மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

0

பவள சங்கரி

மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் கொரிய மொழிகள் பெரும்பாலும் சீனாவின் விளக்கப்பட மற்றும் வரைகலை அமைப்பிலான வார்த்தைகளிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. சீன மொழியின் வடிவங்கள் வடகிழக்கு நாடுகளின் மொழிகளோடு (சீனா, ஜப்பான், கொரியா), அந்தந்த தேசிய மொழிகளின் வட்டார வழக்குகளின் அடிப்படையில் பேச்சு மொழியில் ஏற்படும் சில மாற்றங்கள் தவிர பெருமளவில் சீன மொழியுடன் ஒத்துப்போகிறது என்கிறார் வோன் மோ. ஒரு சீன வார்த்தை தன் பேச்சு ஒலிகளைக் குறிப்பிடுகின்ற ஒலிப்பு எழுத்து அல்ல என்றாலும் அது தன் பொருளை வரைபடச்சின்னம் மூலமாக தெரிவித்துவிடுகிறது. இப்படியாக ஒரு சீன வார்த்தையை அதன் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும்போது அதன் எழுத்துக்கோர்வை அந்தந்த தேசத்தின் பேச்சு வழக்கு முறைகளுக்கேற்ப மாறுபடலாம். உதாரணமாக ‘filial piety’ என்று ஆங்கிலத்தில் பொருள்படும் சீன வார்த்தை, வடகிழக்கு ஆசிய நாடுகளான, சீனா, சப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் முறையே, “hsiao”, “ko”, மற்றும் “hyo” என்று உச்சரிக்கப்படுவதாகக் கூறுகிறார். இந்த வகையில் இவர் கயாவிற்கு வெளி நாட்டிலிருந்து வந்து சேர்ந்த அரசிக்கு அவர்களின் பாரம்பரிய குடும்பப்பெயரை ஆங்கில பெயர்ப்பில் உச்சரிக்கும்படி “Queen Hurh of Gaya” என்று குறிப்பிடுகிறார்.

25 தொகுதிகளாலான ‘சாம்குக்யுசா’ என்ற ’ஹூர்ஹ்’ பரம்பரை மரபாய்வுத் தொடர்பான பிரபலமான நூல் (The History of Three Kingdoms) தங்கள் பரம்பரையைச் சார்ந்த வெளிநாட்டிலிருந்து வந்து, கி.பி.48, சூலை 27 இல் தங்கள் கயா அரசன் சுரோவை மணந்து அரசியாக அரியணை ஏறியவர் இந்தியாவின் அயுத்தா அல்லது அயோத்தியிலிருந்து வந்தவரா என்று அறியும் ஆர்வம் அதிகமாகிவிட்டதாம்..

30
“சாம்குக்யுசா” தொன்மத்தின்படி இப்படி செல்கிறது வரலாறு? – எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் முடிந்தபின்பு, அரசனும், அரசியும் தங்கள் சாந்தி முகூர்த்தப் பஞ்சணையில் களித்திருக்க முற்படும்போது அந்த அரசி மெல்ல ஆரம்பிக்கிறாள், “நான் அயுத்தா இராச்சியத்தின் இளவரசி. என்னுடைய குடும்பப்பெயர் ‘ஹூர்ஹ் – Hurh” Hwang Ok – ஹூவாங் ஓக் (Yellow Jade) என்பது என் வழங்கு பெயர் (first name).

இந்த இடம்தான் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. //‘ஹூர்ஹ் – Hurh” Hwang Ok – ஹூவாங் ஓக் // இதெல்லாம் தமிழ் சம்பந்தப்பட்ட பெயர்களாகவே இல்லையே. ஆனாலும் அந்தப் பெண் சொன்னதற்கான காரணம் அலசிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இது அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் ஐயம்.

மேலும் அந்த இளவரசியின் வசனங்களைப் பார்ப்போம் .. என் வயது 16. என் பெற்றோர் என்னிடம், விண்ணுலகக்கடவுள் (Sang Jae) தங்கள் கனவில் தோன்றி கயாவின் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மன்னன் கிம் சுரோ, புனிதத்தன்மையும், அரிய ஞானமும் பெற்றவன். தங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்கு அவனுக்கு இணையான ஒரு நல்ல துணை வேண்டும், உடனடியாக உங்கள் இளவரசியை மணமுடிக்க அனுப்பிவையுங்கள் என்று வாக்கானதாகச் சொன்னார்கள்.

மிகத்தெளிவான, கம்பீரமான அந்த இறை குரல் அயுத்தா அரசன் மற்றும் அவரின் அரசியான என் பெற்றோர்களின் விழிப்பு நிலையிலும் அவர்தம் செவிகளில் தெளிவாக ரீங்காரமிட்டவாரு இருந்தன. அதனால் இது தெய்வ சங்கல்பம் என்ற நம்பிக்கையில் இறைவனின் திருவுளப்படி தங்கள் அன்பு மகளான என்னை அயுத்தாவிலிருந்து உடனடியாக கயாவிற்கு அனுப்புவது என்று முடிவெடுத்து அதன்படி அனுப்பியும் உள்ளனர்”

_20160211_115543
அந்த இளவரசி இவ்வாறாகத் தன் முதல் இரவில் அன்புக் கணவனிடம் தம் உரையாடலைத் தொடருகிறாள்:

“அதனால் விண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மிகக்கவனமாக என் கடற்பயணத்தை மேற்கொண்டு புனிதமான இக்காதற்கனியைத் தேடி வந்தேன். என் நீண்ட இரண்டு மாத பயணத்தின் இறுதியில் அற்புதமான பொக்கிசமான அந்த பியாண்டோ கனியைக் (Beondo – 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கனியக்கூடிய ஒரு பீச் வகைக்கனி) கண்டடைந்தேன். அப்படியிருக்க மாட்சிமை பொருந்திய மன்னர் என்னைத் தங்களுடன் இணைந்திருக்க அனுமதிக்க வேண்டுகிறேன்”.

மன்னன் சுரோ அந்த இளவரசிக்கு இவ்வாறு பதிலிறுத்தான் : “இளமையிலிருந்தே என் வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் ஆன்மீகப்பாதையில் செயல்பட்டிருந்ததால், வெகு தொலைவிலிருந்து வந்து நீ என்னுடன் சேரப்போவதை முன்னமே அறிந்திருக்கிறேன் நான். அதனால்தான் என் அமைச்சர்கள் என்னை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தியபோதும் நான் அதற்கு உடன்படவில்லை. இப்போது நீயே உன் விருப்பத்தின்பேரில் என்னை வந்து அடைந்துவிட்டாய். உண்மையிலேயே இப்படியொரு கருணையுள்ளம் கொண்ட இளவரசி என் அரசியாக வந்து சேர்ந்துள்ளது என் நல்ல நேரம்” (கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இவர்)

இப்படிப் போகிறது அந்த தொன்மம்…..

சுரோ மன்னனின் காதல் பரிசாக அரசி ஹூர்ஹ் 10 குழந்தைகளைக் பெற்றுக்கொடுக்கிறார். பத்தாவது குழந்தை பிறந்தவுடன் அரசனிடம், “தேவலோகத்தலைவன் எனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். உங்கள் இராச்சியம் செழிப்புற என் தந்தையர் நாட்டை விட்டு வெகுதொலைவு வந்திருக்கிறேன். நம் பத்து குழந்தைகளுக்கும் உங்கள் வம்சாவளியின் அடையாளங்கள் மட்டுமே இருப்பது போன்று உங்கள் குடும்பப் பெயர் மட்டுமே வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. நம் இரண்டு குழந்தைகளுக்காவது எங்கள் குலப்பெயரான ஹூர்ஹ் என்பதை வைக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுக்கிறார். மன்னர் சுரோவும் அதற்குச் சம்மதிக்கிறார். ஹூர்ஹ் பாரம்பரியம் (தொகுதி 1) நூலில் மட்டுமன்றி, அரசியின் கல்லறை குறிப்பேடுகளிலும் மன்னர் சுரோ 2 மகன்களைத் தேர்ந்தெடுத்து தம் மனைவியின் குலப்பெயரைச் சூட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேறு சில ஆவணங்களில் அரசர் தங்கள் 5 மகன்களுக்கு அரசியின் குலப்பெயரை வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக, வியப்பூட்டும் வகையில் கொரியாவில், கிம்ஹே, ஹயாங், தேயின், ஹன்சன் மற்றும் யாங்சீயோன் என்று ஹூர்ஹ் பரம்பரையினர் இன்றும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். தன்னுடைய பாரம்பரியப் பெயர் யாங்சீயோன் என்றும் தற்போது சியோல் நகருக்கு அருகில் உள்ள கிம்ப்போ எனும் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுவது மேலும் வியப்பளிக்கிறது! இந்த தொன்மத்தில் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் நம்புவதாகக் கூறுகிறார் , வோன் மூ ஹூர்ஹ் .

கோப்புகளின் அடிப்படையில் சுரோ – ஹூவாங் ஓக் அரச குடும்பத்து வாரிசுகளில் 9 பேர்களின் பெயர்கள் பதிவிடப்பட்டிருந்தாலும் ஏனைய மற்றையோரின் பெயர்கள் இல்லை. கிம் பியூங் – மோ மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் , இரண்டு பெண்கள் உள்பட மேலும் பலரின் பெயர்களையும் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார். அந்த வகையில் மூன்று பெண்கள் அயுத்தா (அயோத்தியா?)விலிருந்து புலம் பெயர்ந்து சென்று கயாவில் தங்கள் பரம்பரையை பரவச்செய்துள்ளனர் என்பதை உறுதிபடுத்துகின்றனர்.

இந்த தொன்மக்கதை கொரிய ஆய்வாளர்களின் ஆர்வத்தை பெருமளவில் ஈர்த்ததில் வியப்பில்லை.
கொரியாவின் முதல் அரசி தங்கள் மன்னர் சுரோவை மணமுடிக்கும்பொருட்டு கொரியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்டபோது அவருடன் மற்றும் இரண்டு அரச குடும்பத்துப் பெண்களும் பயணம் செய்ததாகத் தங்கள் ஆய்வின் மூலம் குறிப்பிடுகின்றனர். அந்தப்பெண்கள் இருவரும் மன்னன் சுரோவின் இரண்டு தம்பிகளை மணந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அதாவது கயாவின் அரசர்களின் முதல் மூன்று பேரும் இந்த மூன்று பெண்களை மணந்துகொள்கிறார்கள். இவர்கள் கொரிய நாட்டிற்கு புலம் பெயர்ந்து வந்து கொரிய மரபு பல்வேறு முனைகளில் புத்தாக்கம்பெற தங்களின் பங்களிப்பைச் செலுத்தியதையும் குறிப்பிடுகின்றனர்.

தம் பெற்றோரின் அறிவுறுத்தலின்பேரில் மிகவும் சிரமப்பட்டு வெகு தொலைவு பயணம் செய்து வந்து கயா அரசனை மணந்தவள் தமது பெயராகக் குறிப்பிட்டது எந்த மொழியில்? தமிழ் பெயரைச் சொன்னாளா அல்லது அரசனுக்குப் புரியும் வகையில் அவர்கள் மொழியில் பெயர்த்துக்கூறினாரா என்ற ஐயம் எழுகிறது.

நம் நாட்டு ஆய்வாளர்களின் மற்றுமொரு ஐயம் பண்டைய காலத்தில் தமிழ் பெண்கள் கடல்கடந்து பயணிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்பதுதான். தொல்காப்பியம் காட்டும் சான்றும் இவர்களுக்கு ஆதாரமாக நிற்கிறது,

முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை.
இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (அகம் 371) .

சரி மன்னனை மணமுடித்து கயாவை இன்றைய கொரியாவாக பொன் விளையும் பூமியாக மாற்றியவள் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கான அடிப்படை வேர் என்ன? அதெப்படி அப்படி சொல்ல முடியும்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *