Blog

  • படக்கவிதைப் போட்டி (140)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    24550360_1497454750308719_486553151_n

    லோகேஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -3

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருவாரன் வில்லை – பார்த்தசாரதி பெருமாள்

    thiruvidanthai

    மண்வீழ்ந்த சக்கரத்தை மறுபடியும் தூக்கிடவே

    மனமொடிந்து மாவீரன் கர்ணனும் முயன்றிடவே

    மனங்குவிந்த சினம்கொண்டு தனயனைத் தாக்கிவிட்ட

    தனஞ்செயன் தவறுகள் களைந்திட்ட தலமன்றோ !

     

    ஆலிலையில் வந்தாலும் ஆயர்பாடி வளர்ந்தாலும்

    ஆதிசேடன் மேலுறங்கி அலைகடலில் வாழ்ந்தாலும்

    ஆதிமூலமென அழைத்தவுடன் அருள்செய்ய வருவானே

    ஆதிமுதல் அந்தம்வரை அருள்பவனே அரங்கத்தானே !!

     

    குழலோசை மயக்கத்திலே கூடிவரும் கோபியர்கள்

    குலம்மறந்து குடிமறந்து கோகுலனின் போதையிலே

    குழல்பறக்க  உடல்நெளிந்து கொடியெனவே அசைய

    குழம்பினவே ஆவினங்கள் கோவிந்தன் மாயையிலே !

     

    வான்செல்லும் கார்மேகம் வளிதன்னில் இளைப்பாற

    மான்போன்ற கோபியர்கள் நடுவினிலே நீயிருக்க

    தான்பெற்ற நிழலாகத் தன்னுருவம் உன்னில்கண்டு

    வியந்தே நிற்கின்றது கண்டாயோ வைகுந்தா !

     

    காழியிலே படமெடுத்து வலமிட்ட காளிங்கனை

    நாழியிலே நாடியடக்கி நடனமிட்ட நாரணனே

    தோழியர்கள் கூடிடவே தாள்பார்த்து ஆடியவனே

    ஊழியிலும் உயிர்காக்க உன்னையன்றி யாருண்டு ?

     

    போர்முனையில் நானில்லை தேரோட்ட நீயில்லை

    போதனைகள் சொல்லிவிடவே புதியகீதை தேவையில்லை !

    போக்கிடமே  பொற்பாதம் புகலடைந்தேன் புண்ணியனே

    போக்கிடுவாய் துயரமெல்லாம் புவியெல்லாம் காப்பவனே !

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 101.

    பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

    முனைவர் சுபாஷிணி

    அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூ யார்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே.

    unnamed (1)

    முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது.

    unnamed (2)

    சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ஆம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யார்க் நகரை ஜூன் மாதம் 1885ஆம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யார்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது.

    unnamed (3)

    அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும்.

    பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ஆம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. “எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார்.

    unnamed (4)

    கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    unnamed (5)

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
    30 rue des Marchands, 68000 Colmar, France

    அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது. பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!

    Share
  • சொர்க்க வாசம்

    images (2)

    ஓர் இரவு நெடுநேரம் தூங்க விடாமல் போக்கு காட்டிப் பின் ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம்

    காளியைத் துணைக்க ழைத்துக் காட்சியை அமைக்க வைத்துக்
    கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள்
    கண்டு கண்டு பரிகசிக்கிறாள்! – மனத்
    தூளியை அசைத்து விட்டுத் தூங்குமென்னைக் கிள்ளி விட்டுத்
    தூரம் நின்றபடி சிரிக்கிறாள் – என்
    துன்பம் சோர்வினை மிதிக்கிறாள்!

    நீளுமிக் கணத்தி லென்னை நெஞ்சமே அமர்த்திக் கொண்டு
    நீலியூழிக் கூத்திசைக்கிறாள் – என்றன்
    நினைவெலாம் அவள் வசிக்கிறாள்! – தங்கத்
    தோளிலே இருக்கை தந்து தோய்வெலாம் முடிப்ப தென்று
    தோன்றிவந்தவள் நடிக்கிறாள் – திசை
    தோறுமின்னிசை படிக்கிறாள்!

    அண்மையில் நெருங்கி வந்து அக்கரைக் குயர்ந்து தாவி
    அன்னை சக்தி போக்குசெய்கிறாள் – நின்று
    ஆவி யுள்ளில் வாக்கு செய்கிறாள்! – காணும்
    உண்மையில் ஜொலிக்கும் சக்தி உணர்வெலாம் இனிக்கும் சக்தி
    உச்சி கோதி எனையணைக்கிறாள்! – கொஞ்சம்
    உழல விட்ட பின்பிணைக்கிறாள்!

    நீரில்வான் நெருப்பு காற்று நிலத்திலே திளைக்கும் ஆதி
    நித்தநித்தம் நமை அசைக்கிறாள்! – நம்
    நரம்பிலேறிச் சுரமிசைக்கிறாள் – அந்தக்
    காரிலே வெடித்து வந்து கடலிலே கலந்து பின்னும்
    கரியமேக மாய்த்திரள்பவள்! – தன்
    கடமையாக்க நமைவிடுக்கிறாள்!

    இசையினோ டின்ப வெள்ள அசைவெலாம் சமைக்கு மன்னை
    ஆடுங்கூத்தை உள்ளில் காண்கிறோம் – அந்த
    அனுபவத்தில் ஞானம் பூண்கிறோம்! – சூழும்
    விசையெலாம் நமக்கு வாய்க்கும் விடையெலாம் அருட்க டம்ப
    வாசினியின் ஆசியென்கிறோம் – அதன்
    வாசனையே சொர்க்கமென்கிறோம்!!

    -விவேக்பாரதி
    10.12.2017

    Share
  • புறநானூற்றில் தமிழர் பண்பாடு   

    -வி.நாகலெட்சுமி

    முன்னுரை:

    சங்க இலக்கியம் தமிழர் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு ஆகும். இவற்றுள் அகம்-புறம் என்னும் பகுப்பு முறை தமிழர்களின் செம்மையான வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றன. அகவாழ்வைக் காட்டிலும் புறவாழ்வு தமிழுக்கென்ற தனித்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு பண்டைத்தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. மேலும் தமிழ் மன்னர்களின் சீர்சால் பண்புகளாம் ஒழுக்கமும், புலவர்களின் பண்பாடுகளாம் தன்மான உணர்வும், பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்குகளும், பண்பாடுகளும் பதிவு செய்யப்பெற்று பண்டைத் தமிழரின் பெருமையைப் புறநானூறு மற்ற இனத்தாரும் பிறநாட்டாரும் வியப்புறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பண்பாட்டுப் பதிவுகளை தொகுத்துக் காட்டுவது இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    பண்பாடு – விளக்கம்:

    பண்பாடு என்பது ‘பண்படுதல்’ எனும் சொல்லின் வினையடியாகப் பிறந்தது. பண்படுதல், ஒன்றுபடுதல், இசைவு பெறுதல், இசைந்து ஒழுகுதல் போன்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது பண்படுதலே பண்பாடாகும். “ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் அமைப்பு அல்லது மன அளவிலான விதி” எனக் கருத்தியலாளர்கள் பண்பாட்டிற்கு ஒரு பொது விளக்கம் தருகின்றனர்.

    பண்டை மறம்:

    பண்டைத்தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் வருவதை முன்கூட்டியே அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப்படக்கூடாது என்ற உயர்ந்த பண்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனை,

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும்
    பிணியுடை யீரும் பேணித்
    தென்புல
    வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற்
    புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்
    அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”      (புறம் – 9)

    என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம். மேலும் போர் நெறியிலும் அறநெறியைக் கடைப்பிடித்துப் பசு, பெண்டிர், பார்ப்பனர், பிணியுடையோர், இறந்தவர்க்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்குரிய பிள்ளைகளைப் பெறாதவர் ஆகியோரை பாதுகாப்பான இடத்தை அடைவீராக என்று மக்களை எச்சரிக்கும் நோக்கில் மன்னனது பேணும் இயல்பும், கருணை இயல்பும் வெளிப்படுகின்றன.

    நீர்வளம்:   

    நாட்டுவளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள நீர்வளத்தின் இன்றியமையாமையைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்தும் குடபுலவியனார்,

    உணவுஎனப் படுவது நிலத்தோடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும்
    உயிரும் படைத்திசி னோரே”   (புறம் – 18)

    என்ற பாடல் வழி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப்படுத்துவது அரசியலில் அரசனின் தலையாயக் கடமை என்றும், அத்தகைய அரசனே நிலைபெற்ற புகழ்பெற முடியும் என்றும் அறிவுறுத்தியமை புலனாகிறது.

    ஒற்றுமை உணர்வு:

    ‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதைப் புலவர், இருவேறு அரசர்கள் ஒருசேர இருந்தமையை நோக்கி இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என வாழ்த்தியமையை,

    இருவீரும்
    உடன்நிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
    பௌவம்
    உறுத்தஇப் பயம்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய் ஆகாதே”   (புறம் – 58)

    என்ற பாடல்வழி அறியலாம். தமிழக மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு போரிட்டால் வேற்றுப்புலத்து அரசர்களுக்குத் தமிழகம் ஆளும் இடமாகும் என்பதும் ஒற்றுமையினால் உலகம் வசப்படும் என்பதும் புலனாகின்றது.

    பகுத்துண்ணும் பண்பு:

    பழந்தமிழர்  பகுத்துண்ணும் பண்பினைப் பெரிதாகப் போற்றினர். கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் அனைவரோடும் பகுத்துண்டார்கள் என்பதை,

    இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
    இனிதெனத்
    தமியர் உண்டலும் இலரே” (புறம் – 182)

    எனப் புறநானூறு காட்டும். ஔவையார் அதியமானின் வீரத்தைப் பாராட்டுவதுடன், அவன் எல்லாருக்கும் பகுதுக்கொடுத்து உண்ணும் இயல்பினான் என்பதைச் சுட்டுகின்றார்.

    உண்டாயின் பதம் கொடுத்து
    இல்லாயின்
    உடன் உண்ணும்
    இல்லோர்
    ஒக்கல் தலைவன்”   (புறம் – 95)

    என்ற பாடல்வழி அதியமானின் உயரிய பண்பை ஔவையார் வெளிப்படுத்துகின்றார்.

    கல்வியின் பெருமை:

    மனிதனை மேம்படுத்தவும் நன்னெறியில் செல்ல வைப்பதற்கும் சிறந்த செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமாகும். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்ற உயர்நிலைக்குத் தமிழகம் அக்காலத்து மேம்பட்டு விளங்கியது. ஆசிரியருக்குத் துன்பம் வந்தபோது உதவியும், வேண்டிய பொருள் கொடுத்தும், வழிபாட்டு நிலையை வெறுக்காது கற்பது நன்று எனக்கூறும் பாண்டியன் ஆரியப்படைக்கடந்த நெடுஞ்செழியன்,

    ஒருகுடிப்  பிறந்த  பல்லோ  ருள்ளும்
    மூத்தோன்  
    வருக  என்னாது அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை
    தெரிந்த  நற்பா  லுள்ளும்
    கீழ்ப்பால்  
    ஒருவன்  கற்பின்
    மேற்பால்  
    ஒருவனும்  அவன்கண்  படுமே”   (புறம் – 183)

    என்று உலகியலில் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றான். கல்வி உயர்வு தாழ்வினை நீக்குகிறது. அரசனும் கற்றவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பு கொண்ட பலரில் கற்றவனையே தாயின் மனம் மிகவும் விரும்பும் என்பதை அறியமுடிகிறது.

    வரி வாங்கும் முறை:

    அரசன் தன் நாட்டு வருவாய்க்காக, மக்களிடம் வரிவாங்குதல் முறையேயாயினும், ஒரு சமயத்தில் மக்கள் துன்புறுமாறு வாங்கும் வரிப்பணத்தினால் அரசனுக்குக் கேடு வரும்; மக்களுக்குத் துன்பம் வரும். இதனை அரசன் உணர வேண்டும்.

    பரிவுதப எடுக்கும் பிண்டம்  நச்சின்
    யானை
    புக்க புலம் போலத்
    தானும்
    உண்ணான் உலகமும் கெடுமே”   (புறம் – 184)

    என்று பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்துகின்றார்.

    செல்வத்துப் பயனே ஈதல்:

    செல்வம் என்பது சிந்தையின் நிறைவாகும். பிறருக்குக் கொடுத்து மகிழும் வாழ்வே சிறப்புடையது. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே எனக் கூறி,

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம்
    எனினே தப்புந பலவே”    (புறம் – 189)

    என்று நக்கீரனார் பொதுவாக அறிவுறுத்துகின்றார். அறவழியில் பொருளீட்டித் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் கொடுத்து அவர்களையும் இன்புற்று வாழவகை செய்வதன் மூலம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகள் மேம்பட்ட தன்மைகளாக விளங்கியமை புலனாகின்றது.

    மனிதநேயம்:

    பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலகமக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். மனிதநேயமே இவ்வுலகிற்கு அவசியம். ஒருமைப்பாடே ஊக்கம் என்பதைக் கணியன் பூங்குன்றனார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே,

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும்
    நன்றும் பிறர்தர வாரா
    ————————————————–
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை
    இகழ்தல் அதனினும் இலமே”   (புறம் – 192)

    என்று ஒற்றுமையுணர்வையும், மனிதநேயத்தையும், நன்மையும் தீமையும் நமக்கு நம்மால்தான் வருகிறது என்பதையும் பறைசாற்றுகிறார். இப்பாடல் தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்குவதாக அமைகின்றது.

    முடிவுரை:

    எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு பண்டையத் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டை மெய்மையுற விளக்கும் கலங்கரை விளக்கமாகும். மறத்தில் அறமும், நீர்வளம் குறித்த சிந்தனையும், பகுத்துண்ணும் பண்பும், ஒற்றுமை உணர்வும், ஏற்றத்தாழ்வை நீக்கும் கல்வியும், மக்களைத் துன்புறுத்தாது வரிவாங்கும் முறையும், அனைவரையும் ஒன்றாக எண்ணும் மனிதநேயமும் பண்டையத் தமிழரிடையே நிலவியமை புலனாகின்றது. இன்றைய நாகரிக உலகில் சிலர் பண்பாட்டை மறந்தும், இழந்தும் வரும் வேளையில் அவற்றை நினைவுகூர்வது சாலப் பொருந்தும்.

    துணை நின்ற நூல் ஆதாரங்கள்:

    1. புறநானூறு மூலமும் உரையும் – ஒளவை துரைசாமிப்பிள்ளை.
    2. பண்பாட்டு மானுடவியல் – பக்தவத்சல பாரதி.
    3. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி.

    *****
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(196)

    -செண்பக ஜெகதீசன் 

    வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.  (திருக்குறள் -674:வினைசெயல்வகை) 

    புதுக் கவிதையில்… 

    செய்யும் செயல்,
    ஒழிக்கும் பகை இவற்றில்
    முடிக்காது மிச்சம் வைத்தல்
    என்பது,
    அணைக்காது மிச்சம்வைத்த
    நெருப்புபோல்
    கெடுதலே தரும்…! 

    குறும்பாவில்… 

    செயல் பகை இரண்டையும்
    முடிக்காது மிச்சம்வைப்பது, அணைக்காமல்
    மிச்சம்வைத்த தீபோல் கெடுதல்தரும்…!      

    மரபுக் கவிதையில்… 

    செயலைச் செய்யத் தொடங்கிவிட்டால்
    -செய்து முடித்திடு மிச்சமின்றி,
    தயவு யேதும் காட்டாமல்
    தொடரும் பகையை முடித்துவிடு,
    அயர்வு கொண்டே யிவையிரண்டில்
    அணுவள வேனும் மீதிவைத்தால்,
    உயரும் தீயை அணைக்காமல்
    விட்ட மீதியாய்க் கெடுதிதானே…! 

    லிமரைக்கூ… 

    செயல்பகையில் வைக்கவேண்டாம் மிச்சம்,
    முற்றிலும் அணைக்காமல் விட்டதீபோல்
    இதுதருமே அழித்துவிடும் அச்சம்…! 

    கிராமிய பாணியில்… 

    வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
    வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…
    முழுதும் வேலய செய்யாமலே
    மிச்சம் வச்சாலும்,
    மோதவாற பகய முழுசா அழிக்காம
    மிச்சம் வச்சாலும் ஒண்ணுதான்…

    இந்த ரெண்டுமே
    முழுசா அணைக்காம
    மிச்சம்சவச்ச தீபோல
    முழுசாத்தருமே கெடுதியையே…

    அதால,
    வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
    வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…!

     

     

    Share
  • இலக்கண விளக்க யாப்பியல் – 3

    – ம.பிரபாகரன்

    யாப்பருங்கலக்காரிகையில் உள்ள சூத்திரத்தில் ஆறாவது அடிவரை உறுப்பு பற்றிய செய்தி இடம்பெறுகிறது. ஏழாவது எட்டாவது அடியில் பா மற்றும் பாவினம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. ஆனால் யாப்பருங்கல விருத்தியில் ஏழாவது அடி தூக்கு பற்றியதாகும். யாப்பருங்கலத்தின் கொள்கைப்படி செய்யுளுறுக்கள் ஏழு. இதில் ஏழாவது வருவது தூக்கு. யாப்பருங்கலத்தின் சூத்திரத்தை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்: 

    எழுத்தசை சீர்தளை யடிதொடை தோக்கோ
    டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே. (சூத்.1)

    இவ்வாறு யாப்பருங்கலத்துடைய யாப்புறுப்புக்கொள்கையில் தூக்கு இடம்பெற்றிருப்பதால் யாப்பருங்கலவிருத்தியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்
    ” எழுதப்படுதலின்” எனத்தொடங்கும் மேற்கோள் சூத்திரத்தில் ஏழாவது அடி தூக்கு உறுப்பு கூறுவதோடு முடிகிறது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையைப் பொறுத்த அளவில் அதனுடைய உறுப்புக்கொள்கையில் தூக்கு என்ற உறுப்பு இடம் பெறவில்லை. எனவே யாப்பருங்கலக் காரிகையின் மேற்கோள் சூத்திரம்  எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்பே கூறுகிறது. எனவே யாப்பருங்கலக் காரிகையில் இடம்பெறும் மேற்கோள் சூத்திரமாகிய எழுதப்படுதலின் … என்ற சூத்திரத்தில் ஏழாவது அடியில் தூக்கு பற்றிய அடி இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஒரு பொது அறிமுகத்தின் பொருட்டுப் பா மற்றும் பாவினத்திற்கு இரண்டு அடி கூடுதலாகக் கொடுக்க பட்டுள்ளது.

    யாப்பருங்கலக்காரிகையின் இந்த மேற்கோள் சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே எடுத்தமைத்துக்கொண்டதே தவிர இது பாடவேறுபாடாகாது என்று தோன்றுகிறது.  இந்தச் சூத்திரம் யாப்பருங்கலவிருத்தியிலும், யாப்பருங்கலக்காரிகையிலும் சற்று வேறுபட்டுக்காணப்படுவதற்கு அவ்வவ் நூல்களின் யாப்புறுப்புக்கள் குறித்த கொள்கையே காரணம் என்பது மேற்சொல்லப்பட்டது. இத்தொடர்பில் எழும் இன்னொரு ஐயம், இதற்குரிய மூலச்சூத்திரத்தை எழுதியது யார்? என்பதாகும். இதற்குரிய மூலச்சூத்திரம் யாப்பருங்கல விருத்தியில் காட்டப்பட்டிருக்கின்ற சூத்திரமா? அல்லது யாப்பருங்கலக்காரிகையில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரமா? என்பதாகும். காலநிலையில் யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கலக் காரிகை உரைக்கு முற்பட்டதாகும். எனவே யாப்பருங்கல விருத்தியிலுள்ள சூத்திரமே காலத்தாற் முற்பட்டது என்று கூறத் தோன்றும். எனினும் யாப்பருங்கல மரபில் உள்ள மேற்கோள் சூத்திரங்கள், யாப்பருங்கலத்திற்கு முந்தைய பழமை உடையனவாகத் திகழ்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் ” எழுதப்படுதலின்….எனத்தொடங்கும் சூத்திரத்தை எடுத்துக்காட்டிய பின் ” என்றார் ஆசிரியரெனக் கொள்க  ” (பக்.18; மு.சு.நூ) என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையில் இச்சூத்திரம் காட்டப்பட்டபிறகு  ” என்றாராகலின் ” என்பது காட்டப்பட்டுள்ளது. என்றாராகலின் என்பதற்குப் பாடவேறுபாடாக என்பவாகலின் என்பது வே.பால்ராஜ்ஜினால் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தியில் இச்சூத்திரத்தை அடுத்து ” என்றார் ஆசிரியரும் ” என்றிருப்பதால் ஒருவேளை அது அமிர்தசாகராகவும் இருக்கலாம். எனினும் உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை இது ஆய்விற்குரியது.

    மேலே யாப்பருங்கல மரபினுடைய  சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே

    எடுத்துப் பயன்படுத்திக்கொண்டதைப் பார்த்தோம். இனி யாப்பருங்கல மரபினுடைய சூத்திரங்களைத் தழுவி இலக்கணவிளக்கம் எங்ஙனம் சூத்திரத்தை அமைத்துக்கொள்கிறது எனப் பார்க்கலாம். உதாரணமாக யாப்பருங்கலத்தில் வரும் அசைகள் பற்றிய சூத்திரத்தை இலக்கணவிளக்கம் எப்படி தழுவிக்கொள்கிறது எனப் பார்க்கலாம்.

    யாப்பருங்கலத்தில் வரும்  அசைகள் பற்றிய சூத்திரம்: 

    ”  நெடில்குறில் தனியாய் நின்று மொற்றடுத்து
    நடைபெறு நேரசை நால்வகை யானே   (யாப்.6) 

    குறிலிணை குறினெடி றனித்து மொற்றடுத்தும்
    நெறிமையி னான்காய் வருநிரை யசையே (யாப்.8)

    இச்சூத்திரங்களைத் தழுவி, இலக்கணவிளக்கம்:

    நெடிலுங் குறிலுங் தனித்துமொற் றடுத்து
    நடைபெறு நேரசை நான்கு நீங்காக்
    குறிலிணை குறினெடிற் றனித்துமொற் றடுத்து
    நெறிவரு நிரையசை நான்கு மாகும் (இல.வி.714)

    என்று தன் சூத்திரங்களை அமைத்துக் கொள்கிறது.

    மேலே இலக்கண விளக்கம் யாப்பருங்கல சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும் அமைத்துக் கொண்டதையும் கண்டோம். மேலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி ஆகியவற்றின் உரைகளைத் தழுவி தம் உரையை அமைத்துக்கொள்ளும் போக்கையும் கவனிக்க முடிகிறது. கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம்.

    யாப்பருங்கல விருத்தி:

    கடியார் பூங்கோதை…….” இதனுள் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் அலகிடன், ஆசிரியத்தளையும், கலித்தலையும் தட்டு, வெள்ளையுள் பிறதலை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின் அதனைக் ‘ கடியார்பூ ‘ என்று புளிமாங்காய் ஆகவும் ‘ கோதை ‘ என்று தேமா ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதையாவாம். (பக். 396, இரா.இளங்குமரன் பதிப்பு யாப்பருங்கல விருத்தியுரை:1976 )

    யாப்பருங்கலக்காரிகை:

    கடியார் பூங்கோதை….இதனை கடியார் எனவும், ‘ பூங்கோதை ‘ எனவும் அலகிடின் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு வெள்ளைத்தன்மை குன்றுமாதலால் ‘ கடியார் பூ ‘ என்று புளிமாங்காயாகவும் ‘கோதை ‘ என்று தேமாவாகவும் ‘ கடாயினான் ‘ என்று கருவிளமாகவும் அலகிட்டு கொள்க. (பக்: 281, மு.சு.நூ)

    இலக்கண விளக்கம்:

    ” கடியார் பூங்கோதை…இதனுள் கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும், கலித்தளையும் தட்டு செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதையாவாம் (பக்.774, மு.சு.நூ).

    மேற்கண்ட  உதாரணங்களில் இலக்கணவிளக்க உரைப்பகுதி யாப்பருங்கலக்காரிகையைக் காட்டிலும்  யாப்பருங்கல விருத்தியோடு ஒத்தமைவதைக் கவனிக்க.

    இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:

    யாப்பருங்கலக்காரிகை:

    ” பாடுநர்க்கும்…..இதனுள் டுகர நகரங்கள் பிரிந்திசைத்தனவாயினும் இரண்டினையுங் கூட்டி நிரையசையாக அலகிடச் சீரும், தளையும் சிதையாவாம். அல்லாவிடின் நாலசைச் சீராய் வண்ணமழிந்து ஓசையுண்ணாது கெடும் பிறவுமன்ன.(பக். 282, மு.சு.நூ)

    யாப்பருங்கலவிருத்தி

    ” பாடுநர்க்கும்….இப்பாட்டினுள் டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின் வண்ணம் அழிந்து கிடக்கும்.

    இலக்கண விளக்கம்:

    ” பாடுநர்க்கும்…இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச்சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர, நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச் சிதையாதாம்; இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க. (பக்.774, மு.சு.நூ)

    மேற்கண்ட அட்டவணையில் இலக்கணவிளக்கத்தின் உரைப்பகுதி யாப்பருங்கல விருத்தியை விட யாப்பருங்கலக் காரிகை உரைப்பகுதியோடு ஒத்திருப்பதைக் கவனிக்கமுடியும்.

    இலக்கண விளக்கம்,  செய்யுளியல் இறுதிப்பகுதியில் வைத்து விளக்கும் வகையுளி, வாழ்த்து,  எண்வகை வனப்பிலக்கணம், குறிப்பிசை, ஒப்பு, வண்ணங்கள் , புனைந்துரை, ஆனந்தம், அடிவரையறையில்லாத செய்யுள்வகை ஆகியவை யாப்பருங்கல மரபைப் பின்பற்றியே விளக்கப்பட்டுள்ளன. வண்ணத்தைப் பொறுத்தவரை வரிசைமுறை அடிப்படையில் (அதாவது வகையுளி, வாழ்த்து, வனப்பு, குறிப்பிசை, ஒப்பு, வண்ணம் என்ற முறையில்) யாப்பருங்கல மரபையும், விளக்க முறை அடிப்படையில் தொல்காப்பியத்தையும் (மூலம், )  யாப்பருங்கல மரபையும் (உரை)  இலக்கணவிளக்கம் பின்பற்றுகிறது. அது சூத்திரத்தில் தொல்காப்பியர் காட்டிய இருபது வண்ணங்களைப் பற்றி மட்டுமே கூறினாலும் உரையில் வண்ணம் நூறு என்றும்  கூறி யாப்பருங்கல மரபையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அது யாப்பருங்கல மரபையே முன்னிலைப்படுத்துகிறது. மேலும் அது  வண்ணங்கள் நூறு என்று கூறுவதோடு மட்டும் அமையாமல் ” அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம் நெடிலகவற் றூங்கிசை வண்ணமென வண்ணம் நூறென்பாரும் உளர். அவ்வேறுபாடும் உணர்க ” (பக்.732, மு.சு.நூ) என்று  கூறுவதன் மூலம் யாப்பருங்கல மரபின்  வண்ணம் தொடர்பான எந்தச் செய்திகளும் விட்டுபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதையும் கவனிக்கமுடிகிறது.

    யாப்பருங்கலத்தின் உரையும் யாப்பருங்கலக்காரிகை உரையும் வண்ணங்கள் நூறு என்று கூறினாலும் அவை தொல்காப்பியத்தின் வண்ணம் தொடர்பான சூத்திரங்களை எடுத்துக்காட்டுவதையும் இவண் நினைவு கூறவேண்டும். அதனோடு ஒரு புடை ஒப்புமையாக,  இலக்கண விளக்கம், சூத்திரத்தில் இருபது வகை வண்ணங்களையும் கூறி உரையில் யாப்பருங்கல மரபின் வண்ணங்களைக் கூறுவதை ஒப்புநோக்க வாய்ப்புண்டு.  எனினும் இலக்கண விளக்கத்தினுடைய வண்ணம் பற்றிய சூத்திரம் தொல்காப்பியத்தின் சூத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. தழுவி என்பதை விட தொல்காப்பியச் சூத்திரம் என்றே கூறலாம். இவ்விடத்தில் தொல்காப்பியம் மற்றும் இலக்கண விளக்கம் ஆகியவற்றின் வண்ணம் பற்றிய சூத்திரத்தை எடுத்துக்காட்டுவது பயனுடையதாக இருக்கும்:

    தொல்காப்பியம்:

    ” வண்ணந் தாமே நாலைந் தென்ப ” ( தொல்.செய். 214)

    ”  அவைதாம்
    பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
    இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
    நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
    சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
    அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
    ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
    எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
    தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
    உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று
    ஆங்கென மொழிப அறிந்திசினோரே (தொ.செய்.216)

    இலக்கண விளக்கம்:

    வண்ணந் தானே நாலைந் தவைதாம்
    பாஅ வண்ணந் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
    மியைபு வண்ண மெல்லிசை வண்ண
    நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ்
    சித்திர வண்ண நலிபு வண்ண
    மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
    மொழுகு வண்ண முரூஉ வண்ண
    மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந்
    தூங்கல் வண்ண மேந்தல் வண்ண
    முருட்டு வண்ண முடுகு வண்ணமென்
    றாங்கென மொழிப வறிந்திசி னோரே (இ. வி.  757)

    இரு சூத்திரங்களையும் ஒப்புநோக்குக.

    இங்குச் சூத்திரநிலையில் இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகிறது என்பதே சரி எனினும் சூத்திரத்தோடு உரையையும், வண்ணத்தை விளக்க எடுத்துக் கொண்ட வரிசை முறையையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது (இலக்கண விளக்க மூலமும், உரையும் ஒரே நபரால் செய்யப்பட்டதாக இருப்பதினால் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது) இலக்கண விளக்கம் வண்ணம் பற்றிய கொள்கையில்  யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறது என்பதே நேரிதாகும். நாமிங்கே  இதை விரிவாகக் கூறுவதற்குக் காரணம் ஒரு நூல் பல நூல் செய்திகளை எடுத்தாண்டாலும் அது பின்பற்றும் மூலநூலே அது சார்ந்த கோட்பாட்டை விளக்க வல்லதாக இருக்கும் என்பதாலேயேயாகும். இது போல (வண்ணம் பற்றிய சூத்திரத்தில் இலக்கண விளக்கம் தொல்காப்பியச் சூத்திரத்தை பயன்படுத்துவது போல)   இலக்கண விளக்கம் தொல்காப்பியம் சார்ந்த சில செய்திகளைப் அடியொற்றினாலும் அது சார்ந்திருக்கும் மரபு என்பது யாப்பருங்கல மரபேயாகும்.

    இதுகாறும் கண்டவற்றால் இலக்கணவிளக்கம் தொல்காப்பியத்தின் சில செய்திகளை எடுத்தாண்டாலும்,  தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தன்வழியை அமைத்துக்கொள்ளவில்லை என்பதையும் அது யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
    புதுச்சேரி

     

     

    Share
  • விடையில்லா விடுகதை..!

    Mahatma Gandhi with Cheering Female Fans at Greenfield Mill, Darwen, Lancashire

    விடையில்லா விடுகதைபோல வினாப்பல உண்டிங்கே..
    விடையில்லை இன்றளவும் எஞ்சுவது வினாவொன்றே.?
    படையுடன் போர்தொடுத்து பகையிலா நாட்டையும்..
    பழிதீர்க்கும் செயலுக்குத் தகும்காரணம் ஏதுமுண்டா.?
    இடைத்தரகர் இறாது எதையுமிங்கே செய்யமுடியுமா..
    எதுவும்முடியும் அவர்தயவால் என்பதுதான் நியாயமா.?
    கடையேழு வள்ளலையும்கூட வஞ்சகரெனக் கூறுவார்..
    குறையில்லா மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறாரா.?

    பொதுச்சொத்தை அழிக்கும் புரட்சியின் நோக்கம்தான்..
    பொதுநலமெனச் சொல்லியது சழக்கரின் சதிச்செயலோ.?
    பொதுஊர்வலம் போராட்டம் மறியல் கண்டனமெனப் ..
    புதிதாக வெடிக்கும்பல விடையில்லா விளம்பரத்தோடு.!
    எதுக்காகப் பயணியர்செலும் பேருந்திற்கு தீவை
    என்னநோக்கம்? இன்னுமிது விடையில்லா விடுகதை.!
    கொதிக்கும் உள்ளத்தில் எழும்நல் எண்ணங்களால்..
    கொந்தளிக்கும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.!

    உத்தமர்கள் பலருமுதித்த உலகுபுகழ் நம்திருநாட்டில்..
    உலவுகின்ற அவலங்கள்பல இன்னமும் தீரவில்லை.!
    ஒத்துவாழும் உணர்வுடன் உள்நாட்டு மாநிலங்களும்..
    ஒன்றுக்கொன்று உறவாடி ஒன்றிடும்நாள் எந்நாளோ.?
    அத்தியாயம்போல இச்சதிச்செயலெலாம் நீளும்..இந்த
    அநியாயத்துக்கிது தீர்ப்பென ஆய்ந்தவழி எதுவோ.?
    அத்துணைக்கும் ஒருநாளில் முற்றுப்புள்ளி வரும்..
    என்பதெலாம் “விடையில்லா விடுகதை” போலாகும்.!

    கைநிறையப் பணமீட்டி மனம்நிறைந்து வாழலாமென..
    கல்லூரிக்குக் கையூட்டு கொடுத்துக் கல்விபயின்றேன்.!
    பைநிறைக்கும் எண்ணமுடன் பலருமலையும் இந்தப்
    பைத்தியங்களில் நானொருவன் எனப் பின்பறிந்தேன்.!
    கையாலாகதவனெனும் பட்டப் பெயருடன் கடைசியில்..
    காலமிடும் விடுகதைக்கு விடைதேடி அலைகின்றேன்.!
    கைபார்த்துன் காலத்தைக் கணிக்காதே கையிலாதவருக்கும்..
    காலமுண்டு.!…கலாம் மொழிந்ததை நினைவுறுகிறேன்.!

    ================================================

    நன்றி:: தினமணி வெளியீடு::04-12-17
    நன்றி:: படம் கூகிள் இமேஜ்
    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (86)

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளின் திறன்

    நலம்-1-2-1

    உங்கள் வீட்டுக்குக் குழந்தை சுவற்றில் கிறுக்கினால் கோபம் எழுகிறதா? என்னதான் காகிதமும் பென்சிலும் கொடுத்தாலும், குழந்தைக்கு என்னவோ கண்ட இடத்தில் கிறுக்குவதுதான் உவப்பாக இருக்கும். பெரியவர்கள் திட்டினால், தம் தொடையிலேயே வரைந்துகொள்ளும் குழந்தைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களால் வரைவதை நிறுத்த முடியாது.

    இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கே தெரியாமல், ஏதோ திறமையைக் கொடுத்திருக்கிறது. பெற்றோருடையதை ஒத்திருக்கும் என்பதுமில்லை.

    சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் திறனைக் கண்டுகொள்ளும் பெற்றோர் அது மேன்மேலும் வளர துணை புரிகிறார்கள். மகா புத்திசாலி என்னும் குழந்தைகூட எல்லாத் துறைகளிலும் சிறந்திருக்காது. ஏதோ, ஒன்றிரண்டில்தான்.

    மிகப் பிரபலமான ஒரு மிருதங்க வித்வான் என்னிடம் கூறியது: “நான் முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றேன். ஒரு திருவிழாவின்போது என் தகப்பனார் தன் தோளில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, அவர் தலையில் இரு கைவிரல்களாலும் தாளம் போட்டுக்கோண்டே இருந்தேன். `இந்தப் பயலுக்கு தாளத்தில்தான் அதிக ஆர்வம்!’ என்று அவர் என்னை மிருதங்கம் கற்க அனுப்பினார்”.

    பதினெட்டு வயதிலேயே இந்தியாவில் தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். குருகுல வாசம் என்னும் முறைப்படி பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதிக்கிறார். உலகின் பல பாகங்களிலும் இவரது பாணி தவறாது, சீடர்கள் தாளவாத்தியக் கலையைப் பரப்புகிறார்கள்.

    கேள்வி: யார் இவர்?

    இன்னொரு சிறுவன் தன் அண்ணன் தற்காப்புப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஏக்கத்துடன் கதறி அழுவான். இவனுக்கோ நான்கு வயதுதான். சமாதானப்படுத்த அண்ணனைப்போன்ற உடை வாங்கிக்கொடுத்தார்கள் பெற்றோர். ஏழு வயதில் முறையாக ஆரம்பித்த பயிற்சியால் இன்று நாட்டைப் பிரதிநிதித்து முன்னணியில் இருக்கிறான். இது மலேசியாவில்.

    பிரபல தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் பள்ளிப்பருவம் வரும்வரை காலை ஆறு மணியிலிருந்து வாத்தியத்தை வாசித்துப் பழக வேண்டும் என்று அவருடைய ஆசிரியர் (தந்தை) கண்டிப்பாக இருந்தார். ஆறு வயதுக்குமேல் அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாதகமாம்! அவருக்கு ஆர்வமும் திறமையும் ஒருங்கே அமைந்திருந்தன. அதனால் பிற குழந்தைகளை அவரைப்போல் பெற்றோர் நடத்தவில்லை என்பது குறையாகப்படவில்லை.

    ஒரு கச்சேரிக்குப்பின், விமர்சகரான நான் அவரைப் பாராட்டியபோது, வெட்கத்துடன் நுனிநாக்கை வெளியே நீட்டி, தோள்களைத் தூக்கிக்கொண்டார் – ஒரு குழந்தைபோல! எதுவும் பேசவில்லை!

    சுவற்றில் கிறுக்கிய குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே வித விதமான வண்ணக்கலவைகளும், வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பென்சிலும் வாங்கிக் கொடுத்தாள் அதன் தாய். தான் தொடையில் கிறுக்கிக்கொண்டது அவளுக்கு மறக்கவில்லை. மணிக்கணக்கில் சாப்பிடக்கூட மறந்து வண்ணம் தீட்டுகிறாள் அந்தப்பெண்.

    இப்படியாக, கலை, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களுடைய இயற்கையான ஆர்வமும் திறமையும் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் வளர்க்கப்பட்டிருப்பது புரியவருகிறது.

    சாதனையாளர்கள்தாம் குழந்தைப் பருவத்திலேயே தம் திறனை வெளிக்காட்டுகிறார்கள். பெற்றோருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த துறையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியமாகப்பட, `இதனால் பணமும், புகழும் கிடைக்குமா?’ என்ற யோசனை வருவதில்லை.

    ஒருவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மனதில் அமைதி நிலவுகிறது. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்துப் பொறாமை எழுவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தாம் செய்வதில் மனநிறைவு கிட்டிவிடுகிறது.

    சிறு வயதில் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக பெற்றோர் இருந்திருந்தாலோ, இயற்கைத்திறன் அப்போதே நசித்துவிடும். ஏக்கமும், ஏமாற்றமும்தான் தொடரும்.

    திறமையை எப்படி வெளிக்கொணர்வது?

    படிப்பது, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மனிதர்கள் என்று பல விஷயங்களிலும் ஒரு சிறுவனை ஈடுபடுத்துவது நல்லது. தனக்குப் பிடித்தது என்னவென்று புரிந்து, அதில் முனைப்புடன் ஈடுபடுவான்.

    வாய் ஓயாது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சிறுமி எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆகலாம். உதாரணம்: அடியேன்!

    பிடித்துத் தள்ளாதே!

    சிலருக்குத் திறமை இருந்தும் அத்துறையில் ஆர்வம் இல்லாது போகலாம். அப்போது அவர்களை வற்புறுத்தி அதில் ஈடுபடச் செய்வது மகிழ்வை ஊட்டாது.

    `நீ பெரிய பாடகியாக வேண்டும். விளையாடி பொழுதை வீணாக்காதே!’ என்று பிற குழந்தைகளுடன் கலந்து பேசி, விளையாடக்கூட அனுமதிக்காத தாயைப்பற்றி கசப்புடன் பேசும் பாடகியை அறிந்திருப்பீர்கள்.

    ஆசையா, பேராசையா?

    குழந்தைப் பருவத்திலேயே பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும், அல்லது ஒரே துறையில் முழுமனதாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசைதான்.

    பாடம், பயிற்சி என்பதெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுவதாக, `அடுத்த பாடம் எப்போது?’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும். அலுப்புக்கும், அச்சத்திற்கும் அங்கு இடமில்லை. திட்டியும் அடித்தும் பாடம் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்கள், `படிப்பதெல்லாம் போட்டிக்காக, அல்லது பரீட்சை சமயங்களில்தான்!’ என்ற சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள்.

    இளமைக்காலத்துக்கே உரிய களிப்பு, சிரிப்பு, விளையாட்டு, பிறருடன் பழக முடிவதால் யாரை நம்பலாம், யாரை ஒதுக்க வேண்டும் என்ற – வாழ்க்கைக்கு முக்கியமான — அனுபவங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

    ஒப்பிடாதே!

    எல்லாருமே சாதனையாளர்கள் ஆகிவிட முடியுமா? இதனால் மற்ற குழந்தைகள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

    `நீயும் இருக்கிறாயே! உன் தம்பியைப் பார்! எவ்வளவு புத்திசாலி!’ என்று இழித்துரைக்கும் பெற்றோர் இத்தகைய ஒப்பிடுதலால் தாழ்வு மனப்பான்மையை விதைத்து, ஒரு சிறுவனுக்கு இருக்கும் சொற்ப திறமையையும் அழித்துவிடுகிறார்கள்.

    `அடக்க முடியவில்லை!’ என்று பள்ளிக்கூடத்தில் தண்டிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

    கதை

    ஒரு வயதுக்குள்ளாகவே ஏதாவது ராகத்தை இழுத்துக்கொண்டிருப்பாள் சந்திரிகா. ஒன்றரை வயதில் கதை சொல்வாள் – மழலையில்தான். அவளுக்கு நான்கு வயதானபோது, பாலர் பள்ளி ஆசிரியை புகார் செய்தாள் – அடிக்கடி வகுப்புக்கு வெளியே அவள் போய்விடுகிறாள், அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் போய்விடுகிறார்கள் என்று.

    தாய் மகளிடம் கேட்டபோது, “நடப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்லியிருக்கியேம்மா! எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவில்லை. அதுதான்!” என்றாள்!

    முதல் வகுப்பிலிருந்து பல வருடங்கள் அவளுடைய கையெழுத்து மோசம் என்ற புகார் வந்தது.

    இம்மாதிரிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி, குறைகளைப் பெரிதுபடுத்தாது இருத்தல் நலம். பள்ளிக்கூடத்தில் திட்டி, அடிக்கிறார்களே என்று தாயும் அதுபோல் செய்யாது, மகளுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

    ஒரே ஒரு ஆசிரியை மட்டும் சொன்னாள், `இவளைப்போன்ற புத்திசாலியைப் பார்த்ததேயில்லை!’ என்று. ‘SUPER BRAINS’ என்ற பிரிவைச் சேர்ந்தவள் சந்திரிகா.

    வயதுக்குமீறிய அறிவு இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளை வேலை செய்யும் வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்காது. எதையும் வேகமாகச் செய்ய முற்படுவதால் எழுதுவது கிறுக்கலாக இருக்கும். எதையும் வித்தியாசமாக யோசிப்பார்கள்.

    இன்று இசை, கல்வி இருதுறைகளிலும் முன்னிலையில் இருக்கிறாள் உளவியல் பேராசிரியையான இப்பெண்.

    மேற்கொண்டு செய்யவேண்டுவது

    உங்கள் குழந்தைக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். (`யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று கேட்கக் கூடாது, ஆமாம்! ஔரங்கசீப்புக்கு இசை பிடிக்காது என்று படித்திருக்கிறேன்). உங்களுக்கோ சங்கீதத்தில் ஞானமோ, ஆர்வமோ கிடையாது. இருந்தாலும், குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்த்துவிடுகிறீர்கள். மாதாமாதம் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்துவிடுவதோடு உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துறையில் சிறந்தவர்களின் கச்சேரிக்கு அழைத்துப்போனால், அறிவு விரிவடையும். இப்போதுதான் இணையத்தில் எந்தத் துறை வேண்டுமானாலும் கிடைக்கிறதே! ஆனாலும், நேரில் கற்றுக்கொடுக்க, தவற்றைத் திருத்த, ஒரு குரு அவசியம்.

    தோல்வியா? மக்கு!

    போட்டிகளில் வெற்றிபெற்றால் குழந்தையைக் கொண்டாடி, தோல்வி அடைந்தால் தண்டிப்பது ஒரு குழந்தையைப் பயங்கொள்ளியாக ஆக்கும் செயல்.

