Blog

  • பல்லழகன் – பகுதி 21

    திவாகர்

     

    கோம்டி சமாதானப்படுத்தினாள்.

    “போலீஸ் எதையுமே சந்தேகக் கண்ணோடதான் பார்ப்பாங்க முரளி.

    உங்களுக்கு நிறைய விஷயங்க தெரியாதுங்கறது எனக்கும் போலீஸுக்கும் கூடத் தெரியும். சுமதி முதல்ல யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா.. நான் சொல்லறேன். உங்க மாமா கந்தசாமியோட சொந்த மகள்தான் சுமதி.”

     

    “என்ன நிஜமாகவா.. அப்போ இதை எங்களுக்கு மறைச்சு வெச்சார் மாமா? என்னாலே நம்பமுடியலியே..”

     

    கல்யாண் குறுக்கிட்டான். “பெரியப்பா நிறைய விஷயங்களை மறைச்சு வெச்சிருக்கார் முரளி.. உன் விஷயமே நீ சொன்னப்பறம்தான் எனக்குத் தெரியும்.. இன்னும் சுந்தர் சொல்லப் போகற விஷயமும் நீ கேட்கணும்.. அதுக்கு முன்னாடி இந்த சுமதிதான் பெரியப்பாவோட ஒரே மகள்.. பெரியம்மாவையும் அழைச்சுண்டுதான் வந்திருக்கேன்.. ஆனா இதையெல்லாம் அவர் ஏன் மறைச்சார்னு தெரிஞ்சுக்கணும்னா அப்பறமா நிதானமா பேசலாம்.. பெரியப்பாவுக்கு நான் நேரடி உறவு.. நானே சொல்லறேன்.. இந்த சுமதி பெரியப்பாவின் உண்மையான வாரிசு. அதுக்கான ஆதாரம்னு நீங்கள்லாம் கேட்பீங்கன்னுதான் கோம்டி எப்படியும் ஒரு ஆதாரம் வேணுங்கறச்சே பெரியப்பாவே சமீபத்துல எழுதிக்கொடுத்த வாரிசு பத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்காங்க. அதையும் கொண்டு வந்திருக்கேன். அதாவது தன் பேங்க்ல தன் பணத்தைத் தனக்குப் பிறகு தன் பெண் சுமதிக்குப் போய்ச் சேரணும்னு அவரே சுயமா கையெழுத்துப் போட்டு பேங்க்குக்கு ஒரு காபியும் சுமதியோட அம்மாகிட்டே ஒரு காபியும் கொடுத்திட்டுதான் போயிருக்கார் பெரியப்பா.”

     

    முரளி திகைத்துப் போயிருந்தது அவன் குரலில் தெரிந்தது கல்யாண் கோம்டியைப் பார்க்க அவள் தன் கையிலிருந்த பேங்க் பத்திரத்தை இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தாள்.

     

    “பெரியப்பா சமீபத்துல எப்ப கொடுத்தார்?.. நான் இல்லாம பேங்க் கூட போகமாட்டாரே கல்யாண்? எப்ப சுமதி வீட்டுக்கு மறுபடி போனார்.. நான் மட்டுமே அவரை அழைச்சுண்டு போவேன்,, அப்ப சமீபத்துல எப்போ போனார்.?”

     

    “முரளி! மறுபடியும் உன் அப்பாவித்தனத்தைக் காமிக்கறே.. உன் அப்பாவித்தனம்தான் பெரியப்பாவை நல்லா அவர் சுய நலத்துக்காக யூஸ் பண்ண வெச்சது. பெரியப்பாவை நீ நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருதரம்தான் கார்ல அழைச்சுட்டுப் போனே.. ஆனா அதுக்கப்பறம் பத்துப் பன்னெண்டு தரம் சுமதி வீட்டுக்கு ஆட்டோவுல போயிட்டு வந்திருக்கார் பெரியப்பா. இதெல்லாம் உனக்குத் தெரியாது. இன்னொரு விஷயம்.. பிரியா விஷயத்துனாலே உனக்கும் பெரியப்பாவுக்கும் மனஸ்தாபம் வந்துதனாலே உன்னை அவர் தள்ளியே வெச்சிருக்கார் அவரு.”

     

    இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்.

    “நீ எங்கிட்டே உண்மையைச் சொல்லியிருக்கலாமே சுமதி.. நான் வந்து உன்னைக் கேள்வி கேட்டப்போ அப்ப ஒருமுறைதான் கார்ல உன் தங்கை மெடிகல் விஷயமா வந்தார்ன்னு சொன்னே.. அதுக்கப்பறம் பாக்கலேன்னு எதுக்குப் பொய் சொன்னே?”

     

    சுமதி நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.

    “நான் பொய் சொல்லலே சார். அவரு ஒவ்வொருமுறை வந்ததுமே அந்தப் பொண்ணு  விஷயமாதானே.. அத்தோட என்னோட நிலைமை வேற சார். நான் இப்போ வரைக்கும் அந்த ஆள் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்கே வெட்கமா இல்லே அசிங்கமா ஃபீல் பண்றேன்.. அதுவும் விஜயா விஷயத்துல அவர் நடந்துகிட்ட விதம் வெறி பிடிச்ச வீதி நாயைப் பாக்கற மாதிரித்தான் அவரைப் பார்த்தோம். அந்த பயங்கரமான அருவறுப்பைச் சொன்னா புரியாது சார். அந்த ஆளை யாரோ அன்னிக்கு கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னப்ப வீட்ல ஸ்வீட் வெச்சு நானும் எங்கம்மாவும் சாப்பிட்டோம். அப்படிப்பட்ட ஆளைப் பத்தி எதுக்கு சார் பேசணும்னுதான் பேசலை. இப்போ கூட இந்த வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமில்ல சார்.. கல்யாண் அண்ணாவும் டாக்டர் கோம்டியும் கம்பெல் பண்ணினதாலே நாங்க வந்தோம்.’

     

    முரளியைப் பார்த்தாள். ‘முரளி அண்ணா.. உங்களை உறவு முறையில அண்ணான்னு நான் கூப்பிடலே.. வயசுல என்னை விடப் பெரியவருங்கற முறையில கூப்பிடறேன்.. இப்பவும் சொல்லறேன். அந்தாளோட வீடோ பணமோ எதுவும் எங்களுக்குத் தேவையில்ல.. எங்களைப் பொறுத்தவரைக்கும் நான் பொறந்தவுடனேயே அந்தாளு செத்துட்டதா இப்பவும் மனசார நினைக்கிறோம்..”

     

    முரளி வருத்தப்பட்டுச் சொன்னான்.. “இல்லைம்மா சுமதி.. என் பெண்டாட்டிக்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்பட்டதோன்னு கொஞ்சம் பயந்துதான் சொன்னேன்மா. தப்பா நினைக்காதே”

     

    “கல்யாண்.. உங்களுக்கு சுமதிதான் பெரியப்பாவோட பொண்ணுன்னு தெரியுமா?”

     

    “தெரியும் சார்.. நான் எதுக்காக வெளியில சொல்லலேன்னா சுமதி எங்கிட்டே வாங்கின சத்தியம்தான். பெரியப்பாவோட பொண்ணுன்னு அவ வீட்டுக்கு வர்ற வேலையை வெச்சுக்க வேணாம்னு என்னை அன்னிக்கே சொல்லிட்டா.. ஆனா எனக்கு அப்பாவும் இல்லே அம்மாவும் இல்லே.. ஒரு தங்கச்சி இருக்குங்கிற முறைல வரலாமான்னு கேட்டப்ப அவ அழுதுட்டா சார். பாவம் சார்.. பாசம்ன்னா என்னன்னு தெரியாம வளர்ந்திருக்கற பொண்ணு சார். அதனாலதான் நீங்க கோம்டிகிட்ட சுமதியைப் பத்திக் குறையா பேசறச்சே  பெரியப்பா முறைல உறவு பாக்காம ஒரு அண்ணங்கிற முறையில அவளுக்கு ஆதரவாப் பேசினேன். சுமதியைப் பத்திய விஷயம் கோம்டிக்கு கூடச் சொல்லலே. சுமதியை விட என் பெரியம்மாவைச் சொல்லணும். பொறந்த குழந்தைக்குத் தகப்பன் பேரு தெரியாதுன்னு தைரியமா ஊருல சொல்லி நாலு வீட்டுல வெட்கப்படாம பத்துப் பாத்திரம் தேய்ச்சி அந்தப் பொண்ணை வளர்த்தாங்களாம். சுமதி  அவ பெரியப்பா பொண்ணுங்கறது ஒரு பக்கம் உண்மைதான்னாலும் பிறந்ததிலேர்ந்தே கஷ்டத்தைப் பார்த்தவ. இனிமேயும் எங்களுக்கு பெரியப்பா உறவு தேவையில்லே.. அதுக்குப் பதிலா விஷத்தைச் சாப்பிட்டுச் செத்துப் போறோம்னு எங்கிட்ட சொல்லறச்சே அதையும் மீறி என்னாலே எதுவும் செய்ய முடியல.. அவர் விஜயாவுக்கு செஞ்ச பாவத்துக்கு அந்த விஜயா நல்ல முறைல குணமாகணும்னு நானும் என்னால் ஆன உதவியைப் பண்ண வந்தேன் அவ்வளவுதான்..”

     

    “விஜயா சுமதிகிட்டே இருக்காளா?.. அவளுக்காக நானும் பணம் சேர்த்துவர்றேன் கோம்டி மேடம்!” சுந்தர் மிகக் கவலையுடன் குறுக்கிட்டான்.. கோம்டி அழுத்தமாகக் கேட்டாள்.

     

    “எல்லாம் உங்க மாமாகிட்டேயிருந்து வாங்கின பணம்தானே? எனக்குத் தெரியுமே.. ஆசிரமத்து பேங்க் அக்கௌண்டும் ரசீது புக்கும் எல்லா உண்மையையும் சொல்லிடுச்சே சுந்தர்.  இவ்வளோ பேசறவரு உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் இன்னிக்குக் காலைலேர்ந்து வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சிக்கணும்?”

     

    “நான் தப்பிக்க முயற்சிக்கலே.. இன்னிக்கு இங்க வர்றதை அவாய்ட் பண்ண விரும்பினேன்..  போலிஸ் ஸ்டேட்மென்ட் கூட தயார் பண்ணி ரெடியா வெச்சிருந்து அதை இன்னிக்கு போலீஸ் கேட்டப்ப கொடுத்திருக்கேன்.. ஏன் இன்னிக்கு வரவேண்டாம்னு நினைச்சேன்னா எனக்கு கோம்டி இந்த கேஸ்ல எப்படியாவது என்னை ஃப்ரேம் பண்றா மாதிரி மனசுக்குத் தோணிச்சு.. அதனாலதான் அவங்க விசாரணைக்கு இனிமே ஒத்துழைப்பு கொடுக்கவேணாம்னு வரல்லே.. இதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன்..”

     

    கோம்டி முறைத்தாள்.

    “ஆனா மிஸ்டர் சுந்தர் இதுவரைக்கும் எல்லாமே மாத்தி மாத்தி சொன்னீங்க.. அதையும் நீங்க ஞாபகம் வெச்சுக்குங்க. இப்போ அதை எல்லாம் கூட விடுங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நீங்க கந்தசாமிகிட்டே ஃபோன்ல பேசினதையும் மாத்திதான் கொடுத்தீங்க.. அது ஏன்.. அன்னிக்கு நீங்க கரெக்டா என்ன பேசினீங்கங்கறத நல்ல ஞாபகப்படுத்தி நிதானமா எல்லோருக்கும் சொல்லலாமே. இதோ பாருங்க இப்பவாவது உண்மையைச் சொல்லணும். ஏன்னா உங்க ஃபோன் பேச்சு எல்லாம் என்கிரிப்ட் ஆக கந்தசாமி மொபைல்ல இருக்கு.”

     

    இன்ஸ்பெக்டர் சுந்தரைப் பற்றி விவரித்தார். சுந்தருக்கும் கந்தசாமிக்கும் அன்று முதன்முதலாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுக்கும்போது நடந்த சண்டையை கோம்டியை வைத்துப் பேசச் சொன்னார். கோம்டி விவரித்தாள். தன்னிடம் ஒப்புக்கொண்டதையும் கந்தசாமியின் மன்மத லீலையையும் விவரித்தாள். ஆசிரமத்து விஜயாவுக்கு நேர்ந்த கோரமான நிகழ்வையும் விவரித்தாள்.

     

    விஜயாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வந்தபோதுதான் கந்தசாமியைப் பற்றி முதன்முதலாக சுமதி தெரிந்துகொண்டதையும் அதன்பின் சிரமம் எடுத்துக்கொண்டு விஜயாவை ஆதரித்த விதம் பற்றியும் நெகிழ்ச்சியுடன் சொன்னாள் கோம்டி.

     

    சுமதி இப்போது வரை அந்த விஜயா மேல் பாசத்தோடு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வருவதைப் பாராட்டிச் சொன்னாள்.

     

    “ஆனால் சுந்தர் உங்களுக்கும் அந்த விஜயா மேல் பாசம் இருந்திச்சு.. அந்தப் பாசத்தை வெச்சு கந்தசாமிகிட்டே பணம் பறிச்சீங்க இல்லையா.. என்னதான் இந்தப் பணமெல்லாம் விஜயாவோட ஆஸ்பத்திரி செலவுக்குன்னு நீங்க இப்போ சொன்னாலும் நீங்க அதைக் கொடுக்காதவரை எங்களாலே நம்பமுடியாது. இப்போதாவது சொல்லுங்க அன்னிக்கு சாயந்திரம் என்ன நடந்ததுன்னு.. விஜயா மேல உங்க பாசம் உண்மையான பாசம்னா அன்னிக்கு ஃபோன்ல என்ன பேசினீங்கன்னு அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்லணும். உங்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ் கூட”

     

    கோம்டி இதைச் சொன்னதும் தலை கவிழ்ந்தான் சுந்தர்.

    “அன்னிக்கு நாலரை மணிக்கு நான் ஃபோன் செஞ்சது வாஸ்தவம்தான்.” கந்தசாமியுடன் தான் பேசின விவரத்தையும் அதற்குப் பிறகு நடந்ததையும் விவரித்தான்.

     

    மாலை 4.30 மணியளவில் கந்தசாமிக்கு சுந்தர் ஃபோன் செய்கிறான், ஃபோனில் கந்தசாமியின் குரல் கேட்கிறது..

     

    “என்னடா சுந்தர் இந்த நேரத்துல நீ பேசறே? நீ நேரே இங்கே வரலாம் இல்லே.. உங்கிட்டே ஒரு விஷயம் கேட்கணுமே..”

     

    “நீங்க என்ன கேட்கப் போறிங்கன்னு தெரியும் மாமா.. குறிப்பிட்ட வஸ்துவைப் பத்திக் கேக்கப் போறீங்க.. வேண்டாம் இனிமே இந்த வேலை.. அதனாலதான் நான் எடுத்து ஒளிச்சு வெச்சுட்டேன். நான் உங்க நல்லதுக்குதான் பேசறேன் மாமா.. இன்னொரு விஷயம்.. அந்த விஜயாவோட நியூஸ் கிடைச்சுதான்னு சொல்லவே இல்லே.”

     

    “டேய் சுந்தர்.. நீ இப்படியெல்லாம் சொல்லலாமா? எனக்கு விஜயா விஷயமே தெரியாதுடா.. அன்னிக்கு பீச்சுல காணாம போனது காணாமப் போனதுதான்.. அந்தப் பொண்ணை விடு.. எனக்கு நீ எடுத்துண்டு போனது கட்டாயம் திருப்பித் தரணும்.. உன்னை வளர்த்து ஆளாக்கியது நான்.. எனக்கே இப்படி நீ துரோகம் செய்யலாமா.. சொல்லுடா?”

     

    “இதுல துரோகமெல்லாம் எங்கே வந்தது? நீங்க செய்துகிட்டுருக்கற விஷயம் வெளியிலே தெரிஞ்சா உங்களோட எப்பவுமே உதவியா இருக்கற நானும் முரளியும்தான் முதல்ல தூக்குல தொங்கணும்.. ஒருவேளை போலீஸ் உங்களைப் பிடிச்சுதுன்னாக் கூட எங்க ரெண்டு பேரையும் கூட விசாரிக்காம ஜெயில்லே போடலாம். நீங்க வளர்த்தீங்கன்ற ஒரு விஷயத்துக்காக நாங்க ரெண்டு பேரு ஜெயிலுக்குப் போகணுமா.. யோசிச்சுப் பாருங்க மாமா.”.

     

    “டேய் மடப்பயலே.. அதுக்குதான் பிராயச்சித்தம் பண்றேன்னு சொல்லி பத்து லட்சம் கொடுத்தேண்டா. அதைக் கூட நீ இன்னும் நான் கொடுத்த அட்ரஸுக்கு கொடுக்கலே.. சரி, விடு.. அந்த பத்து லட்சத்தை நீயே எடுத்துக்கோ, அடேய்.. என் வஸ்துவைக் கொடுத்துடுடா.. என்னை பிளாக்மெயில் பண்ணாதே..”.

     

    “முடியாது மாமா.. நான் கொடுக்க மாட்டேன். நான் இதைப் பத்தி கல்யாண்கிட்ட பேசணும்..”

     

    “டேய் டேய்  கல்யாண்கிட்ட எதுக்குடா. எங்கிட்டே பேசுடா. உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுடா..?”

     

    “பணம் என்ன மாமா.. அம்பது லட்சம் ஒரு கோடியானாலும் நீங்க கொடுப்பீங்கன்னு தெரியும்.. ஆனா உங்க மன்மத லீலையை கண்டிப்பா கைவிட மாட்டிங்க. விஜயா மாதிரி இன்னும் எத்தனை பெண்களை முன்னமே சீரழிச்சீங்களோ இனிமேயும் எத்தனை சின்னப் பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்கப் போறீங்களோ.. யாருக்குத் தெரியும்? அந்த ஆசிரமத்துல இருக்கற சின்னப் பொண்ணுங்களை நினைச்சாலே கதி கலங்குது.. பாவம் அந்த மேனேஜர் பெரியவர். அவருக்குத் தெரியாம நீங்க செஞ்ச அயோக்கியத்தனம் ரொம்ப குரூரமானது. நான் முதல்ல போலீஸ்கிட்டதான் போகலாம்னு இருந்தேன். ஆனா கல்யாணுக்கும் தெரியணும்.. நாங்க ரெண்டு பேரும் சேர்த்து இந்த விஷயத்தைப் போலீஸ்கிட்ட எடுத்துப் போவோம். . கல்யாண் வந்ததும்தான் இது முடிவுக்கு வரும். நான் அவன்கிட்டே சாட்சிக்காக இந்த வஸ்துவை ஒப்படைச்சுட்டு  எல்லா விஷயமும் நானே சொல்லப் போறேன்.”.

     

    கத்தினார் கந்தசாமி  “உனக்கு என்னடா தெரியும் என்னைப் பத்தி.. நான் இப்போ எந்த லீலையிலும் ஈடுபடலேன்னு சொன்னா நம்புவியா.. என் வஸ்துவைக் கொடுத்துடு.. சரி, அம்பது லட்சம் கொடுக்கறேன்.. இங்கே வா.. அந்த வஸ்துவையும் கொண்டு வா.. பேசலாம்..”

     

    “நான் அங்கே வரமாட்டேன். என்னை நேரப் பார்த்தீங்கன்னா என் மேல் இருக்கற ஆத்திரத்துல நீங்க என்னைக் கொன்னுப் போட்டாலும் போடுவீங்க.. அதான் ஒரு சைலன்ஸர் துப்பாக்கி உங்க பீரோவுக்குள்ள மறைச்சு வெச்சுண்டிருந்ததைப் பார்த்தேனே.. நாளைக்கு காலைல கல்யாணை நான் ஸ்டேஷன்லியே பார்த்து எல்லாவிஷயத்தையும் சொல்லிட்டுதான் அழைச்சுண்டு வரப் போறேன்.. அதுக்கப்பறம் அவனாச்சு.. நீங்களாச்சு..”

     

    “டேய்.. டேய்.. அப்படில்லாம் சொல்லாதேடா.. நான் செத்துடுவேண்டா.. என் பொணத்தைத்தான் நீ பாக்கப் போறே.. இதோ பார்.. நேருல வாடா.. பேசலாம்..”

     

    “நான் வரல்லே மாமா.. என் முடிவு இதான். நீங்க எடுத்த படத்தையெல்லாம் பார்க்கறப்போ எனக்கு ரத்தக் கண்ணீர் வந்துச்சு, அதுவும் விஜயாவைப் போயி.. .. அப்படின்னு நினைக்கறச்சயே உங்க மேல ஆத்திரம் ஆத்திரமா வருது.. உங்க அழுகை ஒரு நாடகம், அதுவும் ஆசிரமத்துலேயே பொய் சொல்லி எதுவுமே தெரியாதுமாதிரி அழுதீங்களே.. போதும் மாமா.. உங்க சகவாசம்.. உறவு எல்லாமே போதும்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா.. அதுதான் நான் கல்யாண் வர்றதுக்காக காத்திருக்கேன்.. உங்களை என் உறவுக்காரர்ன்னு சொல்லறதுக்கே வெட்கமா இருக்கு.. அதுதான் உங்க கையில பணம் வாங்கி உங்க கூட சாப்பிட்டு நான் வளர்ந்தேனே.. ச்சே.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு இருக்கு.. அது சரி, நான் என்ன தப்பு பண்ணினேன் தற்கொலை பண்ணிக்கறதுக்கு.. நீங்க சொல்லறா மாதிரியே நீங்களே பண்ணிக்குஙக மாமா.. நீங்க தப்பறதுக்கு நீங்க தற்கொலை பண்ணிக்குங்க.. அதுதான் ஒரே வழி.”

     

    ஃபோன் வைக்கப்பட்டுவிட்டது..

     

    தொடரும்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    நானிங்கு நலமே !

    நீங்கள் நலமா ?

    இம்மடலை சென்னையில் இருந்து எழுதுகிறேன்.

    உலகம் முழுவதும் நிகழும் அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து அரசியல் ஜனவரி 2026 ஐ நோக்கினால்,

    தொழிலாளர் கட்சி (Labour Party):
    பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது புத்தாண்டு உரையில் “சரிவு மற்றும் பிளவுகளை வெல்லும்” அரசாங்கத்தை வாக்குறுதி அளித்தார்.
    மக்களுக்கு “நல்ல மாற்றங்களை உணரச் செய்வோம்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party):
    எதிர்க்கட்சி தலைவர் கேமி பாடெனொக், 2025-இல் “வளர்ச்சி இல்லாமல், அதிக வரிகள், வேலைவாய்ப்பு குறைவு” என விமர்சனம் செய்தார்.
    “நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்து, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவோம்” என்ற திட்டத்தை முன்வைத்தார்.

    ரீபார்ம் யுகே (Reform UK):
    நைஜல் பாராஜ் ஜனவரி 19-ஆம் தேதி Newark-on-Trent-இல் உரையாற்றினார்.
    பிரெக்ஸிட் பின்னணியில், மக்கள் எதிர்பார்ப்புகள், பொருளாதார குழப்பம், பொறுப்புக்கூறல் ஆகியவை அரசியல் அமைப்பை மாற்றுகின்றன.

    இங்கிலாந்து காலநிலை ஜனவரி 2026இல் ,

    மாதத்தின் தொடக்கத்தில் ஆர்க்டிக் காற்று காரணமாக கடும் குளிர் நிலவியது.

    ஸ்காட்லாந்து மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு, பனிமூட்டம், பனிக்கட்டி போன்றவை காணப்பட்டன.

    லண்டனில் வெப்பநிலை -3°C வரை குறைந்தது

    மழை, பனிக்கட்டி, மற்றும் காற்று ஆகியவை பயணத்திற்கும் விவசாயத்திற்கும் சவாலாக இருந்தன.

    -இங்கிலாந்து அரச குடும்ப நிகழ்வுகள் ஜனவரி 2026

    ஜனவரி 9: இளவரசி கேத்தரின் 44வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    ஜனவரி 15: இளவரசர் வில்லியம் ஹெரிபோர்ட்ஷயரில் உள்ள பண்ணை ஒன்றை பார்வையிட்டார்.

    ஜனவரி 25: வில்லியம் மற்றும் கேத்தரின் ஸ்காட்லாந்தில் அரச நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

    பிப்ரவரி 3: கிங் சார்ல்ஸ் மற்றும் குவீன் கமில்லா, உள்ளாட்சி ஊழியர்களுக்காக அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    இங்கிலாந்து பொருளாதார நிலை
    ஜனவரி 2026

    பொருளாதார முன்னறிவிப்புகள்: HM Treasury – நிதி ஆணையம் வெளியிட்ட கணிப்புகளின்படி, 2026 இங்கிலாந்து பொருளாதாரம் “மிதமான வளர்ச்சி” பாதையில் உள்ளது.

    விலை உயர்வு (CPI): பணவீக்க விகிதம் குறைவாக இருந்ததால், வட்டி விகிதங்கள் மெதுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சம்பள வளர்ச்சி: மெதுவாக இருந்தது, ஆனால் வேலைவாய்ப்பு நிலைமை சீராக உள்ளது.

    நுகர்வோர் நம்பிக்கை: Which? பத்திரிகை ஆய்வின்படி, மக்கள் நம்பிக்கை 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

    பொருளாதார சீரமைப்பு: PwC- பிரைஸ் வாட்டர் கூப்பர் கணிப்புகளின்படி, 2026 “அடாப்டேஷன்” (Adaptation) ஆண்டாக இருக்கும்.

    அரசுகள், நிறுவனங்கள், மக்கள் புதிய சூழ்நிலைக்கு தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    உலகளாவிய நிகழ்வுகள் – ஜனவரி 2026

    பொதுவான விழாக்கள்:
    ஜனவரி 1 புதுவருடம், உலக அமைதி நாள்
    ஜனவரி 15: தைப்பொங்கல் (தமிழர்களின் பெருவிழா)

    அன்புள்ள வாசகர்களே !
    இங்கிலாந்து அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் ஒரு புதிய மாற்றத்தின் பாதையை நோக்கி நகர்கின்றன.

    நாம் எங்கே இருந்தாலும், உலகம் எவ்வாறு நகர்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வும், பகிரும் மனப்பான்மையும் நம் வாழ்வை வளமாக்கும்.

    Share
  • பார் வியக்க வாழ்வோம்  !

    பார் வியக்க வாழ்வோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பெரு வெள்ளம் வந்தால்
    பெரு அணையும் உடையும்
    பெரு ஆசை வந்தால்
    பெரு வாழ்வு சிதையும்

    பசி வயிறு மிகுந்தால்
    வறுமை தலை விரிக்கும்
    வறுமை தலை விரித்தால்
    வாடி விடும் உலகு

    பொய் ஆட்சி செய்தால்
    மெய் மயங்கி நிற்கும்
    மெய் மயங்கி நின்றால்
    பொய் எழும்பி ஆடும்

    பொய் ஆடி நின்றால்
    மெய் விழிக்க நினைக்கும்
    மெய் விழிக்கும் வேளை
    வெளிச்சம் அங்கே விரியும்

    கண் கருணை இழந்தால்
    மண் சிறக்க மாட்டா
    மண் சிறக்க வேண்டில்
    மனம் சிறக்க வேண்டும்

    கல்வி எனும் பயிரை
    கிள்ளி விடல் கூடா
    கல்வி எனும் சொத்து
    எழு பிறப்பும் இருக்கும்

    பல நூற்கள் படிப்போம்
    படித்த படி நடப்போம்
    பகுத் தறிவு பெறுவோம்
    பார் வியக்க வாழ்வோம்  !

    Share
  • இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம்  !

    இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மண்ணும் கடவுள் மரமும் கடவுள்
    நீரும் கடவுள் நெருப்பும் கடவுள்
    ஊர்கள் தோறும் பற்பல பெயரில்
    உருவம் பெற்று கடவுள் திகழ்கிறார்

    ஏகன் ஆகி இருப்பார் கடவுள்
    எங்கும் நிறைந்தும் இருப்பார் கடவுள்
    தாபங் கொண்டு தேடுவார் கண்ணில்
    தரிசனம் கடவுள் கொடுப்பார் என்பர்

    சமயச் சண்டையில் இருக்கார் கடவுள்
    சாதிச் சண்டையில் இருக்கார் கடவுள்
    இமயம் இருப்பார் கடவுள் என்கிறார்
    இறைவன் இல்லா இடமே இல்லை

    கடவுளை நம்பாச் சமயமும் உண்டு
    கடவுளே இல்லை என்பாரும்  உண்டு
    நம்பினார் நம்பாதார் யாவர்க்கும் என்றும்
    நல்லதை நல்குவார் கடவுளாய் தெரிவார்

    உருவாய் இருப்பார் அருவாய் இருப்பார்
    ஒருவரும் நினையா உருவமாய் ஒளிர்வார்
    அருளாய் இருப்பார் அன்பாய் இருப்பார்
    அனைத்தும் ஆகி இருப்பார் ஆண்டவன்

    கற்பனை யாகக் கடவுள் இருக்கிறார்
    கற்சிலை யாகக் கடவுள் இருக்கிறார்
    இத்தரை இருப்பார் எண்ணு மனைத்திலும்
    இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம்  !

    Share
  • மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடிப் பேருக்குத் தலா 5 ஆயிரம் என்ற அளவில் ரூ.6550 கோடியைத் தமிழக அரசு விடுவித்துள்ளது. இது பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இதே போன்று, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ரூ.1310 கோடியை அரசு விடுவித்து வருகிறது.

    பெண்கள் அன்றாடச் செலவுகளுக்கு இதைச் செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டால் அவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படிச் செலவிடலாம்? இதோ என் யோசனைகள்.

    தமிழ்நாடு மகளிர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்த 1.31 கோடிப் பேரும் அதில் சேர வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மகளிர் அனைவரின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட விவரங்களைத் தொகுக்க வேண்டும். இவர்களைத் தொழில் அடிப்படையில், ஊர் அடிப்படையில், கல்வித் தகுதி / திறன் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் ஒருவர் வழிநடத்த வேண்டும்.

    இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சந்தித்துத் தங்கள் தேவைகள், சிக்கல்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இந்தச் சிக்கல்களுக்கு அந்தக் குழுவிலேயே தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால், இதர குழுக்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை, தங்கள் அமைப்பிற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.

    இந்த அமைப்பு, தொழில்முனைவுப் பிரிவு ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதை ஆதரிக்க, நிதி முதலீட்டுப் பிரிவையும் தொடங்க வேண்டும். தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட பெண்கள் அதில் சேர வேண்டும். தாங்கள் எந்தத் தொழில் தொடங்க விரும்புகிறோம், அதில் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவை, எப்போது திருப்பிச் செலுத்த முடியும் என எடுத்துரைக்க வேண்டும் (Investment Pitch).

    நிதி முதலீட்டுப் பிரிவில், வாய்ப்புள்ள, ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் சேமிப்பையும் உரிமைத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இவர்களின் பிரதிநிதிகள், உரிய தொழில்முனைவுத் திட்டங்களில் ஆராய்ந்து முதலீடு செய்வார்கள். இதன் மூலம், அந்தத் தொழில்களில் இவர்கள் முதலீட்டாளர்களாக, பங்குதாரர்களாக மாறுவார்கள். இது ஒரே நேரத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும்.

    இதற்குத் துணையாக, வேலை தேடும் பெண்களுக்காகச் செயல் மகளிர் என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை, விநியோகஸ்தர்களை இந்தச் செயல் மகளிர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

    தொழில்முனைவோர் உருவாக்கும் பொருள்களை, சேவைகளை இதர மகளிருக்குத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். இது விற்பனை வலையமைப்பாக உருவெடுக்கும். பொருள்களை உருவாக்குவது, விற்பது, விநியோகிப்பது, கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்திலும் பெண்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் இந்த நிதி, பல்கிப் பெருகும். முதலீட்டாளர் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

    எதிர்காலத்தில் இந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசி, உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை போட்டியிடவும் செய்யலாம். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என வலியுறுத்தலாம்.

    தங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியாகப் பெண்கள் உருவெடுக்கலாம். அதிகாரத்தை வென்றெடுக்கலாம். தங்களுக்குத் தேவையான தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே தீர்மானிக்கலாம். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்கலாம்.

    தமிழ்நாட்டு மகளிர், இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.

    Share
  • பல்லழகன் – பகுதி  – 20

     

    திவாகர்

     

    அவள் அன்று நடந்த சம்பவத்தை விவரித்தாள்.

    இதே வீடு  ஒரு கட்டிலில் அந்தச் சின்னப் பெண் விஜயா படுத்திருக்க அவள் பக்கத்தில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்க கந்தசாமி அங்குள்ள நிலைமையைப் பார்க்கிறார்.

     

    சுமதிக்குப் புரிந்தது. வந்தது கந்தசாமிதான்.

     

    கந்தசாமி அவள் அம்மாவிடம் போனார்.

     

    “நீ எப்போ இங்கே சென்னைக்கு வந்தே?”

     

    “எதுக்காக எங்கம்மாவைத் தொந்தரவு பண்றே? நீ யாரு முதல்ல எங்களை வந்து பார்க்க..?”

     

    “நான் உங்க அப்பா.. உன் பேரு சுமதின்னு ஆஸ்பத்திரில விலாசம் கொடுக்கும்போது சொன்னாங்க.. சுமதி.. இதோ பாரு.. நான் இங்கே வந்தது உன்னையோ உன் அம்மாவையோ கூட்டிட்டுப் போகறதுக்கு இல்லே.. அதோ அந்த பொண்ணு எங்க ஆசிரமத்திலேர்ந்து ஓடி வந்திடுச்சு. அவளோட வளர்ப்புக்கு நான் பொறுப்பு.. அதான் கூப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

     

    “அப்படித்தான்யா ஒரு ஆள் எங்கம்மாவை ஏமாத்திட்டு ஒரு நாள் ஓடிப் போயிட்டான். அவனைக் கூப்பிட்டுப் போகறதுக்காக எங்கம்மா ஒரு காலத்திலே அவன் வீட்டுக்குப் போனாங்க.. அவன் அடிச்சுத் துரத்திட்டான். இதோ பார். அதே நிலைமை உனக்கும் வர வேணாம். இங்கேயிருந்து போயிடு.”

     

    “அன்னிக்கு அப்படி நடந்தது வாஸ்தவம்தான்.. ஆனா அந்தக் கதை முடிஞ்சுபோன கதை.. நீ இப்போ அதுக்காக என்ன கேக்கறியோ அதைக் கொடுக்கறேன். ஆனா சொந்தம்னு என்னால கொண்டாடமுடியாது.”.

     

    கந்தசாமி சுமதி பக்கத்தில் உட்கார்ந்தார். ஆதரவாக அவளைத் தலையைத் தொட்டுப் பேச வந்தார்,. சட்டென அவன் கையை உதறித் தள்ளினாள்.

     

    “அடச்சீ.. உன் பாவக் கையை என் மேல வெக்காத.. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு உங்கிட்டே வந்து சொந்தம் கொண்டாடணுமா.. மனசால கூட நீ நினைச்சுப் பாக்காதே.. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னோட ஒரு கனெக்ஷனும் வெச்சுக்க மாட்டோம். க்ரூயல்.. கொடூரம்னு வாழற ஒரு அப்பா எனக்கு வேணுமா?.. அதுவும் வெறி பிடிச்ச நாய் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்குக் கூட யோக்கியதை இல்லாதவன் நீ போய்யா.. போ..”

     

    கந்தசாமி சாந்தமானார். ~இதோ பாரு சுமதி.. என்ன சொன்னாலும் எப்படி திட்டினாலும் நான் உன்னோட அப்பா.. போகட்டும்.. எங்கிட்டே வரவேணாம். ஆனா நான் உங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பறேன்..”

     

    “யோவ்.. உன்னோட உறவே வேணாம்னு இங்க வந்தேன்.”

     

    “நீ அப்படில்லாம் சொன்னா விஷயம் தெரிஞ்ச நான் விடுவேனா.. என்று சொன்ன கந்தசாமி தன் ஜிப்பா பையிலேர்ந்து ஒரு செக் புக் எடுத்தார். அந்தச் செக்கில் ஏதோ பணம் எழுதினார்.. அப்படி செக் புக்கை எடுக்கும்போது அவர் ஃபோன் கீழே விழுந்துவிட்டதை அவர் கவனிக்க வில்லை….

     

    சுமதிக்கு கோபம் ஏராளமாக வந்தது.. “நீ இங்கேயிருந்து உடனே போகலேன்னா உன் வண்டவாளமெல்லாம் சொல்லி போலீசுக்கு கம்ப்ளெயின் கொடுப்பேன்… போகறியா இல்லையா? நான் போலீஸைக் கூப்பிடட்டுமா?”

     

    இனியும் இங்கு இருக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட கந்த சாமி செக்கை மாத்திரம் அங்கே வைத்துவிட்டு கொஞ்சம் சோகத்துடன் எழுந்து போனார்.

     

    அதைத் தூக்கி ஓரத்தில் போட்டாள். அப்போதுதான் தெரிந்தது.. அவர் ஃபோனை அங்கே விட்டு விட்டுச் சென்றது. கந்தசாமிக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசனை செய்தவள் அவள் அம்மாவிடம் பேசினாள்.

     

    “அம்மா.. நான் அவன் ஃபோனை விட்டுட்டுப் போயிட்டான். அவன் வீட்டுக்கு இதுல அவன் நம்பர் நம்பர் இருக்கான்னு பார்த்து ஃபோன் போடறேன்.. நீ பேசி அவன் ஃபோனை எடுத்துட்டுப் போகச் சொல்லு.. நான் இனிமே அவன் கூடப் பேச மாட்டேன்.”

     

    என்றவள் அந்த ஆபிள் ஃபோனில் பார்த்தாள்.

    ‘இதுல காண்டாக்ட் நம்பரே இல்லையேம்மா.”.

     

    என்றவள் மேலும் அந்த ஃபோனை நோண்டினாள். அவள் முகம் போகப் போகப் சிவந்தது.

     

    “நாசமாப் போகறவன்மா இவன்.. ஐய்யோ எத்தனை படம்? இல்லாம் இதோ இந்த விஜயாவோ படங்கதான்.. இதோ பார்..” என்று அம்மாவிடம் காண்பித்தாள். அதைப் பார்த்து அவள் அம்மா கண்ணை மூடிக்கொண்டாள்.

     

    “அப்படியே உடம்பெல்லாம் புழுத்துச் சாகணும்டி அவன்..” அவள் அம்மா அப்போதே சாபமிட்டாள்.

     

    அவர்கள் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

     

    “நான் சொல்லறதை கேளுடி.. பேசாம போலீசுக்கு இவனைப் பத்தி இந்த போனைக் கொடுத்துக் கம்ப்ளெய்ன் சொல்லிடு.. அதுதான் நாம பண்ணமுடியும்.”

     

    “அம்மா.. நாம இப்போ கொஞ்சம் நிதானமா இருப்போம். இதைப் பத்திக் கேட்டா நமக்குத் தெரியாதும்போம். இந்த மாதிரி விஷயத்துலெல்லாம் நமக்குக் கொஞ்சம் துணை வேணும். நாம ஏழை மாத்திரம் இல்லே.. ஆம்பிளை துணையில்லாத வீடு. உறவுன்னு சொல்லிக்கறதுக்கோ யாருமே இல்லை.. ஆனா அதுக்காக இந்த நாய்கிட்டே எல்லாம் பயப்படக்கூடாது,, கல்லாலே அடிச்சுக் காயப்படுத்திண்டே இருக்கணும்.. அவன் திரும்பி வந்து கேட்டானா கூட துரத்தி விடறேன்.. முடிஞ்சவரைக்கும் அவன் அவமானப்படணும்.. மனசுக்குள்ளே தவிச்சுச் சாகணும்.. இந்த சமூகம் இவனை மாதிரி ஆளையெல்லாம் நடுரோட்டுல சுட்டுத் தள்ளணும்.. சரி விடு, அவனைப் பத்தி என்ன பேச்சு. இந்த விஜயாப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஆபரேஷன் பண்ணனுமாம். இல்லாகாட்டி அவ உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் பல நாளா ஆசிரமத்துல இருக்கறச்சயே சொல்லியிருக்காராம்… இந்தப் பொண்ணை எப்படிக் காப்பாத்தறதுன்னு நாம் யோசிக்கணும்.”

     

    என்று சொல்லிக் கொண்டே அவள் கைப்பைக்குள் ஃபோனைப் போடுகிறாள். எதிர்பார்த்தது போல கந்தசாமி வருகிறார்.

     

    “இங்கே ஃபோனைக் கீழே போட்டுட்டேன்.. அந்த ஃபோனைக் கொடு.. அதுக்குதான் வந்தேன்.”

     

    “இதோ பார்.. எதையாவது சாக்கு போக்கு சொல்லிட்டு இங்கே வந்தேன்னா உனக்கு செருப்படிதான் விழும். முதல்ல வீட்டை விட்டு வெளியே போ.. இல்லே கூச்சல் போட்டு கூட்டம் கூட்டி போலிஸையும் கூப்பிட்டு உன்னை ஜெயில்லே போடுவேன்.”

     

    கந்தசாமி கத்துகிறார். “ஏய்.. நானும் போனாப் போகுதுன்னு ஏதோ என்னாலே ஒரு தப்பு எப்பவோ நடந்துபோச்சேன்னு அதுக்கு ஏதாவது நல்லது பண்ணலாமேன்னு பாக்கறேன்.. அதுக்காக என்ன ஓரேயடியா என்னை பயமுறுத்தறே.. ஜாக்கிரதை.. சொந்தப் பெண்ணே ஆனாலும் என் வழிலே குறுக்கே வந்தன்னா கொன்னுடுவேன் கொன்னு.. ஜாக்கிரதை.. முதல்ல வீட்டுல தேடு.. அந்த மொபைல் எங்கேயாவது கிடைச்சா ஆஸ்பத்திரியில என் நம்பர் இருக்கு.. சொல்லி அனுப்பு..”

     

    அவர் கத்தி விட்டு வெளியேறுகிறார்.

     

    மறுபடியும் தற்கால நிலைக்கு வருகிறாள் சுமதி

     

    “இதுதான்மா நடந்த விஷயம். அடுத்த மூணாவது நாள் நான் எதேச்சையா உங்க க்லினிக்ல வெளியே வந்ததை அந்தாளு பார்த்துதான் அந்த கலாட்டா நம்ம கிலினிக்ல நடந்தது. நான் எப்பவுமே என் கைப்பைக்குள்ளேயே அந்த மொபைல்லை வெச்சிருந்தேன்.. வீட்ல வெச்சா இவன் எப்படியும் வந்து எடுத்துடுவான்னு தெரியும்.. அந்த ஆளுக்கு என் ஹேண்ட்பேக்லே அது தட்டுப்பட்டிருக்குது.. உடனே அதை எடுத்துண்டு என்னை விட்டுட்டான். அதுக்கப்பறம் உங்களுக்கு எதிர்வீடுதான் அந்தாளோட வீடுன்னதும் என்னாலும் வேலையை கண்டினியூ பண்ணமுடியலே. அதனாலதான் அன்னிக்கு உங்கள்ட்ட அப்படிச் சொன்னது.. என்னத்தையம்மா அப்போ சொல்லமுடியும்? இப்படிப்பட்டவனைப் பத்தி பெருமையா சொல்லறதுக்கோ எங்கப்பன்னு சொல்லறதுக்கோ என்ன இருக்கு. உங்க வீதிலேயே அந்த வெறி நாய் இருக்கறதுனாலே வீதியில இருக்கற அத்தனை பெண்களையும் கடித்துக் குதறி வெக்கக் கூடாதேன்னுதான் நீங்க ஜாக்கிரதையா இருங்கம்மான்னு உங்களுக்கு எச்சரிக்கை பண்ண முடிஞ்சது.”

     

    “நீ இங்கே இன்ஸ்பெக்டரைப் பாக்கறச்சே விஜயா ட்ரீட்மெண்ட்க்காக கந்தசாமிகிட்டே யாரோ ஒரு குடும்பம் மூலம் கேட்டதாகவும் கந்தசாமி வந்து உன்னை இந்த வீட்ல அரைமணி நேரம் பார்த்ததாகவும் சொன்னியாமா.. அது உண்மையா சுமதி?”

     

    “ஆமாம்மா.. அது கூட உண்மைதான். விஜயாவுக்காக நான் பண உதவிக்காக ஏஜன்ஸி மூலம் கேட்டது உண்மைதான். ஆனா இந்த ஆள்தான் அந்த உதவி செய்யறவன்னு தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டேன்மா.. இன்ஸ்பெக்டர்கிட்டே இந்த உண்மையைதான் சொன்னேன். ஆனா அவர் நம்பலே..”

     

    “ரொம்ப வேதனையா இருக்கு சுமதி. ஆனா கல்யாண் உனக்கு நிச்சயம் நியாயம் செய்வார். அதை நீ ஒப்புக்கறதும் நல்லது. சரி, அதுக்கப்பறம் நான் கேட்டேனே எனக்கு இன்னும் ஸ்ட்ராங்கா உங்கப்பாதான் இவருன்னு எனக்கு ஒரு எவிடென்ஸ் வேணும்.”

     

    “எவிடென்ஸ்னு பார்க்க டி என் ஏ டெஸ்ட்டா இப்போ எடுக்க முடியும்? விடுங்கம்மா.. அந்தாளை நான் பொறந்ததிலேர்ந்தே நம்பலே.. தேவையும் இல்லே.. கடவுள் எங்களுக்கு ஒரு பெரிய நன்மை செஞ்சிருக்கார்மா.. இந்த ஆள் இப்படிப்பட்ட அயோக்கியன்.. குருரமனசும் கொடூரமும் உள்ள ஆளு.. இந்த ஆளோட சம்பந்தமே எங்களுக்கு வேண்டாம்னு நான் பொறந்தவுடனே கடவுள் தீர்மானிச்சுட்டாரும்மா.. கடவுள் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்தி வந்திருக்கார்.. பாருங்க இப்போ அவனே போயாச்சு. இனிமே அவனைப் பத்தி ஒரு நினைப்பு கூட வராது எங்களுக்கு.”

     

    கல்யாண் குறுக்கிட்டான். “கோம்டி! எதுக்கு இப்போ அந்த ப்ரூஃப் கேட்கறே.. நான் இருக்கேன்ல. நான் இனிமே இவங்களைப் பாத்துக்கறேன். என்னோட கடமை கூட..!”

     

    சுமதி கல்யாணை அன்போடு பார்த்தாள். கோம்டியிடம் திரும்பிப் பேசினாள்.

    “ஆனா அந்த மொபைல் பத்தி அந்தாளுக்கு சந்தேகம் இருந்திச்சு. அந்தாளு அதுக்கப்பறம் பத்து தடவைக்கு மேலே எங்க வீட்டுக்கு வந்திருக்கான்.. ஒவ்வொரு தடவையும் விஜயா பத்தி கேட்பான். என்னைப் பத்திக் கேட்பான்.. ஏன்.. நான் இல்லாத சமயம் பாத்து வருவான்.. ஏதாவது உதவி வேணுமா கேப்பான். நாங்க ஒவ்வொரு தடவையும் துரத்தி அனுப்புவோம். அந்தாள் செத்துப்போகர்றதுக்கு  மூணு நாள் முன்னாடி ஒருதடவை எங்கம்மாகிட்டே வந்து பேசினான். அவங்க அப்போ கொஞ்சம் மயக்கமா ரொம்ப வீக்கா இருந்தாங்க. நல்ல வேளையா விஜயாவை என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருந்தேன். அப்போ அம்மா கையிலே ஒரு டாகுமெண்ட் கொடுத்தான். அதுல அவனோட பேங்க் அக்கவுண்டல இருக்கற பணத்துக்கு அவனுக்கப்பறம் நாமினியா தன் பொண் சுமதி பேரைக் கொடுத்து. அந்தப் பணம் சுமதிக்குதான் சேரணும்னு நோடரி பதிவு பண்ணி ஒரு டாக்குமெண்ட் கொடுத்துட்டுப் போயிட்டான். நான் வந்ததும். எனக்குக் கொண்டு வந்து அம்மா காமிச்சாங்க. எதுக்கும்மா இதை வாங்கினே? அம்மா சொன்னாங்க.. நான் வாங்கலேம்மா.. அவன் போட்டுட்டுப் போயிட்டான்.. நமக்குப் பாவச் சொத்து எதுக்கம்மா.. யாருக்கு சேரணுமோ அவங்களுக்குக் கொடுத்துடலாம்‘னு சொன்னாங்க.. அதை எடுத்து வெச்சிருக்கேன். இனிமேதான் கல்யாண் அண்ணாவுக்குக் கொடுக்கணும். ஏன்னா எங்களுக்கு அந்தாள் கொடூரமான பாவம் செஞ்சு சம்பாதிச்ச சம்பாத்தியம் வேண்டவே வேண்டாம்.. கொஞ்சம் இருங்க.. அந்த டாகுமெண்ட் எங்கப்பா இவருதான் ப்ரூவ் பண்றதுக்கு சட்டபூர்வமா உதவும் இல்லையா.. நீங்க கேட்டீங்களே..”

     

    அவள் போய் பீரோவைத் திறந்து அந்தப் பத்திரத்தை கோம்டியிடம்  கொடுத்தாள். அவள் ஏற்கனவே சொன்னபடி பத்து ரூபாய் பதிவுத் தாளில் எழுதப்பட்ட பத்திரத்தில் இருந்ததைப் பார்த்தவள் மகிழ்ச்சியடைந்தாள்.

     

    “கல்யாண்.. எனக்கு நிறைய விஷயங்கள் புரியறது.. நிறைய விஷயங்கள் இன்னும் செய்ய வேண்டியது பாக்கி இருக்கு. ஆனால் இப்போ நீங்க உங்க கார்ல நம்மோட இவங்க ரெண்டு பேரும் வரணும். உங்க வீட்ல உங்க தங்கையை வலது கால் வெச்சு உள்ளே அழைச்சுண்டு போங்க” என்று சொன்ன கோம்டி சுமதியிடம் வந்தாள்.

     

    “இன்னிக்கு அங்கதான் வரணும் சுமதி. நீ கவலைப்படாதே.. எல்லாம் உன் நன்மைக்கேன்னு வெச்சுக்கோ. நீ யார் வீட்டுக்கு வர்றே? உங்கண்ணா கல்யாண்கிட்டே வர்றேன்னு வெச்சுக்கோ. என் கூட நீங்க ரெண்டு பேரும் வாங்க.. கிளம்பலாமா கல்யாண்..!”

     

    கல்யாண் தலையசைத்தான்.  “நீங்க சொல்றது சரிதான் கோம்டி.. அந்த வீடு எங்க தாத்தா பாட்டி சொத்தை வித்துட்டுதான் பெரியப்பா என் பேர்லதான் வாங்கினாரு. அது என் வீடுதான்.. எனக்கு என்ன உரிமை அங்கே இருக்கோ அதே உரிமை அந்த தாத்தா பாட்டியோட பேத்தியா சுமதிக்கும் இருக்கு.” சுமதியைப் பாசத்தோடு கை கொடுத்து ஆதரித்தான். பெரியம்மாவையும் ஒரு கை கொடுத்து அழைத்துக் கொண்டான்.

     

    அனைவரும் கிளம்பினர்.

     

    கோம்டியின் வீடு கிலினிக். கோம்டி அங்கு இறங்கியதும் கடகடவென உள்ளே வந்து தன் கிலினிக்கின் கதவை உள்பக்கம் சாத்திக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.

     

    “சாந்தி.. இன்னிக்கு ராத்திரிக்குள்ள என் கேஸ் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி எனக்கு ரெண்டு மூணு விஷயங்க நீ உடனே செய்யணும். செஞ்சவுடனே எனக்கு வாட்சாப்ல மெஸேஜ் அனுப்பிடு. நீ என்னென்ன செய்யணும்னு சொல்லறேன்.. நல்லா கேட்டுக்கோ.”

     

    சொல்கிறாள்..

     

    அடுத்தநாள் காலை கல்யாண் வீடு

     

    வீட்டின் டின்னர் மேஜையை சுற்றி நாற்காலிகளை வைத்திருந்தார்கள்.

     

    எல்லோரும் உட்கார அந்த பெரியம்மா மட்டும் ஹால் கூட்டத்தில் இல்லை. சுமதி வந்திருந்தது முரளிக்கும் சுந்தருக்கும் மட்டும் வித்தியாசமாக இருந்தது.  இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார். முரளியையும் சுந்தரையும் பற்றியும் அவர்கள் பெரியப்பாவுடன் சண்டை போட்ட விதமும் சொன்னார்.

     

    “மிஸ்டர் கந்தசாமியோட இறப்புல இங்கே உள்ள எல்லோருக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கத்தான் செய்யறது.. முதல்ல கந்தசாமியோட எப்பவுமே பிரியாம இருந்த முரளி.. அவர் விஷயம் சுந்தருக்கும் சுமதிக்கும் தெரியாது.. ஆனா இங்க இருக்கற. அவரோட மனைவி பிரியாவை முரளியின் இஷ்டத்துக்கு விரோதமா கல்யாணம் பண்ணி வெச்சதிலேர்ந்து பிரியாவை எப்படியாவது தன் வசப்படுத்தவேண்டும்னு கந்தசாமி செஞ்ச முயற்சியை முரளியும் பிரியாவும் அதைத் தடுத்துண்டே இருந்ததையும் கந்தசாமி கோபமா முரளியைத் திட்டுனதையும் அதுக்குப் பதிலா இவரும் திரும்ப திட்டினதையும் முரளியே சொன்னதை கோம்டி எனக்கு விவரமா சொல்லியிருக்காங்க.. ஆனா சம்பவம் நடந்த நாள்ல அந்த நேரத்துல அதாவது மாலை அஞ்சு மணிலேர்ந்து அஞ்சறை வரைக்கும் அவர் ஆஃபீஸ்ல இருந்ததுக்கான சாட்சிகளை  முரளி கொடுத்துருக்கார்ங்கற ஒரு காரணம் மட்டுமே அவரைக் கொலையாளி பட்டியல்லேர்ந்து நீக்கினாலும் அவர் ஆளை வெச்சுக் கொலை பண்ணியிருக்கலாம்ங்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.”

     

    முரளி எழுந்தான்..

    “இன்ஸ்பெக்டர்.. இது ரொம்ப அநியாயம்.. என்னோட தகவல் பூரா நான் கொடுக்கணும்னு அவசியமே இல்லேன்னாலும் நான் உண்மையை பரிபூர்ணமா சொல்லியிருக்கேன். நான் அவரோட இறப்புல சம்பந்தப்படலே.. ஆனா சுமதியைப் பார்த்தப்பறம் அவர் ஏன் கோபமா வரணும்னு ஏற்கனவே போலீஸ்ல கம்ப்ளெயின் பண்ணினேன்.. இதோ சுமதியும் இங்க இருக்கறதால சுமதி சொல்லட்டுமே.. அவர் எதுக்காக அத்தனை கோபத்தோடு சுமதி வீட்லேர்ந்து வெளியே வந்தார்னு.. என் மேல மாத்திரம்தான் சந்தேகப்படறீங்களே.. என்ன நியாயம் இது?”

    தொடரும்

     

    Share
  • திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி திருக்கோயில்

    திருஅஞ்சைக்களம் திருக்கோயில்

    இறைவர் திருப்பெயர்:   அஞ்சைக்களத்தீசுவரர், மகாதேவர்

    இறைவியார் திருப்பெயர்: உமையம்மை

    தல மரம்:  கொன்றை மரம்

    தீர்த்தம் :  சிவகங்கை

    வழிபட்டோர் : பரசுராமர், அப்பர், சேரமான் பெருமான் நாயனார்,  சுந்தரர், சேக்கிழார்

    கோவில் திறந்திருக்கும் நேரம் – காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

    கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்.

    அமைவிடம்

    இக்கோயில் கேரளாவில் சென்னை – கொச்சி  இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா  நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திருச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இத்தலம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.

    பரசுராமர் தன் தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதாரத் தலமும், முத்தித்தலமும் இதுவே ஆகும். கழற்றறிவார் நாயனார் பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சேரநாட்டை ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார்  இத்தல இறைவனின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும்போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அதனைக் கேட்ட பின்பே, உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறைவனை வழிபடும்போது, சிலம்பொலி கேட்காததால், தன் வழிபாட்டில் குறை இருப்பதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது அங்கு சிலம்பொலி கேட்டது. அங்கு காட்சியளித்த சிவபெருமான், தான் சோழ நாட்டிலுள்ள சுந்தரர் எனும் பக்தரின் இனிமையான பக்திப் பாடலில் மெய்மறந்து அவரை கவனிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் சிலம்பொலி கேட்கச் சிறிது காலதாமதமானதாகவும் கூறினார். உடனே மன்னன், சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்து, அவரைத் தேடி அவரோடு நட்பு கொண்டார். பின்னர் சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்குளம் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை மண்டலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிபட்டார். அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவே, அங்குள்ள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு இறுதியாக திருவஞ்சைக்களம் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி ‘தலைக்குத் தலை மாலை’ என்னும் பதிகம் பாடினார்.

    “தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே

    சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே

    அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே

    அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே

    மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள்

    வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

    அலைக்கும் கடலங் கரைமேல் மகோதை

    அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.”

    ——(சுந்தரர் தேவாரம்

    இதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பினார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர். அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார்.

    சிறப்புகள்

    கேரள பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இங்கும் வெடிவெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடை யானை வந்த மேடை எனப்படுகிறது. கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை இங்கு வந்து சுந்தரரை கைலாயத்திற்கு அழைத்துச்சென்ற பெருமையுடையது.

    மூலவர், பிற சன்னதிகள்

    இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் மிகச்சிறிய சிவலிங்கம். விமானத்தில் யோக நரசிம்மர் உருவம் அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர், சேரமான் பெருமாள் பூசித்த பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் “திருவஞ்சைக் களத்து சபாபதி” என்றெழுதப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். மக்கள் வழக்கில் திருவாஞ்சிக்குளம் என்று வழங்கப்படும்  இக்கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது – சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்தில்  எண் திசை நாயகர்களின் உருவங்கள் உள்ளன. இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், காளை, நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கின்றன.  மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது.  கிழக்கு இராசகோபுர முன்புறத்தில் நுழையும்போது, பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து ஏற்றிச் சென்றதாக ஐதீகம்)

    விழாக்கள், வழிபாட்டு நேரம்

    மாசி மாதம் மகா சிவராத்திரியும், அமாவாசையில் ஆறாட்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுந்தரர் கைலாயம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் திருநீராட்டு செய்து விழா கொண்டாடப்படுகிறது. கேரள வழிபாட்டு முறையில் இத்திருக்கோயிலில் (தந்திரமுறையில்) வழிபாடுகள் நடந்தாலும், இந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம வழிபாடு நடைபெறுகின்றது. இங்குள்ள மர வேலைப்பாடுகள் காணத்தக்கவை. சங்க காலச் சேரர்களின் தலைநகரம் வஞ்சி. சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று, ஆண்டுதோறும் கோவை, சேக்கிழார் திருக்கூட்டத்தார் இத்தலத்திற்கு வந்து சுந்தரர், சேரமானுக்கு திருநன்னீராட்டு செய்து இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு கருதி, கொடுங்கோளூர் பகவதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுந்தரர், சேரமான் சிலைகளுக்கு அங்கேயே உள்ள திருமண்டபத்தில் நன்னீராட்டு செய்து அலங்கரித்து யானை குதிரை வாகனங்களில் வைத்து, திருஅஞ்சைக்களத்திற்கு விழாப்பொலிவுடன் எடுத்துச் செல்லப்பட்டு, இத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இறைவனின் பெரும் கருணையை அறிந்து மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் போற்றி, ‘தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார்.

    வெள்ளையானையின் மீதேறிக் கயிலை சென்றபோது சுந்தரர் பாடியருளியது வருமாறு:

    “தான்எனை முன் படைத்தான்; அதுஅறிந்து,
    தன் பொன் அடிக்கே
    நான்எனைப் பாடல்? அந்தோ! நாயினேனைப்
    பொருட்படுத்து,
    வான்எனை வந்து எதிர்கொள்ள,
    மத்த யானை
    அருள் புரிந்து, ஊன்உயிர் வேறு செய்தான் –
    நொடித்தான்மலையே.”
    — சுந்தரர் 

    இந்தப்பாடல் முடிவடைந்த நிலையில் சுந்தரரும் இறைவன் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சுந்தரர் இறுதியாகப் பாடிய பாடலைத் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி இறைவன் ஆணையிட, வருண பகவான் அப்பாடலைக் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறது ஆலயத்தின் வரலாறு.
    இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான குலசேகர ஆழ்வார் அவதரித்த தலம் இது.

    சேரமன்னர்களின் பிரதான தெய்வமாதலால் இவ்விறைவனுக்கு திருவஞ்சிக்குளம் மகாதேவர் என்று பெயர். இது மருவி அஞ்சைக்களம் என்று ஆனது. இங்கு சங்காபிசேகம் சிறப்பான வழிபாடாகும். பிரம்மோத்சவம் மாசி மாதத்தில் 8 நாள் நடைபெறுகிறது. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன. வெள்ளைக் கிணறு முக்கியமானது. அமாவாசையில் ஆறாட்டு (தீர்த்தவாரி) உற்சவம். திருக்கோயிலின் முன்பு இருந்த கோபுரங்கள் 1670ல் இடாய்ச்சுக்காரர்கள் தாக்குதலில் உடைக்கப்பட்டன. மேற்குப் பகுதி கோபுரத்தின் கீழ் இரண்டு நிலைகள் மட்டும் எஞ்சின. திப்பு சுல்தானின் கொடிய தாக்குதலால் திருக்கோயில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. திருக்கோயில் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள மலையாள எழுத்தில் உள்ள சமசுகிருதக் கல்வெட்டு, ‘சமயப் புறத்தோனால் தகர்க்கப்பட்ட திருக்கோயிலை பலியத் கோவிந்தன் அச்சன் என்பவர் மீண்டும் எடுத்துக் கட்டிய’ செய்தியைத் தெரிவிக்கிறது.

    “சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே

    சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால்

    முந்தித் தொழுவார் இறவார் பிறவார்

    முனிகள் முனியே அமரர்க்கமரா

    சந்தித்தடமால் வரைபோற்றிரைக (ள்)

    தணியாதிடறுங் கடலங்கரைமேல்

    அந்தித் தலைச் செக்கர் வானே யத்தியா (ல்)

    அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே” (சுந்தரர்)

     

    “நஞ்சை களத்துவைத்தநாத எனத் தொண்டர் தொழ

    அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே.‘ (அருட்பா)

    அஞ்சல் முகவரி –

    மகாதேவ சுவாமி திருக்கோயில்

    திரு வாஞ்சிகுளம் – அஞ்சல்

    (வழி) கொடுங்களூர் – 680 664.

    கேரளா – திருச்சூர் மாவட்டம்.

     

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம்  – பகுதி 27

     

    63 நாயன்மார்கள் வரலாறு   – 24. நமிநந்தியடிகள் நாயனார்

    நமிநந்தியடிகள் நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்து, வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்த, அடியவர்கள்பால் மாறாத அன்பு கொண்டவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் நாயனார் பெருமான். சோழ வளநாட்டில் திருவாரூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் ஆறாவது மைல் தொலைவில், தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படும் ஏமாப்பேரூர் எனும் தலத்தில் அவதரித்த இவர், திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இத்தலத்தின் மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராசன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

    இவ்வாரூர் திருக்கோயில் திருமதிலுக்கு அருகில் அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ள இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.  நமிநந்தியடிகள் அரநெறி அண்ணலை கண்ணீர் சொரிந்து வழிபட்டார். அத்திருக்கோயிலில் அழகாக விளக்குகள் பல ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது கதிரவன் மறையும் பொழுது. தமது இல்லம் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்றலாம் என்றால் அதற்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, சமணர் வீடு என்று அறியாமல் எம்பெருமானுக்கு விளக்கேற்ற நெய் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன் கையில் தீயை வைத்துள்ள அவருக்கு விளக்குக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்” என்று ஏளனம் செய்தனர்.

    கையில் விளங்கும் கனல் உடையார்

      தமக்கு விளக்கு மிகை காணும்

    நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்

      ஆகில் நீரை முகந்து எரித்தல்

    செய்யும் என்று திருத் தொண்டர்க்கு

      உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்

    பொய்யும் மெய்யும் ஆம் என்னும்

      பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.

    சமணர்கள் எம்பெருமானை ஏளனம் செய்ததை எண்ணி அழுது தொழுத நாயனார், அரநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது வான்வெளியில் ஒரு குரல் ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். திருவிளக்குப் பணி நிறைவடைய நெய்தானே வேண்டும். ஏளனம் செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

    பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! உலகம் வியக்க விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

    சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்

      சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி

    ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்

      அடைய விளக்கு ஏற்றி

    ஏதம் நினைந்த அருகந்தர்

      எதிரே முதிரும் களிப்பினுடன்

    நாதர் அருளால் திரு விளக்கு

      நீரால் எரித்தார் நாடு அறிய

    வீட்டில் அனுதினமும் வழிபாடு செய்வதற்காக நள்ளிரவில் புறப்பட்டுச் செல்வார். மீண்டும் திருவாரூரை அடைந்து திருக்கோயிலின் உள்ளும் புறமும், நீரினால் விளக்கேற்றினார். ‘நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே’ என்று நாவுக்கரசர் பெருமானார் பாடியருளினார்.

    திருவாரூருக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப் பெருமாள் எழுந்தருளுவார். மக்களுடன் நமிநந்தியடிகளும் அங்கு சென்று வழிபட்டு வீடு வந்தவர், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தவாரு, மனைவியை அழைத்து, பல தரப்பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத்தான் வழிபாடு  செய்ய வேண்டும் என்பதால் வெந்நீர் தயார் செய்யவும்  கூறினார். உடல் அசதி காரணமாக மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் திண்ணையில் கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் பேரொளியாகத் தோன்றிய திருவாரூர்ப் பெருமான், திருவாரூரில் பிறந்த அனைவருமே நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று கூறினார்.

    மேன்மை விளங்கும் திருவாரூர்

      வீதி விடங்கப் பெருமாள்தாம்

    மான அன்பர் பூசனைக்கு வருவார்

      போல வந்து அருளி

    ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்

      எல்லாம் நம் கணங்கள்

    ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்

      செய்து அங்கு எதிர் அகன்றார்.

    கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். திருக்கோயிலுக்கு வந்தவர்கள் யாராயினும் அவர்கள் சிவனடியார்கள் என்று கருதாதது மிகப்பெரிய குற்றம் என்று வருந்தினார். பின்னர் குளிக்காமலே உடனே சென்று வழிபாடு செய்யலானர். விடியற்காலை எழுந்து வழிபாட்டை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கிச் சென்றார். கனவில் பெருமான் குறிப்பிட்டது போன்று அவர் திருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவனடியார்களாகவும், ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சியைக் கண்டார். உடனே நமிநந்தியடிகள் நாயனார் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினார். எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கி மன்னிப்பும் வேண்டினார். திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டு பல செய்து வந்தார்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்ததும் இவ்வடியாரே ஆவார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார்.

    சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்தில் தொண்டற்காணி என்று சிறப்பித்துப் பாடப்பட்டார்.

    சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.

    நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்

        நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க

    வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு

        ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

    கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்

        காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே

    யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்

        காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

     

    நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்

     துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்

     விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்

    அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே

    என்ற தேவாரப் பாடல் விளங்கச் செய்கிறது.

    சிவ வடிவம் ஒளிமயமாதல் என்பதனை, தேவாரத்தில் “திருவையாறகலாத செம்பொற் சோதி” என்றும்,

    திருவாசகத்தில், ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” – “சோதியாய்த் தோன்றும் உருவமே” – “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” எனவும், கந்தரலங்காரத்தில் “ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்” எனவும் வருவனவற்றாலும் அறியலாம்.

    மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவேயிருக்குமெனல், விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்னும் திருமந்திரத்தால் அறியப்படும்.

    “தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை

    ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

    நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்

    கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே”

     எனும் தேவாரப் பாடலால் அறியலாம்.

     “விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே” என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள்.

    வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்” எனவும்,

    “இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய” எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களால் அறியப்படும்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பல்லழகன் – பகுதி – 19

     

    திவாகர்

     

    “சரி, கல்யாண் ஞாபகமிருக்கா?”

     

    “கல்யாண்.. அது யாரு? சாரி, மேடம் உங்களையும் நான் பார்த்ததில்லே.. கல்யாண் யாருன்னும் தெரியாது.!”

     

    “ஓ! அப்போ நீங்க திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி இல்லையா?”

     

    “அது நான்தான்.. என் பேரை அப்படி யாரும் கூப்பிடமாட்டேங்க.. மூர்த்தின்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ கூட என் தம்பியோட மோட்டார் சைக்கிள் திருட்டு போயிடுச்சு. அதுக்குக் கம்ப்ளயின் கொடுக்க என் பேரை மூர்த்தின்னுதான் கொடுத்தேன்.. எப்படியோ என் முழு பேரு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. அதுவும் அழகான பொண்ணு வாயால இப்படில்லாம் கூப்பிடறதுக்கே கொடுத்து வெச்சிருக்கணுங்க.. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. நான் வரேங்க..”

     

    என்று சொல்லிவிட்டுப் போனவனைத் தடுக்கிறாள்.

     

    “என்ன மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி.. இவ்வளோ சீக்கிரம் மறந்துட்டா எப்படி? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க விசாகப்பட்ணம் ரயில்வே ஸ்டேஷன்ல ஹவ்ரா மெயில் ஏற வந்தீங்க.. உங்க நண்பர் கல்யாண் ஏஸி கோச்லயும் நீங்க எஸ்-! கோச்’லயும் ட்ராவல் பண்ணீங்களே.. மறந்துட்டீங்களா..”

     

    “ஓ.. நீங்க அங்க இருந்தீங்களா.. ஆமாங்க நம்ம தெத்துப்பல்லன் இருந்தான் இல்லே…. ஓ.. ஆமாம்.. அவன் பேருதான் கல்யாண் இல்லே..ஓகே.. ஓகே.. இப்போ ஞாபகம் வந்துடுத்து.. நீங்க கூட அந்த ஏஸி கோச் கீழே நின்னுட்டிருந்தீங்க.. தெத்துப்பல்லன் மிஸஸா.. நீங்க.. ஓ! சாரிங்க.. அப்போ உங்க எதிருல இனிமே கல்யாண்னுதான் கூப்பிடணும்.. சின்ன வயசுலேர்ந்து திருச்சி ஸ்கூல்லேர்ந்து சினேகிதம் இல்லையா..”

     

    அவன் பேச, அவள் பேச.. பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. அவள் அவனிடம் விடைபெறுகிறாள்.

     

    கோம்டி கல்யாண் வீட்டுக்கு வருகிறாள்  அங்கே ரவியும் இருப்பதைப் பார்க்கிறாள்.

     

    “என்ன கோம்டி! சுமதி பத்தி எனக்கு இப்போதான் கல்யாண் சொன்னான். சாந்தி கூட இப்போ வரைக்கு இதுபத்தி வாயே திறக்கலே.. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சுமதி ரொம்ப பாவப்பட்ட பொண்ணுதான்.’

     

    ‘சரிதான்.. பாவப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சுதான் நீ அவ கூட சுத்தறியாடா.. எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே..’

     

    ரவி ஆச்சரியமாக் அவளைப் பார்க்கிறான்.. ‘ஹேய்.. உனக்கு எப்படித் தெரியும்?  இது சாந்திக்குத் தெரியுமா?’

     

    ‘தெரியுமே.. நானும் அவளும் சேர்ந்துதானே உங்க மூணு பேரையும் பார்த்தோம். சூபர் மால்ல அன்னிக்குக் காலைல மேட்சிங்க் பார்த்துப் பார்த்து டிரெஸ் வாங்கினீங்களே..’

     

    கல்யாண் எழுந்தான். மேலும் கீழும் அவளைப் பார்த்தான். ‘கோம்டி! உங்க மனசுல இன்னும் ஒரு குறை இருக்கு இல்லே!’

     

    “கரெக்ட்! இன்னும் ஒரே ஒரு குறை இருக்கு கல்யாண். அதையும் தீர்த்துட்டோம்னா நாளைக்கு நிதானமா எல்லாத்தையும் முடிச்சுடலாம்.. நாம சுமதியை விசாரிக்கவே இல்லை.. எனக்கு அவளைப் பத்தி தெரியும்.. இருந்தாலும் இந்தக் கொலை நடந்த பிறகு ஒருவாட்டி சந்தேகம் தீர விசாரிச்சுட்டா எனக்கு ஒரு நிம்மதி இருக்கும்.. என்ன சொல்லறீங்க.. நீங்க ரெண்டு பேரும் கூடவே இருக்கணும்?”

     

    “நிச்சயமா கோம்டி.. ஆனா இப்போ சுந்தர் வரணுமே.. நான் அவனுக்காக வெயிட் பண்றேன்..”

     

    “சுந்தர் வரமாட்டான் கல்யாண்.. அவன் எஸ்கேப் ஆகறதுக்கு ட்ரை பண்றச்சே போலீஸ் பிடிச்சாச்சு. நாளைக்கு இன்ஸ்பெக்டர் மோகனோட வருவான்.”

     

    “சுந்தர் தப்பிக்கப் பாத்தானா.. பிடிச்சுட்டாங்க இல்லே.. போகட்டும்.. இப்போ நாம சுமதி வீட்டுக்குப் போகணும்.. வாங்க இப்பவே போலாம். என் கார்லயே போலாம்.”

     

    கல்யாண் காரில் போகிறாள். மூவரும் சுமதி வீடு இருக்கும் சாலையில் காரை நிறுத்தி விட்டு சுமதி வீட்டுக்குள் நுழைகிறார்கள்

     

    சுமதி வீடு

    சுமதி வீட்டின் முன்னறையில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அவள்  முகத்தில் கல்யாணைப் பார்த்ததும் புன்னகை.. கல்யாணும் அவளிடம் அன்பாகப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகிறான். சுமதி வருகிறாள். இருவரையுமே ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.

     

    “என்ன டாக்டர்.. எப்படி இருக்கீங்க.. அட கல்யாண் அண்ணா கூட வர்றீங்க..”

     

    சுமதியின் தோளில் தட்டி அன்பாகப் பேசுகிறாள்.

     

     

     

    “இப்போ எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க? நான் லாஸ்ட் டைம் இங்க வரச்சே உங்கம்மா ரொம்ப கோபமா இருந்தாங்க.. ஆனா இப்போ சந்தோஷமா இருக்காங்க.. அன்னிக்கு நாம சரியா பேச முடியலே.. அந்தாளு கந்தசாமிகிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொன்னே.. ஞாபகமிருக்கா.. இப்போ அந்த ஆளே போயாச்சு.. கல்யாண் சார்புல இந்த கேஸுல நான் தலையிட்டுருக்கேன். உனக்குதான் தெரியுமே.. இன்வெஸ்டிகேடிவ் வேலையும் நான் பண்ணறேன்னு.. அதனால உன்கிட்டே கொஞ்சம் தகவல் வேணும்னு கல்யாணையும் கூப்பிட்டுண்டு வந்திருக்கேன்.”

     

    “எங்கிட்டே என்ன டாக்டர் தகவல் வேணும்? கந்தசாமிதான் போயாச்சே.. விட்டுடுங்கம்மா.. அந்த ஆளு ரொம்ப ரொம்ப மோசமானவன்மா.. அவன் போனது நல்லதுதான். நீங்களே பார்த்தீங்க இல்லம்மா.. விடுங்க..”

     

    “இல்லே சுமதி! எனக்கு சில விஷயங்கள் தெரியணும்.. இந்த வீட்டுல மூணு பேருன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரே.. அவரே பார்த்தாரே.. இன்னொருத்தர் எங்கம்மா?”

     

    “ஓ.. என் தங்கையை கேக்கறிங்களா? அவளை இப்போ ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கேன்மா.. அடுத்த வாரம் ஆபரேஷன்மா. இதோ கல்யாண் அண்ணாதான் எல்லா செலவையும் ஏத்துண்டு இருக்கார்.”

     

    “அவ உன் தங்கையா சுமதி.”.

     

    ஆச்சரியமாக பார்த்தாள் சுமதி..

    “டாக்டர்.. விட்டுடுங்க டாக்டர்.. எதுக்கு எல்லாம் மறுபடியும் சொல்லணும்..வேண்டாம்.. விடுங்க..”

     

    “விடமுடியாது சுமதி.. நான் எங்கம்மாகிட்டயே அன்னிக்கு உனக்காக சண்டை போட்டேன் தெரியுமா.. எப்படியும் போலீசுக்குப் போயி தகவல் தெரிவிப்பேன்னு சொன்னப்போ நீ ஒரு விஷயம் சொன்னியாம்.. உனக்கும் கந்தசாமிக்கும் ஏதோ ஒரு உறவுன்னு.. நான் அன்னிக்கு விட்டுட்டேன். ஆனா போலீசுக்கு அன்னிக்கே சொல்லியிருந்தா அந்த ஆள் இன்னிக்கு ஜெயில் களி தின்னுண்டுருப்பார்.. ஒரு கொலையையும் தடுத்திருக்கலாம் இல்லையா..”

     

    அப்போது வரை சும்மா இருந்த சுமதியின் அம்மா இப்போது வந்தாள். சுமதியைத் திட்டினாள்.

     

    “எத்தனை நாளைக்கு மறைச்சு மறைச்சு வெச்சிருப்பேடி.. சொல்லிடு.. ஊருக்கெல்லாம் தெரியணும்.. இதோ கல்யாண் தம்பியும் வந்திடுச்சு இல்லே.. நம்ம மடியில கனமில்லேடி.. நமக்குப் பயமும் இல்லை..டாக்டரம்மா.. நான் சொல்லறேன்.. இதை நீங்க வெளியே சொல்லறதும் சொல்லாததும் உங்களுக்கு விட்டுடறேன்..”

     

    ‘ஆமாம் சுமதி.. எல்லாத்தையும் கோம்டி தெரிஞ்சுகட்டும்னுதான் நான் அவங்களை இங்கே அழைச்சுண்டு வந்தேன். அம்மா சொல்ற மாதிரி நம்ம மடியில என்ன கனம்? உண்மை ஊருக்கும் தெரியட்டுமே. ‘ கல்யாண் சொன்னதும் அவள் அம்மா அழுதாள். சுமதிக்கும் கூடவே கண்ணீர் வந்தது. கல்யாண் அவள் அம்மாவின் தோளைப் பற்றித் தடவிக்கொடுத்தான்.

     

    சுமதி மெதுவாகப் பேசினாள். “டாக்டரம்மா.. இது ரொம்ப வருஷக் கதை.. அந்த கந்தசாமியைப் பத்தி நான் எதுவும் இப்போவரைக்கும் பேச விரும்பலேன்னா காரணம் இருக்கும்மா.. இதோ எங்கம்மா இருக்காங்களே.. இவங்க வேற யாருமில்லேம்மா.. கந்தசாமியோட பெண்டாட்டிதான்.”

     

    கந்தசாமிக்கு கல்யாணம் ஆயிருச்சா? கோம்டி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

     

    சுமதி பெருமூச்செறிந்தாள். ‘அதாவது தாலி கட்டாத பெண்டாட்டி.. அவங்களுக்குப் பிறந்தவதான் நான்.. இதெல்லாம் கல்யாண் அண்ணாவுக்குக் கூட சமீபத்துலதான் தெரியும். எங்கம்மாவை திருச்சியில பார்த்துட்டு அவங்க ரொம்ப அழகா இருந்தாங்கன்னு எப்படியோ வளைச்சுப் பிடிச்சுக் கல்யாணம் கட்டறேன்னு பொய் சொல்லி அங்கயே யாருக்கும் தெரியாம குடும்பம் நடத்திட்டு நான் பொறந்தவுடனே எங்கம்மாகிட்ட வர்றதையே நிறுத்திட்டாரும்மா..

    எங்கம்மாக்கு என்ன பண்றதுன்னு தெரியாம என்னையும் தூக்கிண்டு அவங்க வீட்ல போய் அவங்க அப்பா அம்மாகிட்டே போய் சொல்லணும்னு போனா எங்கம்மாவை அவரே வாசல்ல நிறுத்தி எங்களை திருப்பி அனுப்பிச்சிட்டாரு. அதுக்கப்பறமா பணம் கொடுத்தாராம். எங்கம்மா அந்தப் பணத்தைத் தூக்கி அவரு மேலயே போட்டு தாலி கட்டிட்டு குழந்தைக்கு அப்பனா இருந்தா வா’ன்னு சொல்லிட்டு அவரை துரத்திட்டாங்க.. பாவம்.. அந்தாளோட இருந்த பாவத்துக்காக நான் பொறந்தாலும் எங்கம்மாவுக்கு என் மேல பாசம் அதிகம்.. நாலு வீட்டுல பத்துப் பாத்திரம் தேச்சு அதுல வந்த பணத்துலதான் என்னை வளர்த்தாங்க.. திருச்சிலயே நர்ஸிங்க் பண்ணவெச்சுட்டு வேலை பண்ண சென்னை வந்தோம்மா.. உங்க கிலினிக்லதான் எனக்கு முதல் வேலை கொடுத்தீங்க.. சந்தோஷமா பார்த்தீங்க.. எங்கம்மாவுக்கு மனசு சரியில்லாம இருந்ததாலே அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வரும்.”

     

    “உங்கப்பாதான் கந்தசாமின்னு உனக்கு இவங்க எப்போ சொன்னாங்க சுமதி?”

     

    “நான் உங்க கிலினிக்ல வேலை செய்யறச்சே முதல்ல தெரியாதும்மா.. எதுக்குன்னா அவரோட முகமே எனக்குத் தெரியாது, அந்த ஆளும் தனக்கு ஒரு குழந்தை பொறந்துருக்கு அது கஷ்டப்பட்டு வளருதுங்கிறது நல்லா தெரிஞ்சாலும் அந்த நினைவே இல்லாம இத்தனை வருஷம் காலம் தள்ளிட்டாரு.”

     

    “அப்போ எப்போதான் இவருதான் உன் அப்பான்னு உனக்குத் தெரிஞ்சுது. நம்ம கிலினிக்ல கிட்டதட்ட ஒருவருஷம் வேலை செஞ்சிருக்கே.. எதிர்வீடு வேறே..  ஐ மீன் என் க்லினிக்ல அன்னிக்கு சண்டை வரச்சே உன்னைத் துன்புறுத்தி எதையோ உன்கிட்டேயிருந்து பிடுங்கினாரே.. அன்னிக்கு அவரு உங்கப்பாதானு தெரியாதா?”

     

    “அன்னிக்குத் தெரியும்.. அதாவது அன்னிக்கு மூணு நாள் முன்னாடிதான் இவரோட உறவும் இவரோட கதையும் தெரியும். நான் உங்ககிட்டே வேலை பண்ணும்போதே மார்னிங்க் சமயத்துல இன்னொரு ஆஸ்பத்திரில பார்ட் டைம் வேலை பண்ணிண்டு இருந்தது உங்களுக்குத் தெரியும். அங்க எங்கம்மாவை ஒரு நாள் அட்மிட் பண்ணிட்டு க்ளூகோஸ் ஏத்திண்டிருந்தேன். அப்பதான் இந்த கந்தசாமி ஒரு சின்னப் பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்து அங்க அட்மிட் செஞ்சார். அந்தப் பொண்ணுக்கு உடம்பெல்லாம் காயம். அட்மிட் பண்ணிட்டுப் போனவுடனே எங்கம்மா அவரைப் பாத்துட்டு அந்தக் கடங்காரன் இங்கே ஏண்டி வந்தான்னு என்னைக் கேட்டாங்க. விவரம் சொன்னாங்க. எங்கம்மாவை அந்த ஆள் பாக்கலே. நானும் சரியா பாக்கலே. அவரு போனவுடனே உடம்பெல்லாம் புண்ணாகிப் போன அந்த சின்னப் பொண்ணைப் போய் கேட்டேன். அந்தப் பொண்ணு ஒரே அழுகைதான். என்னம்மா சொல்லும்மான்னு ரொம்பவே பயந்து போய் ஒடுங்கிப் படுத்துடுச்சு. ஆதரவா கேக்கறச்சே அது ஒரு அனாதைப் பொண்ணு.. இங்கே ஆசிரமத்துல இருக்கறச்சே இந்த ஆள் கடற்கரைக்குப் போகலாம்னு சொல்லி கடற்கரைல மயக்க மருந்து போட்டு அப்படியே யாருக்கும் தெரியாம கார் பின்னாடி டிக்கில படுக்க வெச்சிருக்கான். தன்னைக் கடத்திண்டு போய் சின்னஞ்சிறிசுன்னு கூடப் பார்க்காமே வெறி பிடிச்ச நாயாட்டம் குதறிக் கெடுத்துட்டு அத்தோட துணியில்லாம அவளோட உடம்பை கன்னா பின்னான்னு போட்டோ எடுத்துருக்கான். அது அழுது சத்தம் போடுதுன்னு சின்னக் குழந்தைன்னுப் பாக்காம அடிச்சிருக்கான்மா. இந்த ஆஸ்பத்திரி டாக்டர் தெரிஞ்சவர்னு இங்கே வைத்தியம் பண்ணியிருக்கான். ஆசிரமப் பெண்களுக்கு இவருதான் டாக்டராம்.. வாழவேண்டிய பொண்ணும்மா.. சின்னப் பிஞ்சுக் குழந்தைம்மா அது..” என்று சொல்லிவிட்டு சுமதி அழுதாள். சுமதியின் அம்மா கூடவே அழுதாள்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். “இப்படிப்பட்ட வெறிபிடிச்ச நாய் ஜன்மத்தை என்ன செய்யலாம் கோம்டி?” அவன் கண்ணிலும் கண்ணீர் வந்தது.

     

    கோம்டி கொஞ்சம் அமைதிப்படுத்தினாள்.

    “புரியுதும்மா.. அவருதான் உங்கப்பாங்கிறதுக்கு ஏதாவது அடையாளம் இருக்காமா? தப்பா நினைச்சுக்காதே.. ஒரு லீகலாவும் உலகத்துக்குத் தெரியணும் இல்லையா?”

     

    “இப்போவரைக்கும் அவர் லீகலா இருந்தாரா என்ன? இனிமேயும் அப்படியே இருந்துட்டாப் போச்சு. அதான் எனக்குத் தெரிஞ்சுடுச்சு இல்லையா.. இனிமே இவங்களை பாத்துக்கறது என் பொறுப்பு இல்லையா கோம்டி.””

     

    கல்யாண் சொன்னதை மறுத்தாள் கோம்டி. “எல்லா விஷயங்களுக்கும் சட்டபூர்வமான சாட்சி இருக்கணும். எனக்கு முக்கியமா அது வேணும்.”

     

    “எதுக்கும்மா?”

     

    “எதுக்குன்னு சொல்லறேன்.. அதுக்கு முன்னாடி என்னோட க்லினிக்லேர்ந்து உன்னைத் தர தரன்னு வெளியே இழுத்துண்டு போயி உன் ஹேண்ட்பேக்லேர்ந்து ஒரு சாமானை எடுத்துண்டார் இல்லையா அது என்ன சுமதி?”

     

    “டாக்டர்.. ஆஸ்பத்திரிலேர்ந்து விஜயா, அதுதான் அந்தப் பொண்ணோட பேரு.,. அவளைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணோம்.. டாக்டர்கிட்டே பேசினேன். அவர் சொன்னாரு.. அவள் கதையைப் பத்தி.. அனாதைப் பொண்ணும்மா.. அது எங்கே போனாலும் யாரும் கவலைப் படமாட்டாங்க.. நீ அழைச்சுண்டு போய் அவளைப் பாத்துக்கறதா இருந்தா தாராளமா அழைச்சுண்டு போ. ஆனா அந்த கந்தசாமிகிடே ஒரு வார்த்தை சொல்லிடு.: அப்படின்னாரு. எனக்கு கோபம்தான் வந்துது. அந்தாள்கிட்டே போய் நான் ஏன் கேட்கணும்னு நானே அந்தப் பொண்ணை இங்கே அழைச்சுண்டு வந்துட்டேன். விஷயம் கேள்விப்பட்ட கந்தசாமி எங்கவீட்டு அட்ரஸை ஆஸ்பத்திரிலே வாங்கிண்டு தேடிண்டு வந்தார். வந்தார்னு எதுக்குச் சொல்லணும்.. வந்தான்.”

     

    தொடரும்

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

                                                63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

     

    வேத உள்ளுறை ஆவன

      விரிபுனல் வேணி

    நாதர் தம்மையும் அவர்

      அடியாரையும் நயந்து

    பாதம் அர்ச்சனை புரிவதும்

      பணிவதும் என்றே

    காதலால் அவை இரண்டுமே

      செய் கருத்து உடையார்

    சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கைஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
    திருநீலநக்க நாயனாரை
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் நான்முகன்வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

    சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார்.  அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

    நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.  

    நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

        நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

    யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

        குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

    காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

        காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

    வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

        விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

    திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருவாசகத்தில்,

    சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

    மரைக ளேத்தித் தடமலர்

    சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

    அம்மநாம் அஞ்சுமாறே

    உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

     தேவாரத்தில்,

    அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

    அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

    ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

    உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

    அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

     அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

     பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

    பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

    என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

     சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

    எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

    அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

    அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

    திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

    இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

    இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

    பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

     எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

     “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

    தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

    விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
    றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
    ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
    பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

    என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

    “ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம்.  . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

    சீல மெய்த் திருத்

      தொண்டரோடு அமுது செய்தருளி

    ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

      நம்பர் நண்ணும்

    காலம் முற்பெற அழுதவர்

      அழைத்திடக் கடிது

    நீல நக்கனார் வந்து அடி

      பணிந்து முன் நின்றார். 

     

    நின்ற அன்பரை நீல

      கண்டப் பெரும் பாணர்க்கு

    இன்று தங்க ஓர் இடம்

      கொடுத்து அருளுவீர் என்ன

    நன்றும் இன்புற்று நடு

      மனை வேதியின் பாங்கர்ச்

    சென்று மற்று அவர்க்கு

      இடம் கொடுத்தனர் திருமறையோர். 

     

    ஆங்கு வேதியில் அறாத

      செந்தீ வலம் சுழிவுற்று

    ஓங்கி முன்னையில் ஒரு

      படித்து அன்றியே ஒளிர

    தாங்கு நூலவர் மகிழ்வுறச்

      சகோட யாழ்த் தலைவர்

    பாங்கு பாணியாருடன் அருளால்

      பள்ளி கொண்டார்.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • இல்லங்களில் அழகாய் இன்ப தீபம் ஒளிருதே

    மா. நந்தினி
    சேலம்

    இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
    வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
    அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
    நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
    நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
    ஒரு நாள்
    நிறைவேற்றித் தருவார்.
    தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
    உடலும்,
    மனமும் அமைதி அடையும்
    கார்த்திகை தீபம் ஏற்றும் போது
    இறைவனின் அருளை பரிபூரணமாக
    பெறலாம்!!

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மாண்புடை மாதம்
    மாதவன் சிவனை வாழ்த்திடும் மாதம்
    கோதைத் தமிழும் வாசகர் தமிழும்
    இறையின் தத்துவம் இயம்பிடும் மாதம்

    இறையின் தத்துவம் இயம்பிடும் வகையில்
    மாதங்கள் அனைத்தையும் வைத்தனர் முன்னோர்
    தையில் தொடங்கி மார்கழி வரைக்கும்
    தத்துவம் சமயம் வைத்தனர் முன்னோர்

    மார்கழி மகத்துவம் தொடரும் வகையில்
    தையில் பொங்கல் தைப்பூசத் திருநாள்
    ஆன்மீகம் அறிவியல் அனைத்தும் அளிக்கும்
    அற்புத நாளாய் அமைவது சிறப்பே

    உலக சிருஷ்டி தொடங்கிய நாளாய்
    அமைவதே தைப் பூசத் திருநாள்
    சக்தியும் சிவனும் ஐக்கிய மாகும்
    முக்கியம் மிக்கதும் இத் திருநாளே

    நீரும் சிவனே நெருப்பும் சிவனே
    மண்ணும் சிவனே விண்ணும் சிவனே
    சிவனின் நினைப்பால் வந்தவன் கந்தன்
    கந்தனைத் தந்ததும் தைப்பூச நன்னாள்

    கந்தனின் கையில் வேலினைக் கொடுத்து
    வந்திடு வினைகளைப் போக்கிடும் வகையில்
    செந் திருவான சக்தியின் செயலும்
    அமைந்த நன்னாளே தைப்பூசத் திருநாள்

    காவடி எடுப்பார் கந்தனின் சன்னதி
    கந்தனை எண்ணியே சன்னதி குவிவார்
    தைப்பூசத் திருநாள் கந்தனின் பெருநாள்
    எண்ணியே எண்ணியே அடியவர் பரவுவார்

    நல்லன அனைத்தும் தொடங்கிடும் நாளாய்
    தைப்பூசத் திருநாள் அமைவதே முக்கியம்
    ஏடு தொடக்குவார் காதும் குத்துவார்
    இறை நினைப்புடனே எல்லாம் தொடங்குவார்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    பொங்கலை  அடுத்து வந்திடும் பெருநாள்
    பக்தியை விதைக்கும் பக்குவத் திருநாள்
    இத்தரை சிறக்க மலர்ந்திடும் பெருநாள் !

    Share
  • பல்லழகன் – பகுதி – 18

     

    திவாகர்

     

    “டாக்டர் கோம்டி’ன்னு போர்ட்’ல பார்த்தேன்.. அது நீங்கதானா..”

     

    “நீங்க யாரு சார்?. முதல்ல க்லினிக்ல வர்றதுக்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு வாசல்லயே போர்ட் போட்டுருக்கோமே.. பார்க்கலியா..”

     

    “நான் பல் கன்சல்டிங்க்கு வரல்லே.. இங்க ஒரு பொண்ணைப் பார்த்தேன். இப்போ எங்க அவ?”

     

    “மரியாதையா பேசுங்க.. அவ கிவன்னு சொன்னா நான் போலீஸைக் கூப்பிடுவேன். நீங்க யாரு? உங்க பேரு என்ன.. சரி, அதெல்லாம் வேணாம்.. நீங்க முதல்ல வெளியே கிளம்புங்க..”

     

    “இல்ல.. அவ.. அதாவது சுமதியை அந்தப் பொண்ணு உள்ள  நுழைஞ்சு போனதை நான் பார்த்தேன். சுமதி எங்கேன்னு சொல்லறியா.. இல்ல நானா தேடிக்கட்டுமா?”

     

    சாந்திக்குக் கோபம் கூடவே வந்தது.

    “மிஸ்டர்.. ஜாக்கிரதை.. க்லினிக்ல வந்து அநியாயமாப் பேசறதோட இல்லாமல் மரியாதை இல்லாம கத்தறே.. இரு இரு நான் போலீஸைக் கூப்பிடறேன்” என்று சொல்லி ஃபோனை எடுத்தாள். அதற்குள் அந்த ஃபோனைப் பிடுங்கிப் போட்டு சாந்தியின் கையைப் பிடித்து கெட்டியாக முறிக்கப் பார்த்தார்.

     

    “என்னோட சுமதியை ஒளிச்சு வெச்சுட்டு பயமுறுத்தறியா? நான் யார் தெரியுமா.. மரியாதையா சுமதியை உள்ளேயிருந்து கூப்பிடு.. இல்லே.. உங்க ரெண்டு பேரையும் பொம்பளைங்கன்னு பார்க்காம கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை!” என்று கத்திய கந்தசாமியைப் பார்த்து கோம்டி கத்தினாள்.

     

    “யோவ்.. அவ கையை விடுய்யா.. இப்போ வெளியே போகறியா இல்லே நாங்களே துரத்திடுவோம்.. ஹேய் சாந்தி, உன் கைல கிடைக்கிற பேப்பர் வெயிட்டால அவன் மண்டைல போடு..” இப்படிச் சொல்வதற்குள் கந்தசாமி கோம்டியைப் புறம் தள்ளி பின் கதவைத் திறந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். வீட்டுக்குள் இருந்தோர் கத்தினர். அவள் அம்மாவும் அப்பாவும் கந்தசாமியைத் தடுத்தாலும் அவர்களையும் தள்ளி விட்டு இன்னொரு அறைக்குள் பதுங்கியிருந்த சுமதியை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். வெளியே தெருவில் இருட்டாக இருந்தாலும் அப்படியே தர தரவென இழுத்துச் சென்றவர் அவளிடமிருந்த கைப்பையைத் திறந்தார். அதிலிருந்து எதையோ எடுத்தவரிடமிருந்து அவர் கையைப் பிடித்து தன் வாயால் கடித்து அவரை விட்டு வெளியேறி சுமதி கடகடவென தெருவில் ஓட்டம் பிடித்தாள்.

     

    “என்ன திமிரு.. போ.. எனக்கு என்ன தேவையோ அது கிடைச்சிடுச்சு.. மறுபடியும் இந்தப் பக்கம் வந்தே காலை ஒடிச்சுடுவேன்.” என்று சொல்லிய கந்தசாமி இவர்களை ஏறெடுத்துப் பார்க்காமல்  தன் வீட்டுக்குள் போய் விட்டார்.

     

    “போலீசுக்கு மொபைல்ல பேசறேன்” என்று கோம்டி சொல்லும்போது அவள் அம்மா தடுத்துவிட்டாள்.

     

    “வேண்டாம்டி.. அவன் நம்மகிட்ட எதுவும் சண்டைக்கு வரவில்லே.. விடு..”

     

    கோபத்துடன் கத்தினாள். “என்னம்மா சொல்லறே.. நம்ம சாந்தியை கையைப் பிடிச்சு முறுக்கிட்டான். ‘வயலென்ஸ் அகைன்ஸ்ட் லேடீஸ்’ சட்டம் இருக்கு.. அத்தோட சுமதி நம்மகிட்ட வேலை பாக்கற பொண்ணு. அவளைக் கையைப் பிடிச்சு தரதரவெனு இழுத்துப் போயிருக்கான்.. நாளைக்கு சுமதி வந்தாள்னா இன்னும் என்னவெல்லாம் செய்வானோ? நாம பாதுகாப்பு கொடுக்க வேணாமா? இவனை சும்மா விடக்கூடாது.”

     

    “கோமதி.. கொஞ்சம் சும்மா இருக்கியா.. சுமதிக்காக அவன் வந்தான். இனிமே சுமதி இங்கே இனிமே வரமாட்டா. எதுக்கும் அவளை அவ வீட்டுல போய்ப் பாரு. அவ நம்ம  வீட்டுக்குள்ள ஓடி ஒளியறச்சே பேசினேன். கடைஞ்செடுத்த அயோக்கியனாம் அவன். ‘வெறி நாய்ம்மா’ன்னு சுமதி அழுதுண்டே சொல்லறா.. நீ ஏன்மா அவங்கிட்டே மாட்டினேன்னு கேட்டேன்.. அப்பறமா சொல்றேன்மான்னு சொல்லறச்ச அந்தக் கடங்காரன் உள்ளயே வந்துட்டான்.. சுமதி சொல்லட்டும். அதுக்கப்பறம் நாம போலீசுக்குப் போகணுமா இல்ல வேற ஏதாவது பண்ணணுமான்னு யோசிப்போம். (சாந்தியைப் பார்த்தாள்) ஏம்மா சாந்தி ரொம்ப வலிக்குதா.. தைலம் தரட்டுமா.. நாசமாதான் போவான்.. பொம்பளைப் புள்ளைன்னு கூடப் பார்க்காம கையை முறிக்கறான்.. புழுத்துச் சாவான் பாரு” அவள் அம்மா சாபம் கொடுத்தாள்.

     

    “இல்லே ஆண்ட்டி.. அவன் பிடிக்கறச்சே வலிச்சுது.. இப்போ இல்லே.. அவன் இந்த மேஜை வெயிட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டான். இன்னொருதடவை இப்படி வரட்டும்.. நானாச்சு அவனாச்சு..” என்று சாந்தி கையில் அந்த மேஜை வெயிட்டை வைத்தபடியே பேசினாள்.

     

    மறுபடியும் தற்காலத்துக்கு வந்தனர்.

    “ஓ! நம்மாளு இங்க இவ்வளோ ஆட்டம் ஆடியிருக்காரா.. சாந்தி! இது என்னிக்கு நடந்தது?”

     

    கோம்டியே சொன்னாள். “என்ன ஒரு நாலு மாசம் இருக்கும். எனக்கு என்ன சந்தேகம்னா அவன் எதையோ அவ கைப்பையிலிருந்து பிடிங்கிட்டான். காசா கார்டா இருக்கும்னு நினைச்சேன்.”

     

    கல்யாண் தலையை அசைத்து ஆமோதித்தான்.

    “அன்னிக்கு இந்த கோம்டி சொன்னவுடனே அந்த மேஜை வெயிட்டால பலமா அடிக்காம போயிட்டியே சாந்தி.. பொண்ணுங்கன்னா தைர்யமும் உள்ளவங்கதான்னு காமிச்சிருக்கணும். அது சரி, அந்த சுமதியைப் பாத்தீங்களா.. என்ன காரணம் சொன்னா அவ.”.

     

    “கோம்டி!  விடுடி.. அந்த ஆளே போயிட்டான்.. (சட்டென கல்யாணைப் பார்த்தவள்) சாரி, போயிட்டாரு..” சாந்தி வெறுப்புடன் சொன்னாள்.

     

    “என்ன பெரிய காரணம்.. அவ ஏதோ சொல்லி மழுப்பிட்டா.. அந்த ஆள் கைப்பைலேர்ந்து என்ன எடுத்தான்னு கேட்டதுக்கு அது ஒண்ணுமில்லேம்மா. விடுங்க அதைப் பத்தி பேச வேணாம். ஆனா அவங்கிட்டே ஜாக்கிரதையா இருங்க.. அவன் இனிமே வந்தான்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. அப்ப நாம் எல்லாமா சேர்ந்து போலீசுல மாட்டிவிடலாம்னு சொன்னா..  ஆனா அன்னிலேர்ந்து அவ என் க்லினிக் வரல்லே.. நானும் வேற ஆள் போட்டுட்டேன்.”

     

    “ஆனா இப்படிப்பட்ட கொடுமைக்காரன் அதுவும் மரியாதையே தெரியாதவன் ஒத்தன் செத்துப் போயிட்டான்னு தெரிஞ்சா அதுவும் உங்க பெரியப்பாவா இல்லாத பட்சத்தில் என்ன நீங்க நினைப்பீங்களோ அதே நினைப்புதான் எங்களுக்கும் இருக்கு,” சாந்தி இப்படிச் சொல்லியதும் கோம்டி தலையை ஆட்டினாள்.,,

     

    “கந்தசாமி.. அதான் உங்க பெரியப்பா கொலையானார்னு வைசாக்லேர்ந்து திரும்பிவந்த அன்னிக்குக் காலைல  எனக்குத் தெரிஞ்சவுடனே நான், சாந்தி ஏன் எங்கம்மா எங்கப்பா கூட கொஞ்சம் சந்தோஷப்பட்டோம்தான். ஆனா எனக்கு உங்களோட பெரியப்பாதான் அந்த ஆளுன்னு தெரிஞ்சவுடனே அன்னிக்கு சாயங்காலம் வந்து துக்கம் விசாரிச்சேன். இந்த கேஸ் எடுத்த மூணாம் நாளே இன்ஸ்பெக்டர் என்னை சுமதியைப் பாக்கச் சொல்லி விசாரிக்கச் சொன்னாரு. ஏன்.. இன்னிக்குக் கூட அதைத்தான் கேட்டாரு. சுமதியை விசாரிக்கணும்னு அவரே ஒருதடவை உங்ககூட போனாரு. ஆனா நான் இப்போ வரைக்கும் போகலே.. எதுக்குன்னா எனக்கு அவ விஷயம் தெரியும். அவ இந்தக் கொலையைப் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லே. சாதாரணமா அந்த ஆளையே பார்க்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்தவ துப்பாக்கியாலே இந்த வீட்டுக்கு வந்து ஏன் சுடணும்,, அவகிட்ட போனா பழையபடி ஏதாவது பொம்பளை அவஸ்தப்பட்ட கதைதான் கிடைக்கும்னு தெரிஞ்சுபோச்சு.”

     

    “கோம்டி நீங்க சொல்லறது வாஸ்தவம்தான். சுமதி கொலை பண்ணியிருக்க வாய்ப்பே இல்லைன்னு நானே இன்ஸ்பெக்டருக்குச் சொன்னேன்.”

     

    “நானும் கவனிச்சேன் அதை. ஆனா அதை விட கூடவே இருக்கற இந்த பசங்க முரளி சுந்தரைப் பிடிச்சா நிறைய விஷயம் கிடைக்கும்னுதான் இவங்களை ஃபாலோ பண்ணேன்.. சரி, போஸ்ட் மார்ட்டம் பிரகாரம் சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஒரு குண்டு மார்புலயும் இன்னொரு குண்டு சாயங்காலம் அஞ்சறை மணிக்கு நல்லா ஆழமா நெத்திப் பொட்டுலேயும் போயிருக்கு.. மார்ல பாய்ஞ்ச குண்டு வலது மார்பு ஓரத்துல பட்டதுனாலே இதயத்துக்கு ஆபத்தில்லாம பொழைச்சுப்போக வாய்ப்பிருக்கு இல்லையா.. ஆனா அரைமணி நேரத்துக்கு அப்பறம் பாய்ஞ்ச குண்டு அவர் உயிரைக் குடிச்சுடுச்சு. இது எப்படி நடந்ததுன்னு ப்ரூவ் பண்ணினோம்னா கேஸ் குலோஸ். எல்லா ஆங்கிளும் செக் பண்ணி என்னோட ரிப்போர்ட்டை நாளைக்கு அடுத்தநாள் தர்றேன்.”.

     

    சாந்தி குறுக்கிட்டாள்.

     

    “நாளைக்கு கேஸ் முடிஞ்சுடுமாடி?”

     

    “அது தெரியாது. நாம டீடெயில் ரிப்போர்ட் கொடுக்கவேண்டியது நம்ம கடமை. அதை பூர்த்தி பண்ணி நாம ஒதுங்கிடலாம். பொதுவா என்னோட எல்லா வேலையும் அப்படித்தான் இருக்கும்.  நான் இன்வெஸ்டிகேஷன் மட்டும்தான் பார்க்கிறேன். லாயர் இல்லையே.. முடிஞ்சவரைக்கும் தகவல் திரட்டி ஆதாரத்தோடு பார்ட்டிகிட்ட கொடுத்தா அதுக்கப்பறம் அவங்க நடக்க வேண்டியதைப் பார்த்துப்பாங்க.. நான் என் ஃபீஸை வாங்கிண்டு கழண்டுண்டு வரவேண்டியதுதான்.. இதே முடிவுதான் கல்யாண் பெரியப்பா கேஸ்லயும்… நாளைக்கு நான் என் வேலையை முடிச்சுடறேன். அதுக்கு முன்னாடி கல்யாண் ரெண்டு வேலை பண்ணனும்.”

     

    “என்ன வேலை?”

     

    “நாளைக்குக் காலையில சுந்தர் வந்து ரிப்போர்ட் தருவான்.  அவன் வந்தவுடனே அந்த ஸ்டேட்மெண்டை வாங்கி வெச்சுக்குங்க. நாளைக்கு ஒரு நாள் போகட்டும். நாளன்னிக்கு சுந்தர், முரளியும் பிரியாவையும் வரச் சொல்லுங்க.. பிரியா எதுக்குன்னு முரளி கேட்கலாம். ஒரு சாட்சிக்குதான்னு சொல்லணும். நான் இன்ஸ்பெக்டரையும் ரெடியா வரச் சொல்லறேன்.. ஒரு ஃபைனல் மீடிங்க் போட்டு முடிச்சிடப் பாக்கலாம். என்னோட செக்கையும் ரெடி பண்ணி வெச்சுக்குங்க.. நான் கழண்டுக்கறேன்.. ஓகேவா?”

     

    “எனக்குப் புரியறது.. ஆனா நான் ஃபோன் பண்ணினவுடனே ஒருவேளை சந்தேகப்படறாங்களோன்னு தெரிஞ்சு இவங்க எஸ்கேப் ஆகிட்டா?”

     

    “யாரும் எஸ்கேப் ஆகமாட்டாங்க. நான் நீங்க இங்க வர்றதுக்கு முன்னாடிதான் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட பேசினேன். முரளிக்கும் சுந்தருக்கும் ஒரு இருபத்து நான்கு மணி நேரக் கண்காணிப்பு தேவை.. இப்பவே ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லி இருக்கேன்.”

     

    கடைசியில் ஒரு முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொன்னாள்

     

    “யாரு எஸ்கேப் ஆனாலும் ஆகாவிட்டாலும் நான் இந்த கேஸுலேர்ந்து சீக்கிரமே எஸ்கேப்.”

     

    ஏதோ ஒரு ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தான் கல்யாண்.

     

    அடுத்த நாள் காலை போலீஸ் ஸ்டேஷன்

     

    இன்ஸ்பெக்டர் மோகனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் கோம்டி

     

    “நீங்க கேட்கிறது புரியறது.. இதோ பாருங்க கோமதி..”

     

    “சார்.. நான் கோம்டி.. கந்தசாமி இறந்த நேரம் நிச்சயமா சாயங்காலம் அஞ்சரை மணிக்குத்தானான்னு கேட்டேனே..”

     

    இன்ஸ்பெக்டர் கொஞ்சம் அலுப்புடன் பேசுகிறார். “சரிம்மா கோம்டி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அவர் இறந்த நேரம் ஈவ்னிங்க் 5.30 இருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு ஏறத்தாழ அஞ்சு மணிக்கும் இரண்டாவது குண்டு அஞ்சரை மணிக்கும் பாய்ஞ்சிருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு மார்புல அதுவும் வலது மார்புல ஓரத்துல விலா எலும்பு வரைக்கும் கூட ஆழமா இல்லாம பாயறச்சே ரத்த சேதம் மார்புல ரொம்ப அதிகமா இல்லே.. அப்போ அவர் உயிர் போகலே.. அத்தோட மார்பு ரத்தம்தான் அவர் கையிலயும் அதே கைரேகைதான் பீரோ ஹேண்டில்லயும் இருக்கு.. இன்னொண்ணு என்னன்னா ரொம்ப கிட்டக்கலேர்ந்து பிஸ்டல சாச்சு சுடப்பட்டிருக்கவேண்டும். பிஸ்டல்  ஸ்லான்ட் பொஸிஷன்ல சுடறச்சே அதனோட வேகம் ரொம்ப குறச்சலாவே பாய்ஞ்சிருக்கு. ஆனா அரை மணி நேரத்துக்குப் பின்ன பாய்ஞ்ச அடுத்த குண்டு நெத்திப் பொட்டுல துப்பாக்கியை அழுத்தி சுட்டதில அது சரியா சுடப்பட்டு உடனடியா உயிரைக் குடிச்சிருச்சு. இவ்வளவுதான்.. அது நடந்த நேரம் அஞ்சறை மணிக்கு…”

     

    “அது எனக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்துருக்கு சார். நாளைக்குக் காலைல பதினோறு மணிக்கு  நானும் நீங்களும் கல்யாண் வீட்டுல ஒரு ஃபைனல் மீடிங்க் போடலாம். யாரார் மேலே சந்தேகம் பண்றோமா அவங்கள்லாம் வராங்க.. நீங்க ஃபைனல் அதாரிடி.. அதுக்கப்பறம் உங்க முடிவு என்னவா இருந்தாலும் அதை நீங்க எடுத்துக்கலாம்.”

     

    “ஓகே கோம.. சாரி.  கோம்டி..” என்றவர் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்.

     

    “நீங்க சுந்தருக்கும் முரளிக்கும் கண்காணிப்புப் போடணும்னு கேட்டது ரொம்பச் சரி. காலைலே சுந்தர் அவசரம் அவசரமா வீட்டை விட்டு வெளியே போயிருக்கான். எஸ்கேப் பண்ணப் பாத்துருக்கான் அவனை ஃபால்லோ பண்ணின கான்ஸ்டபிள் அவனை அப்போதான் பிடிச்சிருக்கார். ஸ்டேஷனுக்குக் கொண்டு வரதா சொல்லியிருக்கார். “அவன் தப்பிக்கதான் பார்த்திருக்கான் சார்.. நல்லகாலம் அதுக்குள்ளே பிடிச்சுட்டோம்”னார்.. அதனால சுந்தர் வந்தா இங்கேயே இருக்க வெச்சுடறேன்.. நாளைக்குக் காலைல நான் வரச்சே அவனைக் கொண்டு வர்றேன்..”

     

    “ஓ.. சுந்தர் ஏன் தப்பிக்கப் பாக்கணும்.. இருந்தாலும் நீங்க பிடிச்சது நல்லதுதான்..ஓகே சார்..”

     

    அவள் வெளியேறும்போதுதான் பார்க்கிறாள் அங்கே வெயிட்டிங்க் பெஞ்சில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருப்பதையும் இன்ஸ்பெக்டர் அழைப்பதாகச் சொன்னதும் அவன் எழுந்து நடப்பதையும் பார்க்கிறாள். சற்று கால் ஊனமாக இருந்து மெதுவாக நடந்து செல்வதையும் கவனிக்கிறாள். இருந்தாலும் வெளியே போகிறாள். மனதுக்குள் ஏதோ இடிக்க வெளியே சற்று நேரம் காத்திருக்கிறாள். அங்கே உள்ளே இருந்தவன் வெளியே வந்து அவளைக் கடந்து போகையில் அவனை நிப்பாட்டுகிறாள். மெல்லிய குரலில் கூப்பிடுகிறாள்.

     

    “மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி…”

     

    சட்டென நிற்கிறான் அவன். அவளைப் பார்த்து ஆச்சரியமாக கேட்கிறான்.

     

    “அட, என் முழுப் பேரும் வெச்சுக் கூப்பிடறீங்க.. என்னைத் தெரியுமா?”

     

    “ஓ! உங்களைத் தெரியுமே.. உங்களை நான் பார்த்திருக்கிறேனே.. என்னை ஞாபகம் இல்லையா?”

     

    அவன் முழித்தான்..

     

    தொடரும்

     

    Share
  • கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !

    கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    சேக்கிழார் பெருமான் செப்பிய கதையில்
    மாக்கதை யாக மனமதில் பதிவது
    கண்ணினை அப்பிய கண்ணப்பன் கதையே
    எண்ணிட  எண்ணிட வியப்பாய் விரியுது

    நடக்குமா என்று கேட்டிட வைக்கும்
    நம்பவே இயலா கண்ணப்பன் கதையே
    படித்திடும் தோறும் பதறுதே நெஞ்சம்
    கண்ணைப் பிடுங்கிட எண்ணிய காரியம்

    வெட்டுக் குத்து ரத்தம் இறைச்சி
    பார்த்துப் பழகிய வேடுவர் வாழ்க்கை
    அந்த வாழ்க்கையை பற்றியே வாழ்ந்தவன்
    பக்தி வலைக்குள் புகுந்தது வியப்பே

    கொல்வதும் தின்பதும் கொண்டாடிக் களிப்பதும்
    நல்லது என்றுமே நாளுமே வாழ்ந்தவர்
    வாழ்ந்தவர் மரபில் வந்தவன் கண்ணப்பன்
    எப்படி மாறினான் என்பதே அதிசயம்

    கற்றவன் அல்ல தேர்ந்தவன் அல்லன்
    அறமும் அறியான் அஹிம்சையும் அறியான்
    ஆனால் அவனுள் ஏதோ இருந்தது
    அதுவே அவனின் அன்பாய் மலர்ந்தது

    கோவிலும் தெரியான் சாமியின் தெரியான்
    சடங்கு மறியான் சாத்திர மறியான்
    பக்தி ஊற்று பீறிட்டு எழுந்தது
    பரமனின் முன்னே தன்னையே மறந்தான்

    சுவைத்துச் சுவைத்து இறைச்சியைப் படைத்தான்
    வாயுடை நீரால் மஞ்சனம் செய்தான்
    சூதும் அறியான் சூழ்ச்சியும் தெரியான்
    தூய மனத்துடன் அனைத்துமே யாற்றினான்

    கண்ணைப் பிடிங்கி அப்பினான் கண்ணப்பன்
    எப்பிடிப் பிடிங்கினான் என்பதே கேள்வி
    தன்னை மறந்து கண்ணப்பன் இருந்தான்
    கண்ணைப் பிடிங்கினான் காணிக்கை ஆக்கினான்

    இறைவனின் கண்களில் இரத்தங் கண்டான்
    பதறித் துடித்தான் பரிகாரம் கண்டான்
    கண்ணே மருந்து என்றே எண்ணினான்
    எண்ணிய திண்ணன் பிடிங்கியே அப்பினான்

    கண்ணப்பன் நிலையை கணக்கிடல் அரிது
    அன்பின் வடிவமாய் ஆகினான் அவனும்
    அன்பினில் அமிழ்ந்த கண்ணப்பன் செய்கை
    ஆருமே நினைக்கா அரும்பெருஞ் செய்கை

    அன்பின் முதிர்நிலை கண்ணப்பன் அடைந்தான்
    அவனுக் கீடார் யாருமே இல்லை
    அதனால் அவனை அணைத்தார் ஆண்டவன்
    அன்பே சிவமாய் அமைந்ததன் விளைவே !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 25

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 22. அப்பூதியடிகள் நாயனார்

     

    அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி

        யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்

    பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்

        பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த

    மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்

        வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்

    சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்

        திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

    ப்பூதியடிகள் சோழநாட்டின் திங்களூர் எனும் ஊரில் பிறந்தவர். நால்வர் பெருமக்களாலும் பாடப்பெற்ற அருட்தலமான திருஐயாறு எனும் ஊருக்கு ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ளது திங்களூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினைப் பற்றி கேள்விப்பட்டு அவரை மிகவும் மதித்து வந்தவர், அவரை முன்பின் பார்த்திராமலே அவர்மீது அளப்பரிய அன்பும், பக்தியும் கொண்டு அவரையே தம் குருவாக எண்ணி போற்றி வந்தார். நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குருபஞ்சாட்சரம் என்று அழைக்கப்படும். அந்த வகையில் தம் குருவின் திருநாமமாகிய திருநாவுக்கரசு எனும் பெயரை குருபஞ்சாட்சரமாகப் போற்றும் அப்பூதியடிகள் தம் மனைவி, மக்கள், மனைப் பொருட்கள் அறச்சாலைகள் போன்று அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர் சூட்டினார். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர் என்ற வகையில் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் அளித்தல், சத்திரம் அமைத்தல், நீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல் போன்ற அறப்பணிகளையும் செய்து வந்தார்.

    களவு பொய் காமம் கோபம்

      முதலிய குற்றம் காய்ந்தார்

    வளம் மிகு மனையின் வாழ்க்கை

      நிலையினார் மனைப் பால் உள்ள

    அளவைகள் நிறைகோல் மக்கள்

      ஆவொடு மேதி மற்றும்

    உள எலாம் அரசின் நாமம்

      சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்

    என்கிறார் சேக்கிழார் பெருமான், அப்பூதியடிகளின் பெருமையைப் பற்றி.

    திருநாவுக்கரசர், தம் பெயரால் பல அறப்பணிகள் செய்யும் அப்பூதியடிகள் அப்படி செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவராய், அப்பூதியடிகள் இருக்கும் இடம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.  இந்த நற்தொண்டினைப் பற்றி அறிந்து உள்ளம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளைக் காணும் பொருட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். ஆனால், அவர்தான் திருநாவுக்கரசர் என்பது அப்போது அப்பூதியடிகளாருக்குத் தெரியாது. எதிர் நின்ற நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தாம் முன் செய்த தவமே கருணை பொழியும் திருமுகத்தையுடைய அத்தவச் செல்வர் தங்கள் மனைக்கு எழுந்தருளியது என்று கூறி அவர் வந்த காரணம் குறித்தும் கேட்டார். திருப்பழனநாதரை வழிபட்டு வரும் வழியில் தண்ணீர்ப் பந்தலைக் கண்டதோடு அவர் புரியும் அறம் பலவும் கேட்டறிந்து அப்பூதியாரைக் காண வந்ததாகக் கூறுகிறார்.

    தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா

    மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே

    யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா

    னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

    திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நோக்கி, “அடியார்களுக்கு உங்கள் சொந்தப் பொறுப்பில் செய்யும் அனைத்து அறப் பணிகளுக்கும் ஏன் நீங்கள் உங்கள் பெயரை வைக்காமல் வேறொருவரின் பெயரை வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் மிகவும் மனம் வருந்திய அப்பூதியடிகள், பெரியவர் வாயில் நல்ல வார்த்தைகள் வரக்கூடாதா என்று நொந்து போனார். சமணர்களும், நாடாளும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினைத் திருத்தொண்டின் உறைப்பால் வென்ற நாவுக்கரசர் திருப்பேரா வேறோரு பேர் என்று கூறி புரியாமல் பேசுகிறீரே” என்றவர், அத்திருப்பேரே தமது தாரக மந்திரம் என்று வாய் குளர மொழிந்தார்.  அதுமட்டுமல்லாமல் நாவுக்கரசரின் மகிமையை அறியாத அவர் சமணர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லையே என்றும் கேட்டார். பின்னர் அவருடைய ஊரையும், பேரையும் குறித்தும் கேட்டார்.

    அப்போது நாவுக்கரசரும், தன்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணாது அதிகைப் பெருமானாரால் கொடுஞ்சூலையினால் ஆட்கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியேன், தாம் என்று சூசகமாக பதிலிறுத்தார். இதனைக் கேட்ட அப்பூதியடிகளார் மீப்பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர், யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் என்று தவம் புரிந்து காத்துக் கிடந்தாரோ, யார் பெயரால் அனைத்தறங்களும் செய்து வந்தாரோ, தம் செல்வங்கள் அனைத்திற்கும் எவர் பெயரை வைத்து ஓயாமல் மூலமந்திரமாக எண்ணி செபித்துக் கொண்டிருந்தாரோ, அப்பெயருக்குரிய பெருமானார் தம் கண் முன்னால் நிற்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தவர், ஆடினார், பாடினார், மனைவி, மக்களையெல்லாம் அழைத்து வந்து அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கச் செய்தார். தாமும் கண்ணில் நீர் பெருக கைகூப்பியவராய் நாவுக்கரசர் மலரடிகளே சரணம் என்று அடியில் வீழ்ந்தார். அப்பரடிகளும் அவரைத் தம் திருக்கரத்தால் வாஞ்சையுடன் எடுத்தருளினார். அப்பரடிகளின் திருவடியை பூவும், நீரும் கொண்டு பூசனை செய்தார்.

    தன்னுடைய இல்லத்திற்கு திருநாவுக்கரசரே வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ந்து கூத்தாடி, உணவு உண்ணுமாறு வேண்டினார். அவரும் அந்த அன்பிற்கு இசைந்ததால் திருஅமுது படைக்கத் தயாரானார்கள். காய்கறிகளும், கனி வகைகளும் கொண்டு தூய நற்புனிதமான உணவைத் தயார் செய்தனர். தங்கள் புதல்வன் மூத்த திருநாவுக்கரசை, திருநாவுக்கரசருக்கு பரிமாறும் பொருட்டு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து வாழைக்குருத்து அரிந்து வரும்படி அனுப்பினார். அங்கு அவன் வாழைக் குருத்தை அரியும் போது கொடிய நாகம் ஒன்று அவன் கரத்தைத் தீண்டிவிட்டது. நஞ்சு ஏறுவதை அறிந்தும் அவன் ஓடிச்சென்று வாழைக்குருத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிரமம் பாராமல் வந்து தாயின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அப்படியே அவர் பாதங்களில் சரிந்து விழுந்தான். விடம் தீண்டி அன்பு மகன் உயிர் இழந்தது தெரிந்தும் வேதனையை வெளிக்காட்டாமல் நாவுக்கரசரை அமுது செய்விப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்தப் பெரிய தலைவாழைக் குருத்தில் உணவு பரிமாறி அப்பரடிகள் திருவடியில் விழுந்து வணங்கி அமுதுண்ண அன்புடன் அழைத்தனர். திருநாவுக்கரசர் பூசனை முடித்து தாம் திருநீறு அணிந்த பின்னர் அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் திருநீறு வழங்கினார். அப்போது மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனையும் அழையுங்கள் திருநீறு பூச வேண்டும் என்றார். நடந்த உண்மையைச் சொன்னால் நாவுக்கரசர் உணவருந்த மாட்டாரே என்று நினைத்த அப்பூதியடிகள், “இப்போது இங்கு அவன் உதவான்” என்றார். அவர் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தைக் கவனித்த நாவுக்கரசர், “இந்தப் பதிலை என் உள்ளம் ஏற்காது. என் செய்தான்? உண்மையைக் கூறுங்கள்” என்றார். அதற்குமேல் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்தவர், மகனுக்கு நேர்ந்த அவலத்தையும் பாயினால் மூடி வைத்த பாங்கினையும் உள்ளவாறு கூறினார்.

    இதனைக் கேட்ட நாவரசர், இப்படியும் யாரேனும் செய்வார்களோ என்று வருந்தி, ஆவி போன மகனின் சவத்தை பாயிலிருந்து எடுத்து தன் முன் கொண்டு வரும்படி பணித்தார். அச்சவத்தை நோக்கி சிவபெருமான் அருளும் வண்ணம் அவர் அருளாகிய திருமேனிகள் அமைந்த அளப்பரிய தோற்றத்தை ஒன்று முதல் பத்து வரையாக வைத்து எண்ணும் நிலையாற் பத்துப் பாடல்களைப் பாடியருளினார்.

    ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

    ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

    ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

    ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

     

    பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

    பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

    பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

    பத்து கொலாம் அடியார் செய்கை தானே.

    பாம்பு கடித்து உயிர் துறந்து பாயிற் கிடத்தப்பட்ட மைந்தன் உறங்கி எழுபவன் போல் எழுந்தவன் அப்பரடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அன்போடு திருநீறு பூசி வாழ்த்தினார். ஆயினும் அப்பூதியடிகளும், அவரது மனைவியாரும் அப்பர் பெருமானால் உணவருந்த முடியவில்லையே என்று வருந்தினர்.  இதனை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் புதல்வர்களை இரு புறமும் இருத்தி உணவருந்தி சில காலம் திருப்பழனத்தில் அப்பூதியடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பல பதிகங்களைப் பாடியருளினார் .

    அப்பூதியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருநாவுக்கரசு என்னும் மந்திரத்தைச் சொல்லியும், எழுதியுமே முத்தி பெற்றவர் அப்பூதியடிகள்.  சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதியடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

    ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது

    வேதநான்கினும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமச்சிவாயவே

    என்று தேவாரத்திலும்,

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்

    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவசிவ என்றிடத் தேவருமாவர்

    சிவசிவ என்ன சிவகதிதானே.

    என்று திருமந்திரத்திலும் கூறுவது போன்று அப்பூதியடிகள் நாவுக்கரசரைக் காணாமலேயே அவர்மீது பக்தி கொண்டு அவரையே தம் குருவாகவும் ஏற்றுக்கொண்டார். சைவ சமயத்தில் சிவபஞ்சாட்சரம் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அதே போன்று நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குரு பஞ்சாட்சரம் என்று போற்றப்படுகின்றது. அப்பூதியடிகளும் தம் குருவின் நாமமாகிய திருநாவுக்கரசு என்ற பெயரை குரு பஞ்சாட்சரமாகப் போற்றி, திருநாவுக்கரசரை நேரடியாகக் காணாவிட்டாலும் செவிவழியாக அவருடைய பெருமைகளையும், திருத்தொண்டினையும் அறிந்து அவர் மீது தீராத பேரன்பு கொண்டார். ஆகையால், நாவுக்கரசரின்  திருப்பெயரிலேயே மடங்களும், தண்ணீர் பந்தல்களும் அமைத்து வறியவர்களுக்கும், அடியார்களுக்கும் அனைத்து உதவிகளையும் மனிதநேயத்துடன் செய்து வாழ்ந்து வந்தார்.

     

     “நம்மை உடையவர் கழல்கீழ் நயித்த திருத்தொண்டாலே

    இம்மையிலும் பிழைப்பது என என்போலவாரும் தெளிய

     

    அப்பூதியடிகள் ‘திருத்தொண்டு’ என்பதனை இறைவனுக்கு மட்டுமன்றி சிவனடியார்களுக்கும், எளியவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதையும் தம் அன்றாட வழிபாடாகவே செய்து கொண்டிருந்தார்.

     

     ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது

    கீதம்முன் பாடும்அம்மை கிளர்ஒளி மலர்தாள் போற்றி

    சீதாமூர் வயல்சூழ்  திங்களூரில் அப்பூதியாராம்

    போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலுற்றேன்

     

    அப்பூதியடிகள் தம்மைநாடி வந்தவர்களுக்குச் செய்யும் அனைத்து உதவிகளையும் சிவபெருமானுக்குச் செய்யும் தொண்டாகவே எண்ணிச் செய்ததை சேக்கிழார் பெருமான் அப்பூதியடிகளை அறிமுகப்படுத்தும் பாங்கில் இருந்தே அறியலாம்.

    தங்கள் தவப்புதல்வனான மூத்த திருநாவுக்கரசை அருகிலிருந்த தோட்டத்தில் வாழைக்குருத்து அரிந்து வரச்சொல்லி அனுப்புகிறார். விரியாத குருத்தினை குறிப்பாக எடுத்து வரச்சொல்கிறார். விரிந்த இலையில் காகம் முதலான பறவைகள் எச்சம் இட்டிருக்கலாம் என்பதற்காகவே குருத்து இலையை அரிந்து எடுத்து வரச்சொல்கிறார். ஆனால் இறைவனின் திருவிளையாடலாக குருத்திலைக்குள் நாகம் இருந்து தீண்டிவிட நஞ்சு ஏறிய சிறுவன் உயிர் இழக்கிறான். நல்ல திருப்பணியைச் செய்ய பெரும்பேறு பெற்றேன் என்ற மகிழ்வுடன் சென்றவனுக்கு நாகம் தீண்டினாலும், ‘பாம்பு தீண்டிய வேகத்தில் உண்டாகிய  கொடிய நஞ்சால் நான் இடறிக் கீழே விழும் முன்னர் இலைக்குருத்தினை தாயிடம் கொண்டு சேர்ப்பேன்’ என்று தீர்மானித்து ஓடிவந்தான். தன் உயிர் நீங்கினும்  அடியாராக வந்த நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது  என்ற எண்ணம் மிக்க சிறந்த தொண்டராக மூத்த திருநாவுக்கரசர் படைக்கப்பட்டுள்ளார்.

     

    பெறல் அரும் புதல்வன் தன்னைப்பாயினுள் பெய்துமூடிப்

    புறமுனை முன்றில் பாங்குஓர் புடையினில் மறைத்துவைத்தே

    அறஇது தெரியாவண்ணம் அமுதுசெய்விப்போம் என்று

     

    தம் மகனின் உயிர் பிரிந்த நிலையிலும் சடலத்தை பாயினுள் வைத்துச் சுருட்டி தன் மனையின் புறத்தே உள்ள முற்றத்தில் மறைத்து வைத்த பின்பு நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். அடியார்களையும் வறியவர்களையும் விருந்தினர்களையும் தமது இல்லத்தில் எவ்வித சூழ்நிலை இருந்தாலும் இன்முகத்துடன் வரவேற்று, முகமலர்ச்சியுடன் உபசரித்து அனுப்ப வேண்டும் என்ற உயரிய கொள்கையை தமக்கு மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளுக்கும் கடமையாக்கியுள்ள அப்பூதியடிகளின் வரலாறு போற்றுதலுக்குரியது.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

    Share