பா.அனுராதா, உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை  

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி  , தஞ்சாவூர்.

 

நாம்  அதிக நாட்கள் பூமியில் வாழ்வது பெரிதல்ல. வாழுங் காலத்தில் நம்முடைய சாதனையே பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததைப் போல் சரித்திரத்தில் இடம் பெறுவோம். பாரதி மண்ணில் வாழ்ந்த வயதை தாண்டி பல ஆண்டுகள் கழிந்தன. சாதனை என்பது பெரும் சவாலாக இருக்கிறது. செந்தமிழனே உன்னை வறுமை வாட்டியது. என்னையோ சோர்வு,  கவலை, அலைக்கழிக்கிறது. நீயும் முயற்சியை கைவிடவில்லை. நீ செய்த செயல்களை ஒரு பார்வை பார்க்கும் போது எங்களை எல்லாம் ஊக்கப்படுத்துவது போலல்லவா இருக்கிறது.

இளமைப் பருவம்

எட்டயபுரத்தில் 11.12..1882 இல் சின்னச்சாமி அய்யர்  இலக்குமி அம்மாளின் தவப்புதல்வன் பாரதி. பெற்றோர்  சுப்ரமணியன் எனப் பெயரிட்டனர். அவரது குலமுறைக்கேற்ப பெயரைச் சுருக்கி சுப்பையா என்று அழைத்தனர் . அனைத்து குழந்தைகளும் முதன்முதலில்  பள்ளிச் செல்லும் போது  அழுது கொண்டே விருப்பமின்றி செல்வது வழக்கம். அப்படித்தான் பாரதியும் சென்றார்.

ஐந்து வயதில் தாயை இழந்து தனிமை துயரில் வாடினார். சின்னச்சாமியின் உறவினர்  பாரதிக்கு பாசம் காட்டுவதற்கு தாய் தேவை. நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் என வற்புறுத்தினர். அவர் வள்ளியம்மாளை திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளும் பாரதி மீது தாயன்போடு பாசம் காட்டி வளர்த்து வந்தாள்.

புத்தகத் தோழன்

துள்ளித்திரியும் காலத்தில் விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். அதுவும் ஆண்குழந்தையை பிடித்து வைக்க முடியாது. கட்டுக்கடங்கா காளைபோல் விளையாட்டில் விருப்பம் கொள்வர் . ஆனால் பாரதிக்கோ விளையாட்டு தோழனும் இல்லை, தாயும் இல்லை. தனிமை ஒரு பக்கம் வாட்டியது. தந்தைக்கு பயந்து எந்த நேரமும் புத்தகத்தோடு நடந்துக் கொண்டிருப்பார். அதுவே அதிக ஆர்வமாக அமைந்து விட்டது.

பாரதி பட்டம் பெறல்

நம்முடைய பெற்றோர் அவர்களின்   விருப்பத்தை எப்படி நம்மேல் திணித்து ஆளாக்க நினைக்கிறார்களோ அதே போல் பாரதியின் தந்தையும் எப்படியாவது பாரதியை கலெக்டராக உருவாக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தனர். எல்லா அப்பாவின் எண்ணமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. தன் பிள்ளை பலமொழிகளை கற்று உயர் பதவியில் பணி புரிய  ஆசைப்படுகிறார்.  எட்டயபுரத்து அரசவையில் சின்னச்சாமி ஐய்யர் பணி புரிந்து வந்தார். ஏழு வயதே நிரம்பிய பாரதி தந்தையோடு அரசவைக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் சொற்களுக்கேற்ப பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கினார்.

ஒரு நாள் வழக்கம் போல் பாரதி அரசவைக்குச் சென்றார். அரசவையில் உள்ள புலவர் ஈற்றடிகளை கொடுததனர். அதனை வைத்துக் கொண்டு அருமையான கவிதையைப் பாடினார். அரசவையில் உள்ள எல்லோரும் ஆனந்த களிப்பில் இருந்தனர். எட்டயபுரத்து மன்னர் சுப்பையாவுக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். பாரதி என்ற பெயரே நிலைத்து நிற்கிறது. தற்போது நாம் யாரிடமாவது சென்று சுப்பையாவை  தெரியுமா எனக் கேட்டால்  தெரியாது என்றே பதிலளிப்பார்கள். இயற்பெயரை மறந்து சிறப்பு பெயர் மட்டுமே நம் மனதில் நிலைத்து நிற்கிறது.

திருமணம்

வழக்கமாக தாய்தான் பிள்ளைக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். ஆனால் பாரதிக்கு தாயில்லாததால் பாரதியின் தந்தை தன் மகன் ஐந்தாம் பருவம் முடித்ததுமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி அலைகிறார் சின்னச்சாமி ஐய்யர். கடைசியாக கடையத்தில் செல்லப்பா ஐய்யரின் புதல்வி செல்லம்மாள் தன் மகனுக்கு ஏற்றப் பெண் என முடிவு செய்கிறார். பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் 15.6.1897 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதிக்கு பதினைந்து வயதும், செல்லம்மாலுக்கு ஏழு வயதுமே நிரம்பி இருந்தது.