    மாறாக, `அடுத்த முறை நன்றாகச் செய்வாய், பார்!’ என்பதுபோல் ஊக்கமளித்தால் தன்னம்பிக்கையுடன், எந்த நிலையிலும் ஊக்கத்தை இழக்காது இருப்பதுடன், வேறு புதிய துறைகளிலும் ஆர்வத்துடன் வளர்வான்.

    எல்லாக் குழந்தைகளும் சாதனையாளர்கள் ஆகமுடியாதுதான். ஆனாலும், அவர்களால் முடிந்ததைச் செவ்வனே செய்து முடிக்கப் பிறர் ஆதரவு காட்டினால், திருப்தியாவது கிடைக்குமே!

    பி.கு: யார் அந்த மிருங்க வித்வான்?

    பதில்: குரு காரைக்குடி மணி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171217 - Tiruppavai 02 - Krishna Anubhav is here! The dos and donts. The austerities. lr. watercolour 24x32 cms

    ”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
    பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
    வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
    பைகொண்ட பாம்பணைவோன் பார்….கிரேசி மோகன்….!

    Share
  • மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    ஸ்டாலின் குணசேகரன்

    *************************************************************************************************************************

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    *************************************************************************************************************************

    001

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு நகரில் ஆண்டுதோறும் பாரதி பிறந்தநாளாகிய டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய முறையில் ‘ பாரதி விழா ’ நடத்தப்பட்டு வருகிறது.

    002 (1)

    003

    இந்த ஆண்டின் ‘ பாரதி விழா ’ 11.12.2017 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு – கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. பேரவை

    நடத்துகிற பாரதி விழாவில் ஆண்டுதோறும் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன :

    004

    005

    1) பாரதி 1921 ஆம் ஆண்டு இறுதியாக உரை நிகழ்த்திய ஈரோடு – கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி விழா நடைபெறும் அரங்கம் வரை, பாரதியின் ஈரோடு வருகையை நினைவுகூரும் பொருட்டும் அவ்வருகையின் போது அவர் நிகழ்த்திய ’மனிதருக்கு மரணமில்லை,  ‘இந்தியாவின் எதிர்கால நிலை ‘ என்ற தலைப்புகளிலான  இறுதிப் பேருரைகளை நினைவுகூரும் விதத்திலும்  ’ பாரதி ஜோதி ‘ ஏந்திய வண்ணம் பேரவையின் தன்னார்வலர்களாக விளங்கும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு…

    006

    007

    2) தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை ஒருவருக்கு ‘ பாரதி விருது ’  வழங்குதல்…

    3) காலமாகிவிட்ட நாட்டுக்குழைத்த நல்லோர் ஒருவரின் திருவுருவப்படத் திறப்பு…

    மாலை 4.30 மணிக்கு ‘ பாரதி ஜோதி ‘ கருங்கல்பாளையம் நூலகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இவரின் உரைக்குப் பின்பு அணிவகுப்பு தொடங்கியது.

    008

    009

    இந்த ஆண்டின் ‘ பாரதி விருது ‘ தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், கல்வியாளர் – சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களால் விழாமேடையில் வழங்கப்பட்டது.

    010

    011

    கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப்படத்தை பொதுவுடைமை இயக்கத் தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.

    முன்னதாக மக்கள் சிந்தனைப்  பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.

    012

    013

    இந்நிகழ்ச்சிக்கு தேசிய நலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் தலைமையேற்றார்

    பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் க.அழகன் நன்றியுரையாற்றினார்.

    014

    015

    இந்நிகழ்வில் பல கல்வி நிலையங்களைச் சார்ந்த, மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்களாகத் திகழும் மாணவ – மாணவியர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    ஊர்ப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

    016

    சிறப்பு விருந்தினர்களின் உரைகள், எழுச்சியுடன் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்தது.

    மிகச்சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம், முன் கூட்டியே அறிவித்திருந்தவாறு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.

    விழா அரங்கில், பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா சிறப்பு நூலரங்கம் ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் தமிழ்ஒளி, சிலம்பொலி சு.செல்லப்பன், பொற்கோ, ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் நூல்களோடு மொழி, இலக்கியம், கவிதை மற்றும் தமிழாய்வு சார்ந்த ஏராளமான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    +++++++++++++++++++++

    +++++++++++++++++++

    அண்டவெளிக் களிமண்ணை
    ஆழியில் சுற்றிக்
    காலக் குயவன் கைகள்
    முடுக்கிய பம்பரக் கோளம் !
    உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !
    பூமி எங்கிலும் கடலடியில்
    பொங்கிடும்  நாதம் !
    ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை !
    முதன்முறைப் பதிவு !
    இயற்கை அன்னை வீணை நாதம்
    மயக்குது மாந்தரை !
    துளையிட்டுக் கேட்க பூமிக்குள்
    நுழைவது யார் ?
    கடற்தட்டுகள் துடித்தால்
    சுனாமி  மேளம் !
    புவித் தட்டுகள் மோதினால்
    பூகம்ப நடனம் !
    குடற் தட்டு நெளிந்தால்
    நிலக் குலுக்கல் !
    சூழ்வெளி மாசாக
    தாரணி வயிற்றுக் குள்ளும்
    ஆறாத தீக்காயம்  !

    ++++++++++++

    +++++++++++++
    பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசையை முதன்முதல் கடலடியில் பதிவு செய்தார்.
     
     
    1959 ஆம்  ஆண்டில் பூமியின் மர்ம ஓசை அறியப்பட்டு 1998 ஆம் ஆண்டு உறுதியாகி, 2017 டிசம்பர் மாதம் முதன்முதல்  பதிவு செய்யப் பட்டுள்ளது ஒரு வரலாற்று மைல் கல்.   அது பூமி எழுப்பும் தணிவு அதிர்வு முணுமுணுப்பு ஓசை  [Low Frequency Drone]. புவித்தட்டுகள் மென்மைப் பெயர்ச்சியால் உண்டாகும் மிகச் சிறிய மெல்லோசை அவை  [Subtle Seismic Movements].  அவை நில நடுக்கம் தூண்டாதவை.  கருவிகள் மட்டுமே அவற்றை அளக்கவோ, பதிவு செய்யவோ முடியும்.
    unnamed (1)

    Scientists unlocking mystery of the hum of Earth

    பூமி முணுமுணுப்பு ஓசை உண்டாக்குகிறது.  தொடர்ந்து எழுப்புகிறது.  இப்போது முதன்முதலாக, விஞ்ஞானிகள் கடல் அடித்தளத்திலிருந்து அவற்றை அளந்து பதிவு செய்துள்ளார்.  பூகம்பங்கள் போல் அவை உணரப்படா.   ஆனால் பேரளவு எண்ணிக்கையில் பூகம்பங்கள் பூமியில் எழுகின்றன.  யூஎஸ்ஜியெஸ் [(USGS) U.S. Geological Survey] அறிவிப்பின்படி ஆண்டுக்குப் பூமியில் 500,000 நிலநடுக்கங்கள் நேர்கின்றன.  அவற்றில் உணரக் கூடியவை : 100,000.  அந்த எண்ணிக்கையில் பேரிடர் விளைவிப்பவை : 100 பூகம்பங்கள்.
     
    Earth’s Mysterious Humming Recorded under Sea 
    for the First Time 
     
     
     
    1990 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞான ஆய்வாளர், பூமி தொடர்ந்து சுய ஆட்டங்களில்  [Free Oscillations]  மின்மினி நடுக்க நிகழ்ச்சிகள்   [Microseismic Shakings] உண்டாக்கி வருவதை நன்கு அறிவார்.   அந்த சுய ஆட்டங்களின் மெல்லோசை முணுமுணுப்புகளை உலகில் எங்கினும் நிலநடுக்க மானிகள் [Seismometers மூலம் உணரப் பட்டுப் பதிவு செய்ய முடியும் என்று புதிய விஞ்ஞான ஆய்வுகள் அறிவிக்கின்றன.  பூமியின் முணுமுணுப்பைக் கடலடியில் பதிவு செய்வதுபோல், தரை மீதும் செய்ய முடியும்.
    சமீபத்தில் விஞ்ஞானிகள் கடற்கோள நிலநடுக்க மானிகளைப்  [Spherical Ocean Seismometers]  பயன்படுத்தி இந்து மாக்கடல் அடித்தளம் புகுந்து, பூமியின் முணுமுணுப்பைப் பதிவு செய்துள்ளார்.  2012 செப்டம்பர் முதல் 2013 நவம்பர் வரை ஆய்வாளர் 57 சுய நுழைவு நிலநடுக்க மானிகளை இறக்கி  [Free Fall Seismometers]  மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே உள்ள ரீயூனியன் தீவைச்  [La Reunion Island] சுற்றிலும் 2000 சதுர மீட்டர் [770 சதுர மைல்] பரப்பில் பூமி முணுமுணுப்பை பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.   அங்கே உச்ச அளவு முணுமுணுப்பு பதிவானது என்று தெரிய வருகிறது.  அதுபோல் அல்ஜீரியா தளப் பரப்பில் பதிவு செய்ததாகவும் அறியப் படுகிறது.  பூமியின் முணுமுணுப்பு ஓசை அளவு : 2.9 – 4.5 millihertz இடைப்பட்டது.  மனிதர் கேட்கும் அளவு : 20 hertz. அதாவது பூமியின் மர்ம ஓசை 10,000 மடங்கு  தணிவானது !
    +++++++++++++++++++

     

    ++++++++++

    “ஹோரேசியோ ! கற்பனையில் தோன்றிய உனது வேதாந்தக் கருத்துக்களை விட மேம்பட்ட தகவல் பூமியிலும் விண்ணுலகிலும் நிரம்ப உள்ளன !”

    வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஹாம்லட் நாடகம்) (1564-1616)

    ‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.’

    வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822)

    உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

    ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

    அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !

    ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944)அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?

    ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண்தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக்கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.

    பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு

    விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவா கவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.

     

     

    4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன்களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக்கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.

     

     

    பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப்படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் “மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி” (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தி யானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.

     

    பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !

    பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.

    1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப்படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !

    2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.

     

    3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite – Mineral Rock) நிரம்பியுள்ளது.

    4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth’s Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.

    5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !

     

    ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !

    பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !

     

     

    பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழ்துளை யிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !

     

    சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும், நிலவும்

    பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான “உயிர்ச்சாதகக் கோளத்தில்” (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !

    பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)

    பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும்.

     

    பூமியின் பூதக் காந்த மண்டலம் !

    சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் “வான் ஆலன் இரட்டை வளையங் களால்” (Van Allen Belts – Two Bands) தடுக்கப் படுகின்றன. பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea) ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆ·பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் “பாங்கியா பூதக்கண்டம்” (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !

     

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

    20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)

    21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)

    22.  http://www.independent.co.uk/environment/nature/have-you-heard-the-hum-mystery-of-earths-low-droning-noise-could-now-be-solved-10182111.html  [April 14, 2015]

    23.  https://www.livescience.com/50473-earth-mysterious-hum-explained.html  [April 14, 2015]

    24.  https://www.wired.com/2014/01/an-artist-records-the-mysterious-rumblings-of-middle-earth/  

    25.  http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth  [December 10, 2017]

    26.  https://www.livescience.com/61154-earth-hum-recorded-underwater.html  [December 11, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  December 16, 2017  [R-1]

    Attachments area
    Preview YouTube video Mysterious hum inside Earth baffles experts

    Mysterious hum inside Earth baffles experts

    Preview YouTube video Mysterious Earth Hum Sound Recorded !

    Mysterious Earth Hum Sound Recorded !

    Preview YouTube video “EARTH’S MYSTERIOUS HUM RECORDED UNDERWATER FOR 1ST TIME”

    “EARTH’S MYSTERIOUS HUM RECORDED UNDERWATER FOR 1ST TIME”

    Preview YouTube video The Earth’s Hum Finally Recorded At The Ocean Floor, But We Still Don’t Know Where It Comes From

    The Earth’s Hum Finally Recorded At The Ocean Floor, But We Still Don’t Know Where It Comes From

    Preview YouTube video The Earth is Groaning – Unknown sound phenomena occurring 2011

    The Earth is Groaning – Unknown sound phenomena occurring 2011
    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -2

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருச்செங்குன்றூர் -இமையவாரப்பன் பெருமாள்

    27 feb pt 2 wadala 090

    காலைக் கதிரில் கண்ணனின் நினைப்பில்

    காலனின் துயரம் கனவாய்க் கலைந்தது

    கலங்கிட்ட வாழ்வைக் கலையாய் செதுக்கிட

    கண்ணனின் குழலே காதினில் சொன்னது !

     

    ஆலிலை மேலினில் அசைவின்றி வந்தவன்

    ஆயர்கள் நடுவினில் அன்புடன் வளர்ந்தவன்

    ஆடிடும் கோபியர் அரங்கத்தை ஆண்டவன்

    ஆசையில் கோதையை அரங்கத்தில் ஏற்றவன்!

     

    சொல்லிய பொய்யே சுட்டிட நெஞ்சை

    தனிமையில் தவித்தான் தலைமகன் தருமனும்

    கண்ணனே கதியென்று கால்களைப் பற்றிட

    மன்னவன் மனத்தினில் மலர்ந்தது அமைதியே !

     

    கள்ளுண்ட வண்டின் கலங்கிய கீதமாய்

    உள்ளுண்ட உணர்வுகள் உயிரினைத் தாக்கிட

    மண்ணுண்ட மழலை  மாதவன்  திருவடி

    மண்டிட்டு வேண்டிட மறையுமே மாயமாய் !

     

    புவியெல்லாம் மங்களம் புனலெனத் தருபவள்

    புன்னகை தொடுத்தே பொற்பதம் இருக்க

    புலர்ந்திடும் பொழுதில் பேரருள் பெருக்கும்

    புண்ணியன் போற்றிட புலமையும் தேவையோ ?

     

    ஏழுமலை நாயகனே எங்கிருந்தால் எனக்கென்ன

    ஏழுகடல் தாண்டியே எட்டாமல் இருந்தென்ன

    ஏங்குகின்ற நினைவினிலே எண்ணமெல்லாம் நீதானே

    ஏற்றிடுவாய் அழைப்பினையே என்னுடனே வந்துவிடு !

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171216 - Tiruppavai 01 -watercolour -24x32 cms -lr

    ”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
    வாடிக்கை யாய்வந்தாள், சீராயர் -பாடிக்கு,
    கோபியரே செல்லுங்கள் கண்ணன் திருக்கோயில்
    HOOBBYயா னாலும் HURRY’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -1

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு வல்லபர் (திருவல்லா)  

    images (3)

    மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது

    மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது

    மாலையை ஏந்திய கோதையைப் போல

    மாலனைத் தேடி மனமும் சென்றது !

     

    ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ

    பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?

    தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே

    வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !

     

    சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்

    வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்

    தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்

    தேனினும் இனிய திருவுடை அரங்கன் !

     

    கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு

    கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்

    கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்

    கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !

     

    தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது

    தோகளன் வதைக்கத்  துணையாய் வந்தது

    தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்

    தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !

     

    வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே

    வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !

    வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்

    வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !

     

    சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்

    மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்

    தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்

    பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!

     

     

    Share