(Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

0

முனைவர் ஆ.சந்திரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர், வேலூர்

அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

“தற்காலத் திறனாய்வில் மட்டுமல்ல, பழங்காலத்திலேயே கவிதையானது பல உறுப்புகள் இணைந்த அமைப்பு என்ற சிந்தனை நிலவியிருந்தது. எனவே அரிஸ்டாட்டிலின் கவிதையியலிலும் கவிதையைப் பல தளங்களாலான அமைப்பாக நோக்கும் பாங்கு காணப்படுகிறது” என்று கூறும் இலா.குளோறியா சுந்தரமதி, “முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் உறுப்புகள் என்று 34-இனை (26-8) கூறும் செய்யுளியலின் முதல் நூற்பாவினைச் சான்று காட்டி, பழங்காலத்திலிருந்தே இத்தகைய ஓர் ஆய்வுச் சிந்தனை இருந்துள்ளது”1 எனக் குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற இலக்கியத் திறனாய்வு மேதையான ரெனிவெல்லக் என்பவரும் “ஒரு கலைப் படைப்பு பல அளவைகளாலான ஓர் எளிய தொகுதியன்று. அது பல அடுக்குகளைத் தன்னுட்கொண்ட ஒரு தொகுதியாகும்”2 என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட விளக்கங்கள், கவிதை என்பது பல வகையான உறுப்புகள் அல்லது உட்கூறுகளால் கட்டப்பெற்ற ஒன்று என்பதை உறுதி செய்கின்றன.

பிரெஞ்சு அமைப்பியல் வல்லுநரான தோடரவ், கதை ஆய்வில் பகுப்பாய்வினை மேற்கொண்டு கதையின் இலக்கணத்தை மொழி இலக்கணத்தைப் போன்று உருவாக்கியுள்ளார். அவா் “கதைகளுக்கு ஓர் அடிப்படையான இலக்கணம் ஆழ்ந்த நிலையில் உண்டு. அதிலிருந்து தனிக் கதைகள் உருவாகின்றன”3 என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார். விளாடிமா் பிராப் எனும் உருசிய நாட்டு அறிஞா், வனதேவதைக் கதைகளைப் பகுப்பாய்வு செய்தார். அதன் விளைவாக அக்கதைகள் அனைத்தும் முப்பத்தொரு ‘செயற்கூறுகளினுள் அடங்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவரது பகுப்பாய்வு அமைப்பியல் ஆய்வில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படுகிறது.”4 இவ்வாறு மேற்கில் உருவான அமைப்பியல் ஆய்வு முறையில் ஈடுபட்டவா்களில் உல்ப்கான் கிளமன், தோடராவ், விளாடிமா் பிராப் முதலானவா்கள் குறிப்பிடத்தக்கவராவா்.

கதைகளையும் கவிதைகளையும் அமைப்பியல் நோக்கில் ஆராயும் இத்தகைய புதிய ஆய்வுப் போக்கானது 1980-களில் இருந்து தமிழில் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழவன்5, இலா.குளோறியா சுந்தரமதி6, அ.ஆலிஸ்7, த.விஷ்ணுகுமரன்8 போன்றோர் குறிப்பிடத்தக்கவராவா். இத்தகைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகப் பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப் பாட்டு மற்றும் நெடுநல்வாடையின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

முல்லைத் திணையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த இரு பாடல்களையும் பொருள்தரும் சிறு சிறு கூறுகளாகப் பகுக்க, அவற்றில் மொத்தம் பத்துப் பொருட்கூறுகள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவை  பின்வருமாறு அமைந்துள்ளன.

வ.எண் பொருட்கூறுகள் முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
1 கார்கால வருணனை 1-6 1-2
2 கோவலா்களின் செயல்பாடுகள் 12-15 2-8
3 மாலைக்கால வழிபாடு 6-11 36-44
4 கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள் (நெடுநல்வாடையில் மட்டும்) 45 -71
5 பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை 24-36

 

72-100
6 படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புரத்தின் அமைப்பு வருணனை 37-58 101-114

 

7 பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை 59-66 115-135
8 தலைவியின் துயரம் 22-23,

81-88

136-147,157-167
9 தலைவியைத் தேற்றுதல் 16-21 148-155
10 வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை)

 

67-80,

89-103

168-188

 

இவற்றில் “கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்ற கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகளும் இரு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொருட்கூறுகள் 5, 6, 7 ஆகியன இரு பாடல்களிலும் அமைப்பு நிலையில் ஒத்துள்ளன. ஆனால், கூறும் இடங்கள் மட்டும் வேறுபட்டு அமைந்துள்ளன. அதாவது, முல்லைப் பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. இதைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். இவ்வாறே முல்லைப் பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புகளுக்கு, நெடுநல்வாடையின் அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றைப் பதிலிகளாகக் கொள்ளலாம். இக்கூறுகள் அமைந்துள்ள முறைகளைப் பற்றி இனிச் சுருக்கமாகக் காண்போம்.

கார்கால வருணனை

“காரும் மாலையும் முல்லை” (தொ.பொ.அகம்.952)

என்று முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதையும் சிறுபொழுதையும் தொல்காப்பியம் கூறுகிறது. காரும் மாலையும் முல்லைக்கு  உரியனவாகக் கூறக் காரணம் “பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுவது முல்லைப் பொருளாம். அம்முல்லைக்குரிய காலம் கார்காலம்” என்று விளக்கமளித்துள்ளார் நச்சினார்க்கினியா். இத்தகைய கார்காலத்தில் பெய்த பெரும் மழையைப் பற்றி இரு பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பொருட்கூறு, இரு பாடல்களிலும் முதல் ஆறு அடிகளுக்குள் அமைந்துள்ளது.

“அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கர வடிவமும், வலம்புரி சங்கின் வடிவமும் ஆகிய குறிகளைக் கொண்ட கைகளையுடையவனும் திருமகளைத் தன் வலப்பக்க மார்பில் தங்கச் செய்தவனும் மாவலி வார்த்த நீர் தன்கையில் நிறைந்து வழிந்த உடனே விண்ணிடத்தே நிமிர்ந்து நின்ற நெடியோனும் ஆகிய திருமால் போல், பேரொலி செய்கின்றதும் குளிர்ச்சி உடையதுமாகிய கடலின் நீரைப் பருகி, வலப்பக்கமாக வானத்தே எழுந்து, மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, உலகத்தை வளைத்தெழுந்த விரைந்து செல்லுதலையுடைய முகில் பெருமழை பெய்த சிறுபொழுதாகிய இழிந்த மாலைக் காலம் (1-6)” என்று முல்லைப் பாட்டில் கார்கால வருணனை உவமையுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

நெடுநல்வாடையில், “உலகம் குளிரும்படி பருவந்தோறும் பொய்யாது மழை பொழிகின்ற முகில்கள் திரண்டு எழுந்து அவை படிந்து கிடந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து மழையைப் பொழிந்தன (நெடு.1-2)” என்று கார்காலத்தில் பெய்த புது மழையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பாட்டில் கார்கால மழை மேகத்தின் செயலினைத் திருமாலின் வாமன அவதார புராண நிகழ்ச்சியுடன் உவமித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் கார்காலம் பற்றிக் ‘கார் காலத்தில் பெய்த புதுப்பெயல்’ என்று இரண்டே அடிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

கோவலா்களின் செயல்பாடுகள்

கார்காலத்தில் பெய்த பெருமழையால் கோவலர்கள் அடைந்த துன்பங்கள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன. முல்லைப் பாட்டில் “இடையா் குலமகள் குளிரால் நடுங்கிய தன் தோள்களின் மேல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் (முல்.13-15)” என்று ஒரே அடியில் கோவலரின் செயல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் “கோவலர்கள் பெருமழையின் காரணமாக அந்த நிலத்தை விட்டு மேடான நிலத்தை நோக்கித் தம்மிடம் உள்ள பசு, எருமை, ஆடு ஆகியவற்றுடன் சென்றனா். அவா்களின் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. அக்குளிரின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இடையா்கள் பலரும் ஒன்றுகூடி நெருங்கியிருந்ததுடன், நெருப்பினைக் கொண்டு குளிரைப் போக்கிக்கொள்ள முயன்றனா். ஆயினும் குளிர்மிகுதியால் அவா்களுடைய பற்கள் பறை கொட்டின (முல்.2-8)” என்று கோவலா்களின் துயரங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ‘கோவலா்கள் அடைந்த துயரங்கள்’ என்ற இந்தப் பொருட்கூறு, முல்லைப் பாட்டைவிட நெடுநல்வாடையில் சற்று விவரித்துக் கூறப்பட்டுள்ளது.

மாலைக்கால வழிபாடு

முல்லை நில மக்கள் சிறுபொழுதாகிய மாலைக் காலத்தில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுதல், நெல்லுடன் பலவித மலா்களைத் தூவி இறைவனை வழிபடுதல் ஆகியவற்றினை மேற்கொள்வா். அத்தகைய பெருமழை பொழிந்த அம்மாலை வேளையில் மகளிர் வழிபாடு செய்த முறையைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

“பெருமழை பெய்த சிறு பொழுதாகிய இழிந்த மாலைக் காலத்தில், பகைவா்கள் எளிதில் புகுவதற்கு இயலாத அரிய காவல் அமைந்த பழமையான ஊரில், யாழ் போன்ற இசையுடன் வண்டினங்கள் ஆரவாரஞ்செய்ய, நாழி என்னும் அளவுக் கருவியில் கொண்ட நெல்லுடன் நல்ல மணம் கமழும் மலா்ந்த புதிய மலா்களைச் சிதறி, தெய்வத்தைக் கையால் தொழுது வயது முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்பா் (முல்.6-11)” என்று முல்லைப் பாட்டில் மாலைக் காலத்தில் நடக்கும் வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறே நெடுநல்வாடையிலும் மாலைக் காலத்தில் நடந்த வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “வெண்மை நிறம் பொருந்திய சங்கு வளையல் அழுந்திய முன்கையையும் மூங்கில் போன்ற தோளினையும் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இனிய சாயலையும் உடையவா் ஊர் மக்கள். அவா்கள் முத்துப் போன்ற பொலிவினையுடைய மகரக் குழைகளைக் காதில் அணிந்துள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் உயா்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ந்த கண்களைப் பெற்றுள்ளனா். இளம்பெண்டிர் பூந்தட்டிலே இட்டுவைத்த மலரும் நிலையிலிருக்கும் பிச்சியின் அரும்புகள் பசிய நிறமுள்ள தம் காம்புகள் வரை மென்மையாக மலா்ந்து மணம் பரப்ப, மாலைப் பொழுது வந்தது எனத் திரிகளை இரும்பு விளக்கில் இட்டனா். நெய்வார்த்துக் கொளுத்தினா். நெல்லையும் மலா்களையும் தூவித் தம் இல்லத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கினா் (நெடு.36-44)”.

இவ்வாறு இரு பாடல்களிலும் மாலை நேரத்தில் மகளிர் விளக்கேற்றுதல், நாழிகை அளவுடைய கருவியில் நெல்லினையும் மணம் கமழும் பலவித மலா்களையும் தூவி இறைவனை வணங்குதல் ஆகியன ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளன.

எனினும் முல்லைப் பாட்டில் மாலைக் கால வழிபாடும் அதனைத் தொடர்ந்து கோவலர்களின் செயல்பாடுகளும், நெடுநல்வாடையில் கோவலர்களின் செயல்பாடுகளும் அதனைத் தொடர்ந்து மாலைக்கால வழிபாடும் என்ற முறையில் இந்தப் பொருட்கூறுகள் (மாலைக்கால வழிபாடு, கோவலர்களின் செயல்பாடுகள்) முன்பின் / பின்முன் என இடம் மாறி அமைந்துள்ளன. மற்றபடி இந்த இரு பொருட்கூறுகளும் ஒரே தன்மையில் அமைந்துள்ளன.

தலைவியின் துயரம்

போரின்கண் பிரிந்து சென்ற தலைவன், தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும், அவன் வாராமையால் அவனை நினைத்து நீங்காத துயா் அடைகிறாள் தலைவி. அவ்வாறு துயருற்று வருந்தும் தலைவியின் துன்பத்தைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

“தலைவி, தோழிகள் ஆறுதல் சொல்லியும் மனம் தளா்ந்து பூப்போன்ற கண்களில் முத்துப் போன்ற துளிகள் சிந்த (முல்.22-23) துன்பமுற்று தன் நெஞ்சை அவன்பால் போக்கினாள். தன் மனக் கட்டுப்பாட்டினை இழந்து தனிமையில் வருந்தினாள். பின்னா் இங்ஙனம் வருந்துதல் தன் தலைவன் சொல்லைத் தவறியதாகும் என்றும், பிரிந்தாலன்றி அரசியல் நிகழாது போலும் என்றும் தன்னைத் தேற்றிக்கொண்டாள். கழலும் வளையல்களைத் திருத்திக் கொண்டாள். மீண்டும் மயங்கினாள். பெருமூச்சு விட்டாள். அம்பு தைத்த மயில்போல் நடுங்கினாள். மீண்டும் அணிகலன்கள் நெகிழப் பெற்றாள். பாவை விளக்கு ஏந்தி நின்ற தகளியில் பெரியதாய் விளக்குச் சுடா் நின்று எரிந்துகொண்டிருந்தது. தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயா்ந்து விளங்கிய ஏழடுக்கு மாளிகையில் கூடல் வாய்களினின்று சொரியும் பெரிய வாய்த்திரண்ட மழைநீர் அருவி போல் விழ, அதன் இனிய பல இசையாகிய ஓசையைக் கூர்ந்து செவி கொடுத்துக் கேட்டுத் தன் மனக்கருத்தை வேறொன்றில் செலுத்திக் கிடந்தாள் (முல்.81-88)” என்று தலைவியின் துயரக் காட்சியை விவரிக்கிறது முல்லைப் பாட்டு.

இவ்வாறே நெடுநல்வாடையும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரை விவரிக்கின்றது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.  “முத்தால் செய்த கச்சு சுமந்த பருத்த மார்பிடத்தே ஒப்பனை செய்யாமல் நெடிய மங்கல நாண் ஒன்று மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது. தன் கணவனைப் பிரிந்தமையால் அழகிய நெற்றியை உடைய அரசியார் நெய்ப்புத் தன்மை வற்றிப் போனாள். மிக்க ஒளி செய்யும் காதணியாகிய மகரக் குழையை அகற்றிவிட்டதனால் அக்குழை அழுத்தியதால் ஏற்பட்ட வடு, காதினில் நன்றாகத் தெரிந்தது. பொன்னால் செய்த தொடி கிடந்து அழுத்திய தழும்பு இருந்த அவள் முன்கையில் இப்போது வலம்புரி சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளை ஒன்று மட்டுமே இருந்தது. வாளை மீனின் திறந்த வாயை ஒப்ப முடக்கத்தை உண்டாக்கிச் சிவந்த விரலிடத்தே செந்நிறமான பூத்தொழிலை உடைய மோதிரத்தை அணிந்திருந்தாள். அவள் தோற்றம் வடிவம் மட்டும் வரைந்த புனையா ஓவியம் போல் இருந்தது (நெடு.136-147)” அவள் ஞாயிறுடன் மிகவும் மாறுபட்ட திங்களின் ஓவியத்துடன் நிலைத்துள்ள ரோகிணியின் ஓவியத்தை உற்று நோக்கி, ‘யாமும் இவள் போன்று காதலரோடு பிரிவின்றி உடனுறைய பெற்றிலமே’ என்று நினைத்து கண்களிலே நீர் பெருக்கெடுக்க வருத்தமுற்று காணப்பட்டாள் (நெடு.162-165)”.

முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்து தலைவியுற்ற துயரம், அம்பு தைத்த மயிலின் நடுக்கத்தை ஒத்தது என்கிறது. ஆனால், நெடுநல்வாடையிலோ தலைவியின் துயரம் புனையாத ஓவியம் போன்றது என்கிறது. அத்துடன், தலைவனின் வருகைக்காகக் காத்திருந்த தலைவியின் நிலையை இரு பாடல்களும் சிறந்த உவமைகளுடன் வருணித்துள்ளன. முல்லைப்பாட்டில் தலைவனின் குதிரைச் சத்தத்தை எதிர்நோக்கியவளுக்கு அருவியின் ஒலியே மிஞ்சியது என்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சந்திரன், உரோகிணி இணைந்துள்ள ஓவியமே எதிர்ப்பட்டது என்று கூறுகிறது. அதாவது, இருவரின் துன்பத்தையும் இந்த நிகழ்வுகள் மேலும் அதிகப்படுத்தின என்பதையே இவை  காட்டுகின்றன.

தலைவியைத் தேற்றுதல்

தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியைத் தேற்றுவதான பொருட்கூறு இரு பாடல்களிலும் அமைந்துள்ளது.

தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவனுடைய வருகையைக் காணாமல் தலைவி மிகவும் வருத்தமடைகிறாள். தலைவியின் அந்த வருத்தத்தைப் போக்கத் தோழிகள், “இளங்கன்று தாய் பசுவைப் பிரிந்து வருந்திக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட முதுமகள் அவற்றினை நோக்கி உங்கள் தாயார் விரைவில் வந்துவிடுவா் என்றாள். அத்தகைய நன்மொழியை நாங்கள் கேட்டோம். அதனால் நம் தலைவருடைய வாய்மொழி என்றும் தவறாது. எனவே தலைவா் பகைவா்களை வென்று விரைவில் திரும்பிவிடுவார். நீ உன் துன்பத்தை நீக்குவாயாக! (முல்.16-21)” என்று ஆறுதல் கூறுவதாக முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறே நெடுநல்வாடையிலும்,

“சென்முகச் செவிலியா் கைமிகக் குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவா் இன்துணையோர் என” (நெடு.148-156)

ஆறுதல் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, முல்லைப் பாட்டில் ‘நற்சகுணம் ஏற்பட்டதால் தலைவன் விரைவில் வருவான்’ என்று ஆறுதல் மொழி கூறுவதாகவும் ஆனால், நெடுநல்வாடையில் ‘குறியவும் நெடியவும் பல கதைகள் கூறித் தலைவன் விரைவில் வருவான்’ எனத் தேற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளன. அத்துடன், முல்லைப்பாட்டின் தலைவியைத் தோழிகள் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவியைச் செவிலித்தாய் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறும் செய்திகள் மற்றும் கூறுபவா் வேறுபட்டிருப்பினும், நோக்கம் தலைவியின் மனத்தில் உள்ள துயரத்தைப் போக்குவதேயாகும். ஆக, அந்த அம்சம் இரு பாடல்களில் ஒரே தன்மையில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

வேந்தனின் செயல்பாடுகள்

தலைவி, தலைவனைப் பிரிந்து வாடும் அதே வேளையில் போர்முனையில் இருக்கும் தலைவன் போரில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளான். இவ்வாறு போர்முனையில் இருக்கும் வேந்தனின் செயல்பாடுகள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

“தலைவன் பகைவா்களுடன் நடைபெற்ற போரில் புண்பட்ட வீரா்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பற்றி நினைத்து வருத்தமுற்றும் மறுநாள் நடைபெறப் போகும் போரைக் குறித்துக் கவலையுற்றும் உறங்காமல் கண்விழித்திருந்தான். மறுநாள் போரில் பகைவா்களை வென்ற மகிழ்ச்சியில் இரவு நன்றாக உறங்கினான்” (முல்.67-74) என்றும் “பகைவரை வென்று அவா்களுடைய நிலங்களைக் கைக்கொண்டு, திரண்ட பெரும் படையொடு, வெற்றிக் கொடியை உயா்த்தித் தன்நாடு நோக்கித் திரும்பினான். அவ்வாறு அவன் திரும்பும்போது கொம்புகள் ஊதப்பட்டன; சங்குகள் முழங்கத் தொடங்கின; வழியில் நுண் மணலிடத்து வளரும் நெருங்கிய இலைகளை உடைய காயாச் செடிகள் அஞ்சனம் போல் மலர்ந்தன; தளிரினையும் கொத்தினையும் உடைய கொன்றை மரங்கள் பொன் போன்ற இதழ்களைச் சொரிந்தன; வெண்காந்தளின் குவிந்த அரும்புகள் அங்கை போல் விரிந்தன; தோன்றிச் செடிகள் இரத்தம் போன்ற நிறமுடைய இதழ்களை மலா்த்தின; செழுமையான முல்லை நிலத்தில் விளைந்த கதிர்களை உடைய வரகு பயிரிடத்தே முருக்கிய கொம்புகளையுடைய கலைமான்களுடன் இளமையுடைய மான்களும் துள்ளி விளையாடின; இனிமேலும் பெய்வதற்காகச் செல்லும் வெண்மேகங்கள் மழை பொழிவதற்குரிய கார்காலம் தொடங்கும் ஆவணித் திங்களின் தொடக்கத்தில் முதிரும் காய்களையும், வள்ளிக் கிழங்கின் கொடிகளையும் கொண்ட காடு பின்னடைய விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்தும் செல்லுகையுடையவராய் தலைவா் வந்தார். போர்த்தொழிலில் சிறந்த தமது திறம் மேலும் சிறந்து விளங்கும் நெடிய தோலால் பூட்டப்பட்டிருந்த அவருடைய குதிரைகள் ஆரவாரித்தன (முல்.89-103)” என்றும் முல்லைப் பாட்டில் தலைவனின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நெடுநல்வாடையில் சுட்டப்படும் மன்னன், பாசறையில் அந்நாள் போரில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருந்துவதும், புண்பட்ட வீரா்களுக்கு ஆறுதல் கூறுவதுமான செயல்களைச் செய்துகொண்டிருப்பதாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “ஒளி விளங்கும் முகபடாத்தொடு பொலிவு பெற்று, போர்த்தொழிலைப் பயின்ற யானைகளை முன்னா் கொன்று பின்னா் பகைவருடைய ஒளி பொருந்திய வாள் பிளத்தலால், சீரிய புண்பட்டவராகிய வீரா்களின் புண்ணைப் பார்த்து ஆறுதல் கூறும் பொருட்டுத் தன் இருக்கையிலிருந்து புறத்தே புறப்பட்டான் அரசன். வட திசைக்கண்ணின்று குளிர்ந்த காற்று வீசும் தொறும் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்து ஒளிவிடும் பெரிய சுடா் நல்ல பல விளக்குகளில் அணையாது எரிந்து கொண்டிருந்தது. வேப்பந்தாரை முனையில் கட்டின வலிமை வாய்ந்த காம்பினையுடைய வேலொடு முன்னா்ச் செல்கின்ற படைத் தலைவன், புண்பட்ட மறவரை முறை முறையாகக் காட்டிச் சென்றான். மணிகளைத் தம்மேல் இடப்பட்டனவும், பெரிய கால்களை உடையனவுமான யானைகளோடு, சேனம் நீங்காதனவும் பாய்ந்து செல்லும் இயல்பினையுடைய குதிரைகளும் நிறைந்த இடங்களில் சென்ற அவன்மீது அவை சேற்றுத் துளிகளைச் சிதறின. தன் இடத்தோளினின்றும் நழுவி விழுந்த மேலாடையை இடப்பக்கத்தே ஒரு கையால் அணைத்துக்கொண்டு வேலேந்தி முன்னா் செல்லும் காளையின் தோளிலே வலக்கையை வைத்துக்கொண்டு விழுப்புண் பட்ட வீரரைப் பார்த்துத் தன் செய்ந்நன்றியறிதலும் அன்பும் தோன்ற, முகத்தில் ஆர்வம் தோன்றுமாறு நோக்கி ஆறுதல் மொழிகளைக் கூறிச் சென்றுகொண்டிருந்தான். அவன் முத்து மாலை கட்டிய வெண்கொற்றக் குடை ‘தவ்’ என்னும் ஒலி பட்டசைந்து மழைத் துளியைத் தன்மீது விழாமல் மறைத்து நிற்க, நடுயாமத்தில் பள்ளி கொள்ளானாய்ச் சில மறவா்களே தன்னைச் சூழ்ந்து வரப் பாசறையின்கண் திரிந்து கொண்டிருந்தான் (நெடு.168-188)”.

முல்லைப் பாட்டில் தலைவன் இரவில் உறக்கம் கொள்ளாமல் அடுத்த நாள் போருக்கான செயல்பாடுகள் பற்றிச் சிந்தித்தல், புண்பட்ட வீரா்கள், யானைகள், குதிரைகள் பற்றி நினைத்து வருந்துதல் ஆகியவற்றினைக் கூறி, அதன் பின்னா் மறுநாள் போரில் பகைவா்களை வெற்றி பெறல், மிக்க ஆரவாரத்துடன் தன் நாட்டிற்குத் திரும்புதல் ஆகியனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  ஆனால், நெடுநல்வாடையில் அரசன் இரவு நேரத்தில் புண்பட்ட வீரா்களுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று ஆறுதல் கூறுவதுடன் பாடல் நிறைவடைகிறது.

அதாவது, ‘தலைவனின் செயல்பாடுகள்’ என்னும் இந்தப் பொருட்கூறு முல்லைப் பாட்டில் விரிவாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

கூறுகள் இடம் மாறி அமைந்தவை

முல்லைப்பாட்டு தலைவியின் துயரினைப் பற்றிக் குறைவாகக் கூறி, தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஆனால், நெடுநல்வாடை தலைவியின் துயரினைப் பற்றி விரிவாகக் கூறித் தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றிச் சுருக்கமாகவே விவரிக்கின்றது. நெடுநல்வாடையில் கார்கால நிகழ்வுகளைத் தொடா்ந்து ஊரின் வளம், பெண்களின் மாலைக்கால வழிபாடு, கூதிர்க் காலத்தில் நகரில் நடைபெறும் பிற நிகழ்வுகள், அரண்மனையின் தோற்றம்,  அந்தப்புர அமைப்பு, கட்டிலின் அமைப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறித் தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப் பாட்டில் கார்கால நிகழ்வுகள், கோவலா் செயல்கள் ஆகியவற்றினைத் தொடா்ந்து காட்டிலிருக்கும் தலைவனின் போர்ப் பாசறை, அதன் அமைப்பு, மகளிர் விளக்கேற்றுதல் எனப் போர்ப் பாசறை நிகழ்வுகள் பற்றிக் கூறிய பின்னர், தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது அதாவது, இடம் மட்டுமே இங்கு மாற்றமடைகிறது. ஆனால் கூறுகின்ற பொருள், கூறும் முறைமை ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

முல்லைப்பாட்டில் கூறப்பட்டுள்ள பாசறையின் அமைப்பு (24-36), படைவீட்டின் அமைப்பு (37-44), பள்ளியறையின் அமைப்பு (59-66) ஆகியவற்றின் இடத்தில், நெடுநல்வாடையிலுள்ள அரண்மனை அமைப்பு (72-100), அந்தப்புரத்தின் அமைப்பு (106-114), கட்டிலின் அமைப்பு (115-135) ஆகிய வருணனைகள் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவன் இருப்பிடம் தலைவியின் இருப்பிட வருணனைகளாக இவை மாறி மாறி அமைந்துள்ளன. இந்தப் பொருட்கூறுகள் அமைந்துள்ள முறையினைப் பற்றி இனிக் காண்போம்.

பாசறை அமைப்பும் – அரண்மனை அமைப்பும்

மகளிரின் மாலைக் கால வழிபாடுகள் பற்றிக் கூறிய பின்னா் முல்லைப் பாட்டு, பாசறை அமைப்பு (24-36) பற்றிக் கூறுகின்றது. ஆனால் நெடுநல்வாடை, அரசி வீற்றிருக்கும் அரண்மனையின் அமைப்பு பற்றிக் (72-100) கூறுகின்றது.  அதாவது, முல்லைப் பாட்டு, போர் மீது சென்ற தலைவன் போர்க்களத்தில் அமைத்த படைவீட்டின் அமைப்பைப் பற்றிக் கூற, நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் அரண்மனையின் எழில்மிகு தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றது.

“காட்டாறு சூழ்ந்த அகன்ற பெரிய காட்டினிடத்தே மணமிக்க பிடவ மலா்களுடன், பசுமையான தூறுகளையும் வெட்டினா். பகைவா் நாட்டிற்குக் காவலாக அமைந்த வேட்டுவா்களின் சிறு வயல்களையுடைய அரண்களையும் அழித்தனா். அக்காட்டில் உள்ள முட்களால் மதில் போன்ற வேலியை உண்டாக்கினா். அதனைக் காவலாக வளைத்து அமைக்கப்பட்டது, மிக்க நீர் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறை. அப்பாசறையின் அருகில் இருந்த யானைகள், உணவு உண்ணுதலை மறுத்தன. அவற்றினைப் பாகா்கள் உணவு உண்ணுமாறு செய்தனா் (முல்.24-36)” என்று பாசறை அமைந்துள்ள அழகைப் பற்றி முல்லைப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே நெடுநல்வாடையிலும் மதிலின் அமைப்பு, வாயிலின் தோற்றம், மற்றும் அரண்மனை வாயிலில் குதிரைகள், மயில்கள் போன்றன இருந்த தன்மைகள் ஆகியன விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு. “எல்லாத் திசைகளிலும் தன் கதிர்களைப் பரப்பி அகன்ற ஞாயிறு மண்டிலம், நிலத்தே இரண்டிடங்களில் நாட்டப்பெற்ற இரு கோலின் நிழல் எப்பக்கமும் விழாதபடி அக்கோலிலேயே பதினைந்து நாழிகையில் அடங்கி நிற்றலை நூலறி புலவா் நுட்பமாய் ஆராய்ந்து பார்த்தனா். அதன்பின் அங்ஙனம் நின்ற நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துவோர் முதலிய திசைகளைக் குறித்துக் கொண்டனா். பின்னா் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி, முடிமன்னா் வாழ்வதற்கு ஏற்ப, மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பிறவற்றையும் கூறுபடுத்தி அமைத்தனா். இவை அனைத்தும் உள்ளே இருக்குமாறு வளைத்து உயா்ந்து நிற்கும்படி மதிலினை அமைத்தனா். பெரிய இரும்பு ஆணிகளுடன் பட்டங்களும் கட்டிச் செவ்வரக்குப் பூசி இரட்டைக் கதவுகளைச் சிறிதும் இடைவெளியின்றி இணைத்து, அழகிய உத்திரத்திலே செருகினா். அதில் மலா்ந்த குவளையை ஒப்ப உருக்களை அமைத்தனா். கைத்தொழில் வல்ல தச்சன் செய்ததால், யாதொரு குறைபாடும் இன்றிப் பொருத்தமுற அந்த வாயில் அமைந்திருந்தது. வெற்றி குறித்து உயா்த்திய கொடியொடு யானைகள் சென்று புகும்படி உயா்ந்தனவும், மலையை வெட்டித் திறந்தார் போன்றனவும் ஆகிய கோபுர வாயில்களைக் கொண்டமைந்தது, அந்த அரண்மனை. அரண்மனையின் வாயிலில் ஆண் கவரிமான்களும் அன்னங்களும் தாவித் திரிந்துகொண்டிருந்தன. குதிரைகள் பந்தியில் நிற்றலையும் புல்லைக் குதட்டுதலையும் வெறுத்துத் தனிமைத் துன்பத்தை வெளிப்படுத்தும் கனைத்தலைச் செய்தன. ஆண் மயில்களைக் கண்ட பெண்மயில்கள் ஆரவாரித்தன. அந்த ஓசை மலையின்கண் இயற்கையில் நிகழும் ஆரவாரம் போலக் கேட்டது” (நெடுநல்-72-100).

முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பினையும் நெடுநல்வாடையில் அரண்மனையின் அமைப்பினையும் பற்றிக் கூறப்பட்டிருப்பினும் அதனை அவை ஒரே தன்மையில் வருணித்துள்ளன. அதாவது, முல்லைப்பாட்டு படைவீட்டின் அமைப்பு வருணனை, அதனைத் தொடா்ந்து அப்படைவீட்டின் முன் யானை இருந்த நிலை, யவனா் செயல் ஆகியன பற்றிக் கூறுகின்றது.  இவ்வாறே நெடுநல்வாடையிலும் அரண்மனையின் அமைப்பு, அரண்மனையின் முன் இருந்த குதிரைகள், மயில்கள் போன்றவற்றினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

படைவீட்டின் அமைப்பு – அந்தப்புர அமைப்பு

முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பும் (37-58), நெடுநல்வாடையில் அந்தப்புர அமைப்பும் (101-114) கூறப்பட்டுள்ளன.

“காவிக்கல்லின் சாயத்தில் தோய்த்து உடுத்திய தவ வேடந்தாங்கிய முக்கோலையுடைய அந்தணர், முக்கோலில் ஆடைகளை இட்டுவைத்தாற் போல் போரில் முதுகு காட்டி ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லினை ஊன்றி அதன் மேல் தூணிகளைத் தொங்கவிட்டனா். பூவேலைப்பாடமைந்த ஈட்டிகளை நட்டு, கேடயங்களை வரிசையாகப் பிணைத்துப் பல்வேறு படைகளின் இருக்கைகளை அமைத்து அதன் நடுவே அரசனுக்கு இவற்றின் வேறான நெடிய குத்துக்கோல்களுடன் பல நிறத்தால் கூறுபட்ட திரைத்துணிகளை வளைத்து அரசன் தங்கும் படைவீடு அமைத்தனா் (முல்.37-44). அங்குக் குறிய தொடியை அணிந்த முன்கையினையும், கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகினையும், திண்ணிய பிடியினையுடைய வாளை வரிந்து கட்டின கச்சிலே அணிந்தவருமாகிய மகளிர் இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கும் தன்மையில் பாவை விளக்குகளில் நெய்யை வேண்டும் அளவு வார்த்து விளக்குகளைச் சுடா்விட்டு எரியுமாறு செய்து கொண்டிருந்தனா் (முல்.45-49). நள்ளிரவில் புனலிக்கொடி படா்ந்த சிறுதூறுகள் தூறலோடு காற்றில் அசைந்தாற்போல் உடலை வெண்சட்டையால் மூடிய நல்லொழுக்க மிக்க காவலா்கள் உறக்கத்தால் ஆடி அசைந்து கொண்டிருந்தனா். நாழிகையை அளந்து அறியும் பொய் பேசுதல் அறியா நாழிகைக் கணக்கர் நாழிகை வட்டிலிலே நாழிகை இத்துணை என்று கூறிக்கொண்டிருந்தனா் (முல்.50-58)” என்று முல்லைப்பாட்டில் படை வீட்டின் அமைப்பு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

“யவனா் அழகு பெறப் பண்ணின வேலைப்பாடு அமைந்த மாட்சிமை அமைந்த பாவை, தன் கையில் ஏந்தியிருக்கின்ற அழகிய அகல் நிறையும்படி பெரிய திரியை இட்டனா். பின்னா் அதில் நெய்யை வார்த்தனா். நெய்வற்றி ஒளிமங்கும் காலத்துத் தூண்டுதலும் நெய்வார்த்தலும் செய்து எல்லா இடங்களிலும் இருள் நீங்கச் செய்தனா். பெருமை மிக்க பாண்டியனை அல்லாது பிற ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடைய அந்தப்புரத்தின்கண், மலைகளின் மீது தோன்றும் வானவில் போன்று காட்சியளிக்கும் கொடிகளை நட்டிருந்தனா். வௌ்ளியைப் போன்று விளங்கும் சுண்ணச்சாந்து அரண்மனைக்குப் பூசப்பட்டிருந்தது. அரண்மனையினுள் நீலமணியைப் போன்று கருமையினையும், திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்கள் பலவற்றினை அமைத்திருந்தனா். பெரிய சுவரில் பல வகையான பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது (நெடு.101-114)” என்று நெடுநல்வாடையில் அரசியார் வீற்றிருக்கும் அந்தப்புரம் அமைந்துள்ள முறை பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முல்லைப்பாட்டில் வில், அம்பு, ஈட்டி, கேடயம் முதலிய படைக் கருவிகளைக் கொண்டு படைவீடு அமைக்கப்பட்டுள்ளதையும், அழகிய அந்தப் படைவீட்டில் அரசன் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறையின் சிறப்பும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் சித்தரிக்கப்படும் அந்தப்புரம், யவனா்களால் செய்யப்பட்டது. அது அரசனை அன்றி வேறு ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடையது. அது காண்பவா்க்கு மலைகளோ எனத் தோன்றும் உயா்ச்சியுடையது. அதில் பல நிற சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கருபகிரகம் அமைந்துள்ளது.

அத்துடன், இரு பாடல்களிலும் இரவு நேரத்தில் மகளிர் விளக்கேற்றும் முறைமையினைப் பற்றி ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விளக்கேற்றும் இடம் மட்டும் மாறுபடுகிறது. அதாவது, முல்லைப் பாட்டில் தலைவன் வீற்றிருக்கும் பாசறையில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் அரண்மனையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புரத்தில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் படைவீட்டின் அமைப்பும், நெடுநல்வாடையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புர அமைப்பும் ஒரே தன்மையில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாலும், முல்லைப்பாட்டில் வருணனை அளவு சற்று நீண்டதாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைந்ததாகவும் அமைந்துள்ளது.

பள்ளியறை அமைப்பு – கட்டிலின் அமைப்பு

முல்லைப் பாட்டு அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு (59-66) பற்றியும் நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் பள்ளியறையைப் (கட்டில்) பற்றியும் (115-135)  கூறுகின்றன.

“வலிமை மிக்க உடம்பினையுடைய யவனா்களால் புலிச் சங்கிலி விடப்பட்ட அழகமைந்த இல்லம் அமைக்கப்பட்டது. அது அழகிய மாணிக்க விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றாலே திரையை வளைத்து இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உடம்பின் உரைக்கும் உரையா நாவினை உடைய மிலேச்சா் காத்திருந்தனா் (59-66)” என்று முல்லைப்பாட்டில் அரசன் தங்கியிருக்கும் பள்ளியறை அமைந்துள்ள அழகைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.

“நாற்பது ஆண்டுகள் வயது நிரம்பிய போரில் விழுப்புண் பட்டு இறந்த அழகிய வடிவத்தையுடைய களிற்று யானையின் தாமே விழுந்த தந்தங்களைச் சீறும் செம்மையும் படச்செதுக்கி கைத்தொழில் வல்ல தச்சன் கூரிய உளியால் அதில் இலைத் தொழில் வேலைப்பாடு அமையச் செய்து பொருந்தியதும் சூல் முற்றிய மகளிர் தம்பால் கட்டியதில் பருத்த மார்பகங்களை ஒப்ப புடைதிரண்ட குடத்தை உடையது பாண்டில் என்னும் பெயா் பெற்ற அந்தக் கச்சுக் கட்டில். அது தன்னிடத்தே காலுறுப்பாகிய குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளியின் முதல் போன்ற உறுப்பினை உடையது. முத்து மாலைகளைக் கட்டிலோடு ஒழுங்குற மெல்லிய நூல் கொண்டு அழகுறும்படித் தொடுத்து தொங்கவிடப்பட்டிருந்தது. புலியினது வரிகளைத் தன்னிடத்தே குத்துதல் தொழிலால் அமைக்கப்பட்ட தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையின் மேலே சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்மேல் பலவிதப் பூக்களின் உருவங்கள் நிரம்பியுள்ளன. காதல் துணைகளாய்த் தம்முட் புணா்ந்த அன்னப் பறவைகளின் வௌ்ளிய மயிரை இணைத்து இயற்றிய மெத்தையை மேன்மையுண்டாகுமாறு விரித்து, அதன் மேல் தலையணை விரிப்பினை மணமிக்க மலரிதழ்களால் மணம் ஊட்டப்பெற்று பின்னா் படுக்கையின் மேல் விரித்திருந்தனா் (115-135)” என்று நெடுநல்வாடையில் பள்ளியறையின்கண் அமைந்துள்ள தலைவியின் கட்டில் அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு மற்றும் அங்குக் காவல் நின்ற யவனா் (ஊமை மிலேச்சர்) பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆனால், நெடுநல்வாடையில் அரசி வீற்றிருக்கும் பள்ளியறையிலுள்ள கட்டிலின் அழகு மட்டும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கார்கால மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள்

கார்காலத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டில் இந்தப் பொருட்கூறு பற்றிக் கூறப்படவில்லை. அதாவது, முல்லைப் பாட்டு மாலைக் காலத்தினை மட்டும் வருணிக்க, நெடுநல்வாடை மாலைக்கால வருணனையுடன் கூதிர் காலத்தினையும் சோ்த்து வருணித்துள்ளது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.

