விதியையும் மாத்திடலாம்னு அவங்களுக்குப் புரிஞ்சுடும். அப்டிங்கறான்.

    அவனின் பேச்சைக்கேட்டப்புறம் நான் யோசிச்சேன். நான் நல்லா முன்னேறி திரும்ப வந்தப்புறம் கூட அம்மா அதுக்கும் காரணம் கடவுளும் ஜோசியமும்னு சொல்லுவாங்களோ என்னவோ. சிலபேரைத் திருத்த முடியாது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 282இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 282இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தென்னை ஓலைமீது அமர்ந்திருக்கும் சின்ன அணிலை நுணுக்கமாய்ப் படம்பிடித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியுள்ளனர். ஒளிஓவியர் ராமலக்ஷ்மிக்கு நன்றி!

    அணில் என்ற பெயர் இவ்வுயிரிக்கு எப்படி வந்திருக்கும் என்று ஆராய்வோம்!

    அண்டு/அண்டி என்பது உடலோடு ஒட்டியிருக்கும் வாலைக் குறிக்கும். ’அண்டு’ என்ற அந்தச் சொல் ’அண்ணு’ என்றாகி அத்தோடு ’இல்’ சேர்ந்து ’அண்ணில்’ ஆனது. பின்னர்,  பேச்சுவழக்கில் ’அணில்’ என்று இடைக்குறைந்த சொல்லாக மாறிப் புழக்கத்திற்கு வந்திருக்கின்றது என்கிறார்கள் சொல்லாராய்ச்சியாளர்கள்.

    ஆக, அணில் என்பதற்கு ’வாலுயிரி’ என்று பொருள் என்பதை இதன்வழி அறிகின்றோம். 

    இன்னொரு பெயரும் அணிலுக்கு உண்டு. அது ‘வெளில்’ என்பது. வெளியே தொங்கும் வாலுக்கு ஆகுபெயரான ’வெள்’ என்பது ’இல்’ விகுதி பெற்று ’வெளில்’ ஆகியிருக்கின்றது.

    ஏனலங் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
    கிளிவிளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
    (அகம் – 12) என்ற அகநானூற்றுப் பாடலில் ‘வெளில்’ என்ற சொல் அணிலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    ஓலையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த அணிற்பிள்ளை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்னவென்று கண்டுவருவோம் இனி!

    *****

    ’ராமன்’ எனும் நாயகனால் ’புகழ்’ எனும் மூன்றெழுத்தை அடைந்த மூன்றெழுத்து உயிரான அணிலை, ’வாழ்க’வெனும் மூன்றெழுத்தால் நயம்பட வாழ்த்தியிருக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    மூன்றெழுத்து வாழ்த்து!

    ‘அணில்’ என்னும்
    மூன்றெழுத்துப் பெயர் கொண்ட
    பிராணியே!

    ‘ராமன்’ எனும்
    மூன்றெழுத்துப் புராண நாயகனுக்கு
    ‘உதவி’ என்ற
    மூன்றெழுத்தைச் செய்ததால்
    ‘முதுகு’ என்ற
    மூன்றெழுத்து உடலுறுப்பி‌ல் பொறித்த
    மூன்றுகோடுகளால்
    ‘புகழ்’ என்னும்
    மூன்றெழுத்தை அடைந்தாய்,
    புராண காலத்தில்!

    ‘சேமியா’ என்ற
    மூன்றெழுத்து உணவுப்பொருளிலும்
    பிரபலமடைந்தாய்
    கலியுகத்திலும்!

    ‘வாழ்க’ என்னும்
    மூன்றெழுத்துச் சொல்லால்
    வாழ்த்துகிறேன்
    உன்னை இன்று!

    *****

    ”அண்ணல் ராமன் கைபட்ட அணிலே! உனக்கு உண்ணக் கனியும் பாலும் தருவேன்” என்று கனிவுடன் இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அணிலே வா…

    அண்ணல் ராமன் கைபட்ட
    அணிலது கடித்தால் கனிசுவைக்கும்
    எண்ணம் நமக்கே இருப்பதாலே
    எல்லா அணிலையும் விரும்புகிறோம்,
    உண்ண ஒன்றும் கிடைக்காமல்
    ஓலையில் இருக்கும் அணிலேவுன்
    கண்ணது கலங்க விடமாட்டேன்
    கனியும் பாலும் தருவேனே…!

    *****

    ”சேதுப்பாலம் கட்டவந்த அழகு மனங்களே! ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே! நீங்கள் உண்ணும் அழகைக் கண்டுமகிழ நாங்கள் இருக்கிறோம்!” என்று அணிலினத்தை அன்போடு புகழ்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    ராமர் போட்ட மூன்று கோடு உங்கள் இனத்திற்கு
    நாளுமது சேதி சொல்லும் எங்கள் மனத்திற்கு
    சேதுப்பாலம் கட்ட வந்த அழகு மனங்களே
    ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே

    இங்குமங்கும் தாவித் தாவி ஓடித் திரியவே
    இறைவன் உங்களையே படைத்து மகிழ்ந்திட்டானே
    பழங்களையும் காய்களையும் தின்னும் அழகிலே
    பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட நாங்கள் இருக்கிறோம்

    *****

    ”பொய்ம்மைகளுக்கு நடுவில் மெய்ஞ்ஞானமும், கட்டுகளில்லாத போதும் கண்ணியம் இழக்காத தெளிவும் வேண்டும்” என்று அணிலுக்குச் சொல்வதுபோல் மானுடர்க்கு நல்லுரை நவின்றுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    தேவைகள்

    ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
    அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
    வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
    தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

    கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
    சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
    காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
    கனிவும் இனிமையும் தர வேண்டும்

    கூச்சல் குழப்பம் பொய்ம்மைகள் நடுவே
    உண்மையை அறியும் அறிவு வேண்டும்
    வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
    தன்னிலை உணரும் மெய்ஞ்ஞானம் வேண்டும்

    கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
    கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
    தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
    சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

    *****

    அணிலின் முதுகில் கோடு வரைந்தவன் அண்ணல் இராமன் எனும் புராணச் செய்தி நம் மக்களின் மனங்களில் எவ்வளவு தூரம் ஆழப் பதிந்திருக்கின்றது என்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். வாலுயிரியான அணிலின்பால் அன்பைப் பொழிந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    எதைப் பார்க்கிறாய்?
    என்ன கேட்கிறாய்?
    உன்னைச் சுற்றிய
    உலகின் ஓட்டத்தை
    உற்று நோக்கியே
    உன்னுள் நகைப்பா?

    கிடைத்ததை உண்டு
    காலத்தை வென்று
    வாழ்வினை முடிக்கும்
    வாடிக்கை உனக்கு!
    சந்ததி வளர்க்கும்
    சங்கதி அறிவாய்

    எடுத்தவை அனைத்தையும்
    எடுத்ததும் முடித்திடாமல்
    பின்னொரு வேளைக்காய்
    முன்னரே சேர்த்திடுவாய்!

    முதுகினில் வரிகளையும்
    மூளையில் அறிவையும்
    துணையாய்க் கொண்டே
    துணிவுடன் தாவிடுவாய்!

    உருண்டிடும் உலகினில்
    உன்னையும் என்னையும்
    உழன்றிட வைத்திட்டவன்
    உண்மையில் வித்தகனே!

    ”கிடைத்ததை உண்டு காலத்தைவென்று வாழும் அணிலே! பின்னொரு வேளைக்காய் முன்னரே சேர்த்திடும் மூளையுள்ள உன்னையும் என்னையும் உருண்டிடும் உலகினில் உழன்றிட வைத்தவன் உண்மையில் வித்தகனே!” என்று அணிலின் இயல்பையும் உயிர்களைப் படைத்து உழலவைக்கும் ஆண்டவனின் இயல்பையும் பாட்டினில் நேர்த்தியாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

    2020-21ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள், உரிய பரிகாரங்களுடன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் உற்றார், சுற்றாருக்கும் பகிருங்கள். குரு பகவான் அருளைப் பெறுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

     7. விறன்மிண்ட நாயனார் புராணம்

    பாடல் 1

    விரைசெய்   நறும்பூந்  தொடை  யிதழி வேணி யார்தங் கழல்பரசிப்    
    பரசு    பெறுமா    தவமுனிவன்     பரசி     ராமன்     பெறுநாடு
    திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின் செழுவளனும்
    வரையின் வளனு முடன்பெருகி மல்கு நாடு மலைநாடு.

    பொருள் 

    வாசனையுடைய கொன்றை  மாலை தரித்த சடையினையுடைய சிவ பெருமானது திருவடிகளைப் பூசித்துப் பெருந்தவஞ் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசிராமன் எனப் பேர்பெற்ற முனிவன் பெற்ற நாடு;  அலைகளை யுடைய கடலிலே படும் பெருவளங்களும், திருந்து நிலங்களின் செழித்த வளங்களும், மலைகளினுடைய இனிய வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய மலை நாடாகும். நெய்தல் ,மருதம், குறிஞ்சி ஆகிய மூவகை நிலவளமும் உடைய  நாடு!

    விளக்கம்

    விரைசெய் – சுற்றிலும் வாசங் கமழும்படி செய்கின்ற  இதனை நறும் விரை செய் இதழி என மாற்றிக் கூட்டுக. நறும் விரை – மிக்க மணம் – நன்மணம், நறும்-அழகிய என்றுரைப்பாரும், பிரணவம் போன்றிருத்தலால் மந்திரமணம் என்பாருமுண்டு. தொடை இதழி – தொடுத்ததுபோலச் சரமாகப் பூக்குங் கொன்றை. இதழித்தொடை – என மாற்றி மாலையாகத் தொடுத்த கொன்றை என்றுரைப்பினுமாம். இதழி வேணியார் – சிவபெருமான். வேணி – சடை. கொன்றையும் வேணியும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரிய அடையாளங்கள்.

    கழல்பரசிப் பரசுபெறும் மாதவ முனிவன் பரசிராமன் – பரசி – துதித்து – முனிவனது பேர்க்காரணமும், சரிதமும், அவன் பெருமையுங் குறித்தது.பரசு – மழுவாயுதம். பரசிராமன் – பரசும் இராமன் எனவும், பரசுபெற்ற இராமன் எனவும் இருவழியும் சரிதக்குறிப்புப் பெற நின்ற இப்பெயரின் அழகிய ஆட்சியைக் காண்க. தசரதராமனி னின்றும் வேறு பிரித்துணர இம்முனிவனைப் பரசி ராமன் என அடைகொடுத்தே வழங்குவர்.

    இவன் பரசுபெற்ற சரிதம்

    இம்முனிவன், தனது தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றதற்காகப் பழிவாங்கும் பொருட்டு அவனையும் அவன் மரபினரையும் கொல்வேன் என்று சூள்கொண்டு, சிவபிரானைக் குறித்து மாதவஞ் செய்தான்; சிவனருளினாலே பரசாயுதம் பெற்றான்; அதன் துணையாலே, தான் எண்ணியபடியே அவனைக் கொன்று பழி வாங்கிய மன்னர்களின் இரத்தத்தைக் கொண்டு பிதிர்தருப்பணஞ் செய்து தன் மூதாதைகளை மகிழ்வித்தான் என்பது. இதன் விரிவு காஞ்சிப் புராணம் பரசிரா மீசப்படலத்திற்  காண்க.

    பெறு நாடு – இம்முனிவன் வருணனிடமிருந்து பெற்ற நாடு மலை நாடு. இதுவும் ஒரு சரிதங்குறித்தது. புராணங்களுட் காண்க. முன்கண்டவாறு பலரையுங் கொன்றதனால் முனிவனைப் பழிசூழ்ந்தது. அது நீங்குமாறு முனிவன் ஒரு நாடு கண்டு அதனை வேதியர்க்குத் தர எண்ணி மழுவைத் தென்றிசைக் கடலில் வீசினான். வீசவே வருணன் விலக இந்நாடு உண்டாயிற்று; அதனையே மறையவர்க்குத் தந்தனன் என்பது வரலாறு. முனிவன், அரசர்களைக் கொன்று தானே நாடாண்டிருந்து அந்நாடுகளைத் தானம்செய்து, பின் இந்நாடு கண்டு, அதனில் ஆட்சி புரிந்து வேதியர்க்கீந்தனன் என்பதும் வரலாறு.

    இவ்வரலாறுகளைப் புராணக்  கதை என்று இலேசாகக் கூறி ஒதுக்கு வாருமுண்டு. இராமாயணமும் பரசிராமனது சரிதமும் பெருமையும் கூறும்.

    “ஊழிக் கடை முடிவிற்றனி யுமைகேள்வனை யொப்ப“ என்பது முதலாகப் பலவாற்றானும் இராமாயணத்தில் பாராட்டப்பெற்றது காண்க.

    இம்மலை நாடு இன்றைக்கும் பரசிராம க்ஷேத்திரம் என வழங்கி வருவதும், அது (மழைவளம்), நீர்வளம், நில வளம், குடிவளம், மக்கள் ஒழுக்கம் முதலிய பலவாற்றானுஞ், சூழ உள்ள ஏனை நாடுகளினின்று வேறாகத் தனித்தன்மை பெற்று விளங்குவதும், அதனில் வேதியரும், அவரது வைதிக ஒழுக்கமும் நின்று நிலவித் தெளிவாக விளங்குவதும், பிறவும் ஊன்றிக் காண்போர் இச்சரித உண்மையை  உணர்ந்து கொள்வர்.

    பரசுபெறு மாதவ முனிவன் பரசிராமன் பெறு நாடு வேணியார் கழல் பரசிப் பரசு பெற்றான் அப்பரசு கொண்டு நாடு பெற்றான். ஆதலின் இன்ன வகையால் நாடு பெற்றான் எனக் குறியாது பெறுநாடு என வாளா கூறினார். அதனாற் பெறும் என வருவிக்க.

    திரை செய்கடலின் பெருவளன்- கடல்படு பொருள்களாகிய முத்து முதலிய மணிகளும், உப்பு முதலிய விளை பொருள்களும், மீன் முதலிய உணவுப்பண்டங்களும் பிறவுமாம். இவை மனிதர் விளைவிக்காது தாமாய்க் கடலிலும், கடற் புறத்தும் விளைந்து பெருந் தொகுதியாகப் பெற நிற்பது பற்றிப் பெருவளன் என்றார். திரை செய்கடல் – அலைகளுடைமை கடலுக்குச் சிறப்பிலக்கணமாம்.

    “திரைகடலோடியுந் திரவியந்தேடு“ என்றது நீதி நூல். “படுதிரைப்பரவை மீது படர் கலங் கொண்டு போகி“ என்றது காரைக்காலம்மையார் புராணம்.

    திருந்து நிலவின் செழுவளன் – இவை மருதநிலத்து விளைபொருள்களாகிய நெல் – வாழை – மா – பலா – தென்னை – முதலிய பெரும்பலன்களைக் குறித்தன. நிலச் செழிப்புடையதும், இப்பலன்கள் மிகுதியும் செழிப்புடன் பெருக உண்டாவதும் மலைநாடு என்பது இன்றைக்கும் தேற்றமாம். வானம் பிறங்கக் காலந் தவறாது பெய்ய, அதுகொண்டே விளைதரும் நாடு இந்நாடேயாம் எனின் அதுவுஞ்சரியே!, இங்கு மலைச்சரிவுகளிலும் நன்செய்விளைவு காண்பது வேறெங்கும் காணாத காட்சியாம். மனிதரால் வயல், ஏரி, வாய்க்கால், அணை முதலிய பலவகையானும் சாதனம்பெற்று அது காரணமாகப் பெறும் விளைவு போலல்லாது, இங்கு நிலமும் மழையும் தாமாகவே திருந்தப் பொருந்திச் செழித்த வளந்தருவன என்பார் திருந்து என்றும், செழு என்றும் கூறினார்.

    வரைஇன் வளம் – வரை – மலை. இன் – இனிய, மலைபடுபொருள்களாகிய அகில், சந்தனம், தேன், மணி முதலியன. இவை, மலைகளில் இயல்பின் உண்டாகி இனிமைதருவன ஆதலின் அடைமொழியில்லாது வாளா வரை என்றார். அதனோடு வரைக்குச் சாரியையுமாகிய வளத்திற்கு அடைமொழியுமாகிய இன் என்ற சொல் அமைத்த அழகு காண்க. நாடு, மலைநாடு, ஆதலின் அந்த முதன்மை கருதி வரைக்கு அடையில்லாது கூறினார் எனினுமாம்.

    உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு – மலைநாடு எனப் பேர் பெறுதலின் குறிஞ்சித் திணையின் பண்பு ஒன்றே இங்குப்பெருகும் எனவும், நானிலப் பகுதியில் ஏனைத் திணைகளின் பண்பு இன்றாம் எனவும் ஐயம் வருமாதலின், அதனை எதிர்நோக்கி இங்கு ஏனைத் திணைவளமும் பெருகி மிகும் என்றார். மலைகள் மிகுதலால், மிகுதிபற்றி மலைநாடு எனப் பேர் பெறினும், மருதம், நெய்தல் என்ற திணைப் பகுதி வளங்களுமுடைய தென்றார். வரையும் திருந்து நிலனும் பொருந்தக் கூறியதனால் இடைப்பட்ட முல்லையும் உடன்கொள்ளப் பெறுமென்பர்.

    திரைசெய்கடல் எனவும், வரையின் எனவும் கூறிய பகுதிகள்போலாது, திருந்து நிலனின் செழு – வளன் என்ற அடைச்சிறப்பால் இவற்றுள்ளே நிலத்து வளமே மிகுந்தது என்ற குறிப்புமாம். இது விரிபொழில்சூழ் என்ற முதனூற்பொருளையும்,

    “மனைக்கே புகநீடு தென்றல் வீசும் பொழில்“

    என்ற வகைநூற் கருத்தையும் விரித்ததாம். பின்னர்க் கூறும் நகரச் சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்ததுமாம். கடற்கரையுடையதாய், மலைகள் விரவிய செழிய நிலப்பரப்புடைய நாடு என அதன் அமைப்பும் குறித்தபடி காண்க. மனைகள்தோறும் பொழிலிருத்தலும் இந்நாட்டுக் காட்சியாம்.

    பெருகி மல்கும் – ஒவ்வொன்றும் தனித்தனிப் பெருகியும் ஒன்று சேர்ந்து மிக மல்கியும் உள்ளன. கழறிற்றறிவார் நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் இந்நாட்டினின்றபடி திருக்கயிலைக் கெழுந்தருளினார்களாதலானும், அவர்கள் அங்கெழுந்தருளியதை உபமன்னிய முனிவர் கண்டு முனிவர்களுக்குச் சொல்லிய வரலாற்றில் இப்புராணம் தொடங்குவ தாதலானும, இந்நாட்டைப் பற்றி முதன் முறையாகக் கூற வந்த இந்த இடத்துக் கேற்பச் சுருக்கியும் விரித்தும் நாட்டு வளங்கூறியபடி கண்டுகொள்க. மலை நாட்டுச் சிறப்பின் விரிவு கழறிற்றறிவார் நாயனார் புராணம். வெள்ளானைச் சருக்கம் முதலிய இடங்களிற் காண்க. இவ்வளங்கள் தனித்தனிப் பெருகும் அவ்வவ்விடங்களில் வைத்து இப்பாட்டாற் கூறிய ஆசிரியர், அவை உடன் பெருகி மல்கும் வகையை நகரச் சிறப்பு முடன்கொண்டு வைத்து வரும்பாட்டாற் கூறிய திறமும் காண்க.

    Share
  • உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் – புக்கர் டீ வாஷிங்டன்

    உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் – புக்கர் டீ வாஷிங்டன்

    -மேகலா இராமமூர்த்தி

    சிறந்த கல்வியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், நாவன்மை மிக்க சொற்பொழிவாளராகவும், அனைத்திற்கும் மேலாகக் கருப்பின மக்களுக்காக அமெரிக்காவிலுள்ள அலபாமாவில் டஸ்கீகீ  பல்கலைக்கழகத்தை (Tuskegee University, Alabama) நிறுவிய அறிஞராகவும் விளங்குபவர் புக்கர் டீ வாஷிங்டன் (Booker T. Washington) எனும் மாமனிதர்.

    1856இல், ஆப்பிரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் மகனாக வெர்ஜீனியாவில் பிறந்தார் புக்கர். அக்காலக்கட்டம், ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமைகளாய் அல்லலுற்ற காலக்கட்டமாகும். ஒரு வசதியான வெள்ளையர் குடும்பத்துக்குச் சமையல்வேலைகள் செய்து பிழைத்துவந்தார் புக்கரின் தாயார். புக்கரோடு பிறந்தவர்கள் இருவர். அவ்விருவரோடும் தாயோடும் பதினாறு அடி நீளமும் பதினான்கு அடி அகலமும் கொண்ட சிறிய அறையில் வசித்துவந்தார் புக்கர்.

    பிள்ளைப் பருவத்திலேயே கடுமையான அடிமை வேலைகள் பலவற்றைச் செய்யவேண்டிய கட்டாயம் புக்கருக்கு ஏற்பட்டது. உண்பதற்கே நல்ல உணவில்லாமல் பலவேளைகளில் பசியால் வாடியது அவரது குடும்பம். முரட்டுச் சணலால் ஆன சட்டையையே அவர் அணிந்திருந்தார்; அவர் மட்டுமன்று அக்காலத்தில் அடிமைகள் அனைவருமே சணலால் ஆன சட்டைகளையே அணிந்திருந்தனர். அந்தச் சட்டை உடலில் உராயும்போது ஏற்படும் துன்பம் நூறு குண்டூசிகள் உடலில் குத்துவதுபோன்ற வேதனையை அளிக்கவல்லது.

    இத்துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கிய நன்னாளும் வந்தது. ஆம்! 1863இல் அடிமைகள் அனைவரும் விடுதலையடைந்தார்கள். புக்கர் இருந்த வெர்ஜீனியா தோட்டத்து அடிமைகளும் தளையினின்று விடுபட்டார்கள். அந்த மகிழ்ச்சியில்,

    “ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று” என அவர்கள் மகிழ்ச்சியில் ஆடினார்கள்; பாடினார்கள். ஆனாலும் அந்த மகிழ்ச்சி சற்று நேரத்திலேயே வடியத் தொடங்கியது. காரணம், தங்களையும், தங்கள் குழந்தை குட்டிகளையும் இனி எப்படிக் காப்பது என்ற கவலை அவர்களைச் சூழ்ந்ததேயாகும்!

    அவ்வேளையில் புக்கரின் சிறிய தந்தையார், புக்கர் குடும்பத்தினரைத் தாம் வசித்துவந்த மேற்கு வெர்ஜினீயாவிலிருந்த, மால்டன் (Malden) என்ற ஊருக்கு அழைத்தார். அங்கே இவர்கள் சென்றதும், தாம் வேலைபார்த்துவந்த உப்பு உலைக்களத்தில் (salt furnace) புக்கரையும் அவருடைய சகோதரர்களையும் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

    புக்கருக்கு இளம் பருவந்தொட்டே படிப்பதில் பெருவிருப்பம் உண்டு. தாயின் உதவியோடு முதற் பாடப்புத்தகம் ஒன்றைப் பெற்றார் அவர். அதனைத் தாமே எழுத்துக்கூட்டிப் படிக்கவும் பழகிக்கொண்டார்.

    அப்போது கருப்பினத்தார்க்கென்று கல்விநிலையம் ஒன்று அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஊராரிடையே உண்டாயிற்று. தற்செயலாக ஒஹையோவிலிருந்து (Ohio) வந்திருந்த கல்விகற்ற ஒருவரை ஆசிரியராகக் கொண்டு கல்விநிலையம் தொடங்கப்பட்டது.

    ஊரில் பலரும் கல்விகற்றபோதினும் புக்கரின் சிறிய தந்தையார் புக்கரைக் கல்விக்கூடத்துக்கு அனுப்ப மறுத்துவிட்டார். புக்கர் பள்ளிக்குச்சென்றுவிட்டால் உப்பு உலைக்களத்திலிருந்து அவர் பெற்றுவரும் கூலி நின்றுவிடும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஆயினும் உலைக்கள வேலையைக் காலை ஒன்பது மணிவரை பார்ப்பது பிறகு பள்ளிக்குச் செல்வது என்றோர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கிடையே உலைக்களப் பணி, கல்விகற்கும் பணி இரண்டையும் சமாளித்துவந்தார் புக்கர்.

    பள்ளிக்குச் சென்றபோது அவருக்கு வேறொரு சிக்கல் ஏற்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு பெயர் இருக்கத் தமக்கு மட்டும் புக்கர் என்ற ஒரே ஒரு பெயர் இருப்பதைக் கருதிச் சங்கடப்பட்ட அவர், பதிவேட்டில் எழுதப்படும் சமயத்தில் தம்முடைய பெயரைப் ’புக்கர் டீ வாஷிங்டன்’ என்று சேர்த்துச் சொல்லிவிட்டார்; அந்தப் பெயரே பிறகு அவருக்கு நிலைத்துவிட்டது.

    உப்பு உலைக்களத்தில் வேலைபார்த்துவந்த புக்கரை, நிலக்கரிச் சுரங்கத்தில் வேலைபார்க்கப் பணித்தார்கள். அச்சுரங்க வேலை மிகவும் கடினமானதும் உயிருக்கு ஆபத்தானதும் கூட. அவ்வேலையையும் சிலகாலம் அவர் செய்துவரலானார். புக்கரைப் போலவே கருப்பினச் சிறுவர்கள் பலர் அந்தச் சுரங்கவேலைகளைச் செய்துவந்தார்கள். அவர்களின் எதிர்கால நல்வாழ்வே இதனால் பாழாகிவருதைக் கண்டார் புக்கர்.

    தனது குறிக்கோளுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் இன்றி முன்னேற அனுமதிக்கப்படுகின்றான் ஒரு வெள்ளையினச் சிறுவன். ஆனால் அம்முட்டுக்கட்டைகள் ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்க்கு இருப்பதனால் அவ்வினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வாழ்வில் நினைத்த வகையில் முன்னேற முடியவில்லை என்றெண்ணி வருந்திய புக்கர், எதிர்காலத்தில் தாம் செயற்கரிய செயல்கள் செய்து நற்பெயர் பெறுவதோடு தம் இனத்தாரையும் பெருமிதமும் பேரூக்கமும் அடையச் செய்யவேண்டும் எனும் உறுதிபூண்டார்.

    சுரங்கத்தில் அவர் வேலைபார்த்துவரும் பொழுது ஒருநாள் ஒரு செய்தியைக் கேள்வியுற்றார். ஹேம்ப்டன் (Hampton) என்ற ஊரில் கருப்பினத்தவருக்காக ஒரு பள்ளி அமைக்கப்படுகிறதென்றும் அந்தப் பள்ளியில் சேரும் ஏழை மாணாக்கர் ஏதேனும் ஒரு வேலைசெய்து தம் உணவுக்கு வேண்டிய பணத்தை முழுவதுமோ பாதியோ பெற்றுவிடமுடியும் என்றும், அங்கேயே மாணாக்கர் ஏதேனும் தொழிற்கல்வியையும் பெறக்கூடும் என்றும் அறிந்ததிலிருந்து அவர் சிந்தை அக்கல்விக்கூடத்துக்குச் சென்றுவிட்டது. 1872ஆம் ஆண்டு புக்கர் ஹேம்ப்டனுக்குப் புறப்பட்டார். 

    அங்கேசென்று சேர்வதற்குப் போதிய பணமில்லாத நிலையில் தம் கையிலிருந்த சொற்பப் பணத்தில் சிறிது தூரம் குதிரை வண்டியிலும், சிறிது தூரம் நடந்தும், சிறிது தூரத்தைப் பிறரது உதவியாலும் கடந்து ஒருவழியாக ஹேம்ப்டன் வந்துசேர்ந்தார் புக்கர்.  தம்மைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு தலைமையாசிரியர் முன்பு சென்று நின்றார் அவர். புக்கரை ஏற இறங்கப் பார்த்த அந்த அம்மையார், அவரைச் சேர்த்துக்கொள்கிறேன் என்றோ சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றோ எதுவும் சொல்லாமல் காலந்தாழ்த்தி வந்தார்.

    பிறகு அவரைச் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. புக்கரை எழுதப் படிக்கச் சொல்லியோ, எண்ணச் சொல்லியோ அத்தேர்வில் கேட்கப்படவில்லை. தலைமையாசிரியராக இருந்த அம்மையார் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துப் புக்கரைப் பெருக்கச் சொன்னார். தமக்குத் தெரிந்த வேலையைப் பணித்தமைக்காகப் பேருவகை எய்தினார் புக்கர். அறையின் அனைத்துப் பகுதிகளையும் அருமையாகச் சுத்தப்படுத்தினார். வந்துபார்த்த அம்மையார் அறையின் தூய்மையைக் கண்டு மகிழ்ந்து நீ பள்ளிக்கூடத்தில் சேரலாம் என்று புக்கருக்கு அனுமதி கொடுத்துவிட்டார். புக்கர் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது?

    அங்கே பயிலும் காலத்தில் ஆம்ஸ்ட்ராங் (Armstrong) எனும் நல்லுள்ளம் படைத்த ஆசிரியரோடு பழகும் வாய்ப்புக் கிட்டியது புக்கருக்கு. சொற்பொழிவாற்றும் கலையிலும் புக்கர் பயிற்றுவிக்கப்பட்டார். ஹேம்ப்டனில் இருந்த சொற்போர்ச் சங்கத்தில் சனிக்கிழமைதோறும் ஏதேனும் ஒரு பொருள்பற்றி விவாதம் நடைபெறும். புக்கரும் அதில் தவறாது கலந்துகொள்வார்.

    ஹேம்ப்டன் கல்விக்கழகத்தில் அவர் பயின்றுகொண்டிருந்த காலத்திலேயே அவருடைய அருமைத் தாயார் இறந்துபோனார். அது தாளமுடியாத துக்கத்தை அவருக்கு அளித்தது.

    1875 ஜூன் மாதத்தில் புக்கர் டீ வாஷிங்டனின் ஹேம்ப்டன் கல்வி முற்றுப்பெற்றது. சிறப்பாகத் தேறிப் பட்டம்பெற்றார் அவர். அதன்பிறகுச் சிற்றுண்டிச் சாலை ஒன்றில் பணியாளராகச் சேர்ந்தார்.

    சில மாதங்களுக்குப் பிறகு தம் ஊராகிய மால்டனுக்குச் சென்ற புக்கர், அங்கிருந்த கருப்பின மக்களுக்கான பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பகல்நேரப் பள்ளிக்கூடமேயன்றி இரவுப்பள்ளிக்கூடம் ஒன்றும் அவரது முயற்சியால் நிறுவப்பட்டது. அப்பள்ளியின் வாயிலாகப் மாணவர்கள் பலர் கல்விபெற்றனர்.

    1878இல் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள  வேலேண்ட் செமினரியில் (Wayland Seminary) 8 மாதங்கள் கல்விபயின்று திரும்பினார் புக்கர்.

    அவ்வேளையில் புக்கருக்கு ஆம்ஸ்ட்ராங்க் என்ற தம்முடைய ஆசானிடமிருந்து உவகையளிக்கும் கடிதமொன்று வந்துசேர்ந்தது. ஹேம்ப்டன் கல்விக்கழகம் வந்து அவ்வாண்டின் பட்டதாரிகளுக்குப் புக்கர் நல்லுரை வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குமுன் துடைப்பத் தேர்வில் தேர்ச்சியடைந்தபின் அவரைச் சேர்த்துக்கொண்ட அதே கல்லூரி இப்போது அவரைப் பட்டமளிப்பு விழாவில் மாணாக்கர்களுக்குச் சிறப்புரையாற்ற அழைத்தமை பெருமைக்குரிய செயலே அல்லவா? அதற்கிசைந்த புக்கர் அங்கே சென்று ’வெற்றிபெறுகின்ற ஆற்றல்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

    அதைத்தொடர்ந்து ஹேம்ப்டன் கல்லூரியிலேயே அவர் ஆசிரியராகப் பணிபுரியவேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங்க் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தட்ட இயலாது ஏற்றுக்கொண்ட புக்கர், தொடக்கத்தில் அங்கே 75 சிவப்பிந்தியர்களுக்குப் பாடம் நடத்தினார்.  சிறிது காலத்திலேயே இரவுநேரக் கல்விக்கூடம் ஒன்றையும் ஆம்ஸ்ட்ராங் ஆரம்பித்து அதிலும் பாடம் கற்பிக்க புக்கரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே புக்கரும் பாடம் கற்பித்து வரலானார்.

    இப்பணிகளை புக்கர் மேற்கொண்டிருந்த காலத்தில் ஆம்ஸ்ட்ராங் அவரைப் பிறிதொரு பணியை ஒப்புக்கொள்ள இயலுமா என்று கேட்டார். அலபாமா மாகாணத்தில் கருப்பினத்தவருக்குக் கல்விக்கூடம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கத்தார் ஆண்டொன்றுக்கு இரண்டாயிரம் டாலர்கள் அளிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள். அவ்வூரார் சிலர் ஆம்ஸ்ட்ராங்குக்குக் கடிதம் எழுதித் தமக்குக் கல்வி கற்பிக்க ஒரு வெள்ளையரைக் குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர். கருப்பினத்தைச் சேர்ந்த ஆசிரியர் கிடைப்பது அரிது எனும் எண்ணத்திலேயே அவர்கள் அவ்வாறு கேட்டிருந்தனர். ஆம்ஸ்ட்ராங்க் புக்கரது பெருமையையும் திறனையும் தெரிவித்து அவரை அழைத்துக்கொள்ளச் சம்மதமா என்று அவர்களைக் கேட்டபோது அம்மக்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டனர். இதனை அறிந்த புக்கரும் அலபாமாவிலுள்ள டஸ்கீகீ எனும் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார். பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்று இருக்கும் எனும் எதிர்பார்ப்போடு அங்கே சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அங்குக் கட்டடம் ஏதுமில்லை. ஆனால் படிக்கும் வேட்கைகொண்ட மக்களைக் கண்டார் புக்கர். எனவே அவர்களுக்குக் கற்பிக்கும் ஆர்வம்கொண்டவராகப் பள்ளிக்கு இடம் தேடினார். அங்கே பழைய மாதா கோவிலுக்கு அருகே இடிந்த சந்தைக்கூடம் ஒன்று இருப்பதைக் கண்டார். முறையான கட்டடங்கள் பள்ளிக்கென்று எழுப்பப்படும்வரை அந்த இடிந்த சந்தைக் கூடத்தையே கல்விக்கூடமாகப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

    அரும்பாடுபட்டுப் புக்கரும் அவரோடு உடன்பணியாற்றிய ஒலிவியா என்ற அம்மையாரும் கல்விக்கூடம் கட்ட நிதி திரட்டலானார்கள். இப்படிப் பல செல்வந்தர்கள், நல்லுள்ளம் படைத்தோர் ஆகியோருடைய நன்கொடைகளின் உதவியால் கட்டப்பட்ட முதல் மண்டபம் போர்ட்டர் ஹாலாகும் (porter hall). போர்ட்டர் என்பவர் அதற்குப் பெரும்பொருள் கொடுத்தமையால் அவர் பெயர் அதற்குச் சூட்டப்பெற்றது.

    1882ஆம் ஆண்டு பேன்னி ஸ்மித் (Fannie Smith) என்ற பெண்ணை புக்கர் மணந்துகொண்டார். போர்ஷியா (Portia) என்ற மகவை ஈன்ற அவர், ஈராண்டுகளில் தம் கணவரையும் குழந்தையையும் விட்டு விண்ணுலகு ஏகினார்.

    கல்விக்கூடத்துக்கு மேலும் கட்டடங்கள் கட்டப் பொருளுதவி தேவைப்பட்டபோது ஆம்ஸ்ட்ராங்கின் யோசனையின் பேரில் புக்கர் வட மாநிலங்கள் பலவற்றில் டஸ்கீகீ கல்விக் கூடம் அமைப்பதற்கு உதவிகோரிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்; அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    டஸ்கீகீயில் இடிந்துகிடந்த சந்தைக்கூடத்தில் மழைபெய்யுங் காலத்தில் மாணவன் ஒருவன் குடைபிடிக்கப் புக்கர் கல்வி கற்பித்துவந்த காலம் மாறி, அழகான கட்டடத்தில் ஆசிரியர் பலர் அமைதியோடு கற்பிக்கும் காலமும் வந்தது. அலபாமா அரசாங்கம் முதலில் அளித்த இரண்டாயிரம் டாலர்கள் பிறகு மூவாயிரமாயிற்று. மேலும் பல இடங்களிலிருந்தும் நிதியுதவி கிடைத்தது.

    1863ஆம் ஆண்டு, நாநலம் மிக்கவரான புக்கரை அட்லாண்டாவைச் சேர்ந்த கிறித்தவத் தொண்டரது மாபெருங்கூட்டமொன்றில் உரையாற்ற அழைத்தார்கள். கருப்பரும் வெள்ளையரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புக்கர் ஆற்றிய உரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    புக்கரைப் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புகளும் சொற்பொழிவாற்றத் தொடர்ந்து அழைத்தவண்ணம் இருந்தன. அவருடைய சொற்பொழிவுகள் உயிரோட்டமும், உண்மையும், தேர்ந்த சொற்களும் கொண்டவையாக அமைந்தமையால் அனைவரையும் கவர்ந்தன.

    1896ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தார் கௌரவ முதுகலைப் பட்டத்தை (master of arts) புக்கருக்கு அளித்துச் சிறப்பித்தார்கள்.

    1899ஆம் ஆண்டு புக்கருக்கு வியப்பளிக்கும் வகையில் பாஸ்டன் (Boston) எனும் ஊரைச் சேர்ந்த சிலர் அவர் ஐரோப்பா சென்று சிலகாலம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கான நிதியைத் திரட்டி அளித்தனர். அதையேற்றுப் புக்கரும் ஐரோப்பாவின் சில நாடுகளுக்குச் சென்றார். இலண்டன் சென்ற அவருக்கு விண்ட்சர் மாளிகையில் (windsor castle) விக்டோரியா மகாராணியாரோடு விருந்துண்ணும் அரிய வாய்ப்புக் கிட்டியது.

    கருப்பினச் சமூகத்தின் அறியாமை எனும் முகமூடியை அகற்ற டஸ்கீகீ எனும் கல்விக்கழகத்தை நிறுவி, கல்வியிலும் கைத்தொழிலிலும் அவர்களைத் திறன்மிக்கவர்களாக்கி, அவர்கள் வாழ்வில் அறிவொளியேற்றிய அருஞ்சாதனையாளரான புக்கர் டீ வாஷிங்டன் 1915ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் தமது 59ஆவது அகவையில் உயிர்நீத்தார்.

    அடிமையாய்ப் பிறந்து, வறுமையில் வளர்ந்து, பல்வேறு இடுக்கண்களைச் சந்தித்த சூழலிலும், தம் அயரா உழைப்பால் தாமும் உயர்ந்து தம்மின மக்களையும் உயர்த்திய உத்தமர் புக்கர் டீ வாஷிங்டனின் அரும்பணிகள் என்றும் போற்றத்தக்கவை!

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Booker_T._Washington

    https://www.history.com/topics/black-history/booker-t-washington

    https://www.britannica.com/biography/Booker-T-Washington

     

    Share
  • உண்மை என்ன?: நாடார் குலத்தை யுனெஸ்கோ பாராட்டியதா?

    உண்மை என்ன?: நாடார் குலத்தை யுனெஸ்கோ பாராட்டியதா?

    அண்ணாகண்ணன்

    உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் குலத்தைப் பாராட்டி, யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியுள்ளதாக, ஒரு படச்செய்தி உலவி வருகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன? இதோ ஓர் அலசல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒருநாள் மனைவி – குறுநாவல் பற்றிய ஒரு திறனாய்வுப் பார்வை

    ஒருநாள் மனைவி – குறுநாவல் பற்றிய ஒரு திறனாய்வுப் பார்வை

    ச.சுப்பிரமணியன்

    முன்னுரை

    இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் உலகத்தில் பெருமளவு புழங்கிய தமிழ்ச்சொற்களில் ‘பெண்ணியம்’ என்பதும் ஒன்று. ‘புரட்சி’ என்பதையும் ‘புதுக்கவிதை’ என்பதையும் இதனோடு இணைத்துக்கொள்ளலாம். இந்த மூன்று சொற்களும் ஒரு நூற்றாண்டு கடந்து போய்விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் நீர்த்துப்போன சுண்ணாம்பாகவே காட்சியளிக்கின்றன என்பதை நடுநிலையாளர் உணர்வர். ஒப்புக்கொள்வர். காரணம், உள்ளத் தூய்மையோடு, மன உறுதியோடு, கொள்கைப் பிடிப்போடு முன்னெடுக்கும் எதுவும் இறுதியில் வெற்றி பெறும். அவ்வாறின்றிப் போலிப் பாராட்டிற்காகவும் வெற்று விளம்பரத்திற்காகவும்  அரசியல் வருவாய்க்காகவும் செய்யப்படுகிறபோது மூலத்தின் நோக்கம் சிதைவுக்கு ஆளாகிறது.

    தந்தை பெரியாரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் பேரறிஞர் அண்ணாவும் திரு.வி.க.வும் மகாகவி பாரதியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பெண்விடுதலை பற்றிப் பேசியபோது அது ஆன்மாவின் குரலாக ஒலித்தது. அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. எத்தகைய கொடுமையான சூழலுக்குப் பெண்ணினம் ஆளாக்கப்பட்டிருந்தது என்பதைப் அப்பெருமக்களின் போராட்டங்கள் வெளிப்படுத்தின. விடியல் வந்தது. ஆனால் அது விடிந்தும் விடியாமலே போய்விட்டதுதான் காலச் சோகம். இன்றைக்கு நாளும் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்ட பிறகு அப்பெருமக்கள் முன்னெடுத்த பெண் விடுதலை, ஒரு பேச்சுப்பொருளாக மட்டுமே கருதக் கூடிய அளவுக்குத் தாழ்ந்து போயிருக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் தண்ணீர்ப்பள்ளி தமிழ் இராசனின் ‘ஒருநாள் மனைவி’ என்னும் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

    பெண்ணைப் பாராட்டி மயக்கி வளைப்பது வேறு. அவள் அருமையுணர்ந்து இல்லற வாழ்க்கைப் பயணத்தில் அவளுக்குத் துணைநிற்பது என்பது முற்றிலும் வேறு. வித்தியாசமான பெண்களைப் பாத்திரங்களாக்கும் படைப்புலகத்தில் முற்றிலும் புதிய வித்தியாசமான கோணத்தில் ஓர் ஆணைப் படைத்துக் காட்டி அவன் பங்குபெறும் கதைக்கு ‘ஒருநாள் மனைவி’ என்று பெயர் வைத்திருக்கிற இராசனின் படைப்புத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இல்லறத்திற்குத் தேவை இதயம், மூளை அல்ல!

    ஒரு கருத்து பொதுவெளியில் பதிவிடப்பட்டாலும் அது பதிவிடும்  குறிப்பிட்ட நபர்க்குரிய அனுபவத்தின் வெளிப்பாடாகவும் அறிவின் வெளிப்பாடாகவும் மட்டுமே கொள்ளப்படல் வேண்டும். இன்றைய நடப்பியலில் இல்லறத்தில் மனைவி தலைமையேற்கும் இல்லறம் சிறப்பாகவும் கணவன் தலைமையேற்கும் இல்லறம் அதனின் சற்றுக் குறைந்தும் இருக்கும் என்பது என் கருத்து. என் அனுபவம். ஐம்பது ஆண்டுகள் இல்லறத்தில் என் அனுபவம் இதுதான். இதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அனுபவம் பொதுவாக வேண்டும் என்றும் நான் விரும்பியதும் இல்லை. என்னுடைய அனுபவம் அது.

    ‘ஒருநாள் மனைவி’ என்னும் குறுநாவலில் இராசன் சொல்லியிருப்பது ஒரு வேறுபட்ட கோணமே. ஆனால் அனுபவக் கூறுகளைப் பொறுத்தவரையில் எனக்கு அது மிகவும் சாதாரணம். காரணம் நான் எப்போதும் மனைவிக்குக் கட்டுப்பட்டவன். இந்தக் கட்டுப்பாட்டுக்கும் பணிவுக்கும் ஒவ்வொரு நாளும் இல்லறக் கடமைகளில் என் மனைவி காட்டும் பொறுப்புணர்வும் உடல் வேதனையுமே காரணமாகும். ஒரு பெரிய அலுவலகத்தைப் பொறுப்புடன் பராமரிக்கும் பணியைவிட மிகவும் கடினமானது குடும்பத்தைக் கொண்டு செலுத்துவது. இந்த அனுபவத்தைத்தான் இடமாற்றம் செய்து சிந்தித்திருக்கிறார் இராசன்.

    கணவனும் மனைவியும் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் இல்லறப் பதவிகளை இடமாற்றம் செய்து கொண்டால் அன்றையப் பொழுது எப்படியிருக்கும் என்பதன் அழகான கற்பனையின் விளைவே இந்தப் படைப்பு. உண்மையில் இதனைக் கற்பனையின் விளைவு என்பதும் பொருந்தாது. சமுதாயத்தில் பரவ வேண்டிய அமைதிப் பணி. கணவனின் ஆளுமையை மனைவி வியப்பதும் மனைவியின் அருமையைக் கணவன் உணர்வதுமாகிய ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்தாலேயொழிய இல்லறம் சிறக்க இனி வாய்ப்பில்லை. பொருளாதாரத்தை மையமாக்கிக் கட்டமைத்திருக்கிற இன்றைய இல்லறச் சிதைவு இன்னும் நொறுங்கிப் போகும் ஆபத்திருக்கிறது. இந்தக் கதை அந்தக் குறையைப் போக்கும் எழுத்தாக இருக்கலாம். இருக்க வேண்டும். இருக்கும்.

    விரும்பியதும் வைத்ததும்

    ‘ஒருநாள் மனைவி – இருந்து பார்த்தவனின் இனிய அனுபவங்கள்’ என்றுதான் இந்தத் திறனாய்வுக் கட்டுரைக்கு நான் முதலில் பெயர் வைத்தேன். கணவன் மனைவியாகவும் மனைவி கணவனாகவும் இருந்து பார்ப்பதல்ல, வாழ்ந்து பார்ப்பதுதான் இனிமையான இல்லறம். இது கண்ணதாசன் சொல்வதுபோல ‘நான் கண்ட காட்சி காண நானல்ல நீங்கள் யாரும்’ என்பதைப் போன்றது. கற்பாருக்கு வரும் சிந்தனைக் குழப்பத்தை மனத்தில் எண்ணி அந்தத் தலைப்பை மாற்றித் ‘திறனாய்வு’ என்ற அளவில் அமைத்து அமைதியடைந்தேன். பெண்ணியத்தை மையமாக்கிய படைப்பிலக்கியங்களில் இந்தக் கதையின் பின்னணியில் உள்ள உண்மையாகிய கற்பனை எண்ணி மகிழத்தக்கதும் வியப்புக்குரியதுமாகும். முதிர்ந்த ஒரு நாவலாசிரியர்க்கும் அரிதாகத் தோன்றக்கூடும் இந்தக் கற்பனை, ஒரு காவல்துறை அதிகாரிக்குத் தோன்றியிருப்பது எண்ணிப் பார்க்க இயலாத படைப்பாளுமையாக நான் கருதுகிறேன்.

    அடிமனத்துப் படைப்பு

    ‘தண்ணீர்ப்பள்ளி’ தமிழ்ப் பற்றாளரும் மொழியின உணர்வாளரும் கவிதைத் துறைக்குத் தமிழகக் காவல் துறை வழங்கிய சீர்வரிசைகளில் ஒருவருமாகிய திரு. ம.இராசனின் சிந்தனைக் கருவறையிலிருந்து வெளிவந்திருக்கும் மூன்றாவது சந்தனத் தமிழ்ப் படைப்பு, ‘ஒருநாள் மனைவி’ என்னும் இந்நூலாகும்.

    ‘வாழ்க்கைக் கவலைகளில்
    நாங்கள் விட்ட பெருமூச்சு
    கடற்கரைக்குப் போயிருந்தால்
    கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்’

    என்பார் நா.காமராசன். அவர் கூறும் வாழ்க்கைச் சிக்கல் பலவாயினும் ஒரு குடும்பத்தைக் கொண்டு செலுத்துவதும் அவற்றுள் அடங்கும். ‘இட ஒதுக்கீடே’ இல்லாத பதவி குடும்பத் தலைவி பதவிதான். அந்தப் பதவியின் கீழ்வரும் குடும்பங்கள் சிறக்கும். மற்றவை இறக்கும். இது என் கருத்து. இந்தச் சிந்தனைப் பின்புலத்தில் இல்லறக் கடமைகளை இயல்பாக ஆற்றிவரும் மனைவியின் துயரத்தை ‘அனுபவித்தே பார்த்துவிடுவது எனத் தன்னை மனைவியாக்கிக் கொண்ட ‘பைரவியின்’ (அந்த ஒருநாள் மட்டும் பைரவன் பைரவி ஆகிறான்.  பூவரசி ‘பூவரசன்’ ஆகிறாள். இது நமது கற்பனை) கடமைச் சித்திரிப்பைத் தமது இயல்பான தமிழால் காவியமாக்கித் தந்திருக்கிறார் இராசன். ‘இல்லறத்தை நடத்துவதற்கு மனைவி துணையாவாள்’ என்பது வள்ளுவம். இங்கே ‘துணை’ என்பது ‘இன்றியமையாமை’ என்னும் பொருளில் அமைகிறது. இதனைப் ‘புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு’ என்னும் தொடரால் பெறலாம். இல்லறம் முழுமையாகச் சிறக்க வேண்டின், வள்ளுவம் இதனை மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அத்தகைய குறிப்பு திருக்குறளில் இல்லாமையால் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் காண்பதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.

    தலைப்பில் கையாளப்பட்ட உத்தி

    வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தி வெளிவந்த திரைப்படங்கள் உண்டு. ஒரே இரவில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை ‘ஓர் இரவு’ என்னும் திரைப்படம் காட்சிப்படுத்தியது. கணவனுடைய உயிரைக் காப்பாற்றித் தருமாறு தன் முன்னாள் மருத்துவர் காதலனிடம் வேண்டும் ஒரு பெண்ணின் தவிப்பைப் படமாக்கிய இயக்குநர் ஸ்ரீதர் ‘நெஞ்சில் ஓர்  ஆலயம்’ என்னும் படத்தினை ஒரே அரங்கில் (செட்டில்) படமாக்கினார். வீட்டைவிட்டு வெளியேறிய பெண் ஒன்பது இரவுகளில் தான் சந்திக்கும் ஒன்பது வேறுபட்ட மனிதர்களைப் பற்றிய அனுபவத்தை அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் ‘நவராத்திரி’ என்னும் திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்.

    தாயை இழந்த குழந்தைக்கு ஏழுநாட்கள் மட்டும் தாயாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இறுதியில் அந்தக் குழந்தையின் தந்தைக்கே மனைவியான நிகழ்வை இயக்குநர் திரு. பாக்கியராஜ் ‘அந்த ஏழு நாட்கள்’ என்னும் படத்தில் சித்திரித்தார். ‘உயிர்பெற்ற புகைப்படமே திரைப்படம்’ என்பதை உறுதிப்படுத்துதற்காகத் தான் எடுத்த ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தைக் கார்ட்டூனிலேயே தொடங்கிக் கார்ட்டூனிலேயே முடித்திருப்பார் ஸ்ரீதர்.

    இவ்வாறு கதை சொல்லும் உத்திகள், படைப்பாளனின் வெளிப்பாட்டுத் திறனுக்கேற்ப மாறுபட்டு அமையும். இந்தப் பின்புலத்தில் இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எவருக்கும் வரும் ‘ஒரு மாதிரியான எண்ணம், எனக்கு வரவில்லை. நான் மிக உயர்ந்த ஒழுக்க சீலன், பண்பாளன் என்பது பொருளன்று. இது மாதிரியான இலக்கிய அனுபவங்களை நான் ஏற்கெனவே பெற்றவனாகையால் அதிர்ச்சியடையவில்லை.

    படைப்பும் படைப்பாளன் உரிமையும்

    படைப்பாளர்களுக்கு உள்ள உரிமை, படைப்புச் சார்ந்த கருத்து, மொழி, வடிவம், உத்தி என எல்லாத் தளங்களிலும் பரவியிருக்கிறது. அதனால்தான் தன் மனைவியின் கடமையை ஒருநாள் செய்து தன்னை அவளுக்கு மனைவியாக்கி அவள் படும் துன்பத்தை அனுபவித்துப் பார்க்கலாம், பார்க்க வேண்டும் என்னும் ஓர் ஆணின் உணர்வுகளை ‘ஒருநாள் மனைவி’ என்னும் தலைப்பில் இராசனால் வடித்தெடுக்க முடிந்திருக்கிறது. உரிமையைக் கடமையாகக் கருதும் எழுத்துப்பணி என்பது இதுதான்.

    தாய்மைப் பதிவுகளில் வைரமுத்தின் தடுமாற்றம்!

    இதே மாதிரியான உத்தியினைப் படைப்பாளர் வைரமுத்து தாம் எழுதிய ‘தமிழுக்கும் நிறம் உண்டு’ என்னும் நூலில் ‘அழைப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கையாண்டிருக்கிறார். இராசனின் இந்த நூலில் தலைப்பே கொஞ்சம் தடுமாற வைக்கிறது. வைரமுத்தின் அந்தப் பாடலில் பாடலின் இறுதிவரியைப் படிக்கிற வரைக்கும் நாம் அனுபவிக்கும் உணர்ச்சி வேறு. இறுதி வரிகள் நமக்குத் தரும் அதிர்ச்சி வேறு.

    அந்தக் கவிதை, பாலியல் உணர்வால் தூண்டப்படும் பெண்ணொருத்தியின் விரக தாபத்தை வெளிப்படுத்துவதாகவே இறுதிவரை அமைந்திருக்கும். வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கும் வைரமுத்து, பிறருடைய வற்புறுத்தலுக்காக இந்தப் பாடலைத் தனது பெருமிதக் குரலில் படித்துக் காட்டுவார். ஆனால் ‘தயவுசெய்து இந்தப் பாடலின் கடைசி வரியை நான் உச்சரிக்கும் வரைக்கும் பொறுமை கொள்க’ என்று ஒரு வேண்டுகோளையும் அந்த மேடையிலேயே வைத்துவிடுவார். இது இப்போதும் இணையத்தில் (YOU TUBE) உள்ளது. யார் வேண்டுமானாலும் காணலாம். அந்தக் கவிதையின் சில வரிகளைத் தருகிறேன். பெண் பேசுகிறாள். பேசுபவர் பெண்ணா? தாயா? என்பதைப் படிப்பவர்கள்தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    “கூந்தல் கலைத்துப் பூக்களை உதிர்த்துவிடு!
    ………………………………………………
    குளித்து வரும் என்னை மீண்டும் அழுக்காக்கு!
    எதிர்பாரா இடத்தில் என்னைத் தீண்டு!
    எவ்வளவு இயலுமோ அவ்வளவு தழுவு!
    ……………………………………..
    உதட்டு எச்சிலால் என் உடல் பூசு!
    …………………………………………..
    மார்பகப் பள்ளத்தில்
    முகம் வைத்து மூச்சு விடு!
    ………………………………
    உன் நகர்த்துதலுக்காகத் துடித்ததென் ஆடை!
    உன் நகம் கிழிக்க வீங்குதென் மார்பு!

    படித்துப் பார்த்தீர்களா? ஒரு சராசரி வாசகன் இதனை ஒரு பெண்ணின் விரக தாபமாகத்தான் நோக்குவான். இது வைரமுத்துக்கும் தெரியும். அதனால் தான் அவர் கவிதையைத் தான் படிப்பதற்கு முன்பே நோக்கர்களை ‘இறுதிவரைப் பொறுக்க’ என எச்சரித்துவிடுகிறார். ஆனால்,

    “நீ தந்த சுகமெல்லாம்……
    நெய்யில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை!
    வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை!
    பிரசவம் முடித்த பெருமூச்சில் கண்டதில்லை!
    எங்கே மீண்டும் ஒருமுறை
    முந்தானைக்குள் புகுந்து
    முயல்குட்டியாகு!
    தட்டாதே!
    தாய்ச்சொல்லைக் கேள்!
    பத்துமாதம் என் வயிறு சுமந்த
    பிஞ்சுப் பிரபஞ்சமே!”

    என்னும் இறுதி வரிகள் ஒரு தாய்மையின் எதிர்பார்ப்பையும் துடிப்பினையும் வெளிப்படுத்துவனவாக அமைந்து அந்தக் கவிதை நிறைவடைகிறது.

    இந்த உத்தியை வைரமுத்து கடைப்பிடித்திருப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கவிதையில் அவர் வெளிப்படுத்த நினைக்கும் கருத்தும் உணர்ச்சியும் விரகதாபமா? தாய்மையின் ஏக்கமா? என்னும் வினாவிற்கு அவ்வளவு எளிதாக விடையளிக்க இயலாது என்பது என் கருத்து. இதற்கு வைரமுத்தின் மற்றொரு கவிதைப் பதிவினையே சான்றாக்க இயலும். ‘அவசரத் தாலாட்டு’ என்பது அவர் எழுதிய இன்னொரு கவிதையின் தலைப்பு. அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாகத் தாய் பாடும் தாலாட்டாக அமைந்த அந்தப் பாடலில் தாய்மையின் ஏக்கத்தை இப்படிப் பதிவு செய்திருக்கிறார் கவிஞர்.

    “பேருந்தில் நசுங்கிப் பிதுங்குகின்ற வேளையிலும்
    எடைகொஞ்சம் குறைந்து இறங்குகிற வேளையிலும்
    கோப்புக்குள் மூழ்கிக் குடியிருக்கும் வேளையிலும்
    பூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும்கண்ணே!
    தந்தை வந்து கொஞ்சுவதாய்த் தாய்மடியில் தூங்குவதாய்க்
    கண்ணான கண்மணியே கனவு கண்டு நீயுறங்கு!
    புட்டிப்பால் குறையவில்லை! பொம்மைக்கும் பஞ்சமில்லை!
    தாய்ப்பாலும் தாயுமன்றித் தங்கமுனக் கென்ன குறை?”

    இந்தத் தாலாட்டில் இருக்கும் தாய்மையின் ஏக்கம், கண்ணீர், தவிப்பு முதலியன ‘அழைப்பு’ என்ற கவிதையில் கிட்டுமானால், வைரமுத்து கையாண்ட உத்திக்கு வெற்றிதான். அதற்குப் பதிலாக ஒரு விரகதாபத்தின் வெளிப்பாடாகவே வாசகர்களால் உணரப்படுமாயின், என்னதான் இறுதிவரிகள் தாய்மையுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது என வாதிட்டாலும் கவிதை தனது நோக்கத்தில் அவ்வளவாக வெற்றி பெற்றதாகக் கருத முடியாது. காரணம் நான் முன்பே சுட்டியபடி நோக்கத்திற்கான வரையறை குழப்பமாக அமைந்துவிடுவதுதான். இப்படி நான் எழுதுவது வைரமுத்தின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கான திறனாய்வு என யாரும் கருதிவிடக் கூடாது. எடுத்துக்கொண்ட பகுதிகளுக்குள்தான் ‘சொல்லாடல்’ நிகழ்கிறது.

    ‘கைக்கு அடக்கமா நீ கடிச்சுப் பாக்க வாட்டமா’ என்று எழுதப்பட்ட வரிகள்,  ‘இலந்தைப் பழத்திற்காக என்று எழுதியவர் வாதாடலாம். கேட்கிறவன் சிந்தனையில் ‘அது இலந்தைப்பழம்தான்’ என்று பதிவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதற்குள் அந்த வரிகளின் பொருட்பரிமாணம் அவன் மனத்திற்குள் பதியமிட்டுவிடும். வாசகன் புரிந்துகொள்வதற்கு அவசர நிலையை அமல்படுத்த முடியாது.

    திறனாய்வுப் பார்வையில் வைரமுத்தின் ‘அழைப்பு’ என்னும் கவிதையின் விளைவும் இதனையொத்ததே அதனால் எழுதியவரே கவிதை திசைமாறிவிடுமோ என்னும் அச்சத்தில் ‘அவசரப்பட வேண்டாம்’ என்று மேடையிலேயே வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார்.  இது மாதிரியான உத்திகளைக் கொண்டு கவிஞனால் படைக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் ‘கட்டியங்காரனை’ அமர்த்த இயலுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். வேண்டுமானால் ‘கட்டிலுக்கும் தொட்டிலுக்குமான சிலேடை’ என்றோ ‘தலைவி மடியும் தாய்மடியும்’ என்றோ ‘தலைவியும் தாயும்’ என்றோ தலைப்பிட்டிருக்கலாம். இது ஒரு சிலேடை அவ்வளவுதான். இருவேறு உணர்ச்சிகளின் ஒருவழிப்பாதை என்பது அவ்வளவாகப் பொருந்தாது!.

    ‘ஒருநாள் மனைவி’யாக இருந்த இராசன்!

    இராசனின் ‘ஒருநாள் மனைவி’ என்னும் தொடரை உள்வாங்கிக் கொண்டு கதையைப் படிக்கத் தொடங்கிய நொடியிலிருந்து வெகு விரைவிலேயே படைப்பாளனின் நோக்கம் விரிந்து புலப்படுவதைப் பக்கத்திற்குப் பக்கம் காண முடிகிறது. ‘எண்ணியது வேறு இங்கே இருப்பது வேறு’ என்னும் எண்ணத்திற்கு வாசகன் உடனடியாக வந்துவிடுகிறான். தலைப்பினால் உண்டான  சலசலப்பு, சில நொடிகளிலேயே அடங்கிவிடுகிறது.

    கட்டுக் குலையாத  கதை

    ‘ஒருநாள் மனைவி’ என்னும் காப்பியத்தில் குடும்ப நிகழ்வுகள் நிரலாகக் கோக்கப்பட்டுள்ளன. குடும்பத் தலைவியின் கடமைகளான ‘அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்’ என்னும் பாவேந்தர் வினாவிற்கு விடையாக மதனகோபால் –  மனோகரியின் வாழ்க்கைச் சிக்கலைத் தீர்த்து வைக்கிறாள் ‘பைரவன்’(வி). மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கல்யாணசுந்தரத்தின் மகள் கனிமொழியின் திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள். அவ்வப்போது குழந்தைகள் கேட்கும் அறிவுசார்ந்த வினாக்களுக்குத் தெளிவாக விடைகள் தரப்படுகின்றன.

    பைரவன் ‘பைரவி’ ஆன கதை

    சேவல் வரவேற்க, தெருப்பெருக்கும் பணியோடு நாட்கடனைத் தொடங்குகிறான் பைரவன். மயில்சாமி, அவன் மனைவி வண்ணக்களி. இவன் மனைவி பூவரசி என்னும் மூவர் செய்து முடித்த பணியைத் தனியொரு ஆளாய்ச் செய்து முடிக்கிறான்.

    மாடு கன்று பராமரிப்புத் தொடங்கி, வாசல் தெளித்துக் கோலம் போட்டுப் பால்கார மணியிடம் பால் வாங்கிக் காய்ச்சிக் காபி போட்டுக் கணவன் கொடுக்க மனைவி அருந்துகிறாள். இந்த முரண் வானவில்லின் அழகு முரண்.

    காலைச் சிற்றுண்டியாக இட்டளி அவித்து அதற்குத் துணையாகச் சட்டினியைச் செய்து பாத்திரத்தில் பாதுகாப்பு செய்தபிறகு குழந்தைகளுக்கு நீராட்டுதலைச் செய்கிறான். அதற்கு முன்பே குழந்தைகளால் மாசடைந்த பாய்களைத் தூய்மை செய்து, குழந்தைகளை நீராட்டி இவனும் குளித்துச், சிற்றுண்டி உண்டு, நண்பர் கல்யாணசுந்தரத்தின் வீட்டுத் திருமணத்திற்குக் குடும்பத்தோடு புறப்படுகிறான்.

    திருமண விருந்தில் குழந்தைகளைக் குழந்தைகளாகவே நடத்தி, தான் உண்ட பொங்கலை விதந்து பேசி, வீடு திரும்பிய பைரவனுக்குப் பஞ்சாயத்துச் சிக்கல் ஒன்று எதிர்நோக்கியிருந்தது. அந்தச் சிக்கலின் நாயகன் மதனகோபால், நாயகி மனோகரி. சிக்கல் அவர்கள் பையனின் திருமணம் பற்றியது. அந்தச் சிக்கலையும் தீர்த்துவைத்தான் ஒருநாள் மனைவி ‘பைரவி’ (பைரவன்),

    வாரத்தில் தன் இல்லத்தார் பயன்படுத்திய அழுக்குத் துணிகளையெல்லாம் துவைத்துக் காயவைத்த பைரவன், வேளாண்மை தொடர்பான புறநானூற்றுப் பாடலுக்கு உரைகண்டு மகிழ்ந்தான். மாலை நேரத்தில் சிக்கரி கலக்காத காபி போட்டுத் தந்தான்.

    கணவனோடு மனைவி செய்ய வேண்டிய விருந்தோம்பலை மனைவியோடு கணவன் செய்யும் புதிய காட்சியை அறிமுகம் செய்யும் இராசன், தன் மகன் மாணிக்க விநாயகத்தை விளையாட்டுக்கு அழைக்க, வந்த அவன் நண்பன் ஞானவேலுக்குப் பிஸ்கட்டும் பாலும் கொடுத்து உபசரித்தான்.

    இரவு உணவுக்காகக் களியும் கறியமுதும் செய்தளித்த பைரவர், அவற்றைச் சிறிய கிண்ணங்களில் வைத்துப் பணியாள் மயில்சாமிக்கும் அவர் மனைவி வண்ணக் கிளிக்கும் கொடுத்து அன்பு பாராட்டினார்.

    மறுபடியும் அன்றைய நாளில் புழங்கிய பழைய பாத்திரம் முதலியவற்றைக் கழுவிச் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தபோது குழந்தை குமரனின் பேரழுகைக்குப் பரிகாரம் காணவேண்டியது இருந்தது. வயிற்று உபாதைக்கு வெந்நீரால் வழிகண்டு, படுக்கைக்குச் செல்கிற போது நள்ளிரவு மணி 12.00.

    மனைவி கணவனாக அந்தக் கணவன் அவளுக்கு ஒருநாள் மனைவியான கதை இதுதான். ஒருநாள் நிகழ்ச்சிகளின் தொகுப்புப் படைப்பாளரின் வெளிப்பாட்டு உத்தியாலும் வண்ணனை அழகாலும் ஒரு முழுமையான படைப்பாகிச் சிறக்கிறது. பாவேந்தர், கவிதையில் சொன்னார். இராசன், உரைநடையில் பந்திவைத்திருக்கிறார்.

    கனவில் வந்த காவிரிச் சிக்கல்

    இந்தக் கதையில் ஓரிடத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணிக்கவிநாயகம் ‘மேகதாது அணை’ பற்றிய கவலையால் கனவில் உளறுகிறானோ என்று பெற்றோர்கள் ஐயப்படுவதாக வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஆறாம் வகுப்புப் படிக்கின்ற மாணவனின் பொது அறிவின் எல்லை பற்றிய ஐயம் தோன்றக் கூடும். இதற்கு ஒரு திறனாய்வாளன் என்ற முறையில் இரண்டு அமைதிகளைக் கூற இயலும்.

    மாணிக்க விநயகத்தின் வளர்ப்பு முறை, பண்பு நலன்கள், அறிவு வளர்ச்சி முதலியவற்றையும் மாணவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தன் ‘வளைக்கரங்களால்’ பிணைத்துக் கொண்ட மின்னணுச் சாதனங்கள்,  மாணிக்க விநாயகம் போன்றவர்கள் கையில் பயன்படும் இலாவகத்தையும் புரிந்துகொண்டால் ‘காவிரிச் சிக்கல் கனவில் வந்தது’ வியப்பாக அமையாது.

    இரண்டாவதாக ‘இலக்கியத் திறனாய்வு’ என்னும் அடிப்படையில் நோக்கினால், இவ்வாறு இயல்புநிலைக்கு மாறான சிந்தனைகளைப் பாத்திரங்களின் மேல் ஏற்றிக் கூறுவதற்குத் தமிழிலக்கிய உலகம் ஏற்பளித்திருக்கிறது. மகாகவி பாரதியார் ‘ஓடி விளையாடுகிற பிள்ளை’களுக்காகத் தாம் எழுதிய பாப்பாப் பாட்டில்,

    “பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
    பயங்கொள்ளலாகாது பாப்பா
    மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

    என்று கூறுவான். பாதகம் செய்பவரைக் காவல் துறையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயத்தில் பாவம், குழந்தை என்ன செய்துவிட முடியும் என்பது மகாகவிக்குத் தெரியாதா? தான் காண விரும்புகிற ஒரு சமுதாயத்தைப் பாரதி பதிவு செய்கிறான். ஏனென்றால் ‘சிறுமை கண்டு பொங்கச்’ சொன்னவன் அவன். பாரதியாவது ஓடி விளையாடுகிற பிள்ளைக்கு மனஉறுதியை வலியுறுத்திப் பாடினார். அவர் நண்பர் பாவேந்தரோ, இன்னும் ஒரு படி மேலே சென்று, தொட்டிலில் உறங்குகிற குழந்தைக்குப் பகுத்தறிவுத் தாலாட்டுப் பாடுகிறார்.

    ‘சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு
    நாணிக் கண்ணுறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு’

    ‘பெரியார் செய்த வேலையைப் பிள்ளை செய்ய வேண்டும்’ என்று அவர் விரும்புகிறார். இது படைப்பாளர் எல்லாருக்கும் இயல்பிலேயே அமைந்துவிடும் படைப்புரிமை. அவனுடைய விசாலமான மனத்திற்குள் எல்லாப் பொருண்மையும் அடக்கம்.

    மரபு காக்கும் மாண்பு

    தமிழ் மரபு தெரிந்தாலேயொழிய தமிழனைக் காப்பேன் என்னும் முழக்கம் வெற்று முழக்கமாகவே முடியும். இராசன் தமிழ் மரபறிந்தவர். வாசித்து  அறிந்தவர் அல்லர் வாழ்ந்ததனால் அறிந்தவர். பொதுவாக அளவு கடந்த மக்கள் கூட்டத்தைக் காண்போர் ‘எள் விழ இடமில்லை’ என்னும் உவமத்தைத்தான் பயன்படுத்துவர். நன்னிகழ்வுக்கும் எள்தான். தீய நிகழ்வுக்கும் எள்தான். ‘தீய நிகழ்வுக்குத்தான் எள் பயன்படுத்த வேண்டும் என்னும் தமிழ் இலக்கிய மரபு தெரியாததன் மக்கள் வழக்கு அது. ஆனால் இராசன் மிக அருமையாக,

    ‘நெல் விழுந்தால் கூட இடமில்லை’ (30)

    என்று எழுதிக் காட்டுகிறார். தன் வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலத்திற்கான புள்ளிகளைக் கிள்ளி வைத்த நேரத்திலேயே அவர் மரபோடு ஐக்கியமாகி விடுகிறார். பொதுவாகச் சிறுகதை, புதினப் படைப்பாளர்களிடம் காண்பதற்கரிய ஆளுமை இது.

    தொன்மப் புலமை

    இராசன் வெளியிட்ட ‘அவர்’, ‘இலக்கியா’ முதலிய இலக்கியங்களைப் போலவே ‘ஒருநாள் மனைவியிலும்’ தொன்மக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குளிகை நேரம் பற்றிய விளக்கத்தில் சனீஸ்வரன் மனைவி ஜேஸ்டாதேவிக்குக் (29) குளிகன் மகனாகப் பிறந்ததை விளக்கும் இராசன், ‘பொன் கிட்டினாலும் புதன் கிட்டாது’ என்னும் மக்கள் வழக்கிற்கு அறிவியல் சார்ந்த விளக்கத்தைத் தருகிறார். இது பாராட்டுக்குரியதுதான் என்றாலும் இந்த அறிவியல் நுட்பத்தைத் தெரிந்துதான் அருணாசலம் இந்தப் பழமொழியைப் பேசுகிறானா என்னும் வினாவிற்கு விடை கிடைப்பது அரிது.

    தாம்பூலத்தின் மூலங்களான வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியனவற்றிற்கு இராசன் தரும் அறிவியல் விளக்கம் பொருத்தமாக இருந்தாலும் மக்கள் அதனை ஒரு பழக்கமாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் கடமைக்காக பதவி மாற்றத்திற்கு ஆளான ‘பைரவி’ ,குடும்பத்தின் பழக்க வழக்கக் கட்டுமானத்தில் மிகக் கவனம் செலுத்தியிருக்கிறாள்(ர்) என்பது குறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

    ‘ஒருநாள் மனைவி’யின் படைப்பாளுமை

    திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பாத்திரங்களைப் பக்கம் பக்கமாக வசனம் பேசவைப்பதில் கவனம் செலுத்துவார். சில நேரங்களில் ஊமையன் கூட பேசுமளவுக்கு அவருடைய படங்கள் அமைந்திருக்கும். பாலச்சந்தர், பாத்திரங்களை அறிமுகம் செய்கிறபோது வேறொரு கோணத்திலிருந்து காமிராவை நகர்த்திக்கொண்டே வந்து பாத்திரங்களை அறிமுகம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அளவோடு பேசவைப்பார். பாலுமகேந்திராவோ பேசும் பாத்திரங்களை ஊமையாகவே ஆக்கிப் பேசாத காமிராவை அதன் கோணங்களால் பேசவைப்பார். ‘வீடு‘ படமே இதற்குப் போதுமான சாட்சி. ஒன்றினைச் சொல்வது கவிதையாகாது. ஓர் அனுபவத்தை உணர்த்துவதே கவிதை. சில நேரங்களில் சிறுகதை நிகழ்வுகளின் சித்திரிப்பிற்கும், குறுநாவல், நாவல் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். இராசன் ஒரு சமையற் காட்சியைச் சித்திரிப்பதைப் பாருங்கள்.

    “நல்லி எலும்புகளோடு சேர்ந்த அரைக்கிலோ இளம் வெள்ளாட்டுக் கறியை நன்றாக நீரில் கழுவித் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, வேண்டிய அளவு சின்ன வெங்காயத்தினைச் சுத்தம் செய்து வைத்தார். ஒரு பெரிய நாட்டுத் தக்காளிப் பழத்தைக் கழுவித் துண்டு துண்டாக வெட்டி வைத்தார். பின் சுத்தமாக இருந்த ஒரு வாணலியை எடுத்துக் கழுவிவிட்டு, அடுப்பின்மேல் வைத்து அடுப்பைப் பற்ற வைத்தார். சட்டி காய்ந்ததும் சிறிது நல்லெண்ணெயை ஊற்றினார். படபடவென எண்ணெய்க் காய்ந்து கலகலப்பை ஊட்டியபோது  வெட்டி வைத்திருக்கும் (இந்தத் தொடர் ‘வைத்திருந்த தக்காளி’ என்றிருந்திருக்க வேண்டும்) தக்காளி, சின்ன வெங்காயத்தினையும் போட்டு வதக்கினார்.

    வெங்காயமும் தக்காளியும் சூட்டில் நன்றாக வதங்கிய பின், சட்டியைக் கீழே இறக்கி வைத்து, அவற்றை ஆறவைத்தார். பின்  அரைக்கிலோ கறிக்கு ஆகும் செலவுகளை (மளிகை மற்றும் மசால் பொருட்களை) அவரின் அம்மா சொல்லிக் கொடுத்தபடி மனத்திலேயே கணக்குப் போட்டு அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பட்டை, ஒரு ஏலக்காய், கசகசா கொஞ்சம் இவற்றுடன் ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் புதினா சேர்த்து, மிக்சியில் அரைக்காமல் அவர் அம்மா காலத்து அம்மிக்கல்லில் வைத்து அரைத்து வழித்தெடுத்தார்.  வதக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் (இந்தத் தொடரும் ‘வைத்திருந்த சின்ன வெங்காயம் என்றிருந்திருக்க வேண்டும்) தக்காளித் துண்டுகள் இரண்டையும் அரைத்து வழித்தெடுத்த சாந்துடன் கலந்து, கழுவி வைத்திருக்கும் கறியுடன் சேர்த்து கறிக்குழம்பு ஆக்குவதற்காக மட்டும் என்றும் பூவரசி பிரத்தியேகமாக வைத்திருந்த (தனி) பாத்திரத்தில் போட்டுக் கறியை வேகவிட்டார்.

    கால்மணி நேரம் கறி வெந்து முடியும் முன்பாக ஐந்து மிளகாய், சீரகம், மிளகு சிறிது கொத்தமல்லி விதை சிறிது, ஒரு சிறிய மஞ்சள் துண்டு, இஞ்சி ஒரு துண்டு, இரண்டு பல் பூண்டு  இவற்றைத் தக்காளி, வெங்காயம் வதக்கிய எண்ணெய்ச் சட்டியில் போட்டு, லேசாக வறுத்து அம்மா பயன்படுத்திய அதே அம்மியில் வைத்து அரைத்துப் பசைபோல வழித்துக்கொண்டார். ஏற்கெனவே மசாலாப் பொருட்களுடன் சேர்த்து வைத்திருந்த கறியுடன் அரைத்தெடுத்த மசாலாவைக் கலந்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றிக், குழம்பைக் கூட்டி உப்பின் சுவையை அறியக் குழம்பைக் கொஞ்சம் உள்ளங்கையில் ஊற்றி ஊதி சுவைத்துப் விட்டு, குழம்பைக் கொதிக்கவிட்டார். இரண்டு கொதியில் குழம்பு கொதித்தபோதே பக்கத்து வீட்டுக்கெல்லாம் பைரவன் வீட்டில் கறிக்குழம்பு என்ற செய்தி, வானொலிச் செய்தியாக இல்லாமல் வான்வெளி வாயிலாகப் பரவிவிட்டது.” (76-77)

    இது அறுபது வயதில் எழுதத் தொடங்கியவரின் எழுத்தென்றால் யாராவது நம்புவார்களா? கறி செய்த பக்குவம் இதுவென்றால் களி செய்த பக்குவம் களியைவிட மென்மையானது. வேளாண்மைத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்ற கணவர்தான் சமையற்காரர் என்பதைக் கருத்திற்கொண்டால் படைப்பாளர் சொல்லவரும் நடப்பியல் உண்மையை அறிந்துகொள்ள முடியும். ஒருநாள் நிகழ்வுகளாக இருப்பினும் நிரல் முரணாகாமல் வெறுங்கற்பனைக்கு இடந்தராமல் இயல்பான சித்திரிப்பால் படைப்பாளர் இதயம் கவர்கிறார்.

    ஒருநாள் மனைவியில் உவமங்களின் ஆளுமை

    பொதுவாகப் படைப்பிலக்கியங்களிலும் குறிப்பாகக் கவிதையிலும் உவமங்களே என்னைப் பெரிதும் ஈர்ப்பன. என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வும் உவமம் பற்றியதே. கவிதைகளின் தர மதிப்பீட்டிற்கு உவமங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என நான் கருதுகிறேன். கவிதையையும் கவிஞனையும் மதிப்பிடுவதற்கு உவமத்தையும் ஓர் அளவுகோலாகக் கொள்வது எனக்கு உடன்பாடே. அந்த வகையில் இராசன் கையாண்டிருக்கும் உவமங்கள் மிகச் சிறந்தன.

    பயிரோடு சேர்ந்த பச்சையம் போல (33)

    இணைப்பு நிலை அல்லது பிரியாத நிலைக்குத் தமிழியல் கண்ட உவமங்கள் ‘நிலைய வித்வான்களைப்’ போலச் சில உள. ‘நிலவும் மலரும்போல’, ‘நகமும் சதையும் போல’, ‘தமிழும் இனிமையும் போல’ என்பனவாக இருக்கும். புது மணமக்களை வாழ்த்துகிற பூவரசி ‘பயிரோடு சேர்ந்த பச்சையம் போல’ என்னும் உவமம் கொண்டு வாழ்த்துகிறாள். பயிரில் பச்சையம் என்பது உடன்பிறப்பது. கணவன் மனைவி உறவு என்பது கடவுள் அருள். ‘இம்மை மாறி மறுமையாயினும் நீ ஆகியர் என் கணவர்’ என்னும் தொடர்ப் பொருளை உணர்ந்தார்க்கு இராசனின் உவமம் திருமணப் பந்தத்தின் ‘பிறப்புரிமை’யைப் புலப்படுத்தும்.

    ‘இடைவாழைக் கன்றாக’ (37)

    ‘நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்’ என்பார் புலமைப்பித்தன். குழந்தைகளின் நடைக்கு ராஜநடையை ஒப்பிட்டார் அவர். (திரைப்படத்தில் வளர்ந்த நாயகனுக்குத் தாய் பாடுவதாக அமைந்தது) இராசன் இதுவரை நான் கண்டிராத உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். வாழைத்தோப்பில் தாய் மரங்களுக்கிடையே தோன்றி வளரும் இடைவாழைக் கன்றாகத் தந்தை தாய் இவர்களுக்கிடையே விநாயகம் நடந்து வந்தான் என்று காட்சிப்படுத்துகிறார். சுரதா போன்ற உவம வல்லாளர்களின் சிந்தனைக்கு மட்டுமே தோன்றக் கூடிய அற்புதமான உவமத்தைக் கையாண்டதன் மூலம் தமது படைப்பாளுமையின் ஆழத்தைக் கூடுதலாக்கியிருக்கிறார் இராசன்.

    பத்திரப் பதிவு செய்துகொண்டு உரிமை கொண்டாடுவதைப் போல (40)

    ‘பெண் தன்னையொத்த ஓர் உயிர்’ என்னும் கருத்தாக்கம் நீர்த்துப் போனதற்கான காரணம் அறியக்கூடவில்லை. உறவுகளின் தலைமை, தாய்மை என்பது அறியப்பட்டிருந்தாலும் இந்த நிலை எதனால் எப்படி எங்கே தோன்றி வளர்ந்தது என்பது புதிராக இருக்கிறது. பெண் ஆணுக்கு இணை என்பதும் அத்தகையதே என்பது என் கருத்து. பெண் ஒப்பிட முடியாத உறவுகளுக்கு உரிமை பூண்டவள், மானுடத்தின் இயக்கத்திற்கு அச்சாணி. அவள் அசையாச் சொத்து அல்லள். அவள் உடைமை அல்லள். உடைமையாகக் கொண்டதன் விளைவைத்தான் சமுதாயம் இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மதனகோபால் மனோகரிக்குச் செய்யும் கொடுமையைப் பத்திரப் பதிவு செய்துகொண்ட உடைமையாகக் கருதுவதை உவமமாக்கி விளக்கிக் காட்டுகிறார் இராசன்.

    வாய்க்குள் மீசை முளைத்ததைப் போல (63)

    ஒட்டுமொத்த இலக்கியப் படைப்பில் வெற்றி கொள்வது வேறு. இலக்கியக் கூறுகள் ஒவ்வொன்றிலும் தமது தனித்த ஆளுமையை நிலைநிறுத்துவது என்பது வேறு. பின்னதற்குத் திருவள்ளுவரைச் சுட்டலாம். இராசன் ஒட்டுமொத்த இலக்கியப் படைப்பில் (நாவல்) வளர்நிலை அல்லது வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளார் என்பது உண்மை. ஆனால் உவமப் பயன்பாட்டில் தமது தனித்த முத்திரையைப் பதித்துவிட்டார் என்பதற்கு இந்த உவமப் பயன்பாடே போதுமானது. ’கோதுபடா மாங்கனி’ என்பதற்கு விளக்கவுரை எழுதவரும் இராசன் மல்கோவா அல்லது பங்கனப்பள்ளி மாம்பழங்களைக் கருத்திற்கொண்டு ‘கோது’ என்பதை விளக்குகிறார். மாம்பழத்தின் நார் பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு இருக்கும் பரிதாப நிலையைப் படம்பிடிக்க எத்தனிக்கும் இராசன் வாய்க்குள் மீசை முளைத்ததைப் போல என உவமத்தால்  காட்சிப்படுத்துகிறார். இனி இந்த உவமம் வினை, பயன், உரு, பண்பு என்னும் நான்கில் எவ்வகை என்பதைப் புலவர் பெருமக்கள் ஆராயலாம்.

    காரமில்லாத ‘சாரியை’ மணம்

    நானறிந்த வரையில் ‘மனம்’ என்ற சொல்லோடு வேற்றுமை உருபு இணையுங்கால் அத்துச் சாரியை கொடுத்து எழுதியிருக்கும் எழுத்தாளர் இராசனாகத்தான் இருக்க முடியும் என்று நம்புகிறேன். மகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபு இணையுங்கால் ‘அத்து’ என்னும் சாரியை பெறவேண்டும் என்பது வழக்கின் அடிப்படையில் தொல்காப்பியம் வகுத்த விதி.

    “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (தொல்185)

    தமிழின் அத்தனை நிலைகளிலும் நிலைபெற்றுவிட்ட இந்தப் பிழையை நண்பர் இராசன் தவிர்த்து (மனத்தை 52, மனத்தில் 26, 52, 62) என்று எழுதியிருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

    சாறு பருகும் நேரம்! சக்கை தந்த காரம்!

    நல்லனவற்றைப் போற்றுவது திறனாய்வெனின் அல்லனவற்றைச் சுட்டுவதும் திறனாய்வுதானே? மொழியின் தூய்மையும் பெண்ணின் கற்பும் ஒரே தன்மையது. இங்கே தூய்மை என்பது பிறமொழிச் சொல் கலவாமை, இலக்கணப் பிழையின்மை மற்றும் எழுத்துப் பிழையின்மை முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். ‘ஒருநாள் மனைவியின்’ ஒருசில பக்கங்களில் எண்ணிக்கையில் குறைந்த பிழைகள் இருப்பதாக உணர்கிறேன். கருப்பஞ்சாறு குடிக்கையில் பல்லிடுக்கில் புகுந்து கொள்ளும் சக்கைத் துகள் போல அவை அமைந்து தொல்லை கொடுப்பதை என்னால் உணர முடிகிறது.

    பொறுத்தத்துடன் (பொருத்தத்துடன்) 32
    இவைகளோடு 54 (இவற்றோடு)
    சம்மந்தம் (சம்பந்தம்) 22
    துவங்கும் (தொடங்கும்) 13
    களகளப்பை (கலகலப்பை) 54
    கொள்ளைப்புறம் (கொல்லைப்புறம் 50)

    ‘தேறினான்’ என்பதும் அதனையொத்தது. தேர்வு, தேர்ச்சி, தேர்தல், தேர்ந்து என்றெல்லாம் இடையினம் இட்டு எழுதியவர்கள், ‘தேரினான்’ என்பதை மட்டும் ஒதுக்கி அதனைத் ‘தேறினான்’ என்றே எழுதுவார்கள், மாணவன் மருத்துவமனையில் இருப்பதைப் போல. எவ்வளவு பெரிய கொடுமை!

    ‘பந்தம்’ என்பது தொடர்பு, உறவு. ‘சம பந்தம்’ என்பது ‘சம்பந்தம்’ ஆகியிருக்கலாம். அது எவ்வாறாயினும் ‘சம்மந்தம்’ என்பது மந்தமானது. அப்புறம் சம்பந்தி சம் ‘மந்தி’ ஆகிவிடக்கூடும். இன்னும் விரிப்பின் பெருகும். இயன்றவரை நம் தாய்மொழியையே பயன்படுத்த வேண்டும். ஒரு மொழியில் பிற மொழிச்சொற்கள் கலப்பது இயற்கையாக இருக்க வேண்டும். வரலாற்று அடிப்படையில் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கலப்பதும் கலந்ததற்கு ஏற்பளிப்பதும் மக்களே தவிர, எழுத்தாளர்களோ பல்கலைக்கழகத் துறைகளோ அல்ல. அதே நேரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக அனைத்தையும் எழுத்துவடிவில் ஏற்பளிக்கவும் கூடாது. ‘பொருள் புரிகிறதல்லவா?’ என்பர் சிலர். ‘துவங்கியது’ என்றாலும் ‘தொடங்கியது’ என்றாலும் பொருள் புரிகிறது. நாம் எதனை எழுதலாம். இரண்டுமே மக்கள் வழக்குத்தானே!

    ‘சாரியை மேல் சாரியை’ போலிச்சுவை தரும். இராசன் ‘வெங்காயத்தையும்’ என்றும் எழுதுகிறார். ‘வெங்காயத்தினையும்’ என்றும் எழுதுகிறார். இரண்டும் ஒரே பக்கத்தில் (54) இடம்பெறுகின்றன. இது தவிர்க்கப்படல் வேண்டும்.  சாரியைச் சேர்ப்பதால் காரம் கூடுகிறதா என்ன?

    ‘பயிற்சியாகவோ அல்லது ஒரு முயற்சியாகவோ?’ (56) என்று எழுதுகிறார் இராசன். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர்களும் இப்படித்தான் எழுதுவார்கள். இப்படி எழுதுவதற்குத்தான் அவர்களுக்குப் பரிசு, இப்படி எழுதினால்தான் பரிசு. ‘ஓ’காரம் பிரிநிலைக்கண் வந்தால் அங்கே அல்லது வராது. அதாவது ‘அல்லது’ என்னும் சொல் உணர்த்தும் பொருளை ‘ஓகாரமே’ உணர்த்திவிடும். ‘பயிற்சியாகவோ முயற்சியாகவோ’ என்பதே சரி. 

    ‘வலி எங்கே மிகும்? ‘எங்கே மிகாது? என்றால் மருந்து போடாத இடத்தில் வலிமிகும். போட்ட இடத்தில் வலிமிகாது என்பது எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் வல்லினம் எங்கே மிகும்? எங்கே மிகாது என்று வினவினால் வழக்கம்போலத் தமிழாசிரியப் பெருமக்கள் ‘பார்த்துச் சொல்கிறேன்’ என்று பம்முவார்கள்.

    மொழியறிவு தொடர்ந்த படிப்பினாலும் பயிற்சியினாலும் அமையும். தற்காலத்தில் அவை இல்லாத காரணத்தால் தமிழ் வட்டாரத்தில் உள்நாட்டுக் குழப்பம். பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. இதற்கு அடிப்படை எது என்றால்  பெயரெச்சம் எது என்பதைக் கண்டறியும் புலமை வேண்டும். அங்கேதான் சிக்கல்.

    கொடுத்த (ப்) பாலை (49)

    வடித்த (ப்) பாலை (37)

    இவை போன்ற இடங்களில் வல்லினம் மிகாது. இலக்கணம் படிப்பினால் பெரும்பான்மையும் பயிற்சியினால் சிறுபான்மையும் அமையும். அந்தப் பையன் என்று எழுதலாம். அதற்காக வந்தப் பையன் என்று எழுதுவது பிழை. காரணம் ‘அந்த’ என்பது சுட்டுப்பெயர். ‘வந்த’ என்பது பெயரெச்சம். மனைவிக்கும் மதனிக்கும் வேறுபாடு அறியாவிட்டால் சிக்கல் எதில் போய் முடியும்? இந்தத் தவறும் பொதுமையான ஒன்று. இராசனுக்குத் தனியுரிமை கிடையாது.

    ‘வெண்கலச் சொம்பு நிறைய நன்னீர் கொடுத்தான், அவளது அன்புக் கணவர் பைரவன்.’ (20)

    என்று ஒரு தொடர் அமைந்திருக்கிறது. கொடுத்தான் என்பது ஆண்பால். அதற்கேற்ப அந்தத் தொடர் இப்படி அமைந்திருக்க வேண்டும்.

    கணவர் கொடுத்தார்

    கணவன் கொடுத்தான்.

    மதனகோபாலிடன் பொன்னுக்கும் புதனுக்கும் விளக்கம் கூறுவது எந்த வகையில் பயன்தரும்? ‘பழமொழி’ வந்து பல்லாயிரம் ஆண்டுகள். ‘பைனாகுலர்’ வந்து பத்து ஆண்டுகள். படைப்பாளர் எந்த நேரத்திலும் அரசியல்வாதியாகித் தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாவதைத் தடுக்க நினைக்கக் கூடாது.

    படைப்பாளருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அருள்கூர்ந்து பழைய செய்திகளுக்குப் புதிய விளக்கம் தருவதைத் தவிர்த்துவிடுங்கள். கதிரவனுக்கு ஏழுகுதிரை பூட்டிய தேர் என்றால் அது VIBJYOR  என்னும் நிறங்களைக் குறிக்கும் என்பதும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்குக் கிரக விளக்கம் சொல்வதும், ‘குளிகையில் நற்காரியம் செய்யக்கூடாது’ என்பதற்கான புராண விளக்கம் தருவதும், ‘வலவன் ஏவா வானவூர்தி’ என்பதால் ஆளில்லா விமானத்தைத் தமிழன் அன்றே கண்டறிந்துவிட்டான் என்று நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதும் இனியும் வேண்டாம். ‘துப்பார்க்கு’ எனத் தொடங்கும் குறளை வைத்துத் தமிழன் கையில் அன்றைக்கே ‘துப்பாக்கி’ இருந்தது என்றால் என்ன ஆகும்? பட்டதெல்லாம் போதும்! படமுடியாது இனித் துயரம்! “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் ஓர் மகிமை இல்லை”

    விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சும்

    கதையின் நாயகன் பைரவன், வேளாண்மைத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பூவரசி தமிழாசிரியர், மாணிக்க விநாயகம், குமரன், மதனகோபால், மனோகரி, கல்யாணசுந்தரம், கனிமொழி, மணமகன், அனந்தராமன், பால்காரன் என விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய பாத்திரங்களைச் சுற்றிய ஒருநாள் இல்லற நடப்பை, நடப்பியல் சார்ந்து, கலைநயம் குறையாமல் எளிய தமிழால் எழிலோவியமாய் ஆக்கியிருக்கிறார். ‘அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீரைப்போலத் தமிழக மக்களின் வாழ்வாதாரமும் அதல பாதாளத்திற்குப் போய் விடுமோ?’ (15) என்னும் இராசனின் ஏக்கத்தில் சமுதாயப் பார்வையும் இருக்கிறது. இப்படித்தான் உவமம் சொல்ல வேண்டும் என்று தமிழாசிரியர்களுக்குப் பாடம் எடுப்பது போன்றும் உள்ளது.

    “பூகோளம் இதுவரைக் கண்டிராத ஒரு புதுக்கோலம் எடுப்பாய் இருந்தது.” (17)

    என்று ஒரு தொடர் கண்டேன். எனக்கு T..ராஜேந்தரின் ‘பூத்தால் மலரும் உதிரும்., நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை!’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. ‘விதைத்தேன்….இழுத்தேன்…வளைத்தேன் இணைத்தேன்…..முடித்தேன்’ (18) என்னும் வரிகள் எனக்குக் கண்ணதாசனையும் அவருக்கும் வழிகாட்டிய இராமச்சந்திரக் கவிராயரையும் நினைவூட்டியது.

    கல்லைத்தான் மண்ணைத்தான்

    காய்ச்சித்தான் குடிக்கத்தான்

    கற்பித் தானா?

    இல்லைத்தான் பொன்னைத்தான்

    எனக்குத்தான் கொடுத்துத்தான்

    இரட்சித் தானா?

    அல்லைத்தான் சொல்லித்தான்

    ஆரைத்தான் நோவத்தான்

    ஐயோ எங்கும்

    பல்லைத்தான் திறக்கத்தான்

    பதுமத்தான் புவியில் தான்

    பண்ணி னானே.”’

    என்பது கவிராயர் பாடல். இதனை ஒரு பொட்டலத்தாளில் கண்டு வியந்து போன கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘அத்தான் என் அத்தான்’ என்ற பாடலாகும். அதனைத் தொடர்ந்து ‘பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத் துடித்தேன்’ அவர் எழுதிய பாடலின் சரணத்தில்,

    “மலர்த்தேன் போல்நானும் மலர்ந்தேன்!  உனக்கென

    வளர்ந்தேன்! பருவத்தில் மணந்தேன்!

    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்

    இல்லாதபடி கதை முடித்தேன்!””

    எனத் தமிழோடு கொஞ்சியிருப்பதைக் காணலாம். ‘அவன் நடந்து போகும் அழகைப் பார்த்துத்தான் யானைகள் நடைபழகியிருக்கும்’ (22) என்று இராசனின் சித்திரிப்பு,

    ‘மாதவள் தானும் ஆண்டு வந்துநீர் உண்டு மீளும்

    போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் பூத்தாள் (2736) என்னும் கம்பனின் வரிகளோடு இணைத்துப் பார்க்க வைத்தது.

    ஒரு படைப்பின் எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டும். ‘மனைவி அடுப்படியில், கணவன் குளியல் அறையில்’ என்னும் முறையை மாற்றிய பைரவன் அடுப்படியில், பூவரசி குளியல் அறையில் என்றால் அந்நேரம் என்ன ஆகியிருக்கும் என்பதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார். ஆசிரியர் கல்வியை இரண்டாம் நிலையிலும் பண்புகளை முதலிடத்திலும் வைத்து மக்களைப் பேணும் குடும்பமாகச் சித்திரித்துக் காட்டியிருப்பதன் வழி, தனது சமுதாய அக்கறையைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் இராசன்.

    நிறைவுரை

    மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக வளர்ந்து வரும் ஆலமரமெனப் படைப்பிலக்கிய உலகில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் தண்ணீர்ப்பள்ளி தமிழ்ப்பற்றாளன் இராசன் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறார். ‘ஒருநாள் மனைவி’ என்னும் கட்டுரைப் பொருளைக் கதையாக்கித் தந்திருப்பதில் அவர் அடைந்திருக்கின்ற வெற்றி பெரிதும் போற்றுதற்கு உரியதாகும். சிறுகதையை நாவலாக்க முனைந்து இடர்ப்பட்டு முக்கி முடியாமல் இறுதியில் குறுநாவலாக முடிந்து போன குறைப்பிரசவங்களெல்லாம் தமிழ்ப் படைப்புலகத்தில் வெகு இயல்பு. தமிழ்க்காவலர் இராசன் ஒரு சாதாரண கட்டுரைக்கான உள்ளடக்கத்தைச் சிறுகதையாகச் செதுக்கியிருப்பதில் சிறப்புத் தகுதியினைப் பெறுகிறார். இராசன் என் நண்பரென்பதனால் இலக்கியத் திறனாய்வில் எத்தகைய சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதை இதனை ஒருமுறை படிப்பாரும் உணரக் கூடும். இராசனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    பின்குறிப்பு

    படைத்தவனைப் பற்றிப் படித்தவன்

    செயப்படுபொருள் பற்றிய பார்வை மேலே. செய்தவன் பற்றிய பதிவு இது. மொழிப்பணிகளில் தமிழ்த்துறையாளர் செய்தவையும் அல்லாதார் செய்தவையும் சீர்தூக்கின் துலாக்கோலின் முள் எப்பக்கமும் அசையாது. அல்லாதார் நிரலில் சொல்லாடி வந்திருப்பவர் தண்ணீர்ப்பள்ளித் தமிழ்ப்பற்றாளர் திரு. ம.இராசன். கரூர் மாவட்டத்தில் இருந்தாலும் திருச்சிக்கு அருகில் உள்ள பெட்டவாய்த்தலைக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட தண்ணீர்ப்பள்ளி கிராமம் காவல்துறைக்கும் தமிழ்த்துறைக்கும் தந்திருக்கும் கொடை இவர். குடும்பத்திலும் உறவுகளிலும் பெரும்பாலோர் காவல் துறையிலேயே கடமையைச் செய்ய,  அந்தக் கடமை செய்த களைப்புப் போகக் கவிதை எழுதியவர் இவர். ‘அண்ணன்மார் வரலாறு’ அறியாதார் இலர். அதில் வரும் தெய்வங்களாகிய மகாமுனி – பெரியக்காள் என்பவையே இவர்தம் பெற்றோர்களின் திருநாமங்கள். பண்டைய இந்திய வரலாற்றையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் சென்னை மாநிலக் கல்லூரியில் பாடமாகப் பயின்று முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கல்லூரித் தொடக்கப் பருவத்தில் இவர் பணியாற்றியது வாத்துமுட்டைக் கடையில். 29 ஆண்டுக்காலக் காவல் துறைப் பணியில் 15 ஆண்டுகள் மத்திய குற்றப் பிரிவில் (CBCID) துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். இவர் காதலித்தது காவல் துறை. ஆனால் இவரைக் காதலித்து வந்தது தமிழ்த் துறை. ‘அவர்’, ‘இலக்கியா’, ‘வேரில் விழுந்த இடி’ என்பன இவர் அண்மையில் படைத்த மற்ற கதைப் படைப்புகள். காக்கிச் சட்டைக்குள் இருந்த கவிதை ‘நூல்களை’ அடையாளம் கண்ட பெருமை எனக்குண்டு என்றாலும் கதைகளில் சமுதாயப் பதிவுகளைச் செய்வதிலேயே இராசன் நாட்டம் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளாக மனச்சுரங்கத்துள் இருந்த நிலக்கரி, வைரம் பாய்ந்த நிலையில் இன்று படைப்புகளாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வெளிவந்திருக்கும் இந்த ‘ஒருநாள் மனைவி’ ஒரு வைரமே என்பதைக் கற்பார் உணரக் கூடும்!

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 16

    பரிமேலழகர் உரைத்திறன் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையில் ‘குறிப்பெச்சம்’

    முன்னுரை

    திருக்குறள் பரிமேலழகர் உரை காலங்கடந்து நிற்பதோடு அறிஞர் பெருமக்களால் சிறப்பாகவும் புகழப்படுகிறது. இத்தகைய பெருமை அதற்குக் கிட்டியிருப்பதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று அவர் குறட்பாவிற்கு உரை காணும் நெறி. இந்தத் தொடரில் பல முறை சுட்டிக்காட்டியிருப்பதுபோலக் குறட்பாவின் சொற்சுருக்கம் அதாவது குறுகிய கட்டுமானம் அவரைப் பெரிதும் ஈர்த்திருந்தது. ஈர்க்கவே அதனை உற்று நோக்கி உரையெழுதும் நிலை வந்தது. வரவே எழுசீர்களில் அடங்கிய ஒரு சிறுபாட்டு எந்தெந்த வகையில் எல்லாம் பொருட்சுமையைத் தாங்கி நிற்கிறது என்று அவர் எண்ணினார். எண்ணி அந்த வகைகளில் எல்லாம் உரை சொன்னார். குறட்பாவின் ஏழு சீர்களுக்குள் வெளிப்பட நிற்கும் உரை சொல்வார். வள்ளுவர் சொல்ல நினைக்கும் உள்ளக்கருத்தினைக் கண்டுரைப்பார். உவமத்தின் இயல்புகளைப் பொருண்மைக்கு ஏற்றி உவமத்தால் பொருண்மையின் ஆழம் காட்டுவார். இவற்றோடு சொல்லாமல் விடுபட்ட கருத்தினைக் ‘குறிப்பெச்சம்’ என்னும் பெயரால் கண்டறிந்து கூறுவார். அவர் கண்டறிந்து கூறிய ‘குறிப்பெச்சம்’ என்னும் அதனை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்வதன் மூலம் பரிமேலழகரின உரைத்திறனை அறிய முயல்கிறது.

    குறிப்பெச்சம் என்றால் என்ன?

    ‘எஞ்சியிருப்பது எச்சம்’ என்பது பொதுவழக்கு. ‘வந்த’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது, தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்த பையன்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு பெயர்ச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது பெயரெச்சம். ‘வந்து’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் வினைச்சொல். ஒரு வினைச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்துப் போனான்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு வினைச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது வினையெச்சம். இந்தத் தெளிவினை உள்வாங்கினால் குறிப்பெச்சம் என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

    1. ஒரு சொல்லின் குறிப்பால் வேறுசில சொற்களை வருவித்துப் பொருள் முடிப்பது, இது எஞ்சி நின்றதால் எச்சமாயிற்று. எஞ்சுதல் – குறைந்து நிற்றல்.
    2. வெளிப்படையாகவன்றி மறைந்து நின்று வேறொரு சொல்லின் குறிப்பினால் தோன்றும் பொருள்
    3. வெளிப்படையாகச் சொல்லாமல் எஞ்சி நின்ற பொருளை ஒரு சொல்லின் குறிப்பினால் கொள்வது

    என்று பலவாறாக இது ஆராயப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்துக் குறிப்பினைத் தொடர்புடைய பாடலுக்குள் பதிவு செய்ய இயலாத நிலையில் அவன் உள்ளத்துக்குள்ளேயே எஞ்சியிருப்பதால் அது குறிப்பெச்சம் எனப்படலாம். எஞ்சிய குறிப்பு எச்சக் குறிப்பு. இது முன்பின்னாகிக் குறிப்பெச்சம் எனப்படும்.  அதனைக் கண்டறிந்து கூறுவது உரையாசிரியர் கடன். குறிப்பு உள்ளம் சார்ந்தது.  ‘உள்ளக்குறிப்பு’, ‘முகக்குறிப்பு’, ‘சொற்குறிப்பு’ என்பன நோக்குக. வெளிப்படையாக அமைந்தால் அது கருத்து. உள்ளுக்குள்ளேயே அமைந்துவிடுமானால் அது குறிப்பு. அந்தவகையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உரையாசிரியர் பரிமேலழகர் குறிப்பெச்சம் பற்றிச் சிந்தித்திருக்கிறார். எனினும் கட்டுரையின் அளவு மற்றும் செறிவு கருதி ஒருசில பாக்களின் உரையைக் கொண்டு அதனை விளங்கக் காணலாம்.

    கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரா?

    மழலைச்சொற்களின் இனிமையைத் திருவள்ளுவர் எதிர்மறையால் பதிவு செய்கிறார். மழலையின் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்காதவரே குழலிசையையும் யாழிசையையும் வியந்து போற்றுவர் என்பது குறட்பாவின் சொற்பொருள்.

    “குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்.” (66)

    கேளாதாதவர் இனிமை என மயங்குவர் எனச் சொன்னதன் மூலம் கேட்டிருந்தால் அவற்றினும் இனிதென மழலையைச் சொல்லியிருப்பர் என்பது குறிப்பு. இந்தக் குறிப்புப் பாட்டில் இல்லை. எஞ்சி நிற்கிறது. பரிமேலழகர் அறிந்து சொல்கிறார். ‘குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர் தம் புதல்வருடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்’ எனப் பொழிப்பெழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பர்’ என்பது குறிப்பெச்சம்”

    என்று எழுதுகிறார். கேளாதவர் சொல்லியன பாட்டில் உள்ளது. கேட்டவர் சொல்லியிருக்கமாட்டார் என்பது திருவள்ளுவர் குறிப்பு. இது பாட்டில் இல்லாதது. இதனைப் பரிமேலழகர் கண்டுரைக்கிறார்.

    தானாக விளையாதா?

    விருந்தோம்பலாகிய இல்லற உயர்பண்பினைப் போற்றும் திருவள்ளுவர், அந்தப் பண்பினை உடையவர் வயல்களில் விதைக்க வேண்டிய தேவையில்லை என்பதை ஓகாரத்தால் உணர்த்துகிறார். அந்தப் பாட்டு,

    “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” (85)

    என்று அமைந்திருக்கிறது. இதற்கு “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா” என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். முந்தைய இரண்டு பாடல்களையும் இணைத்து ஓரலகாக்கிப் பொருள் முடிவு கூறும் பரிலேழகர், ‘இம்மைப்பயன் கூறப்பட்டது’ என்று எழுதுகிறார். எவை இம்மைப்பயன்.

    1. விருந்தோம்புவானுக்கு வறுமை வராது
    2. (காரணம்) அவன் இல்லத்தில் திருமகள் உறைவாள்.
    3. செய்யவள் இருப்பதனால் வயலுக்கு விதை தேவையில்லை.

    என்று விரிவாக எழுதுகிறார்.

    ‘தானே விளையும் என்பது குறிப்பெச்சம்’

    ‘விதைக்கவும் வேண்டுமோ’ என வினவிய திருவள்ளுவருக்கு ‘வேண்டா’ என விடையிறுத்த பரிமேலழகர், ‘விளைச்சல் என்ன ஆகும்’ என்னும் கற்பார் வினாவிற்கு இப்படி விடைகூறுகிறார். விதைக்க வேண்டுமோ என்பது திருவள்ளுவர் வினா. வேண்டாம் என்பது பெறப்படும். தானாக விளையும் என்பது திருவள்ளுவர் உள்ளக்குறிப்பாம்.

    கோடாதவன் தாழ்வு கேடன்று

    ‘கேடு’ என்பது நடுவுநிலை தவறாதவன், தவறியவன் என அனைவருக்கும் பொதுவானது. மற்றவர்களுக்குக் கேடு வரின் பிறரால் அது கேடாகவே நோக்கப்பட்டு அனுதாபத்திற்கு ஆளாவர். ஆனால் நடுவுநிலை பிறழாத ஒருவருக்குக் கேடுவரின் அதனைச் சான்றோர் கேடாகக் கொள்ள மாட்டார் என்ற கருத்தினைக்,

    “கெடுவாக வையாது உலகம், நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)

    என்னும் குறட்பாவில் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். இங்கே கேடு என்பது வறுமையைக் குறிக்கும். திருவள்ளுவர் இதற்கு “நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை வறுமையென்று கருதார் உலகோர்” என்பது பரிமேலழகர் பொழிப்புரை. இதற்கு இவர் எழுதிய விளக்கவுரையில்,

    “செல்வமென்று கொள்ளுவர்’ என்பது குறிப்பெச்சம்.”

    என்று பதிவிடுகிறார். ‘பாட்டில் வறுமையென்று கருதார்’ (கெடுவாக வையாது) என்றுதான் இருக்கிறது. அவரும் அவ்வாறே உரையெழுதியிருக்கிறார். ஆனால் விளக்கவுரையில் ‘செல்வமென்று கொள்ளுவர்’ எனத் திருவள்ளுவர் எண்ணி ஆனால் சொல்ல இயலாத அவருடைய உள்ளக் குறிப்பினை எடுத்துக்காட்டுகிறார். ‘வறுமையென்று கருதார்’ என்பதே வள்ளுவர் சொல்லியது. ‘செல்வமென்று கருதுவர்’ என்பது அவர் உள்ளம் தோய்ந்தது. தோய்ந்ததைத் தோண்டித் தருபவர் பரிமேலழகர்.

    தேடவேண்டிய செல்வம் செவிச்செல்வம்

    செல்வம் இருவகைப்படும். ஒன்று கேள்வியால் வரும் செவிச்செல்வம். மற்றவை பொருளால் வரும் பிறசெல்வங்கள். முன்னது நிலையானது. பின்னவை  நிலையற்றவை. எனவே முன்னதை வற்புறுத்தி எழுதப்பட்டதே ‘கேள்வி’ என்னும் அதிகாரமாகும்.

    “செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” (411)

    என்ற பாட்டில் திருவள்ளுவர் செவிச்செல்வத்தைச் ‘செல்வத்துள் செல்வம்’ என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை உள்வாங்கிய பரிமேலழகர்,

    “ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாதலான்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். கற்பாருக்கு எழுகிற வினா ‘கேள்விச் செல்வத்தைப் பாராட்டுவதற்கு ஒரு குறட்பாவா?’ என்பதுதான். திருவள்ளுவர் எதனையோ சொல்லத்தான் நினைக்கிறார். ஆனால் சொல்லாமல் தவிக்கிறார் என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உரையாசிரியர் பரிமேலழகர் கண்டறிகிறார். அவர் அறிந்ததை அனைவரும் அறியத் தருகிறார்.

    “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ என்பது குறிப்பெச்சம்”

    என்ற ஒரு தொடரால் விடுபட்டுப் போனதைப் பொருண்மையோடு இணைத்துக் காட்டுகிறார். ‘செவிச்செல்வம் தலையாயது ஆதலின் அதனையே தேடுக’ என்று அவர் சொல்லவில்லை. ‘தலையாய செல்வம்’ என அடையாளப்படுத்தியதோடு நின்றுவிடுகிறார். அழகர் அதனைக் கண்டறிந்து “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ எனக் ‘கேள்விச் செல்வத்தைத் தேடுக’ என்னும் வேண்டுகோளைத் திருவள்ளுவர் முன்வைப்பதாக எடுத்து மொழிகிறார். செவிச்செல்வத்தின் பெருமை சொன்னது குறள். அதனைத் ‘தேடுக’ என்னும் வள்ளுவர் உள்ளமறிந்து சொன்னவர் பரிமேலழகர். எஞ்சி நின்ற குறிப்பு இதுதான்.

    அறிவில் சிறுகுறை அரசுக்குப் பெருங்கேடு. 

    அறியாமை அனைவர்க்கும் பொது. ஆனால் அரசாள்வோர் தம் பக்கல் வைத்துக் கொள்ளும் நபர்களின் அறிவாற்றலைச் சரியாக எடைபோட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரச நீதி. ஏதேனும் ஒரு காரணம் பற்றி ஒருவரைத் தெளிய முற்படும் போது நம்பிக்கை அளவுகோல் ஆகிவிடக் கூடாது. காரணம் எல்லாவகையிலும் சிறந்திருப்பார் கூட ஏதோ ஒரு மூலையில் சற்றுப் பிசகியிருப்பார். இந்த உண்மையை,

    “அரியகற்றும் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு” (503)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்.

    “கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.”

    என்பது இப்பாடலுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை. அறியாமை இல்லாதவர் யாருமிலர் என்பதுதான் பாட்டின் கருத்து. சரி. இதனால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பென்ன? என்பது பாட்டில் இல்லை. ‘ஆசற்றார் கண்ணும் வெளிறு இன்மை அரிது’ என்பது ஒரு செய்தி. அது அறிவுரை ஆகாது. அரசாள்வார் என்ன செய்யவேண்டும் என்பதைப் பாட்டில் அவர் கூறவில்லை. பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    “காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம்.”

    குறட்பாவின் உள்ளடக்கத்தைப் பரிமேலழகர் பாட்டின் கருத்தினை அரசாள்வார்க்கு அறிவுரையாக மாற்றுகிறார். அப்படி மாற்றுவதுதான் திருவள்ளுவர் கருத்தாம். அறியாமை இருந்தே தீரும் என்பதுதான் குறட்பா கருத்து. அதுவும் இல்லாதாரையே தெளிக என்பதுதான் முழுமையான வள்ளுவம்.   முன்னது குறட்பாவில் உள்ளது. பின்னது வள்ளுவரின் திருவுள்ளக் குறிப்பு.

    கண் பெற்ற பயன்

    ‘கண்ணுக்கு மையழகு’ என்பது திரையிசைப்பாடல். ‘கண்ணிற்கு அழகு இரக்கம்’ என்பது சான்றோர் கருத்து. ‘அமைச்சர்க்கழகு அகப்பட்டதைச் சுருட்டுதல்’ என்பது இன்றைய வழக்கு ‘மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்’ என்பது அன்றைய அமைச்சறம். சமுதாயம் புறத்தில் வளர்ந்த அளவுக்கு அகத்தில் வளரவில்லை, அதற்கான சூழலும் அமையவில்லை என்பது காலை கறுப்பாக இருக்காது என்பதுபோல உண்மை.

    “உளபோல் முகத்து எவன் செய்யும்? அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்”  (574)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு இதன் உள்ளடக்கம் தோன்ற,

    “கண்டார்க்கு முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது என்ன பயனைச் செய்யும் அளவிறாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்?”

    என்று பரிமேலழகர் உரையெழுதியிருக்கிறார். உயிர்கள் மாட்டுக் கண்ணோடி  அதாவது இரக்கம் கொண்டு நோக்காத நிலையில் கண்களால் பயனில்லை.  உடம்பின்கண் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வினைக்குரியது. அவ்வினை பிறர்நலம் சான்றது. இறைப்பணி நோக்கியது. இது தமிழ்ப்பண்பாடு. “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும்” என்பது உறுப்புக்களின் பணியை நினைவூட்டும் தேவாரமாகும். ‘தாளை வணங்காத் தலை’ என்பதும் அது. எனவே கண்ணின் பணி உயிர்கள் மேல் இரக்கம் காட்டுதல். அதுவன்றி வாளா இரக்கவுணர்வின்றி இருக்கும் மாந்தர்கள் இருக்கிறார்களே என்றால் அவர்களுக்கு முகத்தில் இருக்கும் உறுப்பு கண் என்ற அளவிலேயே அமைதி கிட்டும். இதுதான் பாடற் கருத்து. ‘முகத்தில் இருக்கிறது’ என்பதைத் தவிர வேறு என்ன பயன் என்பது திருவள்ளுவர் வினா.

    ‘ஒரு வினையும் செய்யா என்பது குறிப்பெச்சம்’

    இது பரிமேலழகர் எழுதும் குறிப்புரை. ‘இருக்கிறது’ என்பதற்கும் ‘செயல்படுகிறது’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. கண்ணோட்டம் என்பது கண்களின் வினை. அதுவில்லாதபோது அது இருப்பதைத் தவிர வேறு எந்தவினையும் செய்யாது என்பது திருவள்ளுவர் குறிப்பு. இந்தக் குறிப்பினைத்தான் பரிமேலழகர் எடுத்து  மொழிகிறார்.

    கீழே விழுவதெல்லாம் எழுந்திருக்கவே!

    ‘ஆகூழ்’, ‘போகூழ்’ என்பவற்றால் வாழ்க்கை சூழப்படினும் முயற்சி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ‘முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ என்பது மறை. தன் குஞ்சைக் கொத்தவரும் வான்பருந்தை எதிர்க்கும் திறன் தனக்கு இல்லையாகிலும் எதிர்க்க முயல்வது கோழிக்குப் பெருமை.

    “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
    ஆள்வினை இன்மை பழி” (618)

    என்கிற குறட்பாவிற்குப் “பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்குப் பழியாகாது. அறிய வேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.” என்னும் பொழிப்புரையால் பாடல் விளக்கம் தருகிறார் பரிமேலழகர். விதியின்மை பழியாகாது. முயற்சி இன்மை பழியாகும் என்பதுதான் குறட்பாவின் பொருண்மை நிலை. வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? அந்தப் பழியை ஒருவன் ஏற்கலாமா? கூடாது. கூடாது எனின் என்ன செய்தல் வேண்டும். முயல வேண்டும். இது பாட்டில் இருக்கிறதா?. இல்லை இதனைத்தான் ‘குறிப்பெச்சம்’ என்கிறார் பரிமேலழகர்.

    ‘விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்’

    என்னும் தொடரால் ‘முயற்சியின்மை பழி தரும்’ என நீதிக்கருத்துக்கு அரண் செய்வதைப் போல அதனை வியங்கோள் ஆக்கிக் கூறுகிறார் பரிமேலழகர்.

    வீரனுக்கு இணை வேறில்லை

    திருக்குறள் காலம் கடந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பினும் தான் தோன்றிய காலத்துச் சித்திரிப்பு என்பதை மறுப்பதால் யாருக்கும் பயனில்லை. வள்ளுவர் படை என்றது விமானப்படையை அல்ல. விமானந் தாங்கிய கப்பற்படையை அல்ல. அன்றைய நாளில் இருந்த நால்வகைப் படைகளைத்தான் அந்நால்வகைப் படையுள்ளும் மூலப்படை சிறந்தது. மூலப்படை என்பது இந்நாள் தரைப்படை யொத்தது. இந்நாளில் ஏனைய படைகளிலும் வீர்ர்கள் இருப்பர். ஆனால் அவர்கள் இயக்கத் துணையாக விமானம் முதலிய கருவிகள் இருக்கும். தரைப்படைக்கு அவ்வாறு கருவிகள் இருக்காது. இன்றைய நாளில் டாங்கி முதலிய கருவிகளும் தரைப்படைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. படைகளுள் தரைப்படை வீரனைப் பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

    “உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்.
    தொல்படைக்கு அல்லால் அரிது” (762)

    என்பது குறள். போர்க்களத்தில் மன்னனுக்குத் தளர்ச்சி ஏற்படும்போது அளவால் தான் சிறியதாயினும் தன் துன்பம் நோக்காது மன்னர்க்குப் பேருதவி செய்வதில் ஏனைய படைகளைக் காட்டிலும் தொல்படையே சிறந்தது என்பது பாடற் கருத்து.

    “தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின் கண் உலைவு வந்தால் தன் மேல் உறுவதற்கு அஞ்சாது நின்று தாங்கும்  வன்கண்மை அவன் முன்னோரைத் தொடங்கி வரும் படைக்கல்லது உளதாகாது.”

    என்பது பாடலைப் படம்பிடித்துக் காட்டும் பரிமேலழகர் உரை. இதற்கு,

    “மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது மூலப்படையாகலான் அதனை அரசன் “வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க (பு.பொ.வெ.மா – தும்பை 2)  என்பது குறிப்பெச்சம்.”

    என்று அவர் எழுதிய விளக்கவுரையில் திருவள்ளுவரின் உள்ளக் குறிப்பினைக் கண்டறிந்து எழுதுகிறார். தொல்படையாகிய மூலப்படையே மன்னனைக் காப்பாற்றும் என்றால் அப்படைவீரனைத் தாங்குதல் வேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பாம். எப்படித் தாங்குதல் வேண்டும்? என்னென்ன கொடுத்துத் தாங்குதல் வேண்டும் என்பதை விளக்கவே புறப்பொருள் வெண்பாமாலை பாடலை எடுத்துக்காட்டுகிறார். வீரன் மன்னனைத் தாங்குவான் என்பது குறள்.  அவனை மன்னன் தாங்கவேண்டும் என்பது குறிப்பெச்சம்.

    காமத்துப்பாலும் பரிமேலழகரும்

    அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றுள் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் எச்சக் குறிப்புக்கள் நூலாசிரியர் திருவள்ளுவருக்குரியன. ஆனால் காமத்துப்பாலில் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் குறிப்பெச்சங்கள் தலைமக்களுக்கானவை. காமத்துப்பால் முழுமையும் உளவியல் சார்ந்த பாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அப்பாத்திரங்களின் உள்ளக் குறிப்பினை அறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்ததாகும். ஒருசில குறிப்பெச்சங்களை இங்கே காணலாம்.

    கண்ணிலும் உள்ளான் கருத்திலும் உள்ளான்!

    கண்முன்னால் இருக்கின்றான் காதலன். ‘அவன் தலைவியை மறந்து போனான்’ என அவனுடைய இயல்பினைத் தோழி பழித்துரைக்க முற்படுகிறாள். அப்போது தலைவி கூறுகிறாள்.

    “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1127)

    எம் காதலர் எப்போதும் என் கண்முன்னே இருப்பதாலேயே நாங்கள் கண்ணுக்கு மையிடாமல் இருக்கிறோம். ஏனென்றால் மையெழுதும் அந்நொடிப் பொழுதினும் அவன் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்று தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்கிறாள்.

    “காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான்  கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யோம்  அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையில் பரிமேலழகர் இதனை விளக்குகிறார். ஆனால் தோழி இயற்பழித்தலைத் தடுத்தற்பொருட்டுத் தலைவி கூறினாள் என்பது பாட்டில் இல்லை. தலைமகளின் அந்த உள்ளக் குறிப்பினைப் பரிமேலழகர் அறிந்து கூறுகிறார் இப்படி.

    ‘யான் இடையீடின்றிக் காண்கிறவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை? என்பது குறிப்பெச்சம்”

    “தலைவன் மறைந்துவிடுவான் என்பதற்காகவே மையெழுதாமல் இருக்கிறேன்” என்பது தலைவி கூற்று. தலைவியைச் சந்திக்க வரவில்லை என்பதனால் இயற்பழிப்பது தோழியின் எண்ணம். அந்த எண்ணம் தவறு என்பதைத்தான் தலைவி வேறு வாய்பாட்டில் (மையெழுதா வாய்பாட்டில்) கூறித் தன் குறிப்பினைத் தெரியப்படுத்துகிறாள் என்பது பரிமேலழகரின் கருத்து.

    மேலே கண்ட பாடல் கண்ணைப் பற்றியது என்றால் பின்வரும் பாடல் நெஞ்சம் பற்றியது. பார்வையில் மட்டுமன்று. தலைவன் எப்போதும் தன் நெஞ்சிற்குள்ளேயே நிலைத்திருக்கிறான் என்பது தலைவி கூற்று. அதனை எப்படி வெளிப்படுத்துகிறாள் தெரியுமா?

    “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (1128)

    மேலே உள்ள பாட்டில் மையெழுதும் நேரத்தில் மறைந்துவிடுவான் என்றஞ்சிய தலைமகள் இந்தப் பாடலில் உள்ளத்தில் (மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் தலைவன் என்று கூடச் சொல்லலாம்) இருக்கும் தலைவனுக்கு வெப்பம் ஆகாது என்று கருதி வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லையாம்.

    “காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான், உண்ணுங்கால்  வெய்தாக உண்டலை அஞ்சா நின்றேம் அவர் வெய்துறலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையால் இதனைப் பெறவைக்கும் பரிமேலழகர்,

    “எப்பொழுதும் எந்நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.”

    என்று எழுதித் தலைவியின் இயற்பழித்தலுக்குத் தடையாணை போடுகிறாள். இந்தப் பாட்டில் என்ன சொல்லுகிறாள்? ‘தலைவன் நெஞ்சிற்குள் இருப்பதால் வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லை’ சரி. சொல்ல வருவதென்ன? ‘நான் எப்போதும் வெப்பமானவற்றை உட்கொள்ளாத நிலையில் அவன் என் நெஞ்சிற்குள்ளேயே இருக்கிறான். அவனை எப்படி நீ பிரிந்தார் என எண்ணி இயற்பழிக்க முயலலாம்?’ என்பதே.

    தலைவனோடு களித்தபோது இன்பம் செய்த மாலை தனிமையில் இப்போது துன்புறுத்துகிறது. ‘அந்தப் பிரிவுத் துன்பத்தை ஆற்றியிருக்க வேண்டும்’ என்று ஆறுதல் கூறுகிறாள் தோழி. அந்தத் தோழிக்குத் தலைவி மறுமொழி கூறுகிறாள் இப்படி!

    “பனியரும்பி பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்” (1223)

    என் தலைவன் என்னருகில் இருந்தபோது என்னைக் கண்டு நடுங்கிய மாலைப் பொழுது, அவன் பிரிந்த இந்த நிலையில் என் உயிருக்கு இறுதி வரவழைக்கும் முறையில் துன்புறுத்த, அத்துன்பம் பொழுதும் வளர்கிறது என்கிறாள் தலைவி. இதனைக்,

    “காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்குளதாம் துன்பம் ஒரு காலைக்கொருகால் மிக வாராநின்றது”.

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘ஆற்றியிரு’ என்னும் தோழிக்குரிய விடையாக இதனைக் கருத முடியுமா என்றால் முடியாது. ‘இன்பமாக இருந்த மாலை துன்பம் செய்கிறது’ என்பது மட்டுமே தலைவியின் மொழியாக அமைந்திருக்கிறது. மாலை உயிருண்ணும் கூற்றாக வருவதால் தலைவனைப் பிரிந்துத் தன்னால் இருக்க இயலாது என்பதைக் குறிப்பாகச் சொல்கிறாளாம்.

    “யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்”

    என்னும் தொடரால் பரிமேலழகர் இதனைக் குறிக்கிறார். ‘மாலை செய்யும் கொடுமையால் யான் ஆற்றியிருப்பது அரிது’ என்பது அவள் உள்ளக்குறிப்பு. அந்தக் குறிப்பைத்தான் பரிமேலழகர் வினாவடிவில் பதிவு செய்திருக்கிறார். மாலையின் கொடுமை குறட்பா கருத்து. ஆற்ற இயலாது என்பது தலைவியின் குறிப்பு.

    நிறைவுரை

    குறட்பாவிற்குக் கிடக்கை நிலை உரைசொல்வது எல்லார்க்கும் பொதுவான இயல்பு. ‘இதனான் இது பெற்றாம்’ என்பது பரிமேலழகர் எழுதிக்காட்டும் அரிய உரைக்கருத்து. ‘இந்தப் பாட்டின் கருத்து என்பது இந்தப் பாட்டினால் அறிந்து கொள்ளும் படிப்பினையைக் குறிக்கும். ‘குறிப்பெச்சம்’ என்பது ‘சொல்ல வேண்டிய ஆனால் சொல்ல முடியாமல் எஞ்சி நிற்கும் கருத்து. இது உரையாசிரியரின் ஊகமாகாது. சொற்கிடக்கையின் இடைவெளியில் உரையாசிரியரின் நோக்கிற்கு மட்டும் புலப்படும் அரிய உண்மை. ‘இதனைச் செய்யமாட்டார்’ என்றால் ‘அதனைச் செய்வர்’ என்பதும் ‘இதனைச் செய்வர்’ என்றால் ‘அதனைச் செய்யமாட்டார்’ என்பதும் ‘அருத்தாபத்தி’ என்னும் அளவையியலைச் சார்ந்ததாகும். கருப்பஞ்சாறு எடுப்பவர்கள் கரும்புச் சக்கையைப் பலமுறை ஆலையிலிட்டுப் பிழிவதுபோலக் குறட்பாவைப் பன்முக உரைநெறிகளால் பிழிந்தெடுத்துத் தரும் ‘கருத்துச்சாறே’ அவர்தம் உரைத்திறனாம்.

    (தொடரும்…)

    Share
  • சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    www. thevaaram. org மின்னம்பலம் தளத்தில் சிங்கள மொழிபெயர்ப்பு திருவாசகத்திற்கும் ஒன்பதாம் திருமுறைக்கும் பார்க்கலாம்

    திருக்கேதீச்சரத் திருப்பதிகம்
    திருக்கோணேச்சரத் திருப்பதிகம்
    இரண்டுக்கும்  அங்கு சிங்கள மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

    1973ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பன்மொழிப் புலவர் திரு கனகரத்தினம் அவர்கள் தன்னுடைய நண்பர் பாணந்துறையைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பில் தமிழ் கற்பித்தவருமான திரு தி தி நாணயக்காரரை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடியில் அருள்மிகு விசுவேசப் பிள்ளையார் கோயிலுக்கு வழிபட அழைத்து வந்திருந்தார்.

    பாணந்துறையைச் சேர்ந்தவர். சிங்களவர். மட்டக்களப்பில் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர். மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பிக்கிறார் என்றதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    திரு கனகரத்தினம் அவர்களின் கட்டுரைகளை சிறுகதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர் திரு நாணயக்காரர்.

    தவத்திரு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை முதலாம் பாகத்தைச் சிங்களத்திற்கு மொழிபெயர்த்துத் தருவீர்களா எனக் கேட்டேன்.

    உடனே ஒப்புக் கொண்டார். மட்டக்களப்பு திரும்பிய சில வாரங்களில் மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்பினார். நாவலப்பிட்டி ஆத்மசோதி அருளாளர் நா முத்தையா அவர்கள் அந்த மொழிபெயர்ப்பை நான் கேட்டதால் அச்சிட்டு வெளியிட்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருக்கும் தமிழ் மொழி. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எழுத்து வழக்கில் இருக்கும் சிங்கள மொழி. ஒரு மொழியின் ஆக்கங்களை படைப்புகளை நூல்களை மற்றைய மொழிக்குக் கொண்டுசெல்லும் முயற்சி மிக அரிதாக இருந்ததால் இரு மொழியாளரும் அயல் அயல் ஆக இருந்தும் இரு சாராருக்குமிடையே நல்லிணக்கமும் அன்புப் பரிமாற்றமும் குறைவாக இருந்தது.

    பேசுவதும் திருவாயால் என அருளாளர் மாணிக்கவாசகர் திபி 910இல் அநுராதபுரத்தின் பாதித் தமிழ் பாதிச் சிங்கள மன்னன் முதலாம் சேனனுக்காகப் பாடினார். சேனனுடைய மகளின் ஊமை நிலை போக்கினார். (ஆதாரம் கோணகசுத்தென்ன ஆனந்த இமி சிங்களத்தில் எழுதிய நிக்காய சங்கிரகம்).

    திபி 1271இல் ஆட்சிக்கு வந்த இரண்டாம் பராக்கிரமபாகு தஞ்சாவூரிலிருந்தும் மதுரையிலிருந்தும் தமிழ்ப் புலவர்களை அழைத்து வந்து தன் அவையில் தமிழ் கேட்டு மகிழ்ந்தான்.

    புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் இலக்கண நூலைச் சார்ந்து சிங்களத்தில் இலக்கண நூல் எழுத முயன்றான். சிங்கள மொழியின் தொடக்க இலக்கண நூலில் சந்தேகங்களைத் தீர்க்க வீரசோழியம் பார்க்க என எழுதி இருக்கும்.

    நான்காம் பராக்கிரமபாகுவின் (கிபி 1297) அரசவைப் புலவர் தென்னாவரம் போசராசர் தமிழில் சரசுவதி மாலையை எழுதி அவையில் அரங்கேற்றினார்.

    சிங்கள மொழியின் முதலாவது உரைநடை நூல் பூசாவழி, நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் அரங்கேறியது.

    ஆறாம் பராக்கிரமபாகு தனது அவையில் தமிழ்ப் புலமைக்கு முன்னுரிமை கொடுத்தார். தமிழ்ப் புலவர் நல்லுருத்திரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். முள்கிரிகல் தேரர் எழுதிய கோகில சந்தேச எனும் சிங்கள நூல் இந்தச் செய்திகளைக் கூறும்.

    தமிழைக் கற்காத தமிழ் நூல்களைக் கற்காத பிறவிகள் பாவிகள் எனச் சுபாசிதய சிங்கள நூலில் எழுதிய சிங்களவர், தனது பெயரையும் தமிழுக்கு அழகியவண்ணன் என மாற்றினார்.

    திருக்குறளின் மூன்று சிங்கள மொழிபெயர்ப்புகள் வந்தாலும் அவை கடந்த நூறு ஆண்டுகளுக்குள் வெளிவந்தவையே.

    யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் தமிழ் பயின்று பண்டிதர் ஆகி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர் வியாங்கொடை தவத்திரு தருமரத்தின தேரர்,

    தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர்.

    கடந்த 40 – 50 ஆண்டுகளாகத் தமிழ் நூல்களைச் சிங்களத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் சிங்களரும் முகமதியரும் ஈடுபட்டு வருகிறார்கள். கொடகே பதிப்பகம் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நூற்றுக்கணக்கானவற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர்.

    பன்னிரு திருமுறைகளை 12 மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் பேறு அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான், தருமபுர ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் வழியாக எனக்குத் தந்தது.

    திருவாசகம் மொழிபெயர்ப்பு முடிவடைந்து 500 படிகளை இலங்கை அரசின் இந்து சமய திணைக்களம் வெளியிட்டுள்ளது.

    மொழிபெயர்த்துத் தந்தவர் கல்முனை சிங்கள மகா வித்தியாலய மேனாள் துணை முதல்வர் திரு வடிவேலு. அவருக்கு வழிகாட்டியவர் கல்முனை எழுத்தாளர் திரு முகில்வண்ணன்.

    ஒன்பதாம் திருமுறையையும் அவரே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இப்பொழுது அச்சிட்டு மாதிரி நூலாக்கித் தருமபுரம் ஆதீனம் தவத்திரு 27ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் ஆசியை நோக்கி அவ் அச்சுப்படி சென்று கொண்டிருக்கிறது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(325)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(325)

    அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.

    – திருக்குறள் -178 (வெஃகாமை)

    புதுக் கவிதையில்...

    குறையும் தன்மையுள்ள
    செல்வம்
    குறையாமல் நிலைத்திருக்கக்
    காரணம் ஏதெனப் பார்த்தால்,
    பிறர் விரும்பும் கைப்பொருளைத்
    தானும் விரும்பாமல்
    தவிர்க்கும் செயலே…!

    குறும்பாவில்...

    குறையாமல் செல்வம் நிலைத்திருக்கக்
    காரணம் பிறர் விரும்பும் கைப்பொருளைத்
    தானும் விரும்பாமலிருப்பதே…!

    மரபுக் கவிதையில்...

    செல்வம் என்றும் குறையாமல்
    சேர்ந்து நிலையாய் இருந்திடவே
    சொல்லும் காரணம் வேறில்லை,
    சொந்த மென்றே பிறனொருவன்
    எல்லை வைத்தே விரும்புகின்ற
    எந்தப் பொருளும் தனக்கென்றே
    பொல்லா வகையில் விரும்பாத
    போக்கி லிருக்கும் குணத்தாலே…!

    லிமரைக்கூ..

    குறையாமல் செல்வம் இருப்பு,
    காரணம் வேறொருவன் விரும்பும் கைப்பொருள்மீது
    கொள்ளாமல் இருப்பதே விருப்பு…!

    கிராமிய பாணியில்...

    ஆசப்படாதே ஆசப்படாதே
    அடுத்தவன் கைப்பொருளுக்கு
    ஆசப்படாதே ஆசப்படாதே..

    கொறயும் கொணமுள்ள செல்வம்
    எப்பவும் கொறயாம
    நெலச்சியே இருக்கக்
    காரணம் வேறயில்ல,
    அடுத்தவன் விரும்பி வெச்சிருக்கும்
    அவனோட கைப்பொருள
    அடய விரும்பாம இருக்கதுதான்..

    அதால
    ஆசப்படாதே ஆசப்படாதே
    அடுத்தவன் கைப்பொருளுக்கு
    ஆசப்படாதே ஆசப்படாதே…!

    Share
  • பிரியதர்சினி இந்திரா காந்தி

    பாஸ்கர் சேஷாத்ரி

    இந்திரா காந்தியைப் போல ஒரு சர்வாதிகாரத் தலைவரை அன்றைய அளவில் கேள்விப்பட்டிருக்க முடியாது. எழுபதுகளில் துக்ளக் வாசகன் என்ற பெரிய ஈர்ப்பில் இந்திரா காங்கிரஸ் மீது எனக்குப் பெருங்கோபம் இருந்தது. சோவைப் போல பல்லாயிரம் பேர், இந்திராவின் நகைச்சுவைக்கு ஒரு பைசாவை மணிஆர்டர் செய்து அதனை அவர்களின் அலுவலகம் பெற்றுக்கொண்டது, எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அப்படி அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

    அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயப்ரகாஷின் சிறை அடைப்பு, பெர்னாண்டஸ் மீது வழக்கு, சென்சார் அடக்குமுறை (மெட்ராஸ் ஹை கோர்ட் வாசலில் பறிமுதல் செய்யப்பட்ட துக்ளக், கருப்புச் சந்தையில் நூறு ரூபாய்க்கு விற்றது) எனப் பல நிகழ்வுகள் இன்னும் என் மனத்தில் இருக்கின்றன. எல்லாச் செயலும் எனக்கு அப்போது இந்திரா எதிர்ப்புதான். ஆனாலும் அவர் ஆளுமை எனக்குப் பெரிய ஆச்சரியம். தான் நினைத்ததைச் செய்யத் தடை வரும் போது, அதனை உறுதியாய் எதிர்கொள்ளப் பலம் வரும்போது ஒரு சர்வாதிகாரம் தலை தூக்குவது இயல்பு என அப்போது புரியவில்லை. ஏன் அவர் மகன் சஞ்சய் காந்தி இறந்தபோது கூட அவர் மேல் ஒரு சோகம், இரக்கம் வரவில்லை . கிட்டத்தட்ட அது எனக்கு என் மேல் திணிக்கப்பட்ட அல்லது நான் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் எதிர்ப்பு நிலை.

    பின்னாளில் இந்திய நாட்டிற்கு ஓர் அவசர நிலைப் பிரகடனம் தேவை எனச் சோவே சொல்லும் அளவிற்கு இன்று அரசியல் அதல பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டு இருப்பது வேறு விஷயம். இந்த எல்லாக் கோபமும் வெறுப்பும் ஒரே நாளில் உடைந்து போய், இந்திரா எதிர்ப்பு என்ற எனது கொள்கை உடைந்து போனது அந்த அக்டோபர் முப்பத்து ஒன்றாம் தேதி 1984.

    அன்று காலை தான் அவர் சுடப்பட்டார். நான் சுமார் பத்து மணியளவில் என் அலுவலகத்தில் இருந்தபோது (வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலை) கணக்காளர் தான் அதனைச் சொன்னார். ஆனால் அவர் பேச்சில் உறுதித்தன்மை இல்லை என்பதால் ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பக்கம் வந்து விசாரித்த போது உண்மை தெரிந்தது. கிட்டத்தட்ட கலவரமான சூழல். அலுவலகம் வந்து இயக்குநரிடம் சொன்னேன். இந்தக் கோழைத்தனமான வன்முறைக்குப் பின், எனக்கு இந்திராவின் மேல் பெரிய மரியாதையும் மதிப்பும் வந்தது. இந்திரா மரணத்திலும் இவர்களை ஜெயித்தார்.

    ஆனால் அது அன்றைய காலக்கட்டம், அன்றைய உண்மை. எத்தகைய பெரிய, கலவரமான, பயங்கரமான மரணம் அது. ஒரு பாயின்ட் பிளான்க் ரேஞ்சில் இருபத்து ஏழு குண்டுகள் உடம்பைத் துளைத்தன என்றால் எவ்வளவு பெரிய மூர்க்கமான வன்மம் அது? உயிர் பிரிந்ததன் முக்கிய காரணமே பெரும் அதிர்ச்சி என்று அகில இந்திய வானொலி பறை சாற்றியது. எனக்கு விவரம் தெரிந்து நான் கலவரமானது இந்த நாள் தான். முப்பத்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன.

    அவர் முந்தைய நாள் ரத்தம் சிந்தத் தயார் எனப் பேசியபோது ஒரு தமாஷ் என்ற நினைத்த மனம், அடுத்த நாள் உயிர் விட்டபோது கலங்கியது, எனக்குள் நிகழ்ந்த ஒரு மாற்றம். புளூ ஸ்டார் ஆபரேஷன் நிகழாமல் இருந்து இருந்தால், நாம் இந்திராவைக் காப்பாற்றி இருக்கலாமா எனத் தோன்றுகிறது. சென்றதினி மீளாது மூடரே என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்ன தான் என் சின்ன எதிர்ப்பு ஒரு பொருட்டல்ல என்றாலும், இந்தக் குற்ற உணர்ச்சி, என்னை விட்டுப் போகாது.

    Share
  • நலவாழ்வுக்கு யோக முத்திரைகள்

    நலவாழ்வுக்கு யோக முத்திரைகள்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம் மரபுவழி யோக முத்திரைகள், பல நோய்களை, வலிகளை, சிக்கல்களைத் தீர்க்க வல்லவை. இடர்கள் வராமலும் காக்க வல்லவை. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் வலிமை சேர்க்கும் முத்திரைகள் உண்டு. தலைவலி தீர, மாதவிடாய்க் காலத்து வலி நீங்க, மூட்டுவலி அகல, இடுப்பு வலி விலக, இன்னும் கண் நலத்துக்கு, காதுக்கு, பல்லுக்கு, புருவத்துக்கு, தோலுக்கு, தொண்டைக்கு, சக்திக்கு, நினைவாற்றலுக்கு, நுரையீரலுக்கு நலம் புரியும் முத்திரைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை, மூச்சிரைப்பு, நெஞ்சுக்கட்டு ஆகியவை சரியாகவும் முத்திரைகள் உண்டு.

    பணம் வர வேண்டுமா? அதற்கும் ஒரு முத்திரை உண்டு. தலைமுடி உதிராமல் இருக்கவும் மேற்கொண்டு நன்றாக வளரவும் முத்திரை உண்டு. இவை அனைத்தையும் நமக்குச் செய்து காட்டுகிறார், நிர்மலா ராகவன்.

    மலேசியாவில் வாழும் எழுத்தாளரும் பரத நாட்டியக் கலைஞருமான இவர், இந்த முத்திரைகளைப் பல்லாண்டுகளாகப் பயின்று பலன் பெற்று வருகிறார். இவரிடமிருந்து கற்றுக்கொண்ட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய முத்திரைகளை நம் நேயர்களுக்காக நிர்மலா ராகவன் செய்து காட்டுகிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள். உங்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்தன என்று உங்கள் அனுபவத்தை, பின்னூட்டத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவ சேனை

    அருள்மிகு உமையம்மை உடனாய ஆதிலிங்கேச்சரர் வெடுக்குநாறிக் குன்றில் (அது மலையன்று; அது குன்று) திருக்கோயில் சார்ந்த அருளாட்சி.

    வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே அங்கு அருளாட்சி.

    ஆதி என்றாலே பழமையானது தொன்மையானது.

    சைவத் திருக்கோயில் இருந்த இடங்களில் புத்தரும் சமணரும் வாழ்ந்த கதைகள் ஏராளம் ஏராளம்.

    திருநாவுக்கரசு நாயனார் வடதளி பழையாறைத் திருக்கோயிலில் வழிபடச் செல்கிறார். நீண்ட வரலாறு கொண்ட பழைய சிவன் கோயில். சமணர்கள் அக்கோயிலை தமதாக்கிப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

    அப்பர் பெருமானை வழிபட விட மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். சிவனை வழிபாடு செய்த பின்பே உண்பேன் என உண்ணாநோன்பு இருக்கிறார் அப்பர் பெருமான்.

    தமிழர் வரலாற்றில் உணவைத் தவிர்க்கும் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாற்று நாயகன் அப்பர் பெருமான்.

    வண்ணங் கண்டு நான்உம்மை
       வணங்கி யன்றிப் போகேனென்
    றெண்ண முடிக்கும் வாகீசர்
       இருந்தார் அமுது செய்யாதே
    அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
       கரசு தம்மைப் பணிவதற்குத்
    திண்ண மாக மன்னனுக்குக்
       கனவில் அருளிச் செய்கின்றார் தி12210296.

    அங்கு வந்த சோழ மன்னன் சமணர் பள்ளிகளையும் ஓராயிரம் சமணர்களையும் அழித்தான். திருக்கோயிலைத் திறந்தான். அப்பர் சிவனை வழிபட்டார்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வடதளி பழையாறை நிகழ்ச்சி. 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

    காலத்தால் தொன்மையான சைவத்துக்குப் பின்வந்த புத்தரும் சமணரும் சைவத் திருக்கோயில்களைப் பூட்டினர். அருகே சமணப் பள்ளிகளை, புத்த பல சாலைகளை அமைத்தனர்.

    அவ்வாறு சமணரும் புத்தரும் பள்ளிகள் அமைத்த இடங்களுள் ஒன்று வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்.

    சைவ மீள்எழுச்சிக் காலத்தில் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் மீண்டும் சைவர்களின் வழிபாட்டுக்கு வந்தது.

    புத்தர் சமணர் இடையிட்டுப் பள்ளிகள் அமைந்திருந்தாலும் சைவ சமயப் பூசைகள்வழிபாடுகள் தொடர்ந்தன. இடையீடின்றி இன்றுவரை சைவர்களின் பூசைக்குரிய திருக்கோயிலாக அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் தொடர்கிறது.

    வெடுக்குநாறிக் குன்றுச் சிவன் கோயில் பூசைகள் கடந்த 2 வாரத்துக்கு முன் காவல்துறையால் நிறுத்தப்படும் வரை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன.

    வெடுக்குநாறிக் குன்றுக்கு வழிபடச் செல்லும் சைவ அடியவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நெடுங்கேணி காவல்துறைப் பொறுப்பதிகாரி ஈராண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர், வழிபாட்டில் ஈடுபட்டார். அடியார்கள் குன்றில் ஏறிச் செல்வதற்கு ஏணி ஒன்றைப் பொருத்திக் கொடுத்தார்.

    இந்த ஆண்டு நெடுங்கேணிக்கு மாற்றலாகி வந்து பணிபுரியும் காவல்துறைப் பொறுப்பதிகாரி வெடுக்குநாறிக் குன்றில் சைவசமயப் பூசைகள் நடைபெறுவதைத் தடுக்க முயன்றார்.

    பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற நிகழ்ச்சி எனச் சைவ சமயப் பூசைகளைச் சுட்டிக்காட்டிய நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

    சைவ சமயப் பூசைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதிகளின் கீழ் அமையாது என நீதிமன்றம் அவரது விண்ணப்பத்தை ஏற்கவில்லை.

    எனவே பூசைகள் தொடர்ந்தன. பத்து நாள் திருவிழாக்கள் நடந்தன. இறுதி நாளன்று பொங்கல் அன்னதானம் என ஆயிரக்கணக்கான சைவ மக்கள் கூடி வழிபட்டனர்.

    முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பூசகருடன் இணைந்து வழிப்பட்டேன். பூசை முறைகளில் பங்கு பற்றினேன்.

    உடல் சிலிர்த்தேன். மெய் விதிர்விதிர்த்தேன். கை தலை மேல் வைத்தேன். கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் என மனம் உருகிப் போற்றிகள் பாடினேன்.

    26. 9. 2020 விழா இறுதி நாள்.

    அதற்குப் பின் நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்

    1 தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான இடம் வெடுக்குநாறிக் குன்று.
    2 பொங்கல் நிகழ்ச்சிக்காகத் தீ மூட்டினர், தொல்லியல் நிலைகளுக்குக் கேடு விளைவித்தனர்.
    3 உணவு சமைப்பதற்காக பகிர்வதற்காக ஐந்து கொட்டகைகளை இடைக்காலமாக அமைத்தனர். அதனால் அங்குள்ள தொல்லியல் தடயங்கள் குலைந்தன.
    4 திருவிழாவுக்காக ஆட்சி குழுவினர் துண்டு அறிக்கை வெளியிட்டனர், அடியார்களைத் திரட்டினர். தொல்லியல் தடயங்களுக்கு அடியார்களின் கூட்டம் சேதங்களை விளைத்தது.
    5 புத்து சமயத்தவரும் இந்த இடத்தில் வழிபாடு செய்தவர்கள் என்பதற்கான சான்று இருப்பதால் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைந்தது.
    6 தொல்லியல் சட்டத்தின் 24வது அத்தியாயத்தின் 15ஆவது பிரிவிலும் 31 32 34 பிரிவவுகளிலும் மேற்காணும் 5 செயல்களும் குற்றமாக உள்ளதால் அறங்காவலர் இருவர் பூசகர் ஒருவர் ஆகிய மூவரையும் பிணையில் விட முடியாத சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி கேட்டார்.

    தொடக்க நாளன்று வழக்கின் விண்ணப்பம் முழுமையற்றதால் குற்றச் சாட்டை ஏற்க மறுத்த நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார்.

    தொல்லியல் ஆணையர் சான்றிதழான ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்காததால் இரண்டாவது தவணையிலும் (23.10.2020) நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார். இரண்டாவது தவணைக்கு நானும் வவுனியா சென்று நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தேன்.

    மூன்றாவது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது.

    வெடுக்குநாறிக் குன்று பூசைக்குரிய இடம் என்பதை அடுத்த தவணையில் நிலைநாட்டுவதே வழக்குரைஞர்களின் குறிக்கோள் இலக்கு. ஆட்சிக் குழுவினருக்கும் பூசகருக்கும் சைவ சமயத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கூறி அவர்களைத் தளையிட வேண்டாம் என வழக்குரைஞர் கூறுவர்.

    Share