தந்தையின் இழப்பு

பாரதி குடும்பம் ஓரளவு வசதி படைத்த குடும்பமாக இருந்தது. சில வஞ்சகர்கள் பாரதியின் தந்தையை ஏமாற்றி விட்டு சொத்துகளை அபகரித்து விட்டனர். அதே கவலையில் சின்னசாமி ஐய்யர் 1898 இல் காலமானார். பாரதி பெரும் சொத்தாக கருதிய பெற்றோரை இழந்து மீளாத் துயரத்தில் வாடினார். என்ன செய்வது எங்கே போவது என ஒன்றும் புரியாத நிலையில் இருந்த பாரதிக்கு அத்தை குப்பம்மாள் ஆதரவு அளித்தார்.

தேசிய ஒருமைப்பாடு

பரங்கியர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தில் பிறந்த பாரதி நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப்போரில் இணைந்தார். நாட்டு விடுதலைக்கு இன்றியமையாதது தேசிய ஒருமைப்பாடு என்பதை உணர்ந்தார். அதனை மக்களுக்கு உணர்த்த எழுச்சியூட்டும் பாடல்களை எளிய நடையில் பொழிந்தார்.

தடைகளும் வழிகளும்

பாரத ஒருமைப்பாட்டுக்குத் ‘தடையாய் இருப்பவை சாதி,சமய, மொழி வேறுபாடுகளே என்பதை அறிந்த பாரதி அவற்றை களையும் வழிகளை எடுத்துரைத்தார்.

       “மனிதரில் ஆயிரம் சாதி-என்ற

வஞ்சகர் வார்த்தையை ஒப்புவதில்லை”

என்றார்.

“வேதியராயினும் ஒன்றே-அன்றி

வேறு குலத்தவ ராயினும் ஒன்றே”

என்று முழங்கினார்.

குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் சாதிப்பிரிவு எனும் நஞ்சு விதைக்கப்படுதல் கூடாது என்று கருதிய பாரதி

“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்”

என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 “பாருக்குள் ளேதெய்வம் ஒன்று-இதில்

      பற்பல சண்டைகள் வேண்டா”

என அறிவுறுத்துகிறார்.

புதுமைப் பெண்

பாரதி, அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது தனியாகவே செல்வார்.  மனைவியை அழைத்துச்  செல்வதில்லை. கல்கத்தா மாநாட்டிற்கும் அவர் தனியே சென்றிருந்தார்.  அங்கே சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்தார்.  பாரதியாரின் அறிவையும் சுதந்திர வேட்கையையும் கண்ட சகோதரி நிவேதிதா, பாரதியிடம் “உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா? என்று கேட்டார்.”

அதற்கு பாரதியார் “பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?”  என் மனைவி இந்த கூட்டத்திற்கு வந்து என்ன செய்யப்  போகிறாள்? என்று பதில் கூறினார். பாரதியாரின் பதிலைக் கேட்ட சகோதரி நிவேதிதா பாரதியாரிடம் சற்று கடிந்து கொண்டார்.

“நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறீர்கள்.  ஆனால் உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்களே!”  மேலை நாடுகளில் ஆண்களுக்கு என்ன மரியாதையோ அது பெண்களுக்கும் உண்டு.!  இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சம உரிமை தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

சகோதரி நிவேதிதாவின் கூற்று பாரதியின் உள்ளத்தை தைத்தது.  அது முதல் பாரதி, தன் மனைவி செல்லம்மாளையும் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.

பாரதி போற்றிய பெண் விடுதலை

     சகோதரி நிவேதிதா கூற்றிற்கு இணங்க பாரதி பெண் விடுதலைக்கு பாடுபடுகிறார்.

  “மாதர் தம்மை இழிவு செய்யும்

      மடமை யைக்கொ ளுத்துவோம்”.

என்று பாடிய அவர் அடிமைப் பெண்ணைப் புதுமைப் பெண்ணாய் மாற்றவும், பெண் விடுதலையை தொடர்ந்து போற்றவும், வழிகாட்டியுள்ளார்.

இருவருக்கும் சமவுரிமை

     ஆணுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.  ஆதலால்,

                “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

      அறிவில் ஓங்கிவ் வையகம் தழைக்குமாம்”.

என்று பாடினார்.  கைம்பெண் மணத்தை வலியுறுத்திச் ‘சந்திரிகையின் கதை’ எழுதினார்.

நாட்டுப்பற்று

    தான் விரும்பும் தொழில் எதுவென்பதை கவிதை வாயிலாக எழுதினார்.

   “எமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்

      இமை ப்பொழுதும் சோரா திருத்தல்”

என்று பாடித் தம் கொள்கையை வெளியிட்டார் பாரதி. இஃது அவரது நாட்டுப்பற்றைக் காட்டுகிறது.

எழுத்தும் பேச்சும்

    “சுதேசமித்திரன், “பாலபாரதம்”, “இந்தியா” என்னும் நாளிதழ்கள் வாயிலாகக் கவிதைகளும் கட்டுரைகளும் வெளியிட்ட பாரதி, பொதுக் கூட்டங்களிலும் உணார்ச்சி பொங்கப் பேசி மக்களுக்கு விடுதலையுணர்வை ஊட்டினார்.  ஆங்கில அரசு இவரைக் கைது செய்ய முயன்றதால், பிரஞ்சு அரசுக்கு உட்பட்ட புதுவை சென்று தொடர்ந்து எழுதியும் பேசியும் நாட்டு விடுதலைக்கு உழைத்தார்.

குதிரை வண்டிக்காரனுக்கு உதவுதல்:

     பாரதி தினமும் சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு குதிரை வண்டியில் செல்வது வழக்கம்.  ஒரு நாள் குதிரை வண்டிக்காரன் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்ட பாரதி, அவரிடம் நலம் விசாரித்தார்.  தன் மனைவி, குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார்.  உடனே பாரதி தன்னுடைய குடும்பத்தைப்  பற்றி யோசிக்காமல் தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார்.  குதிரை வண்டிக்காரர் “ஐயா இவ்வளவு பணம் எனக்கு வேண்டாம்”.  பத்து அல்லது பதினைந்து ரூபாய் தாருங்கள், திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.  பாரதியோ ஐம்பது ரூபாயையும் கொடுத்து விட்டு தம் வீட்டிற்கு வெறும் கையோடு திரும்பினார். இதன் மூலம் அவரின் மனித நேயத்தை உணர முடிகிறது.

பெரியோர் வாக்கிற்கு மதிப்பளித்தல்

     கடையத்தில் வாழ்ந்த காலத்தில் பாரதியின் மாமியார், தன் பேத்தி தங்கம்மாளிடம் பெண்கள் இவ்வளவு நேரம் குளிக்காமல் சுற்றிக் கொண்டிருக்க கூடாது என்றார். அதனோடு பெரியோரின் பழமொழியையும் கூறினார்.

                அதாவது “குளித்து தேறு! கொடுத்துத் தேறு!” என்று கூறினார்.  இதனை கேட்ட தங்கம்மாள் உடனே குளித்து விட்டு வந்தாள்.   நம் பாரதியோ என்ன செய்தார் தெரியுமா?  அந்நேரத்தில் பாரதியாரின் வீட்டு வாசலில் பிச்சைக்காரன் ஒருவன் வந்திருந்தார்.  அதைக் கண்ட பாரதி, தான் அணிந்திருந்த வேட்டி, அங்கவஸ்திரம் ஆகிய அனைத்தையும் அவிழ்த்து அந்தப் பிச்கைக்காரருக்கு கொடுத்தார்.

                பாரதியாரின் செய்கையைக் கண்ட வீட்டிலுள்ளோர் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.  அதற்கு பாரதி, அத்தை சற்றுமுன் சொன்னதுபடி தன் மகள் தங்கம்மாள் குளித்து தேறினாள்.  நான் கொடுத்து தேறினேன் என்று கூறினார்.

பாரதியின் இறுதிக்காலம்

அவர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காலத்தில் நாள்தோறும்  பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கி வருவது வழக்கமாக இருந்தது.

கோயிலுக்குள் இருக்கும் யானைக்கு தினமும் பழங்கள் கொடுத்து வருவார்.  நாளடைவில் யானையும் பாரதியும் நல்ல நண்பர்கள் போல் இருந்தனர். ஒரு நாள் யானைக்கு மதம் பிடித்திருந்தது. அது  தெரியாத பாரதி வழக்கம் போல் யானைக்கு பழம் கொடுக்கச் சென்றார். அருகிலுள்ளோர் யானைக்கு அருகில் செல்லாதீர் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்று கூறினர் . அதனை செவி கொடுத்து கேட்காத பாரதி யானையின் அருகில் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை பாரதியை தூக்கி வீசியது.

ஆனால் அச்சம்பவத்தைப் பார்த்த பாரதியின் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார் பாரதியை இராயப்பேட்டை மருத்துவமனையில்  சேர்த்தார். அதிலிருந்தே உடல் நிலை சரியாகவில்லை. நோய்வாய்ப்பட்டார்  பாரதி. 12.9;.1921 இல் பாரதியாரின் பொன்னுடல் திருவல்லிக்கேணி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சு.நெல்லையப்பர், சுரேந்திரநாத் ஆர்யா போன்றோர் பாரதியின் உடலைச் சுமந்து சென்றனர்.

நாட்டு விடுதலையில் பாரதிக்கு இருந்த நம்பிக்கை தான் அவரை,

       “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

        ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று”

என்று பாட வைத்தது. அவர்  நம்பிக்கை வீண் போகவில்லை.

  “வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர் !

   வாழிய பாரத மணித்திரு நாடு!”

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செந்தமிழன் பாரதி ஒரு பார்வை

  1. பைந்தமிழ் தேனீ, சிந்துக்கு தந்தையாம் பாரதியின் பெருமையும், வாழ்க்கையும்
    இக்கட்டுரை வழி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அனுராதா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *