“ எப்படிப்பட்ட புத்திமானாயினும் சில சிறு தவறுகளாலோ  அல்லது அலக்‌ஷியத்தாலோ  அல்லது  தேவையில்லாத  அவ நம்பிக்கைகளினாலோ  அல்லது அதீத தன்னம்பிக்கை எனப்படும் கர்வத்தாலோ   பெரும் அவதிகளுக்கு  உள்ளாவதுண்டு”

                                                                 அன்புடன்

                                                                 தமிழ்த்தேனீ

                                                                                                                                                                                                                                                                                                                                   

பலமுறை வெளி நாடுகளுக்கு அடிக்கடி செல்லும் அனுபவம் கை கொடுத்தது  அதனால் எங்குமே ப்ரச்சனை இல்லாமல்  சுமுகமாக போய் தங்கி மகிழ்ச்சியாக இருந்து  அங்கே இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு தாமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிய தம்பதியர்  ராமநாதனும் காமக்‌ஷியும், அதே போல்  இந்த முறையும்  எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு  புறப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்

அவர்களுக்கே  தெரியாமல்  அங்கே அவர்கள் பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளத் தயாராக இருந்தது  “ அது “  அது வந்து பெட்டியில் உட்காரப் போவதை  அறியாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்,

தொலைபேசி அழைத்தது  தொலைபேசியில்  சார்  நான் உங்க மகன் வேலை செய்யும்  அலுவலகத்திலே உங்கள்  மகனுடன் பணிபுரியும் எங்கள் மகனுக்கு   சில அவசியமான மருந்துகள் தேவைப்படுகின்றன  அதை எடுத்துப் போக முடியுமா  என்றார் எதிர் முனையில் பேசியவர்

ராமநாதன் மிக ஜாக்கிரதையாக  சரி சார்  அதனாலென்ன கொண்டு போய்க் குடுக்கறோம்  ஒருத்தருக்கொருத்தர்  இந்த  உதவி கூட செய்யமுடியாதா என்ன  ஆனா டாக்டர் எழுதிக் கொடுத்த  மருந்துச் சீட்டையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

சரி சார்  அதையும் சேர்த்தே  கொண்டு வரோம்  என்றார் எதிர் முனையில் பேசியவர்,   சரிஎன்று தொலைபேசியை வைத்தவர்    காமாக்‌ஷி  நான் போயி  தொலைபேசி இணைப்பையும் இணைய இணைப்பையும்  மூணு மாசத்துக்கு  பாதுகாப்புப் பெட்டகத்திலே  ( Safe Custody  )  வெச்சுக்கறதுக்கு எழுதிக்குடுத்துட்டு வரேன் என்றபடி வெளியே கிளம்பினார்  ராமநாதன்.

“அவர் வெளியே போனதை அறிந்து அது உள்ளே நுழைந்தது”.

சார்  நீங்க  எழுதிக் குடுத்துட்டீங்க   நாங்க  சேஃப் கஸ்டடிலே வெச்சுக்கறோம்   கவலைப்படாம  போயிட்டு வாங்க  என்றார்  பீ எஸ் என் எல்  அதிகாரி  , நன்றி   நான்  திரும்பி வரும் போது முதல்லேயே உங்களுக்கு  போன்லே செய்தி சொல்றேன்  சேஃப் கஸ்டடிலே லேருந்து  ரிலீஸ் பண்னிடுங்க  , அந்த   ரிக்வெஸ்டையும்  எழுதிக் குடுத்திருக்கேன் என்றபடி கிளம்பி வாயிலுக்கு  வந்து  காரிலேறி இக்னீஷியனை உசுப்பினார் ராமநாதன், காரிலிருந்த கென்வுட் இசைக்கருவி பாட்டை நிறுத்திவிட்டு  யாரோ தொலைபேசியில் அழைப்பதை சொல்லியது , அவர் மனைவி  காமாக்‌ஷி  ஏங்க  அவங்க  வந்திருக்காங்க  மருந்தை எடுத்துண்டு வந்திருக்காரு வாங்கிக்கவா  என்றாள் , வாங்கிக்கம்மா  பிரிஸ்க்ரிப்ஷனையும் வாங்கிக்கோ   என்றார்.

இல்லே  ப்ரிஸ்க்ரிப்ஷனை உங்க  மெயிலுக்கு  அனுப்பரேன்னு சொல்றாரு  என்றாள் அவள்  சரி  வாங்கிக்கம்மா  என்று சொல்லிவிட்டு அவர் தெருவில்  நுழைந்து வரும் போது  ஒரு பெரிய விலை உயர்ந்த  கார்  அவர் வீட்டிலிருந்து வெளியே போனது . வீட்டுக்குள் நுழைந்து காரை நிறுத்திவிட்டு  காமாக்‌ஷி டெலிபோனுக்கு  எழுதுக்குடுத்தாச்சு  என்றார்.  சரிங்க இந்தாங்க காபி சாப்பிடுங்க  என்று காபியை நீட்டினாள் காமாக்‌ஷி

அவங்க கொண்டு வந்த  மருந்தை எங்கே வெச்சே  ஏன்றார்   ராமநாதன்  நான் என் பெட்டியிலே வெச்சிட்டேன் என்றாள் காமாக்‌ஷி. “ ஒ அப்பிடியா  சரி சரி சரி  நான்  போயி கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே  மசூர்பாக் வாங்கிண்டு அப்பிடியே கேஷ்யூ  பைட்டுன்னு ஒண்ணு புதுசா போட்டிருக்காங்களாம் அதையும் வாங்கிட்டு வரேன் என்று ராமநாதன்   மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு  கிளம்பினார்

“ அந்த அது  உள்ளுக்குள்ளே  இருந்து மெல்லமாக  சிரித்தது  மர்மமாய் “

குறிப்பிட்ட  நாளில் விமான நிலையத்துக்கு  வந்து இறங்கி  உள்ளே போகும்போது  பாஸ்போர்ட்டையும் விசாவையும் காண்பித்துவிட்டு உள்ளே  நுழைந்து இமிக்ரேஷனுக்கு முன்னால் பேகேஜ் செக் செய்யும் இடத்தில்  இவரை உள்ளே அனுமதித்துவிட்டு   காமாக்‌ஷியை  நிறுத்தி வைத்தனர்   அதிர்ந்தார்   ராமநாதன்.

சார்  என்  பொண்டாட்டியை  அங்கே நிறுத்திட்டாங்க  நான் வெளியே போயி என்னான்னு பாக்கறேன்  என்று சொல்லிவிட்டு வந்து என்ன ஆச்சு எதுக்கு  என் பொண்டாட்டியை  இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க  என்றார் .  ஒருவர் வந்து  நீங்க  இவங்களோட  புருஷனா  ப்ளீஸ் இங்க நீங்களும்  வெயிட் பண்ணுங்க  என்றார் அவர். என்னவென்று புரியாமல் நின்றார்

ஒரு ஆபீசர் வந்து  உங்க  மனைவியோட  கைப்பையிலே  ஒரு பாக்கெட் இருக்கு  அது உங்களுதா  என்றார்.   எது என்று எட்டிப் பார்த்தார்  ராமநாதன்  அவர் ஒரு பாக்கெட்டைக் காட்டினார் .  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “    காமாக்‌ஷி  ஏங்க  அவங்க கொண்டு வந்து குடுத்தாங்களே  அந்த  மருந்து பாக்கெட் அது  என்றாள் பயந்த  குரலில்

அதை உன்னோட  பெட்டியிலே  வெச்சேன்னு சொன்னியே  என்றார்  ராமநாதன் , அதுலேருந்து  எடுத்து கைப்பையிலே  வெச்சிண்டேன்  என்றாள் காமாக்‌ஷி  , ராமநாதன் அந்த  அதிகாரியிடம் திரும்பி  சார்  அது என் பையனோட  ஆபீஸ்லே வேலை செய்யற  பையனோட  மருந்து, அவங்க அப்பா கொண்டு வந்து குடுத்து அதை அவங்க கிட்டே குடுக்கச் சொன்னாரு என்றார், ஏன் சார்  அதுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கா  என்றார்  ஆபீசர்

அவரு என்னோட  மெயில்லே  அனுப்பறேன்னு  சொன்னாரு   என்றார் ராமநாதன்.    சரி உங்க  கம்ப்யூட்டரை எடுத்து  அந்த  மெயிலைக் காட்ட  முடியுமா என்றார் ஆபீசர், சரி என்று அவர்  கப்ம்யூட்டரை எடுத்து  அதை உயிர்ப்பித்தார்,   அதிலே  அவருக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவும் வரவில்லை

