-மேகலா இராமமூர்த்தி

உலக வரலாற்றில் முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, ஒடுக்கப்பட்ட வர்க்கமான தொழிலாளர்களைத் தலைநிமிர வைத்ததோடு, அவர்களை ஆட்சிபீடத்திலும் அமர்த்திய பெருமைக்குரியவர் விளாடிமிர் லெனின் (Vladimir Lenin). 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் (Simbirsk) நகரில் பிறந்த லெனின், சட்டம் பயின்றவர். காரல் மார்க்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் தன்னை ஒரு மார்க்சியவாதி என்று அறிவித்துக்கொண்ட அவர், அக்கொள்கைகளை ரஷ்யத் தொழிலாளர்களிடம் பரப்புரை செய்துவந்தார். ரஷ்யாவில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொதுவுடைமையை மலரச் செய்யவேண்டும் என்று அரும்பாடுபட்டார்.

அவர் சார்ந்திருந்த ரஷ்யன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் கட்சி (Bolsheviks) என்றும், மென்ஷவிக் கட்சி (Mensheviks) என்றும் இரண்டாக உடைந்தபோது லெனின் போல்ஷ்விக் கட்சிக்குத் தலைவரானார். ஜார் (Tsar) மன்னனின் கொடுங்கோலாட்சி அப்போது ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அக்கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் கம்யூனிசத்தை நிறுவ வேண்டும் என்று தம் கட்சியினரை வலியுறுத்திய லெனின், அதைத் தெளிவுபடுத்தும் வகையில் ”இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை” என்று வீரமுழக்கமிட்டது வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட வாசகம் ஆகும்!

1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் தலைமையில் நிகழ்ந்த மாபெரும் அக்டோபர் புரட்சி (October Revolution) உலகையே ரஷ்யாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. அப்புரட்சியில் கொடுங்கோலனான ஜார் மன்னன் வீழ்ந்தான். லெனினின் தலைமையில் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்தது.

அதனையறிந்து நம் மகாகவி பாரதியும் ஆனந்தக் கூத்தாடினான்.

மாகாளி பராசக்தி உருசியநாட் 
  டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
  கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
  பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
  வையகத்தீர், புதுமை காணீர்!

இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் 
  வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே 
  அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி 
  உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே 
  நோக்கினாள்; முடிந்தான் காலன்” என்று கவியெழுதிக் கொண்டாடினான்.

ரஷ்யாவில் மட்டுமல்லாது, ஐரோப்பிலும் ஆசியாவிலும் முதலாளிகளால் சுரண்டப்பட்டும், நசுக்கப்பட்டும் உரிமையிழந்து அல்லலுறும் தொழிலாளத் தோழர்கள் அனைவரும் உரிமையும் விடுதலையும் பெறவேண்டும். எங்கும் பொதுவுடைமை மலரவேண்டும். அப்போதுதான் முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகத் தான் தொடங்கிய புரட்சி முழுமைபெறும் என்று திடமாக நம்பினார் லெனின்.

அவர் விரும்பியதுபோலவே ரஷ்யாவில் அவர் தொடங்கிவைத்த யுகப்புரட்சி ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி அவர்களை வீறுகொண்டு எழச்செய்தது. இந்தியரிடம் ஏற்பட்ட அந்த எழுச்சியும் அவர்கள் நிகழ்த்திய கிளர்ச்சியும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததை அறிந்த லெனின் அதனை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (communist Party of India – CPI) தோன்றுவதற்கு ஆதர்சமாகவும், அதற்கு ஆதரவாகவும் விளங்கி, அக்கட்சியை அதன் தொடக்க காலத்தில் ஆசானாக இருந்து வழிநடத்தியவர் தோழர் லெனின் ஆவார்.

பாரத மாதாவின் தவப்புதல்வர்களுக்கு, இன்றைக்கு வேண்டுமானால், கம்யூனிசக் கோட்பாடுகளோடு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்திய விடுதலைக்கான எழுச்சியை ஊட்டியதில் லெனினின் அக்டோபர் புரட்சிக்கு முக்கியப் பங்குண்டு என்பதை எவருமே மறுக்கமுடியாது.

தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, பாழ்பட்டுநின்ற பாரதத் தாயின் அடிமைத்தளையை அறுத்தெறியத் தூண்டுகோலாய்த் திகழ்ந்த மாபெரும் தலைவரான தோழர் லெனினின் சிலையை அப்புறப்படுத்திவிட்டு… ‘பாரத் மாதா கி ஜே!’ என்று வெறிகொண்டு கூச்சலிடுவது இந்திய விடுதலை வரலாறு அறியாதோரின் குற்றமேயன்றி வேறில்லை.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சித்தலைவ! தாங்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாது செய்துகொண்டிருக்கும் இந்த (அப்)பாவிகளை மன்னியும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.