Blog

  • ஆனந்த விநாயகன்!

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    நமக்குத் தெற்கில் நவராத்திரி போல, மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக புனே நகரின் நாயகன் விநாயகன் தான். விநாயக சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள், காணும் திசையெல்லாம் கணபதி!

    Dancing-Binayakar rotated

    பிறந்தநாள்கொண்டாட்டத்தில் குஷியாக ஆடிக்களிக்கும் இந்த விநாயகரையும் ரசிப்போமா…?

     

    Share
  • வாழ்க்கை நலம் – 26

    குன்றக்குடி அடிகள்

    26. பொறுமை போற்றுக!

    இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

    நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!

    பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

    பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, “தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை” என்றார் முகமது நபி.

    நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

    அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

    (குறள் – 151)

     

     

     

     

    _________________________________
    REF:  http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வாழ்வே இதுதான்

     

    ஆர்.எஸ்.மணி

     

    vaazhvE idhudhaan- new

    (தேனிசையைக் கேட்டு மகிழ!)

     

    வாழ்வே இதுதான்: சுழலும்  உலகம்.

    இரவும், பகலும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

    காலை ஒளியும், மாலை இருளும்,

    உறவும், முறிவும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

     

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்.      (வாழ்வே இதுதான்)

     

    கன்னி என்ன, காதல் என்ன,

    வண்ணம் எல்லாம் மாறுமே!

    பாசம் என்ன, நேசம் என்ன,

    வந்து பின்னே போகுமே!

    ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே

    எங்கே எந்தன் வீடும்!    (வாழ்வே இதுதான்)

     

     

    —ஆர்.எஸ்.மணி

    (கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

    கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,

    என் குரலில் பதிவு செய்யப்  பட்டது..

    Share
  • ஆசிரியர் குழுவில் ஒரு புதிய முகம் அறிமுகம்!

    அன்பு நண்பர்களே,

    DSCF4667

    வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது ​சொந்த ஊர் ​சென்​னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்​தைகளுடன் குவைத்தில் வசித்து வருகி​றார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு ​நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!

     வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயங்கள் :

    உலகிலே உள்ள மதங்கள், சமயங்கள் பலப்பல ! இன்ன காலத்தில் உருவானவை என அறுதி இட்டுச் சொல்லக் கூடிய மதங்கள் உண்டு – கிறித்துவம், இசுலாமியம்…போல. தோன்றிய காலம் இது எனக் கூற இயலாமல் தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் மதங்களும் உண்டு – யூத மதம் மாதிரி. இம் மதங்கள் அத்தனையும் ஆசியக் கண்டத்தில் தோன்றியவையே!

    அக் கண்டத்தில் உள்ள இந்தியாவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த பெரிய மதங்கள் நான்கு எனலாம் : சமணம், புத்தம், சைவம், வைணவம்.

    ஒரு கால கட்டத்தில், தமிழகத்தில், முன்னவை இரண்டும் ஓங்கி இருந்தன.கி.பி 5 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் சமணமும் புத்தமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டன ; தமிழ் நாட்டை விட்டே ஒழிக்கப்பட்டன. இவற்றை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் ஒன்றுபட்டு மும்முரமாக இருந்த சைவ வைணவச் சமயங்கள், பின்னர் தமக்குள் மோதிக்கொண்டன! இம் மோதலினால் சமயக் காழ்ப்பு பெருகி இருந்தாலும் தமிழுக்குப் பெரும் நன்மையே விளைந்தது. சமய இலக்கியங்கள் தோன்றின; ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்த்தனர், போட்டி போட்டுக்கொண்டு. சிவனடியார் ஒரு கருத்தைப் பற்றிப் பாட அது போலவே வைணவக் கருத்தை அமைத்து ஆழ்வார் பாடல் பாடுவார். 7 -ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் “குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்….” எனச் சிவபெருமானின் திருக்கோலத்தைப் பாடினார். அதற்கு எதிர்ப்பாட்டுப் போல 8 -ஆம் நூற்றாண்டின் தொண்டரடிப் ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி பவள வாய்க் கமலச் செங்கண் …”என்று பாடுகிறார். 8 -ஆம் நூற்றாண்டு ஆண்டாள் ‘திருப்பாவை’ பாட அதே பாணியில் 9 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் ‘திருவெம்பாவை’ பாடுகிறார். 7 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர்.இவர் சித்திரக் கவியில் ஒன்றான தேர்ப் பந்தத்தில் எழுகூற்றிருக்கை பாடினார். பின்னர் 8- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் அது போலவே தாமும் பாடியதை என்னவென்று சொல்ல. ஆக இப்படிப் போட்டிபோட்டுக்கொண்டு சைவர்களும் வைணவர்களும் பக்தி இலக்கியங்களைப் பாடித் தமிழ் வளத்தைப் பெருக்கிச் சுவை கூட்டினர். (இதில் வரும் காலங்கள் விக்கிபீடியாவை அடிப்படியாகக் கொண்டவை ).

    இச் சமயங்களுள் சைவம் தமிழ் நாட்டுக்கே உரியது என்பர். அதனால்தான் போலும் மாணிக்கவாசகரும் “தென்னானுடைய சிவனே போற்றி” எனப் பாடினார்.(காச்மீர் சைவம் வேறு ; கர்நாடகச் சைவம் பிற்காலத்தது). சரி சைவம் வைணவம் எனும் இவை இரண்டினுள் எது காலத்தால் முந்தியதாக இருக்கக்கூடும்? “சிவமே” என்று சைவர் சாதிப்பர் ; “இல்லை, இல்லை, வைணவம்தான்” என்று மல்லுக் கட்டுவர் வைணவர்! இதில் எது உண்மை? (முதல் பகுதியில் இக்கேள்வி – எது உண்மை?- கொஞ்சம் அலசப்பட்டிருக்கும்). இதில், இந்தச் சமயக் கணக்கில், வழக்கில் உண்மையைக் காண உதவிக்கு வருகிறது ஓர் அறிவியல் துறை.அதன் பெயர் ‘Anthropolgy’ ; மாந்தனியல் எனத் தமிழில் கூறலாம். மனித இனம், அதன் தோற்றம், வளர்ச்சி… பற்றி ஆராய்வது. அதற்குமுன், கணிதத்தைப் போல ஓர் அடிப்படையை (axiom) ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கும்.

    இறைவன் மனிதனைப் படைத்தானா?
    மனிதன் இறைவனைப் படைத்தானா?

    ஆண்டவன் ஐந்து நாள்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஆறாம் நாளில் ‘தன் சாயலாக’ மனிதனைப் படைத்தான் எனத் தோரா (Thora) ,திருமறை நூல் (Bible), திருக்குர்ஆன் சொல்லும். ஏனைய சமயங்களும் இறைவனே, மனிதனைப் படைத்தான் என்று கூறுகின்றன. ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படையை மறுத்து அதற்கு மாறான வேறொரு அடிப்படையை வைத்து அதன் அடிப்படையில் சமன்பாடுகளைக் கட்டி எழுப்புவது உண்டு, கணிதத்தில்.

    எளிமையாகச் சொல்லவேண்டுமானால், காட்டாக, யுக்ளிடின் வடிவ கணிதத்தில் இருந்து மாறுபட்ட வடிவ கணிதத்தைக் (non-Euclidean geometry) கூறலாம். யுக்ளிடின் வடிவ கணிதத்தில் முக்கோணம்; ஒன்றின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பது அடிப்படைக் கருத்து. கூட்டுத் தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகும் என மாற்றி யோசித்தனர் சிலர்.(C. F. Gauss (1777-1855), N. Lobachevsky (1792-1856), J. Bolyai (1802-1860), and B. Riemann (1826-1866)).

    யுச்ளிடின் கருத்து சம தளத்துக்கு (plane) மட்டுமே உண்மையாகும் ; உ(ரு)ண்டை (sphere, spherical body) வடிவுக்குச் சரிப்பட்டு வராது எனக் கண்டனர். விளைவு உ(ரு)ண்டை வடிவக் கணிதம் பிறந்தது. இதில் இணைகோடுகளுக்கு இடம் இல்லை ; பூமி போன்ற உ(ரு)ண்டை வடிவத்தின் மேல் உள்ள முக்கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோதான் இருக்கும். இடம் – காலம் (space-time) பற்றிய தன் கருத்தை விளக்க மாமேதை ஐன்ஸ்டீன் இந்த உ(ரு)ண்டை வடிவக் கணிதத்தைத்தான் பயன்படுத்திகொண்டார். இதனால்தான் அண்டம் கோள வடிவில் உள்ளது என அவரால் நிறுவ முடிந்தது. இக்கணித எடுத்துக் காட்டைப் பின் பற்றி நாமும் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்ற கோட்பாட்டை மாற்றிப் பார்ப்போமே! இது ஒன்றும் புதுக் கருத்து இல்லை. மனிதன் தோன்றியதில் இருந்தே, இறை மறுப்பை இதயத்தில் ஏந்தியவர்களும் உண்டு ; இறை இருப்பைக் குருதியிலே கொண்டவர்களும் உண்டு. சரி, இனி, இறைவன் மனிதனைப் படைத்தான் என்பதை மாற்றி மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.

    மிக மிக மிக…முற்காலத்தில் (10 000 ஆண்டுகள், 100 000 ஆண்டுகள்…ஏன் அதற்கும் முன்னால் என்று வைத்துக்கொள்ளுங்கள்!) ஆதி மனிதன் தனிமையில் வாழ்ந்தான் (சமூகம் இன்னும் உருவாகவில்லை). அவனுடைய முதல் உணர்ச்சி அச்சம்தான். இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமானால் பிறந்த குழந்தையைக் கவனித்தால் போதும். தாயின் கருவறை என்ற பாதுகாப்பில் அவள் இதயத் துடிப்பையே லயமாக உணர்ந்து வாழ்ந்த குழந்தை கருப்பக் கால முடிவில் வெளியே தள்ளப் படுகிறது. இது வரை காணாத புதுச் சூழல்! இதுகாறும் உணர்ந்த லயத்தைக் காணோம்…எனவே அதன் முதல் உணர்ச்சி அச்சம். இந்த அச்சத்தின் காரணமாகவும் இது வரை தொப்புள் கொடி வழியாகக் கிடைத்து வந்த உயிர் வளி கிடைக்க வேண்டித் திணறியும் தன்னிச்சையாகக் குழந்தை அழுகிறது. தாயோ தாதியோ அதனைத் தூக்கி மார்போடு அணைக்கிறாள். குழந்தை மறுபடி அந்த லயத்தை உணருகிறது ; அதன் அச்சம் தணிகிறது. குழந்தை பிறந்தது முதல் 3 மாதம் வரை இப்படி மார்போடு அணைப்பது அதன் அழுகையை அமர்த்தும் என இக்கால மகப்பேற்றியல் அறிவுரை தருகிறது.

    அடுத்து இன்னொன்றைக் கவனிக்கலாம். எது கிடைக்கிறதோ அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் குழந்தையின் கை.. இந்த ஆதரவைத் தேடுவதற்குக் காரணம் அதன் அச்சமே. வளர்ந்த பிறகும் இந்தப் பழக்கம் தொடர்கிறது – அச்சம் தோன்றும் போது கை தானாகவே ஆதரவு தேடி அன்னை, தந்தை, காதலன், காதலி… கரத்தைத் தேடும். தன் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘அவள்’ (தாய் அல்லது தாதி) எங்கே தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தின் காரணமாக அவளோடு ஒட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுகிறது குழந்தை!

    குழந்தையின் மனத்தில் உள்ளது போலவே, ஆதி மனிதனின் மனத்தில் அச்ச உணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இரவு வரும் போது, இருள் சூழும்போது காட்டு விலங்குகள் இரை தேடப் போகும் ஒலி, கொடிய விலங்குகள் எழுப்பும் ஒலிகள் (இத்தகு ஒலிகளை இளங்கோவடிகள் “கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும்…’ என வருணிப்பார்!)… அவன் அச்சத்தை அதிகம் ஆக்குகின்றன. மழையும் இடியும் அவனைக் கலக்குகின்றன! இப்படி நாலா புறமும் அச்சத்தால் சூழப்பட்ட மனிதனுக்கு ஏதாவது ஆறுதல் தேவைப்படுகிறது. ஆகவே, மகா சக்தி வாய்ந்த ஒன்றை அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது தன்னைக் காக்கும் என நம்புகிறான்.

    இரவு முழுதும் கடும் மழை, கிடுகிடுக்கும் இடி முழக்கம், கண்ணைப் பறிக்கும் மின்னல்… அஞ்சி நடுங்கும் மனிதன் தான் படைத்துக்கொண்ட ‘அதனை’ நோக்கிப் புலம்புகிறான் ; தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறான்; இரவுப் பொழுதை இப்படி அச்சத்தில் கழிக்கும் மனிதன் ஒரு வழியாகக் கண்ணயர்கிறான். காலையில் கண் விழிக்கும் அவனுக்கு வியப்பு காத்திருக்கிறது : ஆம், இடி முழக்கம் இல்லை! மழைத் தூறலைக் காணோம்! இதமான வெயில், பதமான காற்று… ஆகா, எல்லாம் வல்ல ‘அது’ தன் வேண்டுகோளை ஏற்று அச்சத்தைக் களைந்துவிட்டது! அவனுக்குள் மகிழ்ச்சி. தன்னைக் காத்த ‘அதனை’க் கூப்பிட ஏதாவது பெயர் வேண்டுமே! தெய்வம், இறைவன், கடவுள்… என்று எதோ ஒரு பெயரைச் சூட்டுகிறான். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை (இறைச்சியோ, காய் கனியோ …)அதற்குத் தனியாக வைத்துப் பின் தான் உண்ணுகிறான். இப்படித் தெய்வம் ஒன்றைப் படைத்துக்கொண்ட மனிதன் நாளடைவில் வளருகிறான் ; உருவம் இல்லாமல் இருக்கும் தன் தெய்வத்துக்குத் தன்னைப் போலவே உருவம் தருகிறான். சிவந்த மண்ணில் உருவம் செய்ததால் அவன் இறைவன் அவனைப்போல் கருப்பாக இல்லாமல் சிவந்த நிறம் பெறுகிறது.

    நாகரிகப் படிகளில் மனிதன் ஏறத் தொடங்கும் நிலை. தனக்குத் துணையாகத் துணை, இணை ஒன்றைத் தேடிச் சேர்த்துக்கொள்கிறான். நிர்வாணத்தை மறைக்க இலை, தழைகள் உதவுகின்றன, நாளடைவில் இவை மர உரிகளுக்கு இடம் தருகின்றன! இவற்றையே தன் கடவுளுக்கும் உடுத்தி அழகு பார்க்கிறான். இதுவரை உணவுக்காக முயல், பன்றி, மான், பறவைகள்… என வேட்டை ஆடி வந்த மனிதன் பாதுகாப்புக்காகச சிங்கம், புலி, யானை …போன்றவற்றையும் வேட்டை ஆடுகிறான். இவற்றின் தோல்களை ஆடையாக அணியும் இவன் அவற்றையே தன கடவுளுக்கும் ஆடையாக அணிவிக்கிறான். தான் கண்டு நடுங்கும் பாம்பை அஞ்சா நெஞ்சனாகக் கற்பனை செய்துகொண்ட தன் கடவுள் மீது படர விடுகிறான். மேலும் பெண்டு பிள்ளை எனச் சமூகமாக வாழத் தலைப்படுகிறான். அவன் உருவாக்கிய கடவுளுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு என்று நம்பத் தொடங்குகிறான். இப்படியாக மனிதன் தன் கடவுளைத் தன் சாயலாகவே படைத்தான் என்கிறது மானிடஉருபியல் (Anthropomorphology).

    காண்க : http://en.wikipedia.org/wiki/Anthropomorphism
    கண்ணப்பர் புராணமே இதற்குச் சரியான சான்று.

    இப்படி உருவான கடவுள் சிவந்த நிறம் உடையவர் என்ற பொருளில் ‘சிவன்’ என அழைக்கப்படுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் சைவம் எனப் பெயர் பெறுகிறது.

    இதற்கிடையில், பல்லாண்டுக் கணக்கில் காலம் பறந்தோடுகிறது ; மனிதன் முன்னேறுகிறான் ! தோலாடைகள் மறைந்து பஞ்சாடைகள் தோன்றி அதன் பின் பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டும் அவனை அலங்கரிக்கின்றன. செம்மண்ணால் ஆன கடவுள் இப்போது கருங் கல்லில் வடிக்கப்படுகிறார் ; கரிய நிறம் உள்ள திருமாலாக உருப்பெறுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் வைணவமாகப் பெயர் சூட்டப்படுகிறது.

    இந்த மானிடவுருபியல் கோணத்தில் பார்க்கும்போது, தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நின்ற சைவம் காலத்தால் முந்தியதாகவும் இங்குக் காலூன்றி வளர்ந்து வந்த வைணவம் பிந்தியதாகவும் விளங்குகின்றது புலப்படும். இந்தப் பழந்தமிழ்ச் சமயத்தைப்பற்றி இனிக் காண்போம்.

    தொடரும்

    Share
  • தொலைத்ததும் .. கிடைத்ததும் …! – 3

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா… என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா…ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள்.

    என்னாச்சுடி…சம்பளம் வாங்கிட்டியா?…சந்தோசத்தப் பாரு..ம்ம்…சொல்லு…எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.?

    தெரியுமாடி உனக்கு…? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்…அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற மலர் பெருமையுடன் சொன்னவள் ஷீலாவிடம்…..ஆமா..அந்த மேனஜர் என்னிய பாக்கிங் ஆபீஸ்ல ஒரு சீரியல்ல நடிக்க அழைச்சாரு . ஒரு வாரத்துக்கு அஞ்சு ஆயிரமாம். நான் போகலாமுன்னு முடிவு செய்து வாரேன்னு சொல்லிப்புட்டேன். அதான் உன்கிட்டயும் சொல்லிப்புட்டு செய்யலாமே…என்று இழுக்கிறாள்.

    அது எங்கிட்டு டீ …..இவளே….எனக்கு சொல்லவேயில்ல. நானும் வருவேனில்ல. அந்தாளு ஏதோ கேம் ஆடுதுன்னு தோணுது. சாக்றதயா இருடி..

    ம்மம்ம்…என்று சொன்னவள் ,சிறிது நேரம் யோசித்து , என்ன உன் துட்ட அந்தப் பாண்டி பிடுங்கிடுச்சா..? என்று கேட்கிறாள்.

    அம்புட்டும் நான் தரல.ஒரு முன்னூறு கொடுத்தேன். அம்புட்டுதான். எல்லாம் என் நேரம்டி. அலுத்துக் கொள்கிறாள் ஷீலா.

    சரி வா…நாம போகலாம். நடக்க நடக்க ரோடு நீளமாவது போலிருந்தது மலருக்கு. பெரிய பெரிய கட்டிடங்கள் பயமுறுத்தியது. அங்கங்கே குழி தோண்டி வேலைகள் செய்து கொண்டிருக்க பக்கத்திலேயே கார்கள் பெருத்த ஹாரன் ஒலியோடு செல்லும் போது காதைப் பொத்திக் கொண்டு பயந்து நின்றாள் . தலைக்கு மேலே பெரிய பாலம் ஓட…அதற்கு பக்கத்தில் இரும்புக் கூண்டுகளோடு மனிதர்கள் நின்றிருப்பதை பார்த்து…இது என்ன சர்க்கஸ்ன்னு சொல்லுவாங்களே அதுவாடி…….!

    ….சீ.சீ…..அது ஒண்ணும் இல்லடி..இது மெட்ரோ ரயிலுக்கு வேலை நடக்குது. கீழ எடம் இல்லாங்காட்டிக்கு மேல கூட ரயிலு விடுவாங்களாம். பாண்டியன் தான் சொல்லுச்சு.

    அப்போது பயங்கற சத்தத்துடன் சத்தத்துடன் “ஸ்பைஸ்ஜெட்” பறந்து இறங்கிக் கொண்டிருந்தது….!

    அய்யே…..அய்யே….இதோ அங்கிட்டுப் பாரேன்…..விமானம்….விமானம்…..நான் இப்பத் தான் முத முத வாட்டிப் பாக்கறேன்…..எப்டி பறக்குதுடி..எங்கம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் பட்டுகிடும்.. விமானம் எல்லாம் பார்த்திருக்காண்டு. ம்ம்ம்….என்று ஷீலாவை இடிக்கிறாள்.

    டி….இரு…இரு…கொஞ்சம் நிதானத்துக்கு வா….காலு கீழ தானே இருக்குது…என்று குனிந்து மலரின் காலைப் பார்க்கிறாள்.

    அடிப்போடி என்று வெட்கப் பட்டவள்….நாம இன்னைக்கே ரூம்ப காலி பண்ணீடலாமா..?

    அது அம்புட்டு சுலபமில்ல…முதல்ல நீ வேணா கெளம்பு. அப்பால நான் காலி பண்ணிக்கறேன்.

    மனசுக்குள் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த கரப்பான்பூச்சி ரூம்புலேர்ந்து முதலில் தப்பிச்சால் போதும் என்றது அவளது மனம்.

    அதோ பாருடி..அந்தப் பையன் சோளப்பொறி விக்கிறான்…வாங்கலாமாடி…மலர் துள்ளுகிறாள் ..எனக்கு வவுறு திங்கக் கேக்குது.

    அது சோளப்பொறி இல்லடி…..பாப்புகானு ….! இங்கிட்டெல்லாம் அப்படித்தான் சொல்லுதுங்க.

    அதென்ன பாப்புகானோ…நூர்ஜகானோ….எனக்கு ஒரு பாக்கெட்டு வாங்கு. எம்புட்டு இருக்கும்.

    பத்து ரூவாடி….!

    அடிப்பாவி….எங்கூர்ல ரெண்டு ரூவா தாண்டி..இங்கிட்டு கொள்ளையடிக்கிரானுவ…இத்தினிகாண்டு சோளம்…பொரிச்சா பொங்கீட்டு வரப்போவுது..அதுக்கு இம்புட்டு துட்டு எதுக்கு..? சரி வாங்கித் தொலை.

    இதுக்கே இம்புட்டு இழுக்கறியே …..இம்புட்டுக்காண்டி வேகவெச்ச சோளத்தைக் கொடுத்து இருபத்தஞ்சு ரூபா கேட்ப்பான்…அத இன்னும் நீ பார்க்கலைன்னு வெளங்குது. ஒரு நாளு பாண்டியோட பாண்டிபஜார் போயிட்டு வந்தால் அம்புட்டும் வெளங்கும் .

    அதென்னாடி …பாண்டிக்கு தனியா பஜாரு கூட அதும் பேருல இருக்குதா? நீ பெரியாள்டி .

    மண்ணாங்கட்டி…….மொதல்ல அது ஏதாச்சும் வேலை வெட்டி பார்க்காதான்னு நான் கெடந்து தவிக்கிறேன்.

    ஆமா…உன் ஆளு பாண்டிக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? அதான் சும்மாச் சும்மா இங்கிட்டே சுத்தி சுத்தி வராப்பல. அவனப் பாத்தா நல்லவனாவே தெரியல. எதுக்கும் தள்ளியே வெய்யி. இவன்லாம் உன் கழுத்துல தாலி கட்டி…நீ குடும்பம் நடத்தி……வாயில் பாப்கார்னை போட்டுக் கொண்டே ‘சவக் சவக் ‘ என்று மென்று கொண்டே பேசிக் கொண்டு நடக்கிறாள் மலர்.

    அடி….பார்த்து வாடி எரும மாடு…! என்று ஷீலா மலரின் கைகளைப் பற்றி இழுக்கிறாள் .

    எருமை மாடு ஒன்று நடந்து இவர்களைக் கடந்து சென்றது.

    நீ என்னமோ என்னியத் தான் சொல்லுறேன்னு நெனைச்சு சுள்ளுன்னு எனக்கு எகிறிச்சு பாரு…!

    பழையபடி குப்பைகளைக் கடந்து அந்த இருட்டு ரூம்புக்குள் நுழைந்து , தப்பித்தால் போதும் என்று தனது பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய மலர்விழி, அப்ப நான் அந்த மேனஜரை பார்த்து பேசி அந்தாளு எங்கிட்டு அழைச்சிட்டுப் போகுதோ அங்கன போய் இருக்கேன். இன்னும் பத்தே நாளு தான்..எம்புட்டு கெடைச்சாலும் எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து போயிடுவேன். அடுத்த மாசம் இந்நேரம் காலேஜுடி .

    அந்தாளு முன்னமே சொல்லிருந்தா இந்த வாரமே அஞ்சாயிரம் அள்ளிருக்கலாம். அதென்னடி..எப்பப் பாரு நம்மளப் பார்த்து ஈ ன்னு இளிச்சுக்கிட்டே நிக்குது.

    போட்டும் விடு மலரு. நா வேணா கூடத் தொணைக்கு வரட்டாடி ஷீலா கேட்கிறாள்.

    வேணாண்டி…எனக்கே வளி தெரியிது. நீ பாவம்..போய் படு. நா வாரேன்.

    மூச்சிரைக்க நடந்து வந்து ஆபீஸ் வாசல் படியில் பெட்டியை வைத்து விட்டு அங்கேயே மூச்சு வாங்க உட்காருகிறாள்.

    அந்த அறைகுள்ளிருந்து ஜன்னல் வழியாக அவளது கண்கள் எட்டிப் பார்க்கிறது. இந்தாளு பாண்டிக்கு இங்கிட்டு என்ன வேலை….? அப்படி என்ன தான் பேசுறாரு மேனேஜர் சாரு இவன்கிட்ட..அதும் ஷீலா இல்லாத போது ..? எழுந்து நின்று காதைத் திட்டுகிறாள். மனசு சொல்கிறது அடியே…ஒட்டுக் கேட்க்குறது தப்புடி ….! மனசாட்சி சொல்லுகிறது….கவனமா கேளு…அதுங்க என்ன பேசுதுங்கண்டு…மண்ணாந்தையா நிக்காதேன்னு.

    மனசாட்சிக்கு செவி சாய்த்து சுவரில் சாய்கிறாள் மலர்விழி.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    ஏண்டா….பாண்டி..நீ எப்பப்பாரு வந்து வந்து நிக்கறியே..வேலை வெட்டி ஒண்ணுமில்லியா? உத்தியோகம் புருச லட்சனம்டா..தெரியுமில்ல. மேனஜரின் கட்டைக் குரல் இவளின் காதை அடைத்தது.

    எல்லாம் தெரியும்பு….வேலை இல்லாமலா சுத்துறோம்…..திருவான்மியூர்ல தீயடைப்பு இருக்குல்ல அங்கனக்குள்ள தான் இருக்குறேன்.
    நமக்கு வேலை மென்னியப் பிடிக்கிறது தீவாளி சீசனப்பத்தான். எனக்கு தெனம் வேலை வேணும்முண்டா தெனம் எங்கிட்டாச்சும் தீ புடிச்சி எரியணும் . அது ஆவுற காரியமா…? அதான் அங்கிட்டுருந்து இப்படி ஒரு நடை வந்துட்டுப் போவேன்.

    அப்ப அந்தப் புள்ள ஷீலா….சும்மானாச்சும் டாவடிக்கிறியா?

    அய்யைய …..நான் கட்டிக்கப் போற பொண்ணுங்கன்னா…அது. நான் கழட்டி விட்டுட்டு போக பளகல. புரிஞ்சுக்கிடுங்க.

    அடப் போப்பா…..இந்தக் காலத்துல பொண்ணுங்களே அப்படிப் பளகறதில்லை. காசப் பாத்ததும் கழண்டுகிடுங்க.

    என்ன நீ ஒரு இருபதாயிரம் மாசம் தேத்துவியா..?

    அம்புட்டு எங்கிட்டு…! நல்லாக் கேட்டீங்க போங்க..! நான் அஞ்சுக்கும் பத்துக்குமே முழி பிதுங்கி நிக்கிறவன்.

    அப்ப ஒண்ணு செய்யி….நான் ஒரு அருமையான தொழில் சொல்லித் தரேன்…கமிஷனே களை கட்டும்….ஒரே வருஷத்தில .நீ எங்கிட்டோ போயிடுவே. எங்கன உனக்கு வேலையே இல்ல..பூரா பூரா வடக்குல தான். செல் போன் ல தான் பிசினெஸ் நடக்கும். நம்ம அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான் முதலாளி. மாட்டிக்கிடாம, மாட்டிவெக்காம காரியம் பண்ணி முடிச்சா…பணம் மூட்டைல வந்து எறங்கும் . இல்லாங்காட்டி…

    இல்லாங்காட்டி…..?

    நீயே பொணமா மூட்டைக்குள்ளார கட்டிவெச்சி கூவத்துக்குள்ளார எறங்கும்.

    அப்படி என்ன புதுசா கெடைச்சிருக்கா ‘மகாலட்சுமி..”..? பயமுறுத்துற லட்சுமி.

    இப்ப ஷீலா உங்கிட்ட மாட்டிச்சு பாரு, அதை அப்படியே மெதுவா நம்ப வெச்சு கிண்டி கூட்டியாந்துடு. அங்கிட்டிருந்து அப்படியே ஆந்திரா தள்ளி உட்றலாம் . அங்க நம்ப ஆளு இருக்கான். எப்டியும் அம்பது தேறும்.

    ச்சே……இதெல்லாம் ஒரு பொளப்பா ….? இதுக்கெல்லாம் தான் பேரு இருக்கே. நான் இந்தப் பாவம் பண்ண மாட்டேன் ஆள விடுங்க.
    பாண்டியனின் குரலில் நெகிழ்ந்தாள் மலர்விழி.

    இதெல்லாம் உனக்கு செட் ஆவாதுடா…தள்ளி விட்டுட்டு காசை எண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருப்பியா…பாவம்…புண்ணியம்னு பேசிக்கிட்டு…அலுத்துக் கொண்டான் மனேஜர்.

    இந்தா….என்று டேபிளின் மீது தொப்பென்று விழுந்தது பணக்கட்டு. வேலையே பண்ணாதே….வெச்சுக்கோ அட்வான்ஸ்.இருபதாயிரம்..
    கட்டைக் குரல் பேரம் பேசியது. அதே சமயம் இங்கிட்டிருந்து உசுரோட போவமாட்டே என்று பயமுறுத்தியது.

    ரத்தம் உறைந்து போய் நாவுலர நடுங்கியபடி நின்றிருந்தாள் மலர்.

    அடுத்தது என்ன…யூகிப்பதற்க்குள்..

    பாண்டியன் பணத்துக்குள் விழுந்தான்…!

    அப்ப …என் கணக்குல ரெண்டு அயிட்டம் எழுதிக்கிருங்க….முதல்ல ஷீலா. பெறவு மலரு.

    வெளியில் நின்றிருத்த மலருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் அசட்டு தைரியம் நிற்க வைத்தது.

    அப்டி வா வளிக்கி ..இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிரணம். அந்த ஷீலாவை ஆந்திராவுக்கு அனுப்பிடு. இந்தப் புள்ள மலரை பாம்பேக்கு தள்ளி விட்டுடு, எப்படியும் ஒண்ணத் தாண்டிடும் உன் கமிஷன். பாரேன்…ஒரே வாரத்துல நீ லட்சாதிபதி. ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்….ராத்திரி இங்கன வந்துருறா கம்பெனிக்கி…..டாஸ்மாக்கே அந்த பீரோக்குளாற தான் இருக்கு.மேலும் ஆசை காட்டினான். பாண்டியனின் மனது நாயானது…..ரொட்டித் துண்டுக்கு வாலாட்டி குழைந்து நாக்கைத் தொங்கப் போட்டது.

    பாண்டி பணத்தை எடுத்து அழுக்கு கர்சீப்பில் கட்டிக்கொண்டு விசிலடித்தபடியே……’தலைவா …..சொன்னபடி நான் ஒரு வாரத்தில் லட்ச்சாதிபதி..’ ஏமாத்திற மாட்டியே…!

    நீ காரியத்த கவனிடா….உன்னிய நாங்க கவனிக்கிறோம்….வில்லனைப் போல சிரிக்கிறது கட்டைக் குரல் மேனேஜர் .

    சரிங்கண்ணா…….அங்கிருந்து கிளம்புகிறான் பாண்டியன்.

    அவசர அவசரமாக பையை எடுத்துக் கொண்டு தான் அப்போது தான் வந்தவள் மாதிரி உள்ளே நுழைகிறாள் மலர்.

    அவளைப் பார்த்தவன்…..”கும்பிடப் போன …தெய்வம். …குறுக்கே வந்ததம்மா…அடக் குறுக்கே வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா……”
    என்று பாடியபடியே…புருவத்தை உயர்த்திப் பார்க்கிறான்.

    (தொடரும் )

    Share
  • மஹாகவி பாரதியாருக்கு அஞ்சலி

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    இன்று மஹாகவி பாரதியார் நினைவு தினம்.

    தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் கொடுத்த கலைமகளின் தவப்புதல்வனை வணங்குவோம்!

    பாரதியின் பாதமலர் போற்றும் கவிதையும், அன்னாரின் திரு உருவ ஓவியமும் காண்க!

    பார்க்க, படிக்க, ரசிக்க…

    Mahakavi Bharathiyar 1

    மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

    உலைப்பாகை ஊற்றியது போலே என்றும்

    ஒளிர்கின்ற விழிச்சுடர்கள், அதற்கு மேலே

    தலைப்பாகை கம்பீரம், தரைகா ணாத

    தருக்கோடு வான்நோக்கும் மீசை, நாட்டைக்

    குலைப்பார்கை ஒடித்தெறியத் துடித் தெழுந்த

    குமுறல்கள் ஊற்றெடுக்கும் நெஞ்சம்; அந்தக்

    கலைப்பாவை தவமிருந்து பெற்றுத் தந்த

    கவிச் செல்வம் பாரதியின் கழலே போற்றி!

    கடவுளிடம் வரம்கேட்டபோதும் கூடக்

    கைகட்டிக்கேட்காத தன்மானத்தன்

    இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்

    இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்

    சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்

    ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக் காரன்

    மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை

    மலர்வனமாய் மாற்றவந்த தோட்டக் காரன்

    அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்

    அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த

    அரியபல இலக்கியமோ ஏதானாலும்

    அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!

    விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்

    வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!

    வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய

    பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!

    Share
  • பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

    எஸ். கண்ணன்

    தில்லி மாணவி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப் புத்தியில் சில விமர்சனங் களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவே சப் பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரண மடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சி யளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்க ளும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந் தனையாளர்களும், போராடி வருகின்றனர்.

    ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? சட்டம் செய் யும் கடமைகளையும், சட்டத்தை மீறாத மன நிலையையும் மக்கள் மனதில் உருவாக்கிட என்ன செய்யப் போகிறோம்? என்ற துணைக் கேள்விகள் விவாதிக்கப் படாமல் இப்பிரச் சனைக்குத் தீர்வு காணமுடியாது..ஜே.எஸ் வர்மா தலைமையிலான குழு வெகுவிரைவில், தனது பரிந்துரைகளை அளித்தது. வழக்கம் போல் அரசு தனது, இயந் திரங்களான ராணுவம், காவல்த் துறை ஆகி யோரின் பாலின அத்துமீறல்களை நியாயப் படுத்தும் விதத்தில், அவசரச் சட்டத்தை முன் வைத்து, வர்மா குழுவின் அறிக்கையை நீர்த் துப் போகச் செய்து விட்டது.

    ஏற்கனவே குழந் தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை, 2012 முதல் பாதியில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்பும் கூட, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளா வது குறையவில்லை என்பது கவலைக்குறி யது. இவை சொல்லும் செய்தி இந்தியாவில் சட்டங்களைக் கடந்த அணுகுமுறைத் தேவைப் படுகிறது என்பதாகும். இந்திய உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் அரசுக்கும், விசாகா மற்றும் குழுவினருக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கி சில வழிகாட்டுதல்களையும் 1997 ன் போதே கொடுத்துள்ளது. பணிபுரியும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவு வழங்கியுள்ள “சுயமரியாதையுடன் கூடிய வேலை என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் பாலியல் பலாத்கார நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும், அனைத்து விதத்திலும் பெண்கள் மீதான பாரபட்சத்தை ஒழித்திடும் வகையிலும், ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர் மானத்திற்கு, இந்திய அரசு 1993 ல் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, பெண்கள் சம உரிமை கொண்டவர்களாக மதிக்கப் பட வேண்டும்”, என உச்ச நீதிமன்றம் வலி யுறுத்தியுள்ளது.

    ஆனாலும் இந்தியாவில் பாலி யல் வன்கொடுமைகள் பணிபுரியும் இடங் களிலோ, இதர பகுதிகளிலோ குறையவில் லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் வெளிப்படுத்து கின்றன. இதற்குக் காரணம், சட்டங்கள் குறித்தும், தண்டனையின் காலம் மற்றும் தன்மை குறித்தும் நம் சமூகத்தில், பெரும் பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதை, திரைஅரங்குகளில் அரசு செய்திப்பிரிவின் விளம்பரமாகவோ அல்லது தொலைக்காட்சி மற்றும் எஃப். எம். ரேடியோக்களில் விளம்பரங் கள் செய்தோ மக்களைச் சென்றடையச் செய்திருக்க முடியும். அடுத்தடுத்த ஆண்டுக ளில் பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலமும் இளம் தலைமுறையை நெறிப்படுத்த முயன் றிருக்க முடியும்.அரசுகள் இவை குறித்து கவலை கொள் வதில்லை.

    இதனால் ஒருநாள் செய்தி என்ற அளவில் மட்டும் பல சட்டங்கள் குறித்த விவா தம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து மக்கள் மன தில் நீடித்து நிற்கும் வகையில் இடம் பெறாமல் ஒதுக்கப் பட்டு விடுகிறது. குறிப்பாக பண் பாட்டு ரீதியில் பெண் ஆணுக்குக் கீழான, இரண்டாம் பாலினம் என்பதும், அவள் ஒரு நுகர்வுப் பொருள் என்ற கருத்தும் ஆழமாக வேர்பரப்பி நிற்கும் இந்திய சமூகத்தில், அரசுகள் எடுக்கும் மேற்குறிப்பிட்ட நடவடிக் கைகளுடன், மேலும் இரண்டு வித நடவடிக் கைகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன. ஒன்று பெண் ஆணுக்கு இணையானவள் என்ற கருத்தை நிலை நிறுத்துவது. இரண்டு ஆண், பெண் உடல் குறித்த பாலின புரி தலுக்கானக் கல்வி. இது குறித்து இன்றளவும் முழுமையான ஏற்பு மனப்பான்மை உருவாகவில்லை. அவ் வளவு எளிதானதும் அல்ல.

    ஆனால், உடல் கவர்ச்சி குறித்து விளம்பரங்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறைய, பாலினம் குறித்த அறிவு தேவைப் படுகிறது. விளம்பரம் மற்றும் திரைக்காட்சி அமைப்பு, தனிநபரின் அந்தரங் கங்களை, காட்சிப் படமாக்கி கையில் உள்ள செல்போன் மூலம் ஒளிபரப்புகிற ஏற்பாடு, ஆகியவை அதிகரித்துள்ளதை, அனைவரும் அறிவோம். ரெய்டில் ஆபாச சி.டிக்கள் பிடிபட் டன என்பதை ஊடகங்களில் தொடர்ந்து செய் தியாவதையும் கவனித்து வருகிறோம். இந்தச் செயல்களை மாற்றுவதற்கும், ஆரோக்கிய உறவை உருவாக்கவும், மனவிருப்பங்கள் எதிர் பாலின கவர்ச்சியைக் கடந்து நீடித்து நிற்கும் உறவு என்பதைப் புரிந்து கொள்வதற்கும், பாலியல் குறித்த கல்வித் தேவை படுகிறது.

    ஆண், பெண் உடல் குறித்து, உடலியல் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கல்விமுறையின் மூலம் தான் அதி கரிக்கும் என்பதே அனுபவம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் சகாரா பகுதி நாடுகளில் 33 சதமான பெண்கள் 18 வயதை அடைவதற் குள்ளாகவே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளா கினர் என்றும், பாலியல் கல்வி கொடுக்கத் துவங்கிய பின் ஓரளவு குறைந்துள்ளது என் றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.வளர்ந்த நாடுகளில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக துவங்கிய பாலியல் கல்வி தற்போது, பல்வேறு வகையில் பதின் பருவ இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன் படுகிறது, எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பாலினம் குறித்த புரிதலை மேம் படுத்துவதற்கான கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறது. கேரியன் லிங்டோ என்ற அமெரிக்க ஆசிரியர், “பெண் என்ற முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு பெண் உள்ளாகிறாள்.

    ஆண் என்ற முறையில் அந்த துன்புறுத்தலை செய்பவனாக ஒரு ஆண் உள்ளான். இதில் இருவரும் சமமான மனிதர்கள் என்ற புரிதல் இல்லாததன் விளைவே மேற்படி தவறு களுக்கு காரணமாக அமைந்துள்ளது, என் பதை எனது மாணவர்களுக்கு போதிக்கி றேன்” என்று கூறுகிறார். இது உடனடி பலனைத் தரவில்லை என் றாலும், ஒருசில ஆண்டுகளில் நல்ல பல னைத் தரும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகி றார். மேலும் மது இன்று பெண்கள் மீதான தாக் குதலுக்கு ஒரு காரணமாக இருப்பதையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியுள் ளது, எனக் குறிப்பிடுகிறார். மும்பை பத்திரி கையாளர் மீதான தாக்குதலுக்கும் போதை ஒருகாரணம் எனக் கூறப்படுகிறது. புத்தாண் டுக் கொண்டாட்டத்தில், பண்டிகை நாள்க ளில், குடும்ப விழாக்களில், கோவில் திரு விழாக்களில் என எல்லா பொது நிகழ்வு களிலும், மது பானம் விற்பனை அதிகரித்துள் ளது.

    இக் கொண்டாட்டங்களில், பெண்கள் காணாமல் போவதும், வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் இடம் பெறுகிறது. இதில் இளை ஞர்கள் பெரும்பாலும் ஈடுபடுவது, எதிர்கா லத்தை மிகுந்த துயரத்திற்கு கொண்டு செல் லும். எனவே பாலியல் வன்முறைகளையும், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப் பதையும், இணைத்துப் பார்த்து செயல்பட வேண்டியதை அரசுகள் உணர வேண்டும்.பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங்கள், வளர்ந்த நாடுகளில் பதின் பருவ இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெற்றோர் இருவ ரும் வேலை செய்யும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள், வீடுகளில் பெரும் பாலும் தனி யாக இருப்பதும் ஒருவகையில் வக்கிர மன நிலையை ஏற்படுத்தத் துணை செய்கிறது, என்ற தகவலையும் கணக்கில் கொண்டு செய லாற்ற வேண்டியுள்ளது.

    சீனாவின் பள்ளிக ளில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறு கின்றனர். மேலும் 1972 காலங்களில் அறிமுகப் படுத்தப்பட்ட சில சட்ட நடவடிக்கைகள் 1997 காலங்களில் திருத்தப்பட்டு அமலாகிய நிலையிலும், பாலியல் கல்வி மற்றும் கவுன் சிலிங் காரணமாகவும், பாலியல் வன்கொடு மைகள், எண்ணிக்கை சீனாவில் குறைந்தது, என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் 1970 களுக்குப் பின் தான் பாலியல் கல்வி பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டதாகவும், அது பாலியல் பலாத்கார நடவடிக்கைகளைக் குறைத்திட உதவி செய்ததாகவும் சொல்கின்றனர். இதே போன்று வேறு சில நாடுகளும் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    இத்தகைய அனுபவங்களில் இருந்தே, பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங் கள் பள்ளிகளில் தேவைப் படுகிறது. இந்தியா வில், இதுவரை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிவதற்கான முறையில் தான் பாலியல் கல்வி குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2010 ல் மும்பையில் நடந்த ஆய்வு மூலம் 15-29 வயதுக்குற்பட்ட இளைஞர் பிரிவினரிடம் குறிப்பிடத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதாக தெரிவிக் கின்றனர். அதாவது இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரில் 31 சதமானோர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர் என்ற செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

    ஆனாலும் ஆய்வின் அடிப்படையில் மேற் கொண்ட கவுன்சிலிங் (ஆலோசனைகள்) நல்ல பலனைத் தந்துள்ளது என்பது ஆறுத லான செய்தி.. விரிவான முறையில் உளவியல் வளர்ச்சிக்கான வகையில் பாலியல் கல்வி மற்றும் ஆலோசனைக்கான சூழலைப் பதின் பருவ இளைஞர்களுக்கு உருவாக்குவது அவசியம் என்பதையும் ஆய்வு குறிப்பிடுகிறது. அதேபோல் விசாகா வழக்கில் கொடுக்கப் பட்ட வழிகாட்டுதல் படி பாலின சமத்துவத் திற்கான நட்புரீதியிலான செயல்பாட்டை அனைத்து மட்டங்களிலும் அமலாக்குவது குறித்தும், மக்களின் எழுச்சிகள் உருவாகி யுள்ள இன்றைய சூழலில் திட்டமிட வேண் டும்.

    இல்லையென்றால் எதிர்பாலின கவர்ச் சியை உருவாக்கும் விளம்பரங்களும், பெண் ஒரு நுகர்வுப் பண்டம் என்ற எண்ணமும் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

    Share
  • மகாகவியின் கடைசிப் பயணம்!

    கோ. ஆலாசியம்

    Bharathy (1)

     

     

     

     

     

     

     

     

     

     

    மகாகவியின் கடைசிப் பயணம்!

    இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 92 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்.

    அந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம்.

    அந்த நாட்களினைப்  பற்றிய நிகழ்வுகளை பாரதிப்  பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய  ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை நான் இங்கே பகிர்கிறேன்.

    யானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.

    1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.

    சில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்சூரியனின் பூத உடல் எரிகாடு சென்றது !

    1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்:

    “அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள்.  முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்”

    நெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். “கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார்.

    பாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.

    பாரதியின் மரணச்  செய்தியைப் பொழுது விடிந்ததும்  நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப்  புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர்.

    பாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவிபுரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத்  திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம்.

    பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.

    பாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு  முன்னர் நண்பர் சுரேந்திரநாத்  ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” -இவ்வாறு  நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.

    பாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?” என்று மறுத்துவிட்டார்.

    முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத்  தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர்.

    தென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!

    அடுத்ததாக ‘சித்திர பாரதியில்’ காணப் படாத; வேறொரு இடத்தில் காணப்படும் பாரதியின் கடைசி நேரக் காட்சியின் சிலக் குறிப்பு இது சற்று வேறு ஒருத் தகவலை நமக்குத் தருகிறது.

    இருந்தும் ‘சித்திர பாரதியின்’ தொகுப்பாளர் இந்தத் தகவல்களைக் குறிக்கும் முன் பொதுவாக பாரதியின் கடைசி நாளன்று நண்பர்கள் யாவரும் கவலையோடு அமர்ந்திருக்க.. என்று எழுதுகிறார். அப்படிப் பார்த்தால் அதிலே இந்த நண்பரும் இருந்திருக்கலாம் என்று என்னுதளுக்கும் இடமளிக்கிறது. எனினும் நாம் மேலே செல்வோம்.

    பாரதியும் சிங்காரவேலரும்.

    சிங்காரவேலர் திருவல்லிகேணியில்  வசதியான மீனவக் குடும்பத்தில்  பிறந்தவர். அவர் ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர். புத்தரின்  மீது அதிகப் பக்திக் கொண்டவர். 22. சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அவரது இல்லம்.

    1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சென்றிருந்த பாரதி, வ.உ.சி, சக்கரைச் செட்டியார் ஆகியோர் சென்றிருந்தார்கள், அதன் பிறகு பாரதிக்கும் இந்த சிங்கரவேலருக்கும் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

    ரஷிய புரட்சியை  வரவேற்றுப் பாடிய பாரதியை பாராட்டிய சிங்காரவேலர் இருவரும் இணைபிரியா நண்பர்களும் ஆனார்கள். இந்த பொதுவுடைமைவாதி சிங்கார வேலர் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்யானை  பாரதியை துதிக்கையால் தூக்கி எறிந்த செய்தியைக் கேட்டவுடன் பாரதியின் இல்லம் சென்று பார்த்ததோடு தினமும் அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து குடிக்கச் சொல்வார்.

    அதுபோலத்தான் பாரதி  சுகமில்லாமல் இருந்த போது அன்றும் பாரதிக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்த போது  தன்  மடியின் மீது தலையை  இருத்தி இருந்த மகாகவியின் உயிர் பிரிந்தது என்று  சிங்காரவேலரோடு நெருங்கிப் பழகிய இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியினைச் சேர்ந்த கே. முருகேசன் என்பவர் கூறியதாக ஒருக் குறிப்பை, ஜனசக்தி பாரதி நூற்றாண்டு விழா நிறைவுமலரில் தலையங்கம் என்று குறிப்பிட்டு வரைந்தக் கட்டுரையின் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்தக் குறிப்பில், இவையெல்லாம் சிங்காரவேலரின் தமையனாரின் பேத்தி எம்.ஜெயபாய் அவர்களை கண்டு 23-11-1982 ல் உறுதிச் செய்யப் பட்ட செய்திகள் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.

    சிங்காரவேலரின் கொள்கைகள் வேறு நண்பர்கள் வேறு என்றுப் பழகியவர் என்பதையும் அறிய முடிகிறது.  இவரின் நண்பர் ஹிந்துப் பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க  ஆச்சாரியர், இவரின் கட்டுரைகளை அப்பத்திரிக்கைகளில் வெளியிட்டு இருப்பதாகவும் அறிய முடிகிறது.

    இங்கே மேலும் ஒரு விசயத்தையும் கூற வேண்டும். இந்த மகாகவி பாரதி பொதுவுடைமை கொள்கையை அந்நாளில் ஏற்று ‘புரட்சி’ என்னும் புதுத் தமிழ் வார்த்தையே தமிழில் படைத்து “ஆகவென எழுந்தது பார் புரட்சி” என்று மகிழ்வோடு பாடிய பாரதியை, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அவனது புகழைப் பரப்பச் செய்த பெருமை அமரர். ஜீவானந்தம் அவர்களையேச் சாரும் என்பது தான் அது.

    மகாகவியின்  கடைசிப் பயணம்!

    செப்டம்பர் 11

    நள்ளிரவுத் தாண்டி மணி

    ஒன்றரை…

    காலனை எட்டி உதைக்கப்
    பார்த்தவன்
    கால்களோடு கரங்களும்
    கட்டப் பட்டதோ!

    ஒரு மாமணியின் நாவது
    அறுந்து போனது
    புதிய கோணங்கிச் சத்தம்
    நின்று போனது…
    எங்கள் சுதேசிச் சூரியன்
    மறைந்து போனது…

    வேதாந்த ஊற்று அது
    வெற்றுடம்பு ஆனது
    ஐயகோ! என்ன செய்வேன்
    எங்கள் மகாகவி
    மண்ணை விட்டுச் சென்றானே!

    பிரபஞ்ச இயக்கத்தோடு
    தன் இதயத்தை
    இணைத்திருந்தவனின்
    இயக்கம் நின்றதே

    பிரபஞ்ச மகாகவி
    விரைந்து போய் விட்டான்
    ஷெல்லியின் தாசன்
    எத்திசைப் பறந்தானோ…

    விண்ணில் பறந்தானா
    இல்லை …
    விடுதலை பெறும்வரை
    மண்ணிலே இருக்கும்
    வரமதை பெற்றானா

    கனன்றுக் கொண்டிருந்த
    கவிச் சூரியன்
    அமைதியில் குளிர்ந்ததே
    வெடிச்சிரிப்பில் விண்ணவரை
    ஈர்ப்பவன் நொடிப் பொழுதில்
    மறைந்தானே!

    பக்கத்தில் நின்றுப்
    பார்த்து கொண்டு இருந்தவர்களின்
    கண்களில் எல்லாம்
    கண்ணீர்ப்
    பெருக்கெடுத்து ஓடுகிறது

    விடியலை நோக்கி
    விடுதலை வேள்வி
    செய்யச் சொன்னவன்
    இல்லாத காலைப் –
    ‘பொழுது கருப்பாகவே விடிந்தது’

    இரவிலும் ஒளிர்ந்த
    இளஞ்சூரியனின் மறைவு
    சொல்லி விடப்பட்டது…
    சொந்தமான நண்பர்களுக்கு

    சொல்லொண்ணா துயரத்தோடு
    வந்து சேர்ந்தனர்
    மாகவியின்
    நெஞ்சுக்கினியர்
    துரைசாமி ஐயர்,

    ஆச்சாரியார் மூவரோடு
    சுரேந்திரநாத் ஆர்யா
    சர்க்கரைச் செட்டியார்,
    ஹரி ஹர சர்மா…

    எட்டயபுரத்தான்
    ஏறுபோல் நடந்த
    சிங்கத்தின்…
    பூத உடலை
    எட்டுமணிக்கு ஏற்றி வைத்து
    பாடையோடு பயணம்

    சந்தனமாய் மணந்தவன்
    சங்கொலி எழுப்பி
    சாகாவரம் கேட்டவன்
    மாந்தரெல்லாம் அமரத்துவம் பெற
    ஆற்றுப் படுத்தியவன்

    அமரகவியின் ஆருயிர் தங்கிய
    அந்த சந்தன உடல்
    இப்போது அழ்கடலாய்
    அமைதியில் கிடக்கிறது.

    பாரையேத் தன்கையில்
    வைத்துப் பார்த்தவனின் உடல்
    ஒரு பாடைக்குள்
    பத்திரமாகப் படுத்துக்கிடக்கிறது

    மகாகவியின் கடைசி ஊர்வலம்
    கூடிப் போனவர்கள்
    கொஞ்சம் அல்ல வெறும்
    இருபதுக்கும் குறைவு தானாம்…

    இதயம் கனக்கிறது
    அநீதியின் சங்கருக்க
    ஆளுக்கொரு வாள் கொடுத்தவன்
    வாழ்வின் கடைசி ஊர்வலத்தில்…

    என்னக் கொடுமையடா
    நன்றிகெட்ட மக்கா
    நாய்களுக்கே உண்டந்த
    உணர்வே ஏனிப்படி
    நாயினும் கேவலமாக…

    நடிக்கத் தெரியாதவனின்
    கடைசி ஊர்வலம்
    இப்படிதானோ…

    கூடவேத் திரிந்தக்-
    குவளைக் கண்ணனும்
    அன்புகாட்டிய லட்சுமண ஐயரும்
    ஆருயிர் நண்பன் ஆர்யாவும்
    பாரதியின் ஆக்கங்களை எல்லாம்
    அரங்கேற்றிய நெல்லையப்பரும்

    ஆளுக்கொரு பக்கமாய்
    அழுதபடி
    தூக்கிப் போயினரே…

    பாவங்கள் ஏதும்
    செய்யாதவன்
    படுத்திருக்கும் பாடை அல்லவா

    பாரமே இல்லாது
    பூப் போல இருந்ததாம்
    போய்ச்சேரும் வரை

    அதனாலே எடுத்தோர்
    தோளிலிருந்து
    இடமாற்றம் செய்யவில்லை.

    மகாகவி
    இறக்கி வைக்கப்பட்டான்…
    மகாத்துயரை
    எப்படி இறக்கி வைப்பது?

    சரேந்திரநாத் ஆர்யா வழங்கிய
    பாரதியின் சுந்தர கீர்த்தி!
    சில மணித்துளிகள்…

    மகாகவி அருகில் நின்று
    மனம் குளிர்ந்திருப்பான்!

    கவிச்சூரியனால்
    ஒளி பெற்ற மற்ற கோள்கள்
    இப்போது இருண்டு போயின…

    இடிவிழுந்த மனதில்
    இன்னல்கள் கோடியாயினும்
    கவிக்கோவை
    கட்டைகளில் இறக்கினர்

    காவியம் படைத்த
    கலைச் சூரியன் மேனியில்
    ஹரிஹர சர்மா
    கடைசியாக தீ மூட்டினார்…

    பற்றி எரிந்தது
    பாரதியின் உடல்…
    வேள்விப் பிரியனுக்கு
    வேதங்கள் போற்றிய அத்வைதிக்கு
    அக்னி யென்றால்
    அத்தனைப் பிரியமோ!

    பக்கத்தில் இருந்தவர்கள்
    யாவரின்
    பாலும் இதயங்களும்
    சேர்ந்துக் எரிந்தன…

    ஒளிபடைத்த கண்களை
    ஓடி பாய்ந்து பெற்று
    தனதுக் கண்களுக்குள்
    சொருகி கொண்டது
    தீயின் பிளம்பு

    அச்சமில்லை
    அச்சமில்லை என்று
    அஞ்சாத நெஞ்சுடன் திரிந்தவனின்
    நெஞ்சை தஞ்சமெனக்-
    கொண்டது அந்த தீக் கொழுந்து

    காவியங்களை ஓவியங்களாகத்-
    தீட்டியவனின் கரங்களை
    தனது கன்னங்களோடு
    ஒத்திக் கொண்டது
    அந்த அக்னி தேவதை

    பாரத்ததை
    அளந்தவன் பாதமதை
    தனதாக்கிக் கொண்டு
    பரதமும் ஆடிக் களித்தது
    அந்த அக்னிக் கன்னி.

    ஆனால்
    மனிதநேயக் கடலாக
    கருணையை உற்பத்தி செய்த
    அவனின்
    இதயத்தை மட்டும்
    இறுக்கிப் பிடித்துக் கொண்டு…

    ஓ ! வென்று
    அழுது புலம்பியதே அந்த அக்னி…

    அழுதக் கண்ணீர்
    துடைக்க துடைக்க
    ஆறு போல் பெருகினாலும்

    நண்பர்கள் ஒருவரோடு ஒருவர்
    மற்றவரின் வலிக்கு
    மருந்தும் போட்டுக் கொண்டனர்…

    ஆனால் அந்த
    கிருஷ்ணாம் பேட்டை
    மயானம் மட்டும்….
    ஆனந்தக் கண்ணீர் வடித்தது !

    அது ஒரு மகாகவிஞனின்…
    மகாப் புண்ணியவானின்
    தேகத்தை தாங்கியதால் வந்ததாம்!

    பிரபஞ்ச இயக்கத்தில் கலந்தவன்
    பிரபஞ்சம் உள்ளவரை அதில்
    இயங்கிக் கொண்டே இருப்பான்!

    இந்த மகா புருஷனின்
    நினைவுகள்
    காலகாலத்திற்கும்
    நம்மோடு நிலைத்து நிற்கும்

    வாழ்க! வளர்க! மகாகவி பாரதியின் புகழ்!!!

    நன்றி::’சித்திர பாரதி’

    Share
  • பாரதியின் வேத முகம் -18

     

    சு.கோதண்டராமன்

    மோதி மிதித்துவிடு பாப்பா

           பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

    பாதகம் செய்பவரைக் கண்டால்நீ

    பயம் கொள்ளலாகாது பாப்பா

    மோதி மிதித்துவிடு பாப்பா அவர்

    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

    அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

    சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

    அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

    இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

    பாதகம் செய்யும் மனிதரைத் தண்டிக்க வேண்டுமாம். பாதகம் செய்யும் புலியைத் தண்டிக்காதது மட்டுமல்ல, அதைக் கும்பிடவும வேண்டுமாம். சாதிக்கொரு நீதியா? மகாகவியின் வாக்கில் முரண்பாடா ?

    இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

    தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

    ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

    ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

    தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

    யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

    இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம்.

     

    Share
  • சிற்பம் சிதைக்கும் உளி

    பிச்சினிக்காடு இளங்கோ

    sculptor-23974105

    அன்று

            இரங்கற்பா படித்து

            இதயத்தைப்பிழிந்து

            கண்ணீர் கசியவைத்தேன்

     

            வாழ்த்த அழைத்தபோதும்

            வளமானச்சொற்களால் வாழ்த்தி

            வாழ்த்திடப்பெற்றேன்

     

            கலந்துரையாடும்போதும்

            கரைந்துரையாடி

            கவனிக்கப்பெற்றேன்

     

            முடிந்ததைச்செய்யும்போதும்

            முழுமையாய்ச்செய்தேன்

            என

            முன்னுரை கிடைக்கப்பெற்றேன்

           

            ஆசையே இல்லா

            புத்தரைப்போல பேசி

            அனைவராலும் கவரப்பெற்றேன்

     

            பெண்களோடும் அப்படித்தான்

            பெருமைப்பட நடந்துகொண்டேன்

            பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

     

            எல்லா இடத்திலும்

            எனக்குப்பேர் என்றாலும்

            எல்லார் இதயத்திலும்

            என்பேர் நின்றாலும்

            குரங்கு மனசுமட்டும்

            குறைபடவைக்கிறது என்னை

     

    (09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. எழுத்தாளர் எம் சேகரின் கதையை முடித்து எழுதிய கவிதை. பேருந்து 67இல் எழுதியது. பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது. )

    படத்துக்கு நன்றி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-sculptor-image23974105

    Share
  • மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5)

    புவனேஷ்வர்    

     

    மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5) – பாண்டியனின் வீரம்!

    சென்ற நான்கு வாரங்களாக நாம் பூரிசிரவஸ் வதத்தைப் பார்த்தோம். இந்த வாரம், நாம் நம்முடைய தமிழ் தேசத்து அரசன் பாண்டியனின் வீரத்தை பார்ப்போம். ஆம். மலையத்வஜன் பாண்டியன். இவன் நம்மவனே. மலைய பர்வதத்தை தனது கொடியில் உடையவன். தென்னாட்டவன், மலைய பர்வதத்தைத் தனது கொடியில் உடையவன் என்றே வியாசர் சொல்கிறார்.

    இவன் பாண்டவர் பக்கம் போரிட்டான்.

    நாம் பார்க்கப் போவது பதினாறாம் நாள் யுத்தம். பதினைந்தாம் நாள் பிற்பகலில் துரோணர் பிரம்மலோகம் ஏகினார். அவர் பாஞ்சாலனால் கொல்லப்படவில்லை. சமாதி நிலையில் அமர்ந்து, அந்த உத்தமர் ஜோதி வடிவமாக சென்றார். அவர் பிரகஸ்பதியின் அவதாரம். அருச்சுனன், கண்ணன், தருமன், சஞ்சயன் மற்றும் அஸ்வத்தாமன் கண்களுக்கு மட்டுமே அவர் ஜோதியாக சென்றது புலப்பட்டது. பாஞ்சாலன் வெட்டியது அவர் விட்டுப்போன உடலை மட்டுமே.

    சரி. நாம் பார்ப்பது கர்ணன் சேனாதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்டு போரிட்ட காலம். பதினாறாம் நாள். அருச்சுனன் அஸ்வத்தாமனோடு போரிட்டு அவனை விரட்டி விட்டு சம்சப்தகர்களை எதிர்த்து நிர்மூலம் பண்ணினான். அப்போது திடீரென்று போர்க்களத்தில் ஒரு பெரும் கூச்சல், ஆரவாரம் ஏற்பட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும் என்னடா இது என்று பார்த்தனர். பார்த்தால், அங்கே யாரோ கௌரவர் படையை நாசம் பண்ணுவது புலப்பட்டது. கிட்டே போய் பார்த்தால் தெரிந்தது அது தென்னாட்டுப் பாண்டியன் என்று. தனது தேர் மேல் நின்று, சூரிய மண்டலத்தில் இருந்து கதிர்கள் வெளிப்படுவது போல, அம்புகளை எல்லா திசைகளிலும் செலுத்திக் கொண்டு, யமனே இன்னொரு உருவம் எடுத்து வந்து வாய் திறந்த அந்தகனாக போரிடுவது போல தோன்றியது. இந்திரன் அசுரர்களை அழிப்பது போல பாண்டியன் கௌரவர்களை நசித்தான். அவனது கூரிய அம்புகள் கரிகளையும், பரிகளையும் துளைத்து பூமியில் விழுந்தன. நீருக்குள் எய்த அம்பு எவ்வாறு நீருக்குள் உட்புகுமோ அது போல இரும்புக் கவசங்கள் அணிந்த எதையும் அவன் விடுத்த பலவிதமான அம்புகள் [2] துளைத்தன. அவன் முன் வந்த எதிரிகள் அவன் தேரை ஒருமுறை தான் பார்த்தனர். மறுமுறை பார்க்க அவர்கள் உயிரோடு இருக்கவில்லை. அதற்கு வாய்ப்பில்லாமல் யமன் வீட்டுக்கு விருந்தாளியாக போனார்கள்.

    இப்படி சஞ்சயன் சொல்லிக்கொண்டே வருகையில் அதைக் கேட்ட திருதராஷ்டிரன் மிக்க வியந்தான். அவனுக்கு பாண்டியனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. “சஞ்சயா, உலகப்புகழ் பெற்ற பாண்டியன் பெயரை நீ முன்னொரு முறை கூறியதாக நினைவிருக்கிறது. ஆனால் அவன் புரிந்த வீரச்செயல்கள் எதையும் நீ கூறவில்லை. இப்பொழுது சொல், அவன் வலிமை எத்தகையது? அவன் வீரம் எத்தகையது? அவன் திறமை எத்தகையது? அவன் வீரச்செருக்கு எத்தகையது?” என்று கேட்டான்.

    “பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன், பார்த்தன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை தனுர்வேதத்தில் கரைகண்டவர்களாக நீர் நினைக்கிறீர். ஆனால் பாண்டியனோ, அவர்களிலும் மேலாந்திறமை படைத்தவனாக பெருமிதம் கொள்ளும் இயல்பினன். இங்குள்ள எந்த அரசனையும் தனக்கு இணையாக அவன் நினைத்தானல்லன். பீஷ்மரையும் கர்ணனையும் தனக்கு நிகரானவர்களாக அவன் ஒப்புக் கொள்வதில்லை. ஏன், அருச்சுனனையும் கிருஷ்ணனையும் விட தான் எந்த விதத்திலும் தாழ்ந்து விட்டதாக அவன் எண்ணவில்லை.

    பாண்டவர்களுக்கு உமது மதிகெட்ட மக்கள் இழைத்த அநீதிகளை கண்டு நெஞ்சம் பொறாதவனாய், செங்கோல் வளையாத நீதிமானான பாண்டியன்  வெஞ்சினம் மேலிட்டு, வஞ்சினமுரைத்து, கூற்றுவனே மானிட உருக்கொண்டு கொலைத்தொழில் புரிவது போல அங்கே நும் மூட மகனின் படைகளை சிதறடிக்கின்றான்.

    தேர்களும் புரவிகளும் யானைகளும் காலாட்களும் நிரம்பி வழியும் அந்த சேனா சமுத்திரம், சுழிக்காற்றுப் போன்ற அம்மன்னனின் கணைகளால் துளைக்கப்பெற்று, குயவனுடைய சக்கரம்போல அங்கே சுழன்று சிதறுகிறது! கௌரவ மேகங்களை பாண்டிய புயற்காற்று சிதறடிக்கிறது! கூரிய அம்புகளை தனக்கு நாலாப்புறங்களிலும் செலுத்தி, மூடன் துரியோதனனின் படைகளை பாண்டியன் எரிக்கும் காட்சி, ஆயிரம் கதிர்களை உடைய ஞாயிறு இருளைப் போக்குவதைப் போல உள்ளது! அதோ, கரிய பெரிய மலைமுகடுகளை இடி பிளப்பது போல, அவனது அம்புகள் யானைகளின் மத்தகங்களைப் பிளக்கின்றன. யானைகளின் மேலுள்ள கொடிகளை துண்டித்து, அதன் மேலுள்ள ஏழு வீரர்களை யமாலயம் அனுப்பி, யானைகளைப் பாதுகாக்கும் வீரர்களையும் அவர்களுக்கு துணையாக அனுப்பி யானைகளையும் கொல்கிறான் பாண்டியன். குதிரை, குதிரை மேலிருப்பவன், அவன் ஆயுதங்கள் – இவை யாவையும் ஒருசேர அழிக்கிறான் பாண்டியன்! புறம் காட்டாத புலிண்டர்கள் (குறவர்கள் – முருகன் மனைவியாரான வள்ளியின் குலம்), பாலிகர்கள் (Baluchistan காரர்கள்), நிஷாதர்கள், போஜர்கள், அந்தகர்கள், தென்னாட்டவர்கள் யாரும் அவனிடம் இருந்து தப்பவில்லை! கவசமுடைந்து ஆயுதங்கள் அழிந்து அவர்கள் உயிரை விட்டனர்.” சஞ்சயன் கண்ணிழந்த அரசனுக்கு இங்ஙனம் பாண்டியனின் வியத்தகு வீர்யத்தை உரைத்தான்.

    இந்நிலையில், பாண்டியனை அஸ்வத்தாமன் பார்த்தான். “சரிதான், இவனை இப்படியே விட்டால் கௌரவப் படை சற்று நேரத்துக்குள் நாசமாகி விடும் போலிருக்கிறதே! இவன்றன் தோள்வலியைத் தாங்கும் திறன் இப்படையில் யான் ஒருவனே படைத்துள்ளேன். இனியும் பொறுத்தல் பிழை” என்று பாண்டியனைக் கண்டு தன் படைகளை எண்ணி மிக அஞ்சிய அஸ்வத்தாமன், காற்றினும் கடிய தனது தேரில் பாண்டியனை நோக்கி விரைந்தான். பகைவன் ஆயினும், பாண்டியனை மெச்சிப் புகழ்ந்து போருக்கு அழைத்தான்.

    க்ஷத்திரியனானவன், பகைவன் அறைகூவி அழைத்தால் மறுப்பது தகாது. படைகளோடு சேர்ந்தோ அல்லது ஒற்றைக்கு ஒற்றையாகவோ பகைவன் கூறியவண்ணம், அவன் கோரிய ஆயுதத்தோடு போர் புரிவது முறை. க்ஷத்திரிய தருமமே வடிவெடுத்தது போல வில் பிடித்து தேரேறி நின்ற பாண்டியன் அந்த அறைகூவலை மறுப்பானா?

    என்ன ஆயிற்று?

    அடுத்த வாரம் பார்ப்போம்!

    உபரித்தகவல்:

    [1] சம்சப்தகர்கள்:

    யுத்தத்தில் எந்த வீரனும் வெற்றி அல்லது வீரமரணம் என்று புகுவான் ஆயினும், ஒரு குறிப்பிட்ட காரியசித்திக்காக “இன்னாரைக் கொல்லாமல் திரும்ப மாட்டோம்/இன்ன காரியத்தை செய்யாமல் திரும்ப மாட்டோம்” என்று கோரமான சபதம் பூண்டு, தங்கள் இறுதிக்கடன்களை தாங்களே செய்து கொண்டு போருள்ளுள் செல்லும் வீரர்கள் சம்சப்தகர்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட விரதம் சம்சப்தக வ்ரதம். இந்நாளில் தற்கொலைப் படையினர் உள்ளார்கள் அல்லவா? அது போல அந்நாளில் சம்சப்தகர்கள். அருச்சுனனை போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி கௌரவர்கள் கையாண்ட ஒரு யுத்த தந்திரம் இது.

    [2] யுத்தத்தில் பயன் படுத்தப்பட்ட அம்புகள் பலவிதம். அவற்றில் சில வகைகள்:

    1. க்ஷூரப்ரம்: கத்தியைப் போன்ற முனையை உடைய அம்பு.

    2. வத்சதந்தம்: பசுவின் பல்லைப்போல அமைந்த முனையினை உடைய அம்பு (தோசைக் கரண்டி போல என்று வைத்துக்கொள்ளலாம்)

    3. நாராசம்: ஒரு கை அளவு, அதாவது இரண்டரை, மூன்று அடி நீளமுள்ள, அம்பு. (ராக்ஷசர்களின் favourite! இறுதி யுத்தத்தில் கும்பகர்ணனும், ராவணனும் ராமன் மீது எய்ததில் பெரும்பாலும் நாராசங்களே). பீமனுக்கு மிகப் பிடித்தமான அம்பு வகை. அபிமன்யுவும் சாத்யகியும் அருச்சுனனும் இவற்றை பயன்படுத்துவது உண்டு. (கவசங்களைப் பிளக்கும் அம்புகளில் இது தலையாயது)

    4. விபதம்: தடித்த நீண்ட அம்புகள். (யானைகள், கவசங்கள் ஆகியவற்றின் மீது எய்ய மிகச் சிறந்தது)

    5. அர்த்தசந்திர பாணம்: கூறிய பிறை வடிவிலான முனை உடைய அம்பு.

    6. அஞ்சலிகம்: சற்றே, நீண்ட, வலிய, வேல் போன்ற (இலை வடிவமான) பரந்த முனை உடைய, முனையின் பக்கவாட்டிலும் மிக மிகக் கூர்மையான அம்பு. கர்ணனின் தலையை அருச்சுனன் இந்த வகை அம்பினால் தான் துண்டித்தான். சாதாரணமாக இந்த வகை அம்பினை வீரர்கள் எடுத்தவுடன் விடுப்பதில்லை. எதிராளியை மற்ற வகையான அம்புகளால் கவசம் உடைத்து, காயப்படுத்தி பலம் குன்றச் செய்து, இறுதியாக கைகளையும் தலையையும் வெட்டி விட மட்டுமே இதைப் பயன் படுத்துவது பாரத வழக்கம். நூற்றுக்கணக்கில் இந்த அஞ்சலிகங்களை சரவர்ஷமாக – அம்புமாரியாகப் பொழிந்து போரிடும் பழக்கம் கர்ணனைத் தவிர வேறு யாருக்கும் பாரதத்தில் இல்லை.

    முதலில் கூறிய நான்கும் துளைக்கும் வகையான அம்புகள். கடைசியாகக் கூறிய இரண்டும் வெட்டுவதற்கான அம்புகள். வெட்டும் முனைகள் மற்ற அம்புகளில் பொருத்தப்படலாம்.

    இவை இல்லாமல் நளிகங்கள் என ஒன்று உண்டு. அவை இந்நாளின் cluster bombs போல, பாதி வழியில் வெடித்து, பல பல சிறிய கூறிய ஆயுதங்களாக சிதறி, பொதுப்படையாக படைகளைத் தாக்கும். இதை தரும யுத்தத்தில் பயன்படுத்துவது இகழப்பட்டது. கெட்டுப்போன வீரர்கள், இழிந்த குணம் உடையோர் தான் இவற்றை உபயோகிப்பார்கள் எனபது அந்நாள் வழக்கு.

    அம்புகள் இரும்பாலோ மூங்கிலாலோ செய்யப்பட்டன. மூன்று  கழுகு (அல்லது மயில்) இறகுகள் (fletching) கட்டப்படுவது இந்நாளிலும் வாடிக்கை. That lends stability in flight. பிரசித்தமான வீரனானால் அவன் பெயர் அம்பில் பொறிக்கப் பெறும். நெய் தடவப்பெற்று (துருப்பிடிப்பதில் இருந்து) பாதுகாக்கப்பெறும். (அதியமானை புகழ்ந்து ஔவையார் பாடும் பாட்டில் கூட, பகை அரசனின் ஆயுதங்கள் நெய் பூசப்பெற்று பளபளப்பாக விளங்குவதாக சொல்வார்).

    இப்போதெல்லாம் அம்பின் பின் முனையில், notch என்று சொல்லப்படும் குழிவு இழைக்கப்படும். அது வில்லின் நாணில் அம்பினைப் பொறுத்த உதவும். இது அந்நாளிலும் இருந்தது.

    Share
  • அமைதிகளின் சத்தங்கள்..

    மாதவன் இளங்கோ

     

    இரைச்சல் விழுங்கிய

    இசையின் அமைதி..

    பெரும்கூட்டத்தில் சிக்குண்ட

    தனிமைவிரும்பியின் அமைதி..

    மூடத்தனங்களுக்கு இடையே

    மேதைமையின் அமைதி.. (more…)

    Share
  • மறுக்காது கீதைப்படி

    சத்திய மணி

     

    எதுவும் அறியாதது போலொரு குழந்தை
    எனைப் பார்த்து சிரிக்கின்றது
    அதில் ரகசியம் இருக்கின்றது
    இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
    சிரிப்பினில் தெரிகின்றது
    அதில் விஷ‌ம‌மும் புரிகின்றது()

    கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
    தேவர்கள் காத்திருந்தார் – அவன்
    கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
    புவிமகள் நோன்பிருந்தாள்
    உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
    கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
    முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
    உண்ணாமல் நின்றிருந்தார்
    அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
    மழைமேகம் சுரக்காதடி – இவன்
    கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
    கலிகாலம் செல்லாதடி()
    தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
    அழவைத்து சுகமேற்றுவான் – என்
    மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
    மறுபடியும் எனைச்சீண்டுவான்
    அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
    இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
    பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
    புவியறியும் பிற்பாடுதான்
    மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
    மாயனின் காலைப்பிடி – நீள்
    தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
    மறுக்காது கீதைப்படி()

    Share
  • எத்தனை புண்ணியம் தெரியுமோ?

    தஞ்சை வி. கோபாலன்
    அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.

    அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?” என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், “ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்” என்றான்.

    கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.

    ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?

    யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.

    போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.

    அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.

    அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.

    ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.

    இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.

    இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

    பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.

    ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.

    இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் அபங் எனும் தனிவகை வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந் தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.

    “என்னம்மா வேணும்? ஏன் முனகறே?” என்று குழந்தையை வினவினாள் ரமா.

    குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.

    ரமா தன் கணவனிடம் கேட்டாள், “குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று” என்றாள்.

    அவனுக்கோ பஜனை சுவாரசியம். “இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்.” என்றான்.

    அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.

    அவன் மெல்லா அந்த அம்மாளிடம், “மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்” என்றான்.

    அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி “அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ” என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

    ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டான் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.

    கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.

    தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ‘ரவிக்’ அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.

    ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ‘ரவிக்’ பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.

    அவள் சொல்கிறாள், “இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ? என்ன புண்ணியம் பண்ணினோமோ, இன்னிக்கு இதுபோல ஒரு பஜனையைக் கேட்க முடிஞ்சுது. அடடா! என்ன பாட்டு! மனசை அப்பிடியே உருக்கிட்டா” என்று.

    ரமாவின் மனம் உரக்கக் கூவியது, இவர்களுக்குக் கிடைத்த புண்ணியம் இவர்களது எண்ணத்தாலா அல்லது செயலினாலா? என்று. “என்ன முணுமுணுக்கிறே?” என்றான் ரமணன். “ஒண்ணுமில்லே சீக்கிரமா வாங்கோ, வீட்டுக்குப் போய் குழந்தைக்குக் குடிக்க ஜலம் கொடுக்கணம்” என்று நடையைக் கட்டினாள் ரமா.

    Share