ஒரு தகப்பனின் கண்ணீர்க் கடிதம்!
–மேகலா இராமமூர்த்தி
கடலம்மா தயவால காலந்தான் தள்ளுறோம்
கட்டுமரம் தள்ளியே கால்வயிறு நெறக்கிறோம்
ஒடம்பெல்லாம் புண்ணாக ஓயாது உழைக்கிறோம்
உள்ளத்தில கள்ளமில்ல உத்தமரா வாழுறோம்!
தவமாத் தவமிருந்து நாம்பெத்த அருமமவன்
மீன்பிடிக்கக் கடலுபோயி நாலுநாளு ஆச்சுதய்யா
விவரம் புரியலயே போனஎடம் தெரியலியே….
வருவானா மாட்டானா வெளக்கஞ்சொல்ல ஆளில்லையே?
தூக்கம் புடிக்காமத் தூணோரம் சாஞ்சிருக்கேன்
வாரம்ஒண்ணு ஆயிடுச்சு கண்ணுபூத்துப் போயிடுச்சு
துக்கம் பொங்கிவந்து தொண்டக்குழி அடைக்குதய்யா
எம்மவனப் பாத்திடவே என்னுசிரு இருக்குதய்யா!
இன்னிப் பொழுதுக்குள்ள எப்படியும் வந்திடுவான்
உச்சி மொகந்திடவே வேணுமுன்னு காத்திருக்கேன்
கன்னுக் குட்டிபோல துள்ளுற எம்மவன
எங்கிட்ட சேத்திடுன்னு அய்யனார நேந்திருக்கேன்!
வந்திட்டான் எம்மவன்னு சேதிகேட்டுப் நாம்போனேன்
அதுக்கு முன்னாடி எமன்வந்த தறியாம
நொந்து பொலம்புறேனே நொறுங்கிப்போயி நிக்கிறேனே
எந்த அப்பனுக்கும் (வர)வேணாய்யா என்நெலம….
குலத்த வெளங்கவெக்கக் கொழுந்தாக வந்தமவன்
கலங்க வெச்சானே காலன்கிட்டப் போனானே!
இலங்க ராணுவத்தான் குண்டுக்குப் பலியாகிச்
சவமா வந்தானே சங்கடத்தத் தந்தானே!
செம்படவ சாதியில பொறந்ததத் தவிரநாங்க
செஞ்சபாவம் என்னான்னு எங்களுக்கு வெளங்கலியே?
கும்பிட்ட தெய்வமிப்போ எங்குடியக் காக்கலியே….
யாரநம்பி வாழுறது? நல்லவழி சொல்லுங்கய்யா…!!
படத்துக்கு நன்றி: http://yo-modo.com/archives/the-price-to-pay/tears
மேகலா, வித விதமான கருப்பொருள் கொண்டு வித விதமானக் கவிதைகளை மிக மிக அற்புதமாகப் படைக்கிறீர்கள். தமிழக மீனவக்குடும்பங்களின் தற்காலக் குமுறலை வெளிப்படுத்துகிறது இது. வரிகளில் அந்தக் குமுறல் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
தரை மேல் பிறக்க வைத்தான் பாடலுக்கு சற்றும் குறைந்ததல்ல உங்கள் கவிதை, வாழ்த்துக்கள்.
கவிதைகளிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும் பன்முகநாயகியாக மின்னுகிறீர்கள். பாராட்டுகள்.
அன்புடன்
….. தேமொழி
மணி மணியான வரிகள், மேகலா அவர்களே!!!. படித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் மல்கியது. சோகத்தில் பெரியது புத்திரசோகமே!!. அதை உருக்கமாக, மனதில் அழுத்தமாகப் பதியும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள். திருமதி. தேமொழி அவர்கள் சொல்லியது போல, ‘கரை மேல் பிறக்க வைத்தான்’பாடலுக்கு சற்றும் குறைந்ததல்ல தங்கள் வைர வரிகள்.
தமிழ்நாட்டில் மீனவர்களின் பெரும் சாபக்கேடான விஷயத்தை நுணுக்கமாகக் கையாண்டிருக்கிறீர்கள். எதுவும் செய்ய இயலா நிலை மனதினை உறுத்துகிறது. மிக அற்புதமானதொரு பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இன்னும் இன்னும் இது போன்ற அருமையான பல ஆக்கங்கள் தர வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.
கதையாகட்டும் கவிதையாகட்டும் , மனித உணர்வுகளை தாங்கி வந்தால் அதன் தாக்கமே வேறு தான். இந்தக்கவிதையில் மீனவனின் உனர்வு நம்மை உரசிப்பார்க்குது.
கடலம்மா நீ என் உலகமம்மா என்பதே மீனவனின் முதல் மொழி. எந்த வித பாதுகாப்பு உபகரனங்களும் இல்லாமல் கடலுக்கு செல்லும் அவனை ஊரார் நினைப்பது சுலபம்.
என் பணி கடலில் என்பதால் என் பாதுகாப்புக்கு இருக்கும் பலவிதமான உபகரனங்கள் இருந்தும் இதன் ஆபத்தும் இது தரும் பேரழிவும் மிக அதிகம் என்பதும் என் போன்ற சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.
தென்னாட்டு மீனவனையும் தெனாவட்டு கள்ளனையும் சேர்த்து வந்த கவிதை அருமை.
ஒரு படைப்பாளியின் மனம் எந்த அளவு சமூக அவலங்களைக் கண்டு குமுறி இருந்தால் இது போன்ற வரிகளைப் படைத்திருக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான உணர்வோடு படைக்கப்படும் கவிதையில் வார்த்தைகள் தடங்கலின்றி வந்து அழகான வரிகளாக வடிவெடுக்கும் என்பதை இந்தக் கவிதை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.
தங்களது உருக்கமான படைப்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே!
கவிதை, கதை, கட்டுரை என்ற பெயரில் நான் எதை எழுதினாலும் ‘நன்று, நன்று!’ என்று பெருந்தன்மையோடும், பேரன்போடும் பாராட்டி, தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்துகொண்டிருக்கின்ற எழுத்தாள நண்பர்கள் திருமதி. தேமொழி, திருமதி. பார்வதி, திரு. தனுசு, திரு. சச்சிதானந்தம் ஆகியோர்க்கு என் பணிவான நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
…மேகலா
நாட்டுப்புற உணர்வுகள் இழையோட… மிகவும் நன்று!!
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி திரு. பழமைபேசி.
…மேகலா
தண்ணீர்க் கடலில்
தத்தளிக்கும் மனிதாபிமானத்தைக்
கருவாக்கி,
கண்ணீர்க் கடலின்
கரைசேர்க்கும் கவிதை
நன்று…!
-செண்பக ஜெகதீசன்…