தமிழர்தம் வாழ்வியல்!
பவள சங்கரி
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
காதல், வீரம் என இரண்டும் தங்கள் இரு கண்களாக வாழ்ந்தவர்கள் சங்ககாலத் தமிழர்கள். பிற்காலத்தில் வந்த பாரதியும், ‘உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு’ என அதை உணர்ந்தே உரக்கச் சொல்லிச்சென்றான். 1967 ஆம் ஆண்டில் சென்னப்பட்டணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ‘உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு’ என்று பாடித்தம் தொலை நோக்குப் பார்வையை வெளிப்படுத்தியவன் பாரதி.
அந்நிய தேசத்தவரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோதும் பெண்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தங்கள் இன்னுயிரையும் ஆகுதியாய் அளித்துள்ளனர். தமிழ்நாட்டுத் தாய் தம் தாய்ப்பாலுடனேயே குழந்தைக்கு வீரத்துடன் தாய்நாட்டுப் பற்றையும் சேர்த்தே ஊட்டியிருக்கிறாள் என்பதற்கான சான்றுகளும் சங்கப்பாடல்கள் மூலம் கிடைக்கின்றன. ஆக சங்ககாலத்தின் பெண்கள் வீரத்தின் விளைநிலமாகவே இருந்திருக்கின்றனர்.
வீர மறத்தியரின் வீரம், துணிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. ஒரு போர்க்களக் காட்சியின் மூலம் இதை விளக்கும் ஒரு புறநானூற்றுப் பாடல் இதோ :
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து, மாறினன்` என்று பலர்க
மண்டு அமர்க்கு உடைந்தன்ன் ஆயின், உண்டஎன்
முலை அறுத்திடுவென், யான் எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படுபிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞன்றினும் பெரிது உவந்தனளே! – புறம் – 288
படைக்களத்தில் வெட்டுண்டு உடல் சிதைந்து, மாண்டு கிடந்த தன் அன்பு மகனின் மரணச் செய்தி அறியாமல் அந்தத்தாய் அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள், வறண்ட தோல்களின் மேல் புடைத்துக் கிடந்த நரம்புடன் கூடிய உடலும், தாமரை மலர்போன்று வெளிரிக்கிடந்த வயிறும் கொண்ட அந்த மூதாட்டியின் மகனான போர்மறவன் போர்க்களத்தில், புறமுதுகுக் காட்டி, புறப்புண் பட்டு இறந்துவிட்டான் என்ற செய்தியைச் சொல்லிச் சென்ற வீரர்களிடம் ஆவேசமுற்ற அந்த மூதாட்டியின் உடல் வெம்மையுற்றது. தீப்பிழம்பாகச் சிவந்த அவள்தம் கண்கள் அவள் சினத்தின் உச்சத்தில் இருப்பதைப் புலப்படுத்தின. தாய்நாட்டைக் காக்கும் போரில், ஒருவேளை தம் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடப்பானாயின் அவனுக்குப் பால் கொடுத்து வளர்த்தத் தன் மார்பை அறுத்தெறிவேன் என்று கடுஞ்சினம் பொங்க உண்மை அறியும் நோக்கத்தில் கையில் வாளேந்தியவாறு போர்க்களம் சென்றாள்.
அங்குச் சிதறிக்குவிந்து கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்து வெட்டுண்டு சிதைந்து கிடந்த பிணங்களில் ஒன்றாகத் தன் மகனது உடலும் இருக்கக்கண்டு அவற்றைப் புரட்டி தன் மகனின் உடலைக் கண்டெடுத்தாள். முகத்திலும், மார்பிலும் விழுப்புண் பட்டு மாண்டு கிடந்த தனது மகனது உடலைத் தன் மடியில் கிடத்தியவாறு அந்த மாவீரனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு பெருமகிழ்வெய்தி அக்களத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனள் என்று அந்த மூதாட்டியின் மறமாண்பை அழகுறப் பாடியவர் காக்கைப்பாடினியார் நற்செல்லையார் என்னும் சங்ககாலப் பெண்பாற்புலவர்.
’மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ போன்று இருந்த மன்னர்களும், மானம் காக்க உயிர் நீத்தப் பெருமையைப் பறைசாற்றிச் சென்றுள்ளனர். அதில் என்றென்றும் தமிழர் தம் மனதில் நிலையான இடம் பெற்றிருப்பவன் என்றால் அவன், கணைக்கால் இரும்பொறை என்ற மாவீரன்.
பழகுதற்கினிய பண்புடையவனும், பேராண்மை மிக்கவனும், நல்லியல்புகளையும் கொண்டவன் என்ற பேறு பெற்றவன். தாமே வேலேந்திப் போர்க்களத்தில் போரிட வல்லானும், பெரிய படையையுடையவன், மதங்கொண்ட யானையையும் அடக்கி மக்களைக் காத்தவன்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணான் எனும் மன்னனுடன் பகை கொண்டான். கணைக்கால் இரும்பொறைக்குக் கழுமலம் என்ற இடத்தில் காவல் மிக்க கோட்டை ஒன்றிருந்தது. கணைக்கால் இரும்பொறையின் வெற்றிச் சிறப்பிற்கெல்லாம் கழுமலக் கோட்டையே காரணமாய் இருந்ததை உணர்ந்த செங்கணான், பெரும் படையோடு சென்று, அக்கோட்டையைத் தாக்கித் தம் வசப்படுத்தியதோடு கணைக்கால் இரும்பொறையையும் சிறை பிடித்துச் சென்றான்.
பகைவனால் பற்றப்பட்டு, அவன் சிறையகத்து வாழும் இழிவான நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை வெறுத்து, மானத்தை இழந்து, உயிர் வாழ எண்ணாது, உயிரை விட்டு, மானத்தைக் காப்பர் மாண்புடைய வீரர். போரில் தோற்றபோதும், பகைவனால் பிடிக்கப்பட்டபோதும் என் உயிர் பிரியாமல் சிறையில் வாழ்கிறேன். பகைவர் தாம் உண்ணும் உணவும், பருக நீரும் தராதிருந்தபோதும், நீரைத்தானே இரந்து வேண்டியவனிடம் அரசன் என்ற மதிப்பும்கூட இன்றி இகழ்ந்தளித்தனர் காவலர். அந்தத் தண்ணீரை உண்டு உயிர் வாழ்வதைக்காட்டிலும் உண்ணாது உயிர் துறப்பதே மேல் எனத்துணிந்தான்.
இத்தகைய இக்கட்டானச் சூழலிலும், அவன் உள்ளத்தினின்றும் பிறந்தது ஓர் அறவுரை , தம் அனுபவத்தால் உணர்ந்ததை உலக மக்களும் அறிந்து பயன் கொள்ளுதல் வேண்டும் என எண்ணியவன், அதை ஒரு செய்யுளாக்கி ஏட்டில் எழுதி தன்னருகே வைத்தவன் உடல் சோர்ந்து வீழ்ந்தான்.
இதுவே புறநானூற்றின் 74 ஆவது பாடலாக அமைந்துள்ளது.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?
“பிறந்த குழந்தை ஏதாவது காரணத்தினால் இறந்துவிட்டாலும், அல்லது இறந்தே பிறந்தாலும் அந்தக் குழந்தையைக்கூட வாளால் காயப்படுத்திய பின்பே அதை மண்ணில் புதைப்பர். அவ்வாறிருக்க எந்தவிதக் காயமுமில்லாமல் வெறும் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கின்றேனே, நான் ஆண்மகன் ஆவேனா?” அதுமட்டுமா, “என் தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். அப்படி இந்த நீரைப் பருகவும் வேண்டுமா?” என்று எண்ணியவன் அந்த நீரையும் பருகாமல் கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான். சங்ககாலத்தில் தமிழர்கள் அரசனே ஆயினும் மானம்தான் பெரிது என்று வாழ்ந்திருந்தனர்.
ஆம், சங்ககாலப் புலவனான இந்தச் சேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைபிடிக்கப்பட்டு, உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் தன்மான வீரனாய் உயிர் துறந்தவன். சங்ககாலச் சேரர்களின் கடைசி அரசனான இவன் காலம் கி.பி. 125 -150.
அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்த தங்கள் வாழ்க்கையில், சங்க காலமக்கள், அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. அதாவது திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு எனவும் வகைப்படுத்தியிருந்தனர். இவை சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
சங்க காலத்தில் பெண்டிர் மனையறம் பேணுதலும், ஆடவர் வினையறம் புரிதலும் வாழ்நெறியாகவே இருந்துள்ளது. இதன் சிறப்பை குறுந்தொகை,
“மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு
மருவி னினியபு முளவோ” (குறுந் 322)
என்று குறிப்பிடுகின்றது.
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (குறள் -16)
விருந்தோம்பல் என்பது ஆதிகாலந்தொட்டு தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்ததொரு வழமையாகவே உள்ளதற்கு வள்ளுவரின் திருக்குறளும் சான்று பகர்கின்றது. தம் இல்லம் நாடி வரும் விருந்தினரை இன் முகத்துடன் வரவேற்று இனிய மொழிகள் பேசி கனிவுடன் உபசரித்து , அனிச்ச மலராக விருந்தினரின் முகம் வாடாமல் பார்த்துக்கொள்வதே சிறப்பான விருந்தோம்பல் பண்பாகும்.
“பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினர்” (புறம் 101)
என்ற புறநானூற்றுப் பாடல், ஒருவர் எத்தனை முறை விருந்திற்கு வந்தாலும் அவரை முதல் நாள் உபசரித்ததைப் போன்றே விருப்பத்துடன் உபசரிக்க வேண்டும் என்கிறது.
அதுமட்டுமன்றி அது இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர்களை மனைவியும் கணவனும் இணைந்து மகிழ்ச்சியுடன் விருந்து படைக்கும் வழக்கத்தை நற்றிணைப்பாடல் வரிகள்,
“அல்இல் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே” (நற் 142)
சுட்டுகின்றன.
கணவனுடன் சேர்ந்து வாழும் மங்கல மகளிர் மட்டுமே விருந்தோம்பலை மேற்கொள்ளும் பழக்கமும் இருந்துள்ளது. கணவனை இழந்த பெண்களோ அல்லது கணவனைப் பிரிந்து வாழும் பெண்களோ எந்தவொரு விருந்தையும் எதிர்கொள்ளுதல் கூடாது என்ற வழக்கத்தை,
“அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை “ (சிலம்பு கொலை 71-73)
இப்பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது. கண்ணகி கோவலனைப் பிரிந்திருந்த அந்த காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறிப்பிடும்போது, தன்னால் விருந்தெதிர் கொள்ள முடியாத நிலையைக் கூறி வருந்துகிறாள். விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அக்கால மகளிருக்கு இருந்துள்ளதை அறியமுடிகிறது.
இன்றைய நிலை :
இன்று காலமும் சூழலும் தமிழர் தம் வாழ்வை பல வகையில் புரட்டிப்போட்டிருப்பதையும் காணமுடிகின்றது. உலகமயமாக்கலின் பாதிப்பினால் அன்றாட வாழ்வியலில் மாற்றங்களும், வீரம், ஈகை, விருந்தோம்பல் என அனைத்தும் பெரும்பாலும் ஒரு வணிகமாகவே செயல்படுகிறது எனலாம். உறவுகளின் வட்டங்கள் சுருங்கிய நிலையில், வயதான பெற்றோரும்கூட பாரமாகிப்போன சூழலில் முதியோர் இல்லங்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ‘ஒருதாய் மக்கள்’, ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓரினம்’ என்ற சீரிய ஒழுக்க நெறிகளெல்லாம் ஏட்டளவிலேயே நின்றதன் பலன், சாதி, மத பேதங்கள் தலை விரித்தாடி அன்றாடம் பல அசம்பாவிதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. நாகரிகம் வளர்ந்து, அனைத்தும் நவீனமயமாக்கலாக வலம் வர ஆரம்பித்த இத்தருணத்திலும், “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பொன் வாசகத்தின் பொருளறியாதத் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய தேவை உள்ளதையும் மறுக்கவியலவில்லை. அந்த வகையில் நம் பண்டைய தமிழ் மரபும், பாரம்பரியமும், பண்பாடும் இன்றைய தலைமுறையினரிடம் பரவலாகச் சென்றடையச் செய்யவேண்டிய அத்தியாவசியத் தேவை எழுந்துள்ளது. இத்தகையச் சூழலில் அனைத்து நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, மரபு சார்ந்த தமிழர் வாழ்வியல் நெறிகளைப் பறைசாற்றும் விதமாக, கொங்கு நாட்டில், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலைக்கல்லூரியில், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து, முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த உலகத்தமிழ் மரபு மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெறுவதில் ஐயமில்லை.
இந்த மாநாடு சிறப்பான முறையில், இளைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் மரபியல் சார்ந்த பல அரியத் தகவல்களை அறிந்து பயன்பெறும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. அதற்கான உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
coraled@gmail.com
பி.கு. மார்ச் 1,2, 2018, ஆகிய தேதிகளில் ஈரோடு எஸ்எஸ்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் உலகத்தமிழ் மகாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள வாழ்த்துரை.
கட்டுரை மிகச்சிறப்பாக இருக்கிறது. ஆனால் சில வரலாற்றுத்தகவல்கள் திருத்தப்பட வேண்டியன ஆகும். புறம் 74ஆம் பாடல் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடியதாகும். இவன் சங்ககாலச் சேரர்களின் இறுதி மன்னன் அல்ல. இவன் பொறையர் குலச்சேரர்களின் இறுதி மன்னன் ஆவான். பொறையர்களுக்குப்பின் கோதைகள் ஆண்டனர். சங்ககால இறுதிச்சோழ மன்னன் குட்டுவன் கோதை ஆவான். இவனை முத்தொள்ளாயிரம் பாடியுள்ளது. இவன் வெளியிட்ட நாணயம் கிடைத்துள்ளது. தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் கிருசுணமூர்த்தி, நடனகாசிநாதன் ஆகியவர்களின் கணிப்புப்படி, அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும். இவனுக்கு இரு தலைமுறைகள் முன் ஆண்ட கணைக்கால் இரும்பொறையின் ஆட்சிக்காலம் கி.மு. 163-150 ஆகும். இவனைச் சிறையில் அடைத்தவன் சோழன் செங்கணான் அல்ல. புறநானூற்றுப்பாடலின் பின் குறிப்பு தவறாகும் .அவன் சங்ககால அரசன் அல்ல. அவன் பிற்கால அரசன் ஆவான். சேரமான் கணைக்கால் இரும்பொறையைத் தோற்கடித்துச் சிறையில் அடைத்தது சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆவான். சங்ககாலம் என்பது கி.மு. 50 உடன் முடிவடைந்து விடுகிறது. அதன்பின் கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை சங்கம் மருவிய காலம் வருகிறது. அதன்பின் வருவதுதான் கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான களப்பிரர் காலமாகும். சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனத் தவறாகக் கணிக்கப்பட்டு வருகிறது. சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும். சம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும். அதை வெட்டியவன் அதியமான் ஆவான். அவனை வரலாற்றுப் பெரும்புலவர் பரணர் பாடியுள்ளார். பரணர் சேரன் செங்குட்டுவனை பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். ஆகவே சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் ஆகியவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும்.
நூல் சான்று: ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’ கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்:
611-613, 317-329