Blog

  • பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

    கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
    2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
    3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
    4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
    5. மன்னியூர் ஸபைஓம்.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

    கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

    பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

    பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
    2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
    3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
    4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
    5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
    6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
    7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
    8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
    9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
    10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
    11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
    12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
    13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
    14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
    15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
    16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

    மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

    பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

    Share
  • வீழும் நடப்பது வாழும்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    நிற்பது வீழும் நடப்பது வாழும்
    நினைவில் வையுங்கள் – உயர்
    கற்பனை தன்னை மெய்யாய் ஆக்கிடும்
    காரியம் செய்யுங்கள்!

    எண்ணம் தன்னை உயர்வாய் வைப்பின்
    என்றும் ஏற்றம்தான் – பிறரை
    புண்ணெனச் செய்யும் புன்மைச் செயல்கள்
    புயலின் சீற்றம்தான்!

    வெள்ளி நிலாபோல் குளிரைப் பொழியும்
    வார்த்தை கொட்டுங்கள் – நலம்
    அள்ளியும் தருமது அழியாப் புகழை
    அழகாய் எட்டுங்கள்!

    கீழே விழினும் அருவியைப் போன்று
    குளிர்மழை பொழியுங்கள் – பிறர்
    வாழும் வகையில் விரிந்த உள்ளம்
    வைத்தே வாழுங்கள்!

    இல்லை என்னும் வார்த்தை எம்மிடம்
    ஏதெனப் பேசுங்கள் – மலரும்
    முல்லை போன்று வளைந்து இருப்பினும்
    மணமும் வீசுங்கள்!

    உலகும் ஊரும் உயர்வாய்ப் போற்றிட
    உயர்ந்து நில்லுங்கள் – மிக
    இலகும் உள்ளம் கொண்டு உலகினை
    எளிதாய் வெல்லுங்கள்!

    தீதும் நன்றும் பிறரால் வராது
    பேருண்மை – பொய்மை
    சு+தும் வாதும் முற்றும் தள்ளியும்
    சேர்ப்பீர் உயர்நன்மை!

    அடுத்தவர் வென்று அகமகிழ்ந் தாடல்
    அழகும் தானில்லை – வெற்றி
    தொடுத்தேன் என்னும் தலைக்கனம் பள்ளம்
    தள்ளியும் தரும்தொல்லை!

    பணிவில் பெருமை கொள்ளல் என்பது
    பண்புடைச் செயலாகும் – மனத்
    துணிவே பெரிதென அகந்தையில் மிதத்தல்
    துயரப் புயலாகும்!

    பணியும் நாணல் பாயும் புயலைப்
    பணியச் செய்துவிடும் – உயர்
    பணிவைக் காட்டா பனையோ புயலைப்
    பகைத்தே பொய்த்துவிடும்!

    அறமும் அறிவும் இருகண் என்பதை
    அகமும் வைத்திடனும் – நம்
    புறமும் அகமும் ஒன்றெனப் போற்றின்
    பேதம் பொய்த்துவிடும்

    விதியால் தாழ்வுறும் நிலையில் பிறரிடம்
    வீழுதல் மிகச்சிறுமை – கூர்
    மதியால் விதியை வென்று எழுதல்
    மானுடத்தின் அருமை!

    புத்தன் ஏசு காந்தி என்றுனைப்
    புவிகை தட்டட்டும் – இவன்
    சுத்த மனத்தினன் எனஊர் போற்றிட
    சுகமும் கொட்டட்டும்!

    Share
  • (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    முனைவர் ஆ.சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த் துறை
    தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    “தற்காலத் திறனாய்வில் மட்டுமல்ல, பழங்காலத்திலேயே கவிதையானது பல உறுப்புகள் இணைந்த அமைப்பு என்ற சிந்தனை நிலவியிருந்தது. எனவே அரிஸ்டாட்டிலின் கவிதையியலிலும் கவிதையைப் பல தளங்களாலான அமைப்பாக நோக்கும் பாங்கு காணப்படுகிறது” என்று கூறும் இலா.குளோறியா சுந்தரமதி, “முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் உறுப்புகள் என்று 34-இனை (26-8) கூறும் செய்யுளியலின் முதல் நூற்பாவினைச் சான்று காட்டி, பழங்காலத்திலிருந்தே இத்தகைய ஓர் ஆய்வுச் சிந்தனை இருந்துள்ளது”1 எனக் குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற இலக்கியத் திறனாய்வு மேதையான ரெனிவெல்லக் என்பவரும் “ஒரு கலைப் படைப்பு பல அளவைகளாலான ஓர் எளிய தொகுதியன்று. அது பல அடுக்குகளைத் தன்னுட்கொண்ட ஒரு தொகுதியாகும்”2 என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட விளக்கங்கள், கவிதை என்பது பல வகையான உறுப்புகள் அல்லது உட்கூறுகளால் கட்டப்பெற்ற ஒன்று என்பதை உறுதி செய்கின்றன.

    பிரெஞ்சு அமைப்பியல் வல்லுநரான தோடரவ், கதை ஆய்வில் பகுப்பாய்வினை மேற்கொண்டு கதையின் இலக்கணத்தை மொழி இலக்கணத்தைப் போன்று உருவாக்கியுள்ளார். அவா் “கதைகளுக்கு ஓர் அடிப்படையான இலக்கணம் ஆழ்ந்த நிலையில் உண்டு. அதிலிருந்து தனிக் கதைகள் உருவாகின்றன”3 என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார். விளாடிமா் பிராப் எனும் உருசிய நாட்டு அறிஞா், வனதேவதைக் கதைகளைப் பகுப்பாய்வு செய்தார். அதன் விளைவாக அக்கதைகள் அனைத்தும் முப்பத்தொரு ‘செயற்கூறுகளினுள் அடங்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவரது பகுப்பாய்வு அமைப்பியல் ஆய்வில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படுகிறது.”4 இவ்வாறு மேற்கில் உருவான அமைப்பியல் ஆய்வு முறையில் ஈடுபட்டவா்களில் உல்ப்கான் கிளமன், தோடராவ், விளாடிமா் பிராப் முதலானவா்கள் குறிப்பிடத்தக்கவராவா்.

    கதைகளையும் கவிதைகளையும் அமைப்பியல் நோக்கில் ஆராயும் இத்தகைய புதிய ஆய்வுப் போக்கானது 1980-களில் இருந்து தமிழில் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழவன்5, இலா.குளோறியா சுந்தரமதி6, அ.ஆலிஸ்7, த.விஷ்ணுகுமரன்8 போன்றோர் குறிப்பிடத்தக்கவராவா். இத்தகைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகப் பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப் பாட்டு மற்றும் நெடுநல்வாடையின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    முல்லைத் திணையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த இரு பாடல்களையும் பொருள்தரும் சிறு சிறு கூறுகளாகப் பகுக்க, அவற்றில் மொத்தம் பத்துப் பொருட்கூறுகள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவை  பின்வருமாறு அமைந்துள்ளன.

    வ.எண் பொருட்கூறுகள் முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
    1 கார்கால வருணனை 1-6 1-2
    2 கோவலா்களின் செயல்பாடுகள் 12-15 2-8
    3 மாலைக்கால வழிபாடு 6-11 36-44
    4 கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள் (நெடுநல்வாடையில் மட்டும்) – 45 -71
    5 பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை 24-36

     

    72-100
    6 படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புரத்தின் அமைப்பு வருணனை 37-58 101-114

     

    7 பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை 59-66 115-135
    8 தலைவியின் துயரம் 22-23,

    81-88

    136-147,157-167
    9 தலைவியைத் தேற்றுதல் 16-21 148-155
    10 வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை)

     

    67-80,

    89-103

    168-188

     

    இவற்றில் “கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்ற கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகளும் இரு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொருட்கூறுகள் 5, 6, 7 ஆகியன இரு பாடல்களிலும் அமைப்பு நிலையில் ஒத்துள்ளன. ஆனால், கூறும் இடங்கள் மட்டும் வேறுபட்டு அமைந்துள்ளன. அதாவது, முல்லைப் பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. இதைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். இவ்வாறே முல்லைப் பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புகளுக்கு, நெடுநல்வாடையின் அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றைப் பதிலிகளாகக் கொள்ளலாம். இக்கூறுகள் அமைந்துள்ள முறைகளைப் பற்றி இனிச் சுருக்கமாகக் காண்போம்.

    கார்கால வருணனை

    “காரும் மாலையும் முல்லை” (தொ.பொ.அகம்.952)

    என்று முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதையும் சிறுபொழுதையும் தொல்காப்பியம் கூறுகிறது. காரும் மாலையும் முல்லைக்கு  உரியனவாகக் கூறக் காரணம் “பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுவது முல்லைப் பொருளாம். அம்முல்லைக்குரிய காலம் கார்காலம்” என்று விளக்கமளித்துள்ளார் நச்சினார்க்கினியா். இத்தகைய கார்காலத்தில் பெய்த பெரும் மழையைப் பற்றி இரு பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பொருட்கூறு, இரு பாடல்களிலும் முதல் ஆறு அடிகளுக்குள் அமைந்துள்ளது.

    “அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கர வடிவமும், வலம்புரி சங்கின் வடிவமும் ஆகிய குறிகளைக் கொண்ட கைகளையுடையவனும் திருமகளைத் தன் வலப்பக்க மார்பில் தங்கச் செய்தவனும் மாவலி வார்த்த நீர் தன்கையில் நிறைந்து வழிந்த உடனே விண்ணிடத்தே நிமிர்ந்து நின்ற நெடியோனும் ஆகிய திருமால் போல், பேரொலி செய்கின்றதும் குளிர்ச்சி உடையதுமாகிய கடலின் நீரைப் பருகி, வலப்பக்கமாக வானத்தே எழுந்து, மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, உலகத்தை வளைத்தெழுந்த விரைந்து செல்லுதலையுடைய முகில் பெருமழை பெய்த சிறுபொழுதாகிய இழிந்த மாலைக் காலம் (1-6)” என்று முல்லைப் பாட்டில் கார்கால வருணனை உவமையுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

    நெடுநல்வாடையில், “உலகம் குளிரும்படி பருவந்தோறும் பொய்யாது மழை பொழிகின்ற முகில்கள் திரண்டு எழுந்து அவை படிந்து கிடந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து மழையைப் பொழிந்தன (நெடு.1-2)” என்று கார்காலத்தில் பெய்த புது மழையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் கார்கால மழை மேகத்தின் செயலினைத் திருமாலின் வாமன அவதார புராண நிகழ்ச்சியுடன் உவமித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் கார்காலம் பற்றிக் ‘கார் காலத்தில் பெய்த புதுப்பெயல்’ என்று இரண்டே அடிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

    கோவலா்களின் செயல்பாடுகள்

    கார்காலத்தில் பெய்த பெருமழையால் கோவலர்கள் அடைந்த துன்பங்கள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன. முல்லைப் பாட்டில் “இடையா் குலமகள் குளிரால் நடுங்கிய தன் தோள்களின் மேல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் (முல்.13-15)” என்று ஒரே அடியில் கோவலரின் செயல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் “கோவலர்கள் பெருமழையின் காரணமாக அந்த நிலத்தை விட்டு மேடான நிலத்தை நோக்கித் தம்மிடம் உள்ள பசு, எருமை, ஆடு ஆகியவற்றுடன் சென்றனா். அவா்களின் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. அக்குளிரின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இடையா்கள் பலரும் ஒன்றுகூடி நெருங்கியிருந்ததுடன், நெருப்பினைக் கொண்டு குளிரைப் போக்கிக்கொள்ள முயன்றனா். ஆயினும் குளிர்மிகுதியால் அவா்களுடைய பற்கள் பறை கொட்டின (முல்.2-8)” என்று கோவலா்களின் துயரங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ‘கோவலா்கள் அடைந்த துயரங்கள்’ என்ற இந்தப் பொருட்கூறு, முல்லைப் பாட்டைவிட நெடுநல்வாடையில் சற்று விவரித்துக் கூறப்பட்டுள்ளது.

    மாலைக்கால வழிபாடு

    முல்லை நில மக்கள் சிறுபொழுதாகிய மாலைக் காலத்தில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுதல், நெல்லுடன் பலவித மலா்களைத் தூவி இறைவனை வழிபடுதல் ஆகியவற்றினை மேற்கொள்வா். அத்தகைய பெருமழை பொழிந்த அம்மாலை வேளையில் மகளிர் வழிபாடு செய்த முறையைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “பெருமழை பெய்த சிறு பொழுதாகிய இழிந்த மாலைக் காலத்தில், பகைவா்கள் எளிதில் புகுவதற்கு இயலாத அரிய காவல் அமைந்த பழமையான ஊரில், யாழ் போன்ற இசையுடன் வண்டினங்கள் ஆரவாரஞ்செய்ய, நாழி என்னும் அளவுக் கருவியில் கொண்ட நெல்லுடன் நல்ல மணம் கமழும் மலா்ந்த புதிய மலா்களைச் சிதறி, தெய்வத்தைக் கையால் தொழுது வயது முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்பா் (முல்.6-11)” என்று முல்லைப் பாட்டில் மாலைக் காலத்தில் நடக்கும் வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மாலைக் காலத்தில் நடந்த வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “வெண்மை நிறம் பொருந்திய சங்கு வளையல் அழுந்திய முன்கையையும் மூங்கில் போன்ற தோளினையும் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இனிய சாயலையும் உடையவா் ஊர் மக்கள். அவா்கள் முத்துப் போன்ற பொலிவினையுடைய மகரக் குழைகளைக் காதில் அணிந்துள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் உயா்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ந்த கண்களைப் பெற்றுள்ளனா். இளம்பெண்டிர் பூந்தட்டிலே இட்டுவைத்த மலரும் நிலையிலிருக்கும் பிச்சியின் அரும்புகள் பசிய நிறமுள்ள தம் காம்புகள் வரை மென்மையாக மலா்ந்து மணம் பரப்ப, மாலைப் பொழுது வந்தது எனத் திரிகளை இரும்பு விளக்கில் இட்டனா். நெய்வார்த்துக் கொளுத்தினா். நெல்லையும் மலா்களையும் தூவித் தம் இல்லத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கினா் (நெடு.36-44)”.

    இவ்வாறு இரு பாடல்களிலும் மாலை நேரத்தில் மகளிர் விளக்கேற்றுதல், நாழிகை அளவுடைய கருவியில் நெல்லினையும் மணம் கமழும் பலவித மலா்களையும் தூவி இறைவனை வணங்குதல் ஆகியன ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளன.

    எனினும் முல்லைப் பாட்டில் மாலைக் கால வழிபாடும் அதனைத் தொடர்ந்து கோவலர்களின் செயல்பாடுகளும், நெடுநல்வாடையில் கோவலர்களின் செயல்பாடுகளும் அதனைத் தொடர்ந்து மாலைக்கால வழிபாடும் என்ற முறையில் இந்தப் பொருட்கூறுகள் (மாலைக்கால வழிபாடு, கோவலர்களின் செயல்பாடுகள்) முன்பின் / பின்முன் என இடம் மாறி அமைந்துள்ளன. மற்றபடி இந்த இரு பொருட்கூறுகளும் ஒரே தன்மையில் அமைந்துள்ளன.

    தலைவியின் துயரம்

    போரின்கண் பிரிந்து சென்ற தலைவன், தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும், அவன் வாராமையால் அவனை நினைத்து நீங்காத துயா் அடைகிறாள் தலைவி. அவ்வாறு துயருற்று வருந்தும் தலைவியின் துன்பத்தைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவி, தோழிகள் ஆறுதல் சொல்லியும் மனம் தளா்ந்து பூப்போன்ற கண்களில் முத்துப் போன்ற துளிகள் சிந்த (முல்.22-23) துன்பமுற்று தன் நெஞ்சை அவன்பால் போக்கினாள். தன் மனக் கட்டுப்பாட்டினை இழந்து தனிமையில் வருந்தினாள். பின்னா் இங்ஙனம் வருந்துதல் தன் தலைவன் சொல்லைத் தவறியதாகும் என்றும், பிரிந்தாலன்றி அரசியல் நிகழாது போலும் என்றும் தன்னைத் தேற்றிக்கொண்டாள். கழலும் வளையல்களைத் திருத்திக் கொண்டாள். மீண்டும் மயங்கினாள். பெருமூச்சு விட்டாள். அம்பு தைத்த மயில்போல் நடுங்கினாள். மீண்டும் அணிகலன்கள் நெகிழப் பெற்றாள். பாவை விளக்கு ஏந்தி நின்ற தகளியில் பெரியதாய் விளக்குச் சுடா் நின்று எரிந்துகொண்டிருந்தது. தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயா்ந்து விளங்கிய ஏழடுக்கு மாளிகையில் கூடல் வாய்களினின்று சொரியும் பெரிய வாய்த்திரண்ட மழைநீர் அருவி போல் விழ, அதன் இனிய பல இசையாகிய ஓசையைக் கூர்ந்து செவி கொடுத்துக் கேட்டுத் தன் மனக்கருத்தை வேறொன்றில் செலுத்திக் கிடந்தாள் (முல்.81-88)” என்று தலைவியின் துயரக் காட்சியை விவரிக்கிறது முல்லைப் பாட்டு.

    இவ்வாறே நெடுநல்வாடையும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரை விவரிக்கின்றது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.  “முத்தால் செய்த கச்சு சுமந்த பருத்த மார்பிடத்தே ஒப்பனை செய்யாமல் நெடிய மங்கல நாண் ஒன்று மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது. தன் கணவனைப் பிரிந்தமையால் அழகிய நெற்றியை உடைய அரசியார் நெய்ப்புத் தன்மை வற்றிப் போனாள். மிக்க ஒளி செய்யும் காதணியாகிய மகரக் குழையை அகற்றிவிட்டதனால் அக்குழை அழுத்தியதால் ஏற்பட்ட வடு, காதினில் நன்றாகத் தெரிந்தது. பொன்னால் செய்த தொடி கிடந்து அழுத்திய தழும்பு இருந்த அவள் முன்கையில் இப்போது வலம்புரி சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளை ஒன்று மட்டுமே இருந்தது. வாளை மீனின் திறந்த வாயை ஒப்ப முடக்கத்தை உண்டாக்கிச் சிவந்த விரலிடத்தே செந்நிறமான பூத்தொழிலை உடைய மோதிரத்தை அணிந்திருந்தாள். அவள் தோற்றம் வடிவம் மட்டும் வரைந்த புனையா ஓவியம் போல் இருந்தது (நெடு.136-147)” அவள் ஞாயிறுடன் மிகவும் மாறுபட்ட திங்களின் ஓவியத்துடன் நிலைத்துள்ள ரோகிணியின் ஓவியத்தை உற்று நோக்கி, ‘யாமும் இவள் போன்று காதலரோடு பிரிவின்றி உடனுறைய பெற்றிலமே’ என்று நினைத்து கண்களிலே நீர் பெருக்கெடுக்க வருத்தமுற்று காணப்பட்டாள் (நெடு.162-165)”.

    முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்து தலைவியுற்ற துயரம், அம்பு தைத்த மயிலின் நடுக்கத்தை ஒத்தது என்கிறது. ஆனால், நெடுநல்வாடையிலோ தலைவியின் துயரம் புனையாத ஓவியம் போன்றது என்கிறது. அத்துடன், தலைவனின் வருகைக்காகக் காத்திருந்த தலைவியின் நிலையை இரு பாடல்களும் சிறந்த உவமைகளுடன் வருணித்துள்ளன. முல்லைப்பாட்டில் தலைவனின் குதிரைச் சத்தத்தை எதிர்நோக்கியவளுக்கு அருவியின் ஒலியே மிஞ்சியது என்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சந்திரன், உரோகிணி இணைந்துள்ள ஓவியமே எதிர்ப்பட்டது என்று கூறுகிறது. அதாவது, இருவரின் துன்பத்தையும் இந்த நிகழ்வுகள் மேலும் அதிகப்படுத்தின என்பதையே இவை  காட்டுகின்றன.

    தலைவியைத் தேற்றுதல்

    தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியைத் தேற்றுவதான பொருட்கூறு இரு பாடல்களிலும் அமைந்துள்ளது.

    தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவனுடைய வருகையைக் காணாமல் தலைவி மிகவும் வருத்தமடைகிறாள். தலைவியின் அந்த வருத்தத்தைப் போக்கத் தோழிகள், “இளங்கன்று தாய் பசுவைப் பிரிந்து வருந்திக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட முதுமகள் அவற்றினை நோக்கி உங்கள் தாயார் விரைவில் வந்துவிடுவா் என்றாள். அத்தகைய நன்மொழியை நாங்கள் கேட்டோம். அதனால் நம் தலைவருடைய வாய்மொழி என்றும் தவறாது. எனவே தலைவா் பகைவா்களை வென்று விரைவில் திரும்பிவிடுவார். நீ உன் துன்பத்தை நீக்குவாயாக! (முல்.16-21)” என்று ஆறுதல் கூறுவதாக முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும்,

    “சென்முகச் செவிலியா் கைமிகக் குழீஇ
    குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
    இன்னே வருகுவா் இன்துணையோர் என” (நெடு.148-156)

    ஆறுதல் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப் பாட்டில் ‘நற்சகுணம் ஏற்பட்டதால் தலைவன் விரைவில் வருவான்’ என்று ஆறுதல் மொழி கூறுவதாகவும் ஆனால், நெடுநல்வாடையில் ‘குறியவும் நெடியவும் பல கதைகள் கூறித் தலைவன் விரைவில் வருவான்’ எனத் தேற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளன. அத்துடன், முல்லைப்பாட்டின் தலைவியைத் தோழிகள் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவியைச் செவிலித்தாய் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறும் செய்திகள் மற்றும் கூறுபவா் வேறுபட்டிருப்பினும், நோக்கம் தலைவியின் மனத்தில் உள்ள துயரத்தைப் போக்குவதேயாகும். ஆக, அந்த அம்சம் இரு பாடல்களில் ஒரே தன்மையில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

    வேந்தனின் செயல்பாடுகள்

    தலைவி, தலைவனைப் பிரிந்து வாடும் அதே வேளையில் போர்முனையில் இருக்கும் தலைவன் போரில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளான். இவ்வாறு போர்முனையில் இருக்கும் வேந்தனின் செயல்பாடுகள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவன் பகைவா்களுடன் நடைபெற்ற போரில் புண்பட்ட வீரா்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பற்றி நினைத்து வருத்தமுற்றும் மறுநாள் நடைபெறப் போகும் போரைக் குறித்துக் கவலையுற்றும் உறங்காமல் கண்விழித்திருந்தான். மறுநாள் போரில் பகைவா்களை வென்ற மகிழ்ச்சியில் இரவு நன்றாக உறங்கினான்” (முல்.67-74) என்றும் “பகைவரை வென்று அவா்களுடைய நிலங்களைக் கைக்கொண்டு, திரண்ட பெரும் படையொடு, வெற்றிக் கொடியை உயா்த்தித் தன்நாடு நோக்கித் திரும்பினான். அவ்வாறு அவன் திரும்பும்போது கொம்புகள் ஊதப்பட்டன; சங்குகள் முழங்கத் தொடங்கின; வழியில் நுண் மணலிடத்து வளரும் நெருங்கிய இலைகளை உடைய காயாச் செடிகள் அஞ்சனம் போல் மலர்ந்தன; தளிரினையும் கொத்தினையும் உடைய கொன்றை மரங்கள் பொன் போன்ற இதழ்களைச் சொரிந்தன; வெண்காந்தளின் குவிந்த அரும்புகள் அங்கை போல் விரிந்தன; தோன்றிச் செடிகள் இரத்தம் போன்ற நிறமுடைய இதழ்களை மலா்த்தின; செழுமையான முல்லை நிலத்தில் விளைந்த கதிர்களை உடைய வரகு பயிரிடத்தே முருக்கிய கொம்புகளையுடைய கலைமான்களுடன் இளமையுடைய மான்களும் துள்ளி விளையாடின; இனிமேலும் பெய்வதற்காகச் செல்லும் வெண்மேகங்கள் மழை பொழிவதற்குரிய கார்காலம் தொடங்கும் ஆவணித் திங்களின் தொடக்கத்தில் முதிரும் காய்களையும், வள்ளிக் கிழங்கின் கொடிகளையும் கொண்ட காடு பின்னடைய விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்தும் செல்லுகையுடையவராய் தலைவா் வந்தார். போர்த்தொழிலில் சிறந்த தமது திறம் மேலும் சிறந்து விளங்கும் நெடிய தோலால் பூட்டப்பட்டிருந்த அவருடைய குதிரைகள் ஆரவாரித்தன (முல்.89-103)” என்றும் முல்லைப் பாட்டில் தலைவனின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், நெடுநல்வாடையில் சுட்டப்படும் மன்னன், பாசறையில் அந்நாள் போரில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருந்துவதும், புண்பட்ட வீரா்களுக்கு ஆறுதல் கூறுவதுமான செயல்களைச் செய்துகொண்டிருப்பதாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “ஒளி விளங்கும் முகபடாத்தொடு பொலிவு பெற்று, போர்த்தொழிலைப் பயின்ற யானைகளை முன்னா் கொன்று பின்னா் பகைவருடைய ஒளி பொருந்திய வாள் பிளத்தலால், சீரிய புண்பட்டவராகிய வீரா்களின் புண்ணைப் பார்த்து ஆறுதல் கூறும் பொருட்டுத் தன் இருக்கையிலிருந்து புறத்தே புறப்பட்டான் அரசன். வட திசைக்கண்ணின்று குளிர்ந்த காற்று வீசும் தொறும் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்து ஒளிவிடும் பெரிய சுடா் நல்ல பல விளக்குகளில் அணையாது எரிந்து கொண்டிருந்தது. வேப்பந்தாரை முனையில் கட்டின வலிமை வாய்ந்த காம்பினையுடைய வேலொடு முன்னா்ச் செல்கின்ற படைத் தலைவன், புண்பட்ட மறவரை முறை முறையாகக் காட்டிச் சென்றான். மணிகளைத் தம்மேல் இடப்பட்டனவும், பெரிய கால்களை உடையனவுமான யானைகளோடு, சேனம் நீங்காதனவும் பாய்ந்து செல்லும் இயல்பினையுடைய குதிரைகளும் நிறைந்த இடங்களில் சென்ற அவன்மீது அவை சேற்றுத் துளிகளைச் சிதறின. தன் இடத்தோளினின்றும் நழுவி விழுந்த மேலாடையை இடப்பக்கத்தே ஒரு கையால் அணைத்துக்கொண்டு வேலேந்தி முன்னா் செல்லும் காளையின் தோளிலே வலக்கையை வைத்துக்கொண்டு விழுப்புண் பட்ட வீரரைப் பார்த்துத் தன் செய்ந்நன்றியறிதலும் அன்பும் தோன்ற, முகத்தில் ஆர்வம் தோன்றுமாறு நோக்கி ஆறுதல் மொழிகளைக் கூறிச் சென்றுகொண்டிருந்தான். அவன் முத்து மாலை கட்டிய வெண்கொற்றக் குடை ‘தவ்’ என்னும் ஒலி பட்டசைந்து மழைத் துளியைத் தன்மீது விழாமல் மறைத்து நிற்க, நடுயாமத்தில் பள்ளி கொள்ளானாய்ச் சில மறவா்களே தன்னைச் சூழ்ந்து வரப் பாசறையின்கண் திரிந்து கொண்டிருந்தான் (நெடு.168-188)”.

    முல்லைப் பாட்டில் தலைவன் இரவில் உறக்கம் கொள்ளாமல் அடுத்த நாள் போருக்கான செயல்பாடுகள் பற்றிச் சிந்தித்தல், புண்பட்ட வீரா்கள், யானைகள், குதிரைகள் பற்றி நினைத்து வருந்துதல் ஆகியவற்றினைக் கூறி, அதன் பின்னா் மறுநாள் போரில் பகைவா்களை வெற்றி பெறல், மிக்க ஆரவாரத்துடன் தன் நாட்டிற்குத் திரும்புதல் ஆகியனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  ஆனால், நெடுநல்வாடையில் அரசன் இரவு நேரத்தில் புண்பட்ட வீரா்களுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று ஆறுதல் கூறுவதுடன் பாடல் நிறைவடைகிறது.

    அதாவது, ‘தலைவனின் செயல்பாடுகள்’ என்னும் இந்தப் பொருட்கூறு முல்லைப் பாட்டில் விரிவாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

    கூறுகள் இடம் மாறி அமைந்தவை

    முல்லைப்பாட்டு தலைவியின் துயரினைப் பற்றிக் குறைவாகக் கூறி, தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஆனால், நெடுநல்வாடை தலைவியின் துயரினைப் பற்றி விரிவாகக் கூறித் தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றிச் சுருக்கமாகவே விவரிக்கின்றது. நெடுநல்வாடையில் கார்கால நிகழ்வுகளைத் தொடா்ந்து ஊரின் வளம், பெண்களின் மாலைக்கால வழிபாடு, கூதிர்க் காலத்தில் நகரில் நடைபெறும் பிற நிகழ்வுகள், அரண்மனையின் தோற்றம்,  அந்தப்புர அமைப்பு, கட்டிலின் அமைப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறித் தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப் பாட்டில் கார்கால நிகழ்வுகள், கோவலா் செயல்கள் ஆகியவற்றினைத் தொடா்ந்து காட்டிலிருக்கும் தலைவனின் போர்ப் பாசறை, அதன் அமைப்பு, மகளிர் விளக்கேற்றுதல் எனப் போர்ப் பாசறை நிகழ்வுகள் பற்றிக் கூறிய பின்னர், தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது அதாவது, இடம் மட்டுமே இங்கு மாற்றமடைகிறது. ஆனால் கூறுகின்ற பொருள், கூறும் முறைமை ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

    முல்லைப்பாட்டில் கூறப்பட்டுள்ள பாசறையின் அமைப்பு (24-36), படைவீட்டின் அமைப்பு (37-44), பள்ளியறையின் அமைப்பு (59-66) ஆகியவற்றின் இடத்தில், நெடுநல்வாடையிலுள்ள அரண்மனை அமைப்பு (72-100), அந்தப்புரத்தின் அமைப்பு (106-114), கட்டிலின் அமைப்பு (115-135) ஆகிய வருணனைகள் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவன் இருப்பிடம் தலைவியின் இருப்பிட வருணனைகளாக இவை மாறி மாறி அமைந்துள்ளன. இந்தப் பொருட்கூறுகள் அமைந்துள்ள முறையினைப் பற்றி இனிக் காண்போம்.

    பாசறை அமைப்பும் – அரண்மனை அமைப்பும்

    மகளிரின் மாலைக் கால வழிபாடுகள் பற்றிக் கூறிய பின்னா் முல்லைப் பாட்டு, பாசறை அமைப்பு (24-36) பற்றிக் கூறுகின்றது. ஆனால் நெடுநல்வாடை, அரசி வீற்றிருக்கும் அரண்மனையின் அமைப்பு பற்றிக் (72-100) கூறுகின்றது.  அதாவது, முல்லைப் பாட்டு, போர் மீது சென்ற தலைவன் போர்க்களத்தில் அமைத்த படைவீட்டின் அமைப்பைப் பற்றிக் கூற, நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் அரண்மனையின் எழில்மிகு தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றது.

    “காட்டாறு சூழ்ந்த அகன்ற பெரிய காட்டினிடத்தே மணமிக்க பிடவ மலா்களுடன், பசுமையான தூறுகளையும் வெட்டினா். பகைவா் நாட்டிற்குக் காவலாக அமைந்த வேட்டுவா்களின் சிறு வயல்களையுடைய அரண்களையும் அழித்தனா். அக்காட்டில் உள்ள முட்களால் மதில் போன்ற வேலியை உண்டாக்கினா். அதனைக் காவலாக வளைத்து அமைக்கப்பட்டது, மிக்க நீர் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறை. அப்பாசறையின் அருகில் இருந்த யானைகள், உணவு உண்ணுதலை மறுத்தன. அவற்றினைப் பாகா்கள் உணவு உண்ணுமாறு செய்தனா் (முல்.24-36)” என்று பாசறை அமைந்துள்ள அழகைப் பற்றி முல்லைப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மதிலின் அமைப்பு, வாயிலின் தோற்றம், மற்றும் அரண்மனை வாயிலில் குதிரைகள், மயில்கள் போன்றன இருந்த தன்மைகள் ஆகியன விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு. “எல்லாத் திசைகளிலும் தன் கதிர்களைப் பரப்பி அகன்ற ஞாயிறு மண்டிலம், நிலத்தே இரண்டிடங்களில் நாட்டப்பெற்ற இரு கோலின் நிழல் எப்பக்கமும் விழாதபடி அக்கோலிலேயே பதினைந்து நாழிகையில் அடங்கி நிற்றலை நூலறி புலவா் நுட்பமாய் ஆராய்ந்து பார்த்தனா். அதன்பின் அங்ஙனம் நின்ற நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துவோர் முதலிய திசைகளைக் குறித்துக் கொண்டனா். பின்னா் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி, முடிமன்னா் வாழ்வதற்கு ஏற்ப, மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பிறவற்றையும் கூறுபடுத்தி அமைத்தனா். இவை அனைத்தும் உள்ளே இருக்குமாறு வளைத்து உயா்ந்து நிற்கும்படி மதிலினை அமைத்தனா். பெரிய இரும்பு ஆணிகளுடன் பட்டங்களும் கட்டிச் செவ்வரக்குப் பூசி இரட்டைக் கதவுகளைச் சிறிதும் இடைவெளியின்றி இணைத்து, அழகிய உத்திரத்திலே செருகினா். அதில் மலா்ந்த குவளையை ஒப்ப உருக்களை அமைத்தனா். கைத்தொழில் வல்ல தச்சன் செய்ததால், யாதொரு குறைபாடும் இன்றிப் பொருத்தமுற அந்த வாயில் அமைந்திருந்தது. வெற்றி குறித்து உயா்த்திய கொடியொடு யானைகள் சென்று புகும்படி உயா்ந்தனவும், மலையை வெட்டித் திறந்தார் போன்றனவும் ஆகிய கோபுர வாயில்களைக் கொண்டமைந்தது, அந்த அரண்மனை. அரண்மனையின் வாயிலில் ஆண் கவரிமான்களும் அன்னங்களும் தாவித் திரிந்துகொண்டிருந்தன. குதிரைகள் பந்தியில் நிற்றலையும் புல்லைக் குதட்டுதலையும் வெறுத்துத் தனிமைத் துன்பத்தை வெளிப்படுத்தும் கனைத்தலைச் செய்தன. ஆண் மயில்களைக் கண்ட பெண்மயில்கள் ஆரவாரித்தன. அந்த ஓசை மலையின்கண் இயற்கையில் நிகழும் ஆரவாரம் போலக் கேட்டது” (நெடுநல்-72-100).

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பினையும் நெடுநல்வாடையில் அரண்மனையின் அமைப்பினையும் பற்றிக் கூறப்பட்டிருப்பினும் அதனை அவை ஒரே தன்மையில் வருணித்துள்ளன. அதாவது, முல்லைப்பாட்டு படைவீட்டின் அமைப்பு வருணனை, அதனைத் தொடா்ந்து அப்படைவீட்டின் முன் யானை இருந்த நிலை, யவனா் செயல் ஆகியன பற்றிக் கூறுகின்றது.  இவ்வாறே நெடுநல்வாடையிலும் அரண்மனையின் அமைப்பு, அரண்மனையின் முன் இருந்த குதிரைகள், மயில்கள் போன்றவற்றினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

    படைவீட்டின் அமைப்பு – அந்தப்புர அமைப்பு

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பும் (37-58), நெடுநல்வாடையில் அந்தப்புர அமைப்பும் (101-114) கூறப்பட்டுள்ளன.

    “காவிக்கல்லின் சாயத்தில் தோய்த்து உடுத்திய தவ வேடந்தாங்கிய முக்கோலையுடைய அந்தணர், முக்கோலில் ஆடைகளை இட்டுவைத்தாற் போல் போரில் முதுகு காட்டி ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லினை ஊன்றி அதன் மேல் தூணிகளைத் தொங்கவிட்டனா். பூவேலைப்பாடமைந்த ஈட்டிகளை நட்டு, கேடயங்களை வரிசையாகப் பிணைத்துப் பல்வேறு படைகளின் இருக்கைகளை அமைத்து அதன் நடுவே அரசனுக்கு இவற்றின் வேறான நெடிய குத்துக்கோல்களுடன் பல நிறத்தால் கூறுபட்ட திரைத்துணிகளை வளைத்து அரசன் தங்கும் படைவீடு அமைத்தனா் (முல்.37-44). அங்குக் குறிய தொடியை அணிந்த முன்கையினையும், கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகினையும், திண்ணிய பிடியினையுடைய வாளை வரிந்து கட்டின கச்சிலே அணிந்தவருமாகிய மகளிர் இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கும் தன்மையில் பாவை விளக்குகளில் நெய்யை வேண்டும் அளவு வார்த்து விளக்குகளைச் சுடா்விட்டு எரியுமாறு செய்து கொண்டிருந்தனா் (முல்.45-49). நள்ளிரவில் புனலிக்கொடி படா்ந்த சிறுதூறுகள் தூறலோடு காற்றில் அசைந்தாற்போல் உடலை வெண்சட்டையால் மூடிய நல்லொழுக்க மிக்க காவலா்கள் உறக்கத்தால் ஆடி அசைந்து கொண்டிருந்தனா். நாழிகையை அளந்து அறியும் பொய் பேசுதல் அறியா நாழிகைக் கணக்கர் நாழிகை வட்டிலிலே நாழிகை இத்துணை என்று கூறிக்கொண்டிருந்தனா் (முல்.50-58)” என்று முல்லைப்பாட்டில் படை வீட்டின் அமைப்பு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    “யவனா் அழகு பெறப் பண்ணின வேலைப்பாடு அமைந்த மாட்சிமை அமைந்த பாவை, தன் கையில் ஏந்தியிருக்கின்ற அழகிய அகல் நிறையும்படி பெரிய திரியை இட்டனா். பின்னா் அதில் நெய்யை வார்த்தனா். நெய்வற்றி ஒளிமங்கும் காலத்துத் தூண்டுதலும் நெய்வார்த்தலும் செய்து எல்லா இடங்களிலும் இருள் நீங்கச் செய்தனா். பெருமை மிக்க பாண்டியனை அல்லாது பிற ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடைய அந்தப்புரத்தின்கண், மலைகளின் மீது தோன்றும் வானவில் போன்று காட்சியளிக்கும் கொடிகளை நட்டிருந்தனா். வௌ்ளியைப் போன்று விளங்கும் சுண்ணச்சாந்து அரண்மனைக்குப் பூசப்பட்டிருந்தது. அரண்மனையினுள் நீலமணியைப் போன்று கருமையினையும், திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்கள் பலவற்றினை அமைத்திருந்தனா். பெரிய சுவரில் பல வகையான பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது (நெடு.101-114)” என்று நெடுநல்வாடையில் அரசியார் வீற்றிருக்கும் அந்தப்புரம் அமைந்துள்ள முறை பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப்பாட்டில் வில், அம்பு, ஈட்டி, கேடயம் முதலிய படைக் கருவிகளைக் கொண்டு படைவீடு அமைக்கப்பட்டுள்ளதையும், அழகிய அந்தப் படைவீட்டில் அரசன் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறையின் சிறப்பும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் சித்தரிக்கப்படும் அந்தப்புரம், யவனா்களால் செய்யப்பட்டது. அது அரசனை அன்றி வேறு ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடையது. அது காண்பவா்க்கு மலைகளோ எனத் தோன்றும் உயா்ச்சியுடையது. அதில் பல நிற சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கருபகிரகம் அமைந்துள்ளது.

    அத்துடன், இரு பாடல்களிலும் இரவு நேரத்தில் மகளிர் விளக்கேற்றும் முறைமையினைப் பற்றி ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விளக்கேற்றும் இடம் மட்டும் மாறுபடுகிறது. அதாவது, முல்லைப் பாட்டில் தலைவன் வீற்றிருக்கும் பாசறையில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் அரண்மனையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புரத்தில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் படைவீட்டின் அமைப்பும், நெடுநல்வாடையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புர அமைப்பும் ஒரே தன்மையில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாலும், முல்லைப்பாட்டில் வருணனை அளவு சற்று நீண்டதாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைந்ததாகவும் அமைந்துள்ளது.

    பள்ளியறை அமைப்பு – கட்டிலின் அமைப்பு

    முல்லைப் பாட்டு அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு (59-66) பற்றியும் நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் பள்ளியறையைப் (கட்டில்) பற்றியும் (115-135)  கூறுகின்றன.

    “வலிமை மிக்க உடம்பினையுடைய யவனா்களால் புலிச் சங்கிலி விடப்பட்ட அழகமைந்த இல்லம் அமைக்கப்பட்டது. அது அழகிய மாணிக்க விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றாலே திரையை வளைத்து இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உடம்பின் உரைக்கும் உரையா நாவினை உடைய மிலேச்சா் காத்திருந்தனா் (59-66)” என்று முல்லைப்பாட்டில் அரசன் தங்கியிருக்கும் பள்ளியறை அமைந்துள்ள அழகைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.

    “நாற்பது ஆண்டுகள் வயது நிரம்பிய போரில் விழுப்புண் பட்டு இறந்த அழகிய வடிவத்தையுடைய களிற்று யானையின் தாமே விழுந்த தந்தங்களைச் சீறும் செம்மையும் படச்செதுக்கி கைத்தொழில் வல்ல தச்சன் கூரிய உளியால் அதில் இலைத் தொழில் வேலைப்பாடு அமையச் செய்து பொருந்தியதும் சூல் முற்றிய மகளிர் தம்பால் கட்டியதில் பருத்த மார்பகங்களை ஒப்ப புடைதிரண்ட குடத்தை உடையது பாண்டில் என்னும் பெயா் பெற்ற அந்தக் கச்சுக் கட்டில். அது தன்னிடத்தே காலுறுப்பாகிய குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளியின் முதல் போன்ற உறுப்பினை உடையது. முத்து மாலைகளைக் கட்டிலோடு ஒழுங்குற மெல்லிய நூல் கொண்டு அழகுறும்படித் தொடுத்து தொங்கவிடப்பட்டிருந்தது. புலியினது வரிகளைத் தன்னிடத்தே குத்துதல் தொழிலால் அமைக்கப்பட்ட தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையின் மேலே சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்மேல் பலவிதப் பூக்களின் உருவங்கள் நிரம்பியுள்ளன. காதல் துணைகளாய்த் தம்முட் புணா்ந்த அன்னப் பறவைகளின் வௌ்ளிய மயிரை இணைத்து இயற்றிய மெத்தையை மேன்மையுண்டாகுமாறு விரித்து, அதன் மேல் தலையணை விரிப்பினை மணமிக்க மலரிதழ்களால் மணம் ஊட்டப்பெற்று பின்னா் படுக்கையின் மேல் விரித்திருந்தனா் (115-135)” என்று நெடுநல்வாடையில் பள்ளியறையின்கண் அமைந்துள்ள தலைவியின் கட்டில் அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு மற்றும் அங்குக் காவல் நின்ற யவனா் (ஊமை மிலேச்சர்) பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆனால், நெடுநல்வாடையில் அரசி வீற்றிருக்கும் பள்ளியறையிலுள்ள கட்டிலின் அழகு மட்டும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    கார்கால மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள்

    கார்காலத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டில் இந்தப் பொருட்கூறு பற்றிக் கூறப்படவில்லை. அதாவது, முல்லைப் பாட்டு மாலைக் காலத்தினை மட்டும் வருணிக்க, நெடுநல்வாடை மாலைக்கால வருணனையுடன் கூதிர் காலத்தினையும் சோ்த்து வருணித்துள்ளது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.

    “மாமேய மறப்ப மந்தி கூற
    பறவை படிவன வீழ கறவை
    கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
    குன்று குளிர்ப்பன்ன கூதிர் பானாள்” (9-12)

    என்று கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகள் மற்றும் பறவைகள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தன.  “மழைத்துளிகள் பட்டதால் முசுண்டையும், பீர்க்கம்பூவும் மலா்ந்தன. சேற்றில் நாரைகளும், கொக்குகளும் திரிந்துகொண்டிருந்தன. மிகுந்த மழையால் பாக்கு மரத்தின் பசுமையான காய்கள் இன்சுவை தோன்ற முற்றின. மரங்களிலுள்ள மலா்களிலும், இலைகளிலும் மழை நீர்த்துளிகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. உயா்ந்த மாடங்களில் விளங்கும் வளமான பழைய ஊரின்கண் உள்ள அகன்ற தெருக்களில், முழுவலிமாக்கள் கள்ளுண்ட மயக்கத்தில் தம்மீது விழும் மழைத்துளியையும் பொருட்படுத்தாமல் திரிந்துகொண்டிருந்தனா். வீட்டிலுள்ள கொடுங்கைகளில் தங்கி வாழும் செந்நிறக் கால்களைக் கொண்ட ஆண்புறா, தன்னுடைய பெண்புறாவுடன் சுற்றித் திரியாமல் மயங்கிச் செயலற்று நின்றன. அவற்றின் கால்கள் கடுத்தபோது சோர்வு போக்கிக்கொள்ள, கால்களை மாற்றி மாற்றி நின்றன. வீடுகளிலுள்ள மணங்கமழும் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை அரைப்பதற்கு உதவும் அம்மியும், வடநாட்டவா் தந்த வெண்மை நிறங்கொண்ட வட்டவடிவக் கல்லும் தென்னகத்துச் சந்தனம் ஆகியவையும் பயன்படாமல் இருந்தன. இளவேனில் காலத்தில் தென்றல் வருவதற்கென அமைக்கப்பட்டுக் கிடந்த பலகணிகள், திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன. ஆடல்தொழிலைச் செய்யும் விறலியா் தம்பாட்டினை யாழில் இசைப்பதற்கு நரம்பைத் தெரித்துப் பார்க்க, அவை குளிரால் ஓசை வெளிப்படுத்தாது நிலை திரிந்து இருந்தன. தம் கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமாறு, பருவ கால மழை மிகுதியாகப் பெய்து, தன் வருகையைக் கூதிர்க் காலம் நிலையாக உணா்த்தியது” (13 – 24).

    முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை முடிபுகள்

    இரு பாடல்களையும் பகுத்து ஆராய்ந்ததில் கார்கால வருணனை, கோவலா்களின் செயல்பாடுகள், மாலைக் கால வழிபாடு, பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை, படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புர அமைப்பு வருணனை, பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை, தலைவியின் துயரம், தலைவியைத் தேற்றுதல், வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை) என்ற 9 பொதுவான பொருட்கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

    ‘கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்’ என்ற ஒரு பொருட்கூறு, நெடுநல்வாடையில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருட்கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகள் இரு பாடல்களிலும் பொதுவாய் அமைந்துள்ளன.

    மக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாடைக் காற்றினால் (பனி) துன்புற்றிருந்த நிலை பற்றிய செய்தியைத் (கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்) தலைவியது மனவேதனையை விளக்க புலவா் ‘கையாண்ட உத்தியாகக்’ கொள்ளலாம்.  அப்படிக் கொள்ளும் நிலையில் இந்தப் பொருட்கூறு கோவலர்களின் செயல்பாடுகளின் நீட்சியாக அமைகிறது. பாடல்களின் அளவு 103, 188 என அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ள, இவ்வாறு கொள்வது சரி என்றே படுகின்றது.

    முல்லைப்பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லைப்பாட்டு காட்டில் தங்கியிருக்கும் தலைவனின் பாசறையினைப் பற்றிக் கூற, நெடுநல்வாடையில் தலைவி தங்கியிருக்கும் அரண்மனையினைப் பற்றி வருணித்துள்ளது. அதாவது இங்கு இடம் மட்டுமே மாறி அமைந்துள்ளது. எனவே இதனைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். அவ்வாறே முல்லைப்பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புக்கு, நெடுநல்வாடையில் உள்ள அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றையும் பதிலிகளாகக் கொள்ளலாம்.

    நெடுநல்வாடையில் தலைவியின் வருணனை நீண்டும், முல்லைப்பாட்டில் தலைவனின் வருணனை நீண்டும் அமைந்துள்ளன.

    ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க இரு பாடல்களும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள் எனத் தெளிவாக அறிய முடிகின்றது.

    சான்றெண் விளக்கக் குறிப்புகள்

    1. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.24.
    2. மேற்படி, ப.12
    3. மேற்படி, பக்.11-14
    4. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
    5. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி.
    6. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
    7. ஆலிஸ்,அ., கட்டமைப்பு ஆய்வில் அகநானூறும் புறநானூறும், 1991, அன்னம் (பி)லிட், சிவன் கோயில் தெற்கு தெரு, சிவகங்கை.
    8. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.

    =======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    சங்க இலக்கிய நூல்களான முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை ஆகிய நூற்களை  அமைப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டிலின் கவிதையியல், ரெனிவெல்லக்கின் இலக்கியக் கொள்கை, டாக்டா் இலா.குளோறியா சுந்தரமதியின் பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், தமிழவனின், அமைப்பியலும் அதன் பிறகும் போன்ற ஆய்வோடு தொடர்புடைய நூற்களை ஆய்வாளர் கற்று, இக்கட்டுரையை எழுதியுள்ளார்

    ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருண்மையை ஆராய்ந்து தெளிவாக விளக்கி இருப்பது, ஆய்வாளரின் ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. ஆய்வுத் தலைப்பை ஒட்டிய கருதுகோள், ஆய்வு நோக்கம் ஆகியவற்றைத் திறம்பட ஒப்பிட்டு விளக்கியமையும் தெளிவான மொழி நடையும் கருத்துகளின் முறையமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆய்வின் பயனை நிறைவுறுத்தும் வகையில் அடிக்குறிப்புகள் அமைந்துள்ளன.

    ‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க முல்லைப் பாட்டும் நெடுநல்வாடையும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள்  எனத் தெளிவாக அறிய முடிகின்றது’ என்ற முடிவுரை சிறப்பாக அமைந்துள்ளது

    தலைப்புத் தேர்வு , ஆய்வாளரின் தரவு சேகரிப்பு முறை, தரவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆய்ந்துள்ள முறை, ஆய்வு நேர்மை, கருத்துகளைச் சிறப்பாக கட்டமைத்துள்ள ஆய்வுப் பாங்கு, முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் துல்லியமாகத் தரும் முறை ஆகியவற்றைப் பாராட்டுகிறோம்.

    =======================================================================

    Share
  • நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்

    -விவேக்பாரதி

    ராஜா வேசம் – சரசுராம்

    சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.

    மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.

    பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

    அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.

    ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.

    பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

    எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    38.ஊழ்

    குறள் 371:

    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்று மடி

    பணம் சேக்கணும் னு விதி இருந்தா அத சேக்கதுக்கு  நாம முனஞ்சி செய்யுவோம். இருக்கதும் கைவிட்டு போவணும் னு விதி இருந்திச்சின்னா சடவு தான் உண்டாவும்.

    குறள் 372:

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூ ழுற்றக் கடை

    தாழ்ந்து போவணும்னு விதி இருந்தா மனுசனுக்கு புத்தி கெட்டுப் போவும். வாழ்க்கைல ஒசரணும்னு விதி இருந்தா புத்திசாலித்தனம் வளரும்.

    குறள் 373:

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்

    ஒருத்தன் எம்புட்டு ஒசந்த புத்தகங்கள வாசிச்சாலும் தலையெழுத்து சரியில்லன்னா அது அவன் மண்டக்குள்ள ஏராம சொந்த புத்தி தான் நெலைக்கும்.

    குறள் 374:

    இருவே றுலகத் தியற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு

    ஒலகத்தோட இயற்கை நிலைங்கது விதியால ரெண்டா இருக்கு. . ஒருத்தர பணக்காரரா ஆக்குததும் இன்னொருத்தர அறிவாளியா ஆக்குததும் தான் அந்த வேத்துமை.

    குறள் 375:

    நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
    நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

    விதியால நல்லது செய்ய முனையுத சமயம் அது தீமயா முடியுததும்,  தீம செய்ய முனையுதப்போ நல்லதா மாறிக்கிடதும் நடக்கும். . .

    குறள் 376:

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம

    தனக்கு ஒடமையில்லாத பொருள எங்ஙன பொதிஞ்சு வச்சி காத்தாலும் தங்காது. ஒடமையுள்ள பொருள எங்க தொலைச்சாலும் அது விட்டு போவாது.

    குறள் 377:

    வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

    முனஞ்சு கோடிச் சொத்து சேத்தாலும் கடவுள் விதிச்ச விதிப்படி தான் அத அனுவிக்க முடியும்.

    குறள் 378:

    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்

    துன்பத்த அனுவிக்கணும் ங்குத விதி ஏழைய தடுக்கலன்னா   ஒண்ணுமில்லாத அவன் துறவி ஆயிருப்பான்.

    குறள் 379:

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்

    நல்லது நடக்குதப்போ நல்லது னு நெனைக்கவங்க தீயது நடக்குதப்போ துக்கப்படுதது ஏன்?

    குறள் 380:

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்

    விதிய விட வலிம னு வேற இல்ல. விதிலேந்து தப்பிச்சிக்கிடலாம்னு நெனச்சி வேற வழில போனாலும் அங்கயும் அது வந்து நிக்கும்.

     

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • அமெரிக்காவில் கொலம்பஸ் நாள்

    -நாகேஷ்வரி அண்ணாமலை

    நான் எப்போதுமே கொலம்பஸுக்கு அமெரிக்காவில் அதிக மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. முதல் முதலாக அட்லாண்டிக் கடலை அவர் கடந்தது பெரிய சாதனைதான். கொந்தளிக்கும் அட்லாண்டிக் கடலை அதுவரை யாரும் கடந்ததில்லை; உயிரைத் துச்சமாக நினைத்து அதைக் கடக்கத் துணிந்தது பெரிய காரியம்தான். இருந்தாலும் அவர் ‘புதிய கண்டத்தில்’ என்னென்ன அட்டூழியங்கள் புரிந்தார் என்பதை அறிந்தால் அவரை இப்படிப் புகழ முடியுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.

    ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு புதிய பூமியைக் காட்டி அங்குள்ள வளத்தை அவர்கள் அனுபவிக்க வழிகாட்டியது கொலம்பஸ்தான். அதனால் அவர்கள் அவரை மிகவும் போற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். (கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று நமக்குப் பள்ளியில் கற்பிக்கப்பட்டாலும் இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் கண்டத்தில் கொலம்பஸ் கால்வைக்கவில்லை. அருகிலுள்ள பஹாமாத் தீவுகளுக்கு வந்ததோடு சரி. அவருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த அமெரிகோ வெஸ்ஸி புச்சி என்னும் இத்தாலியரின் பெயரைத்தான் அமெரிக்கக் கண்டத்திற்கு வைத்தார்கள். இவர்தான் கொலம்பஸ் வந்தது இந்தியாவுக்கு இல்லை, இன்னொரு கண்டத்திற்கு என்று சொன்னவர். 1497-லும் 1502-லும் அமெரிக்கக் கண்டத்தைற்குத் தான் வந்த அனுபவங்களை எழுதினார். இவர் எழுதியதை வைத்து வரைபடம் வரைபவர்கள் வரைபடம் வரைய ஆரம்பித்தார்கள். அதனால் இவர் பெயரையே அதற்கு வைத்தார்கள்.)

    1934-லிருந்துஅமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மத்திய அரசால் விடுமுறை நாளாகக் கணிக்கப்பட்டது. இப்போது சில மாநிலங்களில் அந்த நாளை ‘பழங்குடி மக்கள் நாள்’ என்று மாற்றப் போகிறார்களாம். ஏற்கனவே நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, அலாஸ்கா, தென் டகோட்டா, ஆரகன், மினசோட்டா ஆகிய ஆறு மாநிலங்களிலும் 130 நகரங்களிலும் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது. (அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.) வெர்மான்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய மாநிலங்களில் கொலம்பஸ் என்ற பெயரில் ஊர்களும் சாலைகளும் உண்டு. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் இருக்கும் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் பெயர்கூட கொலம்பஸ்அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடித்ததன் அடையாளமாக வைக்கப்பட்ட பெயர்தான்.

    இப்போது மெயின் மாநில சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஜேனட் மில்லர் சீக்கிரமே அதில் கையொப்பமிடப் போகிறார். ‘ஒருவரின் பெயரை ஒரு நாளுக்கு வைப்பதால் அவருக்கு நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். கிறிஸ்டபர் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்பதைத் தவிர அவர் என்ன பெரியதாகச் சாதித்துவிட்டார்?’ என்று அந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது மெயின் சட்டசபை அங்கத்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார். கொலம்பஸ் நாளை பழங்குடி மக்கள் நாள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோருபவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் அப்போது லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கொலம்பஸ் வந்ததால் ஐரோப்பாவிலிருந்து நிறையக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைத்தங்கள் நலன்களுக்காகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டர்கள்என்றும் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மதிப்பையும் மரியாதையையும் இப்போது நிறுத்திவிட்டு அவரால் பல துன்பங்களுக்கு ஆளான பழங்குடி மக்களின் பெயரால் அந்த நாளைக் குறிப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக வந்திருந்த பெண்,‘இந்த நிலத்திற்கும் நீருக்கும் சொந்தமான எங்களுக்கு இதுவரை எந்தவித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. விடுமுறை நாளுக்கு கொலம்பஸ் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு அவர் இழைத்த அநீதி மறைக்கப்பட்டிருந்தது. இப்போது எங்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். இப்படி கொலம்பஸ் நாள் என்று இதுவரைக் குறிப்பிடப்பட்டு வந்த நாளைப் பழங்குடி மக்களின் நாள் என்று பெயர் மாற்றம் செய்வதால் இத்தாலிய-அமெரிக்கர்கள் (இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்களை இத்தாலிய அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; அதுபோல் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை இந்திய-அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இப்படிப் பெயர்கள் உண்டு.) தங்கள் மரபுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு விஷயம்தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது என்று பெயர் மாற்றம் செய்யும் விவாதத்தின்போது கூறப்பட்டது.

    கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி என்னும் நகரம் 1992-லேயே இந்த விடுமுறை நாளைப் பழங்குடி மக்கள் தினம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. இன்னும் பிரவுன் பல்கலைக்கழகமும்,மினியாப்பிலஸ், சியாட்டல் ஆகிய நகரங்களும் பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. அலாஸ்கா 2015-இல் பெயர் மாற்றம் செய்தது; வாஷிங்டன் மாநிலம் அந்த நாளை விடுமுறை நாள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் சில மாநிலங்கள் வேறு வகையாக இந்த நாளைக் கையாள்கின்றன. ஓக்லஹோமா மாநிலம் கொலம்பஸ் நாளை கொலம்பஸுக்கும் பழங்குடிகளுக்கும் உரிய நாளாக ஆக்கிப் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது. ஒஹையோ மாநிலத்தில் உள்ள சாண்டஸ்கி என்னும் நகரம் இந்த நாளுக்குப் பதில் தேர்தல் நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நாள் விடுமுறைநாளாக இருந்தால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்குமாம். (அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களும் – மிகச் சில விசேஷத் தேர்தல்கள் தவிர– நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும். எல்லாக் கீழவை அங்கத்தினர்களுக்கான தேர்தல்களும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையும் ஜனாதிபதித் தேர்தல் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறையும் மேலவை அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறையும் நடக்கும்.அமெரிக்காவில் தேர்தல் நாளன்று விடுமுறை இல்லை. எல்லா ஓட்டுச்சாவடிகளும் காலை ஆறு அல்லது ஏழு மணியிலிருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் திறந்திருக்கும்)

    கொலம்பஸ் நாள் மத்திய அரசின் விடுமுறை நாளாகத் தொடருகிறது. போன ஆண்டு அக்டோபர் மாதம் கொலம்பஸ் நாளன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்த நாளன்று திறமை வாய்ந்த ஒரு இத்தாலியரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்க மதிப்பீடுகளான குறிக்கோளை அடைய விரும்பும் பேரார்வம், துணிச்சல், மனோதிடம் ஆகிய குணங்கள் அவரிடம் இருந்தன’ என்று கொலம்பஸைப் புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

    இந்த ட்ரம்ப் என்னவாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இப்போதாவது சில அமெரிக்கர்களாவது கொலம்பஸ் பழங்குடி மக்களுக்குச் செய்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் நினைவுகூர்ந்து அவருக்கு இதுவரை கொடுத்துவந்த மரியாதையையும் மதிப்பையும் திரும்ப வாங்குகிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

    Share
  • எப்போதும் போல்….

    -சேஷாத்ரி பாஸ்கர்

    இன்றைய நாளிதழ் அபிட்சுரி வயிற்றை கலக்கவில்லை
    கடன்காரர்கள் யாரும் அழைப்பு மணி அமிழ்த்தவில்லை
    வெயில் இன்று கம்மி என்று யாரோ சொல்ல காதில் விழுந்தது
    விடுமுறையில் பசங்களும் பறவைகளும் போடும் கூச்சல் ரம்மியமாகத்தான் இருக்கின்றன
    எந்த மாத்திரையும் இப்போது தேவைப்படவில்லை
    இருக்கும் இருநூறில் உலகம் தெரிகிறது
    வேலைகள் யாவும் நானின்றி நடக்கின்றன
    கடக்கும் காலங்கள் கரையேறி சிரிக்கின்றன
    எப்போதும் போல் இரவு தூக்கத்திற்காக காத்திருக்கிறேன்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 210-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காய்ந்து கருகிய சருகையும் படமாக்கி நம் கவனத்தைக் கவரமுடியும் என்று தன் நிழற்படத்தின்மூலம் நிரூபித்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன்; பாராட்டும் நன்றியும் அவருக்கு!

    இளமையெனும் வண்ணப் பொலிவிழந்து சல்லடைக் கண்களால் சகத்தினை நோக்கி இச்சருகு பகரும் அனுபவ மொழி என்னவோ?

    கவிஞர் பெருமக்களே! சருகு குறித்த உம் கருத்துக்களைச் சத்தான கவிதைகளாய் மெருகேற்றித் தருக!

    இச்சருகைக் காண்கையில் அப்பா அணிந்து நைந்த முண்டா பனியனும் தேய்ந்த காலணிகளுமே மூளையின் மூலையில் மின்னி மறைகின்றன என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    இச்சருகின் தோற்றம்!

    ஓசோன் வழி ஊடுருவும் கதிர்களால்
    உருக்குலையும் உலகை உவமித்தாலும்

    மூளையின் ஏதோ ஒரு மூலையில்

    அப்பா அணிந்தே நைந்த முண்டா பனியனும்
    அலைந்தே தேய்ந்த வெள்ளை நீலக் காலணிகளுமே

    மின்னி மறைகிறது…

    *****

    ”மரத்துக்கு அழகுதரும் பச்சை இலைகள் பழுத்துச் சருகாகி உதிர்வதுபோன்றதே மானுட வாழ்க்கை” என்று சருகினை வைத்து வாழ்வியல் உண்மை உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்வு முடிந்தால்…

    ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
    அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
    ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
    அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
    ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
    ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
    மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
    மாண்டுவிட்ட சருகேதான் வாழ்க்கை இதுவே…!

    *****

    ”காதலில் தோற்ற உள்ளம் சல்லடையாய் மாறிக் கல்லறைக்குச் சென்றபோது அங்கே வந்து விழுந்த சருகிது!” என்று துயர கீதம் இசைக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    நினைவுச் சின்னம்

    பாவை உன்னைக் கண்டு
    நெஞ்சில் காதல் முளைத்ததே!
    நினைவாய் நீ அனுதினம்
    நெஞ்சில் நீர்வார்க்கக் காதல் வளர்ந்ததே

    இல்லை என சொல்லி எனை ஏற்க மறுக்க
    இலையுதிர் காலம்தனில் உதிரும்
    இலை போல் என் இதயம் இடறியதே

    அணு அணுவாய் உருகித் தினம்
    காதல் நோய் வந்து சேர்ந்ததே
    உதிரம் உறைந்து அணுக்கள் அழிந்ததே
    உள்ளம் உடைந்து சல்லடையாய் மாறியதே

    உதிர்ந்த இலையும் சருகாய் மாறி
    உறங்கும் இடம்தேடி வந்து விழுந்ததே
    இடி விழுந்த இதயம் உடைந்து நான் உறங்கும்
    கல்லறையில் வந்து விழுந்ததே
    நினைவுச் சின்னமாய்!

    சருகை வைத்து மனம் உருகும் கவிதைகள் யாத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    இலைச் சருகு…

    இலைகள் காய்ந்தால் சருகாகும்.. இவை
    மண்ணில் புதைந்தால் எருவாகும்..
    கலைக்கண் கொண்டு பார்த்தாலே..
    அதுவும் தனிவித அழகாகும்..!!

    செல்வச் செழிப்பே உயர்வென்று.. எண்ணும்
    மனிதா சருகைப் பார்.. தன்
    நிலையில் தாழ்ந்து வீழ்ந்திடினும்..இத்
    தரணி செழித்திட உரமாகும்..!!

    காற்றில் சருகுகள் பறந்ததெல்லாம்.. இன்று
    பகற் கனவாக ஆயிற்று..
    வேற்று கிரகமோ இதுவென்று.. தோன்றும்
    நிலைக்கு பூமி மாறிற்று..!!

    வாழும் உயிர்கள் அனைத்திற்கும்.. தீங்கின்றி
    நம் வாழ்வைக் கடப்பதுதான்..
    தரணிக்கு நாம்செயும் தொண்டென்று..
    உணர்ந்தால் வாழ்வு வளமாகும்..!!

    சருகான இலைகளும் கலைக்கண் கொண்டு நோக்கிட அழகே!
    காய்ந்தபின்னும் அவை மண்ணுக்கு உரமாகி உதவுவதுபோல் மனிதனும் பிற உயிர்களுக்குத் தீங்கின்றி வாழ்வதே அவன் புவிக்குச் செய்யும் தொண்டாகும் என்று கவி வடித்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 211

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    காயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    37. அவா அறுத்தல்

    குறள் 361:

    அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
    தவாஅப் பிறப்பீனும் வித்து

    எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச.

    குறள் 362:

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்

    ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும்.

    குறள் 363:

    வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்ப தில்

    எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. மத்த எங்கயும் கூட இதுக்கு ஒப்பா ஒண்ணுமில்ல.

    குறள் 364:

    தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்

    மனத் தூய்மை னு சொல்லுதது மனசுல ஆச இல்லாம இருக்கது. ஆச இல்லாம இருக்கது உண்மைப் பொருள விரும்புதப்போ உண்டாவும்.

    குறள் 365:

    அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
    அற்றாக அற்ற திலர்

    எல்லா ஆசயயும் விட்டவர தான் துறவி ங்குதோம்.  ஆசய முழுசும் விடாதவரு உண்மயான துறவி ஆவமாட்டார். .

    குறள் 366:

    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா

    ஒருத்தன வஞ்சித்து கெடுக்குதது ஆச. அதனால ஆசைக்கு அடிமையாவக் கூடாது னு நெனச்சி பயந்து வாழணும்.

    குறள் 367:

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்

    ஒருத்தன் கெட்டுப்போவாம வாழணும்னு நெனச்சாம்னா அவன் ஆசப்படுத கொணத்த மொத்தமா ஒழிச்சுப் போடணும்.

    குறள் 368:

    அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்

    ஆச இல்லாதவுகளுக்கு துன்பம் வாராது. ஆச உண்டாயிடுச்சின்னா அதுக்கு பொறத்தாலேயே துன்பம் ஓயாம வளய வரும்.

    குறள் 369:

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    பெருசா துன்பத்த தருத ஆச இல்லாமப் போனா சந்தோசம் சேந்தாப்ல வந்துக்கிட்டேயிருக்கும்.

    குறள் 370:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்

    காலத்துக்கும் முடிவில்லாம இருக்க ஆசய ஒருத்தன் விட்டுபோட்டாம்னா அது அவனுக்கு நெலச்சி நிக்குத மகிழ்ச்சியான வாழ்க்கயக் கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • சேக்கிழார் பா நயம் – 35

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!

    ‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,

    ‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.

    ‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

    (1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.

    (2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.

    (3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
    – ஒன்றாய் வாழ; வளராத பிறை –

    ‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
    தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
    தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
    வளருமோ பிள்ளை மதி’

    – காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36

    காண்க.

    4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க

    “பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
    பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
    சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’

    தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.

    ‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
    ‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’

    Share
  • ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கிக் குழி பறித்துள்ளது

    –சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    நிலவினில் முதற்தடம் வைத்து
    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    ஹயபூசா -2 தாமிரக் கட்டி தாக்கி, 
    முரண்கோளில் குழி உண்டாக்கும் !
    பூர்வ உயிரின மூலவி காணப் போகுது. 
    ஜப்பான் தளவுளவி.
    முரண்கோள் குழி மண் எடுத்து
    தரணிக்கு மீளும் ஜப்பான் கழுகு 
    ஆய்வு புரிய
    வரலாற்று முதலாய் !

    ++++++++++++++++

    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 முதன்முதலாய் முரண் கோளில் குழி பறித்துள்ளது

    2019 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜப்பான் ஹயபூசா-2 விண்சிமிழ் உலக முதன்மையாய் முரண்கோள் ஒன்றைத், தாமிரக் கட்டியால் ஒரு மைல்  [1.7 கி.மீடர்] உயரத்திலிருந்து தாக்கி சுமார் 30 அடி [10 மீடர்] விட்டக் குழியை உண்டக்கி உள்ளது.  தாமிரக் கட்டியின் எடை ஒரு பவுண்டு [2 கி.கிராம்].   தாமிரக் கட்டி விழுந்த இடம் திட்ட மிட்ட இடத்துக்கு அருகில் குழி  பறித்துள்ளது.  பூமியிலிருந்து 200 மில்லியன் மைல் [340 மில்லியன் கி.மீடர்]  தூரத்தில் சூரியனைச் சுற்றி வரும் முரண்கோளில் நேர்ந்த இந்த நிகழ்ச்சி ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகக் கருத்தப்படுகிறது.  ரியூகுவில் உண்டான இந்த செயற்கை குழியை,  5500 அடி [1700 மீடர்] உயரத்தில்  பயணம் செய்யும் விண்சிமிழ்க் கருவி படமெடுத்து உறுதி செய்தது.

    குழி உண்டான போது தெறித்த மண் மாதிரிகளை அடுத்து  சேமிக்க , விண்சிமிழ் இனிமேல் முரண்கோளை நெருங்கி வரும்.  எடுத்த  மண் மாதிரிகளை, விண்சிமிழ் 2020 ஆண்டில் பூமிக்குக் கொண்டுவரும்.  இந்த திட்டத்துக்கு  ஆகும் ஜப்பான் நிதிச்செலவு சுமார் 30 பில்லியன் யென். [27 பில்லியன் டாலர்]  [2019 நாணய மதிப்பு] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது

    ++++++++++++++++++

       [January 16, 2019]
    ++++++++++++++++
    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.
    2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது.  அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம்.  சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன.   முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்] கொண்டது.  அவை 4.5 பில்லியன் ஆண்டு கட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளிக்கும்.  அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான  பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்ட வையாக  [C-TYPE]  கருதப் படுகின்றன.  ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானி களும்  ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி  [Osiriis-Rex Spacecraft]  தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை  [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது.  1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது.  அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும்.  ஜப்பான் புவிக்குக் கொண்டு வரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
     
     
    ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்
    சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.
    Japan Impact Landers
    மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரி ஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.
    [Click to Enlarge]

    ஜப்பான் கழுகு -2 முரண்கோள் நோக்கி விண்வெளிப் பயணம்

    +++++++++++++++++

    Information News

    1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html [February 21, 2019]
    2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
    3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
    4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    6. http://www.the-japan-news.com/news/article/0005561687[February 22, 2019]
    7. http://www.spacedaily.com/reports/Hayabusa2_probes_asteroid_for_secrets_999.html[March 20, 2019]
    8. https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [February 23, 2019]
    9. https://www.thestar.com/news/world/2019/04/26/japans-hayabusa2-spacecraft-makes-crater-on-asteroid-in-world-first.html [April 26, 2019]
    10. https://www.space.com/japan-blasts-crater-asteroid-ryugu-hayabusa2-photo.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190426-sdc [April 25, 2019]
    11. https://www.dailymail.co.uk/sciencetech/article-2858828/Japan-s-Hayabusa-2-begins-landmark-mission-hunt-asteroid-hold-clues-Earth-formed.html[April 27, 2019]
    12. https://www.japantimes.co.jp/news/2019/04/26/national/science-health/japans-hayabusa2-probe-succeeds-blasting-first-man-made-crater-asteroid/#.XMSRufmJIkI [April 26, 2019]
    13. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [April 25, 2019]
    14. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html

    ++++++++++++++++++++++++

    S. Jaybarathan  [jayabarathans@gmail.com] [April 27, 2019]  [R-2]

    Share
  • வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

    -விவேக்பாரதி

    நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.

    நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது.  பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர்.  சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.

    பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.

    “சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.

    அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.

    பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)

    பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    36. மெய்யுணர்தல்

    குறள் 351:

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.

    குறள் 352:

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.

    குறள் 353:

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வான நணிய துடைத்து

    மனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.

    குறள் 354:

    ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவர்க்கு

    உண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.

    குறள் 355:

    எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    எந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின  நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு

    குறள் 356:

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி

    கத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.

    குறள் 357:

    ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

    ஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம்.   .

    குறள் 358:

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
    செம்பொருள் காண்ப தறிவு

    பொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.

    குறள் 359:

    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்

    எல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .

    குறள் 360:

    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
    நாமங் கெடக்கெடு நோய்

    விருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • குறளின் கதிர்களாய்…(255)

    செண்பக ஜெகதீசன்…

    அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
    லின்மை யரிதே வெளிறு.

    -திருக்குறள் -503(தெரிந்து தெளிதல்)

    புதுக் கவிதையில்…

    அரிய நூற்கள் பல
    கற்றறிந்த
    குற்றமற்றவர்களையும்
    அணுகி ஆராய்ந்தால்,
    அவர்களிடமும்
    அறியாமை என்பது இல்லாதிருத்தல்
    அரிதே…!

    குறும்பாவில்…

    பலநூல் படித்துத் தேர்ந்த
    பண்பாளர்களையும் பரிசீலித்தால் அவர்களிடமும்
    அறியாமை இல்லாதிருத்தல் அரிதே…!

    மரபுக் கவிதையில்…

    அரிய நூல்பல கற்றேதான்
    அறிவில் பண்பில் சிறந்தோரெனத்
    தெரிந்த சான்றோர் தம்மையுந்தான்
    தீர வாய்ந்து பார்த்தாலே,
    தெரியும் உண்மை ஒன்றேதான்
    தூய பண்புடன் அறிவுடைய
    பெரியோர் இவரிடம் அறியாமை
    போகா திருத்தல் அரிதாமே…!

    லிமரைக்கூ..

    பலநூல்கற்ற அறிவு பெரிது
    அத்துடன் பண்புநிறைந்தவரையும் ஆராய்தால்
    அறியாமையவரிடம் இலாதிருத்தல் அரிது…!

    கிராமிய பாணியில்…

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
    தெளிவாகத் தெரிஞ்சுக்கோ..

    பெரிய படிப்பெல்லாம் படிச்சி
    பலநூல் படிச்ச அறிவாளி
    நல்ல கொணமுள்ளவனாயிருந்தாலும்,
    அவனயும் கொஞ்சம் ஆராஞ்சிபாத்தா
    அவங்கிட்டயும்
    அறியாம இல்லாமயிருக்கது பெருசுதான்..

    அதால
    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
    தெளிவாகத் தெரிஞ்சுக்கோ…!

     

    Share