“இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை
உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
அன்னை அவளுக்காய் வெண்ணை கடைகின்றான்:
தொன்னையவள் ஆதாரம் தாமு(தாமோதரர்)’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
என் இனிய பாரதியே !
என் இனிய பாரதியே !
தமிழ்த் தாயின் தங்கப் புதல்வனே !
தமிழ்த் தரணி போற்றும் பாவலனே !
தமிழர்தம் மனமுறைந்த தமிழ்க் காவலனே !
நிந்தன்
பிறப்பால் எம் தாயகம் செழித்து
பிறழ்ந்தோடிய வருடங்கள் நூற்றோடு சில
பிழையில்லா வகையில் எம்மினம் வாழ
பிறந்தாயோ எந்தன் தமிழ்ப் புரவலனே !
தமிழ்த்தாயின் மடி தவழ்ந்து
தன் வாழ்வை தமிழுக்கீந்து
தியாகத்தின் மறு உருவமாய் வாழ்ந்த உந்தன்
திருப்பெருமை உணராத மந்தைக் கூட்டமய்யா நாம் !
தும்பிக்கை கொண்டெழுந்த ஒரு மதயானை
நம்பிக்கை இழந்ததினால் உனைத் தாக்கி
சிந்திக்க வகையில்லா வகையில் உந்தன்
தன்னிகரற்ற வாழ்வை முடித்ததை என்னவென்போம் ?
தமிழே உந்தன் உயிரென்றாய் . . .
ஆயினும் பலமொழி கற்றறிந்தாய்
எம்மொழியாயினும் அம்மொழிச் சிறப்புகளை
எம்மொழியில் புகுத்திட ஆவல் கொண்டாய்
தமிழ் எனும் பாறையெடுத்து உந்தன்
அறிவென்னும் உளி கொண்டு எத்தனை
அழகிய சிற்பங்களை கவிதைகளாய் நீ
ஆக்கி எமக்களித்தாய் எந்தன் அற்புதக் கலைஞனே !
அடிமைகள் அல்ல நாம் . . .
அன்னைத் தமிழின் அழகிய குழந்தைகள்
அன்னியர் எமக்கெப்படி விலங்கு பூட்டுவர் ?
அடலேறு போல ஆர்ப்பரித்தெழுந்தவனய்யா நீ !
அயல் தேசத்திலே . . .
அந்நிய மண்ணிலே
கரும்புத் தோட்டமதில் எம்மினத்தவர்
கசக்கிப் பிழியப்படுவதைக் கண்டு
கண்ணீர் வடித்துக் கலங்கியவனே !
கண்ணிருக்கும் குருடராய் இம்மண்ணில்
பெண்னிருக்கும் நிலை சொல்லி எமை
கண்திறக்கப் பண்ணும் வகையில் பல
பண்ணிசைத்த புரட்சிக் கவிஞனே !
பிறப்பால் அல்ல – உயர்
குணத்தால் உயர்ந்தவரே உண்மையில்
உயர் குலத்தோர் எனும் உண்மையை
உரக்கச் சொல்லி புதுக் கருத்தை விதைத்தனை !
தமிழ்த்தாயின் தலைமைந்தனே !
உந்தன் பிறந்தநாளி;ல் உனை வணங்கி
உயிர் பிரியும் நாள் வரை என் விரல்வழி
உருகி ஓடட்டும் தமிழ்வரிகள் என வேண்டுகிறேன் !
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்
-
படக்கவிதைப் போட்டி 138-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பார்கவ் கேசவனின் இருளும் ஒளியும் உறவாடும் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
நிழலோவியமாய்ப் பெண்; அவளருகே அழலுருவாய் ஓர் ஒளிவட்டம். இருளும் ஒளியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லாமல் சொல்கிறதோ இந்த நிழற்படம்?
ஒளிகண்டு உவக்கும் மனித மனம் இருள்கண்டு மருள்கின்றது.
படிமம், குறியீடு போன்ற பொருண்மைகளைக் கொண்டு உட்பொருளை நுட்பமாய் விளக்கும் புதுக்கவிதை போல், காண்போரின் உளப்பாங்குக்கேற்ப உருக்காட்டும் இந்த ஒளிஓவியம்குறித்து நம் கவிவலவர்கள் என்ன சிந்தித்திருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்.
*****
”சிவந்த கடல்போல் எரியும் என் மனத்துக்கு ஒற்றடம் கொடுக்கும் நிலவுப் பறவையே! உன் மோன கானத்தை இன்னும் பாடு! விடிந்ததும் உன்னைக் கடந்துபோகிறேன்” எனும் இளம்பெண்ணின் எண்ணக்குமுறலை வண்ணமுறப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. சந்திரா மனோகரன்.
நிலாப் பேச்சு
தொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த வெண்பறவைக்கு
துயரம் என்பதே இல்லையா ?
அதன் விழிகளுக்கு யாரைப் பிடிக்கிறதோ தெரியவில்லை
ஓர் இளம்பெண்ணின் பறவை ஓலம்
அந்த செவிட்டு நிலவுக்கு எட்டாது !
அதன் கதகதப்பிலும் அப்பிக்கிடக்கும் இருளிலும்
அவள் நினைவுகள் நீர்த்துப்போனவை
இன்னும் பாடு ….இன்னும் பாடு !
உன் சப்தமற்ற இசையில் விடிந்ததும் கடந்துபோவேன்
நிலவு பாவம் …துணையற்ற ஏகி !
ஒருவேளை உன் பிம்பத்தின் சாயலில் நானும் …?
கடலிலும் , கரையிலும் , மணலிலும்
சிப்பிபோல் கிடக்கும் உன்னை சேமிப்பேன் அப்போது
சலசலக்கும் நீர்வெளியில் நீ சரசமாடுகிறாயே
ஆயுசுக்கு அது போதும் எனக்கு !
என் மௌனத்தை உடைப்பதும் , கட்டுவதும் …
உன் பாங்கு ஒப்புமையற்றது !
சிவந்த கடல்போல் சிலபோது என்மனம் எரிகிறது
உன் ஒற்றடம் பெரிது அதை அணைப்பதற்கு
உயிரற்ற அவன் நிழல்களை இனி நீ நனைக்காதே !
கடந்துபோன நதியின் மிச்சம் இல்லை
கடலின் கருமையில் கரைய மறுக்கும் என் நினைவுகளில்
இறந்தவனின் மோனம் நொறுங்கிய சிற்பமாய் ..
கற்பாறையாய் இறுகிப்போன என் மனசில்
சிதறும் உன் ஒளிக்கதிர்களில் மிளிரும் என் எதிர்காலம் ..*****
”அலர் நீ! மலர் நீ! என்று கொண்டாடிய காதற் கணவர் ஈசனின் திருவடி மலர் ஏகிவிட, அவர் எப்போது வருவார் தன் கலிதீர” எனக் காத்திருக்கும் மங்கை இசைக்கும் சோக கீதத்தைக் கேட்கிறோம் திருமிகு. ஹேமா வினோத்குமார் கவிதையில்.
நீ!! நான்!! தனிமை!!
பலயுகங்களாய்த் தனிமையில் நீ
நாட்களில் நான்!!
தனிமையில் வெறுப்பு
இவைகள் தமக்கில்லையோ??
மும்மாதங்களுக்கு முற்பொழுதில்
பச்சை நிறப் பட்டுடுத்தி
மஞ்சள் முகம் பூசி
மணங்கமழ மல்லிகைசூடி
நெற்றித் திலகமிட்டு
காதிற்கினிய வளையோசையுடன்
பெற்றோர் மற்றோர் உடனிருக்க
காதலித்து கரம்பற்றினேன் என் கள்வனை!!
மும்மாதந்தள்ளி மகிழம்பூவாய்
ஈரலர்கள் என்னுள் பூத்திருக்க
பகிர்வதற்குள் விண்ணுலகமாள
சென்றாரோ என் கணவர்!!!
அலர் நீ!!அகலம் நீ!!!என்றவர்
இப்பொழுது ஈசனிடம்!!!
பெற்றெடுத்த தாயிருக்க
கரம்பற்றிய நானிருக்க
அவசர பணியாற்ற
விண்ணுலகம் சென்றாரோ??
வெகுண்ட மனதோடு
மீண்டும் வருவார் என்றெண்ணி
நம்பிக்கையில்!!
உன்னைப்போல் நானும்!!!
தனிமையில்!!!*****
நிலவின் கறையைத் தனக்குத் தந்து, கரைசேர்க்க மறந்துசென்ற கண்ணாளனை நினைந்துவாடும் பெண்ணைப் பார்க்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் பாவில்.
வருவானா…
நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே…!*****
”வானுக்கு வெளிச்சம் தரும் வெண்ணிலவைப் போல் உன் வாழ்வுக்கு வெளிச்சம் தர பெண்ணிலாக்கள் உண்டு; ஆடவ ஆதவர்களும் உண்டு! ஆதலால், அறியாமை இருள்விரட்டி அறிவொளி கூட்டப் புறப்படு!” என்று இருட்டில் நிற்கும் பெண்ணைத் தெருட்டுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
வெளிச்சம் தந்த இருள்:
உலகிற்கெல்லாம் வெளிச்சம் தரச் செங்கதிரோன் வந்து விட்டான் பெண்ணே!
இருட்டிலே இன்னும் ஏன் நிற்கின்றாய் பெண்ணே!
பாரதி பெண் விடுதலைக்கு, குரல் கொடுத்ததற்கும் பின்னே!
உனக்கு மட்டும் ஏன் விடியவில்லை பெண்ணே!
குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுத்தாய் பெண்ணே!
இருந்தாலும் உன் புகழை மறைத்தார் இருளின் பின்னே!
கருவறை இருட்டில், உயிர்களைச் சுமந்தாய் பெண்ணே!
கைம்மாறாய் கிடைத்தது இருளடைந்த வாழ்வு தானே பெண்ணே!
ஆண்களை வெளிச்சம் போட்டுக் காட்ட!
நீ இருட்டாய் இதுவரை இருந்தது போதும் பெண்ணே!
கல்விச் சூரியன் ஒளி படாமல் மறைத்தனர் ஆண்கள்!
ஞானஒளி உனக்கு கிடைத்து விடும் என அஞ்சித் தானே பெண்ணே!
ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் வெளிச்சம், குடும்பத்தின் வெளிச்சம்!
இந்த உண்மையை ஆண்கள் மறந்தது ஏனோ பெண்ணே!
நீ இருட்டில் இருப்பதற்கு, ஆண்கள் மட்டுமா காரணம் பெண்ணே!
பெண்களின் பங்களிப்பும் உண்டு இதில்! அறிவாயா பெண்ணே!
ஒற்றுமை பெண்களுக்குள் குறைவு! வருத்தமான உண்மை இது பெண்ணே!
இனி, உங்களுக்கு இதமான வெளிச்சம் தர, பெண் நிலாக்கள் அருகிருப்பார் இளம் பெண்ணே !
உங்கள் உயர்வு உலகெங்கும் நிறைந்திருக்க இளைய ஆண் கதிரவன்கள்
உன்னோடு இணைந்திருப்பார் அருமைப் பெண்ணே!*****
”கட்டியவன் தேசநலன்காக்கும் போரில் துஞ்சியபோதும் அஞ்சாது மகனை அனுப்பினேன் தேசங்காக்க! அவனைக்கண்டு, அன்னையவள் உனைக்காணக் காத்திருக்கிறாள்; வழி பார்த்திருக்கிறாள் என்று தூது சொல்லாயோ பகலவனே” என்று ஆதவனுக்கு தூதுவிடும் அன்னையைக் காட்டுகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன் தன் பாட்டில்.
அல்லும் பகலும் அலைந்து திரிந்து- இளைப்பாற
அன்னை மடி தேடி ஓடும் பகலவா..எல்லைக் கோட்டில் அல்லும் பகலும் பாடுபடும்
என் மகன் எப்போது வருவான்
என் மடி சாய்ந்து ஓய்வெடுக்க…??!!கட்டிய கணவனை கயவன் சுட்டானைன்ற சேதி கேட்ட நொடியே
கட்டிளங்காளையை தட்டி அனுப்பினேன் – தேசங்காக்கஅவனி முழுதும் வலம் வரும் நீ
அவனைக் கண்டு தூது சொல்வாயா…??
அன்னையவள் உனக்காக காத்திருக்கிறாள் என்று..தூது சொல்வாயா..
உயிரைக் கையில் பிடித்து
உறங்காமல் காத்திருக்கிறாள்
உனை ஈன்றவள் என்று..காத்திருக்கிறேன் இனி உனக்காக
“பத்திரமாய் திரும்புவான் உன் மகன்” எனும்
பதில் கொண்டு வரும் வரையில்..
பகலவா…*****
அருந்தமிழ்க் கவிகளுக்குக் கவிவிருந்து படைக்கத் துணையாவாள்; அழுங்குழந்தைக்கு அமுதூட்ட வருவாள்! சங்கரனின் தலையில் திங்களாய்த் தவழ்வாள்; மங்கையர்க்கென்றும் மங்கலம் தருவாள்” என்று வானில் உலவும் நிலவை அழகுச்சொல்லெடுத்துப் போற்றுகின்றார் பெருவை. திரு. பார்த்தசாரதி.
கதிரவன் காதலி..!
செங் கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..
……….திங்களவள் மறைந்திருந்து அவன் தவிப்பைப் பார்ப்பாள்.!
பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..
……….தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!
மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..
……….மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..
சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..
……….சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!
எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..
……….என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!
பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருத்திதான்..
……….பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!
இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..
……….இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!
குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..
……….கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!
சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..
……….சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!
செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..
……….சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!
பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..
……….சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!
மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..
……….மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!*****
கணவனின் அன்பின்றி வாழு(டும்) தன்னிலையை வெண்ணிலவிடம் உரைத்து ஆறுதல்தேடும் பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு(மிகு?). சபி கௌன்.
நீயும் நானும்…
தொட்டுத் தொடரும் பந்தம் எனத் தோன்றும்
தொலைவில் இருந்து உனைப் பார்ப்பவர்களுக்குநெருங்கிச் சென்றால் தான் தெரியும்
நெருப்புப் பந்தும் நீரும் கலக்கவில்லை என்று..மணமுடித்து மாதங்கள் பல உருண்டோடியும்
மகிழம் பூக்கள் மலரவில்லை எனக் குற்றச்சாட்டுஉனைப்போல் நெருங்கிச் சென்றாலும்
உன் கடல் போல் விலகியே செல்கிறான் என்னவன்பழி சொல்லும் பந்தங்கள் அறிய வாய்ப்பில்லை
பக்குவமாய் நிதர்சனம் மறைத்து மனதில் அழுவதால்உன்னைப் பார்த்து தேற்றிக் கொள்கிறேன்
உயிர் வாழ வழி பார்த்துக் கொள்கிறேன்நான் படும் துயர் போல்
நாட்கணக்கின்றி நீயும் பட்டால் கூட
நானிலம் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கிறாய்….*****
கடந்துபோன பௌர்ணமி நாட்களைக் கனத்த மனத்தோடு அசைபோட்டுப் பார்க்கும் ஆரணங்கைத் தன் கவிதையின் நாயகியாக்கியிருக்கிறார் திருமிகு. சொல்லின் செல்வி.
ரேகை தொலைத்த தேவதை
அமாவாசையில் ஏதுமற்ற
வானம் போல நானிருந்தேன்
வளர்பிறையின் நிலவாய்
என் வசம் நீ வந்தாய்
முழுமதியின் நாளின்போது
பெளர்ணமிக் காதலாய்
நாம் மணம் புரிந்தோம்.
ஆனாலும்
தேய்பிறை நிலவாய்
நம் பிரிவில் நான் இழந்தேன்
மீண்டும்…
அமாவாசையின் ஏதுமற்ற
வானம் போல நானிருக்கிறேன்.இதோ.. இப்போது
இந்நிலவைக் காணும் போது
நம் நினைவலைகளில்
என் எண்ண அதிர்வுகளில்
கண்ணீர் வடிக்கிறேன்.
கண்ணீர் வடிந்த கன்னங்கள்
மென்மையைத் தொலைத்துவிட்டன.
விரல்களில் ரணமேறியதால்
ரோஜா இதழ்களே
என் விழிநீரை ஏந்தி
பதியம் போடுகின்றன.
ஆம்…
என் கண்ணீரைத்
துடைத்துத் துடைத்தே
என் கைவிரல் ரேகைகள்
தொலைத்துவிட்டேன்.துளை சரியில்லாத குழல்
இசை மறுப்பதைப் போல..
தூரிகை சரியில்லாத ஒவியம்
அழகை இழப்பதைப் போல..
சாயம் சரியில்லாத சேலை
நிறம் போவதைப் போல..!
சாலை சரியில்லாத பாதை
தடம் மாறுவதைப் போல..!
உளி சரியில்லாத சிலை
வடிவம் இழந்ததைப் போல…
என் வாழ்க்கை அதன்
வசந்தத்தை இழந்துவிட்டது,ஆகவே..
அன்று வந்த துணைவா..
எந்தன் இருதயத்திலிருந்து
உனை வெளியேற்றி
உனை நுழைக்காத முடியாத
கடும் மனநிலையாய்
இருதயத் தமனிகளால்
கடும் பூட்டு போட்டுவிட்டேன்
என்றாலும்
நம் பெளர்ணமி நாட்களை
என்னால் மறக்க இயலாது!
என்றும் மறைக்க இயலாது.!*****
”பாவையின் பார்வைபட்டு வெண்ணிலவு செந்நிலவானதோ?” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.
வெண்ணிலவே செம்மையானதோ பாவை முகம் கண்டு,
முகத்தின் அழகு அகத்தில் சிலசமயம் தெரிவதுண்டு
தனிமையில் இனிமை காண முடியாத நிலமையுண்டு
உன் ஏக்கத்திற்கு, என்றைக்கும் உன்னிடமே தீர்வுண்டு*****
வானில் தெரியும் ஒளிவட்டத்தை மதியாகவும் கதிராகவும் வைத்து, இருளில்நிற்கும் பாவைக்குப் பொருள்பொதிந்த மொழிகளை ஆறுதலாகவும் அறிவுரையாகவும் அள்ளித்தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் சிறப்பைப் பெறும் கவிதை அடுத்து…
விடியல் கற்கண்டு
விடியலுக்காகக் காத்திருந்தது போதும்
பெண்ணே! ..
பெண்ணியம் பேசும்
பெண்ணியம் என்பது
ஆண்களுக்கு எதிரான
காழ்ப்புணர்ச்சி அல்ல.!
பெண்களுக்கான விழிப்புணர்ச்சி!
பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டிய
சுயமரியாதை எழுச்சி!சமதர்மச் சமுதாயத்தை,
சுயமரியாதையைப்
போற்றுகிற ஒரு குரல்!..
அடக்கு முறைக்கு எதிராக
ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக
ஒலிக்கும் போராட்டக் குரல்!..
தனிமனிதப் பழக்கவழக்கத்தின்
வெளிப்பாடுகளுக்கும்
அது சார்ந்த உரிமைப்
பிரச்சனைகளுக்குமான
சுதந்திரத் தேடலுக்கான
ஒரு தார்மீக குரல்..!கடவுள் நம்பிக்கையற்ற
ஓர் ஆணைப் பகுத்தறிவாளராக
அறிவு ஜீவியாக
ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம்
எதையும்
பகுத்து அறியும் ஒரு பெண்ணை
பெண் நாத்திகவாதியாக
செயல்பட அனுமதிக்காத
போலி ஆத்திகத்தை எதிர்க்கும் ஒரு குரல்..இயற்கையிலேயே பெண்
பலவீனமானவள் என்பது
முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டி
ஓங்கி ஒலிக்கும் ஒரு கம்பீரக் குரல்அதிகாரத்தை துஷ்பிரயோகத்தை
எதிர்ப்பதற்கான ஒரு குரல்..!பொதுப்பண்புகளை
கண்மூடித்தனமாக
ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம்
நிலவுவது போல்
அதை மறுக்கும் சுதந்திரமும்
பொருட்படுத்த வேண்டி ஒரு குரல் !கற்பனாவாதக் கட்டுப்பாடுகள்
அவற்றை மீறுவதில் நிலவும்
சுவாரசியத்தை ஒழுக்க
மீறலுக்கான வெற்றியாகவும்
புரட்சிகரச் சிந்தனையாகவும்
தவறாக புரிந்துக்கொள்வோரை
கண்டித்து மன்றாடும் ஒரு குரல்..!பெண்ணின் சிந்தனை
ஆண்களுக்கு விடுதலை அளிக்கவும்
வல்லமைமிக்கது என்பதை
உணர்த்த எழுந்த குரல்…!மனித மதிப்பிற்கான
சமூக அளவுகோல்
மாறும் வரை…
ஓயாத கடலைப் போல
காத்திரமான புயலைப் போல
சுதந்திரமான பறவையாய்
விடியலைக் கேட்கும் கிழக்காய்த்
தொடர்ந்து தொடர்ந்து
ஒலிக்க வேண்டிய குரல்..!பெண்ணே.. !
உன் உரிமை
நிழலாய்க் கசப்பது அல்ல!
நிஜமாய் இனிக்கும்
விடியல் கற்கண்டு..!பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமைத் தீர்ந்துவருதல் முயற்கொம்பே” என்றார் பாவேந்தர். ”அந்தப் பெண்ணடிமைத்தனத்தை மண்ணோடு மண்ணாக்கும் ஒரு குரல்! பெண்ணின் சுயமரியாதையையும், சிந்தனையையும் வந்தனை செய்யும் ஒருகுரல்! அவள் பகுத்தறிவைப் பாருக்குணர்த்தும் ஒரு குரல்! அந்த உரிமைக்குரல் எப்போது கேட்கும்? பெண் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது வாய்க்கும்? அந்நாளே இனிக்கும் கற்கண்டுத் திருநாள்!” என்று இனிய சொற்கொண்டு பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் திருமிகு. முழுமதியின் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதை என அறிவித்துப் பாராட்டுகின்றேன். -
இந்த வார வல்லமையாளர் (252)
இவ்வார வல்லமையாளராக பாக்கியம் ராமசாமி அவர்களை அறிவிக்கிறோம்.
ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆனால் பாக்கியம் ராமசாமி என்றால் தான் இவர் யார் என தெரியும். அப்படி சொல்லியும் தெரியாதவர்கள் அப்புசாமி, சீதாப்பாட்டி கதாசிரியர் என்றால் டக் என புரிந்துகொள்வார்கள்.
இவர் தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி – சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.
இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.’அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வந்தார்.
ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி – சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா…. என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, ‘நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா…” என்பார். அவரோ பதறியபடி, “அவ்வளவு ரூபாய்… எப்படி?” என்பார். அதற்கு அப்புசாமியோ, “பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே” என்று வாருவார்.
கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். “தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!”
பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, க்ட்ட்ப்://ந்ந்ந்.அப்புசமி.cஒம் எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.
பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார். ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.
தன் 87 வயதில் இவர் கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். .பாக்கியம் ராமசாமிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய அப்புசாமியும், சீதாப்பாட்டியும், கீதாப்பாட்டியும், பாமுகவும், ரசகுண்டுவும் என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார்கள்
நன்றி: விகடன், தினமலர், விக்கிபிடியா
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
-
அப்துல் ரகுமான் கவிதைகளில் படிமமும் குறியீடும்
-முனைவர் இரா. தேவேந்திரன்
முன்னுரை:
தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வு இன்று குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இலக்கிய வடிவம், இலக்கியப் பொருள், பொருளை வடிவ மாக்குவதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திகள், இலக்கியப் பொருளில் அமைந்துள்ள அணுகுமுறை போன்றவை திறனாய்வுத் துறையில் அதிகம் பேசப்படுகின்றன. படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்தி அழகூட்டுவதற்காகவும் பொருள் புலப்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய உத்திகளுள் குறியீடும் படிமமும் குறிப்பிடத்தக்கதாகும்,
தமிழில் படிமமும் குறியீடும்:
இமேஜ்(image) என்னும் ஆங்கிலமொழிச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் இன்று வழங்கப்பெற்று வரும் ஒரு கலைச்சொல்லே படிமம் என்பதாகும். படிமம் என்பதற்கு உருக்காட்சி, உருவம், உருமாதிரி, ஒத்தவடிவம், கருத்துரு, கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போன்ற பொருள்களில் கையாளப்படுகின்றது. அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விளக்க இயலாதவற்றை நொடியில் தெளிவாக்கி நம்முன் நிறுத்த வல்லதே படிமம் என்று எஸ்ராபவுண்ட் விளக்குவார். மேலும், குறிப்பிடுகின்றபோது ஏராளமான கவிதைகளைப் படைப்பதைவிடச் சிறந்தது தன் வாழ்நாளில் ஒரே ஒரு படிமத்தைப் படைப்பதாகும் என்று படிமத்தின் சிறப்பினை குறிப்பிடுவார். படிமம் என்பது உணர்வும் அறிவுச் சேமிப்பும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியாகும். இதில் மனக்காட்சியின் விரிவு குறிப்பிடத்தக்கது. படைப்போன் படிப்போன் திறனுக்கேற்பப் படிமம் பல படிநிலைகளைக் கொண்டது.
குறியீடு என்பது சின்னம், அடையாளம் என்ற பொருட்களில் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றது. மனித வாழ்வில் இணைந்து கிடக்கும் கணக்கற்ற குறிகள்(Signs) பற்றிச் சமூகவியலார் இன்று மிகவிரிவாகப் பேசி வருகின்றனர். மனிதரின் தோற்ற ஒப்பனையில் பல அடையாளக் குறிகள் சாதி, சமயம், பண்பாட்டின் பல படிநிலைகள், சமூக அமைப்பின் பல நிலைகள் எனப் பல்வேறு அர்த்தங்களை இனம் காட்டும் ஆயிரமாயிரம் குறிகள் வாழ்வில் கலந்திருக்கின்றன. “குறிகள் பலவகைப்பட்டதாகத் தோன்றினும் அவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டு, அமெரிக்கத் தத்துவ அறிஞர் சார்லஸ் சாண்டர்பீர்ஸ் அவற்றை மூன்று வகைகளாக அடக்குதலை ந. ம. வீ. ரவி குறிப்பிடுகின்றார். அவை, 1. உருவக்குறி(iconic signs), 2. சுட்டுக்குறி (indexical signs), 3. குறியீடு (symbolic signs) என்பனவாகும்” (குறியியலும் அரங்கக் குறியியலும், 1992, ப. 12) இம்மூவகைகளுள் ஒன்றே இலக்கியத்துறை தொடர்பான குறியீட்டையும் குறிப்பிடுகின்றது.
குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். படிமத்தைப் போலவே குறியீட்டையும் ஓர் இலக்கியமாக மேலை நாடுகளில் பின்பற்றினர். மேலை நாட்டாரின் திறனாய்வுக் கொள்கைகள் தமிழறிஞர்களுக்கு அறிமுகமானபின், Symbolism, Imagism என்று அவர்கள் குறித்த கலைச்சொற்களுக்கு இணையாகக் குறியீட்டியல், படிமவியல் என்னும் சொற்கள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழிலக்கிய வரலாற்றில் படிமமும், குறியீடும் சங்க காலத்திலேயே மேலோங்கி விளங்கின. சங்க இலக்கியத்தில் காணப்படும் உள்ளுறை, இறைச்சி என்னும் குறிப்புப்பொருள் அடங்கிய இலக்கிய நயங்கள் இன்றைய படிமம் குறியீடு இவற்றின் முன்னோடியாகக் காணப்படுகின்றது. சங்க காலத்திற்குப் பின் தற்காலத்தில் இவை பெரிதும் பேசப்படும் இலக்கிய உத்தியாக படைப்பாளர்களால் போற்றப்படுகிறது. இதனை அப்துல்ரகுமான் “சங்க காலத்திலும், சித்தர்கள் காலத்திலும் இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் தான் இலக்கிய உத்தியாகப் பயன்படுகின்றது. புதுக்கவிதையில் அது வெறும் உத்தியாக மட்டுமின்றி அதன் சிறப்பு பண்பாகவே மாறிவிட்டது என்று குறிப்பிடுகின்றார்.”(புதுக்கவிதையில் குறியீடு, 1990, ப. 183) புதுக்கவிதைகளில் பலவகையான உத்திகள் காணப்படுகின்றன. அவை, படிமம் (image), குறியீடு (symbol), அங்கதம் (satire), முரண் (parody), இருண்மை (obscurity), தொன்மம் (myth) போன்றவைகளாகும். இவ்வுத்திகளில் படிமம், குறியீடுகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளப் பாங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.
படிமம்:
உணர்ச்சியுடைய சொற்சித்திரமாய் காணப்படும் படிமத்தைக் கவிக்கோ அப்துல்ரகுமான் சிறப்பாகக் கையாண்டுள்ளார். “தேவையற்ற எந்த ஒரு சொல்லையும் நீக்கிவிடுதல் என்னும் படிமவியலார் கொள்கைக்கு மிகப் பொருத்தமான கவிதைகளை எழுதுபவர் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பர்.” (க. இராமச்சந்திரன், புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை, ப. 82) அவரது ‘பால்வீதி’ என்கிற கவிதைத் தொகுப்பு படிமக் கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
“இரவெல்லாம் / உன் நினைவுகள் / கொசுக்கள்” (பால்வீதி)
என்னும் கவிதையில் நினைவுகள் கொசுக்களாகப் படிமமாக்கப் பட்டுள்ளன. நினைவுக் கொசுக்களின் தொல்லையினால் இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்படும் மனிதனை நம்கண்முன்னே நிறுத்துகின்றார். அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விடுவிக்க இயலாத மனவேதனையை இப்படிமக் கவிதைத் தருகின்றது.
“என் ஆறாவது விரல்வழியே
சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம் – ஆம்
என் மாம்சம்
வார்த்தை ஆகிறது”என்னும் பால்வீதியில் அமைந்த இக்கவிதை ஆதியிலே தேவனிடத்திலிருந்து வார்த்தை மாம்சமாகி இயேசு வடிவில் வந்ததாகவும் பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும் கூறும் விவிலியத்தின் கருத்தினை கவிக்கோ படிமமாக்கியுள்ளார். அப்துல் ரகுமான் ‘வியட்நாம்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில்,
“அக்கம் பக்கம் / வசந்தமில்லை
சோகத்தோடு / அமர்ந்திருக்கிறது
சவத்தின் மீதொரு / வண்ணத்துப் பூச்சி” (வானம்பாடி – 9) எனப் போரின் உச்சத்தைப் படிமத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றார்.“வான உற்சவத்தின் / வாண வேடிக்கை
முகிற்புற்று கக்கும் / நெருப்பு பாம்புகள்
கருப்பு உதட்டின் / வெளிச்ச உதறல்
இடிச்சொற்பொழிவின் / சுருக்கெழுத்து” (பால்வீதி)என்ற இக்கவிதையில் வானத்தைக் கீறிப்பாய்கிற ராக்கெட்டுகளாக மின்னலையும், மேகத்திலிருந்து வெளிவருகின்ற நெருப்பினை புற்றிலிருந்து சாட்டையாக வெளிவருகின்ற பாம்பாகவும் நீண்ட இடியோசைக்கு மத்தியில் சட்டெனத் தோன்றி மறைவதால் அதனைச் சுருக்கெழுத்தாகவும் காட்சிப்படுத்துகின்றார்.
”பாரதம் என்றால் பதவிச் சண்டைதானே! இந்த
நாட்டுக்குப் பொருத்தமாகத் தான் பெயர்
சூட்டியிருக்கிறார்கள்
அந்தப் பாரதத்தில் நான் செய்த வேலையை
இந்தப் பாரதத்தில் நீங்கள் செய்கிறீர்கள்” (சுட்டு விரல்)புதிய பாரதம் என்ற இக்கவிதையில் சகுனியின் கூற்றாக அரசியலில் சூதாட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவன் நான்தான் ஆனால் நீங்களோ அரசியலையே சூதாட்டமாக மாற்றி விட்டீர்களே! நான் அன்று பகடைக் காய்களைத்தான் உருட்டினேன் நீங்களோ மக்களையே உருட்டுகிறீர்கள் என்றவாறு தற்கால நிகழ்வை பாரத காலத்தோடு படிமமாக்குகிறார்.
அப்துல் ரகுமான் வாழ்வின் பயணத்தைப் பறவையின் பாதையோடு ஒப்பிட்டு,
“நதியின் பாதையைப் போல்
உங்கள் பாதை
உங்கள் பயணத்தால்
உண்டாகட்டும்
பறவையின் பாதையைப்போல்
உங்கள் பாதை
சுவடற்றதாக இருக்கட்டும்” (பித்தன், ப. 46)என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். நதியின் நீரோட்டம் திட்டமிட்டு அமைவதில்லை. தான் விரும்பியவாறு செல்லும். பறவையின் பாதை சுவடற்றதாக அமைந்து காணப்படும். இவை இரண்டையும் மனித வாழ்வோடு படிமமாக்கி முன்னேற்றத்தின் வழியைக் காட்டுகின்றார்.
குறியீடு:
படிமத்தைப் போன்று குறியீட்டையும் தற்காலப் படைப்பாளர்கள் சிறப்பாக கையாண்டுள்ளனர். குறி என்பது ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது. குறியீடோ ஒரு பொருளுக்காகத் தானே அதனிடத்தில் நிற்பது என்ற குறியீட்டாளர்களின் சிந்தனைக்கு ஏற்பக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புக்களும் காணப்படுகின்றது.
“புறத்திணைச் சுயம் வரமண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி” – பால்வீதி‘ஐந்தாண்டாக்கு ஒருமுறை’ என்னும் இக்கவிதை தேர்தலை விமர்சிக்கின்றது. இதில் வேட்பாளர்கள் போலி நளன்களாகவும், மாலை வாக்குச் சிட்டாகவும், குருட்டுத் தமயந்தி அறியாமை என்னும் இருளில் கிடக்கும் வாக்காளனாகவும, சுயம்வரம் ஒரு தேர்தல் திருவிழாவாகவும் புலப்படுத்திக் கவிஞரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சுயம்வரக்காட்சியும், தேர்தல் காட்சியும் சேர்ந்து குறியீட்டுத் தன்மையை புராணக் கதையிலிருந்து உணர்த்துகின்றது.
“விற்க எதுவும் இல்லாததால்
கண்ணகிகளைப் பேரம்பேசும்
கோவலர்கள்” (பால்வீதி)“உதயகுமாரர்களுக்குத்
தங்கள் உடல்களையே
அட்சய பாத்திரமாக்கித்
தம் வயிற்றுப் பசியைத்
தணித்துக் கொள்ளும்
மணிமேகலைகள்”என்பதான கவிதைகளில் இன்றைய சமூக அவலங்களைச் சுட்டுகின்றார். கண்ணகி, கோவலன், உதயகுமாரன், மணிமேகலை போன்ற பழங்கதை மாந்தர் இன்றைய நடைமுறை மாந்தர்களுக்கு குறியீடுகளாக காட்டப்படுகின்றனர்.
அப்துல் ரகுமானின் ‘மூடிய இமை’ என்கிற கவிதையில் குறியீடுகள் முரணாக வந்து கருத்தை வெளிப்படுத்துக்கின்றன.
“என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா?
மீன் வலையா? (பால்வீதி)கவிஞர் இக்கவிதையில் ஒரு பெண்ணின் பார்வையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தவிப்பை இரண்டு விதங்களில் வெளிப்படுத்துகின்றார். வலைக்குள் கொசு வரக்கூடாது என்று தடுப்பதற்காக விரிப்பது கொசுவலை. வலைக்குள் மீன் விழவேண்டும்; வீழ்ந்த மீன் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக விரிப்பது மீன்வலை ஒன்று புறக்கணிப்பு மற்றொன்று எதிர்ப்பார்ப்பு. இது முரணாகும். இந்த முரணின் வாயிலாக ஒரு காதலனின் காதலுணர்ச்சியைக் குறியீடாகக் குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது.
“உன் தராசுத் தட்டுகளைக்
கொஞ்சம் கண்திறந்து பார்
அங்கே
புறாவின் மாமிசத்தை
சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்” (பால்வீதி)என்ற தொன்மைச் சான்றினை தற்கால நிகழ்வோடு குறிப்பிட்டு கவிஞர் குறியீடாக்கியுள்ளதைக் காணலாம்.
“உங்கள் பாரம் / உங்களைவிட
மதிப்புடையதாகட்டும்
திரி சுமக்கும் சுடரைப்போல்”என்ற கவிதையில் திரிசுமக்கும் சுடரும் மனிதன் சுமக்கும் பாரத்தையும் குறியீடுகளால் ஒப்பிட்டு கவிஞர் வாழ்வின் சுமைகளை சுகமாக்குகின்றார்.
முடிவுரை:
அப்துல்ரகுமான் கவிதைகளில் நட்சத்திரம், நெற்றிக்கண், இமை, சிலுவை ஆகியவை குறியீடுகளாக மீண்டும் மீண்டும் வருகின்றன. கோடி சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்தேன் என்ற இடத்தில் செறிவு என்ற பொருளிலும் ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திரங்களைத் தூவுவோம் இங்கே என்ற இடத்தில் ‘உயர்ந்தது’ என்ற பொருளிலும் நட்சத்திர வேஷம் அணிந்த எழுத்துக்கள் என்ற இடத்தில் ‘விளக்கம்’ என்ற பொருளிலும், இளவேனில் இரவு ‘பூ’ என்ற பொருளிலும் மூச்சுக்கயிறறுந்த மணியின் நாவிலிருந்து நட்சத்திரங்கள் மௌனமாக உதிரும் என்ற இடத்தில் ‘ஆன்மா’ என்ற பொருளிலும் நட்சத்திரம் பால்வீதியில் குறியீடுகளாக மின்னுதலைக் காணமுடிகின்றது. சங்க இலக்கிய உத்திகளில் காணப்படும் அழகியல் மற்றும் பொருண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் போன்று புதுக்கவிதைகளில் காணப்படும் படிமம் மற்றும் குறியீடுகளில் அத்தகைய தன்மையைக் காணலாம். இதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதன்மை பெறுதலை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.
*****
கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஏ. வி. சி. கல்லூரி(தன்னாட்சி)
மன்னன்பந்தல், மயிலாடுதுறை. -
படக்கவிதைப் போட்டி (139)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
எஸ்.எம்.கே.எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-
பாதங்களால் நிறையும் வீடு
நாகினி
பாதங்களால் நிறையும் வீடு..
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)மோதலைத் தவிர்த்து மண்ணிலே உறவின்
… மொழியென மலரும்
காதலில் கலந்த நெஞ்சுரம் கொண்டோர்
.. கால்களின் மென்மை
பாதமும் நிறைந்து வலம்வரும் வீடு
.. பாரினில் மேன்மை
நாதமாய் ஒலிக்கும் இல்லற தர்மம்
.. நலம்பெறத் தூணாம்தூய்மையாய் நாட்டில் உறவுகள் தழைத்து
.. துலங்கிடச் செய்யும்
வாய்மையின் அறமாய் அமைந்தநல் வீடு
.. வருகையின் பாதம்
தேய்ந்திடா வண்ணம் கூடியே வாழ்ந்தால்
.. தேசமும் ஓங்கி
சாய்ந்திடாப் புகழை என்றுமே பெற்று
.. சரித்திரம் படைக்கும்ஒற்றுமை வலிமை நிலைத்திட நினைக்கும்
.. ஒப்பிலா மாந்தர்
உற்றுணர் எண்ணம் சிறப்புடன் வளரும்
… உறுதியின் வாசல்
கற்பனை கடந்த பாலமாய் மனையைக்
.. காத்திடும் பாதம்
பற்றுடன் என்றும் உறவினை நாடி
.. பார்த்திடத் துடிக்கும்வணங்கிட மறுத்து மூத்தவர் நோக
.. வாசலில் துரத்தும்
பணமுடன் சொத்து பெரிதென நினைத்து
.. பழகிடும் சொந்தம்
இணக்கமும் இன்றித் தலைக்கனம் கொண்டு
.. இயங்கிடும் வீடு
மணமுறி வென்று பாதமும் வழக்கு
.. மன்றிலில் நிற்கும்எண்ணமும் அன்பின் சின்னமாய் என்றும்
.. எளிமையை விரும்பும்
கண்ணியம் வளர்க்கும் உறுதியில் நடந்து
.. கடமைகள் செய்யும்
மண்ணிலே உறவின் கூட்டமாய் மதிப்பு
.. மாந்தரின் வருகை
பண்புடன் பாதம் நிறைந்திடும் இல்லம்
.. பார்புகழ் பெறுமே!… நாகினி
-
கபீர்தாசரின் கவிதைகள் (4)
-தமிழாக்கம்: க. பாலசுப்ரமணியன்
குறைந்த உலர்ந்த உணவை உண்டாலும்
குடிநீர் மட்டும் குடித்தே வாழ்ந்தாலும்
குறையுடை மனத்துடன் என்றும் வாழாதே
குறையுடை மனமே குறைத்திடும் வாழ்வை !
நானென்றும் எனதென்றும்எதுவுமே இல்லை
நானென்ற நினைப்பே நலிவுக்கு அறிகுறி
நாளைய முடிவை இன்றே கொடுக்கும்
தூக்குக் கயிறாய் தொண்டையின் அருகே!
பகலெல்லாம் உண்டு பொழுதைக் கழித்தாய்
இரவெல்லாம் உறங்கிப் பொழுதைக் கழித்தாய்
வாழ்க்கை என்னும் விலையில்லா வைரத்தை
வீணாகக் சில்லரைக் காசுக்கு விற்கின்றாயே !
இறந்தவனைக் கண்டு இரங்கியவன் அழுதான்
எரிந்தவனைக் கண்டு துடித்தவன் அழுதான்
அழுபவர்கூட இறப்பது இயற்கையின் நியதி
அனைவரும் நிற்பது ஆண்டவன் சந்நிதி !
மூடனைத் திருத்த முயற்சிக்கும் மனிதா!
முடிவில் வெற்றி என்றும் கிடைக்குமோ ?
காலம் முழுதும் கழுவிட முயன்றும்
கரியின் நிறமே என்றும் மாறுமோ ?
பனையைப் போல் வளர்ந்தென்ன பயனோ
பயனும் இன்றி கொடுக்க நிழலும் இன்றி !
பணத்தால் உயர்ந்தும் பகிர்ந்திட அறியான்
பலநாள் வாழ்ந்தும் பயனன்றி மறைவான் !
வண்ணங்கள் எத்தனை எத்தனை மனத்திற்கு
வண்ணங்கள் மாற்றுமே கண்ணிமை நேரத்தில் !
வண்ணமாய் நிற்கும் இறைவனின் வண்ணத்தில்
வாழ்ந்திடும் மனிதனை வாழ்த்துங்கள் தேடியே!
-
குறளின் கதிர்களாய்…(195)
-செண்பக ஜெகதீசன்
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் -785: நட்பு)புதுக் கவிதையில்…
பேசிப் பழகித்தான் வருவதல்ல
நட்பு என்பது,
ஒத்த உணர்வே
நட்பெனும் உரிமையைக் கொடுக்கும்…!குறும்பாவில்…
நட்பைப் பெற்றிட
பேசிப் பழகிட வேண்டாம்,
ஒத்த உணர்வேயந்த உரிமைதரும்…!மரபுக் கவிதையில்…
ஒருவருக் கொருவர் கலந்துபேசி
-ஒன்றாய்ச் சேர்ந்து பழகவேண்டாம்,
அருமை மிகுந்த நட்பதுதான்
-அரும்பி யென்றும் நிலைத்திடவே,
கருத்தில் கொண்டிடு உண்மையிதைக்
-காணும் மாந்தர் தமக்குள்ளே
இருக்கும் ஒத்த உணர்வதுதான்
-ஈந்திடும் நட்பெனும் உரிமையையே…!லிமரைக்கூ…
வேண்டியதில்லை கலந்துபேசிப் பழக்கம்,
மாந்தர் தமக்குளுள்ள ஒத்த உணர்வதுவே
நட்பென்னும் உரிமையதை அழைக்கும்…!கிராமிய பாணியில்…
நட்பாயிரு நட்பாயிரு
நாலுவரோட நட்பாயிரு…நல்லாப் பேசிப்பழகியிருந்தாத்தான்
நட்பு வருமுண்ணு நெனைக்கவேண்டாம்,
ஒருத்தருக்கொருத்த
ஒத்த மனசு இருந்தாப்போதும்,
ஓடிவரும் நட்பு ஒன்னத்தேடி…அதால
நட்பாயிரு நட்பாயிரு
நாலுவரோட நட்பாயிரு…! -
லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம்
-முனைவர். ஹெப்ஸி ரோஸ் மேரி. அ
தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணம் தமிழ்மொழியில் காணப்படும் நூல்களில் முதல் நூலாக விளங்குகிறது. இது முந்து நூல் கண்டு இலக்கணம் அமைத்ததோடு வழக்குமொழிக்கும் செய்யுள் மொழிக்கும் சேர்த்து இலக்கணம் அமைத்ததை அதன் சிறப்புப் பாயிரம் உணர்த்துகிறது. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்கள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றியும் மொழி வளர்ச்சிக்கேற்பப் புதிய மாற்றங்களையும் புதுமையான கருத்துக்களையும் சேர்த்துக் கூறின. அவ்வகையில் தமிழ்மொழியில் தொல்காப்பியத்திற்குப் பின்தோன்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பிய மரபு நிரம்ப இருப்பதைக் காணலாம். அவ்வண்ணமே தமிழுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட திராவிட மொழியாகிய மலையாள மொழியின் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவற்றை இனங்கண்டு விளக்க முயல்கிறது இக்கட்டுரை.
மலையாள இலக்கண மரபு
மலையாளத்தில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய லீலாதிலகம் கி.பி.1851 – ல் குண்டர்ட் எழுதிய மலையாள மொழி இலக்கணம், கி.பி.1895 – ல் ஏ. ஆர். இராஜராஜ வர்மா எழுதிய கேரளபாணினீயம் போன்றவற்றை மலையாள மொழியின் முக்கியமான மூன்று பேரிலக்கண நூல்கள் எனக் குறிப்பிடலாம். அவற்றுள் லீலாதிலகம் தான் மலையாளத்தின் முதல் இலக்கண நூல். எனினும் இன்று கேரளத்தில் பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்புவரை மிகுந்த பயிற்சி பெற்று விளங்குவது கேரளபாணினீயமே. தமிழ் மலையாள இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கால வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் மலையாள இலக்கண நூல்கள் வடமொழி தமிழ் நூல்களின் சார்பு அல்லது வழி நூல்களாக உள்ளன. அதாவது அவற்றுள் சில வடமொழி நூல்களை மொழிபெயர்த்தனவாகவும் தமிழ் நூல்களைப் பின்பற்றுவனவாகவும் தழுவல்களாகவும் காணப்படுகின்றன.
மலையாள இலக்கண நூல்களில் பழமையான லீலாதிலகம் வடமொழியில் எழுதப்பட்டுள்ளது. பின்புதான் மலையாள மொழியில் நூல்கள் எழலாயின. பிற திராவிட மொழிகளிலும் முதல் இலக்கண நூல்கள் வடமொழியில்தான் தோன்றியதாகப் பேரா. கி. நாச்சிமுத்து குறிப்பிடுகிறார். ஆனால் தமிழில், தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் போலப் பழைய தமிழ் இலக்கணங்கள் வடமொழியில் எழவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தமிழுக்கு உரிய கலைச் சொற்களையும் இவற்றில் காணலாம். இவை தமிழில் தமிழ் வழியான தனி இலக்கண மரபு ஓன்று வளமாக இருந்ததையே காட்டுகின்றன. தமிழில் ஐந்திலக்கண மரபு உள்ளதைப் போன்று லீலாதிலகத்தில் மூன்று இலக்கண மரபு அமைந்துள்ளது. லீலாதிலகம் அணி நூலாயினும் ஏனைய இலக்கணங்களைப் பற்றியும் கூறிச் செல்வது தமிழ் மரபை ஒட்டி உள்ளது. எனினும் இந்நூலின் போக்கு வடமொழியை ஒட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
லீலாதிலக எழுத்திலக்கணத்தில் தொல்காப்பியம்
எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் ‘ சந்தி’ என்றும் அழைப்பர். தொல்காப்பியர் சந்தியை ஐந்து இயல்களில் விரித்துக் கூறுகிறார். லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளாக்கமாகவும் கூறாமல் ஒரே இயலில் விளக்கியுள்ளது. இது தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே.என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார். லீலாதிலகம் வெளிப்படையாகப் தமிழ் விதிகளைக் கையாண்டுள்ளது. அன்றைய கால மொழியானது தமிழ் மலையாள மொழிகளின் கலப்பு மொழி (proto Tamil Malayalam)என்பது அக்காலத்தெழுந்த இராமசரிதம் போன்ற நூல்கள் வாயிலாக அறியலாம். லீலாதிலக காலத்தைய பழைய மலையாளத்துக்கும் அன்றைய தமிழ்மொழிக்குமிடையே இடைவெளி அதிகம் இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே தொல்காப்பியர் கூறும் சந்தி விதிகள் பல லீலாதிலகத்தில் கூறப்பட்டிருப்பது இருமொழிகளின் ஒன்றுபட்ட தன்மையினால்தான் என்று முடிவு செய்யலாம். லீலாதிலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள்தாம் கூறியுள்ளது. அவர் கூறும் விதிகளை உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் மெய், மெய் முன் உயிர் என்ற அமைப்பில் பிரிக்கலாம். தொல்கப்பியமும் மலையாள இலக்கண நூல்களும் கூறும் புணர்ச்சி விதிகளில் சிலவற்றைக் காண்போம்.
தொல்காப்பியர் ,
சுட்டின் முன்னர் ஞ, ந, மத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும் ( தொல். எழு.206)இந்நூற்பாவைப் பின்பற்றியே லீலாதிலகம் செல்வதைக் காணலாம். அது வினாப்பொருளில் வருகின்ற ‘எ’கரத்தின் முன்னும் தனிக் குறிலாகிய அ,இ, ஆகியவற்றின் முன் வரும் ஞ, ந, ம, வ, க, ச, த, ப ஆகியவை வந்தால் இரட்டும் .
எ.டு
எ+ஞாண் = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம், எக்காலம்
அ+ஞாண்= அஞ்ஞாண், அந்நூல், அம்மரம், அக்காலம், இ+ நூல்= இந்நூல், இக்காலம்
சில இடங்களில் அ,ஆ,இ, ஊ ஆகியவற்றின் முன் க, ச, த ப வரின் இடையில் அவற்றின் மெல்லினம் தோன்றும் .
எ.டு
முளெ + கொம்பு =முளெங்கொம்பு, அமெ+கொம்பு=அமெங்கொம்பு
இவ்வாறு லீலாதிலக ஆசிரியர் கூறுவது ‘யாமரக் கிளவி………..மெல்லெழுத்துமுடிமே ( தொல் . எழு.230) என்ற தொல்காப்பிய நூற்பாவைப் பின்பற்றியே ஆகும்.
ணகரத்தின் முன் வரும் தகரம் ‘ட’கரமாகும், ணகரத்தின் முன் வரும் ‘ ந’ கரம் ‘ண ‘ கரமாகும்; ளகரத்தின் முன் வரும் நகரம் ‘ன’கரமாகும். என்று லீலாதிலகம் கூறுவது தொல்காப்பிய நூற்பாக்களைப் பின்பற்றியே ஆகும். (தொல்.எழு.303,156,398)
எ.டு
மண் + தீது= மண்டீது த>ட, முண்+ நன்று=முண்ணன்று ந>ண, முள்+நன்று =முள்ளன்று ந > ள
நகரம் மட்டுமன்றி ‘ள’ கரத்தின் முன் மகரம் வரினும் ளகரமானது நகரமாய் உறழும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் பொதுவாக ளகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சியினைக் கூறும்போது மெல்லெழுத்து இயைபின் ’ன’ கரமாகும் என்று கூறுகிறார். (தொல் . எழு.398).
எ.டு
வாள்+ மேல் = வான்மேல், தோள் + மேல் = தோண்மேல்
உடம்படுமெய்
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துக்கள் வரின் அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகரம், வகரம் ஆகிய மெய்கள் உடம்படுமெய்யாக வரும்.’தொல்காப்பியர் ‘உடம்படுமெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழு 144) எனப்பொதுவாக் கூறுகிறாரே ஒழிய இன்ன இன்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர்வரும் என்றும் குறிப்பிடவில்லை ( தொ.எழு 141). சுட்டுகளைத் தொடர்ந்து உயிர்கள் வரும்போது ’வ’கரவுடம்படுமெய் வருமென்பதை (தொ.எழு 238,255) ஆகிய சூத்திரங்களிலிருந்தும் அறிய முடிகிறது. லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் ‘ய’கரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகிய உயிர்களின் முன் உயிர் வரின் ‘வ’கரம் தோன்றும் என்றும் (லீ.தி38) குறிப்பிடுகிறது.
எ.டு
மல+அது=மலயது, ஆன+அது=ஆனயது,
அ+அழகு=அவழகு, இ+அழகு=இவழகுபழைய மலையாளத்தில் வகரம் இரட்டிக்காமல் வழங்கியது. பொதுவாக இருமொழிகளிலும் வகரம் அடிப்படை உயிரின் பின்னர்த் தோன்றுகிறது. லீலாதிலகம் ஒகரம் வருமொழியாக வருவதனை நோக்க அது தமிழில் உகரமாக உள்ளது . ஆனால் பேச்சுத்தமிழில் ஒகரமாகவே வழங்குகின்றது.
எ.டு
உரல் – ஒரல்,உலக்க-ஒலக்க, உண்டு –ஒண்டு
மலையாளச் சொல்லிலக்கண மரபும் தொல்காப்பியமும்
மொழிக்கு இன்றியமையானது சொற்கள். சொற்கள் பல சேர்ந்து மொழிகளின் உட்கூறும் அமைகின்றன. அவ்வாறு அமையும்போது அச்சொற்கள் ஒரு மொழிக்கு மட்டுமே உரியதாக இருப்பதில்லை. பல சொற்கள் பிறமொழிகளின் சேர்க்கையால் புகுந்தனவாக அமைகின்றன. தொல்காப்பியர் கூறியிருக்கும் இயற்சொல் திரிசொல் எனும் இருவகைச் சொற்களை நாட்டுமொழிச்சொல் எனும்பிரிவில் கூறி இவ்வகை நாட்டுமொழிச் சொற்கள் இடுகுறிச் சொற்களாகும் என்று லீலாதிலக ஆசிரியர் காட்டியிருக்கிறார். (லீ.லா13).
பால்காட்டும் விகுதிகள்
தமிழ்மொழியில் திணையின் உட்பிரிவாகவே பால் அமைந்துள்ளது. இதனை, சேனாவரையர்’திணை உணராக்கால் அதன் உட்பகுதியாகிய பால் உணர்தல் ஆகாமையின் (கிளவி 11) எனவும் தெய்வச்சிலையார் ‘பால் எனவே திணையும் அடங்கும் ‘ என்றும் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியர் இருதிணை ஐம்பால்களைக் கிளவியாக்கம், பெயரியல், வினையியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்கிச் செல்கிறார் . லீலாதிலக ஆசிரியர் ஆண்பால் பெண்பால், ஆண் பெண் அற்றது எனப்பால் மூன்றுவகைப்படும் என்று கூறுகின்றார். தமிழில் உயர்திணையில் மூன்று பால்களும் அஃறிணையில் இரண்டு பால்களும், ஆக ஐந்துவகைப் பால்கள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் ஆடூஉ அறிசொல், மகடூ அறிசொல், பல்லோர் அறியும் சொல் என்று மூன்று பால்களைக் ( தொல் சொ.2,3) கூறுகின்றார்.. லீலாதிலகம் ஆண்பால் , பெண் பாலைக் குறிப்பிடுகின்றது. ஆனால் பலர் பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய மூன்றையும் ஆண், பெண் அற்றன என்னும் ஒரே வகையினுள் அடக்கி மூன்று பால்களாக வகைசெய்துள்ளது. மேலும் ஜாதி ஆணோடுள்ள உறவுச்சொற்கள் விகுதியாக ‘ இ’யைக் குறிப்பிடுகிறார்.
எ.டு கேசவன் வந்நான், நாராயணி வந்நாள், செட்டிச்சி, குறத்தி
லீலாதிலகம் மட்டுமே இந்த விகுதிகளைக்குறிப்பிடுகிறது. ஏனைய மலையாள இலக்கண நூல்கள் இதனைக் குறிப்பிடவில்லை. தமிழ் இலக்கண நூலார் வினையினைக் கூறும் முகத்தான் வினை விகுதிகளை அமைக்கும்போது அதனுள் பால் விகுதிகளையும் பாகுபாடு செய்து அமைக்கின்றனர். லீலாதிலகம் பெயரில் வரும் வேற்றுமை உருபுகளைக் கூறிவிட்டு அடுத்துப் பால் விகுதிகளைத் தருகின்றது. தமிழில் உயர்திணை அஃறிணை அடிப்படையில் பால்களைக் கூறுவது போன்று லீலாதிலகம் திணையின் அடிப்படையில் பாலைக் கூறவில்லை.
லீலாதிலக வேற்றுமையில் தொல்காப்பியம்
தொல்காப்பியர் மூன்று இயல்களில் வேற்றுமைகளை முழுமையாக எடுத்தியம்புவதோடு எழுத்ததிகாரத்தில் புணரியல் (112 -116), வினையியல் (781), இடையியல் (735) எச்சவியல் (895,896) ஆகிய இயல்களிலும் வேற்றுமைகளைக் கூறிச் செல்கிறார். தொல்காப்பியர் வேற்றுமை பற்றிய செய்திகளை ஒரே இயலில் குறிப்பிடாமல் வெவ்வேறு இயல்களில் கூற லீலாதிலகம் இரண்டாம் சிற்பத்தின் ஒரு பகுதியாக வேற்றுமையைக் குறிப்பிடுகின்றது. வேற்றுமையை மூன்று இயல்களில் விளக்கமாகக் கூறும் தொல்காப்பியர் வேற்றுமையின் இலக்கணம் கூறவில்லை. பொருள்களை வேற்றுமை செய்வன வேற்றுமை
(தொல் .546) என இளம்பூரணர் வேற்றுமைக்கு உரையெழுதியுள்ளார்.லீலாதிலகம் ”அர்த்தவிசேஷ அஸ்யா பரபாகசுவிசேஷ” என்று வேற்றுமைக்கு இலக்கணம் கூறுகிறது. அதாவது வேற்றுமை உருபுகளும் பால் விகுதிகளும் பொருள்களை வேற்றுமை செய்வதற்கென்றே நாட்டுமொழியில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். வேற்றுமையை லீலாதிலகம் துதியை, திருதியை (லீ. தி.21) என்று பெயரிட்டுள்ளது.
தமிழிலும் மலையாளத்திலும் முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை. ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ ( தொ. சொ.65) என்று தொல்காப்பியர் நூற்பா அமைக்கிறார். லீலாதிலகம் இதற்குப் ‘பேர்’ என்று பெயரிட்டு ’ கண்டன் (தலைவன்) ,ஆன(யானை), மரம் என்பனவற்றை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளது.
தமிழில் இரண்டாம் வேற்றுமை உருபாக ‘ ஐ ‘ என்பதனையே எல்லா இலக்கண நூல்களும் கூறியுள்ளன. மலையாளத்தில் ‘ எ ‘ என்பதும் பழைய மலையாளத்தில் ‘ அ ‘ என்பதும் உருபாக இருந்துள்ளது. இது செயப்படுபொருள் வேற்றுமையாக அமையும் இதனை மலையாளத்தில் கர்மம் என்று கூறுகின்றனர்.
எ.டு மாணவியைப் பார்த்தேன் (த), அவனே கண்டு (ம)
காவலோனக் களிறு அஞ்சும்மே’ என்னும் சங்க இலக்கியத் தொடரில் ‘ அ ‘ இரண்டாம் வேற்றுமை உருபாக வந்துள்ளது. இத்தன்மையே பழைய மலையாளத்தில் வந்துள்ளது..’13 ஆம் நூற்றாண்டு வரை கேரளமொழியில் இரண்டாம் வேற்றுமைக்குப் பெரும்பாலும் ‘ ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. லீலாதிலக காலத்திலும் ‘ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஒரு நூற்றாண்டு கழிந்து (1500 ல்) ஐ உருபு கைவிடப்பட்டது ‘ என்ற இளங்குளத்தின் கருத்து இங்கு ஒப்பிடத்தக்கது.( லீ. தி பக் 65).
தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையின் உருபாக ‘ ஒடு’ என்பதனைக் காட்டுகிறார். ( தொ. சொ.73). . லீலாதிலகம் ஆல், கொண்டு என்னும் இரண்டு உருபுகளையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு இவர் கொண்டது தொல்காப்பிய மரபை பின்பற்றியே ஆகும் . தமிழிலும் கொண்டு , உடன் என்பன சொல்லுருபுகளாக உள்ளன.
எ.டு அவனால் வஞ்சிக்கப் பெட்டு , கத்தி கொண்டு வெட்டி.(ம)
தொல்காப்பியர் ’ கு ‘ என்னும் உருபை நான்காம் வேற்றுமையின் உருபாகக் கொள்கிறார். லீலாதிலகம் ’க்கு’,’ அன்னு’, ’இன்னு’ ஆகிய மூன்று உருபுகளையும் நான்காம் வேற்றுமையின் உருபுகாளாகக் கொண்டுள்ளது.
எ.டு அவள்க்குப் புத்ரன் உண்டாயி – க்கு – ( ம் )
அவனு பேனா கொடுத்து – அன்னு- (ம)
தொல்கப்பியர் ஐந்தாம் வேற்றுமையின் உருபாக ‘ இன்’ என்னும் உருபைச் சுட்டுகிறார்.தொ.சொ.77). லீலாதிலகம் நின்று, மேல்நின்று, பக்கல்நின்று போன்ற உருபுகளைக் கொள்கின்றது. மேலும் ஒப்பு, உறழ்பொருள் ஆகியவற்றை உணர்த்தும்போது ‘ காட்டில் ‘ என்பது உருபாய் வரும் என்றும் குறிப்பிடுகிறது.
எ.டு பஸ்ஸீந்நு இரங்ஙி – ந்நு – நீக்கல், திருவனந்தபுரத்தினு கிழக்கோட்டு – ன்னு – எல்லை
அவனேக்கால் சுந்தரனானோ – கால் – ஒப்பு, என்னேக்காட்டிலும் வலுதாணோ – காட்டிலும் –ஒப்பு
ஆறாம் வேற்றுமையின் உருபு ‘அது’ ஆகும். அது தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப் பொருளுடையது எனத் தொல்காப்பியர் (தொ.சொ.79) கூறியுள்ளார். இவ்வேற்றுமைக்கு ‘ அ’உருபும் உண்டு என உரையாசிரியர்கள் உரைக்கின்றனர். ஒருமைக்கு ‘அது’வும் பன்மைக்கு ‘அ’ வும் உருபுகள் என்பது அவர்கள் கருத்து. மலையாளத்திலும் இவ்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகிறது. லீலாதிலகம் ’ன்னு, க்கு, இடெ, எடெ, றெ ஆகியவைகள் ‘கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற்கும் உரித்தாகும் ( தொல். சொல்95), அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அது என் உருபு கெடக் குகர வருமே (தொ.சொ.90) எனத் தொல்காப்பியர் தொக்கு நிற்கும் என்ற குகரத்தை லீலாதிலகம் விரித்துக் கூறிற்று.
எ.டு. எனது மகன் ( த), ஜானகியுடெ புஸ்தகம் (ம), அவன்றெ புஸ்தகம் (ம)
ஏழாம் வேற்றுமையில் இடப்பொருளை உணர்த்தும் உருபுகள் ‘இல், கண்’ என்பன. தொல்காப்பியர் கூறிய கண் முதலிய 19 சொற்களைச் சேனாவரையர் சொல்லுருபு எனக் கூறியுள்ளார். லீலாதிலகம் இல், இலெ, மேல், கல், பக்கல் என்னும் ஐந்து உருபுகளைக் கூறுகிறது. லீலாதிலகம் கூறும் பக்கல் இன்றும் மலையாளத்தில் வழக்கில் பயின்று வருகிறது.
எ.டு திருவனந்தபுரத்தில் இருந்தான் (த), என்றபக்கல் உண்டு (ம)
முடிவுரை
லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றே. எனினும் தொல்காப்பியத்தில் காணப்படுவது போன்ற நுட்பமான உச்சரிப்பொலியியல் லீலாதிலகத்தில் காணப்படவில்லை. சந்தி இலக்கணத்தில் தொல்காப்பியர் கைக்கொண்ட அல்வழி வேற்றுமை என்ற தொடரியல் அணுகுமுறை மலையாள இலக்கணங்களில் இல்லை. லீலாதிலகம் கூறும் பெரும்பான்மையான விதிகள் தொல்காப்பியத்தை அடியொற்றி அமைந்துள்ளன. தொல்காப்பியர் கூறும் பலவிதிகள் இன்றைய மலையாள வழக்கில் பயின்றுவர இலக்கண நூல்கள் இதைப் பற்றி கூறாதது வியப்பே. வேற்றுமை உருபுகளைப் பார்க்கும்போது இருமொழிகளிலும் வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். லீலாதிலகம் கூறும் வேற்றுமை உருபுகள் பெரும்பான்மையானவைத் தமிழ் உருபுகளாகவும் அதன் திரிந்த வடிவங்களாகவுமே உள்ளன. இவ்வொற்றுமை மொழிகளின் அமைப்பில் காணப்படும் பொதுத்தன்மையே எனலாம்.
*****
பயன்பட்ட நூல்கள்:
இளம்பூரணர் – தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தென்னிந்திய சைவசிதாந்த நூற்பதிப்புக் கழகம், நெல்லை, 1988
இளையபெருமாள்.மா – லீலாதிலகம் (மொ.பெ), தமிழ்ப்புத்தக நிலையம், சென்னை 1971
கால்டுவெல் – திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லை நிலையம் , சென்னை,2004
நாச்சிமுத்து.கி – இலக்கண ஆராய்ச்சி கட்டுரைகள்,கி. நா. மொழிப் பண்பாட்டு மையம், கோவை2007
Tolkappiyam – A Proto Tamil Malayalam Grammar (Article)
Ezhuthachan.K.N – The History of the Grammatical Theories in Malayalam, DLA, Trivandrum
*****
கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
கேரளப் பல்கலைக்கழகம்
திருவனந்தபுரம் -
நலம் .. நலமறிய ஆவல் (85)
நிர்மலா ராகவன்
துணிச்சல் கட்டை!’
இப்படி ஒரு பட்டம் வாங்கினாற்போல், ஒருவர் எதற்கும் அஞ்சமாட்டார் என்றுஆகிவிடாது. அச்சம் இயற்கையிலேயே அமைந்துவிடும் குணம். அதை எதிர்கொண்டால் நிறைய சாதிக்கலாம். நம் திறமையை, எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
`நான் பயந்தாங்கொள்ளி!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறவர் சொல்வதுபோலவே ஆகியும் விடுவார். இதில் என்ன பெருமை?
இப்படிப்பட்ட ஒருவர் தன் பொழுதைப் பிறர் பழிக்காத வழிகளில் — தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ, சாப்பிட்டோ — கழித்துச் சற்றே சமாதானம் அடையலாம். ஆனாலும், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாது மனம் வெதும்ப, பிறரது ஆற்றல் எரிச்சலை உண்டாக்குகிறது. துணிச்சலாக இருப்பவர்களை என்னமோ தவறிழைப்பவர்போல் கருதுபவர்.
அசட்டுத்துணிச்சல்
`நான் எதற்கும் துணிந்தவள். எனக்கென்ன பயம்!’ என்று ஒரு பெண் இருண்ட சாலையில் தனியாக நடந்துபோவது துணிச்சல் இல்லை. வாகனங்கள் விரையும் சாலையில் குறுக்கே ஓடுவதும் அப்படித்தான். அஞ்சுவதற்கு அஞ்சத்தான் ஆகவேண்டும்.
ஆசிரியர்களிடமோ, மேலதிகாரிகளிடமோ அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினால்..?! எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், சில சமயங்களில் வாயை மூடித்தான் தொலைக்க வேண்டும்.
பிறரிடம் பயம்
பயம் இருக்குமிடத்தில் அன்போ, உண்மையான மரியாதையோ இருக்காது.
“எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். என் கணவருக்குப் பிடிக்காது. அதனால் போக விடமாட்டார்,” என்றாள் ஒரு சக ஆசிரியை.
“சிநேகிதிகளுடன் போவதுதானே?” என்று ஒரு வழி காட்டினேன்.
“கணவர் கோபித்தால்?” என்று பயந்தாள்.
பொழுதுபோக்கிற்கும் தடையா! எதில்தான் விட்டுக்கொடுப்பது என்று ஒரு வரையறை கிடையாதா!
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மனைவி புதிய புடவை வாங்கிக்கொண்டால் ஆத்திரம் வரும். `இப்போ எதுக்கு இன்னொரு புடவை?’ என்று இரைவார். பணப்பிரச்னை எதுவும் கிடையாது.
ஒவ்வொரு முறை புடவை வாங்கிக்கொள்ளும்போதும் மனைவிக்குப் பயமோ, அல்லது குற்ற உணர்வோ ஏற்படும். ஆனாலும், அவள் தன்பாட்டில் புடவை வாங்குவாள். கணவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்.
கல்வியால் அச்சமின்மை
கல்வி அச்சத்தை எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். தவறானதை `தவறு’ என்று கூறும் தைரியத்தை வளர்க்க வேண்டும்.
அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் முதுகில், (கட்டொழுங்கு என்ற பெயரில்) பிரம்பால் அடிக்கும் ஆசிரியர்கள் இருந்தால், துணிச்சல் எப்படி வரும்? (இதே ஆசிரியர்கள் மேலதிகாரிகளின் முன்னர் நடுங்கி நிற்பார்கள் என்பது வேறு விஷயம்).
அச்சமின்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?
நம்மை அச்சுறுத்தும் ஒன்றிற்கு ஏன் பயப்படுகிறோம் என்று ஆராய்ந்தால் சில காரணங்கள் புலப்படும்
`இயலாத காரியம்!’ என்று நம் திறமையை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதால்.
`இந்த முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று என்ன நிச்சயம்?’ என்ற சந்தேகத்தால். (வாழ்வில் எதுதான் நிலையானது?)
`பிறர் கேலி செய்வார்களோ?’ என்ற தயக்கத்தால்.
`எல்லாரும் ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்கையில், அவர்களை ஒட்டி நடக்காவிட்டால் நான் மட்டும் தனியாகிவிடுவேனோ?’ என்ற எண்ணத்தால்.
அல்லது, சிறு வயதில் மிரட்டப்பட்டிருப்போம்.
சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளை அனாவசியமாக மிரட்டி வளர்ப்பார்கள். அப்போதுதான் `ஆண்பிள்ளைத்தனமாக’, தீய பழக்கங்களில் ஈடுபடாது வளர்வான் என்ற தவறான எண்ணம். அந்த அறியா வயதில் ஏற்பட்ட பயம் வளர்ந்தபின்னரும் தொடரும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
ஒருவரை பயமுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை.
என்னதான் ஆகிவிடும்?
`என்ன நடக்குமோ!’ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து வாழ நினைத்தால், வாழ்வே நரகமாகிவிடாதா! எது வந்தாலும் ஏற்கத் தயாராகும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் இத்தகைய எண்ணங்களை எதிர்கொள்ளலாம்.
கதை
பதின்ம வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அம்மாவிடம் கேட்டேன்.
“பைத்தியம் பிடிச்சிருக்கா?” என்ற எதிர்கேள்வி வர, என் ஆசை தற்காலிகமாக முடங்கியது.
இறந்ததும் என் உடலின் பல பாகங்களையும் தானமாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக் கொடுத்தபின், பிறருக்காக இந்த உடலை நோய்நொடியில்லாது நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது.
நாற்பத்து நான்காவது வயதில் எங்கள் வீட்டருகே பெரிய நீச்சல் குளத்துடன் ஒரு கிளப் திறக்கப்பட்டது.
மலிவான ஒரு நீச்சல் உடையுடன் குளத்தில் இறங்கினேன். (நன்றாக நீந்த வரும்போதுதான் நல்ல உடை என்று என்னுள் ஒரு வீம்பு). அவ்வப்போது என் மகள் வந்து சொல்லிக்கொடுத்தாள். மீதியெல்லாம் வீடியோவிலிருந்துதான்.
“நீங்கள் laps செய்யலாமே!” ஒருவர் கூற, பயம் எழுந்தது. என் தலைக்குமேல் இருக்கும் ஆழத்தில் என்னால் நீஞ்ச முடியுமா?
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், `What is the worst that can happen?” (அப்படி என்னதான் நடந்துவிடும்?) என்று கேட்டுக்கொண்டால் நாம் துணிந்துவிடுவோம்.
எனக்கு உடனே இரு பதில்கள் கிடைத்தன. ஐம்பதடி நீளமான குளத்தில் முன்னும் பின்னும் நீந்த வரும். இல்லாவிட்டால், மூழ்கி விடுவேன். இறந்தால் என் மகனிடம் போவேன். (நான்கு வயதில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்).
இரண்டாவது எண்ணமே இனிமையாகப்பட, அதன் உந்துதலுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே நீந்த ஆரம்பித்தேன்.
யாருடைய தடையும், கேலியும் (`ஆண்களும், பெண்களும் பக்கத்தில் பக்கத்தில் குளிப்பீர்களா?’), பரிதாபமும் (`நல்ல கலராக இருந்தீர்களே! ஏன் இப்படிக் கறுத்துவிட்டீர்கள்?’) என்னைப் பாதிக்கவில்லை.
அச்சத்தை ஏற்க மறுத்தால்தான் முன்னேற்றமடைய முடியும்.
தவறு செய்யவும் தைரியம் வேண்டும். செய்த தவற்றையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், முன்னேற முடியாது.
ஒரு முறை, கண்ணை மூடியபடி நீந்திவந்த ஒருவர் எதிர்ப்புறமாக வந்த என்னைக் கவனியாது தன் கையை ஓங்கி வீச, நான் நீருக்கடியில் போய்விட்டேன். கண்ணைத் திறக்கவும் பயந்து, சிறிது நேரம் திணறல். ஆபத்பாந்தவனாக ஒருவரது கை என்னை மேலே இழுத்தது.
கரையில் இருந்த ஒரு பெண்மணி, “நானும் இப்படித்தான் காப்பாற்றப்பட்டேன்,” என்றாள் என்னைச் சமாதானப்படுத்தும் வகையில். சற்றே அவமானம் அவள் முகத்தில். இதற்குப்போய் முகத்தைச் சுருக்குவானேன்! எதையும் கற்கும்போது தவறிழைப்பதை தவிர்க்க முடியுமா? கீழே விழாமலேயே நடக்கக் கற்றவர் எவராவது இருக்கிறார்களா?
ஒரு சீன அன்பர், “இன்றே நீங்கள் பயத்தை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீச்சல் என்றாலே பயம்தான் எழும்!” என்று ஊக்குவித்தார்.
அவர் காட்டியபடி, ஆழமான இடத்தில் நீருக்குள் போய், சிறிது நேரம் அங்கேயே மூச்சைப் பிடித்து, பிறகு வெளியே வந்தேன். பல முறை.
அவர் சிரித்தார். “நீங்கள் மூழ்கவே மாட்டீர்கள். இத்தனை நேரம் மூச்சைப் பிடிக்க முடிகிறதே!”
`பாலும் சர்க்கரையும் சேர்க்காத காப்பியை உடனே குடிக்க வேண்டும்!’ மற்றொரு அறிவுரை. அதாவது, எந்த நிலைமையையும் எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்து வைத்திருத்தல்.
எப்படியோ, நான் சாகவில்லை. ஓர் ஆற்றல் பிறந்தது. `என்னதான் ஆகிவிடும்!’ என்பதை மந்திரம்போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
ஆறு வயதில் கற்றுக்கொண்டிருந்தால் பயம் இருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டாமா!
தவழும் குழந்தை கீழே விழுந்துவிடுகிறதே என்று எதற்குப் பயம்? அதற்குப் பாதுகாப்பாக தலைக்குள் கவசம் மாதிரி ஒன்று இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு வயதுவரை கவலையில்லை.
சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக பயம் இருக்காது. இரண்டு மாதங்களே ஆன குழந்தைகளை இரண்டு மீட்டர் ஆழமான குளத்தில் விட்டால், எப்படியோ சமாளித்து, மேலே வந்துவிடும். (தொலைகாட்சியில் பார்த்தது). கருவாக இருந்தபோது, தாயின் வயிற்றில் நீந்திய அனுபவம்தான்.
அச்சத்தை விலக்கு
நம் அநாவசியமான பயங்களை எதிர்கொண்டால், ஒருவித சுதந்திர உணர்வு நம்முடன் எப்போதும் இருக்கும். அச்சம் விளைவிக்கும் தடுமாற்றம் விலகிவிடும். பிறரைக் கட்டுப்படுத்தவும் மாட்டோம். எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கும் திடம் வரும்.
-
ஜெருசலேம் யாருக்கு?
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து அந்த நகருக்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றப் போவதாக டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இவர்தான் பல அமெரிக்க ஜனாதிபதிகள் வாக்களித்து ஆனால் நிறைவேற்றாமலே போன முடிவை நிறைவேற்றிவைக்கப் போகிறாராம்! இதைப் பார்க்கும்போது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் ‘சரித்திரம் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற சரித்திரம் படைத்தவர்’ என்று ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது. இப்படி ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்த பிறகு அமெரிக்கா பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவான தீர்ப்பை (ultimate deal) எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
யூதர்களின் முதலாவது, இரண்டாவது கோவில்கள் கட்டிய காலத்திற்குப் பிறகு ஜெருசலேம் எந்த நாட்டின் தலைநகராகவும் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு, ஆட்டோமான் பேரரசு சிதைந்த பிறகு, அதன் ஒரு பகுதியான பாலஸ்தீனம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட லீக் ஆஃப் நேஷனால் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது பிரிட்டன் தனது வசதிக்காக ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகர் ஆக்கியது. யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்றும், அந்த நாடு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாங்கள் விட்டுச் சென்ற தங்கள் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஹெர்ஸல் என்ற ஐரோப்பிய யூதர் அதற்குரிய செயல்களில் ஈடுபட்டார். பல யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கிக் குடியேற ஆரம்பித்தனர். அவருடைய மறைவிற்குப் பின்னும் நிறைய யூதர்கள் ரஷ்யாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர். வசதி படைத்த இந்த யூதர்களால் அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப் போட முடிந்தது. தங்கள் நிலங்களை யூதர்களுக்கு விற்றுவிட்டு அதன் முழுத் தாக்கத்தையும் உணராமல் இருந்த அரேபியர்கள் பின்னால் தங்கள் நிலைமையை உணர்ந்து யூதர்களோடு மோதத் தொடங்கியபோது அதைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணி பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவுசெய்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பிரிப்பதென்று முடிவுசெய்தது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய அன்றே இஸ்ரேல் என்ற நாடாக யூதர்கள் தாங்களாகவே பிரகடனம் செய்துகொண்டனர். தங்களுடைய நாட்டைப் பிரித்து அதில் ஒரு பகுதியை யூதர்களுக்கு ஐ. நா. கொடுப்பதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் அந்த முடிவை ஏற்காமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெறத் தொடர்ந்து போராட முடிவுசெய்தனர். அந்தப் போராட்டம் இன்றுவரை நீடிக்கிறது, பாலஸ்தீனர்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்த பிறகும்.
பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்தாலும் அதிலுள்ள ஜெருசலேம் நகரை அதன் முக்கியத்துவம் கருதி ஐ.நா. தன் மேற்பார்வையில் உலகப் பொது நகரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. இஸ்ரேல் நாடு பிறந்த மறு நாளே அதை எதிர்த்து ஜோர்டான், எகிப்து, சிரியா ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றதுமல்லாமல் ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களோடு இன்னும் சில இடங்களையும் பாலஸ்தீனத்தில் பிடித்துக்கொண்டது. அதில் மேற்கு ஜெருசலேமும் ஒன்று. இப்படியாக ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டிய ஜெருசலேமின் ஒரு பகுதி இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு வந்தது. அப்போதுவரை ஜெருசலேமின் மேல் சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்ளாத யூதர்கள் – ஜெருசலேமில் மூன்று பெரிய மதங்களுக்கும் உரிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் அதை தங்கள் வசப்படுத்திக்கொண்டாலும் அதனால் சில கஷ்டங்கள் தங்களுக்கு வரலாம் என்பதால் – அதைக் கையகப்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை. மேலும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டுப்பட்டு அப்படி நடந்துகொண்டது. ஆனால் யுத்தத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தங்களுக்குக் கிடைத்த ஜெருசலேமை வேறு விதமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர் யூதர்கள். நாடு உருவான இரண்டு வருடங்களில் யூதர்கள்அதுவரை தலைநகராகச் செயல்பட்டுவந்த டெல் அவிவிலிருந்து மாற்றி ஜெருசலேமை தங்கள் தலைநகராக்கிக்கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அரசு அலுவலகங்களை ஜெருசலேமிற்கு மாற்றத் தொடங்கியது இஸ்ரேல் அரசு. ஜெருசலேம் பற்றிய ஐ.நா.வின் தீர்மானம் இன்னும் அமலில் இருந்ததால் மற்ற நாடுகள் தங்கள் தூதரகங்களை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டன.
1967-இல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த இன்னொரு போரில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. இந்தப் போரில் ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் பிடித்துக்கொண்டது. அங்கிருந்த பழைய நகர் (old city) இஸ்ரேலின் வசமாகிவிட அதுவரை யூதர்கள் செல்ல முடியாத அவர்களின் இடிபட்ட கோயிலின் மேற்குச் சுவருக்குச் செல்லும் வாய்ப்பு யூதர்களுக்குக் கிடைத்தது. அப்போதிலிருந்து ஜெருசலேம் அவர்களின் நகரம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றி எப்படியும் அதைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதலில் ஐரோப்பாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக, யூத இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தார்கள். பின்னால் வந்தவர்களோ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இவர்களில் தலைவர் ஆனவர்கள் ஜெருசலேமின் முக்கியத்துவத்தை மக்களின் மனதில் வேரூன்ற வைத்தனர். ஜெருசலேம் தங்களுக்கே உரியது என்று யூதர்கள் எண்ண ஆரம்பித்தனர். 1980-இல், போரில் பிடித்துக்கொண்ட ஜெருசலேம் தங்கள் தலைநகர் என்று சட்டமும் இயற்றிக்கொண்டது இஸ்ரேல் அரசு. கிழக்கு ஜெருசலேமில் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் யூதர்களுக்கு குடியிருப்புகளையும் கட்டத் தொடங்கியது. போர் பற்றிய சர்வதேச விதிகளில் ஒன்று சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் வென்ற பகுதிகளை வெற்றிபெற்ற நாடு தன்னுடையது ஆக்கிக்கொள்ளக் கூடாது.
பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் நடுநிலை வகித்து ஒரு தீர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அமெரிக்கா முயன்று வந்தது. அதனால் பல அமெரிக்க ஜனாதிபதிகள் தேர்தல் சமய வாக்குறுதிகளில் அமெரிக்காவில் உள்ள யூதர்களைத் திருப்திப்படுத்த ஜெருசலேமிற்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றிவிடுவதாக வாக்குக் கொடுத்தாலும் அதை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் இப்போது ட்ரம்ப் அதைச் செய்யப் போகிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்த யூதப் பணக்காரர்களைத் திருப்திப்படுத்த இப்படிச் செய்கிறார். இது ஜெருசலேம் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லை என்ற ஐ. நா. தீர்மானத்தைத் தன்னிச்சையாக மீறுவதாகும். இதனால் பாலஸ்தீனர்கள் மறுபடி வன்முறையில் ஈடுபடலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்ப்பைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லிவரும் அமெரிக்கா ஜெருசலேம் இஸ்ரேலைச் சேர்ந்தது என்று ஒருதலைப்பட்சமாகச் சொன்னால் பாலஸ்தீனர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? உலகில் நியாயம் இல்லையா?
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நாமடைதல் சிற்றின்பம், நாமாதல் பேரின்பம்,
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
களிகொள்ள ராதைபோல் கட்டு’’….கிரேசி மோகன்….! -
நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++
பொங்கிவரும் பெருநிலவைப்
புலவர் புனைந்தார் !
மங்கிப் போன
கரி முகத்தில் கால் வைத்தார் !
தங்க முழு நிலவுக்கு
மஞ்சல் நிறம் பூசி
வேசம் போட்டுக் காட்டும்
நேசப் பரிதி !
அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு !
அங்கிங் கெனாதபடி
எங்கும்
முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !
சுற்றியும் சுழலாத பம்பரம் !
ஒருமுகம் காட்டும் !
மறுமுகம் மறைக்கும் !
நிலவு இல்லை யென்றால்
அலை ஏது ? காற்றேது ? மழை ஏது ?
கடல் நீருக்கு
ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
புவிக் கவர்ச்சி அணைப்பில்
துடுப்பின்றி நிலவை
முடுக்கியது யார் ?
உருவானது எப்படி அந்தக்
கருநிலவு ?+++++++++++++


பல்வேறுப் பெருநிறைப் புவி மோதல்களைக் கணினிப் போலி மாடல்கள் [Computer Simulation Models] செய்து, உலோகங்களும், சிலிகேட்டுகளும், நிலவு தோன்றிய பிறகு, பன்னூறு மில்லியன் ஆண்டுகள் நீடித்து, தாமதத் தட்டுத் திரட்சியில் [Late Accretion Stages] எப்படிப் பின்னிப் பிணைந்தன என்று நாங்கள் ஆய்வுகள் செய்தோம். அந்த போலி மாடல் ஆய்வுகளின் மூலம் தாமதத் திரட்சி நிறை பேரளவில் பூர்வ பூமிக்குச் சேர்ந்தது என்று முடிவில் அறிந்தோம்.
டாக்டர் சிமோன் மார்ச்சி [Nature Geoscience Paper Author, SwRI ]
பூர்வப் பூமி தோற்ற வளர்ச்சியின் போது, பெரிய அண்டம் ஒன்று பூமியின் மீது மோதிச் சிதறிய துண்டு, துணுக்குகள், பூமியைச் சுற்றித் தட்டாகி, உருண்டு திரண்டு, தற்போதைய நிலவு உருவாகியது. அதற்குப் பிறகும் நீண்ட காலமாய்ப் பல்வேறு அண்டங்கள் பூமியைத் தாக்கி வந்திருப்பதாகத் தெரிகிறது. விஞ்ஞானிகள் இப்போது புதிதாக அவற்றின் விளைவுகளைப் போலி மாடல்கள் வடித்து விளைவுகளை வெளியிட்டுள்ளார்.

பூர்வீகப் பூமியை அண்டங்கள் தாக்கி, பூமியின் நிறையை மிகையாக்கியுள்ளன. தென்மேற்கு ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் [South West Research Institute (SwRI) Scientists], நிலவு தோன்றிப் பூமிமேல் நேர்ந்த நீண்ட கால மோதல்களில் தெறித்த துண்டத் துணுக்குகளைக் கணினிப் போலி மாடல்கள் மூலம் ஆய்வுகள் செய்தனர். அவற்றின் மூலம் அறிந்தது : மோதிய அண்டங்கள், பூமியின் நிறையை, முன்பு கணித்ததை விடப் பேரளவில் மிகையாக்கி விட்டது என்பதே. அந்த அண்ட மோதல்கள் பூமியில் நீண்ட காலம் நீடித்தன. அப்போது பெருநிறை அண்டங்களின் நிறை, பூர்வ இளம் பூமியில் பேரளவில் பின்னிப் பிணைந்தன என்பதே தற்போதைய புதிய கண்டுபிடிப்பு.



“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”
வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)
நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.
டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)
காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.
மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)
இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)

சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்
பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது ! அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது ! பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ! ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ! பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ? திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்
பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது. பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.
1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன ! அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது ! அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது ! அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.
நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்
நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :
1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.
2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).
3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்
பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
1. பிளவு நியதி (The Fission Theory)
இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது ! அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ? ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.
2. இழுப்பு நியதி (The Capture Theory)
இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory)
சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது ! அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.
4. பூதத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி (The Giant Impact Theory or The Ejected Ring Theory)
பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன ! நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி
1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.
50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

[தொடரும்]
தகவல்
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)12. https://www.eurekalert.
org/pub_releases/2017-12/sri- cam120117.php [December 4, 2017] 13. https://phys.org/news/
2017-12-collisions-moon- formation-remodeled-early.html[December 4, 2017] 14. http://www.terradaily.com/
reports/Collisions_After_Moon_ Formation_Remodeled_Early_ Earth_999.html [December 5, 2017] ******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] [Deember 9, 2017] [R-1]
-
“ஸ்ரீராம தர்ம சரிதம்” (20)
மீ.விசுவநாதன்பகுதி: 20
பாலகாண்டம்
“அமுதம் தோன்றுதல்”
சந்தியா வந்தனம் செய்து
தன்னுடைய குருமுகத்தை வணங்கி
வந்துள படகினில் ஏறி
வடபுறமே சென்றிடுவோம் என்று
புந்தியில் புனிதராம் இராமன்
புகன்றவுடன் அனைவருமே சென்றார்
இந்திர லோகமாய்க் காணும்
இவ்விடத்தின் பெருமைசொல்வீ ரென்றார் !நானறி செய்தியை உனக்கு
நன்றாகச் சொல்கிறேன்கேள் என்றார் !
“மானிடப் பிறவியில் மூப்பும்
மரணமுமே சுற்றிதினம் தாக்கும்
நாமதை வென்றிட வேண்டும்
நல்லமுதை உண்டாலே அந்த
தேவதை நிலைதனைக் கொள்வோம்
திகட்டாத பேரின்பம் காண்போம் !ஆதலால் வாசுகிப் பாம்பை
ஆற்றலுடைக் கயிறேனவே கொண்டு
தோதென மந்திர மலையைத்
தூக்கிவைத்து மத்தெனவே செய்து
காதலால் பாற்கடல் கடைந்தார்
கடும்பலத்தோர் அசுரதேவர் சேர்ந்து !
மாதவ முனியினைப் போன்ற
மருத்துவ”தன் வந்திரி”யே வந்தார் !அப்புவாம் நீர்க்கடல் கடைய
“அப்சரசாம் அழகிகளும் வந்தார்
இப்படி அடுத்ததாய் வருணன்
எழில்மகளாம் வாருணியும் வந்தாள் !
ஒப்பிலாக் குதிரையாம் அழகு
உச்சைசிரம், ரத்னமாலை வந்தது !
அப்படி மீண்டுமே கடைய
அமுதத்தேன் குடமங்கு வந்தது !“திதியின் தவம்”
அமுதினைக் கொண்டிட சண்டை
அசுரர்க்கும் தேவர்க்கும் நடக்க
சமயமாய் விஷ்ணுவே தோன்றி
சரியான தேவர்க்கே தந்தார்
தமதுயிர்ப் பிள்ளையர் மாள
காரணமாம் இந்திரனை வெல்ல
உமதருள் வேண்டினேன் என்று
உயிர்க்கணவன் காசியபர் முன்னேதிதியவள் பணிவுடன் கேட்டாள் !
வேண்டியதன் வரத்தினையே பெற்று
புதியதோர் மகன்தனைக் கொள்ள
புறப்பட்டாள் கடுந்தவமே செய்ய !
உதவியைச் செய்கிறே னென்று
ஓடிவந்தான் இந்திரனாம் தேவன் !
விதிவழி திதியவள் கர்பம்
விலகிடவே இந்திரனும் செய்தான் !“விசால நாடு”
தவத்தினை செய்துள இடமே
தர்மவானாம் “அலம்புசனின்” நாடு !
சகத்திலே நன்மையே செய்யும்
சக்ரவர்த்தி இஷ்வாகுவின் பிள்ளை !
இகத்திலே இனியபேர் விசாலன்
இவனாண்ட தேசமே”வி சாலம்” !
முகத்திலே ஒளிமிகு “சுமதி”
முறையுடனே இன்றாளும் ராஜா!என்றதோர் முனியவர் வாக்கை
இன்பமெனவே கொண்டிட்டான் ராமன் !
கன்றினைக் காத்திடும் பசுவாய்
கவனமுடன் ஆளுகின்ற “சுமதி”
நன்றியைக் கூறியே வருக
ஞானியரே என்றுவர வேற்றார் !
ஒன்றிய மனத்துடை முனியும்
ஓரிரவு தங்கிடவும் செய்தார் !(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 45, 46, 47ம் பகுதி நிறைந்தது)