“மாமேய மறப்ப மந்தி கூற
பறவை படிவன வீழ கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர் பானாள்” (9-12)

என்று கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகள் மற்றும் பறவைகள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தன.  “மழைத்துளிகள் பட்டதால் முசுண்டையும், பீர்க்கம்பூவும் மலா்ந்தன. சேற்றில் நாரைகளும், கொக்குகளும் திரிந்துகொண்டிருந்தன. மிகுந்த மழையால் பாக்கு மரத்தின் பசுமையான காய்கள் இன்சுவை தோன்ற முற்றின. மரங்களிலுள்ள மலா்களிலும், இலைகளிலும் மழை நீர்த்துளிகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. உயா்ந்த மாடங்களில் விளங்கும் வளமான பழைய ஊரின்கண் உள்ள அகன்ற தெருக்களில், முழுவலிமாக்கள் கள்ளுண்ட மயக்கத்தில் தம்மீது விழும் மழைத்துளியையும் பொருட்படுத்தாமல் திரிந்துகொண்டிருந்தனா். வீட்டிலுள்ள கொடுங்கைகளில் தங்கி வாழும் செந்நிறக் கால்களைக் கொண்ட ஆண்புறா, தன்னுடைய பெண்புறாவுடன் சுற்றித் திரியாமல் மயங்கிச் செயலற்று நின்றன. அவற்றின் கால்கள் கடுத்தபோது சோர்வு போக்கிக்கொள்ள, கால்களை மாற்றி மாற்றி நின்றன. வீடுகளிலுள்ள மணங்கமழும் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை அரைப்பதற்கு உதவும் அம்மியும், வடநாட்டவா் தந்த வெண்மை நிறங்கொண்ட வட்டவடிவக் கல்லும் தென்னகத்துச் சந்தனம் ஆகியவையும் பயன்படாமல் இருந்தன. இளவேனில் காலத்தில் தென்றல் வருவதற்கென அமைக்கப்பட்டுக் கிடந்த பலகணிகள், திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன. ஆடல்தொழிலைச் செய்யும் விறலியா் தம்பாட்டினை யாழில் இசைப்பதற்கு நரம்பைத் தெரித்துப் பார்க்க, அவை குளிரால் ஓசை வெளிப்படுத்தாது நிலை திரிந்து இருந்தன. தம் கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமாறு, பருவ கால மழை மிகுதியாகப் பெய்து, தன் வருகையைக் கூதிர்க் காலம் நிலையாக உணா்த்தியது” (13 – 24).

முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை முடிபுகள்

இரு பாடல்களையும் பகுத்து ஆராய்ந்ததில் கார்கால வருணனை, கோவலா்களின் செயல்பாடுகள், மாலைக் கால வழிபாடு, பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை, படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புர அமைப்பு வருணனை, பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை, தலைவியின் துயரம், தலைவியைத் தேற்றுதல், வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை) என்ற 9 பொதுவான பொருட்கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

‘கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்’ என்ற ஒரு பொருட்கூறு, நெடுநல்வாடையில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருட்கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகள் இரு பாடல்களிலும் பொதுவாய் அமைந்துள்ளன.

மக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாடைக் காற்றினால் (பனி) துன்புற்றிருந்த நிலை பற்றிய செய்தியைத் (கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்) தலைவியது மனவேதனையை விளக்க புலவா் ‘கையாண்ட உத்தியாகக்’ கொள்ளலாம்.  அப்படிக் கொள்ளும் நிலையில் இந்தப் பொருட்கூறு கோவலர்களின் செயல்பாடுகளின் நீட்சியாக அமைகிறது. பாடல்களின் அளவு 103, 188 என அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ள, இவ்வாறு கொள்வது சரி என்றே படுகின்றது.

முல்லைப்பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லைப்பாட்டு காட்டில் தங்கியிருக்கும் தலைவனின் பாசறையினைப் பற்றிக் கூற, நெடுநல்வாடையில் தலைவி தங்கியிருக்கும் அரண்மனையினைப் பற்றி வருணித்துள்ளது. அதாவது இங்கு இடம் மட்டுமே மாறி அமைந்துள்ளது. எனவே இதனைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். அவ்வாறே முல்லைப்பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புக்கு, நெடுநல்வாடையில் உள்ள அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றையும் பதிலிகளாகக் கொள்ளலாம்.

நெடுநல்வாடையில் தலைவியின் வருணனை நீண்டும், முல்லைப்பாட்டில் தலைவனின் வருணனை நீண்டும் அமைந்துள்ளன.

ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க இரு பாடல்களும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள் எனத் தெளிவாக அறிய முடிகின்றது.

சான்றெண் விளக்கக் குறிப்புகள்

  1. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.24.
  2. மேற்படி, ப.12
  3. மேற்படி, பக்.11-14
  4. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
  5. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி.
  6. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
  7. ஆலிஸ்,அ., கட்டமைப்பு ஆய்வில் அகநானூறும் புறநானூறும், 1991, அன்னம் (பி)லிட், சிவன் கோயில் தெற்கு தெரு, சிவகங்கை.
  8. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.

=======================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

சங்க இலக்கிய நூல்களான முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை ஆகிய நூற்களை  அமைப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டிலின் கவிதையியல், ரெனிவெல்லக்கின் இலக்கியக் கொள்கை, டாக்டா் இலா.குளோறியா சுந்தரமதியின் பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், தமிழவனின், அமைப்பியலும் அதன் பிறகும் போன்ற ஆய்வோடு தொடர்புடைய நூற்களை ஆய்வாளர் கற்று, இக்கட்டுரையை எழுதியுள்ளார்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருண்மையை ஆராய்ந்து தெளிவாக விளக்கி இருப்பது, ஆய்வாளரின் ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. ஆய்வுத் தலைப்பை ஒட்டிய கருதுகோள், ஆய்வு நோக்கம் ஆகியவற்றைத் திறம்பட ஒப்பிட்டு விளக்கியமையும் தெளிவான மொழி நடையும் கருத்துகளின் முறையமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆய்வின் பயனை நிறைவுறுத்தும் வகையில் அடிக்குறிப்புகள் அமைந்துள்ளன.

‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க முல்லைப் பாட்டும் நெடுநல்வாடையும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள்  எனத் தெளிவாக அறிய முடிகின்றது’ என்ற முடிவுரை சிறப்பாக அமைந்துள்ளது

தலைப்புத் தேர்வு , ஆய்வாளரின் தரவு சேகரிப்பு முறை, தரவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆய்ந்துள்ள முறை, ஆய்வு நேர்மை, கருத்துகளைச் சிறப்பாக கட்டமைத்துள்ள ஆய்வுப் பாங்கு, முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் துல்லியமாகத் தரும் முறை ஆகியவற்றைப் பாராட்டுகிறோம்.

=======================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.