Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘’என்றுமே நலமான தாயும் சேயும்’’….லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
    ————————————————————————————————————————————-

    மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
    தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….

    ‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
    அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
    வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
    மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….

    “கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன் –
    நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன் –
    தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
    ஆசுகவி ஆக்குகண் ணா(ஆ)”….கிரேசி மோகன் ….!தேசு -தேஜஸ் ….!

    Share
  • உழவுக்காடு….

    உழவுக்காடு….
    *****************
    – ஆ. செந்தில் குமார்

    கண்ட கனவு பலிக்குதடி கண்ணம்மா!
    கருமேகம் திரண்டுடுச்சி கண்ணம்மா!
    கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணம்மா
    காத்து மழை பெய்யுமடி கண்ணம்மா!
    காத்து மழை பெஞ்சிசின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காத்து மழை பெஞ்சிச்சின்னா கண்ணம்மா
    காவிரிதான் கரை புரளும் கண்ணம்மா!
    காவிரிதான் கரை புரண்டா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காவிரிதான் கரை புரண்டா கண்ணமா
    ஏரி குளம் நெரம்புமடி கண்ணமா!
    ஏரி குளம் நெரம்புச்சின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஏரி குளம் நிரம்புச்சின்னா கண்ணம்மா
    காஞ்ச வயல் ஈரமாகும் கண்ணம்மா!
    காஞ்ச வயல் ஈரமானா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காஞ்ச வயல் ஈரமானா கண்ணம்மா
    ஏர் பிடிக்க ஏதுவாகும் கண்ணம்மா!
    ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணம்மா – நிலத்தை
    ஆழமாக உழுவலாம் கண்ணம்மா!
    ஆழமாக உழுதாலே கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஆழமாக உழுதாலே கண்ணம்மா
    பயிரெல்லாம் செழிக்குமடி கண்ணம்மா!
    பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணம்மா
    விளைச்சலெல்லாம் இருக்குமே  அதிகமா!
    அதிக விளைச்சல் இருந்தாலே கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    படும்பாடு தீருமோ இல்லையோ
    பட்ட கடனெல்லாம் தீருமடி கண்ணமா! – உன்னை
    கட்டிக்கிட்ட பாவத்துக்கு நானுமே
    கஞ்சாச்சும் ஊத்தணும் நியாயமா!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 263 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இயற்கையன்னை ஒருவாரகாலம் , ஒருமுறை சிலிர்த்து இங்கிலாந்து நாட்டினை தன்னுள் சிறையாக்கி வைத்திருந்து வெளிவந்த வேளையிது. கருமேகங்கள் கூடி வெள்ளைப் பனிமழை பொழிந்து இங்கிலாந்து நகரத்து தெருக்களையெல்லாம் பனிப்பாய் கொண்டு மூடியிருந்தது.சைபீரியாவிலிருந்து அடித்த குளிர்காற்று “கிழக்கிலிருந்து வந்த பூதம் (Beast from the east)” எனும் பெயருடன் இங்கிலாந்து நாட்டினைத் தன் கைப்பிடிக்குள் அமுக்கிப் பிடித்திருந்தது. – 5 டிகிரி செல்சியஸ் எனும் சூழல் வெப்பநிலையை வெப்பமானிகள் காட்டினாலும் இங்கிலாந்தைக் கவ்விப்பிடித்திருந்த குளிர்காற்றின் வேகம் – 12 டிகிரி செல்சியஸ் எனும் வகையிலான தாக்கத்தைக் கொடுத்திருந்தது. இப்போதுதான் ஒருவாறு அப்பிடிக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டுள்ளது. நாமும் மீண்டுள்ளோம்.

    இந்நிலையில் தான் நாம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியை வந்தடைந்துள்ளோம். அது சரி… அப்படி இந்த மார்ச் 8ஆம் திகதிக்கு அப்படி என்ன பெருமை என்று எண்ணினால் அது உலகின் மகத்தான “சர்வதேச மகளிர் தினத்தை ” தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். ஆம், பெண்களின் மகத்துவத்தைக் குறிக்கும் நாள். பெண்களின் பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் நாள். பெண்களின் சுபீட்சத்தை எடைதூக்கிப் பார்க்கும் நாள். அன்றைய பெண்களுக்கும், இன்றைய பெண்களுக்கும் இடையில் காலம் கொடுத்த மாற்றங்கள் அநேகமாக இருந்தாலும், காலத்தால் மாற்ற முடியாத ,காலத்தால் அழியாத பல பண்புகள் இன்றைய பெண்களுக்கு உண்டு. அன்று தாய்மையின் வடிவமாகப் பெண்தான் திகழ்ந்தாள் இன்றும் தாய்மையின் வடிவமாகப் பெண்கள் தான் திகழ்கிறார்கள்.

    அன்றைய பெண் தாய்மையின் வடிவமாக மட்டுமே இருந்தாள். அவளுக்கென விதிக்கப்பட்டவை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டு இருந்தன. ஆனால் இன்றைய பெண்களுக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும், ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியவை என்று எண்ணப்பட்ட பல பணிகள் இன்று பெண்களினால் ஆண்களை விடத் திறமையாகச் செய்யப்படுகின்றன. கணனித்துறையை எடுத்தால் என்ன, விமானம் ஓட்டும் பணியாக இருந்தாலென்ன, மருத்துவத்துறை என்றால் என்ன, விஞ்ஞானத்துறை என்றால் என்ன அனைத்திலும் இன்று பெண்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

    சமுதாய முன்றிலில் நடக்கும் பல அநியாயமான செயல்களைத் தட்டிக் கேட்பவர்களாகப் பல பெண்கள் செயற்படுகிறார்கள். சமூக சேவகிகளாக பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துச் சமுதாயத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மேலைநாடுகளிலும் சரி, எமது தாய்நாடுகளானான பின்புல நாடுகளாயினும் சரி பல வியாபார நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இன்றும் மேலைநாடுகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையிலிருக்கும் சமதள வேறுபாடு தீர்ந்தபாடில்லை. ஒரே பணியிலிருக்கும் ஒரு பெண்ணையும், ஆணையும் எடுத்துக் கொண்டால் ஆணை விடப் பெண்ணின் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. இது பலமுனைகளில் பலரினால் எடுத்துக் காட்டப்பட்டுத் தொடரும் பல அரசுகளினால் விமர்சிக்கப்பட்டாலும் அவ்வித்தியாசம் மிகவும் மெதுவாகவே குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு ஒருவகையில் ஆண்களின் ஆணாதிக்கக் குணாம்சம் அடிப்படையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்களுடன் சமதளத்தில் போராடித்தான் தமக்கான வாழ்வாதரத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள பெண்கள் ஆரம்பிக்கும் போதே சில அடிகள் பின்னாலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய காட்டாயத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.

    தமிழ்ப்பாட்டன் மகாகவி பாரதி தன் தமிழில்,

    ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!” என்றான் பெருங்குரலில்.

    பாரதி கண்ட அப்புதுமைப் பெண்ணினைக் காணும் வகைக்கு இன்று நாம் என்ன செய்தோம்? பெண்களை ஒரு காமப்பொருளாக, நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பவர்கள் பலரையே காண்கிறோம். பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களை மனம்போன போக்கிலே விமர்சிக்கும் உரிமை எமக்குண்டு என்பது போலேத் தம்மை நாகரிகவாதிகள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய ஆண்களில் பலர் நடப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது. தாயாக, சகோதரியாக, அன்பு மனையாளாக எமக்குக் கிடைப்பவர்கள் கூட அப்பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை மறந்தவர்கள் போல் நடப்பது வியப்பாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்தியாவின் பல மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி அவர்கள் அகால மரணமடைந்ததையடுத்து சொற்ப நேரத்திலேயே அவரது பிரத்தியேக வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. அதற்குச் சார்பாக ” நடிக்க வரும் போதே இத்தகைய நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதை அவரே அறிந்திருப்பார்” எனும் வாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஒரு மிருகம் இறந்தால் கூட அதனை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் பண்பு நிறைந்த இந்நூற்றாண்டிலே அடிப்படை மனிதத்தன்மை அற்றுப் போனதைப் போல உணர வேண்டிய பல தருணங்கள் நிகழ்கின்றன. இன்றைய பெண் சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம். பலநாடுகளின் தலைவர்களாகப் பெண்கள் திகழ்கிறார்கள். அதற்காக அன்றைய பெண் முக்கியமான அங்கமாக இருக்கவில்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அன்றைய காலத்தில் பெண்கள் குடும்பம், இல்லம் எனும் வரையறைக்குள் அடைக்கப்பட்டதினால் அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கவில்லை. அத்தகைய ஒரு சூழலில் தான் மகாகவி பாரதியார் அச்சிறையை உடைத்துப் பெண்களை வெளிக்கொணர வேண்டிய உண்மையை சத்தமாகவே உரைக்கத் தொடங்கினார். அதனாலேயே,

    ”பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
    பிறப்பித்தேன்; அதற்குரிய வெற்றி கேளீர்;
    மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
    மனையாளும் தெய்வமன்றோமதிகெட் டீரே!
    விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
    விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
    பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
    பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.” என்று கவி படித்தார்.

    ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் வருகிறது, எட்டாம் திகதியும் வருகிறது.மகளிர் தினங்களும் வந்து போகின்றன. கவிதைகள் படிக்கிறோம், கட்டுரைகள் வரைகிறோம். எம்மில் எத்தனை பேர் உள சுத்தியுடன் இப்பெண் விடுதலை தினத்தில் பெண்களின் மேன்மையைக் காக்கும் வகை எம் மனத்தில் இவ்வுறுதியை எடுக்கிறோம் என்று ஏதாவது ஓர் உறுதியை அன்றி ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருக்கிறோம்?

    அடுத்த மகளிர் தினத்தில் மீண்டும் எடை போடுவோம்!!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • பெண் ஒரு போராளி…!

    -ஆ. செந்தில் குமார்

    கல்லடிகள் தாங்கி நிற்கும் பழுமரம் போல் – கணவனின்
    சொல்லடிகள் தாங்கி நிற்கும்
    பெண் ஒரு போராளி!

    கற்புநெறிக்கு இடையூறு எது வரினும் கலங்காமல்
    கனல் கக்கும் பார்வையினால் வாள் வீசும்
    பெண் ஒரு போராளி!

    சுட்டாலும் வெண்மை தரும் சங்கைப் போல் – எத்துன்பம்
    பட்டாலும் பிள்ளைக்காக இன்பமெனக் கொள்ளும்
    பெண் ஒரு போராளி!

    ஆணாதிக்கம் என்பது இங்கு இருந்தாலும்
    ஆடவர்க்கு நிகராக அனைத்திலுமே கோலோச்சி நிற்கும்
    பெண் ஒரு போராளி!

    அடக்குமுறைக்கு அடிபணியாமல் அழுத்தமான மனம் கொண்டு
    நினைத்த எண்ணம் நிறைவேற நிலைத்து நின்று போராடும் ஒவ்வொரு
    பெண்ணுமே ஓர் போராளி!!

     

     

     

    Share
  • உலக மகளிர் தின வாழ்த்துக்கள்…..!

     

    ”நோயுமவள், சாய்ந்திடும் பாயுமவள், மாற்றிடும்
    மாயமவள், புத்தொளிர் காயமவள், -நாயன்மார்
    நேயமவள், நாடாதோர் சீயமவள், தேற்றிடும்
    தாயுமவள், கற்பகத் தாள்’’….கிரேசி மோகன்….!

    அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து….கிரேசி மோகன்….!

    Share
  • சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு!

    ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க முடிகிறது.


    சமுதாய அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் பெற்றுள்ள செல்வாக்கு மட்டுமே அந்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்தகைய வளர்ச்சிக்குப் பெண் கல்வி மட்டுமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதாவது நற்பண்பை வளர்க்கக்கூடிய அறிவைப் புகட்டுவதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதுமான திறன்களை உருவாக்குவதுமே பெண் கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டுமாயின் கல்வியின் அவசியத்தை முதலில் உணர்தல் வேண்டும். சமுதாயத்தில் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்றால் அது பெண் கல்வி மட்டுமே. ஆம் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சரி நிகராக முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறவர்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய கல்வி, இலட்சிய வேட்கை மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

    ஆதிகாலந்தொட்டு பெண்கள் வீரம், விவேகம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை என அனைத்திலும் ஆண்களைக்காட்டிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலியை முறத்தால் விரட்டியப் பெண்மணிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளனர். வயலில் இறங்கி பாரபட்சமின்றி ஓயாது உழைத்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். ஆயினும் கல்வி கற்பதில் மட்டும் பெண்களுக்கான எல்லைக்கோடு அழுத்தமாகவே பதியப்பட்டிருந்தது.

    ஆனால் இன்றைய நிலையே வேறு. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் உருவாக்கும் சந்ததியினரின் துணிவும், தன்னம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடுகின்றன.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்துவோம்
    என்றார் பாரதி.

    அதாவது, பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் என எவ்வகையிலும் இழிவுபடுத்தும் அறிவற்ற செயலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

    ஆனால் இன்றைய நிலையில் அன்றாடம் ஊடகங்களில் பெண்கள் பலவகையிலும் இழிவுபடுத்தப்படும் செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கின்றன. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது. தொலைக்காட்சி தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்களை கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுவதுதான். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கர்பத்தைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகளை சர்வ சாதாரணமாகப் பெண்கள் செய்வதுபோலக் காட்சியமைப்பதை எந்தத் தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான விசயம். பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பது ஊடகங்கள் என்பதை மறுக்கவியலாது.

     

    ஒரு பெண்ணின் வாழ்வியல் என்பது ஆரம்பம் முதல் கல்வியில் தொடங்க வேண்டும். மகாகவி பாரதி சொல்வது போன்று,
    “அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”
    (சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83) என்கிறார்.

    ஓரளவிற்கேனும் படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் விளைகின்றன. இன்று கணினித் துறையில் இருக்கும் பெண்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தங்கள் அறிவின் மேன்மையை வெளிப்படுத்தி புகழ் பெறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி அங்குள்ள புதுமைகளை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முனைவதன் மூலம் பாரதியின் கனவை நினைவாக்குகின்றனர்.

    கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, அச்சமின்மை, என ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டெழுந்து வெற்றிவாகை சூடிவரும் புதுமைப் பெண்களை பரவலாகக் காணமுடிகிறது.

    எதிர்படும் சவால்களனைத்தையும் சமாளிக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறார்கள். ஆக சமுதாயப் புரட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லாத வகையில் பெண்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள்.

    பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானதாகும். இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
    சிலகாலம் முன்பு தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமே பெண்களின் வழமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழில் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் மகிழ்வான செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பெண்களின் சுதந்திரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்றும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
    இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் ஆணாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்றே சொல்லமுடிகிறது. அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் தொழிலிலும் இதே நிலையே உள்ளது.

    பெண்களும் பொறுப்பு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.

    ஆயினும் பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சனைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றல்லாமல் பெண்கள் குடும்ப பொறுப்புகளையும் சேர்த்தே சுமக்க வேண்டியுள்ளது. ஆனால், அவள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் இயல்பாக ஏற்கும் நிலையே இருக்கிறது. பல காலங்களாக பழக்கத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றங்கள் கொண்டுவருவது எளிதாக இருப்பதில்லை. சமுதாயத்தில் எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் இதனை புரிந்து கொள்ள முயல்வதில்லை.

    இதுமட்டுமின்றி, தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களை சமாளிப்பதற்குரிய பக்குவம் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.

    வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள்.

    பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் தயங்கக்கூடாது.

    ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்நாட்டிலுள்ள சிறந்த மேதைகள், சிந்தனையாளர்கள், நல்ல தலைவர்கள், பண்பாளர்கள் ஆகயோரின் எண்ணிக்கையைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் தாய்க்குலத்தை சுதந்திரமாக செயல்படவும், துணிவுடன் சவால்களை எதிர்கொள்ளவும் வழியமைக்க வேண்டும்.

    சேமிக்கின்ற நல்ல பழக்கமும், குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமையும் பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.
    தற்கால பெண் சாதனையாளர்களில் மறக்க முடியாதவர்கள் என்றால், துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர். ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கியவர். நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய இந்திரா காந்தி இவரை தனது குருவாகக் கொண்டார். இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரான இவர் தமது இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகவே பாடுபட்டவர்.

    டாக்டர் சாந்தா, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வது வழக்கம்.

    மன நோயாளிகளின் புனர் வாழ்விற்கு வழியமைத்த டாக்டர் சாரதா மேனன் , இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
    கலைமாமணி ருக்மணி அருண்டேல் போன்றோர். தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்புடன் எதிர் நீச்சல் போட்டு சாதனை புரிந்தவர்கள் இவர்கள்!

    Share
  • படமும் பாடலும் … !

     

    அமெரிக்காவில் வரைந்தது…..இந்தியாவில் எழுதியது…..! 

     

    Share
  • காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….

    உலக மகளிர் தின வாழ்த்துக்களுடன்…

    எஸ் வி வி

    மார்ச் 8: உலக பெண்கள் தினம்

    காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….
    எஸ் வி வேணுகோபாலன்

    தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா
    வாங்க இயலாது மரித்துப்போன
    ஓய்வூதியத்தைப்
    போராடி வென்றெடுத்த பாட்டியின் நினைவில்
    பகிர்கின்றோம் மகளிர் தின வாழ்த்துக்களை!

    படிப்பில், விளையாட்டில், வேலையிடத்தில்
    அசாத்திய சாதனைகளை
    ஓசையின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும்
    பெண்களது பங்களிப்பின்
    பெருமிதம் பொங்க உரைக்கிறோம்
    மகளிர் தின வாழ்த்துக்களை!

    சவால்கள் சூழ்ந்த களத்தில்
    மிரட்சியின்றி வெளிப்பட்டு
    மிக சாதாரணமாகக் கடந்துபோகும்
    வீராங்கனைகளின் பெயரில் எதிரொலிக்கிறோம்
    மகளிர் தின வாழ்த்துக்களை!

    காத்திருக்கிறோம் –
    குற்ற உணர்ச்சிகள் தவிர்த்த
    கொண்டாட்ட பெருமிதமிக்க
    பாலின சமத்துவம் நிலவும்
    ஒரு காலத்திற்கு –
    கம்பீரத்தோடு மகளிர் தின வாழ்த்துக்களை
    கையளிப்பதற்கு!

    **********
    நன்றி: தீக்கதிர் (மார்ச் 8, 2018)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணுபக்த வத்சலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….!

    உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
    விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
    மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
    வித்தை பழகும் விதம்….!

    துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
    படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
    தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
    பாரா திருப்பதேன் பகர்….!

    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ’சொல் கோவிந்தம்’

    பஜ கோவிந்தம்….
    —————————–

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….(1)

    வெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை
    கொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான்
    விதித்த தொழில்செய்து வந்த பொருளை
    மதித்து மனதுள் மகிழ்….(2)

    வேறு
    ——-

    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….?….(3)

    வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
    வேட்கை அதற்கு மாறாக
    ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
    காசுபணம் கொள் சீராக….(4)

    காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
    மாமிசம் ரத்தம் இளக்காரம்
    நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
    தூமணி மாட விளக்காக….(5)

    தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
    நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
    பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
    சாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)

    கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
    வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
    மாட்டிய மேனி மண்விழத் தாலி
    பூட்டிய மனையாள் பயமுறுவள்….(7)

    பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
    கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
    வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
    உள்ளிறை தொட்டதில்
    எவர்கிங்கு தேட்டம்….(8)

    சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
    மாதரசி மகன் யாரென்று
    பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
    ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)

    கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
    பற்றது போக பரம வைராக்யம்
    உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
    பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)

    தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
    காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
    பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
    ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)

    ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
    தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
    நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
    தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)

    திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
    கடல்போல் கூட்டம் அலைமோதும்
    முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
    அடடா கூறிட ஆளேது….(13)…..கிரேசி மோகன்….!

    பாடியவர் –  கிரி டிரேடிங் ரங்கனாதன்….!

    Share
  • புரட்சித்தலைவன்!

    -மேகலா இராமமூர்த்தி

    உலக வரலாற்றில் முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, ஒடுக்கப்பட்ட வர்க்கமான தொழிலாளர்களைத் தலைநிமிர வைத்ததோடு, அவர்களை ஆட்சிபீடத்திலும் அமர்த்திய பெருமைக்குரியவர் விளாடிமிர் லெனின் (Vladimir Lenin). 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் (Simbirsk) நகரில் பிறந்த லெனின், சட்டம் பயின்றவர். காரல் மார்க்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் தன்னை ஒரு மார்க்சியவாதி என்று அறிவித்துக்கொண்ட அவர், அக்கொள்கைகளை ரஷ்யத் தொழிலாளர்களிடம் பரப்புரை செய்துவந்தார். ரஷ்யாவில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொதுவுடைமையை மலரச் செய்யவேண்டும் என்று அரும்பாடுபட்டார்.

    அவர் சார்ந்திருந்த ரஷ்யன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் கட்சி (Bolsheviks) என்றும், மென்ஷவிக் கட்சி (Mensheviks) என்றும் இரண்டாக உடைந்தபோது லெனின் போல்ஷ்விக் கட்சிக்குத் தலைவரானார். ஜார் (Tsar) மன்னனின் கொடுங்கோலாட்சி அப்போது ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

    அக்கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் கம்யூனிசத்தை நிறுவ வேண்டும் என்று தம் கட்சியினரை வலியுறுத்திய லெனின், அதைத் தெளிவுபடுத்தும் வகையில் ”இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை” என்று வீரமுழக்கமிட்டது வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட வாசகம் ஆகும்!

    1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் தலைமையில் நிகழ்ந்த மாபெரும் அக்டோபர் புரட்சி (October Revolution) உலகையே ரஷ்யாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. அப்புரட்சியில் கொடுங்கோலனான ஜார் மன்னன் வீழ்ந்தான். லெனினின் தலைமையில் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்தது.

    அதனையறிந்து நம் மகாகவி பாரதியும் ஆனந்தக் கூத்தாடினான்.

    மாகாளி பராசக்தி உருசியநாட் 
      டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
      கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
    வாகான தோள்புடைத்தார் வானமரர்;
      பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
    போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
      வையகத்தீர், புதுமை காணீர்!

    இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் 
      வனவாசம்; இவ்வா றங்கே
    செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே 
      அறமாகித் தீர்ந்த போதில்,
    அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி 
      உண்மைசொலும் அடியார் தம்மை
    மும்மையிலும் காத்திடுநல் விழியாலே 
      நோக்கினாள்; முடிந்தான் காலன்” என்று கவியெழுதிக் கொண்டாடினான்.

    ரஷ்யாவில் மட்டுமல்லாது, ஐரோப்பிலும் ஆசியாவிலும் முதலாளிகளால் சுரண்டப்பட்டும், நசுக்கப்பட்டும் உரிமையிழந்து அல்லலுறும் தொழிலாளத் தோழர்கள் அனைவரும் உரிமையும் விடுதலையும் பெறவேண்டும். எங்கும் பொதுவுடைமை மலரவேண்டும். அப்போதுதான் முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகத் தான் தொடங்கிய புரட்சி முழுமைபெறும் என்று திடமாக நம்பினார் லெனின்.

    அவர் விரும்பியதுபோலவே ரஷ்யாவில் அவர் தொடங்கிவைத்த யுகப்புரட்சி ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி அவர்களை வீறுகொண்டு எழச்செய்தது. இந்தியரிடம் ஏற்பட்ட அந்த எழுச்சியும் அவர்கள் நிகழ்த்திய கிளர்ச்சியும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததை அறிந்த லெனின் அதனை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (communist Party of India – CPI) தோன்றுவதற்கு ஆதர்சமாகவும், அதற்கு ஆதரவாகவும் விளங்கி, அக்கட்சியை அதன் தொடக்க காலத்தில் ஆசானாக இருந்து வழிநடத்தியவர் தோழர் லெனின் ஆவார்.

    பாரத மாதாவின் தவப்புதல்வர்களுக்கு, இன்றைக்கு வேண்டுமானால், கம்யூனிசக் கோட்பாடுகளோடு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்திய விடுதலைக்கான எழுச்சியை ஊட்டியதில் லெனினின் அக்டோபர் புரட்சிக்கு முக்கியப் பங்குண்டு என்பதை எவருமே மறுக்கமுடியாது.

    தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, பாழ்பட்டுநின்ற பாரதத் தாயின் அடிமைத்தளையை அறுத்தெறியத் தூண்டுகோலாய்த் திகழ்ந்த மாபெரும் தலைவரான தோழர் லெனினின் சிலையை அப்புறப்படுத்திவிட்டு… ‘பாரத் மாதா கி ஜே!’ என்று வெறிகொண்டு கூச்சலிடுவது இந்திய விடுதலை வரலாறு அறியாதோரின் குற்றமேயன்றி வேறில்லை.

    இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சித்தலைவ! தாங்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாது செய்துகொண்டிருக்கும் இந்த (அப்)பாவிகளை மன்னியும்!

     

     

    Share
  • அருள்மிகு ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் அமைப்பும் தலவரலாறும் (நூல் மதிப்புரை)

     

    பவள சங்கரி

    ஆசிரியர் ர.கண்ணன் எழுதியுள்ள, “அருள்மிகு ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் அமைப்பும் தலவரலாறும்” என்ற நூலில், ஆலயம் அமைந்துள்ள, பாரத நாடு துவங்கி, நாமக்கல் எனும் ஊரின் அழகான முன்னுரையுடன் துவங்கும் இந்நூல் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளுடன், நாமக்கல் என்று பெயர் பெற்றதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

    நாமகிரி என்ற மலை உருவான விதம் சுவையான புராணக்கதை. ஒரே கல்லால் ஆன இம்மலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை மற்றும் சிற்பங்கள், புடைச்சிற்பங்கள் என அனைத்தும் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளன. அததற்குரிய அழகான புகைப்படங்களும் அங்கங்கு இணைத்திருப்பது சிறப்பு.

    ஆஞ்சநேயர் உருவான வரலாறும், அதன் அதீத உயர்வும், அலங்காரங்களும், திருவிழாக்களும் குறித்து சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

    ஸ்ரீநரசிம்மர் பற்றிய தல புராணமும், மும்மூர்த்தி தலம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், கோவிலின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

    பள்ளி கொண்ட அரங்கநாதர், மகாலட்சுமி கோவில், நரசிங்கப்பெருமான் போன்ற இறைவடிவங்கள் அமைந்துள்ள குடவரைக் கோயிலின் உட்பிரகாரங்களின் விளக்கங்கள், கோவில் பற்றிய ஏனைய வரலாற்றுத் தகவல்களும் விரிவான முறையில் அளிக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ் பெற்ற பசுமையான, புறநானூற்றில் குறிப்பிடப்படும் மலையான கொல்லிமலை பற்றிய சுவையான வரலாறுகளும், வல்வில்ஓரி போன்ற மன்னர்களின் வரலாறுகளும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளவை சிறப்பு.

    கி.மு. 13/14 நூற்றாண்டுகளில் பொன்சொரி மலையின் சமணக் குகையின் மேற்புறம் திருக்குறள் வெட்டப்பட்டுள்ள சிறப்பான வரலாற்றுத் தகவலும் குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டு மக்களின் இறை வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்களும் அளித்திருப்பதும் சிறப்பு. சிற்பக் கலைக்கூடம் பற்றிய அழகான விளக்கங்களும் சுவை கூட்டுபவை.

    கூலிப்பட்டியில் அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்களின் விளக்கங்களும் தெளிவாகவே உள்ளன.

    இலக்கியத்தில் முருகன், முருகனின் அருள் பெற்றவர்கள், திருவுருவ வகைகள், தல வரலாறு, கோவிலின் தனிச்சிறப்பு, கோயில் அமைப்பு, கட்டிட அமைப்பு, வெளித்தோற்றம், கருவறை, ஒவ்வொரு கடவுளர் பற்றிய புராணக் கதைகள் போன்ற அனைத்தும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ள இச்சிறிய நூல் வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமன்றி, அருளாளர்கள், பக்தர்கள் என அனைவரும் விரும்பி வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.

    விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள 96 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ 70/-

     

    Share
  • தமிழர்தம் வாழ்வியல்!

     

    பவள சங்கரி

     

    உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு

     

    காதல், வீரம் என இரண்டும் தங்கள் இரு கண்களாக வாழ்ந்தவர்கள் சங்ககாலத் தமிழர்கள். பிற்காலத்தில் வந்த பாரதியும், ‘உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு’ என அதை உணர்ந்தே உரக்கச் சொல்லிச்சென்றான். 1967 ஆம் ஆண்டில் சென்னப்பட்டணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு  முன்பே ‘உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு’ என்று பாடித்தம்  தொலை நோக்குப் பார்வையை வெளிப்படுத்தியவன் பாரதி.

    அந்நிய தேசத்தவரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோதும் பெண்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தங்கள் இன்னுயிரையும் ஆகுதியாய் அளித்துள்ளனர். தமிழ்நாட்டுத் தாய் தம் தாய்ப்பாலுடனேயே குழந்தைக்கு வீரத்துடன் தாய்நாட்டுப் பற்றையும் சேர்த்தே ஊட்டியிருக்கிறாள் என்பதற்கான சான்றுகளும் சங்கப்பாடல்கள் மூலம் கிடைக்கின்றன. ஆக சங்ககாலத்தின் பெண்கள் வீரத்தின் விளைநிலமாகவே  இருந்திருக்கின்றனர்.

    வீர மறத்தியரின் வீரம், துணிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. ஒரு போர்க்களக் காட்சியின் மூலம் இதை விளக்கும் ஒரு புறநானூற்றுப் பாடல் இதோ :

    நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

    படைஅழிந்து, மாறினன்` என்று பலர்க

    மண்டு அமர்க்கு உடைந்தன்ன் ஆயின், உண்டஎன்

    முலை அறுத்திடுவென், யான் எனச் சினைஇ,

    கொண்ட வாளொடு படுபிணம் பெயரா,

     செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய

     படுமகன் கிடக்கை காணூஉ

     ஈன்ற ஞன்றினும் பெரிது உவந்தனளே! – புறம் – 288

    படைக்களத்தில் வெட்டுண்டு உடல் சிதைந்து, மாண்டு கிடந்த தன் அன்பு மகனின் மரணச் செய்தி அறியாமல் அந்தத்தாய் அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள், வறண்ட தோல்களின் மேல் புடைத்துக் கிடந்த நரம்புடன் கூடிய  உடலும், தாமரை மலர்போன்று வெளிரிக்கிடந்த  வயிறும் கொண்ட அந்த மூதாட்டியின் மகனான போர்மறவன் போர்க்களத்தில், புறமுதுகுக் காட்டி, புறப்புண் பட்டு இறந்துவிட்டான் என்ற செய்தியைச்  சொல்லிச் சென்ற வீரர்களிடம் ஆவேசமுற்ற அந்த மூதாட்டியின் உடல் வெம்மையுற்றது. தீப்பிழம்பாகச் சிவந்த அவள்தம் கண்கள் அவள் சினத்தின் உச்சத்தில் இருப்பதைப் புலப்படுத்தின. தாய்நாட்டைக் காக்கும் போரில், ஒருவேளை தம் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடப்பானாயின் அவனுக்குப் பால் கொடுத்து வளர்த்தத் தன் மார்பை அறுத்தெறிவேன் என்று கடுஞ்சினம் பொங்க உண்மை அறியும் நோக்கத்தில் கையில் வாளேந்தியவாறு போர்க்களம் சென்றாள்.

    அங்குச் சிதறிக்குவிந்து கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்து வெட்டுண்டு சிதைந்து கிடந்த பிணங்களில் ஒன்றாகத் தன் மகனது உடலும் இருக்கக்கண்டு அவற்றைப் புரட்டி தன் மகனின் உடலைக் கண்டெடுத்தாள். முகத்திலும், மார்பிலும் விழுப்புண் பட்டு மாண்டு கிடந்த தனது மகனது உடலைத் தன் மடியில் கிடத்தியவாறு அந்த மாவீரனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு பெருமகிழ்வெய்தி அக்களத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனள் என்று அந்த மூதாட்டியின் மறமாண்பை அழகுறப் பாடியவர் காக்கைப்பாடினியார் நற்செல்லையார் என்னும் சங்ககாலப் பெண்பாற்புலவர்.

    ’மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ போன்று இருந்த மன்னர்களும், மானம் காக்க உயிர் நீத்தப் பெருமையைப் பறைசாற்றிச் சென்றுள்ளனர். அதில் என்றென்றும் தமிழர் தம் மனதில் நிலையான இடம் பெற்றிருப்பவன் என்றால் அவன், கணைக்கால் இரும்பொறை என்ற மாவீரன்.

    பழகுதற்கினிய பண்புடையவனும், பேராண்மை மிக்கவனும், நல்லியல்புகளையும் கொண்டவன் என்ற பேறு பெற்றவன். தாமே வேலேந்திப் போர்க்களத்தில் போரிட வல்லானும்,  பெரிய படையையுடையவன், மதங்கொண்ட யானையையும் அடக்கி மக்களைக் காத்தவன்.

    சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணான் எனும் மன்னனுடன் பகை கொண்டான். கணைக்கால் இரும்பொறைக்குக் கழுமலம் என்ற இடத்தில் காவல் மிக்க கோட்டை ஒன்றிருந்தது. கணைக்கால் இரும்பொறையின் வெற்றிச் சிறப்பிற்கெல்லாம் கழுமலக் கோட்டையே காரணமாய் இருந்ததை உணர்ந்த செங்கணான், பெரும் படையோடு சென்று, அக்கோட்டையைத் தாக்கித் தம் வசப்படுத்தியதோடு கணைக்கால் இரும்பொறையையும் சிறை பிடித்துச் சென்றான்.

    பகைவனால் பற்றப்பட்டு, அவன் சிறையகத்து வாழும் இழிவான நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை வெறுத்து,  மானத்தை இழந்து, உயிர் வாழ எண்ணாது, உயிரை விட்டு, மானத்தைக் காப்பர் மாண்புடைய வீரர். போரில் தோற்றபோதும், பகைவனால் பிடிக்கப்பட்டபோதும் என் உயிர் பிரியாமல் சிறையில் வாழ்கிறேன். பகைவர் தாம் உண்ணும் உணவும், பருக நீரும் தராதிருந்தபோதும், நீரைத்தானே இரந்து வேண்டியவனிடம் அரசன் என்ற மதிப்பும்கூட இன்றி இகழ்ந்தளித்தனர் காவலர். அந்தத் தண்ணீரை உண்டு உயிர் வாழ்வதைக்காட்டிலும் உண்ணாது உயிர் துறப்பதே மேல் எனத்துணிந்தான்.

    இத்தகைய இக்கட்டானச் சூழலிலும், அவன் உள்ளத்தினின்றும் பிறந்தது ஓர் அறவுரை , தம் அனுபவத்தால் உணர்ந்ததை உலக மக்களும் அறிந்து பயன் கொள்ளுதல் வேண்டும் என எண்ணியவன்,  அதை ஒரு செய்யுளாக்கி ஏட்டில் எழுதி  தன்னருகே வைத்தவன் உடல் சோர்ந்து வீழ்ந்தான்.

    இதுவே புறநானூற்றின் 74 ஆவது பாடலாக அமைந்துள்ளது.

    குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

    ஆள் அன்று என்று வாளில் தப்பார்

    தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

    கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்

    மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்

    தாம் இரந்து உண்ணும் அளவை

    ஈன்மரோ இவ் உலகத்தானே?

    “பிறந்த குழந்தை ஏதாவது காரணத்தினால் இறந்துவிட்டாலும், அல்லது இறந்தே பிறந்தாலும் அந்தக் குழந்தையைக்கூட வாளால் காயப்படுத்திய பின்பே அதை மண்ணில் புதைப்பர். அவ்வாறிருக்க எந்தவிதக் காயமுமில்லாமல் வெறும் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கின்றேனே, நான் ஆண்மகன் ஆவேனா?” அதுமட்டுமா, “என் தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். அப்படி இந்த நீரைப் பருகவும் வேண்டுமா?” என்று எண்ணியவன் அந்த நீரையும் பருகாமல் கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான். சங்ககாலத்தில் தமிழர்கள் அரசனே ஆயினும் மானம்தான் பெரிது என்று வாழ்ந்திருந்தனர்.

    ஆம், சங்ககாலப் புலவனான இந்தச் சேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைபிடிக்கப்பட்டு, உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் தன்மான வீரனாய் உயிர் துறந்தவன். சங்ககாலச் சேரர்களின் கடைசி அரசனான இவன் காலம் கி.பி. 125 -150.

    அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்த தங்கள் வாழ்க்கையில், சங்க காலமக்கள், அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. அதாவது திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு எனவும் வகைப்படுத்தியிருந்தனர். இவை சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    சங்க காலத்தில் பெண்டிர் மனையறம் பேணுதலும், ஆடவர் வினையறம் புரிதலும் வாழ்நெறியாகவே இருந்துள்ளது. இதன் சிறப்பை குறுந்தொகை,

    “மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு

    மருவி னினியபு முளவோ” (குறுந் 322)

    என்று குறிப்பிடுகின்றது.

     

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

           நல்விருந்து வானத் தவர்க்கு. (குறள் -16)

    விருந்தோம்பல் என்பது ஆதிகாலந்தொட்டு தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்ததொரு வழமையாகவே உள்ளதற்கு வள்ளுவரின் திருக்குறளும் சான்று பகர்கின்றது. தம் இல்லம் நாடி வரும் விருந்தினரை இன் முகத்துடன் வரவேற்று இனிய மொழிகள் பேசி கனிவுடன் உபசரித்து , அனிச்ச மலராக விருந்தினரின் முகம் வாடாமல் பார்த்துக்கொள்வதே சிறப்பான விருந்தோம்பல் பண்பாகும்.

    “பல நாள் பயின்று பலரொடு செல்லினும்

    தலைநாள் போன்ற விருப்பினர்” (புறம் 101)

    என்ற புறநானூற்றுப் பாடல், ஒருவர் எத்தனை முறை விருந்திற்கு வந்தாலும் அவரை முதல் நாள் உபசரித்ததைப் போன்றே விருப்பத்துடன் உபசரிக்க வேண்டும் என்கிறது.

    அதுமட்டுமன்றி அது இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர்களை மனைவியும் கணவனும் இணைந்து மகிழ்ச்சியுடன் விருந்து படைக்கும் வழக்கத்தை நற்றிணைப்பாடல் வரிகள்,

    “அல்இல் ஆயினும் விருந்துவரின் உவக்கும்

    முல்லை சான்ற கற்பின்

    மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே” (நற் 142)

    சுட்டுகின்றன.

    கணவனுடன் சேர்ந்து வாழும் மங்கல மகளிர் மட்டுமே  விருந்தோம்பலை மேற்கொள்ளும் பழக்கமும் இருந்துள்ளது. கணவனை இழந்த பெண்களோ அல்லது கணவனைப் பிரிந்து வாழும் பெண்களோ எந்தவொரு விருந்தையும் எதிர்கொள்ளுதல் கூடாது என்ற வழக்கத்தை,

    “அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்

    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை “ (சிலம்பு கொலை 71-73)

    இப்பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது. கண்ணகி கோவலனைப் பிரிந்திருந்த  அந்த காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறிப்பிடும்போது, தன்னால் விருந்தெதிர் கொள்ள முடியாத நிலையைக் கூறி வருந்துகிறாள். விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அக்கால மகளிருக்கு இருந்துள்ளதை அறியமுடிகிறது.

     

    இன்றைய நிலை :

     

    இன்று காலமும் சூழலும் தமிழர் தம் வாழ்வை பல வகையில் புரட்டிப்போட்டிருப்பதையும் காணமுடிகின்றது. உலகமயமாக்கலின் பாதிப்பினால் அன்றாட வாழ்வியலில் மாற்றங்களும், வீரம், ஈகை, விருந்தோம்பல் என அனைத்தும் பெரும்பாலும் ஒரு வணிகமாகவே செயல்படுகிறது எனலாம். உறவுகளின் வட்டங்கள் சுருங்கிய நிலையில், வயதான பெற்றோரும்கூட பாரமாகிப்போன சூழலில் முதியோர் இல்லங்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ‘ஒருதாய் மக்கள்’, ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓரினம்’ என்ற சீரிய ஒழுக்க நெறிகளெல்லாம் ஏட்டளவிலேயே நின்றதன் பலன், சாதி, மத பேதங்கள் தலை விரித்தாடி அன்றாடம் பல அசம்பாவிதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. நாகரிகம் வளர்ந்து, அனைத்தும் நவீனமயமாக்கலாக வலம் வர ஆரம்பித்த இத்தருணத்திலும், “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பொன் வாசகத்தின் பொருளறியாதத் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய தேவை உள்ளதையும் மறுக்கவியலவில்லை. அந்த வகையில் நம் பண்டைய தமிழ் மரபும், பாரம்பரியமும், பண்பாடும் இன்றைய தலைமுறையினரிடம் பரவலாகச் சென்றடையச் செய்யவேண்டிய அத்தியாவசியத் தேவை எழுந்துள்ளது. இத்தகையச் சூழலில் அனைத்து நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, மரபு சார்ந்த தமிழர் வாழ்வியல் நெறிகளைப் பறைசாற்றும் விதமாக, கொங்கு நாட்டில், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலைக்கல்லூரியில், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து, முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த உலகத்தமிழ் மரபு மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெறுவதில் ஐயமில்லை.

    இந்த மாநாடு சிறப்பான முறையில், இளைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் மரபியல் சார்ந்த பல அரியத் தகவல்களை அறிந்து பயன்பெறும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. அதற்கான உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி

    coraled@gmail.com

    பி.கு. மார்ச் 1,2, 2018, ஆகிய தேதிகளில் ஈரோடு எஸ்எஸ்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் உலகத்தமிழ் மகாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள வாழ்த்துரை.

     

    Share
  • ”படமும் பாடலும்’’….!

    ”வரேன்வரேன் என்றுசொல்லி வாரா திருப்பர்
    தரேன்தரேன் என்றுசொல்வர், தாரார் -நரேனோ(விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர்)
    தருவார்பார் ஏழைக்கு தாராள மாக
    வருவார்பார் வேதாந்த வெற்பு’’….கிரேசி மோகன்….!

     

    Share