மிஸ்டர் ராமநாதன்  அந்த பாக்கெட்டை  நாங்க  பிரிச்சுப் பாக்கணும் , என்றார் ஆபீசர். ஒரு அதிகாரியை அழைத்து  அதைப் பிரிக்கச் சொன்னார் .பிரித்தார்கள்  அதிலே …… இருந்தவற்றைப் பார்த்த  அதிகாரிகள்  அதிர்ந்தார்கள்.       என்ன மிஸ்டர் ராமநாதன் இது  உங்களைப் பாத்தா  படிச்சவர் மாதிரி இருக்கீங்க  இதுலே போதை மருந்து கலந்திருக்கு இதை அந்த நாட்டிலே  தடை செஞ்சிருக்காங்க , நம்ம நாட்டிலேயும்தான்

அதுனாலே  நீங்க  ரெண்டு பேரும் இந்தப் பாக்கெட்டை உங்களுக்கு  குடுத்தவங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்க  அவங்கதான் குடுத்தாங்கன்னு நிரூபிச்சா  நீங்க  இந்த  ஃப்ளைட்டிலே போக முடியும்  இல்லேன்னா  நாங்க  உங்க ரெண்டு பேரையும் காவல்துறை கிட்டே ஒப்படைக்க வேண்டி வரும் என்றார்

அதிர்ந்து போன ராமநாதன்  அவரைத் தொடர்பு கொள்ள முயன்றார்  எதிர் முனையில் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை  அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்   என்றே சொல்லிக்கொண்டு இருந்து  ,

என்ன செய்வதென்றே தெரியாதவராய்   சார்  அவர் என்னோட மெயிலுக்கு ப்ரிஸ்கிரிப்ஷன் அனுப்பறேன்னு சொல்லிட்டு இதைக் குடுத்துட்டுப் போயிருக்காரு, அதை நம்பி என் ஃவைப் இதை வாங்கி வெச்சிருக்காங்க, இது போதை மருந்துன்னு தெரிஞ்சிருந்தா  கைப்பையிலேயே கொண்டு வருவோமா  , நீங்களே யோசிச்சு பாருங்க என்றார் ராமநாதன்.

சார்  எங்களுக்கு  உங்க  நிலைமை புரியுது ஆனா நாங்க  எங்க கடமையை செய்யணும் வேற  வழியில்லே  என்றார் அதிகாரி.   அந்தப் பாகெட்டைப் பார்த்தார்  ராமநாதன்  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “ ஏதோ  ஒரு அதிர்ச்சியில் திடுக்கிட்டு கண்விழித்தார்  ராமநாதன்!

அட  மொத்தமும் கனவா    !  ஏம்மா காமாக்‌ஷி  அவங்க கொண்டு வந்த  மெடிசினைக் காட்டு  என்று வாங்கிப் பார்த்தார் .   மீண்டும் அவருக்கு தொலைபேசியில்  சார் நீங்க  அனுப்பறேன்னு சொன்னீங்களே  அந்த  ப்ரிஸ்க்ரிப்ஷனை அனுப்பவே இல்லையே என்றார்

எதிர் முனையில்  சார்  மன்னிக்கணும்  இணையத் தொடர்பு கிடைக்கவே இல்லே  இதோ இப்போ  அனுப்பிர்றேன்  என்றபடி    சார் இப்போ பாருங்க  உங்க மெயில்லே அனுப்பி இருக்கேன்  என்றார்

மெயிலைத்  திறந்து  பார்த்தவருக்கு  திருப்தி சாதாரண மருந்துகள்தான்  சரி சார்  நாங்க எடுத்துட்டுப் போயி உங்க   பிளைகிட்ட குடுத்துர்றோம்  என்றார்  ராமநாதன் . நன்றி சார்  என்றார் அவர்  மறு முனையில்.

 திரு ராமநாதன் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தே  நம்பிக்கை கொண்டார்  , அவர்  அந்தப் பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்திருக்கலாம் , அந்தப் பாக்கெட்டை  அவர் பிரித்துப் பார்க்கவே இல்லை. அது அவருடைய  விதியா   அல்லது  தன்மேலே  அவருக்கிருந்த  அதீத   நம்பிக்கையா

அந்த  மருந்து பாக்கெட்  அவரைப் பார்த்து மர்மமாய்ச் சிரித்தது.

குறிப்பிட்ட  பயண  நாளும் வந்தது  . பார்ப்போம் வேடிக்கை

                       சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.