இவ்வார வல்லமையாளராக பாக்கியம் ராமசாமி அவர்களை அறிவிக்கிறோம்.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆனால் பாக்கியம் ராமசாமி என்றால் தான் இவர் யார் என தெரியும். அப்படி சொல்லியும் தெரியாதவர்கள் அப்புசாமி, சீதாப்பாட்டி கதாசிரியர் என்றால் டக் என புரிந்துகொள்வார்கள்.

இவர் தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி – சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.

1

இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.’அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வந்தார்.

ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி – சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா…. என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, ‘நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா…” என்பார். அவரோ பதறியபடி, “அவ்வளவு ரூபாய்… எப்படி?” என்பார். அதற்கு அப்புசாமியோ, “பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே” என்று வாருவார்.

கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். “தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!”

பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, க்ட்ட்ப்://ந்ந்ந்.அப்புசமி.cஒம் எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.

பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார். ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

தன் 87 வயதில் இவர் கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். .பாக்கியம் ராமசாமிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய அப்புசாமியும், சீதாப்பாட்டியும், கீதாப்பாட்டியும், பாமுகவும், ரசகுண்டுவும் என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார்கள்

நன்றி: விகடன், தினமலர், விக்கிபிடியா

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *