Blog

  • கனவா ?? நினைவா ??

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    வானுயர்ந்த மரத்தின் மலர்கள்
    பூமியின் மடியில் மலர் மஞ்சமாக
    சுற்றிலும் படர்ந்திருந்த
    புல்வெளி வெண்சாமரம் வீச
    ஓடையின் சலசலப்பும்
    வேணுகானமாய் இசைக்க
    தென்றலும் தன் பங்கிற்கு
    தண்மையை பரப்பிட
    ஆனந்தமாய் சயனித்திருந்த
    வேளையில் – சடாரென்று
    காதைக் கிழித்துக் கொண்டு
    ஒலித்தது – வாகனங்களின்
    ஹாரன் ஒலிகள் ……
    திடுக்கிட்டு வாரிச்
    சுருட்டிக் கொண்டு
    எழுந்தபோது தான்
    உணர்ந்தேன் – படுத்திருந்தது
    நெடுஞ்சாலையில் அமைந்திருந்த
    தங்கும் விடுதியின்
    ஐந்தாவது மாடியிலென்று !!!

    Share
  • இந்த வார ராசி பலன்கள் (8-4-2013 முதல் 14-4-2013 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்:  பொது வாழ்வில் இருப்பவர்கள் வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான  பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.   வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி தரும் விதமாக இருக்கும். .குழந்தைகள் பெரும் பெருமையால்  குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் .  வேலையில் இருப்பவர்கள்  அலுவலக அளவில் சிறப்பான  மரியாதை பெறுவார்கள். மாணவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.

    ரிஷபம்: கலைஞர்கள் வாயிற்கதவைத் தட்டும் வாய்ப்புக்களை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை . வசதிகள் பெருகும் உறவினர்கள் அளிக்கும் ஆதரவால், பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். சிறப்பாக இருக்கும்.  வியாபாரிகள் . கூட்டாளிகளிடையே இருக்கும் ஒற்றுமை குறைய இடம் கொடுக்க வேண்டாம்.  மாணவர்கள் வேண்டாத பிரச்சனைகளால் மனக்குழப்பம் அடையும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு உதவப்போய் வம்பில் மாட்டிக் கொள்ள இடம் கொடுக்காதவாறு  கவனமுடன் இருப்பது நல்லது

    மிதுனம்:  இந்த வாரம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து  வாய்ப்புகள் தேடி வரும்.  மாணவர்கள் போராடி உயர் கல்வியில் இடம் பிடிப்பார்கள். வியாபாரிகள் கவனமாக செயலாற்றினால், அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்  இருந்து விடுபடலாம் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் கலகலப்பு  இருந்தாலும், கூடவே பெண்களுக்கு சில சிறு பிரச்சனைகளும் வந்து போகும் . இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதபடி சோதனைகள் ஏற்படலாம். எனவே பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் யோசனை செய்வது நல்லது

    .
    கடகம்: வெளியூர்ப் பயணங்களில் கிடைக்கும் அறிமுகங்கள் மூலம் வியாபாரிகளுக்கு வேண்டிய நன்மைகள் வந்து சேரும்.     மாணவர்கள்  போட்டிகளில் வெல்ல புதிய உத்திகளை பயன்படுத்தினால், நல்ல பெயரோடு அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களும் கிட்டும்.   இந்த வாரம்  கலைத் துறையினருக்கு அரசு அளிக்கும் விசேஷ சலுகைகளைப் பெற்று மகிழும் வாய்ப்புக்கள் வந்து சேரும். வீடுகளை வாங்கி விற்பவர்கள்,  கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் விழிப்புண்ர்வோடு இருந்தால், எந்த பாதிப்பும் வராது.

    சிம்மம் : எண்ணங்களும், திட்டங்களும் நிறைவேறுவதால், பெண்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தால், வேலைகள் சீராக நடக்கும்  மாணவர்கள் நண்பர்களிடம் பொருள் பரிமாற்றம் செய்வதில் ஒரு கட்டுப்பாடுடன் இருந்தால், எந்த தொல்லையும் இராது. வியாபாரிகள் தேவையில்லாமல்  கடனாகப் பணம் தருவதையும், பெறுவதையும் நிறுத்தி வைப்பதன் மூலம் வீண் விரயத்தை தவிர்க்க இயலும்.  கலைஞர்கள் தங்களின் திறமையால், மீண்டும் உயர் நிலையை அடைவார்கள்.

    கன்னி:  வேலையில் இருப்பவர்கள் சந்தித்த  உட்பூசல் விலகி சக ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்து நல்ல பெயரைப் பெறுவார்கள்  இந்த வாரம்  கைவிட்டுப்போன வாய்ப்புக்களைப் பெற, வியாபாரிகள்  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் .  மாணவர்கள் பழக்க வழக்கங்களில் கவனமாக இருந்தால், தேவையற்ற பயம் இன்றி படிப்பில் கவனம் செலுத்தலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து மோதல் தோன்றும் வாய்ப்பிருப்பதால், பெண்கள்  அவர்களுடன் பக்குவமாகப் பழகவும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலையால் மன அமைதி குறையலாம்.

    துலாம் : இந்த வாரம் பெண்களுக்கு  செலவுகளும், அலைக்கழிப்புகளும் அதிகரித்தாலும், எந்த விவகாரத்தையும் சமாளிக்கும் தைரியத்தால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள்  எந்த சூழலிலும், தவறான திசைப்பக்கம் திரும்பாமலிருந்தால் எதிர்பார்க்கும் நன்மை யாவும் உறுதியாய் கிட்டும்.வியாபாரிகள்  பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக்கோப்பாய் செயல்பட்டால், லாபத்திற்கு குறைவிராது. பொது வாழ்வில் இருப்பவர்கள் தீய மனப்பான்மை உள்ளவர்களுடன் மோதலைத் தவிர்க்கவும் .

    விருச்சிகம்: மாணவர்களின் ஞாபக சக்தியும், புத்திக் கூர்மையும் அவர்களின் வளர்ச்சிக்கு வித்தாய் அமையும்.  வியாபாரிகள்  சரக்குகளின் போக்குவரத்தின் மீது தங்கள் கவனத்தை பதிய வைத்தால், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சுலபமாக இருக்கும் இரவு கண் விழித்து பணிபுரிபவர்கள் அவ்வப்போது தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ள, ஆரோக்கியம் குன்றாமலிருப்பதோடு பணியிலும் முழு கவனம் செலுத்த இயலும். கலைஞர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம்.

    தனுசு:  வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம். பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப் போடவும்.   பெண்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருந்தால், மன அமைதி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.  பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவுகள் வருவது சற்றே தாமதமாகலாம்.

    மகரம்: வாகனங்களின் உதிரிப் பாகங்களை விற்பனை செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற சற்று சிரமப்பட நேரிடும்..சுய தொழில் புரிந்து கொண்டிருந்தவர்களின் முன்னேற்றம் மெச்சத் தகுந்த வகையில் இருக்கும்.  இந்த வாரம் பங்குச் சந்தையில் முடங்கியிருந்த பணம் ஓரளவு கைக்கு கிடைக்கப் பெறுவதால் வியாபாரிகளுக்கு பணப் புழக்கத்தில் இருந்த தட்டுப்பாடு நீங்கிவிடும். வயதானவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் புதிய மருந்துகளை உண்ணும் முன் மருத்துவ ஆலோசனை பெற்று செயல்பட்டால் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

    கும்பம் : மறதிக்கு இடம் கொடாதவாறு செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொள்வது, அதன்படி நடப்பது ஆகிய இரண்டையும் பொது வாழ்வில் உள்ளவர்கள் கடைபிடித்தால், பணிகள் தேங்காமலிருக்கும். . பெருந்தொகையை கையாளும் காசாளர்கள், பணத்தைக் கையாளும்போது கவனமாக இருப்பது அவசியம். கமிஷன், காண்டிராக்ட் தொழிலில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருந்தால், அவப்பெயர் அருகில் வராமலிருக்கும்.  பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

    மீனம்: இந்த வாரம் பிரதிநிதிகளாக பணியாற்றுபவர்கள் இலக்கை எட்டும் நிர்ப்பந்தத்திற்காக, அலைந்து திரிய நேரிடும். கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், வீண் வம்பு முளைக்காமலிருக்கும். பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட விரும்புவர்கள், தினசரி நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது அவசியம்  கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும் . பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களின் மீது கவனம் வைப்பதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம்.

    Share
  • பூந்தலைச் சிறு கோல்

     

    முனைவர். ப. பானுமதி


    “ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் புறநானூற்றுப் பாடல். பெற்றோர் இக்கடன்களை நிறைவேற்றுகின்றனரா என்றால், கடனே என்று நிறைவேற்றுகின்றனரோ என்று ஐயமே எழுந்துள்ளது.

    பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனது செய்முறைத் தேர்வுக்கு முந்தைய தினம் மருத்துவ மனைக்கு வருகிறான். முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிகிறது. என்ன என்று கேட்டால், படி என்று சொன்னவுடன் புத்தகத்தைக் கையில் எடுக்காத குற்றத்திற்குக் கிடைத்த தண்டனை என்கிறான். கொடுத்தவர் அவனது தந்தை.

    குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே எழுதிய சட்டமாகிப் போனது. பெற்றோர்களுக்கு??? இப்போது அம்மாணவன் தந்தை என்றாலே வெறுக்கிறான். அவருக்காகவே “நான் நன்றாகத் தேர்வு எழுத மாட்டேன்” என்று வாய் திறந்து கூறுகிறான். அக்குழந்தையின் இந்தப் பிடிவாதக் குணத்திற்கு யார் பொறுப்பு? அன்பும் அரவணைப்பும் இல்லாத தாங்கள்தாம் என்பதைப் பெற்றோர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

    இன்று பெருகி வரும் குழந்தைக் குற்றவாளிகளுக்குப்  பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களின் பெற்றோர்களும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    சின்னக் குழந்தைகள் வண்ண மலர்கள். ஆம் மலர்களைப் போலவே மென்மையானவர்கள். மலர்களின் பல வண்ணம் போலவே பல எண்ணம் கொண்டவர்கள். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். மலர்களின் மணத்தையோ குணத்தையோ மருந்தை அடிப்பதால் எப்படி மாற்ற முடியாதோ அப்படிதான் குழந்தைகளின் குணத்தை அடிப்பதால் மாற்ற முடியாது. அவர்களை அவர்களின் போக்கில் விடுத்து, அன்பு காட்டி அரவணைப்பதன் மூலம் மாற்ற முடியும்.

    சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் விழிப்பில்; எட்டு மணி நேரம் உறக்கத்தில்; எட்டு மணி நேரம் பள்ளியில் என்று குழந்தைகளின் இருபத்து நான்கு மணி நேரம் பகிர்வு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் குழந்தைகளின் இரண்டாம் தாய் என்றும் பெற்றோர் குழந்தைகளின் இரண்டாம் ஆசிரியர் என்றும் பொதுவாகக் கூறுவது வழக்கம். எட்டு மணி நேரம் ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளை அடிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் வீட்டில் அக்குழந்தையை எப்படி வேண்டுமானாலும் அடிக்க பெற்றோருக்கு உரிமை இருக்கிறது.

    அதனால்தான், “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று கூறிக் கூறி அடிப்பது, அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது”  என்று அடித்துக் கை கால்களை ஒடிப்பது, “அடியாத மாடு படியாது”  என்று மாட்டை அடிப்பது போல விளாசித் தள்ளுவது “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று அன்பைக் காட்டும் சாக்கில் அடிப்பது “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்று முதுகை வளைத்து அடிப்பது “ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்” என்று கூறிப் பேயாக மாறிக் குழந்தைகளுக்குச் சூடு வைப்பது எல்லாம் ஒரு சாராரின் பழக்கமாகிப் போனது.

    இவர்கள் குழந்தைகளை அடிப்பதற்கான காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒன்று மதிப்பெண், மற்றொன்று தன் குழந்தை சச்சினாக, சூப்பர் சிங்கராக, பில்கேட்சாக  ஆகவேண்டும் என்னும் இவர்களின் கனவு. இவை போன்ற பேராசை பெற்றோர் அவர்கள் விரும்பும் வகையில் குழந்தை, திறன் காட்டாது இருந்து விட்டால் பல வகையில் அவர்களுக்குத் துன்பம் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகளின் பண்பில் ஏற்படும் குறைபாடு பற்றி இவர்கள் கவலை கொள்வதே இல்லை.

    மேற்கூறிய இவையெல்லாம் பழமொழிகளாக இருந்தாலும் நம் மூத்த தமிழ்க் குடிகள் குழந்தைகளை அடித்ததாகவோ, சிறார் குற்றவாளிகள் இருந்ததாகவோ, சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (சிறார் சிறைச்சாலைகள்) இருந்ததாகவோ பதிவுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளை அடித்ததாகக் கூட பதிவுகள் இல்லை என்றே சொல்லலாம்.  குழந்தைகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அடித்ததாகவோ, சூடு போட்டதாகவோ, வீட்டை விட்டுத் துரத்தியதாகவோ, சாட்சியங்கள் நம் பண்டைய இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம்.

    இது எதனைக் காட்டுகிறது? அவர்கள் குழந்தை வளர்ப்பில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆடல், பாடல், கதை என்று அவர்களை மகிழ வைத்து அதனூடாகப் பண்பை ஊட்டி வளர்த்துள்ளனர்.

    பால் மணம் மாறாப் பச்சிளம் பருவத்தில் பாலைப் புகட்டியது போலவே நற்பண்பைப் புகட்டுவதற்குத் தாலாட்டுப் பாடினர். தாலாட்டில் வீரத்தையும், உறவு முறைகளையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் பாடல் வாயிலாகப் புகட்டியிருக்கின்றனர்.

    அதே போல சற்று வளர்ந்த குழந்தைகளுக்குப் பெரியவர்கள் இரவில் கதைகளைக் கூறி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இன்னும் வளர்ந்து விட்டால் விளையாட்டுகளின் வழியாக நன்னெறியையும் கல்வியையும் கற்றுக்கொடுத்தனர்.

    இன்று இது போலச் செய்கின்றார்களா? செய்வதற்கு நேரமிருக்கிறதா? நேரமிருந்தாலும் பெற்றோர்க்குத் தம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல மனம் இருக்கிறதா?  ஒரு வேளை நேரம், மனம் இரண்டும் இருந்தாலும் கதைகளுக்கு அவர்கள் எங்கு போவார்கள்? கதை சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சித் தொடர்களைச் சொல்லும் நிலையில் அல்லவா அவர்கள் இருக்கின்றனர்.

    காலையில் எழுந்தவுடன் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்க்கு மாலை நேரம் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளுடன் அமர்ந்து மகிழ்வாகப் பேசி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க முடிகிறதா? பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம். பேராசை மறுபுறம். போதுமென்ற மனமில்லாததால் பொருள் தேடி அல்லறும் நிலையில் பெரும்பாலும் இன்றைய பெற்றோர்கள் இருக்கின்றனர். அந்தப் பொருளாசைக்கும் கல்வி, கலை என்று குழந்தைகளையே காரணமாகக் காட்டுகின்றனர். அவர்களின் பொருள் தேடல், அதன் காரணமான வேலைச்சுமை, நேரமின்மை, அதனால் ஏற்படும் மனச்சோர்வு, கோபம் எல்லாவற்றுக்கும் குழந்தைகள் சுமைதாங்கிகளாகி விடுவது தவிர்க்க இயலாததாகிப் போய்விடுகிறது.

    துள்ளித் திரியும் பருவத்தில் பெற்றோரது நேரமின்மையால் சிறைக்கைதிகள் போல தொலைக்காட்சி முன்போ அல்லது ஒரு தனிவகுப்பிலோ (டியூஷன்) அவர்கள் அடைக்கப் படுவதும் தவிர்க்க இயலாததாகிப் போகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் அப்பா அம்மாவைக் கண்டதும் ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு அழுது அடம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு விடுகின்றன. குழந்தைகள் அடம் பிடித்தவுடன் பொறுக்க முடியாத பெற்றோர் அடித்து விடுகின்றனர். நாள் ஆக ஆக அடிப்பார்கள். அடித்து விட்டுப் போகட்டும். அடிதானே, நாம் கேட்டது கிடைத்தால் போதும் என்னும் எண்ணம் குழந்தைகளிடம் வந்துவிடுகின்றது. இப்படி காரணம் அறியாமல் தொடங்கும் அடம் பெரியவர்கள் ஆன போதும் தொடர்கிறது.

    சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.

    “புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,

    அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்

    பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,

    ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”

    ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அவள். சொல் பேச்சு கேளாத அவள் திருமணம் ஆகித் தன் கணவனது இல்லத்தில் ஒருவேளை உண்டு ஒரு வேளை பட்டினியாக இருக்க வேண்டிய அளவு வறுமையில் வாழ்கிறாள். இருந்த போதும் வழக்கிட்டு விவாகரத்து கோராமல் இல்லறத்துக்கு இனிமை சேர்க்கிறாள். பெற்றோர் கொடுத்த செல்வத்தைக் கூட வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் என்கிறது இப்பாடல். இந்தப் பண்பு அடித்து வளர்த்தா வந்தது அப்பெண்ணுக்கு? மென்மையான அன்பில் விளைவது நற்பண்பு. அதை மட்டுமே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்ப் பார்க்கின்றனர்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு புரிதலையும்  குழந்தைகள்  பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்தான் இவர்களின் முதல் வழி காட்டியாய் இருக்கின்றனர்..

    இது வளமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் குழந்தையை அடிக்காமல் வளர்த்த காட்சி. வறுமையில் வாடும் தாய் மட்டும் என்ன அடித்தா வளர்த்தாள்? பசியால் துடித்து அழுது அடம் பிடிக்கும் குழந்தையை மறப்புலி வரும் என்று சொல்லிப் பார்க்கிறாள். நிலவைக்காட்டுகிறாள்; உன் தந்தை முகம் எப்படி இருக்கும் என்று காட்டு என்கிறாள். மனம் நொந்த அவள் அவ்வருத்தத்தைக் குழந்தையிடம் காட்டாமல் இப்படியெல்லாம் விளையாட்டுக் காட்டுகிறாள்.

    அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

    பொதுவாக நன்மை தீமைகளைக் கூறி வளர்ப்பது மிகச் சிறந்த குழந்தை வளர்ப்பு முறை. குழந்தைகளைக் கண்டிப்பது வேறு தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது குழந்தைகள் தவறு செய்யும் முன்பே தவறைச் செய்தவர்களுக்கு இறைவனால் சமுதாயத்தால், சட்டத்தால் கிடைக்கும் தண்டனையைக் கூறி வளர்த்தல் நல்லது.

    தவறு செய்யும் குழந்தையைக் கண்டியுங்கள். அது பெற்றோர்களின் கடமை. முதலில் குழந்தை அந்தத் தவறைத் தெரியாமல் செய்கிறதா? தெரிந்து செய்கிறதா? என்பதை அறிதல் மிக மிக அவசியம். அதன் தீய விளைவை எடுத்துக் கூறுதல் நல்லது. அப்போதும் குழந்தையை அச்சுறுத்துதல் நல்லதல்ல. அன்பாகக் கூறுதல் நல்லது. தெரிந்து செய்யும் தவறுக்குக் கண்டிப்பு அவசியம். எப்படி? வன்முறைகளற்ற கண்டிப்பு அவசியம். வன்முறை என்பதும் உடலளவில் மட்டுமல்ல. குழந்தைக்கு மன அளவிலும் வன்முறயற்ற கண்டிப்பு இக்காலத்தில் தேவை என்பதையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கத் தொடங்கும் போது மனச்சிதைவு அடையும் குழந்தை பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான குற்றங்களைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தைக் கைகொள்ள வாய்ப்பாக அமைந்து விடும். எனவே பெற்றோர்களே அன்பும் அரவணைப்பும் உதவுவது போல அடி ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!

     

    படத்துக்கு நன்றி: http://kathirvalaipoo.blogspot.com/2012/07/blog-post.html

     

    Share
  • தொல்லை காட்சி- நீயா நானா – லொள்ளு சபா – தெய்வ மகள்

    மோகன் குமார்

    ஐ பி. எல் கார்னர்

    மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர் பார்த்து விட்டு இறுதியில் தோனி இன்னிங்க்ஸ் மட்டும் பார்த்தேன்.

    தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி, பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி – வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி பரிசி எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். அதன் பலனை மேட்சில் காண முடிந்தது. போலார்ட்டின் அதி அற்புத கேட்ச் இல்லாவிடில் சென்னை ஜெயித்திருக்கும் ஹூம் :

    சன் ரைசர்ஸ் வெறும் 126 ரன்களை defend   செய்த  மேட்சும் இரண்டாம் பகுதி அட்டகாசம். டேல் ஸ்டெயின் பந்தில் பல முறை குச்சிகள் கார்ட் வீலிங் ஆகின.

    ஐ. பி. எல் லால் – தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !

    நல்ல நிகழ்ச்சி- ஆங்கிலம் கற்றுத் தரும் ஜெயா டிவி

    ஜெயா டிவி யில் பல வருடங்களாக ராஜகோபால் என்கிற ஒருவர் எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தருகிறார். காலை 7.40 முதல் 7.50 வரை ஜெயா டிவி யில் பேசுவார் இவர்.

    வகுப்பறை போல போர்டு வைத்துக் கொண்டு எதிரில் மாணவர்கள் இருக்கிற மாதிரி பாவனையில் இவர் பேசுவதே செம காமெடியாக இருக்கும். மேலும் இவருக்கு செம ஹியூமர் சென்ஸ்.

    ஆங்கிலத்தில் நாம் தப்பாய் உபயோகிக்கும் சில விஷயங்கள் இவர் நிகழ்ச்சி பார்த்து திருத்தி கொண்டதுண்டு.

    ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என நினைக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்குச் சொல்லி, அவர்கள் இந்நிகழ்ச்சி பார்த்து விட்டு ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு என்று சொன்னதுண்டு.

    முடிந்தால் பாருங்கள் !

    மகாபாரதம்

    சன் டிவியில் ஞாயிறு காலை மகாபாரதம் வெளிவருகிறது. முன்பு ஹிந்தியில் கண்டிருந்தாலும் தமிழில் காண சற்று சுவாரஸ்யம் தான்.

    நமக்கு தெரிந்த நடிகர், நடிகைகள், நிறையவே பொருட்செலவு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் என நிறைய ஆச்சரியங்கள் + மகிழ்ச்சிகள்

    எங்கள் ஊரில் வருடா வருடம் மகாபாரதம் 15 நாள் சொற்பொழிவு நடக்கும். எங்கள் கடையில் அமர்ந்தவாறே தெளிவாய் கேட்கமுடியும். கோவிலுக்குச் சென்று அமர்ந்து கேட்டதும் உண்டு. இருந்தும் அம்பை என்கிற பெண்ணின் கதை சென்ற வாரம் தான் பார்த்து புதிதாய் அறிய முடிந்தது. மகாபாரதத்திற்குள் தான் எத்தனை எத்தனை கிளைக் கதைகள் !

    ராமாயணத்தை விடவும் மகாபாரதம் சுவாரஸ்யமானது என்பது என் தாழ்மையான எண்ணம் !

    சீரியல் பக்கம் – தெய்வ மகள்

    விகடனின் புத்தகம் ஒன்றில் இந்த அழகு தேவதை அட்டைப் படம் பார்த்து சொக்கிப் போனேன். அப்புறம் உள்ளே என்ன சமாசாரம் என்று படித்தால் – வாணி போஜன் என்கிற அம்மணி விகடன் சமீபத்தில் எடுத்து சன் டிவியில் வரும் தெய்வமகள் சீரியல் ஹீரோயினாம்.

    ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு கலைச்சேவை ஆற்ற வந்துள்ளார் வாணி. சீரியலில் இவர் போடும் உடைகள் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு  இருப்பது அவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் பார்த்தாலே தெரிகிறது.

    இதற்காகவெல்லாம் சீரியல் பார்க்கிற அளவு மனசில்லை..!

    கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் !

    சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

    ஞாயிறு மதியம் பொழுது போகாமல் சன் டிவியில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி  முழுவதும் பார்த்தோம் சானியா மிர்சா, சரோஜா தேவி, த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோருக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. (ஹன்சிகா நடிக்க வந்த சில வருடங்களில் என்ன சாதனை செய்தார் என்று தான் புரியலை)

    தொகுத்து வழங்கியவர்களுள் ஒருவரான கார்த்திக் என்கிற புது காம்பியர் பெண்களை நிறையவே கிண்டலடித்துக் கொண்டிருந்தார் இருந்தும் அவ்வப்போது சிரிக்கவும் வைத்தார்

    அனிருத் – தனது புதிய படமான எதிர் நீச்சலில் இருந்து பாடல் பாடியது அமர்க்களமாய் இருந்தது.

    நிகழ்ச்சியில் மிக அசத்தியவர்கள் – ஒரு டான்ஸ் ஆடிய இரு குட்டிப் பசங்க… 5 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் போல் உடலை மடக்கி திருப்பி சுற்றி ஆடியது – பார்த்த அனைவரையும் அதிசயிக்க வைத்தது

    நீயா நானா – பெண்ணுக்குள் ஆண் – ஆணுக்குள் பெண்

    இந்தத் தலைப்பு ஒளிபரப்பாகும் முன்பே சற்று சர்ச்சையை கிளப்பியது. அதென்ன பெண்ணுக்கு தனி குணம்; ஆணுக்கு தனி குணம் என்று.

    ஆனால் ” Men are from Mars; Women from Venus” – என்று ஒரு புத்தகமே வந்து சக்கை போடு போட்டது சில விஷயங்களில் ஆணும், பெண்ணும் இயல்பாகவே மாறுபடுகிறார்கள். எனக்கு பெண் குழந்தையும், மச்சானுக்கு   ஆண்  குழந்தையும் 2 நாள் வித்தியாசத்தில் பிறந்து இருவரும் அருகருகில் வளர்ந்த போது இதை தெளிவாகக் காண முடிந்தது.

    நிற்க. வெட்கம், கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் பின்னணியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஓரளவு சுவாரஸ்யமாகவே இருந்தது

    லொல்லு சபா மாரத்தான்

    ஒவ்வொரு சனி மதியமும் விஜய் டிவி தங்களின் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான பகுதிகளை காண்பிக்கின்றனர்.  அப்படி இந்த வாரம் – லொல்லு சபா மாரத்தான் ! சந்தானம்,  ஜீவா, மனோகர் ஆகியோர் அடித்த லூட்டிகளைப் பார்த்து வயிறு வலி வந்து விட்டது.

    மண் வாசனை, சின்னத் தம்பி, சிந்து பைரவி, நான் அவன் இல்லை என எத்தனை படங்களை நாசம் செய்திருக்கிறார்கள். கூடவே டைரக்டர் உள்ளிட்ட தங்களையே எள்ளல்   செய்யவும் தயங்குவதில்லை.

    மீண்டும் லொல்லு சபா வந்தால் நன்றாயிருக்கும் என்கிற ஆதங்கத்தை இன்னோர் முறை பதிவு செய்கிறேன்

    Share
  • ஒரு தகப்பனின் கண்ணீர்க் கடிதம்!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    கடலம்மா தயவால காலந்தான் தள்ளுறோம்

    கட்டுமரம் தள்ளியே கால்வயிறு நெறக்கிறோம்

    ஒடம்பெல்லாம் புண்ணாக ஓயாது உழைக்கிறோம்

    உள்ளத்தில கள்ளமில்ல உத்தமரா வாழுறோம்!

     

    தவமாத் தவமிருந்து நாம்பெத்த அருமமவன்

    மீன்பிடிக்கக் கடலுபோயி நாலுநாளு ஆச்சுதய்யா

    விவரம் புரியலயே போனஎடம் தெரியலியே….

    வருவானா மாட்டானா வெளக்கஞ்சொல்ல ஆளில்லையே?

     

    தூக்கம் புடிக்காமத் தூணோரம் சாஞ்சிருக்கேன்

    வாரம்ஒண்ணு ஆயிடுச்சு கண்ணுபூத்துப் போயிடுச்சு

    துக்கம் பொங்கிவந்து தொண்டக்குழி அடைக்குதய்யா

    எம்மவனப் பாத்திடவே என்னுசிரு இருக்குதய்யா!

     

    இன்னிப் பொழுதுக்குள்ள எப்படியும் வந்திடுவான்

    உச்சி மொகந்திடவே வேணுமுன்னு காத்திருக்கேன்

    கன்னுக் குட்டிபோல துள்ளுற எம்மவன

    எங்கிட்ட சேத்திடுன்னு அய்யனார நேந்திருக்கேன்!

     

    வந்திட்டான் எம்மவன்னு சேதிகேட்டுப் நாம்போனேன்

    அதுக்கு முன்னாடி எமன்வந்த தறியாம

    நொந்து பொலம்புறேனே நொறுங்கிப்போயி நிக்கிறேனே

    எந்த அப்பனுக்கும் (வர)வேணாய்யா என்நெலம….

     

    குலத்த வெளங்கவெக்கக் கொழுந்தாக வந்தமவன்

    கலங்க வெச்சானே காலன்கிட்டப் போனானே!

    இலங்க ராணுவத்தான் குண்டுக்குப் பலியாகிச்

    சவமா வந்தானே சங்கடத்தத் தந்தானே!

     

    செம்படவ சாதியில பொறந்ததத் தவிரநாங்க

    செஞ்சபாவம் என்னான்னு எங்களுக்கு வெளங்கலியே?

    கும்பிட்ட தெய்வமிப்போ எங்குடியக் காக்கலியே….

    யாரநம்பி வாழுறது? நல்லவழி சொல்லுங்கய்யா…!!

     

    படத்துக்கு நன்றி: http://yo-modo.com/archives/the-price-to-pay/tears

     

    Share
  • அறுமுகநூறு (8)

     

    -சச்சிதானந்தம்

     

    செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,

    செந்தேன் உமிழும் இதழே போற்றி,

    செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,

    செந்தில் நாதச் சுவையே போற்றி!                                                                                   36

     

    வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,

    வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,

    வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,

    வீடு பேரளிக்கும் வேலவா போற்றி!                                                                                 37

     

    மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,

    மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,

    மோதும் அலையென எழுந்தாய் போற்றி,

    மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி!                                                                           38

     

    நடன மிடும் ஈசனின் மகனின்,

    வதன முகம் பேசிடும் விழிகள்,

    நுதலில் நீறு பூசிடும் முறைகள்,

    முதலில் கண்டு முழுமை அடைவோம்!                                                                           39

     

    கிடுகிடு வென உயர்ந்த மலையை,

    விடுவிடு வென விரைந்து நடந்து,

    நெடுநெடு வென நீண்ட உனது,

    முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்!                                                                             40

     

    Share
  • அருகில்தான்…

    செண்பக ஜெகதீசன்

    நாள் முதலில் உன்

    எதிர்பார்ப்பு,

    நாள் முடிவில் உன்

    அனுபவமானால்

    நல்லதுதான்- உன்

    அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!

    படத்துக்கு நன்றி

    http://murugan.org/research/kandiah.htm

    Share
  • திருமுருகன் துதிமாலை (3)

     

    சத்தியமணி

     

    தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்

    அறிவோடு ஆக்கம் வேண்டும்

    ஒளியில்லா இருள்தனில் ஓங்காரமாய்நீ

    பளிச்சென்று தெரிய வேண்டும்

    விளியோடு துதிபாடி துதிபாடி துதிபாடி

    வேலவா மகிழ வேண்டும்

    கிளியோடு மொழிபேசும் உன்மழலையொடு

    கீர்த்தனை யோட வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (3)

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (8)

    பவள சங்கரி

    தீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளை மகிழ்வுடன் இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.
    புத்தர்


    வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்

    எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவர் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற படபடப்பும்கூட வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் அடுத்தவரிடம் காட்டும் அந்த வெறுப்புணர்ச்சி, நம்மீதே சுய அனுதாபத்தை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சுய வெறுப்பிற்கும் வழிவகுத்துவிடும். நம்மை நாமே வெறுக்கும் சூழல் தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும். இதைத் தவிர்க்க ஒரே வழி எவரையும் வெறுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேணடும். தன்னைப் போல பிறரையும் நேசிப்பது வெற்றிப் பாதையின் மலரணை என்பதில் ஐயமில்லை.

    அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

    எந்த ஒரு காரியத்தைச் செய்யும் போதும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்தால் அந்த காரியத்தை சரியாகக் கொண்டு செலுத்துவது சிரமம். காரணம் தோல்வி என்பதே கற்பனையான ஒன்று. தோல்வி என்று கற்பனையாக நினைப்பதெல்லாம் வெற்றிக்கான படிகள் என்பதுதான் நிதர்சனம். இதை முழுமையாக உணர்நது கொண்டாலே தேவையற்ற சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் முன்னேற முடியும்.

    என் உறவினர் ஒருவர் மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை  நிபுணர். ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தவர். வாழ்க்கையில் தம் பதவிக் காலத்தில் பல ஆபத்தான அறுவை சிகிச்சைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து பல உயிர்களை காத்தவர். தம்முடைய  பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் இறுதி அறுவை சிகிச்சையின் போது, நோயாளி இறந்துவிட, அந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்து, தம் கவனக் குறைவினால்தான் தன்க்கு தோல்வி ஏற்பட்டது என்று கற்பனை செய்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதே நோயாக மாறி பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டார். தன்னுடைய 35 ஆண்டுகால சேவையின்போது காப்பாற்றிய எத்தனையோ உயிர்களைப் பற்றியும், அந்த வெற்றியைப் பற்றியும் மன நிறைவு கொள்ளாத அவர், தன் கையை மீறி நடந்த ஒரு அசம்பாவிதத்தை அதீத கற்பனைக் கண்களுடன் பார்த்து, அமைதியாக வாழ வேண்டிய நாட்களை தொலைத்ததோடு, தாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். இதனால் பிரச்சனைகள் அதிகமானதே தவிர வேறு எந்த பலனும் இல்லை.

    இன்னொரு சம்பவம் நான் மிகவும் ஆச்சரியப்பட்டது, இரண்டு நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டுக்களுடன் நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அடுத்தவரோ இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்று வெளியே வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது எனக்கு. ஆம் அதிக மதிப்பெண் வாங்கி வெளியில் வந்த மாணவர் சரியான வேலை கிடைக்காமல் பெரும் மன வருத்தம் கொண்டிருக்க, மற்றொரு மாணவரோ நல்ல ஒரு பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். இது எப்படி சாத்தியம் என்று விசாரித்த போது, நல்ல மதிப்பெண் வாங்கி வெளியில் வந்து, முதல் நேர்ககாணலுக்குச் சென்றவர், அங்கு வேலை கிடைக்காமல் போனவுடன், தோல்வி என்ற அச்சம் சிறைபிடிக்க, அடுத்து வந்த அத்தனை நேர்காணல்களையும் அதே அச்சத்துடன் அணுக, நாளடைவில் தன்னம்பிக்கை குலைந்து புதிய முயற்சி என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு குறைவான ஊதியத்தில் திருப்தி இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதைக்கண்டு அச்சம் கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் பெரு முயற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்றதோடு அதே தன்னம்பிக்கையுடன் போன முதல் நேர்க்காணலே வெற்றியைக் கொடுக்க அன்றிலிருந்து ஏறுமுகம்தான் அவருக்கு!

    எந்த ஒரு செயலையும் கெட்டியாக பிடித்துக் கொள்வதோடு, அதை இலகுவாக அவிழ்த்துவிடவும் பழக வேண்டும். ஆம் நம்மால் முடிந்தவரை நூறு சதவிகித முயற்சியை மூலதனமாக்கிவிட்டு, நம் இருதயத்தையும், ஆன்மாவையும் ஒருங்கே அதில் முழுமையாகச் செலுத்திவிட்டு அடுத்த நொடி அதிலிருந்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற அச்சம் இல்லாமல், மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் வளைய வந்தால் போதும், வெற்றிப்பாதை தெளிவாகப் புலப்படும்!

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பதே சத்தியம். இதைத்தான் எண்ணம் போல வாழ்வு என்பார்கள் இல்லையா!

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி

    Share
  • வாழ்க்கை நலம் – 5

    குன்றக்குடி அடிகள்

    5. நீத்தார் பெருமை

    மனம்-மொழி-மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவாருக்கே புலப்படும்;அங்கனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.

    பற்றுக்களின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளேயாம். இயல்பாக உயிரினம் – குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக்கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

    இன்று மனிதன் களிப்பை – அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு. ஊக்கம் உண்டு. இந்த ஓட்பம் – அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

    மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால்கொள்கின்றன.கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை. ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்கு காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

    உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை – கோட்பாடு. உலகத்தை –இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்துகொண்டு அந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவருக்கு – இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

    “சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு”

    என்பது திருக்குறள்.

    மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு – அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள் – என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.

    இன்று பெரும்பாலும் – புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோலவெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள் – வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிபடுத்தும் இயல்பு – புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.

    புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை – ஒளி – ஊறு – ஓசை – நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வான கொள்வர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பௌதிகம் அறிந்து – அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகையாரே நீத்தார்!

    புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையவனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்”

    “அவித்தல்” என்றால் அழித்தல் – அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் – பக்குவப் படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப் போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

    பற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை – வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்க முடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்போழுதும் – நீத்தார் தன்மை வந்தமைகிறது.

    இத்தகு நீத்தார்க்குத் தற்சா ர்பின்மையால் விருப்பு வெறுப்புகள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை! சார்பு இல்லையேல் நன்மையையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

     

    படம் உதவி: http://www.hindu.com/2006/02/03/images/2006020318081401.jpg
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • “ திருட்டுப் பூனைகள் “

    தமிழ்த் தேனீ

    நல்ல தூக்கம்  , திடீரென்று  டொம் என்று ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் மாதவன் , பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த  மைதிலி  அது ஒண்ணுமில்லேங்க ,  நம்ம ஜன்னலுக்கு மேலே இருக்கே  சன்ஷேட்   அதுலே இந்தப் பூனை ரெண்டு குட்டி போட்டிருக்கு,  நம்ம கார் ஷெட்டுக்குக்கு மேலே பிளாஸ்டிக் ஷீட் போட்டிருக்கீங்களே  அதுமேலே பூனை குதிச்சிருக்கும்  அதான் சத்தம் என்றாள்  .
    ஆமா இருந்த இட்த்திலே இருந்தே  நீயா  ஏதாவது கற்பனை செய்து எதையும் சொல்லாதே, பதினோரு மணி  பாதிராத்திரி, காலம் கெட்டுக் கிடக்கு, போனவாரம் கூட ராமன் தெருவிலே ஜன்னலை உடைச்சு வீட்டிலே இருக்கறதையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிட்டாங்க மர்ம நபர்கள், இப்பல்லாம்  மர்ம நபர்கள் அதிகமாயிட்டாங்க,
    போலீஸ்காரங்க நிறைய மர்ம நபர்களை தேடிக்கிட்டே இருக்காங்க , என்று மைதிலிடம் கூறிவிட்டு, நீ ஒண்ணும் பயப்படாதே  நான் போயி பாத்துட்டு வரேன்  என்றபடி டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு  மெயின் கேட்டைத் திறந்து வெளியே போனான் மாதவன் .
    வீட்டைச் சுற்றி எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சு , ஒண்ணும் தெரியலே, யோசித்துக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே சத்தம், கார் ஷெட்டின் அருகே சென்று டார்ச் அடித்துப் பார்த்தான்,
    ஒரு பூனை அதன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு  பிளாஸ்டிக் ஷீட் மேலே குதித்து, மிக லாவகமாக அங்கே இருந்து ஜன்னலுக்கு தாவி , குட்டிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், ஜன்னலிலிருந்து கீழே குதித்து ,  பம்ப்செட் மோட்டார் இருக்கும் அறையின் கிரில் வழியாக உள்ளே போய் குட்டியை மிகப் பத்திரமாக தரை இறக்கி வைத்துவிட்டு  மாதவனைப் பார்த்து மிய்யாவ் என்றது.  அந்த மியாவ் வுக்கு என்ன பொருள் என்று மாதவனுக்கு புரிந்தது, பயப்படாதே  நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் உன் குட்டியை , ஏதோ சத்தம் கேட்டுதேன்னு வந்து பாத்தேன், என்று ஏதோ ரொம்பநாள் பழகினா மாதிரியும் , இவன் பேசறதெல்லாம் அந்தப் பூனை புரிந்து கொள்ளும் என்னும் எண்ணத்துடன் அதுனாலே நான் இங்கேயே இருக்கேன் நீ  மேலே போயி உன்னோட இன்னொரு குட்டியையும்  தூக்கிண்டு வா  என்றான்.
    பூனை இப்போது வேறு தொனியில் மியாவ் என்று கத்திவிட்டு குட்டிப் பூனையின் பக்கத்திலே  படுத்துக் கொண்டது. மாதவன் மனதில் அந்தப் பூனையின் மியாவுக்கு என்ன அர்த்தம் என்றும் அதன்   எண்ணம் என்ன என்பதும்  புரிந்தது . ஆமாம் அந்தப் பூனை கண்களின் பாவத்தாலும் முக அசைவாலும்  இவனுக்கு மிக அழகாக அதன் எண்ணத்தை  புரியவைத்தது.   அட கூர்ந்து கவனித்தால் இந்தப் பூனையின் மொழியைக் கூட கற்றுக் கொள்ள முடியும் போல் இருக்கிறதே என்று தோன்றியது மாதவனுக்கு.
    உன்னாலே ஆபத்தில்லேன்னு புரிஞ்சிகிட்டேன்   ஆனா இன்னொரு குட்டி அங்கே மேலே இருக்கு  அதைப் பத்தியும் கவலையா இருக்கு,  இப்போ இந்தக் குட்டியை  கொண்டு வந்து வெச்சிருக்கேனே  இந்த இடம் பாதுகாப்பா இருக்குமான்னு  யோசிச்சிண்டு இருக்கேன்  இந்த இடம் பாதுகாப்பானதுன்னு   என் மனசுக்கு பட்டால்தான்   இன்னொரு குட்டியையும் இங்கே கூட்டி வருவேன்  அப்படி என்று அந்த மிய்யாவுக்கு அர்த்தம் புரிந்து கொண்டான் மாதவன் ,
    அவனுக்கு திடீரென்று ஒரு ஆசை எப்படியும் இந்தப் பூனை மேலே இருக்கற இன்னொரு குட்டியை எடுத்துண்டு வர மேலே போகும் , அப்பிடி அந்தக் குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு புகைப்படம் எடுக்கலாம்னு உள்ளே போயி கேமராவை எடுத்துக்கொண்டு  மைதிலி நீ சொன்னது சரியா இருக்கு, அதேதான் அந்தப் பூனைதான், குட்டியைக் கவ்விண்டு வந்து கீழே வெச்சிருக்கு, இன்னொரு குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு போட்டோ எடுத்திண்டு வரேன்  , என்றபடி வெளியே போனான்,
    இவன் வீட்டுக்குள் வந்து மைதிலியிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் நேரத்துக்குள் அந்தப் பூனை இன்னொரு குட்டியையும் கவ்விக்கொண்டு வந்து  மோட்டார் ரூமில் வைத்துவிட்டு அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.
    மாதவன் ஜன்னல் வழியே இதோ பாரு  மைதிலி  சத்தமே போடாம பூனை மாதிரி அதுக்குள்ளே இன்னொரு குட்டியையும் கொண்டு வந்து வெச்சிடிச்சு  என்றான்  போட்டோ எடுக்க முடியாத  ஏமாற்றத்துடன்  .
    ஏங்க அது பூனைதானே   என்றாள் மைதிலி   அது அப்பிடித்தான் செய்யும் , நீங்க தள்ளி வந்துட்டீங்க இல்லே அந்த நேரத்திலே உங்களாலே கீழே இருக்கற குட்டிக்கு ஆபத்து ஏற்படாதுன்னு யோசிச்சு  நீங்க அங்கே போறதுக்குள்ளே கொண்டு வந்து வெச்சிடிச்சு பாத்தீங்களா . நம்மளைவிட எல்லாமே  புத்திசாலியா இருக்கு என்றாள்.  அட ஆமாம் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே   அதை  போட்டோ எடுத்துட்டு   உள்ளே வந்தான்  மாதவன் ,
    நாய்   நாம குடுக்கறதை தின்னுட்டு காவல் காக்கும் , அதை வளக்கலாம் ஆனா  பூனைக்கு முன் யோசனை அதிகம், திருட்டுத் தனம் அதிகம்னு  சொல்வாங்க, அதுனாலே பூனை என்ன செய்யுமாம் அந்த வீட்டிலே இருக்கறவங்க  எப்போ போவாங்க  நாம போயி திருட்டுத் தனமா கிடைக்கறதை சாப்படலாம்னு  காத்துகிட்டு இருக்குமாம், அதுனாலே பூனை வளக்கக் கூடாதுன்னு சொல்வாங்க,  என்றாள்  மைதிலி.
    வாசற் கதவைப் பூட்டிவிட்டு வந்து படுத்தான் மாதவன், ஆமாம் அதெப்பிடி  நீ இங்கேருந்தே சரியா கண்டு பிடிக்கறே ,ஆமாம் தூங்கலையா நீ முழிச்சிகிட்டே படுத்திருந்தியா என்றான்.
    இல்லே இல்லே தூங்கிட்டேன் ,ஆனாலும்  பொம்பளைங்க  தூக்கமெல்லாம் கோழித் தூக்கம் மாதிரி, பூனைத் தூக்கம் மாதிரிதான் ,அசந்து போயி தூங்குவோம் ஆனாலும் ஒரு விழிப்பு இருந்துகிட்டே இருக்கும் , ஆனா ஆம்பிளைங்க  அசந்து போனா ஆழ்ந்து தூங்கிடுவீங்க  , அதுனாலே இந்த சத்தம் இதுனாலேன்னு  அனுபவத்திலே கண்டுபிடிக்க முடியும் எங்களாலே என்றாள்.
    அதெல்லாம் சரி மைதிலி நீ சொன்னியே பூனைக்கு திருட்டுத் தனம் அதிகம்  வீட்டிலே இருக்கறவங்க எப்போ போவாங்க அப்பிடீனு காத்துகிட்டு இருக்கும் அப்பிடீன்னு , அதை ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு தப்பா சொல்லிக் குடுத்துட்டங்களோ  நம்ம பெரியவங்க, இல்லே  பெரியவங்க சொன்னதை தப்பா நாம புரிஞ்சிகிட்டோமான்னு  தெரியலே,
    மெதுவா சத்தமே போடாம இருக்கறது பூனையோட குணம், அவ்ளோதான் உண்மை, அதுக்கு இருக்கற  இருட்டிலேயும் கண்ணு தெரியும்கிற சக்தியைப் பயன்படுத்தி அது தனக்கு வேண்டிய உணவைத் தேடிக்கிது  அவ்ளோதான், ஆனா அதுக்கு பயம் அதிகம்  அதுனாலே நாம யாரும் இல்லேன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கப்புறம் வந்து அதுக்கு வேணுங்கற  உணவை சாப்பிடுது, அதை நாம திருட்டுத் தனம்னு சொல்றோம்,
    நம்மைப் பாத்து பயப்படறதாலே நாம எப்போ தள்ளிப் போவோம்ம்னு காத்திருக்கும் அவ்ளோதான், அதை தப்பா சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்    மனுஷன் எப்போ  போவான்னு காத்திருந்து  வந்து திருடும்னு.   இப்போ நீயே ஒத்துகிட்டே நான் அசந்து தூங்கறேன்னு , ஆனா நீ அசந்து தூங்கினாலும் ஒரு விழிப்புணர்வு இருக்கும்னு.
    அப்போ நான் அசந்து தூங்கும்போது  உனக்கு விழிப்பு வருதுன்னு வெச்சிக்கோ, அப்போ உனக்கு தாகமா இருக்கு , பிரிட்ஜிலேருந்து  ஏதாவது எடுத்து தாகத்துக்கு குடிக்கறேன்னு வெச்சிக்கோ, யதேச்சையா   எனக்கு அப்போ விழிப்பு வந்தா , உடனே நான் அசந்து தூங்கற நேரமாப் பாத்து  எனக்கு கூடக் குடுக்காமே நீ குளிர்பானம் குடிக்கறேன்னு நான் நெனைச்சிகிட்டா எவ்ளோ  முட்டாள் தனமோ அதே மாதிரிதான் பூனை நமக்குத் தெரியாம வந்து பாலைக் குடிக்கும் போது  அதைத் திருட்டுப் பூனைன்னு சொல்றதும் என்றான் மாதவன்.
    அட ஆமா .நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு,  , நான் மாடியிலே  துணி காயப் போடும்போது நெனைச்சிகிட்டேன் , இந்தப் பூனை குட்டிகளுக்கு பால் குடுக்குதே,  ,இதுக்கு குட்டிகளுக்கு பால் குடுக்க சக்தி வேணுமே அதுனாலே  இந்தப் பூனைக்கு ஏதாவது குடுக்கலாமா ன்னு ஆனா பெரியவங்க  பூனைக்கு சாப்பிட ஏதாவது குடுத்தா அப்புறம் நம்ம வீட்டிலேருந்து போகவே போகாது  எப்போ நாம அடுத்து அடுத்து அதுக்கு குடுப்போம்னு காத்திருக்கும் , அப்பிடிக் குடுக்கலேன்னா  திருடியாவது சாப்பிடும்னு சொல்வாங்களே அப்பிடீன்னு பயந்து ஒண்ணுமே குடுக்காம விட்டுட்டேன் என்றாள் மைதிலி
    நீ சொல்றதும் சரிதான்  அதுவும் ஒரு ஜீவன்தானே , அதுக்கும் பசிக்கும், குட்டிகளுக்கு பால் குடுக்க அதுக்கும் சக்தி வேணும், அதுனாலே  நாம ரெண்டு பேரும் போயி கொஞ்ச பால் எடுத்து ஒரு கிண்ணத்திலே வெச்சு அந்தப் பூனைக்கு குடுக்கலாமா  என்றான் மாதவன்.
    இதோ எடுத்துகிட்டு வரேன் என்றபடி ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு  வந்து வாங்க போயி அந்தப் பூனைக்கு குடுக்கலாம்னு மாதவனும் மைதிலியும் வெளியே வந்து அந்தப் பால் கிண்ணத்தை பூனையிடம் வைத்துவிட்டு , அது பாலைக் குடிக்கும் என்று காத்திருந்தனர்  இருவரும்,  ஆனால் இவர்களை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இவர்களையே அந்தப் பூனை இவர்களையே பார்த்துக்கொண்டு  சும்மா உட்கார்ந்து இருந்தது .
    உனக்காத்தானே பால் கொண்டு வந்தோம் , நமபவே மாட்டேங்கறையே  நாங்க உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம்,பாலைக் குடி என்றான் மாதவன், மியாவ் என்றது பூனை சரி  புரிஞ்சு போச்சு  யாரோட இயல்பையும் மாத்த முடியாது நம்மாலே , நாம தள்ளிப் போனாத்தான் இந்தப் பூனை பாலைக் குடிக்கும் போல இருக்கு  ,  சரி வா நாம போயி தூங்கலாம் என்றபடி உள்ளே வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள் இருவரும்,
    மெதுவே மெல்ல அடிஎடுத்து வைத்து கிண்ணத்தில் வாயை வைத்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீண்டும் சந்தேகத்துடன் தலையைத் தூக்கி  சுறும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் பாலைக் குடிக்க ஆரம்பித்த்து  பூனை. சிரித்தபடி  மாதவன் பாத்தியா  அதோட திருட்டுத் தனத்தை என்றான்.
    ஏன் திருட்டுத் தனம்னு சொல்றீங்க அதோட இயல்பு ஜாக்கிறதை உணர்வு என்றாள் மைதிலி, சபாஷ் நீயும் சரியாப் புரிஞ்சிக்கறே, அது சரி நாம எதைச் சாப்பிட்டாலும்  கடவுளுக்கு படைச்சிடு சாப்படறோமே . உண்மையாவே இந்தப் பூனை மாதிரி நாம் படைச்ச பாலை கடவுள் குடிச்சா அடுத்த முறை படைப்போமா  என்றான் மாதவன்.
    எல்லாம் மனசுதாங்க காரணம்  அங்கே பூனைக்கு சந்தேகம், இங்கே நமக்கு சந்தேகம் நாம  தயாரிச்சிருக்கற உணவுப் பொருள்லே ஏதாவது ஒவ்வாமை இருந்தா நம்மைப் பாதிக்குமே.அப்பிடீன்னு .
    அதுனாலே எல்லா வல்லமையும் படைச்ச இறைவா  ,நாங்க இதை உனக்கு படைக்கிறோம் இதிலே ஏதேனும் தோஷமிருந்தா அதைப் போக்கற சக்தி உனக்குதான் இருக்கு, இதிலே இருக்கற தோஷங்களை நீக்கி ஆரோக்கியமான  அமைர்தமா  இந்த உணவை மாத்தி  எங்களுக்கு குடுன்னு வேண்டிக்கறோம்,
    ஜீவராசிகளையும் படைச்சு அதுக்கு வேண்டிய உணவையும் படைச்ச இறைவனுக்கு நன்றி சொல்றா மாதிரிதான் அவனை அப்பப்போ நெனைச்சுக்கணும் ,மறக்க் கூடாதுங்கறதுக்காக  பெரியவங்க சில வழிமுறைகளை ஏறபடுத்தி வெச்சிருக்காங்க அதிலே இதுவும் ஒண்ணு என்றாள் மைதிலி.
    ஆமாம் மைதிலி  சாப்பாட்டிலே யாராவது எதையாவது கலந்து குடுத்துட்டா என்ன செய்யறதுன்னு  சாப்பிட்டுப் பார்த்து அதிலே ஒண்ணும் பாதிக்கறா மாதிரி எதுவும் கலக்கலே  என்று  உறுதி படுத்திக்க முன்னெல்லாம் ராஜாக்கள் ஒரு ஆளை வெச்சிருப்பாங்களாம். அவர் முதல்லெ சாப்பிட்டுட்டு  அவருக்கு எதுவும் பாதகமா ஆகலைன்னா  ராஜா சாப்புடுவாராம்.
    அது மாதிரி ஒரு ஆளா நாம தெய்வத்தை வெச்சிருக்கோம்னு எனக்கு தோணுது,  நாமளும் இந்தப் பூனை மாதிரிதான்  சந்தேகப் பிராணி என்றான் மாதவன் .   மனுஷன்தாங்க எப்பவுமே திருட்டுப் பூனை  என்றாள் மைதிலி.
    அதுசரி மைதிலி  மைதிலி அந்தப் பூனை  தன் குட்டியை வாயாலே கவ்வி எடுத்துகிட்டுப் போவுதே  குட்டிப் பூனைக்கு வலிக்காதா என்றான்.
    குட்டிப் பூனைக்கு வலிக்காம ஜாக்கிறதையா எடுத்துகிட்டுப் போவும் தாய்ப்பூனை. இது ஒரு மாதிரி தாய்மை , தாய்மைங்கறதே பக்திதானே ,  நாம பக்தீன்னு சொல்றோமே  அதை ரெண்டு விதமா பெரியவங்க சொல்வாங்க ,  ஒண்ணு  மர்க்கட நியாயம், இன்னொண்ணு மார்ஜார நியாயம்
    மர்க்கடம்ன்னா குரங்கு , குரங்கு  அது பாட்டுக்கு கிளைக்கு கிளை தாவிக்கிட்டே போவும் , ஆனா அதோட குட்டி  தாய்க் குரங்கை கெட்டியா பிடிச்சிக்கும் , குட்டிக் குரங்கு சரியாப் பிடிச்சுக்காம கையை விட்டுடிச்சுன்னா கீழே விழுந்துடம் ,அதுனாலே  கெட்டியாப் பிடிச்சிக்கும் , இது மாதிரி ஒரு பக்தி, நாமதான் தெய்வத்தை  பிடிச்சிக்கணும்னு சொல்லுது
    இன்னொண்ணு இந்தப் பூனை மாதிரி, மார்ஜாரம்ன்னா பூனை  இந்தப் பூனை குட்டிகளை எப்பவும் விடாம காப்பாத்தும், வாயாலே பூனைக்குட்டிகளுக்கு வலிக்காமே கவ்விகிட்டு போயி பத்திரமா வெச்சுக் காப்பாத்தும் . அதுனாலே குட்டிகள் கவலைப் படாமே  எல்லாத்தையும் தாய்ப்பூனையை நம்பி ஒப்படைச்சிட்டு  நிம்மதியா இருக்கும்.
    ஆனா மனுஷன் இந்த ரெண்டு பக்தியையும் முழுசா நம்பறதில்லே. வேணும்னா கடவுளைக் கும்புடறான், இல்லாட்டி கடவுளை நெனைக்கறதே இல்லேன்னு  மாறி மாறி நிலையில்லாத புத்தியை வெச்சிகிட்டு அல்லாடறான்.
    அது மாதிரிதான்  நானும் படுத்தவுடனே எல்லாத்தையும் நீ பாத்துப்பேன்னு  நம்பி நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிடறேன் மைதிலி , தாய்க்குப் பின் தாரம் சரிதானே என்றான் மாதவன்
    மியாவ் என்றது பூனை,   பத்தியா நான் சொன்னது சரின்னு பூனை கூட சொல்லிடிச்சு  என்றான் மாதவன். இருவரும் சிரித்துக் கொண்டே  தூங்க ஆரம்பித்தனர்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (52)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகின்றேன். என்னுடைய மடல் வரிசையில் இது 52 வது மடல். ஆமாம் ஜம்பத்திரண்டு வாரங்களாக தொடர்ந்து உங்களுடன் இம்மடல் வாயிலாக உறவாடி வருகிறேன்.

    52 வாரங்கள் ! ஓ ! ஒரு வருடமல்லவா? ஆமாம் இம்டலின் உறவாடலுக்கு இத்தோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. இவ்வோராண்டு காலமாக இப்புலம்பெயர் தேசத்திலேயிருந்து புலம்பும் இச்சிறியேனின் புலம்பல்களை பொறுமையுடன் படித்து ஆதரித்து வந்த உறவுகள் அனைவருக்கும், இம்மடலை அழகாக தவறாமல் பதிப்பித்து வரும் எனதினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும் முதற்கண் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புத்தம்பி அண்ணாகண்ணனின் அன்பான ஆதரவுடன் வல்லமையில் இதுவரை நான் படைத்து வந்த அனைத்தையும் அதேபோல அன்பான ஆதரவுடன் பவள சங்கரி அவர்களும் தொடர்ந்து பதிப்பித்து வருவது மனதை நிறைக்கிறது.

    நான் எனது முதலாவது மடலில் குறிப்பிட்டது போல ஒரு காலத்தின் பதிவு என்பது காலத்தின் கண்ணாடியைப் போன்றது. நாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததியினரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு உன்னத ஊடகக் கண்ணாடியே பதிவுகளாகும்.

    எனது 38 வருட புலம்பெயர் வாழ்க்கையில் நானடைந்த, கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் பல. இதே மாற்றங்களை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமானவை. ஓ! இப்படி நடந்திருக்கிறது என்று நாம் நினத்திருக்கும் வேளையில் மற்றொருவரின் பார்வையில் அது வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறியும் போது மிகவும் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

    வாழ்க்கையெனும் இந்த அற்புதக் கல்லூரியில் நான் இன்னமும், மாணவனே. தினமும் புதிதாக பலவற்றை பலவிதமான என்னை விட வயது முதிர்ந்தவர்கள், வயதில் இளையவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவை அனைத்தும் எனக்கு அளிப்பது எவ்வளவு உழைத்தாலும் அடைய முடியா அனுபவச் செல்வங்களே !

    இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு மடல் வகையிலான பதிவைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அளித்த அமரர் அலிஸ்டர் குக் ( Akister Cook) அவர்களை எண்ணிக் கொள்கிறேன்.

    1975ம் ஆண்டு 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவனாக இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த வேளை எனது வாழ்வாதாரத்திற்காக பகுதி நேர காவல் ஊழியனாக ( Security Guard) பணி புரிந்த வேளை தனிமையான ஆபிஸ் கட்டிடங்களின் இரவுநேரக் காவல்காரனாக பணிபுரிகையில் எனது தனிமையைப் போக்க உதவுவது பி.பி.ஸி வானொலியில் அவர் தன்னுடைய சொந்தக்குரலில் நடத்தி வந்த “அமெரிகாவிலிருந்து ஒரு கடிதம் ( A Letter From America) “ எனும் நிகழ்ச்சியேயாகும்.

    இங்கிலாந்திலிருந்து, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஒரு புலம்பெயர் இங்கிலாந்து தேசத்தவரின் அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

    எனது உங்களுடனான இந்த மடல் வடிவான உரையாடலுக்கு பின்னனி இந்த நிகழ்வின் மீது நான் கொண்டிருந்த நெகிழ்வாகும்.

    நான் வாழ்ந்த வாழும் காலத்தில் இங்கு நடைபெறும் பல நிகழ்வுகளை எனது பார்வையில் பட்டவாரு உங்களுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். இந்நோக்கத்தில் நான் எத்தனை தூரம் முன்னேறியிருக்கிறேன் என்பதன் நீதிபதி நீங்களே. எனது இந்த மடல் வல்லமையின் ஆத்ரவு நீடிக்கும் வரை, உங்களின் அன்பான ஆதரவு தொடரும் வரை எனது வாழ்வு இப்பூவுலகில் நிலைத்திருக்கும் வரை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

    “தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு , எழுது” என்றான் புரட்சிப் பாவலன் பாரதி.

    என்னுடைய முயற்சிக்கு எனது உள்ளத்தில் குடியிருந்து என்னை என்றும் வழிநடத்தும் அண்ணாமலையானின் அருள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    04.04.2013

    Share
  • மார்ச் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    இந்த முறை கதைகளின் வருகை குறைந்திருந்தாலும் நல்ல எழுத்தின் சதமானம் பெருகியுள்ளது என்பதோடு சில புதிய கைகளும் தென்படுகின்றன். ஒரு வேளை நான் மறதியில் புதிய கை என்கிறேனோ என்னவோ.

    இம்முறை எனக்கு மூன்று கதைகள் குறிப்பிடத் தக்கனவாகப் படுகின்றன. இரண்டு பழைய கைகள்.  மாதவன் இளங்கோவின் “அமைதியின் சத்தம்”. அயல் நாட்டு வாழ்வின் சிக்கல்கள். கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல் போய்விடுவதைல்லை.

    அதே மனிதப்பண்புகள் தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருபபது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே. பழமை பேசியின் ”ககனமார்க்கம்”.கதையில். தன் ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார் பழமை பேசி.

    கடைசியாக எனக்குப் புதியவராகத் தோன்றும் பார்வதி ராமச்சந்திரனின் “நம்மில் ஒருவர்” இம்மாதத்திய பரிசுக்குகந்த கதையாகச் சொல்லத் தோன்றுகிறது. புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம்.

    பரிசுக்குரிய கதையாக பார்வதி ராமச்சந்திரனின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

    அதே சமயம் முடிவில் இந்த வருடத்திற்கான சிறந்த கதைத் தேர்வின் போது, மாதவன் இளங்கோவின் அமைதியின் சத்தம், பழமை பேசியின் ககனமார்க்கம் கதைகளையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். அவை முன்னரே பரிசு பெற்ற கதைகள் மாத்திரமலல, இக்கதைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பார்வதி ராமச்சந்திரனுக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகளின் விவரம் வருமாறு:

    மறுபடியும் ஒருமுறை

    நம்மில் ஒருவர்….

    அமைதியின் சத்தம்

    பதில்??

    முத்தம்

    நவீன ரோபோக்கள் “

    ககனமார்க்கம்

    சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

    உண்மைக்காதல்

    தாமரை நெஞ்சம்

    பயம் “

    எழுச்சி

    பரிசு பெற்ற திருமிகு பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திரு பழமைபேசி மற்றும் மாதவன் இளங்கோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    Share
  • இந்தியக் கணவன்மார்களும் அமெரிக்க மனைவிமார்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியக் கணவன்மார்கள் மீதும் அமெரிக்க மனைவிமார்கள் மீதும் எனக்கு மிகுந்த கோபம் உண்டு.  இந்த இரண்டு வகையினரும் தங்கள் வாழ்க்கைத்துணையை சரியாக நடத்துவதில்லை என்பது என் கணிப்பு.  இந்த விதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக.  இந்த இரண்டு வகையினரையும் தலைப்பில் ஒன்று சேர்த்திருப்பதால் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளையோ அல்லது வேற்றுமைகளையோ கூறப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  இரண்டு வகையினரையும் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால்தான் இவர்களைத் தலைப்பில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறேன்

    முதலாவது இந்தியக் கணவன்மார்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழைக் குடும்பங்களில் தவிர போன தலைமுறை வரை இவர்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வெளியில் போய் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்தார்கள்.  வெளியில் போய் பலரோடு பழகி அல்லது போட்டிபோட்டு பணம் சம்பாதிப்பது அப்படியொன்றும் எளிதான காரியம் இல்லைதான்.  மனிதன் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டு ஒரு இடத்தில் நிலைபெறாமல் நகர்ந்துகொண்டேயிருந்த காலத்திலிருந்து கணவன்மார்கள்தான் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தார்கள்.  அதனால் எப்போதுமே கணவன் கை ஓங்கியிருந்திருக்கிறது.  மனைவி மட்டும் சும்மா இருந்தாளா என்ன?  அவளும் மற்ற குடும்ப வேலைகளைக் கவனித்து வந்தாள்.  இதோடு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதுவும் இவள் வேலையாயிற்று.  ஆனால் அன்று முதல் இன்று வரை பெண்ணிற்கு அவள் செய்த வேலைகளுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை; எந்த சம்பளமும் இல்லை.  (Working women என்கிறார்களே அது வெளியில் போய் வேலைபார்க்கும் பெண்களை மட்டும்தான் குறிக்கும்.  வீட்டில் இருந்துகொண்டு காலை முதல் இரவு வரை மாடாக உழைக்கும் பெண்களை இதில் சேர்ப்பதில்லை.  அவர்கள் ஒரு சம்பளச் செக்கைக் கொண்டுவரவில்லை என்பதாலா?)  அது மட்டுமல்ல, அவளுடைய வாழ்வாதாரத்திற்கே தான்தான் மூல காரணம் என்பது போல் கணவன் நடந்துகொள்கிறான்.  இது காலம் காலமாக கிட்டத்தட்ட இந்திய சமூகங்கள் எல்லாவற்றிலும் நடந்து வந்திருக்கிறது.  வட இந்தியாவில் மிகச் சமீப காலம் வரை திருமணம் செய்துகொண்டு கணவன் வீடு சென்ற பெண்கள் பிறந்த வீட்டிற்குத் திரும்ப வருவதேயில்லை.  இப்போது அதெல்லாம் மாறியிருக்கும்  என்று நினைக்கிறேன்.

    கணவன் தன்னை ஏன் இப்படி அடக்கி ஆள வேண்டும் என்று இந்த மனைவிமார்களும் எண்ணிப் பார்ப்பதில்லை.  கணவன் சம்பாதித்துக்கொண்டு வருவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் எல்லா உரிமைகளும் கணவனுக்குத்தான் உண்டு என்று மனமார ஏற்றுக்கொள்கிறார்கள்.  இப்படி எல்லா மனைவிமார்களும் நடந்துகொள்வதால் சம்பாதிக்காத கணவன்மார்களின் மனைவிமார்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் சமீபகாலம் வரை மனைவி இறந்துவிட்டால் கணவன் மறுமணம் செய்துகொள்ளலாம்;  ஆனால் கணவன் இறந்துவிட்டால் இவளுடைய வாழ்க்கையே அதோடு நின்றுவிடும்.  கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் அவனுடைய சிதையில் எரிந்து சாம்பலாவதுதான் தலையாய கற்பு என்று வரையறுத்த சமூகமல்லவா நம் சமூகம்.  அப்படி இருக்கும்போது மனைவி கணவனுக்காக எதுவும் செய்யத் தயாராகிறாள்.  கணவன் நலம்தான் தன் நலம் என்று எண்ணத் தொடங்குகிறாள்.  இதனால்தான் வீட்டிற்கு வந்த மருமகளைக் கணவனும் அவனுடைய பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சேர்ந்து அதிக வரதட்சிணை கேட்டு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.  ஆனால் அதே சமயம் மகளுடைய கணவனை அவளுடைய பெற்றோர் தீ வைத்துக் கொளுத்தியதாக சரித்திரமே இல்லை.

    இந்தியக் கணவன்மார்கள் எப்படியிருந்தாலும் சரி – படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பணமில்லாதவன், அழகானவன், அழகில்லாதவன் – தாங்கள் தங்கள் மனைவியை விட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்த சமூகமல்லவா.  கணவன்மார்களும் தங்கள் மனைவிமார்களை எப்படியும் நடத்தலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  மனைவி தன்னைத் தவிர வேறு யாரையும் மனதில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இந்தக் கணவன்மார்கள் திருமணத்திற்கு வெளியே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொள்வது அப்படியொன்றும் பெரிய தவறு என்று நினைப்பதில்லை.  ஏனெனில் சமூகமும் அப்படித்தான் நினைக்கிறது.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பெண்களுக்கே உரியவை.  கணவன்மார்களுக்கு இவற்றில் எந்த விதப் பங்கும் இல்லை.

    இதற்கு மேல் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியம் என்று வலியுறுத்தி வந்தார்கள்.  பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் எடுத்த ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகியை திருமணத்திற்கு முன் கெடுத்துவிடுகிறான்.  தவறு செய்துவிட்டதாக நினைத்து நினைத்து மனம் புழுங்குகிறாள் கதாநாயகி.  பின்னால் தன்னைக் கெடுத்தவனையே தன் கணவனாக அடைந்து நிம்மதி அடைகிறாள்.  ஆனால் கதாநாயகனுக்கு அந்த மாதிரிக் கவலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

    சமீப காலம் வரை பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் வெளி உலகம் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் அவனை விட புத்திசாலி என்றாலும் வெளி உலகம் பற்றித் தெரியாதலால் கணவன் தன்னை விட அதிகம் தெரிந்தவன் என்று வைத்துக்கொள்கிறாள்.  கணவனும் அதை தனக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்தவன் போல் நடந்துகொள்கிறான்.  வீட்டில் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.  வெளி உலகம் பற்றி நிறையத் தெரியாவிட்டாலும் சில விஷயங்களிலாவது இவளுடைய யோசனைகள் அவனுடையதை விட உருப்படியானதாக இருக்கலாம்.  ஆனால் அவளுடைய யோசனைகள் எடுபடுவதே இல்லை.

    காலம் மாறிக்கொண்டு வருகிறது.  இப்போது பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.  மனைவிமார்களும் சம்பாதிக்கிறார்கள்.  சில குடும்பங்களில் மனைவி கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  ஆனால் இப்படிப்பட்ட குடும்பங்களிலும் மனைவிக்கு இரண்டாம் பட்ச இடம்தான்.

    ஒரு குடும்பத்தில் மனைவி சீதனமாக பெற்றோருடைய முழுச் சொத்தையும் கொண்டுவருகிறாள்.  அவளுக்கும் இதே கதிதான்.  என் பாட்டி, தாத்தா காலத்தில் கணவன்மார்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடந்துகொள்கிறார்கள்.  தாய் வீட்டிலிருந்து மனைவி கொண்டுவந்திருந்த சொத்தில் 90 சதவிகிதத்தை கணவன் தொலைத்துவிட்டான்.  ஆயினும் மனைவியின் சொத்தை இப்படித் தொலைத்துவிட்டோமே என்று அவனுக்கு எந்த வித மனஉளைச்சலும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னும் தான்தான் வீட்டின் எசமானன் என்பது போல் நடந்துகொள்கிறான்.  மனைவியும் கணவன் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிப்பதாகத் தெரியவில்லை.

    என் கணவர் என் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பது என் நெருங்கிய உறவுப் பெண்ணிற்குப் பிடிக்கவில்லை.  பெண்ணுரிமை பற்றி நான் பேசுவதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவரிடம் ‘உங்கள் மனைவியை நீங்கள் கடிவாளம் போட்டு அடக்க வேண்டும்’ என்கிறாள்.  இப்படித்தான் பல இந்தியப் பெண்கள் இன்னும் நினைக்கிறார்கள்.  மனைவிமார்களே இப்படி நினைத்தால் கணவன்மார்கள் வேறு எப்படி நடந்துகொள்வார்கள்?  மனைவியை தனக்குச் சமமாக நடத்துவார்கள் என்று எப்படி நினைக்க முடியும்?   எல்லாக் காலங்களுக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் திருக்குறளை எழுதிய தெய்வப் புலவர் திருவள்ளுவரே ‘பெண் வழிச் சேறல்’ என்னும் அத்தியாயத்தில் மனைவி சொல்லைக் கேட்காதீர்கள் என்று கணவன்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார்.  தவறான அறிவுரை யாரிடமிருந்து வந்தாலும் – கணவனானாலும் சரி, மனைவியானாலும்சரி – அதைக் கேட்கக் கூடாது என்று பொதுப்படையாகக் கூறியிருக்கலாம்.  திருவள்ளுவரே அப்படிச் சொல்லியிருக்கும்போது யாரிடம் போய் நியாயம் கேட்பது?

    இனி அமெரிக்க மனைவிமார்களைப் பற்றிப் பார்ப்போம்.  மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை அமெரிக்க மனைவிமார்களுக்கும் எந்த விதச் சுதந்திரமும் இல்லை என்கிறார்கள்.  ஆனாலும் இந்தியப் பெண்கள் போல நடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.  1963-இல் பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan)  எழுதிய  ஃபெமினைன் மிஸ்டிக் (Feminine Mystique) என்ற நூல் வெளிவந்தது.  இந்த நூல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.  இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் வளம் உயர்ந்துகொண்டே போனதால் அவர்களுடைய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஓரளவிற்கு பொருளாதரச் சுதந்திரம் கிடைத்ததும் அமெரிக்க மனைவிமார்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லலாம்.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சிகரெட் விற்பனையாளர்கள் ‘பெண்களே உங்களுக்கும் புகைபிடிக்கும் சுதந்திரம் உண்டு’ என்று விளம்பரப்படுத்தினர்.  இந்தக் காரணங்களினால் பெண்களும் தங்களுக்கு ஆண்களோடு சம உரிமை வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தனர்.  ஃபெமினைன் மிஸ்டிக் இவர்களுடைய எண்ணங்களை இன்னும் கொஞ்சம் உசுப்பிவிட்டது.   அறுபதுகளில் கருத்தடைச் சாதனங்கள் கிடைக்கப் போக ஆண்கள் போல் தங்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.  இதனால் திருமணம் செய்துகொள்ளாமலே திருமணம் ஆன தம்பதிகள் போல் குடும்பம் நடத்தும் நிலை உருவானது.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகத் தொடங்கியது.  திருமணம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு துணை விட்டுப் போகும் பழக்கமும் தோன்றத் தொடங்கியது.  இதனால் தனித் தாய்மார்கள் (single mothers) என்ற ஒரு பிரிவு பெண்களிடையே தோன்றியது.

    பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டதால் வீட்டில் சமைப்பதற்கு இருவருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.  வீட்டில் சமைப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.  இதைச் சாதகமாக்கிக் கொண்டு உணவு தயாரிப்பவர்களும் நிறைய ‘ரெடிமேட்’ உணவுகளைச் சந்தையில் புகுத்தத் தொடங்கினர்.  ஏன் பெண்கள் சமைக்கவேண்டும் என்ற நிலை போய் ஏன் யாரும் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  இரவு உணவையாவது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதையும் விட்டுவிட்டார்கள்.  இப்போது மனைவிதான் சமைப்பது என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரில் யாருக்கு சமையலில் ஆர்வம் இருக்கிறதோ அவர் சமைக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  எங்கள் வீட்டில் சமைப்பது என் கணவர்தான் (My husband is the chef at our place) என்று ஒரு மனைவி சொல்லும் அளவிற்கு அமெரிக்க மனைவிமார்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் சமையல் என்பது பெரிய வேலையாகி விட்டது.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்திருந்தோம்.  அவர் ‘தினமும் இவ்வளவு சமைக்கிறீர்களா?’ என்றார்.  ‘ஆம், கிட்டத்தட்ட’ என்றேன்.  அந்தப் பெண்ணிடம் ‘நான் இப்போது வேலைக்குச் செல்லவில்லையாதலால் எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது’ என்று சொன்னேன்.  ‘அவ்வளவு சமைத்துக்கொண்டு உங்களால் எழுதவும் முடிகிறதா?’ என்றார்.  இந்தியாவிலாவது உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளாமல் நாமே சமைத்தால் வேலை நிறைய இருக்கும்.  அரைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று எந்நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.  அமெரிக்காவில் அப்படியில்லை.  சமையலறையில் காஸ் அல்லது மின்சார அடுப்புகள் நான்கு, குளிர்சாதனப் பெட்டி, வழக்கமான அவன் (traditional oven), மைக்ரோவேவ் அவன் (microwave oven), டோஸ்டர் (toaster) என்று பல உபகரணங்கள் இருக்கின்றன.  இதற்கு மேல் எப்போதும் குளிர்ந்த நீரும் சுடுநீரும் வந்துகொண்டிருக்கும்.  பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள ஒரு தொட்டி (sink) இருக்கும்.  இதுவரை குறிப்பிட்ட எல்லா வசதிகளும் எல்லா சமையலறைகளிலும் இருக்கும்.  வீட்டின் அளவைப் பொறுத்து சமையலறை பெரியதாகவோ சிறிதாகவோ இருக்கும்.  அவ்வளவே.  வசதியான வீடு என்றால் பாத்திரம் கழுவும் மெஷினும் இருக்கும்.  இத்தனை வசதிகள் இருந்தும் கோடையில் சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்கிறார் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வீட்டில் வசிக்கும் ஒரு பெண்.  இவர் நர்ஸாக வேலை பார்க்கும்பெண்.  இவரே இப்படிச் சொன்னால் பேராசிரியையாக வேலைபார்க்கும் ஒரு பெண் ‘நேரம் கிடைத்தால் சமைப்பதைவிட ஒரு புத்தகம் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று ஏன் சொல்ல மாட்டார்.

    சமையலை விட்டுவிட்ட மனைவிமார்கள் வேறு ஏதாவது வீட்டு வேலைகள் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  கணவனுக்குப் பிடித்த உணவு அயிட்டம் எதையும் சமைத்துக் கொடுக்கும் எந்த அமெரிக்க மனைவியையும் நான் இதுவரை சந்திக்கவில்லை.  கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கும் இந்திய மனைவிமார்களைச் சந்தித்திருந்த எனக்கு இது எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.  ஏன் இந்தப் பெண்கள் கணவனுக்குப் பிடித்ததைச் சமைப்பதே இல்லை என்று சிலரைக் கேட்டால் சமைப்பது பெண்களின் வேலை என்பது இப்போது முழுவதுமாகப் போய்விட்டது என்ற பதில் கிடைக்கிறது.

    சமையல் மனைவிமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை என்ற எண்ணம் சமூகத்தில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.  பொதுவாக அமெரிக்க சமூகத்தில் பிறருக்காக தன்னலத்தை விட்டுக்கொடுப்பது, அவர்களுக்காக தன் நேரத்தைச் செலவழிப்பது, பிறர் நன்மைக்காக உழைப்பது போன்றவை எல்லாம் மறைந்துகொண்டு வருகின்றன.  அதனால் கணவனுக்காக மனைவி எதுவும் செய்யத் தேவையில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்று வருகிறது.  அடிக்கடி ‘I love you’ என்று கூறிக்கொள்வது அதிகரித்து வருகிறது;  ஆனால் கணவன் மனைவிக்கிடையேயான பிடிப்பு குறைந்துகொண்டு வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.  தான், தனது என்ற உணர்வை அமெரிக்க சமூகம் அளவுக்கதிகமாகவே மனிதர்கள் மத்தியில் வளர்த்துவிட்டிருக்கிறது.

    எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிடிப்பே இல்லை என்று நினைக்கிறேன்.  இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.  இவளுக்கு முதல் கணவன் இறந்த பிறகு துணை தேவைப்பட்டதால் எங்கள் நண்பரை மணந்துகொண்டாள்.  எங்கள் நண்பரின் முதல் மனைவி இவர் நிறையச் சம்பாதிக்கவில்லை என்பதால் இவரை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டாள்.  எங்கள் நண்பரும் வசதிக்காகத்தான் இவளை மணந்துகொண்டார்.  இவள் அவரை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  இவருக்காக எதுவும் செய்வதில்லை.  வீட்டில் சமையல் எல்லாம் கணவைனின் பொறுப்புத்தான்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை.  இருந்தாலும் அவர்தான் சமையல் செய்ய வேண்டும்.  இந்தக் கணவனே இந்தியாவில் பிறந்திருந்தால் முதல் மனைவியும் இவரை விட்டுப் போயிருக்க மாட்டாள்; இரண்டாவது மனைவியும் இவர் மட்டுமே சமைக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டாள்.  இந்தியக் கணவன்மார்களைக் கண்டால் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ அந்த அளவு கோபம் இந்த மாதிரி அமெரிக்க மனைவிமார்களைப் பார்த்தால் ஏற்படுகிறது.

    Share
  • “ ஐ லவ் யூ “

    தமிழ்த்தேனீ

    மேசைமேல் இருக்கும் கோப்புகள் முக்கியமானவை, அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்கள், அவர் தொடங்கிய பல தொழில்களின் வெற்றியின் அறிகுறியாக  அவரிடம் சேர்ந்த  அதிர்ஷ்ட தேவதையின்  கணக்குகள்  .அவரைத் தவிர யாருக்குமே தெரியக் கூடாத ரகசியங்கள் அடங்கிய கோப்புகள்.  ஆனால் நாணயமாக சேர்த்த சொத்துக்கள், முறையாக வருமான வரி செலுத்திய ரசீதுகள் அடங்கிய கோப்புகள்,
    அவற்றை மிகப் பத்திரமாக  ஒரு ப்ரீப்கேசில் அடுக்கி மறைவான பெட்டகத்தில் வைத்து மூடி அதன் மேல் இருக்கும்  நகரும் சுவர் போன்ற அமைப்பை நகர்த்தி அந்த சுவற்றின் மேல்  ஒரு முருகன் படத்தை மாட்டிவிட்டு அந்த முருகன் படத்துக்கு மாலை போட்டு வணங்கிவிட்டு தன்னுடைய சுழல் நாற்காலியில் வந்து உட்கார்ந்து  அன்று அவர் பார்க்க வேண்டிய கோப்புகளைப் பார்வையிட்டார்  கதிரேசன்.
    சார் நான் உள்ளே வரலாமா என்று குரல் கேட்டது. அதுவரை அவர் அனுமதி இல்லாமல் யாரும் திறக்க முடியாதபடி பூட்டியிருந்த அறைக் கதவை  மேசையின் அடியே இருக்கும் ஒரு குமிழை அழுத்தி திறக்கச் செய்து , யெஸ் உள்ளே வாங்க  என்றார் கதிரேசன்.  அவருடைய பெர்சனல் செகரட்ரி  முருகன்   குட் மார்னிங் சார் . என்றார் பவ்வியமாக, எஸ் குட் மார்னிங்  முருகன் என்ன இன்னிக்கு நான் ஏதாவது முக்கியமா செய்ய வேண்டிய வேலை இருக்கா என்றார்.

     

    இல்ல சார், இன்னிக்கு வெள்ளிக் கிழமை ,நாளைக்குதான் பாரின்லேருந்து டெலிகேட்ஸ் வராங்க அவங்களை நான் வரவேற்று ஸ்கைலேண்ட் ஹோட்டல்லே தங்க வெச்சிருவேன் ,அவங்களை நீங்க நாளைக்கு மூணு மணிக்கு சந்திக்கணும்.இன்னிக்கு நீங்க ப்ரீ  என்றார் முருகன்.சிரித்துக் கொண்டே.
    நீங்க எல்லாத்தையும் கவனமா கச்சிதமா செய்யறதினாலே  நான் நிம்மதியா இருக்கேன். எனக்கு ஐம்பத்து ஐஞ்சு  வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க எல்லாம்  உங்க உபயம் , அந்த அளவுக்கு  எனக்கு எந்த டென்ஷனும் இல்லாம நீங்க நடத்திகிட்டு வரீங்க, தேங்க்ஸ் முருகன் என்றார் கதிரேசன்.
    சார் என்னோட ட்யூட்டியைத்தான் செய்யறேன் அதுக்கு எதுக்கு சார் தேங்ஸ் எல்லாம், இன்னிக்கு சமூகத்திலே  நானும் ஒரு பெரிய மனுஷனா வளைய வரேன். என் குடும்பம் நல்லா இருக்குன்னா நீங்கதானே காரணம் ,நான்தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லணும்.    நீங்க அடிக்கடி சொல்வீங்களே  நாம என்னதான் பிளான் செஞ்சாலும்  சில நாட்கள் அது இஷ்டத்துக்கு  நடக்கும்   நம்மகிட்ட ஒண்ணும் இல்லே. அந்த நேரத்திலே  நாமதான் கொஞ்சம் வளைஞ்சு குடுத்து போகணும்னு  , எனக்கென்னவோ  இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது என்றார் முருகன் .   ஓ அப்பிடியா என்ன விஷயம்  சொல்லுங்க என்றார்  கதிரேசன்.

    ஆமா இன்னிக்கு உங்களை சந்திக்கணும்னு பிடிவாதமா ஒருத்தர் உட்கார்ந்திருக்காங்க  வெளியிலே, என்றார் முருகன்.    ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்காங்களா என்றார் கதிரேசன்
    இல்லை சார் புதுசா இருக்காங்க. ஆனா பாத்துட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா உக்காந்திருக்காங்க என்றார்
    ஓ இன்ட்ரெஸ்டிங்  சரி அனுப்புங்க யாருன்னு பாப்போம்  என்றார் கதிரேசன்.
    முருகன் வெளியே சென்றார். மே ஐ  கம் இன்   என்று ஒரு குரல் கேட்டது.
    எஸ் ப்ளீஸ் கம் இன்   என்றார் கதிரேசன், ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது.  கதவைத் திறந்தால் காற்று வரும் என்பது உண்மைதானோ என்று தோன்றியது கதிரேசனுக்கு , இங்கே தென்றலே வருகிறதே .
    முருகனோட இன்டியூஷன் சரியாத்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே   எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டினார் கதிரேசன்.  நன்றி கூறிவிட்டு அமைதியாக உட்கார்ந்தது தென்றல்.
    என்ன  யாரு நீங்க என்பது போல் பார்த்தார் கதிரேசன்.

    என் பேரு தென்றல்  என்றாள் .  என்னது தென்றல்னு கூடப் பேரு வைப்பாங்களா  நான் கேள்விப்பட்டதே இல்லே, என்றார் கதிரேசன்.   வெச்சிருக்காங்களே  எங்க வீட்டிலே , நான் இன்னிக்கு உங்களை எப்பிடியும் சந்திக்கணும்னு வந்தேன் . அதுவும் ரொம்பக் கிட்டத்திலே பாக்கணும்னு வந்தேன் ,பாத்துட்டேன்  மகிழ்ச்சி என்றாள் அவள்.     மிஸ் தென்றல் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே என்றார் கதிரேசன்.
    ஒரு விஷயம் உங்க கிட்டே சொல்லணும்னு தோணிச்சு   அதை சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் என்றவள் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தாள். சில நேரங்களில் மௌனம் புயலைப் போன்ற ஒரு இரைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தார் கதிரேசன்.  சற்று நேர மௌனத்தையே தாங்க முடியாமல்   சொல்லுங்க என்றார்.

    “ ஐ  லவ் யூ “   என்றாள் அவள்.
    கேட்ட வினாடியிலேயே வியர்த்துப் போனது அவருக்கு . என்னது ..என்னது நீங்க என்ன சொல்றீங்க என்று தடுமாறினார் கதிரேசன். ஏன் இவ்ளோ டென்ஷனாறீங்க  அமைதி அமைதி என்றாள் தென்றல்.  ஆனால் அவரால் அமைதியாக உட்கார முடியவில்லை. எழுந்துபோய் ஜன்னல் அருகே நின்றுகொண்டு நான் ஒரு சிகரெட் பிடிக்கவா என்றார்.

     

    ஓ எஸ் தாராளமா பிடிங்க  ,  எங்க அப்பாகூட பைப் பிடிப்பாரு என்றாள் அவள்.
    சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரல் முழுவதும் அந்த  நிகோடின் காற்றை உள் வாங்கி  மெதுவே வெளியே அனுப்பி சற்றே தெளிந்து அதை  ஆஷ் ட்ரேயில் போட்டு  நசுக்கி அணைத்துவிட்டு மறுபடியும் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்தார் .    என்னது இது நீங்க பாட்டுக்கு வந்தீங்க  இப்போ  ஐ லவ் யூ ங்கறீங்க எனக்கு ஒண்ணும்  புரியலே.

    சரி நீங்க யோசிங்க   நான் ஒரு வாரம் கழிச்சு வரேன், என்றபடி எழுந்தாள் தென்றல்.
    உங்க காண்டாக்ட்  எண் என்ன என்றார், முகவரி என்ன என்றார்,   ஒரு வாரம் கழிச்சு நானே வந்து தரேன்  அது வரைக்கும் யோசியுங்க  பை பை நன்றி வருகிறேன்  என்று கூறிவிட்டு போனாள்…போயேவிட்டாள்.
    என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார் கதிரேசன்,  முருகன் உள்ளே வந்து சார்  காஃபி  குடிங்க என்று ஒரு கோப்பையை வைத்தார்.   காஃபியை எடுத்து  குடித்துக் கொண்டே ஆழ்ந்த யோசனையுடன் முருகன் உக்காருங்க என்றார்.

    சார்  என்றார் முருகன்  ..உக்காருங்கன்னு சொன்னேன் என்றார் கதிரேசன்.  முருகனுக்கு புரிந்தது  ஏதோ முக்கியமான விஷயம் இல்லையென்றால் அலுவலக நேரத்தில் உட்காரச் சொல்லமாட்டார்  அவர் என்று,அமைதியாக உட்கார்ந்தார் முருகன்.    முருகன்  இப்போ வந்துட்டுப் போனாங்களே  தென்றல்  அவங்களை உங்களுக்குத் தெரியுமா? இதுக்கு முன்னே எங்கேயாவது பாத்திருக்கீங்களா? நாம பாத்திருக்கோமா  என்றார்.
    இல்லே சார்  இவங்களை இப்போதான்  நான் பாக்கறேன், நீங்க பாத்திருக்கீங்களா என்றார் முருகன்.   இல்லே  முருகன் நானும் பார்த்ததில்லே. இப்போ அந்தப் பொண்ணு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா   அதை எப்பிடி எடுத்துக்கறதுன்னே புரியலே. எனக்கு பேச சந்தர்ப்பமே குடுக்காம அவங்க பேசினாங்க போயிட்டாங்க  என்றார்.
    இந்த அளவுக்கு நீங்க அதிர்ந்து போற அளவுக்கு என்ன சார் சொன்னாங்க என்றார் முருகன்.    கதிரேசன்   சொன்னார்..  சார் என்னா சொல்றீங்க என்று அதிர்ந்தார் முருகன். பின் சுதாரித்துக் கொண்டு  சார் நீங்க எவ்ளோ பெரிய அந்தஸ்திலே இருக்கீங்க , உங்களுக்கு  லக்‌ஷ்மிகரமா மனைவி , தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை,
    இதெல்லாம் தென்றலுக்குத்   தெரியுமா?  , எப்பிடி இப்பிடி நேருக்கு நேரா வந்து  ஒரு வயசுப் பொண்ணாலே இப்பிடிப் பேச முடியுது? இது அசட்டுத் தைரியமா, இல்லே விவேகமான  அணுகுமுறையா ஒண்ணும் புரியலே சார் என்றார் முருகன்.
    சரி எனக்கும் புரியலே ,. காலையிலே  நீங்க சொன்னீங்களே    இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது அப்பிடீன்னு   அது சரியாப் போச்சு அது மாதிரி ஒரு நாளேதான் இது   , வளைஞ்சு குடுத்துதான் போகணும் .   ,ஆனா இவ்ளோ அதிர்ச்சியா இருக்கும்னு நெனைக்கலே .
    சரி அந்தப் பொண்ணு அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா ,அவ வந்தா  நேரா என் ரூமுக்கு அனுப்பிடுங்க, இப்போ நான் வெளியிலே போய்ட்டு  மாலை நாலு மணிக்கு வரேன்.  என்றபடி கிளம்பினார்  கதிரேசன்.
    ஒரு வாரம் மிக இயல்பாக வேலைகள் தொடர்ந்தன. மறு வாரம் வெள்ளிக் கிழமை  சொல்லி வைத்தாற் போல் மே ஐ கம் இன் சார் என்று கேட்டபடி கதிரேசனுடைய அறைக்குள் நுழைந்தாள் தென்றல்,
    ஒருகணம் உள்ளுக்குள்ளே காலிலிருந்து தலை வரை ஒரு மின்னல் ஓடியது கதிரேசனுக்கு, சமாளித்தபடி புன்னகைத்து வாங்க தென்றல் உக்காருங்க என்றார். வந்து இயல்பாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.
    சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு தென்றல் பேசத் தொடங்கினாள், நீங்க எல்லாம் வேண்டாம் ,  என்னை நீ அப்பிடீன்னே சொல்லலாம், தென்றல்ன்னு அன்பாக் கூப்பிடலாம் ,அவள் பேசிக்கொண்டே இருந்தாள் கதிரேசன் கேட்டுக்கொண்டிருந்தார், சுமார் ஒரு மணி நேரம் தென்றலின்  பேச்சை  கதிரேசன் கேட்டுக் கொண்டே இருந்தார் எந்தவித இடையூறும் இல்லாமல் .
    அவள் பேசி முடித்தாள், இதோ என்னுடைய தொலைபேசி எண் , என்னுடைய விலாசம் என்று ஒரு  ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு சரி மீண்டும் சந்திப்போம் , ஆனால் இந்த முறை நீங்களாக அழைத்தால்தான் வருவேன்  என்று கூறிவிட்டு  கிளம்பினாள் தென்றல்.
    வியர்த்துப் போயிருந்த நெற்றியை கர்சீப்பினால் துடைத்துக் கொண்டு நாற்காலியில்  சாய்ந்தார் கதிரேசன்.  சார் நான் உள்ளே வரலாமா  என்று கேட்டுவிட்டு   கதிரேசன் அனுமதித்தவுடன் உள்ளே நுழைந்தார் முருகன்.
    முருகன்  இன்னிக்கு  தென்றல் ஒரு மணிநேரம்  பேசினாங்க, எனக்கென்னவோ அவங்க சொல்றதெல்லாம்  சரின்னு படுது, அதுனாலே நான் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு. முருகன்  உங்களுக்குத் தெரியும் நான் எந்த முடிவையும் உணர்ச்சி பூர்வமா எடுக்க மாட்டேன்னு, அதுனாலே நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். என்றார்.
    சார்  என்ன சார் இது நீங்க ஆர்டர் போட்டா  செய்யப் போறேன் என்றார் முருகன்.    முருகன் ஆர்டர் போட்டா  சொன்னதைச் செய்வீங்க  எனக்குத் தெரியும்  ஆனா அதையே உதவியா செஞ்சா  எனக்கு எது நல்லதுன்னு புரிஞ்சுகிட்டு செய்வீங்க , அதுனாலேதான் உதவின்னு சொன்னேன் முருகன் என்றார் கதிரேசன்.
    அதை சொல்றதுக்கு முன்னாலே தென்றல் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கும் சொல்லணும் , ஆனா  அதுக்கு சரியான நேரம் இன்னும் வரலேன்னு நெனைக்கிறேன். அதுனாலே  இப்போ நான் சொல்றதை மட்டும் செய்யுங்க என்றார் கதிரேசன்.
    இங்கே கிட்ட வாங்க முருகன்  என்று அழைத்து என்ன செய்யவேண்டும் என்பதை மெல்லிய குரலில்  கூறினார் கதிரேசன் , முருகன் ஒருகணம் அதிர்ந்தாலும்  சமாளித்து சரி சார் அப்பிடியே செய்யறேன் என்றார் .
    அலுவலகத்தில் கிளம்பியது கிசுகிசுக்கள்,  நம்ம முதலாளி எப்பவுமே சரியான முறையிலே நடப்பவராயிற்றே ,அவரா இப்படி, ,  என்ன இருந்தாலும் அழகா ஒரு பொண்ணு நெனைச்சா எப்படிப்பட்ட ஆட்களையும் கவுத்துருவாங்கங்கறது உண்மைதான், சரித்திரத்திலேயே படிச்சிருக்கோமே, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா?
    அடப் போடா ஆனானப்பட்ட விஸ்வாமித்ரரே  கவுந்துட்டாரு இவரு என்னா செய்வாரு பாவம், ஆனா ஒண்ணு அந்தப் பொண்ணு கெட்டிக்காரி. நல்ல புளியங் கொம்பாத்தான் பிடிச்சிருக்கா .
    இப்படி யார் எங்கே பேசினாலும்   அவர் கேட்கும் படி அமைக்கப்பட்டிருந்த மறைவான ஒலிபெருக்கிகள் கதிரேசனுடைய அறையிலே வைக்கப் பட்டிருப்பதை அறியாமலே  கிசுகிசுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது.
    ஒரு மாதம் விளையாட்டாக ஓடிவிட்டது, அந்த நிர்வாகத்தில் அவள் முக்கியமானவளாக கருதப்பட்டாள். அவளைக் கேட்காமல்  உதவியாளர் முருகன் கூட செயல்பட முடியவில்லை.
    முருகன் முகம் சுளிக்காமல் அவர் கடன் பணி செய்து கிடப்பதே என்று இயங்கிக் கொண்டிருந்தார்.   அலுவலகத்தில் இருக்கும் அனைவரும்  இந்தச் செய்தியைப் பற்றி அலுவலகத்தில் பேசக் கூட பயப்பட்டனர், ஆனால் வெளியிலே ஆசைதீர பேசிக் கொண்டனர், செய்தீ காட்டுத் தீயாய் பரவியது.
    ஆனால் மிக இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டார்  கதிரேசன், அவர் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் தவித்தனர்  அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்,   யாரைப் பற்றியும் கவலைப்படமால் மிக இயல்பாக வந்து போய்க்கொண்டிருந்தாள் தென்றல்.  அடிக்கடி தென்றலும் அவரும் சேர்ந்தே பல விழாக்களுக்கு செல்வதை தொழிலதிபர்கள் முதற்கொண்டு, அனைவரும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மக்களுக்கு ரசமாய் இருக்க சில பத்திரிகைகள் கூட கிசுகிசுக்களை அள்ளி வழங்கி சர்குலேஷனை அதிகப்படுத்திக் கொண்டது.
    திடீரென்று ஒரு வாரமாக தென்றலைக் காணவில்லை, புயல் வந்தால் தென்றல் காணாமல் போகும்போல் இருக்கிறது, ஏதோ ஒரு புயல் வரப் போகிறது என்று எதிர் பார்த்தனர்  எல்லோருமே
    இப்படி இருக்க ஒரு நாள் முருகன் அலுவலகத்தில் இருப்போருக்கும் , பல தொழில் அதிபர்களுக்கும்  பத்திரிகைக்காரர்களுக்கும் பொதுவாக ஒரு அழைப்பிதழை அளித்துக் கொண்டிருந்தார். அலுவலக காவல்காரர் முதல், உயர்தர அதிகாரிகள் வரை எல்லோருக்கும்  ஒரு அழைப்பு .

    ஆம் கதிரேசன் அவர்கள் கட்டிய புது பங்களாவில்  வருகிற ஞாயிற்றுக் கிழமை அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி  அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார் . அவரே அவர் கைப்படவே எல்லோருக்கும் பத்திரிகை அளித்து அவசியம் வரும்படி வேண்டிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அனைவருக்கும்.
    அந்தப் பத்திரிகையின் சாராம்சம் இதுதான். தொழிலதிபர் கதிரேசன் அவர்களின்  30 ஆவது  திருமண நாள் விழா. குடும்பத்துடன்  அனைவரும் வருக . அனைவரும் வந்து விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டியிருந்தார்  கதிரேசன் அவர்கள்.
    கதிரேசன் அவர்களின் பிரும்மாண்ட பங்களாவில் .அனைவரும். விருந்தின் ருசி ,அதையும்  தாண்டி செவிக்குணவு இல்லாதபோது சற்றே காதுக்கும் ஈயப்படும் என்னும் கோட்பாட்டுக்குட்பட்டு காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர்.  நாதஸ்வரம் முழங்கிக் கொண்டிருந்தது  கதிரேசனுடைய  மனைவி காத்யாயினி சிரித்த முகத்துடன் லக்‌ஷ்மிகரமாய் அனைவரையும் வரவேற்று உணவு உண்ண அழைத்துப்  போய் உட்காரவைத்து உபசரித்துக் கொண்டிருந்தார் .
    மனதுக்குள் இந்த அம்மாவுக்கு த்ரோகம் செய்ய  கதிரேசனுக்கு எப்பிடி மனசு வருதோ என்று எண்ணமிட்டபடி வெளியிலே புன்சிரிப்புடன்  அனைவரும் உணவு அருந்திவிட்டு  கூடத்தில் குழுமினர்.
    கதிரேசன் சூட் கோட்டுடன் வந்து நின்றார், அவருக்கு  ஒரு பக்கத்தில் அவர் மனைவி காத்யாயினி ,  மறு பக்கத்தில் அவர் மகன்   சந்தோஷ்  கையில் ஆளுயர மாலையை  எடுத்துவந்து ஒன்றை கதிரேசனிடமும் மற்றொன்றை காத்யாயினியிடமும் கொடுத்துவிட்டு  மாலை மாற்றிக் கொள்ள வேண்டினான். கதிரேசனும் காத்யாயினியும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    கிசுகிசுவை மறந்து  அனைவரும்  கைதட்டி ஆரவாரமாய் வாழ்த்தினர். ஒரு பெரிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில்  அனைவரும் கூடியிருந்தனர்.   வருக நண்பர்களே இந்த மகிழ்ச்சியான நன்நாளில் என் அழைப்பை ஏற்று  விழாவுக்கு வந்திருந்து  என்னை கௌரவப்படுத்திய உங்கள் அனைவருக்கும்   என் மனமார்ந்த நன்றி  .இன்று  நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.,
    ஆமாம்  எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்களில் புதியதாக ஒரு நபர் இன்று முதல் இணையப் போகிறார். என்று கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினார் கதிரேசன்.     அழையா விருந்தாளியாக அமைதி அங்கே தானாக வந்து ஆனால் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தது.
    அதற்கு முன்பாக  இங்கே ஒரு படத்தை திரையிட்டு மூடியிருக்கிறேன்  . அந்த திரையை தென்றல் அவர்கள் திறந்து வைத்து விழாவின் முக்கிய நாயகியாக  உங்களை வரவேற்பார்  என்றார்.
    தென்றல் மிக நளினமாக நடந்து வந்து அந்த திரையை விலக்கினாள், அங்கே கதிரேசன் அவர்களின் உருவப் படம் மாட்டி அதற்கு மாலையும் போடப்பட்டு இருந்தது . ஹா ! என்று ஒருமித்த அதிர்ச்சிக் குரல் வெளிப்பட்டது  அனைவரின் வாயிலிருந்தும் , அமைதி சற்றே சலனப்பட்டது.
    ரகசியக் குரல்கள் ஆச்சரியக் குரல்கள், கூடமெங்கும் உலா வந்தது. அந்த அமைதியைக் கிழித்தார்  கதிரேசன் .  உங்களுக்கெல்லாம் தெரியாத   ஒரு ரகசியத்தை இப்போது நான் கூறப் போகிறேன்.
    நண்பர்களே இதோ இந்தப் படத்தில் இருப்பது நானல்ல . உலகில் ஒருவரைப் போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்று படித்திருக்கிறோம் , ஆனால் பார்த்ததில்லை. நமக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பு  இதோ என்னைப் போலவே இருக்கும் இவரைப் பாருங்கள், இவர் பெயர் சிதம்பரம், இவர் தென்றல் அவர்களின் தகப்பனார்.
    தென்றலின் தந்தை  திரு சிதம்பரம்.

    உருவத்தில் என்னைப் போலவே இருந்ததும் , ஏறக்குறைய  என்னைப் போலவே நேர்மையான முறையில் தொழில்கள் செய்து இலங்கையிலே ஒரு பெரிய தொழிலதிபராக  மாறி பெரும் பணக்காரராக இருந்தார். தென்றல் அவருடைய தகப்பனார் மீது அளவுகடந்த அன்பும் ,பாசமும் வைத்திருந்தார். ஆனால் காலம் சில நேரங்களில் பல கொடுமைகளைச் செய்துவிட்டு  தடையங்களே இல்லாதபடி அழித்து விடுகிறது என்பதற்கு திரு சிதம்பரம் அவர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.
    ஆமாம் ஒரே நாளில் பங்கு வர்த்தகம் சரிந்து , அவருடைய சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு களவாடப்பட்டு  சில மிருகங்களாலே கொலையும் செய்யப்பட்டார்  திரு சிதம்பரம் . தென்றல் ஆதரவு தேடி நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க. அப்போ  யதேச்சையா என்னைப் பாத்திருக்காங்க .
    ஒருவர், தணிந்த குரலில்  சரிய்யா  முடிவு என்னான்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு அதுக்கு ஏன் இவ்ளோ பீடிகை போடறீங்க  விஷயத்துக்கு வாங்க என்று மெதுவே முணுமுணுத்தார்.
    உங்களுக்கெல்லாம் தெரியும் தென்றல் என்னிடம் வந்து   ஐ லவ் யூ சொன்னதும் ,அதன் பின்னர் நேற்று வரை நடந்ததும்.அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உங்கள் ஊகத்துக்கு விதையாக மலர்ந்ததும்  எனக்கும் தெரியும்
    ஆனால் நாம் எல்லோருமே எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எனக்கே என்னை உணர்த்தினா இந்தப் பொண்ணு  தென்றல் அவளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
    ஐ லவ் யூ இந்த மூன்றெழுத்து மந்திரம் பலரை ஆட்டி வைக்கிறது, ஆனால் அதன் அர்த்தமே தெரியாமல், அந்த மந்திர சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் ,ஆனால் எப்படிப் பயன்படுத்துகிறோம்  என்று எனக்கும் புரிய வைத்தாள் இந்தப் பெண்  தென்றல் .
    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
    வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமசிவாயவே
    என்று திடீரென்று சீர்காழி கோவிந்தராஜன்  மனம் உருகிப் பாடினர் .
    யாருப்பா அங்கே முக்கியமா பேசிகிட்டு இருக்கோமில்லே, பாட்டை நிறுத்துங்க  என்றார் கதிரேசன்  ,பாட்டு நின்றது.

    அகராதியிலே பாத்தேன்  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கு அப்பிடீன்னு
    நான் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்மேல் அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை விரும்புறேன்  ,இப்பிடியெல்லாம் பொருள் இருக்கு .  ஆனா ஒரு இடத்திலே கூட   உன்னைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்னு  பொருளே போடலே.
    கண்ணன் என் காதலன் அப்பிடீனு சொன்ன பாரதியார் கண்ணனை நண்பனாய்  மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பார்த்தாரே தவிர தப்பா பேசலை.  ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாருமே இறைவனைக் காதலிச்சிருக்காங்க. தப்பான பொருள் யாருமே சொல்லலே.  இந்தக் காதல்ங்கற சொல்லுக்கு யாரு காமம்னு பொருள் சொன்னாங்கன்னே புரியலே,     ஜீவாத்மா  பரமாத்மா இரண்டறக் கலந்து த்வைதம் அத்வைதமா மாறுவதைத்தான் காதல்ன்னு  ஆண்டாள் கூட  உருகி இருக்காங்க.
    காதல்ன்னா காதல்தான் ,அன்புதான் பாசம்தான் ,நேசம்தான்  நிச்சயமாக் காமம்  இல்லே.இதை நாமெல்லாரும் மனசார ஏத்துக்கணும் ,  தென்றலோட அப்பா இறந்து போன துக்கத்தை தாங்க முடியாம இலங்கையிலேருந்து  இந்தியாவுக்கு வந்து என்னை யதேச்சையா பாத்திருக்காங்க, அப்பிடியே அவங்க அப்பா மாதிரியே நான் இருக்கறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்து போயி அவங்க மனசுக்குள்ளே அவங்க அப்பாவைப் பாக்கறா மாதிரியே ஒரு உணர்வை அனுபவிச்சு,  என்னை அவளோட அப்பாவா நெனைச்சு என் கிட்ட வந்து ,
    மனசு பூரா பாசத்தை வெச்சுகிட்டு ஐ லவ் யூ அப்பிடீன்னு சொன்னா.

     

    அவங்க அப்பாகிட்டே அப்பிடித்தான் சொல்லுவாளாம்.   நான் கூட முதலே தப்பா நெனைச்சேன் , நாம வாழற சமூகம் நமக்கு அப்பிடி ஒரு தப்பான பொருளைச் சொல்லிக் குடுத்திருக்கு. லவ் ன்னாலே அன்பு ,பாசம் , நேசம் அப்பிடிஎல்லாம் நமக்கு தோணறதே கிடையாது, நம்ம மனசைக் குப்பையா ஆக்கி வெச்சிட்டாங்க . லவ்வுன்னு சொன்ன உடனே நம்ம மனசு குப்பையை நோக்கிப் போக ஆரம்பிச்சுடுது. இந்த மனோ நிலைக்கு நம்மைத் தள்ளிய எல்லாரும்  வெக்கப்படணும். நாமெல்லாருமே வெக்கப் படணும் .
    இந்தப் பொண்ணு  என்னைப் பொறுத்த வரை  அப்பனுக்கு பாடம் சொன்ன அந்த முருகக் கடவுள் மாதிரிதான்  தெரியறா. அதுனாலே இந்த பொண்ணு  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு  சரியான பொருளை என்னிக்கு எனக்கு சொல்லிக் கொடுத்தாளோ  அந்த வினாடியிலேருந்து இவ என் பொண்ணுதான்  , நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க ,  நம்ம பையன் சந்தோஷுக்கு   தங்கைன்னு சொல்லுங்க   என்றார். காத்யாயினி .
    எஸ் நம்ம பொண்ணு இவ  .  ஐ லவ் யூ மை டியர் டாட்டர்  என்று நெற்றியிலே முத்தமிட்டு தென்றலை அணைத்துக் கொண்டார் கதிரேசன்.
    ஒட்டுமொத்த  மனிதர்களும்  கதிரேசனைப் பார்த்து அர்த்தம் புரிந்துகொண்டு   ஐ  லவ் யூ சார்   என்று ஏகோபித்த குரலில் புரிந்து வாழ்த்தினார்கள்

    Share