Blog

  • மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

    பவள சங்கரி

    மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் கொரிய மொழிகள் பெரும்பாலும் சீனாவின் விளக்கப்பட மற்றும் வரைகலை அமைப்பிலான வார்த்தைகளிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. சீன மொழியின் வடிவங்கள் வடகிழக்கு நாடுகளின் மொழிகளோடு (சீனா, ஜப்பான், கொரியா), அந்தந்த தேசிய மொழிகளின் வட்டார வழக்குகளின் அடிப்படையில் பேச்சு மொழியில் ஏற்படும் சில மாற்றங்கள் தவிர பெருமளவில் சீன மொழியுடன் ஒத்துப்போகிறது என்கிறார் வோன் மோ. ஒரு சீன வார்த்தை தன் பேச்சு ஒலிகளைக் குறிப்பிடுகின்ற ஒலிப்பு எழுத்து அல்ல என்றாலும் அது தன் பொருளை வரைபடச்சின்னம் மூலமாக தெரிவித்துவிடுகிறது. இப்படியாக ஒரு சீன வார்த்தையை அதன் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும்போது அதன் எழுத்துக்கோர்வை அந்தந்த தேசத்தின் பேச்சு வழக்கு முறைகளுக்கேற்ப மாறுபடலாம். உதாரணமாக ‘filial piety’ என்று ஆங்கிலத்தில் பொருள்படும் சீன வார்த்தை, வடகிழக்கு ஆசிய நாடுகளான, சீனா, சப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் முறையே, “hsiao”, “ko”, மற்றும் “hyo” என்று உச்சரிக்கப்படுவதாகக் கூறுகிறார். இந்த வகையில் இவர் கயாவிற்கு வெளி நாட்டிலிருந்து வந்து சேர்ந்த அரசிக்கு அவர்களின் பாரம்பரிய குடும்பப்பெயரை ஆங்கில பெயர்ப்பில் உச்சரிக்கும்படி “Queen Hurh of Gaya” என்று குறிப்பிடுகிறார்.

    25 தொகுதிகளாலான ‘சாம்குக்யுசா’ என்ற ’ஹூர்ஹ்’ பரம்பரை மரபாய்வுத் தொடர்பான பிரபலமான நூல் (The History of Three Kingdoms) தங்கள் பரம்பரையைச் சார்ந்த வெளிநாட்டிலிருந்து வந்து, கி.பி.48, சூலை 27 இல் தங்கள் கயா அரசன் சுரோவை மணந்து அரசியாக அரியணை ஏறியவர் இந்தியாவின் அயுத்தா அல்லது அயோத்தியிலிருந்து வந்தவரா என்று அறியும் ஆர்வம் அதிகமாகிவிட்டதாம்..

    30
    “சாம்குக்யுசா” தொன்மத்தின்படி இப்படி செல்கிறது வரலாறு? – எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் முடிந்தபின்பு, அரசனும், அரசியும் தங்கள் சாந்தி முகூர்த்தப் பஞ்சணையில் களித்திருக்க முற்படும்போது அந்த அரசி மெல்ல ஆரம்பிக்கிறாள், “நான் அயுத்தா இராச்சியத்தின் இளவரசி. என்னுடைய குடும்பப்பெயர் ‘ஹூர்ஹ் – Hurh” Hwang Ok – ஹூவாங் ஓக் (Yellow Jade) என்பது என் வழங்கு பெயர் (first name).

    இந்த இடம்தான் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. //‘ஹூர்ஹ் – Hurh” Hwang Ok – ஹூவாங் ஓக் // இதெல்லாம் தமிழ் சம்பந்தப்பட்ட பெயர்களாகவே இல்லையே. ஆனாலும் அந்தப் பெண் சொன்னதற்கான காரணம் அலசிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இது அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் ஐயம்.

    மேலும் அந்த இளவரசியின் வசனங்களைப் பார்ப்போம் .. என் வயது 16. என் பெற்றோர் என்னிடம், விண்ணுலகக்கடவுள் (Sang Jae) தங்கள் கனவில் தோன்றி கயாவின் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மன்னன் கிம் சுரோ, புனிதத்தன்மையும், அரிய ஞானமும் பெற்றவன். தங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்கு அவனுக்கு இணையான ஒரு நல்ல துணை வேண்டும், உடனடியாக உங்கள் இளவரசியை மணமுடிக்க அனுப்பிவையுங்கள் என்று வாக்கானதாகச் சொன்னார்கள்.

    மிகத்தெளிவான, கம்பீரமான அந்த இறை குரல் அயுத்தா அரசன் மற்றும் அவரின் அரசியான என் பெற்றோர்களின் விழிப்பு நிலையிலும் அவர்தம் செவிகளில் தெளிவாக ரீங்காரமிட்டவாரு இருந்தன. அதனால் இது தெய்வ சங்கல்பம் என்ற நம்பிக்கையில் இறைவனின் திருவுளப்படி தங்கள் அன்பு மகளான என்னை அயுத்தாவிலிருந்து உடனடியாக கயாவிற்கு அனுப்புவது என்று முடிவெடுத்து அதன்படி அனுப்பியும் உள்ளனர்”

    _20160211_115543
    அந்த இளவரசி இவ்வாறாகத் தன் முதல் இரவில் அன்புக் கணவனிடம் தம் உரையாடலைத் தொடருகிறாள்:

    “அதனால் விண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மிகக்கவனமாக என் கடற்பயணத்தை மேற்கொண்டு புனிதமான இக்காதற்கனியைத் தேடி வந்தேன். என் நீண்ட இரண்டு மாத பயணத்தின் இறுதியில் அற்புதமான பொக்கிசமான அந்த பியாண்டோ கனியைக் (Beondo – 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கனியக்கூடிய ஒரு பீச் வகைக்கனி) கண்டடைந்தேன். அப்படியிருக்க மாட்சிமை பொருந்திய மன்னர் என்னைத் தங்களுடன் இணைந்திருக்க அனுமதிக்க வேண்டுகிறேன்”.

    மன்னன் சுரோ அந்த இளவரசிக்கு இவ்வாறு பதிலிறுத்தான் : “இளமையிலிருந்தே என் வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் ஆன்மீகப்பாதையில் செயல்பட்டிருந்ததால், வெகு தொலைவிலிருந்து வந்து நீ என்னுடன் சேரப்போவதை முன்னமே அறிந்திருக்கிறேன் நான். அதனால்தான் என் அமைச்சர்கள் என்னை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தியபோதும் நான் அதற்கு உடன்படவில்லை. இப்போது நீயே உன் விருப்பத்தின்பேரில் என்னை வந்து அடைந்துவிட்டாய். உண்மையிலேயே இப்படியொரு கருணையுள்ளம் கொண்ட இளவரசி என் அரசியாக வந்து சேர்ந்துள்ளது என் நல்ல நேரம்” (கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இவர்)

    இப்படிப் போகிறது அந்த தொன்மம்…..

    சுரோ மன்னனின் காதல் பரிசாக அரசி ஹூர்ஹ் 10 குழந்தைகளைக் பெற்றுக்கொடுக்கிறார். பத்தாவது குழந்தை பிறந்தவுடன் அரசனிடம், “தேவலோகத்தலைவன் எனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். உங்கள் இராச்சியம் செழிப்புற என் தந்தையர் நாட்டை விட்டு வெகுதொலைவு வந்திருக்கிறேன். நம் பத்து குழந்தைகளுக்கும் உங்கள் வம்சாவளியின் அடையாளங்கள் மட்டுமே இருப்பது போன்று உங்கள் குடும்பப் பெயர் மட்டுமே வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. நம் இரண்டு குழந்தைகளுக்காவது எங்கள் குலப்பெயரான ஹூர்ஹ் என்பதை வைக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுக்கிறார். மன்னர் சுரோவும் அதற்குச் சம்மதிக்கிறார். ஹூர்ஹ் பாரம்பரியம் (தொகுதி 1) நூலில் மட்டுமன்றி, அரசியின் கல்லறை குறிப்பேடுகளிலும் மன்னர் சுரோ 2 மகன்களைத் தேர்ந்தெடுத்து தம் மனைவியின் குலப்பெயரைச் சூட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேறு சில ஆவணங்களில் அரசர் தங்கள் 5 மகன்களுக்கு அரசியின் குலப்பெயரை வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக, வியப்பூட்டும் வகையில் கொரியாவில், கிம்ஹே, ஹயாங், தேயின், ஹன்சன் மற்றும் யாங்சீயோன் என்று ஹூர்ஹ் பரம்பரையினர் இன்றும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். தன்னுடைய பாரம்பரியப் பெயர் யாங்சீயோன் என்றும் தற்போது சியோல் நகருக்கு அருகில் உள்ள கிம்ப்போ எனும் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுவது மேலும் வியப்பளிக்கிறது! இந்த தொன்மத்தில் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் நம்புவதாகக் கூறுகிறார் , வோன் மூ ஹூர்ஹ் .

    கோப்புகளின் அடிப்படையில் சுரோ – ஹூவாங் ஓக் அரச குடும்பத்து வாரிசுகளில் 9 பேர்களின் பெயர்கள் பதிவிடப்பட்டிருந்தாலும் ஏனைய மற்றையோரின் பெயர்கள் இல்லை. கிம் பியூங் – மோ மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் , இரண்டு பெண்கள் உள்பட மேலும் பலரின் பெயர்களையும் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார். அந்த வகையில் மூன்று பெண்கள் அயுத்தா (அயோத்தியா?)விலிருந்து புலம் பெயர்ந்து சென்று கயாவில் தங்கள் பரம்பரையை பரவச்செய்துள்ளனர் என்பதை உறுதிபடுத்துகின்றனர்.

    இந்த தொன்மக்கதை கொரிய ஆய்வாளர்களின் ஆர்வத்தை பெருமளவில் ஈர்த்ததில் வியப்பில்லை.
    கொரியாவின் முதல் அரசி தங்கள் மன்னர் சுரோவை மணமுடிக்கும்பொருட்டு கொரியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்டபோது அவருடன் மற்றும் இரண்டு அரச குடும்பத்துப் பெண்களும் பயணம் செய்ததாகத் தங்கள் ஆய்வின் மூலம் குறிப்பிடுகின்றனர். அந்தப்பெண்கள் இருவரும் மன்னன் சுரோவின் இரண்டு தம்பிகளை மணந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அதாவது கயாவின் அரசர்களின் முதல் மூன்று பேரும் இந்த மூன்று பெண்களை மணந்துகொள்கிறார்கள். இவர்கள் கொரிய நாட்டிற்கு புலம் பெயர்ந்து வந்து கொரிய மரபு பல்வேறு முனைகளில் புத்தாக்கம்பெற தங்களின் பங்களிப்பைச் செலுத்தியதையும் குறிப்பிடுகின்றனர்.

    தம் பெற்றோரின் அறிவுறுத்தலின்பேரில் மிகவும் சிரமப்பட்டு வெகு தொலைவு பயணம் செய்து வந்து கயா அரசனை மணந்தவள் தமது பெயராகக் குறிப்பிட்டது எந்த மொழியில்? தமிழ் பெயரைச் சொன்னாளா அல்லது அரசனுக்குப் புரியும் வகையில் அவர்கள் மொழியில் பெயர்த்துக்கூறினாரா என்ற ஐயம் எழுகிறது.

    நம் நாட்டு ஆய்வாளர்களின் மற்றுமொரு ஐயம் பண்டைய காலத்தில் தமிழ் பெண்கள் கடல்கடந்து பயணிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்பதுதான். தொல்காப்பியம் காட்டும் சான்றும் இவர்களுக்கு ஆதாரமாக நிற்கிறது,

    முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை.
    இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (அகம் 371) .

    சரி மன்னனை மணமுடித்து கயாவை இன்றைய கொரியாவாக பொன் விளையும் பூமியாக மாற்றியவள் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கான அடிப்படை வேர் என்ன? அதெப்படி அப்படி சொல்ல முடியும்?

    தொடருவோம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    ETERNAL COMPANION….!
    ——————————————–
    ‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
    ——————————————————–

    171018 - Eternal Companion -lr

    எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
    இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
    ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!

    ’’என்றுமே காப்பவர், ஏகாந்த தோப்பவர்
    கன்றுடன், கூடோடு(கூட ஓடு) கின்றாரே , -மென்றன்று,(மென்று முழுங்கி)
    சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ,
    தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….!

    ’’கன்றை வரைந்திடக் கண்ணனங்கு தோன்றிடுவார்,
    நின்றால் நடந்தால் நவனீதக்-கன்றின்
    Eternal Companion என்றுமே அய்யன்
    Paternal காப்பதற்குப் பார்’’….!

    ”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
    நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
    கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
    இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….!

    *நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….

    Share
  • குபேர லக்ஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்

    தன்வந்திரி பீடத்தில்
    தீபாவளியை முன்னிட்டு
    குபேர லக்ஷ்மி யாகத்துடன்
    ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.

    செல்வம் தரும் லட்சுமி குபேர வழிபாடு

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.

    லட்சுமி குபேரன்’

    IMG_20171018_170025

    திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப் பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

    தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

    ‘ஓம் ய க்ஷய குபேராய வைஸ்ரவணாய
    தந தா நியாதி பதயே தந்தாந்ய ஸம்ருத்திம்மே
    தேவி தாபய ஸ்வாஹா’

    என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.

    லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும்.

    IMG_20171018_172435

    வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும். என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் பசிப்பிணி அகலவும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறவும். காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப் பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கவும், கல்வியும் செல்வமும் பெற்று வாழ்க்கையில் சௌபாக்கியங்களுடன் ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 7

    -மேகலா இராமமூர்த்தி

    ”விரைந்து வருவேன் வரைந்துகொள்ள!” எனும் நன்மொழியைத் தலைவனிடம் எதிர்பார்த்தாள் தலைவி. அவனோ, “அன்பே! உறுபொருள் தேடிவந்தபின் உனை மணப்பேன்!” என்று சொல்லவும் திகைத்துப்போனாள் அவள்.

    ”அன்பரே! தாங்கள் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றல்லவோ என்னிடம் கூறியிருந்தீர். இப்போது திடீரென்று பொருள்தேடி வந்தபின் மணப்பேன் என்று சொல்கிறீரே? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றாள் குழப்பதோடு.

    தோழியும் தலைவியின் கூற்றுக்கு உடன்படும் வகையில் தலையாட்டினாள்.

    தலைவன் செப்பலுற்றான்…”நங்காய்! நான் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்; அதில் பொய்யில்லை. ஆனால் அது என் முன்னோர் தேடிவைத்த செல்வமாயிற்றே… நான் தேடியதில்லையே!” என்றான்.

    தலைவியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. “தங்கள் முன்னோர் தேடிய செல்வம் தங்களுடையதுதானே அன்பரே?” என்று கேட்டாள்.

    ”இல்லை” என்று மறுத்தவன், “நானே உழைத்துத் தேடியதைத்தான் என்னுடையது என்று நெஞ்சைநிமிர்த்திக் கூறமுடியும். தன்னுழைப்பின்றி முன்னோர் திரட்டி வைத்திருக்கும் செல்வத்தைச் சிதைப்பவன் செல்வம் உளனாய்க் கருதப்பட மாட்டான்” என்றான்.

    ”நம்மவரே ஆயினும் அவர்பொருளை நமதென்று உரிமைகொண்டாடுவது முறையில்லை; அஃது அவர் பொருளே” என்ற தங்கள் உயர்ந்த விளக்கத்தை அட்டியின்றி ஏற்றுக்கொள்கிறேன் ஐயனே! எனினும் இப்போதே தாங்கள் பொருள்தேடப் புறப்படுவானேன்? என்னை மணந்தபின் செல்லலாமே!” என்ற தலைவியின் கருத்தைத் தலைவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

    ”மணவாழ்க்கை மணம்வீசும் வாழ்க்கையாயிருக்கவும், இல்லறம் நல்லறமாய்த் திகழவும் பொருள் வேண்டும். விருந்து புரக்கவும், இரவலர் ஓம்பவும், செறுநர் செருக்கறுக்கவும் செல்வம் வேண்டும். ஆகவே பொருள்தேடி வந்தபின் உன்னை மணப்பதே மாண்புடைய செயல்” என்று அவன் தீர்மானமாகக் கூறிவிடவே, இனியும் அவனோடு விவாதித்து அவன் மனத்தை மாற்றுவது கடினம் என உணர்ந்தாள் தலைவி.

    ”அப்படியானால்… பொருள்திரட்டிக்கொண்டு எப்போது வருவீர்? என்னை எப்போது மணப்பீர்?” என்று கேள்விகளை அடுக்கினாள் அவநம்பிக்கையோடு.

    ”நம்பிக்கை இழக்காதே நங்காய்! இப்போது முதுவேனிற் காலமல்லவா? கார் வருமுன் என் தேர்வரும் உனைத் தேடி என்று சூளுரைக்கிறேன். வாட்டம் நீக்கு! வருத்தம் போக்கு! காத்திருக்கிறது வளமான எதிர்காலம் நமக்கு” என்றான் முறுவலோடு.

    அரைமனத்தோடு தலைவனுக்கு விடைகொடுத்தாள் தலைவி.

    தலைவன் பொருள்தேடச் சென்றுவிட்டான்.

    தன் வீட்டுவாயிலில் ஏதோ சிந்தித்தவண்ணம் நின்றுகொண்டிருந்த தலைவியைக் கண்ட தோழி, “தலைவரை நினைந்து வருந்தாதே! அவர் விரைவில் பொருளொடு மீள்வார்!” என்று ஆறுதல்மொழி பகர்ந்தாள் தலைவியின் உள்ளத்தைப் படித்தவளாய்.

    ”தோழி! ஏற்கனவே தேடிவைத்துள்ள பொருளைச் சிதைப்பவன் செல்வம் உடையவனல்லன்; பிறர் தேடிய பொருளைத் துய்த்தல் இரத்தலினும் இளிவானது எனும் வாழ்வியல் உண்மையை எனக்குத் தெளிவித்துப் போயிருக்கிறார் நம் தலைவர். ஆதலால் அவர் பிரிவுகுறித்து நான் கவலவில்லை. ஆனால் அவர் பொருள்தேடச் சென்றிருக்கும் வழி, கூற்றத்தையொத்த கொலைவேல் மறவர் பொழுதுபட்டு (இரவில்) அவ்வழிவருவோரைக் கொன்றதனாற் பட்ட தசைகளைத் தின்ன நசையொடு (விருப்பு) காத்திருக்கும் பருந்துகள் நிறைந்திருக்கும் நீரற்ற நெடும்பாதையாயிற்றே… அதை நினைத்துத்தான் அஞ்சுகிறேன்” என்றாள்.

    உள்ளது  சிதைப்போர்  உளரெனப்  படாஅர்
    இல்லோர்  வாழ்க்கை  இரவினும்  இளிவெனச்
    சொல்லிய  வன்மை   தெளியக்  காட்டிச்
    சென்றனர்  வாழி  தோழி  யென்றும்
    கூற்றத்  தன்ன  கொலைவேல்  மறவர்
    ஆற்றிருந்  தல்கி  வழங்குநர்ச்  செகுத்த
    படுமுடை  பருந்துபார்த்  திருக்கும்
    நெடுமூ  திடைய  நீரில்  ஆறே.  (குறுந்: 283 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

    தலைவியின் அச்சத்தைக் கண்ட தோழி, ”தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அச்சம்விடு!” என்று அவளைத் தேற்றினாள். தலைவியும் ஒருவாறு தேறினாள்.

    சிலநாள் சென்றதும் தலைவியின் மனவுறுதியை மீண்டும் சோதிக்கவிரும்பிய தோழி, ”தையலே! தைரியமாகத்தானே இருக்கிறாய்?” என்று வினவினாள்.

    ”ஆம்” என்ற தலைவி, ”தோழி! (இரவில்) உதிக்கின்ற மதியம் கடலினிடத்தே காணப்பட்டாற்போல் ஒழுகுகின்ற வெள்ளிய அருவியினையுடைய, உயர்ந்த மலைநாடனாகிய நம் தலைவன் கதிரவனைப் போன்றவன். மூங்கிலைப் போன்ற என் பெருந்தோள்களோ நெருஞ்சி மலரைப் போன்றவையிற்றே” என்றாள்.

    எழுதரு  மதியங்  கடற்கண்  டாஅங்கு
    ஒழுகுவெள் ள ருவியோங்கு மலை நாடன்
    ஞாயி  றனையன்  தோழி
    நெருஞ்சி  யனையவென்  பெரும்பணைத்  தோளே.  (குறுந்: 315 – தும்பிசேர்கீரனார்)

    ”என்ன பெண்ணே புதிர்போடுகிறாய்! சற்றுப் புரியும்படியாகச் சொல்லேன்” என்றாள் தோழி.

    ”நெருஞ்சியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டாள் தலைவி.

    nerunji”ஆமாம்…பார்த்திருக்கிறேன். நம் பொய்கைக் கரையோரங்கூட நிறைய மண்டிக்கிடக்கிறதே. எத்தனையோமுறை அதன்முள் என் பாதத்தைப் பதம் பார்த்திருக்கிறதே!” என்றாள் தோழி வேடிக்கையாக.

    ”முள்ளைப் பார்த்திருக்கிறாய் சரி…அதன் பூவைப் பார்த்திருக்கிறாயோ? என்று  தலைவி கேட்கவும்,

    ”அதையும் பார்த்திருக்கிறேனே. மஞ்சள் வண்ணத்திலிருக்கும். அதற்கென்ன?” என்றாள் தோழி அலட்சியமாக.

    ”என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்? காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து,  கதிரவன் இயங்கும் திசைநோக்கியே தானும் இயங்கி, மாலையில் கதிரவன் மறைந்தவுடன் தானும் கூம்பிவிடும் இயல்புடையது நெருஞ்சிப் பூ.  கதிரவனைக் காதலோடு சுற்றிவரும் சூரியகாந்திப் பூவை உலகறியும். ஆனால் அதையொத்த காதலொடு கதிரவனைச் சுற்றிவரும் நெருஞ்சிப் பூவைப் பலரறியவில்லை. என் ஆருயிர்த்தோழியான நீ உட்பட!” என்றாள் ஆதங்கத்தோடு தலைவி.

    ”உண்மைதான்! நெருஞ்சியின் அருமையை நான் அறியாதுதான் போனேன். வஞ்சியே… இப்போது உன்னால் அறிந்தேன்” என்று தலைவியை ஆரத்தழுவிக்கொண்டாள் தோழி.

    இந்தப் பாடல் அளவிற் சிறியதாயினும் பல்வேறு சிறப்புக்களை உடையது. இதில், அருவிக்குத் திங்களின் ஒளி உவமை; மலைக்குக் கடல் உவமை; தலைவனுக்குக் கதிரவன் உவமை; தலைவியின் உள்ளத்துக்கு நெருஞ்சி மலர் உவமை. மொத்தம் நான்கு உவமைகள் கொண்ட அரிய பாடலிது.உலகக் காதற்பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது இப்பாடல். ஒரு புதினத்திற்கான கற்பனை வளமும் கருத்தாழமும்  இந்நான்கு அடிகளுள் உள.” என்று இப்பாடலைப் பாராட்டுகிறார் தமிழண்ணல் அவர்கள்.

    அகநானூற்றுப் பாடலொன்றிலும் (அகம்: 336), ’வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல’ என்ற தொடரைக் காணமுடிகின்றது. புறம் 155-ஆவது பாடலும், ”பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு” என்ற தொடரைக் கையாண்டிருக்கக் காண்கிறோம். இவ்வாறு நெருஞ்சிக்கும் கதிரவனுக்குமுள்ள நெருங்கிய உறவை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும், பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களிலும், பிற்கால நூல்கள் சிலவற்றிலும் காணக் கிடைக்கின்றன. இயற்கையை நுண்ணிதின் நோக்கும் அன்றைய தமிழரின் நுழைபுலத்திற்கு இவை சான்றாகின்றன.

    நாள்கள் உருண்டோடிக்கொண்டே இருந்தன. வாரங்கள் மாதங்களாயின. தலைவன் திரும்பிவந்தபாடில்லை. தலைவியின் நெஞ்சுரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையாக ஆரம்பித்தது.

    தன் உள்ளத்து வேதனையைத் தனை நாடிவந்த தோழியிடம் செப்பலுற்றாள்…

    “தோழி! குறிய அடியுடைய கூதளஞ்செடி அசைகின்ற உயர்ந்த மலையின்கண்ணுள்ள பெரிய தேனடையைக் கண்ட முடவன், (நடந்து அத் தேனடையை சென்றடையக் கால்களின்மையால்) தன் உள்ளங்கையையே சிறுபாத்திரம்போல் குவித்து, அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கிமகிழ்வதுபோல், காதலர் என்னை மணந்து தண்ணளி செய்யாராயினும், அவரைப் பலமுறை பார்ப்பது உளத்துக்கு இனிதாயிருந்தது; இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்று கூறிக் கண்ணீர் உகுத்தாள்.

    குறுந்தாட்  கூதளி  யாடிய  நெடுவரைப்
    பெருந்தேன்  கண்ட  இருக்கை  முடவன்
    உட்கைச்  சிறுகுடை  கோலிக்  கீழிருந்து
    சுட்டுபு  நக்கி  யாங்குக்  காதலர்
    நல்கார்  நயவா  ராயினும்
    பல்காற்  காண்டலும்  உள்ளத்துக்  கினிதே.  (குறுந்: 60 – பரணர்)

    ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல்’ எனும் பழமொழியை இச் சங்கப்பாடல் நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றதன்றோ?

    ”பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணாது அமையல கண்” (1283) எனும் குறட்பாவும் இப்பாடற் கருத்தையே (உவமைகளின்றி) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.

    [தொடரும்]

     

     

    Share
  • கல்விக்கூடம் சந்தையானது

     முனைவர் சு. சத்தியா

     

     

    அதிகாலை எழுந்தேன் – இதோ

    விடி வெள்ளி ஒன்றைக்கண்டேன்  வானத்தில்

    என் வாழ்வில் என்று விடிவெள்ளி

    தோன்றுமென்ற  அச்சத்தில்

    எங்கு  சென்றாலும்  இருள் – காரணம்

    தேவை பொருள்

    பணமிருந்தால் வா! என்றது  சமூகம்

    பணமுள்ளவர் வாழ்வோ – நாளும்

    விடிவெள்ளியாய் சொலிக்குது

    பணமற்றவர் வாழ்வோ – எந்நாளும்

    சிரிப்பாய்ச் சிரிக்குது

    கல்வி  இன்று  மாட்டுச்சந்தையானது

    அறிவைப்  புகட்டும்  கல்விக்கூடம்

    ஆறறிவை விற்கிறது வியாபாரம் பேசி

    கால்  கிலோ  பணமிருந்தால் வா!

    என்கிறது  ஒரு பள்ளி

    அரைக்கிலோ  பணமிருந்தால் வா!

    என்கிறது  இன்னொரு  பள்ளி!

    ஒரு கிலோ  இருந்தால் மட்டுமே

    இடமுண்டென்கிறது மற்றொரு  பள்ளி

    இலஞ்சங்கள்  இலட்சங்களாக  மாறின

    பள்ளி நிர்வாகத்தில்!

    வஞ்சகநெஞ்சங்கள்  புகுந்து  விளையாடுவதால் – அந்தோ!

    ஏழையர்கள்  கூக்குரல்தான் காற்றில்  எங்கோ!

    என்றும் விடியாத வெள்ளியாய்!……

    Share
  • தீபாவளி நல்வாழ்த்துகள்!

     

    vallamai

     

    தீபாவளி என்ற அந்த சொல் ஒரு இன்பத்தை கொடுக்கத்தான் செய்கிறது. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே. அனைவரின் வீட்டிலும் மங்கலம் பொங்கட்டும்!        வல்லமையின்    மனமார்ந்த பிரார்த்தனைகள்.
    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.

     வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து

    முனைவர் சுபாஷிணி

    உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு சிற்பக் கலைக்கூடமும் இருக்கின்றது. அதனோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. இதனைக் காண வேண்டுமா? அப்படியென்றால் நாம் போலந்து நாட்டின் கிராக்காவ் நகரத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

    as1

    க்ராக்காவ் நகருக்கு அருகே இருக்கும் ஊர் வீல்ஸ்கா. இந்த நகரின் பெயரிலேயே இந்த உப்புச் சுரங்கம் செயல்படுகின்றது. இங்கு நிலத்தின் அடியில் உப்புப் பாளங்களைச் சுரண்டி எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்வது இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்பதைக் கேட்கும் போது இதன் பழமையை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகின்றது அல்லவா?

    இங்கே உள்ளே செல்வதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தனியாக யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆக ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து விளக்கம் சொல்லும் வழிகாட்டிகள் உதவியுடன் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். உள்ளே நுழைந்ததும் நாம் மரப்பலைகைகளால் அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி நடக்க வேண்டும். ஏறக்குறைய450க்கும் குறையாத படிகள் உள்ளன. கீழே இறங்கியதும் முதலில் தென்படுவது ஒரு ரகசிய அறை. அந்த அறை பொதுவாகவே பூட்டப்பட்டிருக்கும். நான் சென்ற வேளை என்னுடன் கூடுதலாக 2 அமெரிக்க பெண்களும் வந்திருந்தனர். ஆகவே கூட்டம் குறைவு என்பதால் எங்கள் வழிகாட்டி அந்த ரகசிய அறையை எங்களுக்குத் திறந்து காட்டினார். உள்ளே உப்புப்பாறைகளினாலேயே செதுக்கப்பட்ட அன்னை மேரியின் சிற்பமும் முக்கிய கத்தோலிக்க குருமார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட ஒரு தேவாலயமே கண் முன்னே இருந்தது. இது என்ன உலக அதிசயமா, என வியந்து நின்ற எங்களுக்குச் சிறு விளக்கம் அளித்து விட்டு, வாருங்கள் இன்னும் இருக்கின்றது .. இதை விடப் பிரமாதமாக எனச் சொல்லி அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

    as2

    கி.பி 13ம் நூற்றாண்டில் இங்கு உப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே இதனை வணிகமாக்கும் பொருட்டு உள்ளே சுரங்கப்பாதையைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் கீழே குதிரைகளை எடுத்துச் சென்று வண்டிகளை உருவாக்கி, தண்டவாளங்களை உருவாக்கி, சாலைப்பகுதிகளை உருவாக்கி உப்பினை தோண்டத் தோண்ட அவற்றை வெளியே எடுத்து வரத் தேவையான கருவிகளை படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.

    as3

    சுரங்கத்திற்குள் செல்லும் போது பாதையைத் தவிர்த்து உப்பு சுவர்களில் பொதிந்து காட்சியளிக்கின்றது. உள்ளே காற்று மிதமாக இருக்கின்றது. உள்ளே நடக்கும் போது நாம் சுவாசிப்பது பல தாதுப்பொருட்கள் கலந்த ஆக்ஸிஜன் காற்று என்பதால் உடலுக்கு நன்மை தரும் ஒரு பயணமாகவும் இந்த சுரங்கப்பாதை பயணம் அமைந்தது. சுரங்கப்பாதை உள்ளே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைத்திருக்கின்றனர். இதன் மொத்த நீளம் 287 கிமீட்டர் ஆகும். ஏறக்குறைய 4 மணி நேரங்களை உள்ளே அந்தச் சுரங்கப்பாதைக்குள் நாங்கள் செலவிட்டமையால் ஏறக்குறைய 5 கிமீ தூரம் நடந்திருப்பேன் என்றே கருதுகிரேன்.

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள்ளே நீர் தேங்கிய குளங்கள் இருக்கின்றன. இங்குப் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் பல நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் சுரங்கத்திற்குள்ளேயே இருந்து பணிபுரிந்தனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அச்சுரங்கத்திற்குள் ஏறக்குறைய 7க்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். ஒவ்வொன்றிலும் மேரி மாதாவும். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருத்துவும் உள்ள வகையில் உப்பு பாறைப்படிவங்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

    as4

    இந்த உப்புச் சுரங்கத்தின் மையப்பகுதி உலகப் பிரமாண்டங்களில் ஒன்று எனத் தயங்காது கூறலாம். ஒரு மிகப்பெரிய அரண்மனையில் விருந்தினர் பகுதியின் அலங்கரிப்பு போல சுவர்களில் நிறைந்துள்ள சிற்பங்களின் அழகை வர்ணிக்க சொற்கள் கிடையாது. கனவுலகத்தில் இருக்கின்றோமா என நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த மையப்பகுதியை வடிவமைத்திருக்கின்றனர். இங்கு சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ள அனைத்துச் சிற்பங்களுமே உப்புப் பாளங்களினால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைதாம் என்பதே இதன் தனிச்சிறப்பு எனலாம். இந்த கலைப்படைப்புத் தொகுதியில் புதிதாக இணைந்திருக்கும் சிற்பம் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் பவுல் அவர்களின் சிற்பமாகும். இவரது சிற்பமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    உலகப் பிரமாண்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உப்புச் சுரங்கம் 1978ம் ஆண்டு யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது. 2007ம் ஆண்டு வரை இங்கு உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு முதல் இங்கு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுற்றுலா தளமாக மட்டுமே இது இன்று இயங்கி வருகின்றது.

    as5

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள் உள்ள சிற்பங்களில் கிருத்துவ மத சார்புள்ள சிற்பங்களைத் தவிர்த்து முக்கியஸ்தர்களின் சிலைகளும் இங்கே உப்புப்பாளங்களினால் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மன்னர் கசிமியர், நிக்கோலவுஸ் கோப்பர்நிக்கஸ், யோஹான் வோல்வ்காங் ஃபோன் கோத்த, அலெக்ஸாண்டர் ஃபோன் ஹும்போல்ட், பில் கிளிண்டன் ஆகியோரது சிற்பங்களைக் குறிப்பிடலாம். பிரபலங்கள் மட்டுமன்றி உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பங்களும் இங்கே உள்ளன. குதிரையில் பூட்டிய உப்புக்கட்டிகளைத் தூக்கிச் செல்லும் மனிதன், பாறைகளைத் தீ வைத்து உடைக்கும் தொழிலாளி, குளத்தைத் தூய்மை செய்யும் தொழிலாளி என இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சுரங்கப்பாதைப் பணிகளை விவரிக்கும் வகையில் இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

    as6

    போலந்து ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு. ஆக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் போலந்திலிருந்து வர்த்தகம் நடைபெற்ற மிகப்பிரபலமான நகரமாக க்ராக்காவ் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதன் முக்கியத்துவம் இன்றைய பொருளாதார மாற்றத்தால் சற்றே சரிந்திருந்தாலும் கூட இப்பகுதி ஐரோப்பாவின் மிக முக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி. ஆக இங்கிருந்து தோண்டப்பட்ட உப்பு பல்வேறு இடங்களுக்கு ஆற்றின் வழியாகவும் தரை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டது என்பது வரலாறு.

    அருங்காட்சியகங்களில் பல வகை உண்டு. உலக அதிசயங்களில் ஒன்று அருங்காட்சியகமாகக் காட்சி தரும் அமைப்பாகவே, வருவோரை வியப்பில் ஆழ்த்தும் வீல்ஸ்கா உப்புச் சுரங்கமும் அதன் அருங்காட்சியகமும் விளங்குகின்றன.

    Share
  • தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!

     

    deepavali.4

     

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
    சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
    பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில்,
    தீபா வளிகாண் தினம்”….கிரேசி மோகன்….

    உதி-விபூதி, நுதல்-நெற்றி….

    Share
  • ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனை பலமா??

    நடமாடி இரை தேடும் செக்கிரட்டரி பறவை (Secretary Bird)
    Sagittarius serpentarius

    சற்குணா பாக்கியராஜ்

    படம்: பாஸ்கல் பாக்கியராஜ், கென்யா, 2017

    35862171973_1e9cf5172d_o

    கடந்த மாதம், கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச் (Massa Mara National Park) சென்ற போது, செக்கிரட்டரி பறவையைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மிடுக்கான நடை, அழகிய தோற்றம், பாம்பை விழுங்கின வேகம் மனதிலும், புகைப்படத்திலும் பதிந்து விட்டன. இந்தப் பறவையின் இரை தேடும் திறமையைக் கேட்ட போது மிகவும் வியப்பாக இருந்தது.

    ஆப்பிரிக்க நாடுகளில், புல் வெளிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் காணப்படும் செக்கிரட்டரி பறவை, பருந்துகள், கழுகுகள் இனத்தைச் சார்ந்த போதிலும், பருந்துகளைப் போல் வானில் பறந்து இரை தேடாமல், நிலத்தில் நடமாடி, இரையைப் பிடிக்கும் தன்மை வாய்ந்தது. உயரமாகப் பறக்கத் திறமையுடையதாக இருந்த போதிலும், பகல் முழுவதும் நடந்து இரை தேடிய பின், மாலை நேரத்தில் மர உச்சிகளில் அடைகிறது. வலசை போவதில்லை.

    DSCN9633 (2)

    செக்கிரட்டரி பறவையின், தலைப்பகுதி கழுகைப் போலவும், வளைந்த அலகையும் உடையது. உருவத்தில், பருந்து, கழுகு இனங்களை விட மிகவும் பெரியது. கால்கள் நீண்டு மெலிந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த செக்கிரட்டரி பறவை, நான்கு அடி உயரமாகவும், ஐந்து முதல் ஒன்பது இராத்தல் எடை பருமனாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கும். இவை இணை பிரியாதவை. அக்கேசியா(Acacia) போன்ற உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.

    சுமார் 1800 நூற்றாண்டில், இந்தப் பறவையை முதல் முதலாகப் பார்த்த ஆங்கிலேயர்கள் இதனை, செக்கிரட்டரி பறவையென்று அழைத்ததின் காரணம், இதன் தலையிலுள்ள நீண்ட கருப்பு இறகுகளும், சாம்பல் நிற இறக்கைகளும், கருப்பான நீண்ட வால் இறகுகளும், கருப்பு இறகுகளினால் மூடப்பட்ட தொடைப் பகுதிகளும், இங்கிலாந்தில், அந்த சமயத்தில் குமஸ்தா(clerk)பதவியில் பணிபுரிந்த ஆண்கள், முழங்கால் வரையுள்ள கருப்புக் கால் சட்டையும், சாம்பல் நிறக் கோட்டும்(tailcoat), அணிந்து, இறகுப் பேனாவை[quill pen) காதில் சொருகியிருப்பதைப் போன்று தோற்றமளித்ததால்தான். ஆனால், இந்தப் பறவையின் உண்மைப் பெயர், “வேட்டையாடும் பறவை” (Hunter bird).

    செக்கிரட்டரி பறவை, புழு, பூச்சி, ஓணான், பாம்பு போன்ற பிராணிகளை வேட்டையாடி உண்ணும். ஆகையால் இந்தப் பறவையை, “உழவனின் நண்பன்” என்று அழைக்கின்றனர். சில விவசாயிகள், இதனைப் பயிர்களைப் பாதுகாக்கவும், நச்சுப் பாம்புகளைக் கொல்லவும், வளர்க்கின்றனர்.

    DSCN9634 (3)

    இந்தப் பறவையின் கால்கள், பருந்து இனங்களின் கால்களை விட மிக நீண்டதாகவும், நகங்கள் கூர்மையற்றதாகவும் இருப்பதால், வேகமாக நடக்க முடியும். ஒரு நாளில், சுமார் இருபது மைல்கள் தூரம் நடந்து இரை தேடும். நகங்கள் கூர்மையற்றதால், ஒடி, இரையைப் பாதங்களால் ஓங்கி மிதித்து, கொன்று அல்லது செயலிழக்க வைத்து, விழுங்கி விடும். அலகினால் கொத்தி, இரையைத் தூக்கிச் செல்லவும் முடியும்.

    இந்தப் பறவை, பாம்புகளை வேட்டையாடும் திறமை மிகவும் அதிசயத்தக்கது! பாம்பை விரட்டி, அதன் தலையைக் குறி வைத்து, உயர எழும்பி, தலையின் மேல் பல முறை குதித்து, அதன் கழுத்தெலும்பை முறித்து, கொன்று பாம்பை விழுங்கி விடும். நச்சுப் பாம்புகளையும் விட்டு வைப்பதில்லை.

    அமெரிக்காவில், சான்டியாகோ மிருகச் சாலையில், இந்தப் பறவையை வளர்க்கிறார்கள். இதனை வெகு எளிதில் பழக்க(domesticate) முடியும்.

    கடந்த ஆண்டு, லண்டன் பல்கலைக்கழத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள், செக்கிரட்டரி பறவையின் கால்கள், மெலிந்து, நீண்டு(lanky) காணப்பட்ட போதிலும், எவ்வாறு இவ்வளவு வேகத்தில், பாம்பை மிதிக்க முடிகிறதென்று அறிய ஆராய்ச்சி நடத்தினர். அதற்காக, பருந்துகளைப் பாதுகாக்கும் இடத்தில் (Hawk Conservancy Trust in Hampshire) “மெடலின்” என்ற பழக்கப்பட்ட(domesticated)செக்கிரட்டரி பறவையின் முன் ரப்பர் பாம்பை ஓட விட்டு, அந்தப் பறவை, ரப்பர் பாம்பைக் கொல்ல முயல்வதை ஆராய்ந்தனர். அவர்களுடைய முடிவென்னவெனில், “செக்கிரட்டரி பறவை, இரையை, ஒவ்வொரு தடவையும் மிதிக்கும் போது, அதனுடைய எடையை விட ஐந்து மடங்கு அதிக எடையளவு பலத்தோடு, 15 மில்லி செகன்டிற்குள் மிதிக்கிறது. பொதுவாக, கண்ணிமை (blinking) எடுக்கும் நேரம் 150 மில்லி செகன்டுகள். ஆனால், இந்தப் பறவை, அதற்கும் குறைவான நேரத்தை எடுப்பது மிகவும் வியக்கத்தக்கது. மேலும், அதனுடைய கூர்மையான பார்வை, இரையைக் குறி தப்பாது துல்லியமாகத் தலையில் அடித்துக் கொல்ல உதவுகிறது”.

    (http://www.dailymail.co.uk/sciencetech/article-3416090/Snake-hunting-birds-stamp-prey-force-five-times-weight-says-study.html#ixzz4tNB3sXnx))

    செக்கிரட்டரி பறவை, இத்தனை வேகத்தோடும், பலத்தோடும் நச்சுப் பாம்புகளை பிடிக்கும் போது, பாம்புகளுக்கு, எதிர்த்துப் போராட நேரம் கிடைப்பதில்லை. இது இயற்கையின் விளையாட்டு!
    புகைப் படங்கள்: பாஸ்கல் பாக்கியராஜ், வயது 14

    Share
  • செந்தமிழன் பாரதி ஒரு பார்வை

    பா.அனுராதா, உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை  

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி  , தஞ்சாவூர்.

     

    நாம்  அதிக நாட்கள் பூமியில் வாழ்வது பெரிதல்ல. வாழுங் காலத்தில் நம்முடைய சாதனையே பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததைப் போல் சரித்திரத்தில் இடம் பெறுவோம். பாரதி மண்ணில் வாழ்ந்த வயதை தாண்டி பல ஆண்டுகள் கழிந்தன. சாதனை என்பது பெரும் சவாலாக இருக்கிறது. செந்தமிழனே உன்னை வறுமை வாட்டியது. என்னையோ சோர்வு,  கவலை, அலைக்கழிக்கிறது. நீயும் முயற்சியை கைவிடவில்லை. நீ செய்த செயல்களை ஒரு பார்வை பார்க்கும் போது எங்களை எல்லாம் ஊக்கப்படுத்துவது போலல்லவா இருக்கிறது.

    இளமைப் பருவம்

    எட்டயபுரத்தில் 11.12..1882 இல் சின்னச்சாமி அய்யர்  இலக்குமி அம்மாளின் தவப்புதல்வன் பாரதி. பெற்றோர்  சுப்ரமணியன் எனப் பெயரிட்டனர். அவரது குலமுறைக்கேற்ப பெயரைச் சுருக்கி சுப்பையா என்று அழைத்தனர் . அனைத்து குழந்தைகளும் முதன்முதலில்  பள்ளிச் செல்லும் போது  அழுது கொண்டே விருப்பமின்றி செல்வது வழக்கம். அப்படித்தான் பாரதியும் சென்றார்.

    ஐந்து வயதில் தாயை இழந்து தனிமை துயரில் வாடினார். சின்னச்சாமியின் உறவினர்  பாரதிக்கு பாசம் காட்டுவதற்கு தாய் தேவை. நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் என வற்புறுத்தினர். அவர் வள்ளியம்மாளை திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளும் பாரதி மீது தாயன்போடு பாசம் காட்டி வளர்த்து வந்தாள்.

    புத்தகத் தோழன்

    துள்ளித்திரியும் காலத்தில் விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். அதுவும் ஆண்குழந்தையை பிடித்து வைக்க முடியாது. கட்டுக்கடங்கா காளைபோல் விளையாட்டில் விருப்பம் கொள்வர் . ஆனால் பாரதிக்கோ விளையாட்டு தோழனும் இல்லை, தாயும் இல்லை. தனிமை ஒரு பக்கம் வாட்டியது. தந்தைக்கு பயந்து எந்த நேரமும் புத்தகத்தோடு நடந்துக் கொண்டிருப்பார். அதுவே அதிக ஆர்வமாக அமைந்து விட்டது.

    பாரதி பட்டம் பெறல்

    நம்முடைய பெற்றோர் அவர்களின்   விருப்பத்தை எப்படி நம்மேல் திணித்து ஆளாக்க நினைக்கிறார்களோ அதே போல் பாரதியின் தந்தையும் எப்படியாவது பாரதியை கலெக்டராக உருவாக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தனர். எல்லா அப்பாவின் எண்ணமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. தன் பிள்ளை பலமொழிகளை கற்று உயர் பதவியில் பணி புரிய  ஆசைப்படுகிறார்.  எட்டயபுரத்து அரசவையில் சின்னச்சாமி ஐய்யர் பணி புரிந்து வந்தார். ஏழு வயதே நிரம்பிய பாரதி தந்தையோடு அரசவைக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் சொற்களுக்கேற்ப பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கினார்.

    ஒரு நாள் வழக்கம் போல் பாரதி அரசவைக்குச் சென்றார். அரசவையில் உள்ள புலவர் ஈற்றடிகளை கொடுததனர். அதனை வைத்துக் கொண்டு அருமையான கவிதையைப் பாடினார். அரசவையில் உள்ள எல்லோரும் ஆனந்த களிப்பில் இருந்தனர். எட்டயபுரத்து மன்னர் சுப்பையாவுக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். பாரதி என்ற பெயரே நிலைத்து நிற்கிறது. தற்போது நாம் யாரிடமாவது சென்று சுப்பையாவை  தெரியுமா எனக் கேட்டால்  தெரியாது என்றே பதிலளிப்பார்கள். இயற்பெயரை மறந்து சிறப்பு பெயர் மட்டுமே நம் மனதில் நிலைத்து நிற்கிறது.

    திருமணம்

    வழக்கமாக தாய்தான் பிள்ளைக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். ஆனால் பாரதிக்கு தாயில்லாததால் பாரதியின் தந்தை தன் மகன் ஐந்தாம் பருவம் முடித்ததுமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி அலைகிறார் சின்னச்சாமி ஐய்யர். கடைசியாக கடையத்தில் செல்லப்பா ஐய்யரின் புதல்வி செல்லம்மாள் தன் மகனுக்கு ஏற்றப் பெண் என முடிவு செய்கிறார். பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் 15.6.1897 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதிக்கு பதினைந்து வயதும், செல்லம்மாலுக்கு ஏழு வயதுமே நிரம்பி இருந்தது.

    தந்தையின் இழப்பு

    பாரதி குடும்பம் ஓரளவு வசதி படைத்த குடும்பமாக இருந்தது. சில வஞ்சகர்கள் பாரதியின் தந்தையை ஏமாற்றி விட்டு சொத்துகளை அபகரித்து விட்டனர். அதே கவலையில் சின்னசாமி ஐய்யர் 1898 இல் காலமானார். பாரதி பெரும் சொத்தாக கருதிய பெற்றோரை இழந்து மீளாத் துயரத்தில் வாடினார். என்ன செய்வது எங்கே போவது என ஒன்றும் புரியாத நிலையில் இருந்த பாரதிக்கு அத்தை குப்பம்மாள் ஆதரவு அளித்தார்.

    தேசிய ஒருமைப்பாடு

    பரங்கியர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தில் பிறந்த பாரதி நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப்போரில் இணைந்தார். நாட்டு விடுதலைக்கு இன்றியமையாதது தேசிய ஒருமைப்பாடு என்பதை உணர்ந்தார். அதனை மக்களுக்கு உணர்த்த எழுச்சியூட்டும் பாடல்களை எளிய நடையில் பொழிந்தார்.

    தடைகளும் வழிகளும்

    பாரத ஒருமைப்பாட்டுக்குத் ‘தடையாய் இருப்பவை சாதி,சமய, மொழி வேறுபாடுகளே என்பதை அறிந்த பாரதி அவற்றை களையும் வழிகளை எடுத்துரைத்தார்.

           “மனிதரில் ஆயிரம் சாதி-என்ற

    வஞ்சகர் வார்த்தையை ஒப்புவதில்லை”

    என்றார்.

    “வேதியராயினும் ஒன்றே-அன்றி

    வேறு குலத்தவ ராயினும் ஒன்றே”

    என்று முழங்கினார்.

    குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் சாதிப்பிரிவு எனும் நஞ்சு விதைக்கப்படுதல் கூடாது என்று கருதிய பாரதி

    “சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

    தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்”

    என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.

     “பாருக்குள் ளேதெய்வம் ஒன்று-இதில்

          பற்பல சண்டைகள் வேண்டா”

    என அறிவுறுத்துகிறார்.

    புதுமைப் பெண்

    பாரதி, அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது தனியாகவே செல்வார்.  மனைவியை அழைத்துச்  செல்வதில்லை. கல்கத்தா மாநாட்டிற்கும் அவர் தனியே சென்றிருந்தார்.  அங்கே சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்தார்.  பாரதியாரின் அறிவையும் சுதந்திர வேட்கையையும் கண்ட சகோதரி நிவேதிதா, பாரதியிடம் “உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா? என்று கேட்டார்.”

    அதற்கு பாரதியார் “பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?”  என் மனைவி இந்த கூட்டத்திற்கு வந்து என்ன செய்யப்  போகிறாள்? என்று பதில் கூறினார். பாரதியாரின் பதிலைக் கேட்ட சகோதரி நிவேதிதா பாரதியாரிடம் சற்று கடிந்து கொண்டார்.

    “நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறீர்கள்.  ஆனால் உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்களே!”  மேலை நாடுகளில் ஆண்களுக்கு என்ன மரியாதையோ அது பெண்களுக்கும் உண்டு.!  இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சம உரிமை தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

    சகோதரி நிவேதிதாவின் கூற்று பாரதியின் உள்ளத்தை தைத்தது.  அது முதல் பாரதி, தன் மனைவி செல்லம்மாளையும் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.

    பாரதி போற்றிய பெண் விடுதலை

         சகோதரி நிவேதிதா கூற்றிற்கு இணங்க பாரதி பெண் விடுதலைக்கு பாடுபடுகிறார்.

      “மாதர் தம்மை இழிவு செய்யும்

          மடமை யைக்கொ ளுத்துவோம்”.

    என்று பாடிய அவர் அடிமைப் பெண்ணைப் புதுமைப் பெண்ணாய் மாற்றவும், பெண் விடுதலையை தொடர்ந்து போற்றவும், வழிகாட்டியுள்ளார்.

    இருவருக்கும் சமவுரிமை

         ஆணுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.  ஆதலால்,

                    “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

          அறிவில் ஓங்கிவ் வையகம் தழைக்குமாம்”.

    என்று பாடினார்.  கைம்பெண் மணத்தை வலியுறுத்திச் ‘சந்திரிகையின் கதை’ எழுதினார்.

    நாட்டுப்பற்று

        தான் விரும்பும் தொழில் எதுவென்பதை கவிதை வாயிலாக எழுதினார்.

       “எமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்

          இமை ப்பொழுதும் சோரா திருத்தல்”

    என்று பாடித் தம் கொள்கையை வெளியிட்டார் பாரதி. இஃது அவரது நாட்டுப்பற்றைக் காட்டுகிறது.

    எழுத்தும் பேச்சும்

        “சுதேசமித்திரன், “பாலபாரதம்”, “இந்தியா” என்னும் நாளிதழ்கள் வாயிலாகக் கவிதைகளும் கட்டுரைகளும் வெளியிட்ட பாரதி, பொதுக் கூட்டங்களிலும் உணார்ச்சி பொங்கப் பேசி மக்களுக்கு விடுதலையுணர்வை ஊட்டினார்.  ஆங்கில அரசு இவரைக் கைது செய்ய முயன்றதால், பிரஞ்சு அரசுக்கு உட்பட்ட புதுவை சென்று தொடர்ந்து எழுதியும் பேசியும் நாட்டு விடுதலைக்கு உழைத்தார்.

    குதிரை வண்டிக்காரனுக்கு உதவுதல்:

         பாரதி தினமும் சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு குதிரை வண்டியில் செல்வது வழக்கம்.  ஒரு நாள் குதிரை வண்டிக்காரன் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்ட பாரதி, அவரிடம் நலம் விசாரித்தார்.  தன் மனைவி, குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார்.  உடனே பாரதி தன்னுடைய குடும்பத்தைப்  பற்றி யோசிக்காமல் தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார்.  குதிரை வண்டிக்காரர் “ஐயா இவ்வளவு பணம் எனக்கு வேண்டாம்”.  பத்து அல்லது பதினைந்து ரூபாய் தாருங்கள், திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.  பாரதியோ ஐம்பது ரூபாயையும் கொடுத்து விட்டு தம் வீட்டிற்கு வெறும் கையோடு திரும்பினார். இதன் மூலம் அவரின் மனித நேயத்தை உணர முடிகிறது.

    பெரியோர் வாக்கிற்கு மதிப்பளித்தல்

         கடையத்தில் வாழ்ந்த காலத்தில் பாரதியின் மாமியார், தன் பேத்தி தங்கம்மாளிடம் பெண்கள் இவ்வளவு நேரம் குளிக்காமல் சுற்றிக் கொண்டிருக்க கூடாது என்றார். அதனோடு பெரியோரின் பழமொழியையும் கூறினார்.

                    அதாவது “குளித்து தேறு! கொடுத்துத் தேறு!” என்று கூறினார்.  இதனை கேட்ட தங்கம்மாள் உடனே குளித்து விட்டு வந்தாள்.   நம் பாரதியோ என்ன செய்தார் தெரியுமா?  அந்நேரத்தில் பாரதியாரின் வீட்டு வாசலில் பிச்சைக்காரன் ஒருவன் வந்திருந்தார்.  அதைக் கண்ட பாரதி, தான் அணிந்திருந்த வேட்டி, அங்கவஸ்திரம் ஆகிய அனைத்தையும் அவிழ்த்து அந்தப் பிச்கைக்காரருக்கு கொடுத்தார்.

                    பாரதியாரின் செய்கையைக் கண்ட வீட்டிலுள்ளோர் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.  அதற்கு பாரதி, அத்தை சற்றுமுன் சொன்னதுபடி தன் மகள் தங்கம்மாள் குளித்து தேறினாள்.  நான் கொடுத்து தேறினேன் என்று கூறினார்.

    பாரதியின் இறுதிக்காலம்

    அவர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காலத்தில் நாள்தோறும்  பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கி வருவது வழக்கமாக இருந்தது.

    கோயிலுக்குள் இருக்கும் யானைக்கு தினமும் பழங்கள் கொடுத்து வருவார்.  நாளடைவில் யானையும் பாரதியும் நல்ல நண்பர்கள் போல் இருந்தனர். ஒரு நாள் யானைக்கு மதம் பிடித்திருந்தது. அது  தெரியாத பாரதி வழக்கம் போல் யானைக்கு பழம் கொடுக்கச் சென்றார். அருகிலுள்ளோர் யானைக்கு அருகில் செல்லாதீர் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்று கூறினர் . அதனை செவி கொடுத்து கேட்காத பாரதி யானையின் அருகில் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை பாரதியை தூக்கி வீசியது.

    ஆனால் அச்சம்பவத்தைப் பார்த்த பாரதியின் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார் பாரதியை இராயப்பேட்டை மருத்துவமனையில்  சேர்த்தார். அதிலிருந்தே உடல் நிலை சரியாகவில்லை. நோய்வாய்ப்பட்டார்  பாரதி. 12.9;.1921 இல் பாரதியாரின் பொன்னுடல் திருவல்லிக்கேணி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சு.நெல்லையப்பர், சுரேந்திரநாத் ஆர்யா போன்றோர் பாரதியின் உடலைச் சுமந்து சென்றனர்.

    நாட்டு விடுதலையில் பாரதிக்கு இருந்த நம்பிக்கை தான் அவரை,

           “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

            ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று”

    என்று பாட வைத்தது. அவர்  நம்பிக்கை வீண் போகவில்லை.

      “வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர் !

       வாழிய பாரத மணித்திரு நாடு!”

    Share
  • நல் தீபாவளி !

      ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

     

    பட்டாடை உடுத்திடுவோம்

    பட்சணமும் உண்டிடுவோம்

    மத்தாப்புக் கொழுத்திடுவோம்

    மனமகிழ இருந்திடுவோம்

    தப்புக்கள் தனைமறப்போம்

    தாழ்பணிவோம் மூத்தோரை

    எப்பவுமே இறைநினைப்பை

    இதயமதில் இருத்திடுவோம் !

     

    ஆடம்பரம் அனைத்தையுமே

    அனைவருமே ஒதுக்கிடுவோம்

    ஆதரவு இல்லார்க்கு

    அருந்துணையாய் அமைந்திடுவோம்

    தீதுடைய செயல்களைநாம்

    தீண்டாமல் இருந்திடுவோம்

    தீபாவளி எமக்கு

    சிறப்பாக அமையுமன்றோ !

     

    பட்டாசும் மத்தாப்பும்

    பலபேரின் உழைப்பாகும்

    பட்டாசும் மத்தாப்பும்

    பலவிழப்பை தந்துவிடும்

    இட்டமுடன் வெடிக்காமல்

    எச்சரிக்கை மனங்கொண்டால்

    எல்லோர்க்கும் தீபாவளி

    இங்கிதமாய் இருக்குமன்றோ !

     

     

    வியாபாரம் தனையெண்ணி

    விதம்விதமாய் பட்சணங்கள்

    வண்ணவண்ண நிறமூட்டி

    வாவெனவே அழைத்துநிற்கும்

    அவையுள்ளே பொதிந்திருக்கும்

    ஆரோக்கியம் தனைக்கெடுக்கும்

    அத்தனையும் தீபாவளி

    அகமகிழ்வைக் குலைக்குமன்றோ !

     

    வேகமாய் வாகனங்கள்

    ஓட்டுவதைத் தவிர்த்திடுவோம்

    வேகமது கூடிவிடின்

    விபரீதம் ஆகிவிடும்

    தீபாவளித் தினத்தில்

    தேடிவரும் ஆபத்தாய்

    திசைதெறிக்க ஓடிவரும்

    வாகனத்தைத் தவிர்த்திடுவோம் !

     

    மதுவரக்கன் தனையெவரும்

    மனமதிலே  நினையாமல்

    புதுவசந்தம் வீசுதற்கு

    புத்துணர்வு பெற்றிடுவோம்

    தீபாவளி நாளில்

    திருப்பங்கள் பலவந்தால்

    தித்திப்பு யாவருக்கும்

    சொத்தாக இருக்குமன்றோ !

     

    நல்லவற்றைச் சிந்தித்தால்

    நாளுமே தீபாவளி

    நல்லவழி நாம்நடப்பின்

    நாட்டுக்கே தீபாவளி

    அல்லவைகள் அகற்றிவிடின்

    அனைவருக்கும் தீபாவளி

    அமைதியுடன் இறைபணிந்தால்

    அமைந்திடும் நல்தீபாவளி !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 31

    க. பாலசுப்பிரமணியன்

    பாசத்திலிருந்து விடுபடுவது எப்படி?

    திருமூலர்-1-3

    “நான்” “எனது” என்ற எண்ணத்தை விட்டுவிடத்தான் நாம் துடித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் முடிவில்லையே !  இந்தப் புவியில் ஈடுபாடு உள்ளவரை, உறவுகளைப் பாராட்டும் வரை, ஐம்பொறிகளை நாம் பயன்படுத்தும் வரை இந்தத் துன்பக்கேணியில் நாம் மீண்டும் மீண்டும் மூழ்கிக் கொண்டுதான் இருப்போம். இந்த அவலத்திலிருந்து நீங்குவதற்கும் அந்தப் பேரருளாளன் துணை தான் வேண்டும். அவன் துணையில்லாமல் இந்தத் துயரிலிருந்து விடுபட முடியாது. அதனால்தான் தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகின்றார்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

    பற்றுக பற்று விடற்கு.”

    இந்தப் பற்று என்பது நமது மனதின் மாயையால்தானே வந்தது? இந்த மாயையை எவ்வாறு அறுப்பது?

    ஒரு முறை ஒரு முனிவர் காட்டில் பல காலம் தவம் செய்துவிட்டு அதன் பயனை சாதாரண மனிதருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று பல நகரங்களுக்குச் சென்று தம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வந்தார். தன்னுடைய உரைகளில் எவ்வாறு நாம் மாயையால் கட்டுப்பட்டுள்ளோம், அதிலிருந்து எப்படி மீள்வது என்று நல்லுரை அளித்து வந்தார். ஒரு காலத்தில் ஒரு நாட்டின் அரசனுக்கு இந்த முனிவரின் கருத்துக்கள் எடுத்துச் சொல்லப்பட்டு, அவன் இவரிடம் அருள்நாடி வந்தான்.

    “முனிவரே, எனக்கு மாயை என்றால் என்ன என்பதைக் கண்களில் காட்டவேண்டும். கண்ணால் பார்க்காத எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் காட்ட மறுத்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் என்று கருதி உங்களை தண்டிக்க நேரிடும்” என்றான். அந்த முனிவரும்  புன்முறுவலுடன் “அதற்கென்ன? என்னுடன் வந்து சில நாட்கள் தங்கு. உனக்கு மாயையைக் காட்டுகின்றேன்” என்றார்.

    அரசனும் தன் அரண்மனையை விட்டு விலகி முனிவரிடம் வந்து தங்க ஆரம்பித்தான், ஒரு வார காலம் போனபின் “முனிவரே, ஏழு நாட்கள் கழிந்து விட்டன. இன்னும் தாங்கள் காட்ட வில்லையே.” எனக் கேட்டான். முனிவரும் சிரித்தார். ” நேரம் வரும். காட்டுகின்றேன் ” எனக்கூறி நகர்ந்து சென்றார். மீண்டும் சில நாட்கள் கழிந்த பின் பொறுமையிழந்த அரசன் “முனிவரே. காலம் கடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஐந்து நாட்களுக்குள் தாங்கள் மாயையைக் கண்கூடாகக் காட்டவில்லையென்றால் தங்கள் உயிரை விட வேண்டி வரும் ” என எச்சரித்தான். ஐந்தாவது நாள் முனிவர் தன் கமண்டலுத்துடன் செல்வதைக் கண்டு அவரை நிறுத்தி “இன்னும் ஒரு அடி கூட தாங்கள் வைக்கக் கூடாது எனக்கு மாயையைக் காட்டாமல் ” எனச் சொல்ல  முனிவரும் தன கமண்டலத்தைக் கீழே விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு மரத்தை நோக்கிச் சென்று அதை இருகக் கட்டிக்கொண்டு “என்னை விட்டுவிடு, விட்டுவிடு” என்று அலற, அரசனும் “என்ன முட்டாள்தனம். நீங்கள் அதை பிடித்துக் கொண்டு அது விடவில்லை என்று சொல்கின்றீர்களே” எனக்கூற முனிவரும் “இதுதான் மாயை. ஏதாவது ஒன்றை நாம் பிடித்துக்கொண்டு அது நம்மை விடவில்லையே என்று துன்பக்கடலில் மிதக்கிறோமே அதுதான் மாயை” என்று விளக்கினார்.

    உண்மை அதுவே! பல நேரங்களில் ஐம்பொறிங்களால் தூண்டப்பட்ட சிற்றின்பங்களுக்கோ நாம் விலையாகி அவைகள் நம்மை விடவில்லையே” என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றோம்.

    இதனால்தான் திருமூலர் மிக அழகாகக் கூறுகின்றார்

       “வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்

       குன்று விழுவதில் தாங்கலு மாமே.”

    புலன்களால் உந்தப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ளும் நாம் அந்த பாசத்தில், அந்த மயக்கத்தில் எத்தனை வினைகளுக்கு நம்மை இரையாக்கிக் கொல்லுகின்றோம். இந்தவினைப்பயன்கள் நம்மை விடுவதில்லையே.

    பசு, பதி  பாசம் என்ற மூன்றுக்கும் உள்ள விளக்கத்தை மிக வளமையான சொர்க்களால் விளக்கும் திருமூலர் கூறுகின்றார்

    பசு பல கோடி பிரமன் முதலாய்

    பசுக்களைக் கட்டிப் பாசமூன் றுண்டு

    பசுத்தன்மை நீக்கிப் பாசம் அறுத்தாற்

    பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே

    ஐம்பொறிகளின் துன்பத்தில் துயருற்ற மாணிக்கவாசகரோ அந்த இறைவனின் துணையின்றி இதிலிருந்து விடுபட முடியாது என்பதை உணர்ந்தே அவன் ஒளி காட்டும் பொன்மேனியை வணங்கி அருள் நாடுகின்றார்.

    மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப

    யான் உன் மணி மலர்த் தாள்

    வேறுபட்டேனை விடுதி கண்டாய்

    வினையேன் மனத்தே

    ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச

    மங்கைக்கு அரசே

    நீறுபட்டே ஒளி காட்டும் பொன்  மேனி

    நெடுந்தகையே 

    இந்த மாயையில் பிடிபட்டு தன்னை வஞ்சித்த மனத்தை பட்டினத்தார் தன்னுடைய கோபத்திற்கு ஆளாக்கிப் பாடுகிறார்

    தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை

    முத்திக்கு வித்தான முப்பாழை போற்றாமல்

    பற்றிப் பிடித்தியமன் பாசத்தால் கட்டும்வண்ணம்

    சுற்றி யிருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே

    எனவே மாயையை விட்டு தியானத்தில் அவனை மட்டும் உள்நிறுத்தி அவன் அருளொருளியை நம்முடன் இணைக்கும் போது நமக்கு ஏற்படுகின்றது ஆனந்த அனுபவம்தானே ! ஆனால் பாசத்தில் உழன்று கல்லாகிப் போன இந்த நெஞ்சம் சிறிதேனும் மாறுமோ ?

    திருமூலரின் நம்பிக்கைக்குத் தான் என்ன வலிமை !

     “வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை

      ஆட்கொண்ட வள்ளல் “

    என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றார்

    மாணிக்கவாசகரிடம் இந்த இறைக்கருணையின் இன்னொரு வளமை தென்படுகின்றது.

    கல்லைப் பிசைந்து கனி ஆக்கித் தன் கருணை

    வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை”

    என்று பாராட்டிப் பரவசம் அடைகின்றார்.

    தொடரும்

    Share
  • ஞானச் சுடர்

    -இன்னம்பூரான்
    தீபாவளி தினம் 2017
    அக்டோபர் 18, 2017

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியாநன்புருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்.   (பூதத்தாழ்வார்)

    *****

    ஞானச் சுடர் [1]

    innam

    முன்னுரை

    மதிநுட்பம் அல்லது ஞானம் பற்றிய இந்த நூல் சராசரி மனிதனால், சராசரி மனிதனுக்கு எழுதப்படுகிறது. சான்றோர்களும், மேதாவிகளும் இதில் புதிதாக ஒன்றும் காணவில்லையே என்று அங்கலாய்க்கலாம். பொறுத்தாள்க. கருத்துரிமை யாவருக்கும் உண்டு என்பதால், மாற்றுக்கருத்து, திசைமாற்றம், குறுக்குசால் போன்றவற்றை தடுத்தாட்கொள்ளப்போவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று அசால்ட்டாக இருக்காமல், சிறு துளி பெரு வெள்ளம் என்று அமரிக்கையாகப் படித்துப் பயன்பெறுக.

    *****

    சித்திரத்துக்கு நன்றி: http://3.bp.blogspot.com/-GKTV8vAXyxE/TfOpUvFnW5I/AAAAAAAADRQ/jSnSKdaJMNE/s1600/5210610419_3a6291cd93_b.jpg

     

     

     

     

    Share
  • மர்மப் புன்னகை

    “ எப்படிப்பட்ட புத்திமானாயினும் சில சிறு தவறுகளாலோ  அல்லது அலக்‌ஷியத்தாலோ  அல்லது  தேவையில்லாத  அவ நம்பிக்கைகளினாலோ  அல்லது அதீத தன்னம்பிக்கை எனப்படும் கர்வத்தாலோ   பெரும் அவதிகளுக்கு  உள்ளாவதுண்டு”

                                                                     அன்புடன்

                                                                     தமிழ்த்தேனீ

                                                                                                                                                                                                                                                                                                                                       

    பலமுறை வெளி நாடுகளுக்கு அடிக்கடி செல்லும் அனுபவம் கை கொடுத்தது  அதனால் எங்குமே ப்ரச்சனை இல்லாமல்  சுமுகமாக போய் தங்கி மகிழ்ச்சியாக இருந்து  அங்கே இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு தாமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிய தம்பதியர்  ராமநாதனும் காமக்‌ஷியும், அதே போல்  இந்த முறையும்  எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு  புறப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்

    அவர்களுக்கே  தெரியாமல்  அங்கே அவர்கள் பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளத் தயாராக இருந்தது  “ அது “  அது வந்து பெட்டியில் உட்காரப் போவதை  அறியாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்,

    தொலைபேசி அழைத்தது  தொலைபேசியில்  சார்  நான் உங்க மகன் வேலை செய்யும்  அலுவலகத்திலே உங்கள்  மகனுடன் பணிபுரியும் எங்கள் மகனுக்கு   சில அவசியமான மருந்துகள் தேவைப்படுகின்றன  அதை எடுத்துப் போக முடியுமா  என்றார் எதிர் முனையில் பேசியவர்

    ராமநாதன் மிக ஜாக்கிரதையாக  சரி சார்  அதனாலென்ன கொண்டு போய்க் குடுக்கறோம்  ஒருத்தருக்கொருத்தர்  இந்த  உதவி கூட செய்யமுடியாதா என்ன  ஆனா டாக்டர் எழுதிக் கொடுத்த  மருந்துச் சீட்டையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

    சரி சார்  அதையும் சேர்த்தே  கொண்டு வரோம்  என்றார் எதிர் முனையில் பேசியவர்,   சரிஎன்று தொலைபேசியை வைத்தவர்    காமாக்‌ஷி  நான் போயி  தொலைபேசி இணைப்பையும் இணைய இணைப்பையும்  மூணு மாசத்துக்கு  பாதுகாப்புப் பெட்டகத்திலே  ( Safe Custody  )  வெச்சுக்கறதுக்கு எழுதிக்குடுத்துட்டு வரேன் என்றபடி வெளியே கிளம்பினார்  ராமநாதன்.

    “அவர் வெளியே போனதை அறிந்து அது உள்ளே நுழைந்தது”.

    சார்  நீங்க  எழுதிக் குடுத்துட்டீங்க   நாங்க  சேஃப் கஸ்டடிலே வெச்சுக்கறோம்   கவலைப்படாம  போயிட்டு வாங்க  என்றார்  பீ எஸ் என் எல்  அதிகாரி  , நன்றி   நான்  திரும்பி வரும் போது முதல்லேயே உங்களுக்கு  போன்லே செய்தி சொல்றேன்  சேஃப் கஸ்டடிலே லேருந்து  ரிலீஸ் பண்னிடுங்க  , அந்த   ரிக்வெஸ்டையும்  எழுதிக் குடுத்திருக்கேன் என்றபடி கிளம்பி வாயிலுக்கு  வந்து  காரிலேறி இக்னீஷியனை உசுப்பினார் ராமநாதன், காரிலிருந்த கென்வுட் இசைக்கருவி பாட்டை நிறுத்திவிட்டு  யாரோ தொலைபேசியில் அழைப்பதை சொல்லியது , அவர் மனைவி  காமாக்‌ஷி  ஏங்க  அவங்க  வந்திருக்காங்க  மருந்தை எடுத்துண்டு வந்திருக்காரு வாங்கிக்கவா  என்றாள் , வாங்கிக்கம்மா  பிரிஸ்க்ரிப்ஷனையும் வாங்கிக்கோ   என்றார்.

    இல்லே  ப்ரிஸ்க்ரிப்ஷனை உங்க  மெயிலுக்கு  அனுப்பரேன்னு சொல்றாரு  என்றாள் அவள்  சரி  வாங்கிக்கம்மா  என்று சொல்லிவிட்டு அவர் தெருவில்  நுழைந்து வரும் போது  ஒரு பெரிய விலை உயர்ந்த  கார்  அவர் வீட்டிலிருந்து வெளியே போனது . வீட்டுக்குள் நுழைந்து காரை நிறுத்திவிட்டு  காமாக்‌ஷி டெலிபோனுக்கு  எழுதுக்குடுத்தாச்சு  என்றார்.  சரிங்க இந்தாங்க காபி சாப்பிடுங்க  என்று காபியை நீட்டினாள் காமாக்‌ஷி

    அவங்க கொண்டு வந்த  மருந்தை எங்கே வெச்சே  ஏன்றார்   ராமநாதன்  நான் என் பெட்டியிலே வெச்சிட்டேன் என்றாள் காமாக்‌ஷி. “ ஒ அப்பிடியா  சரி சரி சரி  நான்  போயி கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே  மசூர்பாக் வாங்கிண்டு அப்பிடியே கேஷ்யூ  பைட்டுன்னு ஒண்ணு புதுசா போட்டிருக்காங்களாம் அதையும் வாங்கிட்டு வரேன் என்று ராமநாதன்   மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு  கிளம்பினார்

    “ அந்த அது  உள்ளுக்குள்ளே  இருந்து மெல்லமாக  சிரித்தது  மர்மமாய் “

    குறிப்பிட்ட  நாளில் விமான நிலையத்துக்கு  வந்து இறங்கி  உள்ளே போகும்போது  பாஸ்போர்ட்டையும் விசாவையும் காண்பித்துவிட்டு உள்ளே  நுழைந்து இமிக்ரேஷனுக்கு முன்னால் பேகேஜ் செக் செய்யும் இடத்தில்  இவரை உள்ளே அனுமதித்துவிட்டு   காமாக்‌ஷியை  நிறுத்தி வைத்தனர்   அதிர்ந்தார்   ராமநாதன்.

    சார்  என்  பொண்டாட்டியை  அங்கே நிறுத்திட்டாங்க  நான் வெளியே போயி என்னான்னு பாக்கறேன்  என்று சொல்லிவிட்டு வந்து என்ன ஆச்சு எதுக்கு  என் பொண்டாட்டியை  இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க  என்றார் .  ஒருவர் வந்து  நீங்க  இவங்களோட  புருஷனா  ப்ளீஸ் இங்க நீங்களும்  வெயிட் பண்ணுங்க  என்றார் அவர். என்னவென்று புரியாமல் நின்றார்

    ஒரு ஆபீசர் வந்து  உங்க  மனைவியோட  கைப்பையிலே  ஒரு பாக்கெட் இருக்கு  அது உங்களுதா  என்றார்.   எது என்று எட்டிப் பார்த்தார்  ராமநாதன்  அவர் ஒரு பாக்கெட்டைக் காட்டினார் .  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “    காமாக்‌ஷி  ஏங்க  அவங்க கொண்டு வந்து குடுத்தாங்களே  அந்த  மருந்து பாக்கெட் அது  என்றாள் பயந்த  குரலில்

    அதை உன்னோட  பெட்டியிலே  வெச்சேன்னு சொன்னியே  என்றார்  ராமநாதன் , அதுலேருந்து  எடுத்து கைப்பையிலே  வெச்சிண்டேன்  என்றாள் காமாக்‌ஷி  , ராமநாதன் அந்த  அதிகாரியிடம் திரும்பி  சார்  அது என் பையனோட  ஆபீஸ்லே வேலை செய்யற  பையனோட  மருந்து, அவங்க அப்பா கொண்டு வந்து குடுத்து அதை அவங்க கிட்டே குடுக்கச் சொன்னாரு என்றார், ஏன் சார்  அதுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கா  என்றார்  ஆபீசர்

    அவரு என்னோட  மெயில்லே  அனுப்பறேன்னு  சொன்னாரு   என்றார் ராமநாதன்.    சரி உங்க  கம்ப்யூட்டரை எடுத்து  அந்த  மெயிலைக் காட்ட  முடியுமா என்றார் ஆபீசர், சரி என்று அவர்  கப்ம்யூட்டரை எடுத்து  அதை உயிர்ப்பித்தார்,   அதிலே  அவருக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவும் வரவில்லை

    மிஸ்டர் ராமநாதன்  அந்த பாக்கெட்டை  நாங்க  பிரிச்சுப் பாக்கணும் , என்றார் ஆபீசர். ஒரு அதிகாரியை அழைத்து  அதைப் பிரிக்கச் சொன்னார் .பிரித்தார்கள்  அதிலே …… இருந்தவற்றைப் பார்த்த  அதிகாரிகள்  அதிர்ந்தார்கள்.       என்ன மிஸ்டர் ராமநாதன் இது  உங்களைப் பாத்தா  படிச்சவர் மாதிரி இருக்கீங்க  இதுலே போதை மருந்து கலந்திருக்கு இதை அந்த நாட்டிலே  தடை செஞ்சிருக்காங்க , நம்ம நாட்டிலேயும்தான்

    அதுனாலே  நீங்க  ரெண்டு பேரும் இந்தப் பாக்கெட்டை உங்களுக்கு  குடுத்தவங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்க  அவங்கதான் குடுத்தாங்கன்னு நிரூபிச்சா  நீங்க  இந்த  ஃப்ளைட்டிலே போக முடியும்  இல்லேன்னா  நாங்க  உங்க ரெண்டு பேரையும் காவல்துறை கிட்டே ஒப்படைக்க வேண்டி வரும் என்றார்

    அதிர்ந்து போன ராமநாதன்  அவரைத் தொடர்பு கொள்ள முயன்றார்  எதிர் முனையில் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை  அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்   என்றே சொல்லிக்கொண்டு இருந்து  ,

    என்ன செய்வதென்றே தெரியாதவராய்   சார்  அவர் என்னோட மெயிலுக்கு ப்ரிஸ்கிரிப்ஷன் அனுப்பறேன்னு சொல்லிட்டு இதைக் குடுத்துட்டுப் போயிருக்காரு, அதை நம்பி என் ஃவைப் இதை வாங்கி வெச்சிருக்காங்க, இது போதை மருந்துன்னு தெரிஞ்சிருந்தா  கைப்பையிலேயே கொண்டு வருவோமா  , நீங்களே யோசிச்சு பாருங்க என்றார் ராமநாதன்.

    சார்  எங்களுக்கு  உங்க  நிலைமை புரியுது ஆனா நாங்க  எங்க கடமையை செய்யணும் வேற  வழியில்லே  என்றார் அதிகாரி.   அந்தப் பாகெட்டைப் பார்த்தார்  ராமநாதன்  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “ ஏதோ  ஒரு அதிர்ச்சியில் திடுக்கிட்டு கண்விழித்தார்  ராமநாதன்!

    அட  மொத்தமும் கனவா    !  ஏம்மா காமாக்‌ஷி  அவங்க கொண்டு வந்த  மெடிசினைக் காட்டு  என்று வாங்கிப் பார்த்தார் .   மீண்டும் அவருக்கு தொலைபேசியில்  சார் நீங்க  அனுப்பறேன்னு சொன்னீங்களே  அந்த  ப்ரிஸ்க்ரிப்ஷனை அனுப்பவே இல்லையே என்றார்

    எதிர் முனையில்  சார்  மன்னிக்கணும்  இணையத் தொடர்பு கிடைக்கவே இல்லே  இதோ இப்போ  அனுப்பிர்றேன்  என்றபடி    சார் இப்போ பாருங்க  உங்க மெயில்லே அனுப்பி இருக்கேன்  என்றார்

    மெயிலைத்  திறந்து  பார்த்தவருக்கு  திருப்தி சாதாரண மருந்துகள்தான்  சரி சார்  நாங்க எடுத்துட்டுப் போயி உங்க   பிளைகிட்ட குடுத்துர்றோம்  என்றார்  ராமநாதன் . நன்றி சார்  என்றார் அவர்  மறு முனையில்.

     திரு ராமநாதன் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தே  நம்பிக்கை கொண்டார்  , அவர்  அந்தப் பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்திருக்கலாம் , அந்தப் பாக்கெட்டை  அவர் பிரித்துப் பார்க்கவே இல்லை. அது அவருடைய  விதியா   அல்லது  தன்மேலே  அவருக்கிருந்த  அதீத   நம்பிக்கையா

    அந்த  மருந்து பாக்கெட்  அவரைப் பார்த்து மர்மமாய்ச் சிரித்தது.

    குறிப்பிட்ட  பயண  நாளும் வந்தது  . பார்ப்போம் வேடிக்கை

                           சுபம்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • விடிவெள்ளி விவேகானந்தர்

    -தேனுகா மணி

    மானுடம் போற்றும் வேந்தர்
    விடிவெள்ளி விவேகானந்தர்

    இளைஞர்களே
    என் நம்பிக்கை என்றார்
    இறையனுபவத்தால்
    இவ்வுலகை வென்றார்

    மனதின் நிறம்
    வெண்மை என்றார்
    அதன் மார்க்கம்
    சுயநலமின்மை என்றார்

    உறங்கும் ஆத்மாவை
    எழுப்பு என்றார்
    உண்மைகளின் இயல்பே
    உன் இருப்பு என்றார்

    அனைத்தையும் அளிப்பது
    அன்பு என்றார்
    அன்னையைப்போல்
    அதனை நம்பு என்றார்

    நமக்குத்
    துயரத்தை அளிப்பது
    அச்சம் என்றார்
    அதை அகற்றுவது
    ஞானத்தின் வெளிச்சம் என்றார்

    எதிர்மறை எண்ணங்களைத்
    திசை திருப்பு என்றார்
    எதிரிகளை எரிக்கட்டும்
    சத்தியத்தின்
    நெருப்பு என்றார்

    தனித்தன்மை
    தன்னம்பிக்கை தேவை என்றார்
    இவை இரண்டும்
    இருப்பவனே
    செய்வான் சேவை என்றார்

    இருபுயம் விரிவடைந்தால்
    வீரம் பிறக்கும் என்றார்
    இருதயம் விரிவடைந்தால்
    ஞானம் உதிக்கும் என்றார்

    இவை…
    விவேகானந்தரின் வாக்கு
    அவ்வழியே இருக்கட்டும்
    நம் நோக்கு

    நம் சிறுதுளி
    வெள்ளமாகட்டும்
    நம் சிறுபொறி
    வெளிச்சமாகட்டும்
    அதுவும்…
    மக்களைக் காக்கட்டும்

    மானுடம் போற்றும் வேந்தர்
    விடிவெள்ளி விவேகானந்தர்

     

     

     

    Share