படக்கவிதைப் போட்டி – 211

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

காயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Share

Comments

3 responses to “படக்கவிதைப் போட்டி – 211”

  1. காந்திமதி கண்ணன்

    நாளைக்கு ஊர் கோயில் குடமுழுக்குன்னு தர்மகத்தா வீட்டுல எட்டு துணி குடுத்தாக…
    பொழுது சாயுறதுக்குள்ள
    கொண்டு சேக்கணும்..
    அவுக கொள்ள பக்கம் கொஞ்சம் இருட்டாதான் இருக்கும்…

  2. Shenbaga Jagatheesan

    படிப்பினை…

    அழுக்காய்த் துணியைக் கொடுத்தாலும்
    அடித்துத் துவைத்து வெளுத்திடுவார்,
    பழுதாய்ப் பணியதை யெண்ணவேண்டாம்
    படிப்பினை யதுவே தத்துவமாய்,
    அழுக்கு மனமது தூய்மைபெற
    அடிபல பெறுகிறோம் வாழ்வினிலே,
    எழுந்திடு இன்னலில் துவண்டிடாதே
    ஏற்றம் வாழ்வில் கண்டிடவே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்

    சலவை செய்திட வேண்டும்-மனதை

    இருள் வந்து சூழ்ந்திட
    சூரியன் நீ வந்து சலவை செய்திட
    நீல வானம் ஒளிர்ந்ததே
    எதை கொண்டு சலவை செய்தாயோ
    நுரைகளாய் வெண்பஞ்சு மேகங்கள்

    பனி வந்து படர்ந்திட
    பூமி உடுத்திய பச்சைவண்ண சேலை நனைந்ததே
    சூரியன் நீ வந்து அடித்த வெயிலில் அது உலர்ந்ததே
    சலவைக்கு சிக்கனமாய் நீரை நீ பயன்படுத்தினாயோ
    பெய்யும் மழைகளும் குறைந்து பூமி வறண்டு போனதே

    உடுத்தும் உடைகளின் அழுக்கை அகற்றிட
    உழைக்கும் இவனுக்கு
    உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் இல்லை
    செய்யும் தொழிலாலே பிரிக்கப்பட்டோம் அன்று
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று
    குரல் கொடுத்த பாரதியை மறந்து விட்டோம்
    இன்றோ ஜாதிகளாலும் கட்சிகளாலும்
    எண்ணற்ற பிளவுகளால்
    எண்ணிக்கையில் நிறைந்து நின்றோம்

    மாசு படிந்த மனதினை சலவை செய்து
    நேசம் நிறைந்த நெஞ்சாய் மாற்றிட
    சீர்திருத்தம் செய்ய வேண்டும்
    நம் சிந்தனையில்
    சிறிய திருத்தம் செய்யவேண்டும்
    புதிய சிந்தனை உருவாகி
    வரும் சந்ததியினர்
    அதை வழிமொழிந்திட வேண்டும்
    இருள் சூழ்ந்த இதயம் அன்று தெளிவு பெரும்
    அதில் புதிய பாரதம் வந்து பிறந்திடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *