-மேகலா இராமமூர்த்தி

தென்னை ஓலைமீது அமர்ந்திருக்கும் சின்ன அணிலை நுணுக்கமாய்ப் படம்பிடித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியுள்ளனர். ஒளிஓவியர் ராமலக்ஷ்மிக்கு நன்றி!

அணில் என்ற பெயர் இவ்வுயிரிக்கு எப்படி வந்திருக்கும் என்று ஆராய்வோம்!

அண்டு/அண்டி என்பது உடலோடு ஒட்டியிருக்கும் வாலைக் குறிக்கும். ’அண்டு’ என்ற அந்தச் சொல் ’அண்ணு’ என்றாகி அத்தோடு ’இல்’ சேர்ந்து ’அண்ணில்’ ஆனது. பின்னர்,  பேச்சுவழக்கில் ’அணில்’ என்று இடைக்குறைந்த சொல்லாக மாறிப் புழக்கத்திற்கு வந்திருக்கின்றது என்கிறார்கள் சொல்லாராய்ச்சியாளர்கள்.

ஆக, அணில் என்பதற்கு ’வாலுயிரி’ என்று பொருள் என்பதை இதன்வழி அறிகின்றோம். 

இன்னொரு பெயரும் அணிலுக்கு உண்டு. அது ‘வெளில்’ என்பது. வெளியே தொங்கும் வாலுக்கு ஆகுபெயரான ’வெள்’ என்பது ’இல்’ விகுதி பெற்று ’வெளில்’ ஆகியிருக்கின்றது.

ஏனலங் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
(அகம் – 12) என்ற அகநானூற்றுப் பாடலில் ‘வெளில்’ என்ற சொல் அணிலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஓலையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த அணிற்பிள்ளை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்னவென்று கண்டுவருவோம் இனி!

*****

’ராமன்’ எனும் நாயகனால் ’புகழ்’ எனும் மூன்றெழுத்தை அடைந்த மூன்றெழுத்து உயிரான அணிலை, ’வாழ்க’வெனும் மூன்றெழுத்தால் நயம்பட வாழ்த்தியிருக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

மூன்றெழுத்து வாழ்த்து!

‘அணில்’ என்னும்
மூன்றெழுத்துப் பெயர் கொண்ட
பிராணியே!

‘ராமன்’ எனும்
மூன்றெழுத்துப் புராண நாயகனுக்கு
‘உதவி’ என்ற
மூன்றெழுத்தைச் செய்ததால்
‘முதுகு’ என்ற
மூன்றெழுத்து உடலுறுப்பி‌ல் பொறித்த
மூன்றுகோடுகளால்
‘புகழ்’ என்னும்
மூன்றெழுத்தை அடைந்தாய்,
புராண காலத்தில்!

‘சேமியா’ என்ற
மூன்றெழுத்து உணவுப்பொருளிலும்
பிரபலமடைந்தாய்
கலியுகத்திலும்!

‘வாழ்க’ என்னும்
மூன்றெழுத்துச் சொல்லால்
வாழ்த்துகிறேன்
உன்னை இன்று!

*****

”அண்ணல் ராமன் கைபட்ட அணிலே! உனக்கு உண்ணக் கனியும் பாலும் தருவேன்” என்று கனிவுடன் இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அணிலே வா…

அண்ணல் ராமன் கைபட்ட
அணிலது கடித்தால் கனிசுவைக்கும்
எண்ணம் நமக்கே இருப்பதாலே
எல்லா அணிலையும் விரும்புகிறோம்,
உண்ண ஒன்றும் கிடைக்காமல்
ஓலையில் இருக்கும் அணிலேவுன்
கண்ணது கலங்க விடமாட்டேன்
கனியும் பாலும் தருவேனே…!

*****

”சேதுப்பாலம் கட்டவந்த அழகு மனங்களே! ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே! நீங்கள் உண்ணும் அழகைக் கண்டுமகிழ நாங்கள் இருக்கிறோம்!” என்று அணிலினத்தை அன்போடு புகழ்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

ராமர் போட்ட மூன்று கோடு உங்கள் இனத்திற்கு
நாளுமது சேதி சொல்லும் எங்கள் மனத்திற்கு
சேதுப்பாலம் கட்ட வந்த அழகு மனங்களே
ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே

இங்குமங்கும் தாவித் தாவி ஓடித் திரியவே
இறைவன் உங்களையே படைத்து மகிழ்ந்திட்டானே
பழங்களையும் காய்களையும் தின்னும் அழகிலே
பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட நாங்கள் இருக்கிறோம்

*****

”பொய்ம்மைகளுக்கு நடுவில் மெய்ஞ்ஞானமும், கட்டுகளில்லாத போதும் கண்ணியம் இழக்காத தெளிவும் வேண்டும்” என்று அணிலுக்குச் சொல்வதுபோல் மானுடர்க்கு நல்லுரை நவின்றுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

தேவைகள்

ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
கனிவும் இனிமையும் தர வேண்டும்

கூச்சல் குழப்பம் பொய்ம்மைகள் நடுவே
உண்மையை அறியும் அறிவு வேண்டும்
வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
தன்னிலை உணரும் மெய்ஞ்ஞானம் வேண்டும்

கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

*****

அணிலின் முதுகில் கோடு வரைந்தவன் அண்ணல் இராமன் எனும் புராணச் செய்தி நம் மக்களின் மனங்களில் எவ்வளவு தூரம் ஆழப் பதிந்திருக்கின்றது என்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். வாலுயிரியான அணிலின்பால் அன்பைப் பொழிந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

எதைப் பார்க்கிறாய்?
என்ன கேட்கிறாய்?
உன்னைச் சுற்றிய
உலகின் ஓட்டத்தை
உற்று நோக்கியே
உன்னுள் நகைப்பா?

கிடைத்ததை உண்டு
காலத்தை வென்று
வாழ்வினை முடிக்கும்
வாடிக்கை உனக்கு!
சந்ததி வளர்க்கும்
சங்கதி அறிவாய்

எடுத்தவை அனைத்தையும்
எடுத்ததும் முடித்திடாமல்
பின்னொரு வேளைக்காய்
முன்னரே சேர்த்திடுவாய்!

முதுகினில் வரிகளையும்
மூளையில் அறிவையும்
துணையாய்க் கொண்டே
துணிவுடன் தாவிடுவாய்!

உருண்டிடும் உலகினில்
உன்னையும் என்னையும்
உழன்றிட வைத்திட்டவன்
உண்மையில் வித்தகனே!

”கிடைத்ததை உண்டு காலத்தைவென்று வாழும் அணிலே! பின்னொரு வேளைக்காய் முன்னரே சேர்த்திடும் மூளையுள்ள உன்னையும் என்னையும் உருண்டிடும் உலகினில் உழன்றிட வைத்தவன் உண்மையில் வித்தகனே!” என்று அணிலின் இயல்பையும் உயிர்களைப் படைத்து உழலவைக்கும் ஆண்டவனின் இயல்பையும் பாட்டினில் நேர்த்தியாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *